பரிமேலழகர் உரைமீதான மறுப்புகள் அவரது கோட்பாடுகளை வலிந்து புகுத்திவிட்டாரென எதிர்க்குமுகமாகவோ மூலக்கருத்தை விளக்காமற் போகிறாரென மறுக்குமுகமாகவோ குறை காண் பனவே அல்லாமல் அவரது உரைத் திறனையோ, புலமைச் சிறப்பையோ எவராலும் குறைகூர முடிய வில்லை என்னுமாப் போலே அவர் கொண் டாடப்படுகின்றார்.

“பரிமேலழகர் உரையை மறுக்கும் முயற்சிகள் பரிமேலழகர் புலமைப் பாறையைச் சுற்றி யடிக்கும் அலை மோதல்களாக அமை கின்றனவே அன்றி அப்பாறையின் உருக் கோட்டம் கண்டு செப்பம் செய்யும் சிற்றுளிகளாகக் கூட அமையவில்லை” - கா.அப்பாத்துரை.1

“பரிமேலழகர் கருத்தும் உரைத்திறனும் நன்கு பிணைந்து இறுகி இணைந்து செல்லு கின்றன. பரிமேலழகரின் உரையில் குறை காண்பவர்கள், இவர் கொண்ட கருத்திலும் கொள்கையிலுமே குறை காண்கின்றனர். கோட்பாடுகளை எதிர்க்கின்றனர்; மறுக்கின்றனர்.”

“இத்தகைய குறைபாடுகள் பரிமேலழகர்க்கு முற்பட்ட உரையாசிரியர்களிடமும் உள்ளன. ஆனால் முன்னைய உரைகள் யாவற்றையும் வென்று விளங்கும் பரிமேலழகரே மறுப் புக்கும் எதிர்ப்புக்கும் ஈடுகொடுத்து நிற் கின்றார்” - மு.வை.அரவிந்தன்.2

“பரிமேலழகர் 14 ஆம் நூற்றாண்டுக்குரிய வராகக் கருதப்படுபவர். அவர் முழு உரையே வழங்கியுள்ளார். மற்றவர்கள் போல அவர் தடுமாறவில்லை, ஆனால் தடம் மாறினார்” - கா.அப்பாத்துரை3

இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு இக்கட்டுரை முழுவதற்கும் ஊடாகவே இடம்பெறும் மறுப்புரை களில் உரிய பதில் கிடைக்கும் என்பதால் இங்கே தனித்து எதிர்கொள்ளப்படவில்லை. எனினும் ஒன்றே ஒன்றை மட்டும் சுட்டி மேற்செல்லலாம். குணம், குறை நாடி அவற்றின் மிகை நாடித்

தானே விமர்சிக்க வேண்டும். குறை காண்பதென விமர்சனங்களை மிகை எளிமைப்படுத்த முயல்வது பக்கவாதமே. அடுத்து மூலக்கருத்தை விளக்காமற் போவது பற்றி மட்டுமல்லாமல், மூலக்கருத்துக்கே முரணாக அமைவது என்பதும் மறுப்புரைகளுக்கு ஏதுவாயிற்றெனலாம். உரை மறுப்புகளைக் காணும் வகையில் குறிப்பாக ஒரு குறளை உரை வேற்றுமைகளுடன் அணுக முற்படலாம்:

“நத்தம் போற் கேடும் உளதாகும் சாக்காடும்

வித்தகர்க் கல்லால் அரிது.”

“ஆக்கம் போலக் கேடும், உளதானாற் போலச் சாக்காடும் வல்லவர்க்கு அல்லது அரிது” - மணக்குடவர்

“சங்கு ஆயிரம் சூழ்ந்த வலம்புரி போலே, கிளையானது தன்னைச் சூழ வாழ்வது கீர்த்தி மானுக்குக் கைவரும் - பரிதியார்.

“வலம்புரிச் சங்கானது தன்னிலை குலைந்து பிறர் கைப்படினும் தண் பெருமை குன்றாதது போல இல்லறமியற்றும் நல்லறிவாளர் தாம் வாழுமிடத்தும் கெடுமிடத்தும் தம் புகழ் விளங்கக் கெடுவதோர் கேடும், அதுவே அன்றி மற்றிறந்து படினும் விரிபுகழ் விளைக்கும் அல்லது மற்றுள்ளோர்க்கு என்றும் அரிது” - காளிங்கர்

புகழுடம்பிற்கு ஆக்கமாகும் கேடும்; புகழுடம் புனதாகுஞ் சாக்காடும், சதுரப்பாடுடை யார்க்கல்லதில்லை. நந்தென்னுந் தொழிற் பெயர் விகாரத்தான், நந்தென்றாய், பின் அம்மென்னும் பகுதிப்பொருள் விகுதி பெற்று, நத்தமென்றாயிற்று. போலென்பது ஈண்டு உரையசை. ஆகுமென்பதனை முன்னுங் கூட்டி, அரிதென்பதனைத் தனித்தனிக் கூட்டியுரைக்க ஆக்கமாகுங் கேடாவது, புகழுடம்பு செல்வமெய்தப் பூதவுடம்பு நல்கூர்தல். உளதாகுந் சாக்காடாவது, புகழுடம்பு நிற்கப் பூதவுடம்பு இறத்தல், நிலையாதவைற்றான் நிலையின் எய்துவார் வித்தகராதலின் ‘வித்தகர்க்கல்லால் அரிது’என்றார்.” - பரிமேலழகர்4

“போல் என்ற உவம உருபுக்கும் பொருள் கண்டு விரிவுரை பகர்ந்தார். மணக்குடவர், பரிதியார், காளிங்கர் ஆகிய மூவரும் ‘போல்’என்பதனை உவம உருபாகக் கொள்ளவும், பரிமேலழகர் மட்டும் அதனை ‘உரையசை’என்பாராயினர்... பரிமேலழகர் இக்குறளுக்குக் கண்டவுரை சாலச் சிறந்ததாகவே தோன்று கிறது” - நா.பாலுசாமி5

“நத்தம் என்ற மொழிக்கு நத்தை, ஊர், சங்கு, வாழை அனைய பொருள்கள் பல இருக்க ‘நந்து’என்பதன் திரிபு ‘நத்து’என்று ஆகி, அதுவும் சாரியை பெற்று நத்தம் என்று ஆயிற்று என்றும், அதற்குப் பொருள் ஆக்கம், கேடு என்றும் உரைகாரர் (பரிமேலழகர்) கூறுவது வியப்பாய் இருக்கின்றது.

‘நண்டு சிப்பி வேய் கதலி நாசமுறுங் காலமது கொண்ட கருவழிக்கும்’என்றனர். ஆன்றோரும் இவற்றிற்கு அழிவு நேரிடும் பொழுது இவை கருக்கொள்ளும்; கரு வளர வளர இவை கேடுறும்; முடிவில் அழியும். அதுபோன்று சதுரப்பாடுடைய திறமை வாய்ந்த அறிவாளிகள், வீரர்கள் அன்னாருக்குப் புகழ்க்காதல் உண்டாகும் பொழுது உடற் சுகம் நாடாமல் நாட்பட நாட்பட அதற்கு கேடு வருவதையும் உன்னாமல் புகழ் வெஃகி மாய்கின்றனர். உயிர் துறக்கின்றனர்.” - எம்.எஸ்.பூரணலிங்கம் பிள்ளை.6

“புகழுடம்பின் கரு வளர்ச்சியடைவது போல் (முழுவளர்ச்சியுற்ற) பூதவுடம்பு தளர்ச்சி யடைவதும், அப்புகழுடம்பின் பிறப்பாகிய பூதவுடம்பின் இறப்பும், திறப்பாடுடைய வர்க்கன்றி ஆகாவாம்.”

“தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன் பொதுநலவூழியத்தைத் தொடங்கும் போது, புகழுடம்பு கருக்கொள்கிறது; ஊழியம் நீட நீடப் புகழுடம்பு வளர்கின்றது. பூதவுடம்பு தளர்கின்றது. சாக்காட்டிற் புகழுடம்பு பிறக் கின்றது; பூதவுடம்பு இறக்கின்றது. இதையே ‘நத்தம் போற்கேடும் உளதாகும் சாக்காடும்’என்றார். போல் என்பது வளர்ச்சிக்கும் தளர்ச்சிக்கும் ஒப்புமை கூறிய உவமையுருபு. இது குழவி வளர்ந்தது போலக் கிழவி தளர்ந் தாள் என்பது போன்றது. ஆதலால் ‘போல்’என்பது பரிமேலழகர் கூறுவது போல் உரைசையன்று. நந்துதல், வளர்தல், நத்தம் - வளர்ச்சி; முதனிலை வலிந்து ஈறு பெற்ற தொழிற்பெயர் ‘அம்’முதனிலைப் பொருளீறு; பகுதிப் பொருள் விகுதி அன்று. வாழ்நாள் முழுதும் பொதுநலத் தொண்டாற்றுவது திறப்பாடான செயலே” - ஞா. தேவநேயப் பாவாணர்.7

நத்தம் என்பதற்கு மணக்குடவரும் பரிமேலழகரும் ஆக்கம் எனப் பொருள் கொள்கின்றனர். மணக் குடவர் குறிப்பிடாத சொன்மை தெரிதலைப் பரிமேலழகர் உரைக்கப் பாவாணர் சொன்மை தெரிதலில் அவரை மறுத்துரைக்கின்றார். நத்தம் என்பதற்கு சங்கெனப் பரிதியாரும், வலம்புரிச் சங்கெனக் காளிங்கரும், ‘நண்டு’, சிப்பி, வேய்கதலி’எனப் பூரணலிங்கனாரும் ஒத்தாங்குப் பொருள் கொள்கின்றனர். அவரவர் பொருள்கோள்படி பாவாணரும் பூரணலிங்கனாரும் பொருளை விரித்துரைக்கின்றனர்.

“பொருட் பெண்டிர் பொய்ம்மை முயக்க மிருட்டறையில் ஏதில் பிணந்தழீஇ யிற்று.”

“கொடுப்பாரை விரும்பாது பொருளையே விரும்பும் பொது மகளிரது பொய்ம்மை யுடைய முயக்கம்; பிணமெடுப்போர் இருட்டறைக் கண்ணே முன்னறியாத பிணத்தைத் தழுவினாற்போலும்

பொருட்கு முயங்கும் மகளிர் கருத்துஞ் செயலும் ஆராயாது சாதியும் பருவமும் ஒவ்வாதானை முயங்குங்கால் அவர் குறிப்புக் கூலிக்குப் பிணமெடுப்பார் காணப்படாத தோரிடத்தின்கண் இயைபில்லாததோர் பிணத்தை எடுக்குங்கால் அவர் குறிப்போ டொக்குமெனவே, அகத்தால் அருவரா நின்றும் பொருணோக்கிப் புறத்தாற்றழுவுவர்; அதனையொழிக” - பரிமேலழகர்8

“1. கூலிக்குப் பிணம் எடுப்பார் என்று பொருள் கொள்ளுதற்குக் குறளில் இடம் உண்டா? 2. பிணம் எடுப்பார் இருட்டறையில் பிணத்தைத் தழுவக் காரணம் என்ன? இவ்வினாக்களுக்கு விடை கிடைக்கவில்லை. ஏனைய உரையாசிரியர்கள் இவ்வுவமையை வேறு வகையாக விளக்குகின்றனர்.

* ‘பொருட் பெண்டிரது பொய்ம்மை முயக்கம் இருட்டறையில் உள்ளே கிடந்த தொரு வேற்றுப் பிணத்தைக் கூலிக்குத் தழுவியது போலும் என்ற விளக்கம் பொருத்தமாய் உள்ளது’- மு. வை. அரவிந்தன்9

பொருள் கொடுப்பாரை விரும்பாது அவர் கொடுக்கும் பொருளையே விரும்பும் விலை மகளிரின் பொய்யான தழுவல்; கூலிக்கு அமர்த்தப்பட்டவன் இருட்டறையில் யாதொரு தொடர்புமில்லாத பெண்ணின் பிணவுடம்பைப் பொருளாசை கருதித் தழுவினாற் போலும். இதிலுள்ள உவமத் தொடருக்கு ‘பிணமெடுப்பார் இருட்டறைக் கண்ணே முன்னறியாத பிணத்தைத் தழு வினாற்போலும்’என்று பரிமேலழகர் உரைத்திருப்பது பொருந்தாது. முயக்கம் ‘தழீஇ’இரண்டும் இடக்கரடக்கல். பிண மெடுத்தலையே ஆசிரியர் கருதியிருப்பின் பிணமெடுத்தற்று என்றோ பிணந்தூக்கி யற்று என்றோ யாத்திருப்பார். மேலும், உயிர் போனபின் பேய்வந்து அண்டும் என்று கருதி விளக்கேற்றி வைப்பது தமிழர் வழக்கமேயன்றி இருட்டறையில் சவத்தை யிட்டு வைப்பதன்று. இங்கு முயக்கம் கூட்டத்தைக் குறிப்பதால், அதற்கு உவமை யான தழுவலும் அதனையே குறித்தல் வேண்டும். தொடுதல் அல்லது தூக்குதல் மட்டும் முயக்கத்திற்கு உவமமாகாது. உவமையைக் கூர்ந்து நோக்கின் பொரு ளசையும் உள்ளத்தொடு பொருந்தாத கூட்டமும் பொதுத் தன்மையென்பது பெறப்படும். இத்தகைய பிணந்தழுவும் வழக்கம் தமிழரல்லாத வேற்றினத்தாரிடையே ஆசிரியர் தம் காலத்தில் இருந்தது கண்டு, அதை உவமமாக அமைத்திருத்தல் வேண்டும். - ஞா.தேவநேயப் பாவாணர்10

வள்ளுவர் பாண்டி நாட்டில் நீண்ட காலம் வாழ்ந்திராவிடின் - ஊருணி, பைய, வாழ்க்கைத் துணை என்னுந் சொற்களை ஆண்டிருக்கவும், அண்மையிலுள்ள சேரநாடு சென்று அக்காலத்து நம்பூதிரிப் பிராமண கன்னிகையர் சவச்சடங்கை யறிந்து இந்த உவமையை அமைத்திருக்கவும் முடியாதென முன்னுரையிலும் குறிப்பிடுவதுடன் தென்னாட்டில் வாழ்ந்த பிரெஞ்சுக் கிறித்தவ சமயக் குரவராகிய அப்பர் தூபாயிசின் நூலிலிருந்து அச்சடங்கு பற்றி வரைந்திருப்பதை எடுத்துக் காட்டாகவும் முன்வைக்கின்றார். பாவாணரின் இந்த உரை விளக்கம் பரிமேலழகரை உள்ளிட்ட முந்தைய உரைகாரர் உரைகளை வாசிக்கையில் எழக்கூடிய அய்யங்களைத் தீர்த்து தெளிவாக்கு கின்றது.

‘நெருந லுளனொருவ னின்றில்லை யென்னும்

பெருமை யுடைத்திவ் வுலகு’

“ஒருவன் நெருநலுளனாயினான் அவனே இன்றில்லையாயினானென்று சொல்லும் நிலையாமை மிகுதியுடைத்து ஈண்டு உண்மை பிறத்தலையும், இன்மை இறத்தலையும் உணர்த்தி நின்றன. அவை பெண்பாற்கு முளவாயினும் சிறப்புப் பற்றி ஆண்பாற்கே கூறினார். இந்நிலையாமையே உலகின் மிக்கதென்பதாம்” - பரிமேழகர்11

‘நெருநல் உளன் ஒருவன்’ (336) என்பதில் உள்ள ‘உளன்’என்பதற்கு உளன் ஆயினான் (பிறந்தான்) என்று பொருள் எழுதி நிலை யாமையை நன்கு வலியுறுத்துகின்றார்” -மு.வை.அரவிந்தன்12

“ஒருவன் நேற்றிருந்தான், இன்றில்லை; என்று சொல்லும் பெருமையை உடையது இவ்வுலகம்!”

உண்மை உடம்போடிருத்தலையும் இன்மை இறத்தலையும் குறிக்கும். இரட்டுறலால் உண்மை பிறத்தலையும் குறிக்குமேனும், குழவிப் பருவத் திறப்பு மிகச் சிறுபான்மை யாதலானும், குழவியை அஃறிணைச் சொல் லாலன்றி ஒருவன் என்று உயர்திணைச் சொல்லாற் குறிப்பது மரபன்மையாலும்,

‘வீற்றிருந்தாள் என்னை வீதிதனிலிருந்தாள்

நேற்றிருந்தாள் இன்று வெந்து நீறானாள்’

என்று பட்டினத்தடிகள் பாடியது போல், ‘நேற்றிருந்தான் இன்றில்லை’என்று இளை ஞரையும், முதியோரையும் பற்றிக் கூறுவதே வழக்கமாதலாலும், அவ்வுரை சிறப்புள்ள தன்றாம். ‘ஒருவன்’என்னும் ஆண்பால் தலைமை பற்றிப் பெண்பால் ஒன்றன் பாலையும் தழுவும். ‘பெருமை’என்பது எதிர்ப்பொருளணி ((Irony)) யாதலால், ‘நிலையாமை மிகுதி என்று கொள்ளத் தேவையில்லை”- ஞா.தேவநேயப்பாவாணர்.13

பாவாணரின் இக்குறளுரை சொன்மை தெரிதல், பொருண்மை தெரிதல், அணியிலக்கணம் தெரிதல் மூவகையானும் புலமைச் சிறப்பினதாய், பரிமேலழகர் உரை சிறப்பன்றென மறுத்துரைக்கும் பாங்கு நோக்கத்தக்கது. பரிமேலழகர் பொருள்கோள் மணக்குடவரைத் தழுவியது. பாவாணர் பொருள் கோள் பரிதியாரைத் தழுவியது.

‘அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்

நின்றது மன்னவன் கோல்’

“அந்தணர்க்குரித்தாய வேதத்திற்கும் அதனாற் சொல்லப்பட்ட அறத்திற்குங் காரணமாய் நிலை பெற்றது; அரசனாற் செலுத்தப் படுகின்ற செங்கோல்.”

அரசர் வணிகர் என்னும் ஏனையோர்க்கும் உரித்தாயினும் தலைமை பற்றி அந்தணர் நூலென்றார் ‘மாதவன் நோன்பும் மடவார் கற்புங் - காவலன் காவல்’ (மணிமேகலை, 22, 202-209) அன்றித் தங்காவலான் ஆகலின், ஈண்டறமென்றது அவையொழிந்தவற்றை வேதமும் அறனும் அநாதியாயினுஞ் செங் கோலின் வழி நடவாகலின் அதனை அவற்றிற் காதியென்றும், அப்பெற்றியே தனக்காதி யாவது பிறிதில்லையென்பார் நின்றதென்றுங் கூறினார்” - பரிமேலழகர்14

அய்யரும் பார்ப்பாருமான இருவகைத்

தமிழ் அந்தணரும் இயற்றிய பல்துறை நூல் கட்கும் மக்களின் அறவொழுக்கத்திற்கும் அடிமணையாயிருப்பது அரசனின் செங் கோலே.”

நூலாசிரியரைப் போற்றுவதும் அரங்கேற்று விப்பதும் அரசன் தொழில் ஆதலின் ஆதி என்றா ரெனவும், எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழு கலான் அந்தணர் என்போர் அறவோரெனப் பிராமணரை விலக்கியதால் இங்கது தமிழ் அறிஞரையே குறிக்குமென விரிவாக எடுத்துரைப் பார் பாவாணர்,

“நூல்களைப் பார்ப்பவர், பார்ப்பார். முனிவர் அய்யர் எனவும் படுவர். கடைக்கழகக் காலத்திலும் இளங்கோவடிகள் இயைபு வனப்பு இயற்றியமை காண்க. அந்தணர் நூற்கு அரசியல் அடிப்படையாயிருந்தமைக்கு முக் கழக நடவடிக்கைகளே போதிய சான்றாம். ஒழுக்கத்திற்கு அது தூண்டுகோலாயிருந்தது. ‘அச்சமே கீழ்களதாசரம்’ (குறள் 1075) என் பதனாலும், ‘நன்னடை நல்கல் வேந்தர்க்குக் கடனே’ (புறம் : 312) என்பதனாலும், அஃது அறியப்படும் நூற்கும் அறத்திற்கும் முந்தி யேயிருந்ததனாலும் நிலைபெற்றதனாலும் ‘நின்றது’என்றார்.

‘அந்தணர்க்குரித்தாய வேதத்திற்கும் அதனாற் சொல்லப்பட்ட அறத்திற்கும் காரணமாய் நிலை பெற்றது... செங்கோல்’ ‘அரசர் வணிகரென்னு மேனையோர்க்கு முரித்தாயினும், தலைமை பற்றி அந்தணர் நூலென்றார்’என்பன பரிமேலழகரின் ஆரியப் பிதற்றல்கள். நூலென்றது மறை நூலை மட்டுமன்று. அங்ஙனங் கொள்ளினும் அது கடவுள் வழிபாட்டை அறவே அறியாத ஆரிய வேதத்தையன்று. தமிழ் மறையையே குறிக்கும்... இன்னும் தமிழிலுள்ள பண்டை (மறைமந்திர) நூல்களும் மருத்துவ நூல் களும் சித்தர் என்னும் முனிவர் இயற்றி யவையே” - ஞா. தேவநேயப் பாவாணர்.15

பாவாணரின் இக்குறளுரை பரிமேலழகரின் மெய் காண்முறை அடிப்படையையும், உரைகோள் முறைக் கோளாறுகளையும் ஒரு சேரக் கேள்விக் குள்ளாக்கிவிடவில்லையா?

‘அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர்’

“சொல்லின் குழுவினையறிந்த தூய்மை யினையுடையோர்; தாமொன்று சொல்லுங் கால் அப்பொழுதை அவையினை அறிந்து ஆராய்ந்து சொல்லுக.

சொல்லின் குழுவெனவே, செஞ்சொல், இலக்கணச் சொல், குறிப்புச் சொல்லென்னும் மூவகைச் சொல்லும் அடங்கின. தூய்மை, அவற்றுள் தமக்காக தனவொழித்து ஆவன கோடல் அவையென்றது ஈண்டதனளவை. அது - மிகுதி, ஒப்பு, தாழ்வென மூவகைத்து, அறிதல் - தம்மொடு தூக்கியறிதல். ஆராய்தல் - இவ்வகைக்கட் சொல்லுங்காரியம் இது சொல்லுமாறிது, சொன்னால் அதன் முடிவிதுவென்று இவையுள்ளிட்டன ஆராய்தால்” - பரிமேலழகர்16

“அலங்கார நூலார் (சொற்களை) அபிதை, இலக்கணம், வியஞ்சனாவியர்த்தி என மூன்று வகையாக்குவர். அவர் மதம் பற்றிப் பரிமேலழகரும் ‘சொல்லின் தொகை அறிந்த தூய்மையவர்’என்னும் திருவள்ளுவர் குறள் உரையில் (711) செஞ்சொல் இலக்கணச் சொல் குறிப்புச் சொல் என்பர்” - பிரயோக விவேகம்.

“இன்று வெளிவந்துள்ள பரிமேலழகர் உரைகளில் இலக்கணச் சொல் என்றே காணப்படுகின்றது. இலக்கணைச் சொல் இலக்கணச் சொல் என்று இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது” - மு.வை.அரவிந்தன்17

திருத்தமும் பொருத்தமும் எனப் பேசுமுகமாக அரவிந்தன் இவ்வாறு குறிப்பிடுகின்றார். காசி மடப்பதிப்பில் (1968) இக்குறளுரையில் இலக்கணச் சொல், எனவும் அடுத்து வரும் குறளுரையில் இலக்கணப் பொருள் எனவும் இடம்பெற்றுள்ளன. இலக்கணச் சொல் என வாராது, இலக்கணை என்பதே சரியாகும். பாவாணர் விளக்கத்திற் காண்க.

“ஆகுபெயர் போன்று ஆளப்பட்டுள்ள பெயர்களையெல்லாம் ஆகுபெயரென்றே பரிமேலழகர் குறித்துள்ளார். அவை இங்கு ஆகுபொருளி (இலக்கணை) என வேறு படுத்தப்பட்டுள்ளன.”

“சொல்லின் தொகுதியை அறிந்த தூயநடை யினர்; தாம் ஒன்றை அரசனிடம் சொல்லும் போது, அவனோடிருந்த அவையின் திறத்தை அறிந்து அதற்கேற்ப ஆராய்ந்து சொல்லுக... சொல்லின் தொகையென்றது அமைச்சர்க்கும் தூதர்க்கும் தெரிந்திருக்க வேண்டிய சொற் றொகுதியை (Vocablulary), தூய்மையென்றது, பிறமொழிச் சொல்லும் கொச்சைச் சொல்லும் வழூஉச் சொல்லும் இடக்கரச் (Vulgar) சொல்லும் அவையல் (unparlimentary) கிளவியும் திசைச் (Provincial) சொல்லுங் கலவாது, இயன்றவரை எல்லார்க்கும் விளங்குமாறு பேசும் தூய இலக்கண நடையை அவையறிந்து சொல்லுதலாவது, அதன் திறத்திற்கேற்ப நடையை உயர்த்தியும் தாழ்த்தியும் இடைநிகர்த்ததாகவும் பேசுதல். ஆராய்ந்து சொல்லுதலாவது, இரட்டுறலும் கவர்படலும் இடத்திற்கேற்றவாறு சொல்லும் குறிப்புச் சொல்லும் நீக்கி, வெளிப்படை யாகவும் விளக்கமாகவும் கோவைபடச் சொல்லுதல்.”

“செஞ்சொல், ஆகுபொருட்சொல் (இலக்கணச் சொல்), குறிப்புச்சொல் என்பன சொல்லின் வகையேயன்றித் தொகையாகா. திருவள்ளுவர் வேத்தியலோடு பொதுவியலையுஞ் சேர்த்தே கூறுவதால் பிற அலைகளில் சொற்பொழி வாற்றும் அறிஞர்க்கும் இதுவே நெறியாகக் கொள்க” - ஞா.தேவநேயப்பாவாணர்18

பாவாணர் குறிப்பிடும் சொற்றொகுதி என்பது மொழி நூலாரால் மொழிக் கிடங்கு எனவும் வழங்கப்படும். சொன்மைதெரிதலும் பொருண்மை தெரிதலும் முதலிய உரையாசிரியர்க்குரிய பயில்வு மட்டுமல்லாமல், மொழித் திறத்தான் முட்டறுக் கவல்ல மொழிப் புலமையும், சொல்லின் தொகை யறிந்த அகராதியியல் பேரறிவும் அவரிடம் சிறப்புற அமைந்தியலக் காணலாம். பரிமேலழகர் உரையினின்றும் முற்றிலும் மாறுபட்டு புது வெளிச்சம் பாய்ச்சிடவல்ல இக்குறளுரையுடன் அடுத்து வரும் குறளுக்கும் இவ்வாறே சிறப்புறப் பாவாணரை தொடந்தியல்கின்றது.

“சொல்லின் நடையாவது உலக வழக்கு, செய்யுள் வழக்கு என்னும் இருவகை இட வழக்கிலும்; இயல்பு வழக்கு, தகுதி வழக்கு என்னும் இருவகை ஆட்சி வழக்கிலும், செஞ்சொல், ஆகுபொருட்சொல், குறிப்புச் சொல் என்னும் மூவகைச் சொல்லும் முறையே செம்பொருளும், ஆகுபொருளும், குறிப்புப் பொருளும் உணர்த்தும் முறை இடைதெரிதலாவது ஊன் வேளையும், உறக்க வேளையும், நீண்ட நேரம் கேட்டுச் சலித்த வேளையும், வேறோர் இடத்துக்குச் செல்லும் வேளையும் அறிதலாம். நன்குணர்ந்து சொல்லுதலாவது அவையினர்க்கு விருப்ப மான பொருளை இனிதாகவும் சுருக்க மாகவும் விளக்கமாகவும் சொல்லுதல்”

ஞா. தேவநேயப்பாவாணர்.19

‘மாத்திரை முதலா அடிநிலை காறும் நோக்கு எழுதிய ‘நோக்கு’க்கு எடுத்துக்காட்டாய் இக் குறளுரை அமைந்தியல்கின்றதெனலாம். அவை யஞ்சாமை, அதிகாரத்தில் ‘வகையறிந்து வல்லவை வாய்சோரார்’என வரும் குறளுக்குரை காணும் போது பரிமேலழகர் ‘வல்லவை’என்பதற்குக் ‘கற்று வல்லவவை, அல்லாவவையென்னும் அவ் வகையினையறிந்து’என வாங்குப் பொருள் கண்ட வாறே தாமும் பொருள் கொள்ளும் பாவாணர் அவர் என்றுரைப்பாருமுளர் என வாளாவிட்ட பிறர் உரையினை அது எவ்வாறு பொருந்தா தெனவும் எடுத்துரைப்பார்.

“இருந்தாரது வன்மை அவை மேலேற்றப் பட்டது. வல்லவையென்பதற்குத் தாங்கற்று வல்ல நூற்பொருள்களை என்றுரைப்பாரும் உளர்” - பரிமேலழகர்20

“வல்லவர் கூட்டமாதலால் வல்லவை எனப் பட்டது. அவையைக் குறிக்குஞ் சொல் இக் குறளில் வேறின்மையால், வல்லவை என் பதற்குத் தாங்கற்றுவல்ல நூற்பொருள்

களை என்று உரைப்பது பொருந்தாது” - பாவாணர்21

இம்மூன்று பாட்டானும் சொல்லின் தொகை யறிதல், அவையறிதல், சொல்லின் நடைதெரிதல், அவையின் இடைதெரிதல் எனவாங்கு பாவாணர் குறளுரைகள் முறையே பரிமேலழகரை வெட்டியும், ஒட்டியும், தள்ளுவன தள்ளி, கொள்ளுவன கொள்ளு மாறு; பிறழக்கொண்ட திரிபினோடு உறழ்ந்து உரிய பொருளுரைத்தும், விட்ட இடத்தில் மேலும் தொடர்ந்து விரித்துரைத்தும் எடுத்துரைக்கும் பாங்கு எண்ணத்தக்கதாம். மட்டுமல்லாமல் அக் காலத்திற்கேயன்றி இக்காலத்திற்கும் ஏற்குமாறு இன்றைய பொருத்தப்பாட்டுடன் இனம் காணும் பாங்கு நாமும் பின்தொடரத் தக்கதுமாம்.

காமத்துப்பாலில் தகையணங்குறுத்தல் எனும் முதல் அதிகாரத்தின் முதற்குறளான ‘அணங்கு கொல்’என்னும் குறட்பாவில் பயின்றுவரும் ‘கனங்குழை’என்பது ‘ஆகுபெயரா அன்மொழித் தொகையா’எனும் விவாதத் தரப்புகள் வெகுவாக நடந்தேறின. ‘கணங்குழை’என்பது மணக்குடவர் கொண்ட பாடம். ‘கனங்குழை’என்பது பரிமேலழகர் கொண்ட பாடம். ‘கனங்குழல்’என்பது ச.பால சுந்தரனார் கொண்ட பாடம் (அதனை யவர் பரிமேலழகர் கொண்ட பாடமெனக் குறிப்பிடு வார்) ‘கனங்குழை’ஆகுபெயர் என்பது பரிமேலழகர் சொன்மை தெரிதல் மாறாக அது அன்மொழிக் காணப்புகுமுன் காமத்துப் பாலில் களவியல் குறித்துப் பரிமேலழகர் உரைப்பதனையும் பாவாணர் மறுத்துரைப்பதனையும் முதலிற் காண் போம்.

“களவாவது - பிணி மூப்பிறப்புக்களின்றி எஞ்ஞான்றும் ஒரு தன்மையராய் உருவுந் திருவும் பருவமுங் குலனுனுங்குணனும் அன்பு முதலியவற்றால் தம் முன் ஒப்புமை யுடையராய தலைமகனுந் தலைமகளும் பிறர் கொடுப்பவும் அடுப்பவுமன்றிப் பால் வகையால் தாமே எதிர்ப்பட்டுப் புணர்ந்து வருவது” - பரிமேலழகர்22

“இலக்கண நூலார் புலனெறி வழக்கப்படி பல செய்திகளைக் கூறினாலும், அகப் பொருளியலிற் கூறிய காதலர் வாழ்வு உண்மை யானதும் உலகியற்கொத்ததுமேயாகும். ஒரு காலத்து ஓரிடத்து ஓரிணையர் மாட்டு நிகழ்ந்த உயரிய வாழ்க்கையை அளவைப் படுத்தியதேயன்றி வேறன்று. ஆதலால்,

“பிணிமூப்பிறப்புக்களின்றி எஞ்ஞான்று மொரு

தன்மையராய்... புணர்ந்து வருவது’

என்று பரிமேலழகர் கூறியிருப்பது பொருந் தாது. சேரசோழ பாண்டியர் போலும் ஓர் அரசக் குடும்பத்திற் பிறந்து நாகரிகமாகவும் மேனத்தாகவும் வளர்ந்து, இயற்கையழகோடு செயற்கையழகும் நிரம்பிப் பொன்மை கலந்த வெண்ணிறம் மின்னும் ஒரு கன்னிகையை இயற்கை வளம் பொலிந்த ஒரு கண்கவர் கவின்காவில் மகிழ்ச்சி நிலையிற் கண்ட போது ‘அணங்கு தொல் ஆய்மயில் கொல்லோ’என்று ஓர் இளவரசனும் வியந்தது என் வியப் பாம்? அணங்குதல், வருத்துதல், அணங்கு, வருத்தும் தெய்வப் பெண்” - ஞா. தேவநேயப் பாவாணர்.23

“அவரது (அரசன் சண்முகனாரின்) ‘அன் மொழித்தொகை’என்ற ஆராய்ச்சிக் கட்டுரை ‘செந்தமிழ்ச் செல்வி’இதழில் வெளிவந்த போது தமிழரிடையே பரபரப்பு ஏற்பட்டது... கனங்குழை என்ற சொல்லுக்கு ஆகுபெயர் என இலக்கணக் குறிப்பு கூறுகிறார் பரிமேலழகர். இதே சொல்லுக்கு இலக்கணம் அன்மொழித் தொகை என்பார் சிவஞான முனிவர். காலங் காலமாக உள்ள இந்தச் சிக்கலில் இலக்கணப் புலவர்கள் மாட்டாமலே இருந்து வந்தனர். அரசன் சண்முகனாரே இதைப் பற்றிய விவாதத்தை முதலில் தொடுத்தார். சைவ இலக்கணக் கடல்களுக்குச் சிவஞான முனிவரை மறுத்துக் கூறத் துணிவில்லை” - அ.கா. பெருமாள்.24

“கனங்குழை என்னும் சொல்லொன்றையே ஆகுபெயர் எனவும் அன்மொழித் தொகை எனவும் கூறிய இவ்விருவர் (சேனாவரையர், நச்சினார்க்கினியர்) மாறுகோளினுள் முன் னோர் நூலின் முடிபுடன் ஒத்தியையாது, ஒவ்வாது யாதென ஆராய்ந்து உண்மை கோடலே மதிநுட்ப நூலுடையார்க்கு மரபாகுமாதலிற் கொள்ளற்பாலதைன்றாய உரை இஃதென்றும் கொள்ளற்பாலதைன்றாய மெய்யுரை இஃதென்றும் யாவரு மொப்பு மாறு தடைவிடையிடைப் பெய்து எழுதப்புக் கேன்” - அரசன் சண்முகனார்25

“இதில் பரிமேலழகரின் உரையை நிலை நாட்டி, சிவஞான முனிவரை மறுத்தார். தொல்காப்பியம் சொல்லதிகாரம் எச்ச வியல் 416ஆம் நூற்பாலின்படி ஆகுபெயரும் அன்மொழியும் ஒன்று என்றார் சேனா வரையர். இதை மறுத்து இரண்டும் வேறு என்றார் சேனாவரையர். இதை மறுத்து இரண்டும் வேறு என்றார் நச்சினார்க்கினியர். அரசன் சண்முகனார் நச்சினார்க்கினியர் பக்கம். அவர் இதை வேறு சான்றுகளுடன் நிறுவினார்.” - அ.கா.பெருமாள்26

இக்கட்டுரை செந்தமிழ்ச் செல்வியில் வெளிவந்த போது இதனை யாழ்ப்பாணத்து இ.கணேசபிள்ளை தீவிரமாக மறுத்து அதில் எழுதினார் எனவும், மீளவும் அரசன் சண்முகனார் “நுணங்கு வெளிப் புலவர்க்கு வணங்குமொழி விண்ணப்பம்’என அவரை மறுத்தெழுதினாரெனவும் குறிப்பிடும் பெருமாள், மறைமலையடிகள் மட்டும் இவரை ஆதரித்தார் எனவும் தெரிவிக்கின்றார்.

“தொல்காப்பியம், கபிலம் என்பவை ஈறு திரிந்து செயற்பாடு உணர்த்தி நிற்றலின் ஆகு பெயரதெற்கேலா என்க. திருவாசம், திரு வாய்மொழி என்பவை பாக்களை உணர்த்தி நிற்றலின் ஆகுபெயராம். இவற்றை அடை யடுத்த ஆகுபெயர் என்ப. இவை பாக்களை உணர்த்தாமல் நூல்களை உணர்த்தி நிற்பின் அன்மொழித் தொகையாம் என்க.” - ச.பால சுந்தரம்27

“திருவாசகம் - திருவாய்மொழி பாக்களை உணர்த்தின் அடையடுத்த ஆகுபெயர், நூல் களை உணர்த்தி நிற்பின் அன்மொழிக் தொகை என்றார். வாசகம், வாய்மொழி அவற்றானாகிய பாக்களை உணர்த்த - அப்பாக்கள் அவற்றான் ஆகிய நூலை உணர்த்துதல் இருமடியாரு பெயர் என்று கோடற்கண் தவறுயாது என்பது ஆராயற் பாலது: - தி.வே.கோபாலய்யர்28

மேற்கண்ட விவாதத் தரப்புகளின் தொடர் நீட்சி யாகப் பாலசுந்தரனார் உரைவிளக்கத்தைக் காண புகுமுன் ஆகுபெயர், அன்மொழிக் குறித்த அவர் வரையறைகளை முதலிற் கண்டு அதன்பின் தொடர்வோம்.

“ஆகுபெயர் என்பது முதலிற் கூறும் சினையறி கிளவி முதலாகத் தன்னொடு தொடர்புடைய பொருளை ஏற்று ஒரு சொல்லாக வரும். சிறுபான்மை ஆகுபெயர் அடையடுத்தும் இருபெயரொட்டாயும் வரும்.”

“அன்மொழித் தொகையாண்டும் இரு சொல்லாயே தொக்குத் தொகை மொழி யாய் ஒரு சொல் நடைத்தாகி வரும். தொக்க இரு சொல்லிக் கண்ணும் பொருள் நில்லாமல் பிறிதொரு சொற்பொருளைப் பயந்து நிற்கும். அது வேற்றுமைத் தொகை, பண்புத் தொகை, உம்மைத் தொகைக்குரிய சொற் களின் அடிப்படையிற் பெரும்பான்மை யாயும் ஆகுபெயராதற்கேலாத வினைத் தொகை, வினைத்தொகை உவமைத்தொகைக் குரிய சொற்களின் அடிப்படையிற் சிறுபான் மையாக அமைந்து வரும்.”

“அணங்கு கொல் ஆய்மயில் கொல்லோ என்னும் திருக்குறளின் உரையுள் பரிமேலழகர் ஆகுபெயர் எனச் சுட்டியுள்ள கனங்குழை என்னும் தொகை மொழி தொல்காப்பிய நெறிப்படி ஆகுபெயராதற் கேலாமையின் உரையாசிரியன்மாரும் ஆய்வாளர் பலரும் பெரிதும் தடுமாற்றத்திற்காளாய்த் தத்தமக்கு தோன்றியவாறெல்லாம் விளக்கந்தந்து மாணாக்கரை மயக்கத்துள் ஆழ்த்தியுள்ளனர். நன்கு ஆயுங்கால் பரிமேலழகர் கூறிய உரைக் குறிப்பின்படி பாடம் வேறு - அப்பாடத்திற் குரிய இலக்கணத்தைப் பிழையான பாடத் திற்கு ஏற்றிக்கூற அரசஞ் சண்முகனார் போன்ற பேரறிஞர் சிலர் முயன்று தொல் காப்பிய நெறியையே சிதைத்துள்ளனர்.

பரிமேலழகர் கொண்ட பாடம் ‘கனங்குழல்’என்பதாகும். குழல் என்பது சினையிற் கூறும் முதலறிகிளவி பற்றி வந்த ஆகுபெயராகும். குழல் பிற உறுப்புப் போலாமையின் மாணக்கர் அய்யங் கொள்வர் எனக் கருதி ‘கனங்குழல்’ஆகுபெயர் என்றார். கனங்குழல் என்பது அவர் கொண்ட பாடமென்பதனை அடுத்து வரும் ‘கணங்கழல் என் பாடமோதிப் பல வாய் திரண்ட குழல்’என்று உரைப்பாரும் உளர்’என்னும் தொடரால் அறியலாம்.

இற்றைக்கு உள்ள பாடம், ‘கணங்குழை என்று பாடமோதிப் பலவாய்த்திரண்ட குழை’என்றே உளது. ‘குழல்’என்பது ஏடெழுதினோரால் குழை எனப் பிழை படலாயிற்று என்பதனைப் ‘பலவாய்த் திரண்ட’என்னும் தொடர்பு புலப்படுத்தி நிற்றலை அறியலாம். காதணியாகிய குழை பலவாகத் திரளுவதற்கு எவ்வாற்றானும் இயையாமையறிக. குழை என்பதே பாடம் எனக் கொள்ளின் குழை என்பதற்குக் கூந்தல் (தலைமயிர்க்கற்றை) எனப்பொருள் கொள்ளல் வேண்டும். காதணி என்னும் பொருள் ஒவ்வாது” - ச.பாலசுந்தரம்29

கணங்கழை என்பது காலிங்கர் கொண்ட பாடம். ‘கனங்குழை’அன்மொழித் தொகை. ‘கணங்குழையென்று பாடமோதிப் பல வாய்த் திரண்ட குழையென்றுரைப்பாரு முளர்’என்றார் பரிமேலழகர். பாம்படம், தண்டொட்டி, அரிசித் தழுப்பு, பூச்சிக்கூடு ஆகிய பாண்டி நாட்டுக் காதணிகளைக் குறிப்பின் அப்பாடமும் பொருந்துவதே” - ஞா.தேநேயப்பாவாணர்30

பாவாணர் ‘கனங்குழை’என்பது அன்மொழித் தொகையெனப் பரிமேலழகர் சொன்மை தெரிதலை மறுத்தார். ‘கணங்குழை’எனும் காளிங்கர் பாடமும் அமையுமென ஏற்று பாலசுந்தரனார் பொருண்மை தெரிதலையும் மறுத்தார். அக்காலச் சேரநாட்டு நம்பூதிரி பிராமணக் கன்னிகையர் சவச்சடங்கினைக் குறிப்பிட்டும், பாண்டி நாட்டுக் காதணிகளைக் குறிப்பிட்டும் ஏனைய உரைகளைப் பாவாணர் மறுத்துரைக்கும் பாங்கு பண்பாட்டாய்வையும் அகப்படுத்தும் ஒரு புதிய பரிமாணத்தை உரை யியலுக்கு வழங்கியுள்ளது கவனங்கூறத் தக்க தாகும்.

இக்குறளினையே முற்றிலும் மாறுபட்ட இன் னொரு கோணத்திற் காண முற்படுகின்றார் நெடுஞ் செழியனார். ஒரு பொருளின் இருப்பை உறுதிப் படுத்துவதற்கான அறிவின் வாயில்கள் (பிரா மணங்கள்) முறையே காட்சி, அய்யம், தெளிவென எண்ணிய (சாங்கிய) நோக்கில் எடுத்துரைக்கு முகமாக அதற்கான சிறந்த எடுத்துக்காட்டென இக்குறளையே முன்வைக்கின்றார்.

“எண்ணியத்தின் தருக்கமுறைகளின் மூல வடிவங்களைத் தொல்காப்பியத்திலும், வளர்ச்சி நிலையினைத் திருக்குறளிலுமே முழுமையாகக் காணமுடிகிறது.

காட்சி, அய்யம், தெளிவு எனும் படிநிலை களை அடிப்படையாகக் கொண்டு அமைந்த இலக்கியங்களே தமிழரின் அகத்திணை இலக்கியங்களாகும். அதற்கான சிறந்த எடுத்துக்காட்டு திருக்குறள் காமத்துப் பாலின், ‘அணங்குகொல்...’ எனும் முதல் குறளாகும்” - க.நெடுஞ்செழியன்31

அதிகமாக விவாதத் தரப்புகளுக்கு ஆளானது ‘அறத்தாறிது இதுவென’வரும் குறளாகும். ஆறென்பது நெறியா? பயனா? எனவும், இக் குறளிற்கான பொருள்கோள்முறைமை உடன் பாட்டினதா? எதிர்மறையினதா? இது என்றைக்கும் ஏற்றதா? அன்றைக்கு மட்டுமே உரித்தானதா என வாங்கு இங்கே பல்வேறு விவாதத் தரப்புகள் நிகழ்ந்தேறி உள்ளன. அவற்றை எல்லாம் தொகுத்துக் காண்போம்.

“அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை

பொறுத்தானே டூர்ந்தான் இடை”

அறத்தின் பயன் இது என்று யாம் ஆகம அளவையான் உணர்த்தல் வேண்டா. சிவிகையைக் காவுவானோடு செலுத்து வானிடைக் காட்சியளவை தன்னானே உணரப்படும் பயனை ஆறென்றார், பின்ன தாகலின் என என்னுமெச்சத்தாற் சொல் லாகிய ஆகமவளவையும், ‘பொறுத்தா னோடு ஊர்ந்தானிடை’என்றதனாற் காட்சி யளவையும் பெற்றாம்” - பரிமேழகர்32

“பரிமேலழகர் உரையில் ‘ஆறு’என்பது பயன் என்னும் பொருளில் பயன்படுத்தப் பட்டுள்ளது. ஆனால் மணக்குடவரும் காளிங்கரும் ‘ஆறு’என்பதற்கு ‘நெறி’என்று பொருள் கொண்டனர். ‘இக்குறளுக்குச் சிலர், பல்லக்கைச் சுமப்பவனும், அதன் மேலிருந்து ஊர்ந்து செல்வோனுமாகிய அவர்களிடையே அறத்தின் பயன் இஃது எனக் கூறவேண்டா என எதிர்மறைப் பொருள்பட விளக்குவாராயினர். அறம் கூற வந்த திருவள்ளுவர் இதுபோன்ற தமது நூலுள் வேறு எங்கும் எதிர்மறை முகமாக அறத்திற்கு விளக்கம் தந்திலர் என்பது நோக்கத்தகும் - ந.பாலுசாமி33

அறன் வலியுறுத்தல் அதிகாரத்தில் வரும் மூன்று குறள்கள் (4, 5, 7) தவிர ஏனைய ஏழும் பொதுவாக அறன் வலியுறுத்துவனவேயன்றி அறநெறியையோ, பயனையோ உணர்த்தினவல்ல. ஏழாங்குறளான இதுவொன்றே ஓரளவு அறநெறி இன்னதென் கின்றது எனத் தொடர்வார். பாவாணாரும் இக்குறளுரையைப் பொறுத்தவரையில் பரிமேலழகர் பொருள்கோளையே ஏற்கின்றார். ஆறெனில் அறவழிப் பயனென்கிறார். ஆனால் இக்காலத்திற்கேலாக்குறளென அவர் பட்டிய லிடும் ஜந்தனுள் ஒன்றாக்கி இக்குறளையும் மறு தலித்து விடுகின்றார்.

“இதுவே ஆசிரியர் கருத்தென்பது பின்னர் அவர் ஆங்காங்கு நூலிற் கூறும் கூற்றுக் களாலும், பல்பிறவியும் பழவினையும் பற்றி அவர்க்கிருந்த நம்பிக்கையாலும்... அவ்வை யார் கூற்றாலும்... போப்பையர் மொழி பெயர்ப்பாலும் அறியப்படும் - ஞா. தேவ நேயப்பாவாணர்34

“கருத்து மயக்கத்துக்கும் கருத்துப் பூசலுக்கும் உரிய குறளாகும். பல்லக்கில் ஏறி இருப் பவன் அறஞ்செய்தவன் எனவும் அதனைச் சுமப்பவன் அறஞ்செய்யாத பாவி எனவும் பரிமேலழகர், மணக்குடவர், பரிதி, காளிங்கர், பாவாணர் முதலியோர் பொருள் காண்பர். பல்லக்கில் ஏறுதல், அதனைச் சுமத்தல் என்ற நிகழ்ச்சியை வைத்து அறத்தின் பயனை மதிப்பிட வேண்டா எனத் திரு.வி.க.வும், குழந்தையும், பாரதிதாசனும் பொருள் செய்வர். இச்சிக்கலை நாம் இக்கட்டுரையில் புதிதாய்க் கூறிய குறளுத்தி மூலம் தீர்க்

கலாம், உலகத்தார் நடைமுறையில் கொண் டிருக்கும் கருத்தினை மறுப்பது ஒரு குறளுத்தி. அப்போது வேண்டா என்ற நடையை ஆளுவார் வள்ளுவர்” - வ.சுப. மாணிக்கம்35

எனத் தொடருமவர் ‘மழித்தலும் நீட்டலும் வேண்டா’, ‘அஞ்சாமை அல்லால் துணை வேண்டா’, ‘புணர்ச்சி பழகுதல் வேண்டா’, ‘மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு’என வரும் குறள்கள் எல்லாம் ஓர் உத்தியின் வடிவமைப் புடையவை என உத்திமுறையால் அணுகு கின்றார்.”

“இந்நடையில் அமைந்ததுவே அறத்தாநிது வென வேண்டா என்ற குறளும், ஆதலின் இப்புறக் காட்சியை அறமென மயங்க வேண்டா என்று உலகத்தை இடித்துரைப்பதுதான் வள்ளுவரின் உத்தியாகும் மனத்துக்கண் மாசில்லாமையே அறம் (34) எனவும், மேலிருந்தும் மேலல்லார், கீழிருந்தும் கீழல்லார் (973) எனவும் உடன்பாட்டாலும், எதிர்மறையாலும் மொழிந்த வள்ளுவர் பெருமகன் பல்லக்குக் காட்சியைப் பொருளாக மதித்துச் சொல்வாரா என்று நினைமின்” - வ.சுப. மாணிக்கம்36

திருக்குறளில் உள்ள விடுவிக்கப்படாத புதிர்களில் இக்குறளும் ஒன்றெனும் நெஞ்செழியனார் மேற் கண்ட வ.சுப.மா.வின் மேற்கோளை எடுத்தாள் வதுடன் சாங்கியக்காரிகையின் சேர்ந்திருக்கை - பிரிந்திருக்கை என்னும் அணுக்கள் பிரிதல், கூடுதலால் ஏற்படும் பண்பு வேறுபாடுகளை முன்னிறுத்தி அணுக முற்படுகின்றார்.”

“பல்லக்கைச் சுமப்பவன் - ஊர்பவன் ஆகிய இந்த உவமை அப்படியே அணுக்கோட் பாட்டை விளக்கும் போது அதாவது அணுக்கள் பிரிவதையும் - கூடுவதையும் விளக்கும்போது - சாங்கியக்காரிகையில் எடுத்தாளப்பட்டுள்ளது. அணுக்கள் சேர்ந் திருக்கும் போது ஏற்படும் தன்மை - பண்பு வேறு; பிரிந்திருக்கும்போது ஏற்படும் தன்மை - பண்பு வேறு. இதனைச் சேர்ந் திருக்கை - பிரிந்திருக்கை என்று காரிகை விளக்கும் - க.நெடுஞ்செழியன்37

இத்தொடர்பில் பொருட்களின் இயற்பாடு

களைக் குறித்து அணுக்களின் கூடுதல் - பிரிதலை முன்னிறுத்தித் தமிழ் மெய்யியலுக்கூடாகப் பேசி நிற்கும் இன்னொரு தரப்பையும் இத்துடன் ஒரு சேரக் காண்போம்.

“அணுக்களால் ஆகிய நிலம், நீர், தீ, காற்று என்ற 4 தனிமங்களும் (elements of atoms) வெவ்வேறு வகைகளில், நிலைகளில் கூடுதல் - பிரிதலால் பொருட்களின் தோற்றங்களும் மாற்றங்களும் நிகழ்கின்றன. கூடலும் - ஊடலும் ((love and hate) ஆகிய தொடர் சுழற்சியிலுள்ள அணுத்துகள்கள் ஒன்றை யொன்று நெருங்கித் தழுவும்போது தோன்றும் ஈர்ப்பும், அழுத்தும்போது தோன்றும் விலக்கும் (attraction and repulsion) பொருட்களின் இயற்பாடுகளையே குதிக் கின்றன” - செ.நாராயணசாமி38

என்னுமவர் ‘நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணெனும்’ (குறள் : 1104) ‘அவிழ்கின்றவாறும் அது கட்டுமாறும்’ (திருமந்திரம் 2 அருளல்) எனத் தொடர்கின்றார்.

சாங்கியக்காரிகை விளக்கத்தின் வழியாக இக் குறளை ஆராய்ந்தால் அறத்தைச் செய்தல் என்பது பெறுபவன் ஒருவன் இருக்கும் போதுதான் முழுமை பெறும் எனும் கருத்துப்புலப்படக் காணலாம் என, ‘இரப்பாரை இல்லாயின்’எனும் குறளையும், ‘செல்வத்துப் பயனே ஈதல்’எனும் புறப்பாடலடிகளையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம் என்கின்றார்,

“அத்துடன் இரவு - இரவச்சம் ஆகிய அதி காரங்களையும் ஒப்பிட்டுக் கண்டால் இன்னும் கூடுதல் தெளிவு கிடைக்கும். அக்குறள் இடம் பெற்றுள்ள ‘அறன்வலியுறுத்தல்’எனும் அதிகாரம் முழுமையும் அறத்தின் பயனை விளக்கும் வகையில் அமைந்திருப்பதையும் நாம் கருத்தில் கொண்டால் அதன் நுட்பத்தை நன்கு புரிந்து கொள்ளலாம். அதனால் பல்லக்கைச் சுமப்பவன் பாவம் செய்தவன் என்றோ, பல்லக்கில் ஊர்பவன் புண்ணியம் செய்தவன் என்றோ கருதிவிடக் கூடாது. மாறாக இருவரும் இணையும் போதுதான் பயணம் தொடரும். அதுபோல்தான் அறமும். இங்கே கொடுப்பவன் உயர்ந்

தவன் என்றோ பெறுபவன் தாழ்ந்தவன் என்றோ கருதுவதற்கு இடம் இல்லை” -

க.நெடுஞ்செழியன்39

இக்குறளின் புதிரவிழா முடிச்சை அவிழ்த்து விடுவிக்க அதில் ஊடாடிக் கிடக்கும் உத்தி மற்றும் மெய்யியல் கூறுகள் வாயிலாக முறையே வ.சுப.மா.வும், க.நெ.யும் அணுகி விடுவிக்கக் கண்டோம். இவற்றை உரையாசிரியன்மார் கை யாண்ட முறை குறித்த மேலதிகப் புரிதல்களுக்கு இரு பதிவுகளை இங்கே காண்போம்.

“தமிழ் இலக்கிய இலக்கணங்களில் பின் பற்றப்பட்ட மரபு குறித்த விரிவான ஆய்வுகள் நடைபெறாத காரணத்தாலேயே பல உண்மை களை நம்மால் புரிந்துகொள்ள முடியாமல் போய்விட்டது. தந்திர உத்திகளை - உரை யாசிரியர்கள் தாங்கள் உரை வகுத்த இலக்கண நூல்களுக்கு மட்டுமே பயன்படுத்தியதால் அவற்றைத் திருக்குறளுடன் பொருத்திப் பார்க்கத் தவறிவிட்டோம். அதனால் தான் எந்தக் கருத்து எந்த நோக்கத்தில் சொல்லப் பட்டது என்பதையும் புரிந்துகொள்ள முடி யாமல் போய்விட்டது. உரையாசிரியர்கள் தரும் உரை மேற்கோள்கள் பெரும்பாலும் மெய்யியல் தொடர்பானவை. மெய்யியல் போராட்டங்களைத் தருக்கவியல் நோக்கில் விளக்கியவை.” - க. நெடுஞ்செழியன்40

“வள்ளுவர் கண்ட மெய்ப் பொருளியற் கூறுகள் வேற்றுச் சார்பால் விளைந்தன வாகாத தமிழ் மரபை ஒட்டிய பழம் பெருங் கொள்கைகளாம். ஆகவே காலத்தால் பின் தோன்றியனவும், கடவுட் கொள்கையை ஒத்துக் கொள்ளதனவும், மூல நூல்களுக்கு உரைகாணும் வகையால் உண்டானவும் ஆகிய மெய்ப்பொருட் சுவடுகள் தமிழ் நாட்டில் பதிவதற்கு முன்பே இருந்த பழந் தமிழர் கடவுட் கொள்கையே வள்ளுவர் காட்டும் மெய்ப்பொருட் சுவடுகள் என் பதைத் துணியலாம். இதற்குப் பெயர் எதை வேண்டுமானாலும் சூட்டிக் கொள்ளுங்கள்” - ச.தண்டபாணிதேசிகர்41

இருவர் கூற்றும் இருவேறு மெய் காண்முறை களின் பாற்பட்டனவாம். ஆயின் வேற்றுச் சார்பால் விளைந்தனவாகாத தமிழ் மரபென இனம் காணும் வகையில் பொதுவானவை. வெவ்வேறு உத்திகளுக்கு ஊடாக குறளின் புதிரவிழா முடிச்சுக்களை க.நெ.கட்டவிழ்க்கும் பாங்கினை இனிக் காண்போம்.

ஊழ், முறை, விதி, நியதி இவையாவும் ஒரு பொருள் குறித்தனவே. இவ்வாறே கர்மா, வினை, தலைவிதி இவையாவும் ஒரு பொருள் குறித்தனவே. இரண்டனையும் விதந்தோதிக் காண்போம்.

“பண்டைத் தமிழ்ச் சான்றோர்களும், இக் கால மறுமலர்ச்சிச் சிந்தனையாளர்களும் வைதீக சமயத்தினர் கூறும் வினைக் கொள் கைகளையும் தலைவிதி பற்றிய நம்பிக்கை களையும், யாதோ ஒருமுறைப்படி மக்கள் வாழ்க்கையை இயக்குவது தான் ஊழ் என்பது தமிழரின் துணிவாகும்.” - க.த.திருநாவுக் கரசு42

“ஊழ் எனும் விதி ஆசீவகர்கள் மதக் கருத்தின் மையக்கல். கர்மா எனும் வினை சைனர்கள், பௌத்தர்கள், இந்து மதத்தோர் ஏற்றுக் கொள்ளும் ஓர் எண்ணக் கோட்பாடு. ஊழ் எனும் விதியின் செயற்பாடு தனிமனிதனின் முயற்சியையோ செய்கைகளையோ அடிப் படையாகக் கொண்டதல்ல. ஊழ் எனும் விதி ஓர் உயிர் கருவிற்பட்ட பொழுதே நியமிக்கப்பட்டுவிடும். ஆனால் கர்மா எனப்படும் வினையோ முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற எண்ணத்தைக் கொண்டு, ஒரு மனிதன் ஒன்றனைத் துய்க்கும் போது, அது அவன் இன்றோ நேற்றோ, இப்பிறப்பிலோ முற்பிறப்பிலோ செய்த செயலின், எண்ணத்தின் அடிப்படையாக வந்த விளைவாகவே இருக்கும்” - ர.விஜய லட்சுமி43

ஆக ஊழ் எனில் ஆரூயிர் முறைவழிப்படும்’என்ற ஆசீவக முறை. ஊழல் எனில் முறை என்றே பொருள் (ஊழ் x ஊழல், தண் x தணல் மண் x மணல்) இதன் எதிர்மறையே முறைகேட்டைக் குறித்து நிற்கும் ஊழல் எனும் பதப்பிரயோகம் - இத்தகைய புரிதல்களுடன் திருக்குறளின் ‘ஊழ்’பற்றிக் காண்போம்.

“இருவினைப் பயன் செய்தவனையே சென்றடைதற்கேதுவாகிய நியதி. ஊழ், பால், முறை, உண்மை, தெய்வம், நியதி, விதியென்பன ஒரு பொருட் கிளவி. இது பொருளின்பங்களிரண்டற்கும் பொதுவாய் ஒன்றனுள் வைக்கப்படாமையானும், மேற் கூறிய அறத்தோடியைபுடைமையானும், அதனிற்கண் வைக்கப்பட்டது” - பரிமேலழகர்44

வள்ளுவர் காட்டும் ஊழியலில் ஆசீவகத்தின் ஊழியலான பூரணரின் தற்செயல், பக்குடரின் இயல்பு, மற்கலியின் நியதி மூன்று (10 குறள் களிலும்) இடம்பெறவில்லை, ஊழின் எல்லையற்ற ஆற்றலை ஏற்றுக்கொண்டிருப்பின் ஆகூழ் போகூழ் எனப் பகுத்திருக்க இயலாது. பிற்காலச் சமண, பவுத்த சமயங்கள் கருமக்கோட்பாட்டையும் ஊழ்க் கோட்பாட்டையும் கலந்த கலவைக் கோட்பாடாக ஊழாற்றலை ஏற்றுக்கொண்ட வாறும் வள்ளுவர் ஏற்றுக்கொள்ளவில்லை என்றெல்லாம் குறிப்பிடும் நெடுஞ்செழியனார் அப்படியானால் வள்ளுவரின் ஊழியல் யாருக்கு உரியதெனக் கேள்வியெழுப்பித் தொடர்கின்றார்.

“வள்ளுவர் இவ்வியலை (ஊழியலை) மூன்று பால்களுக்கும் பொருந்தும் வண்ணம் ‘மத்தி மதீபமாக வைத்துள்ளனரா? அல்லது தம் கோட்பாட்டை நிலைநாட்டப் பிறர் மதங் கூறலாக அமைத்துள்ளாரா?’ என்பது ஆய்வுக் குரியது.”

‘அறத்துப்பாலிலும், பொருட் பாலிலும்

பல அதிகாரங்களுள் ஊழின் ஆற்றலை, வள்ளுவர் மறுப்பதுடன் ஊழ்வினையின் இலக்கணமாய்ச் சொல்லப்படும் அனைத்துக் கருத்துக்களுக்கும் எதிர்மறையான கருத்துக் களையே விளக்கிச் செல்கின்றார். எனவே ஊழ் பற்றிய கருத்துக்கள், திருக்குறளில் இடம் பெற்றிருந்தாலும் அவை நியதிக் கோட்பாட்டை ஒட்டி அமையவில்லை. ஆதலால் வள்ளுவர் காலத்தில் தமிழகத்தில் நிலவிய ஊழ் பற்றிய சிந்தனையின் வளர்ச்சியே ஆசீவகமாகவே உருப்பெற்றிருக்க வேண்டும்” - க.நெடுஞ்செழியன்.45

‘கல்வி’அதிகாரத்தில் ‘தொட்டனைத்து ஊறும் மணற்கேணி’என வருங்குறள் ‘ஆணை கூறல்’எனும் உத்தியையும், ‘ஊழியலில்’நுண்ணிய நூல் பல கற்பினும்’என வரும் குறள் ‘பிறன் கோட் கூறல்’என்ற உத்தியையும் அடிப்படையாகக் கொண்டவை என இனம் காணும் நெடுஞ் செழியனார் ஊழியல் முழுமையையும் ‘பிறர் மதம் கூறல்’எனக் கண்டால் தான் ஆள்வினையுடைமை முதலான அதிகாரங்களை முரண் பாடின்றிப் புரிந்து கொள்ள முடியும் என உத்திகள் வாயிலாக குறட் புதிர்களை அவிழ்க் கின்றார்.

“தொல்காப்பியம் விளக்கிய பல்வேறு உத்தி களுள் பிறன் கோட் கூறல் என்னும் உத்தியின் அடிப்படையில்தான் ஊழியலை ஓர் அதிகாரமாக அமைத்துள்ளார். அப்படி மாற்றார் கோட்பாட்டை, ஓர் அதிகாரத்தில் (ஊழியலில்) விளக்கியவர் தன் கோட் கூறல், ஆணை கூறல், பல்பொருட்கேற்பின் நல்லது கோடல் ஆகிய உத்திகளால் முயற்சி உடைமை, ஆள்வினை உடைமை, ஈகை, ஒப்புரவு, இடனறிதல், காலமறிதல், வினை செயல் வகை, குடிசெயல் வகை எனும் அதிகாரங்களில் ஊழியலுக்கு மாறான செய்திகளை விரித்துச் செல்கின்றார்” - க. நெடுஞ்செழியன்46

இடம்பெறும் அதிகாரம், பயின்று வரும் உத்தி இவற்றைப் பற்றி நோக்காமல் இரு வேறு குறள் களை அணுகும்போது அவற்றிடையே முரண் பாடு காணக்கிடக்கின்றது. இத்தகைய முரண்பாடு களை உரிய பொருள்கண்டு நீக்க முற்படுதல் உரை யாளர்க்குரிய அறைகூவலான உரைக்கூறாகும். எத்தகைய பனுவற் சூழமைவில் என்ன வகையான முறையில் அது கட்டமைக்கப்பட்டதென இனம் காணுவதன் மூலமே அம்முரண்பாட்டை நீக்க இயலும். இவ்வாறு மாறுபடத்தோன்றினும் அவை தம்முள் முரண்படாமல் இருப்பதனை ‘மலையாமை’என்பர். திருக்குறளின் உள்ளார்ந்த பதின்வகைப் பண்புகளில் இத்தகைய ‘மலைவு தீர்த்தல்’என்பதும் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது.

“மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்கள் திருக்குறளில் மியைந்து கிடக்கும் அறிவு நலன்களைப் பற்றிக் கூறும்போது மொழி சுருங்கல், பொருள் விளங்கல், மொழிய இனிது ஆதல், நலமொழி புணர்த்தல், வழியமை ஓசையில் மொழிதல், ஆழ்ந்திருத்தல், முறை நிறுவல் மலைவு தீர்த்தல், மொழி விழுமியது பயத்தல், (எடுத்துக்) காட்டாதல் ஆகிய பதின் வகைப் பண்புகளை நிறுவுகிறார்” - கு.ச.ஆனந்தன்47

‘திருவள்ளுவர் தம் கருத்தமைதி தானே கருதி விரித்து உரைத்தான்’எனும் போற்றப்படுதற் கேற்பப் பரிமேலழகரே இத்தகைய ‘மலைவு தீர்த்தலை’எடுத்துரைப்பதாக மு.வை.அரவிந்தனும் எடுத்துக் காட்டுவார்.

‘ஊழிற் பெருவலியாவுள’என்றவர் ‘ஊழையும் உப்பக்கம் காண்பர்’என்றது குறித்து ‘ஊழ் ஒரு காலாக இரு காலாக அல்லது விலக்கல் ஆகா மையின், பலகால் முயல்வர் பயன் எய்துவார் என்பார் “உப்பக்கம் காண்ப என்றார்.” ‘மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு’என்றவர். ‘உண்மை அறிவே மிகும்’என்றது. ‘ஊழ் மாறு கொள்ளாவழியாகலின் மேல் உண்மை அறிவே மிகும் என்றதனோடு மலையாமை அறிக’என்று உரைக்கின்றார். இவ்வாறு பரிமேலழகர் முரண் பாடு நீக்குதலுக்கு எடுத்துக்காட்டுகளாக அரவிந்தன் எடுத்துரைப்பதற்கும், வ.சுப.மாணிக்கனாரும் நெடுஞ் செழியனாரும் தந்திர உத்திப் பயன்பாடுகள் வாயிலாக மலைவு தீர்க்கும் பாங்கிற்கும் இடையே பாரிய வேறுபாடுகள் காணக் கிடக்கின்றன.

இவ்வாறு திருக்குறளை அறியவும் அடையாளம் காணவும் உள்ள திறவுகோல்களில் இதுவும் ஒன்றென ‘அவ்விய நெஞ்சத்தான்’என வரும் குறளை ‘மறுதலைச் சிதைத்துத் தன் துணி புரைத்தல்’என்னும் தொல்காப்பிய உத்தி வாயிலாக அமைந்தியன்றது எனவும் எடுத்துக் காட்டுகின்றார்.

“அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப்படும்”

“கோட்டத்தினைப் பொருந்திய மனத்தை உடையவனது ஆக்கமும்; ஏனைச் செம்மை யுடையவனது கேடும் உளவாயின், அவை ஆராயப்படும்”

“ஆக்கக் கேடுகள் கோட்டமுஞ் செம்மையும் ஏதுவாக வருதல் கூடாமையின், அறிவுடை யோரால் இதற்கேதுவாகிய பழவினை யாதென்று ஆராயப்படுதலின் நினைக்கப் படுமென்றார்: ‘இம்மைச் செய்தன யானறி நல்வினை உம்மைப் பயன்கொல் ஒருதனி உழந்து இத்திருத்தகு மாமணிக் கொழுந் துடன் போந்தது’ (சிலப்- அடைக்கலக் காதை, 91-93) என நினைக்கப்பட்ட வாறறிக”- பரிமேலழகர்.

பாவாணரும் இக்குறளுக்குப் பரிமேலழகரின் மதத்தையே தழுவியும் மாடல மறையோன் கூற்றையே தாமும் எடுத்துக்காட்டுவதுடன் மேலதிக எடுத்துக்காட்டாக்கிவிடுகின்றார்.

“பொறாமை மனத்தானது செல்வமும்; பொறாமை கொள்ளாத செவ்விய மனத் தானது வறுமை அல்லது துன்பமும்; எக் கரணியம் பற்றி நேர்ந்தனவென்று ஆராயப் படும் இரு நிலைமையும் இயற்கைக்கும் அறநூற் கொள்கைக்கும் மாறாயிருப்பதால், அவற்றிற்குக் கரணியம் பழவினையே என்பது ஆராய்ச்சியால் அறியப்படும்”

“என்செய லாவதி யாதொன்று மில்லை யினித்

தெய்வமே

உன்செயலேயென்றுணரப் பெற்றேனிந்த

வூனெடுத்த

பின்செய்த தீவினை யாதொன்று மில்லைப்

பிறப்பதற்கு

முன் செய்த தீவினை யோவிங்ங னேவந்து

மூண்டதுவே”

என்னும் பட்டினந்தார் பாடலும் இவ்வகை ஆராய்ச்சியைக் குறிக்கும்” - ஞா. தேவநேயப் பாவாணர்49

இக்குறளுக்கு மேற்கண்ட இருவரையோடு அடுத்து வரும் குறளையும் இருவர் உரைகளையும் ஒப்பிட்டுக் காண்போம். இக்குறளுக்கும் இவ்வுரைவழி நோக் கையில் முரண்பாடு காணக்கிடக்கின்றது.

“அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதிலார்

பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல்”

“அழுக்காற்றைச் செய்து பெரியர் ஆயினாரும் இல்லை அச்செயயலில்லாதார் பெருக்கத்தின் நீங்கினாரும் இல்லை... இவை இரண்டு பாட்டானும் கேடும் ஆக்கமும் வருவதற்கு ஏதுஒருங்கு கூறப்பட்டது” - பரிமேலழகர்50

“பொறாமைப்பட்டுப் பெரியவராயினாரு மில்லை; அக்குணமில்லாதவர் பேராக்கத் தினின்று நீங்கினாருமில்லை. இது பழ வினையான் தாக்குண்ணாத பிறப்பின் நிலைமையைக் கூறுவது”- பாவாணர்51

இக்குறளையும் மனங்கொண்டே பரிமேலழகர் இங்கு ‘இல்’என வருதலோடு முரண்படாதிருக்க முந்தைய குறளுரையில் ‘உளவாயின்’என வருவித்துரைத்தார். பாவாணரோ முன்பு பரிமேலழகர் ‘கற்றனைத்தூறும் அறிவு’என்பதை ஊழ்மாறு கொள்ளை வழியாகலின்’என்றாங்கே இங்கு பழவினையான் தாக்குண்ணாத பிறப்பின் நிலையைக் கூறுவதென பரிமேலழகர் கூறமறந்ததை தாமே நிறைவுசெய்து வினைப் பயனுக்கு மதிப்புக் கூட்டினார். (இக்குறளுக்கு உரைக்கொத்தில் மணக்குடவர் காளிங்கர் உரை கிடைத்திலது. சாரதாப் பதிப்பக மணக்குடவர் உரையில் பரிமேலழகர் உரையே மணக்குடவர் உரையாக இடம்பெற்றுள்ளது).

நெடுஞ்செழியனாரால் இங்கே எடுத்துக்காட்டப் படும் சிலப்பதிகாரக்கூற்றும் வைதிக மாடல மறையோன் கூற்றென்பதும் வைதிகக் கருமக் கோட்பாடும், ஆசீவக ஊழ்க்கோட்பாடும் வெவ் வேறு மட்டுமல்லாமல் ஒன்றை ஒன்று மறுப்பன என்பதும் நினைவிற் கொள்ள வேண்டும் என்பார்.

பரிதியாரும், காளிங்கரும் நினைக்கப்படும் என் பதற்கு ‘நிலையானவை அல்ல’எனுமாறு பொருள் விளக்குவதையும் மணக்குடவர் மட்டும் விசாரிக்கப் படும் எனப் பொருளுரைப்பதையும் சுட்டிக் காட்டித் தாமும் மணக்குடவரைத் தழுவியே பொருள் விரிக்கின்றார்.

“மெய்யியலில் விசாரணை என்பதற்கு ஆராய்தல் என்பதே பொருளாகும் நினைக்கப் படும் என்பதற்கும் அதுவே பொருள்... ‘அவ் விய நெஞ்சத்தானது ஆக்கமும் செவ்வியான் கேடும்’ஆராயத்தக்கது எனும் பொருளி லேயே வள்ளுவர் அக்குறளை அமைக் கின்றார் என்பது தெளிவாகின்றது.52

‘வினைவேறுபடா’என வரும் தொல்காப்பிய நூற்பாவிற்கு (சொல் கிளவியாக்கம்- 55) ‘நினைதல் என்பது ஆராய்தல்’என இளம்பூரணர் உரை விளக்கத்தை எடுத்துரைத்துத் தொடர்கின்றார். பரிமேலழகரும் பாவாணரும் பழவினையாதென ஆராயப்படும் என்பதனின்றும் மணக்குடவரும் நெடுஞ்செழியனாரும் ஆராயப்படும் என்பது ‘வினையின் நீங்கிய’ஆராய்வையே குறித்தது நோக்கத்தக்கது. இங்கே இக்குறள் அமைந்தியலும் மறுதலைச் சிதைத்துத் தன் துணிபுரைத்தல்’என்பதற்கேற்ப முதலில் மறுதலையைச் சிதைத்து பின் தன் துணிபுரைக்கும் நெடுஞ்செழியனார் ஆய்வைக்காண்போம்.

“எதிராளியின் கோட்பாடுகளை முறியடித்த ஒருவாதி தன் கொள்கையினை நிலை நாட்டுதல்”

“பரிமேலழகர் கூறுவது போலத் தீயவர் களின்- பொறாமையாளர்களின் ஆக்கம்- நல்வினையால் வருவது என வள்ளுவர் கருதியிருப்பாரேயானால் ‘தீவினை அச்சம்’எனும் ஓர் அதிகாரத்தை அமைத்திருக்கத் தேவையில்லை”

“தீயவர்களின் ஆக்கத்திற்கும்- நல்லவர்களின் கேட்டிற்கும் ஆகிய காரணம் ஆராயப்படக் கூடிய ஒன்றெனக்கூறும் வள்ளுவர், தாம் எழுப்பிய புதிருக்குத்தாமே விடை கூறுவார் போல. ‘அருள்கருதி அன்புடையாராய்தல், பொருள் கருதிப் பொச்சாப்புப் பார்ப்பார் கண் இல்’எனும் குறளை அமைக்கின்றார். இக்குறள், அவ்விய நெஞ்சத்தானின் ஆக்கத் திற்கான காரணங்களைத் தெளிவுபடுத்தும் மிகச்சிறந்த சான்றாக அமைகிறது.”

“அவ்விய நெஞ்சத்தான் அருளும், அன்பும் இல்லாமல் பிறன் பொருளை வஞ்சித்துக் கவரமுயலும் வஞ்ச மனத்தான் என்பது தெளிவு. செவ்வியாரோ, அருள்கருதிப் பிறர் மாட்டு அன்புடையார். ஆதலால் இவர் களால் முறையற்ற வழியில் பொருளீட்ட முடியாது என்பது கருத்தாகும்”53

வள்ளுவர் எதிராளியின் கோட்பாட்டை முறி யடித்து தன் கொள்கையை நிலைநாட்டுவதைக் கூறப் புகுந்த நெடுஞ்செழியனார் இங்கு பரிமேலழ கரின் கோட்பாட்டை ‘அருள் கருதி’என வரும் பரிமேலழகர் உரையைப் பயன்படுத்தியே மறுத் துரைக்கும் பாங்கு மனங்கொள்ளத்தக்கதாகும். தொடர்ந்தவர் தம் கோள் நிறுவுதலைக் காண் போம்.

“காட்சி அளவையில் தோன்றும் அய்யம் என்பது வேறு; மெய்யியலில் தோன்றும் அய்யம் என்பது வேறு”

“மெய்ப்பொருளில் தோன்றும் அய்யங்கள் களையப்பட வேண்டியவை. அப்படிக் களைய முடியாதபோது, உண்மை காண முடியாது. அதனால்தான் வள்ளுவரும் - ‘அய்யத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு’என அய்யம் தெளிதலால் வரும் சிறப்பினைச் சுட்டுகிறார்.”

மெய்யியலில் அய்யங்களைப்படவேண்டியது இன்றி யமையா ஒன்றேனும் அப்படிக் களைய முடியாச் சூழலில் என்ன செய்வது எனும் கேள்வியையும் எழுப்பி அதற்குச் சாரக சம்கிதையின் விடை காண்கின்றார். உறுதி செய்யமுடியாத உண்மை களைப் பற்றி எந்த ஒரு முடிவுக்கும் வரக்கூடா தென்பது அதன் கருத்தாகும். இதன் அடிப் படையில் அமைந்தவைதாம். அவ்வியநெஞ்சான் ஆக்கமும் செவ்வியான் கேடுமாகும்.

“இவ்விரண்டிற்குமான காரணங்களை அறிய முடியாது. ஆகையால் அவை உறுதி செய்ய முடியாதவைகளாகின்றன. அதனால் இத்தகு நிகழ்வுகளுக்கு இவைதாம் காரணம் எனப் பொருள் கற்பிக்கக்கூடாது. அதனால் தான் வள்ளுவரும், காரணத்தைக் கற்பியாமல் நினைக்கப்படும் அதாவது ஆராயப்படும் எனக் கூறுகிறார். இத்தகைய அய்யம் அஃதாவது உறுதி செய்யப்பட முடியாத உண்மைகளைப் பற்றி எந்த ஒரு முடிவுக்கும் வரக்கூடாது எனும் கருத்து அல்லது தீர்ப்பு வைதிகர்களின் கருமக்கோட்பாட்டிற்கு மாறானது, அத்துடன் அய்ந்திரமரபிற்கு உரியது என்பதும் எண்ணத்தகும். - க. நெடுஞ்செழியன்.54

‘அறத்தாறு இது என வேண்டா’எனவரும் குறளுக்கும் ‘அவ்விய நெஞ்சத்தான்’எனவரும் குறளுக்கும் கருமவினைப் பயனைக் காரணமாக்கித் தீர்ப்புரைக்க முயலும் பரிமேலழகரின் வைதிகக் கோட்பாட்டைத் தகர்ப்பதற்கும் மற்றொரு ஆதாரமான குறளே பெருமைக்கும் எனவரும் குறளாகும். அதற்கும் பரிமேலகியார் தம் வைதிகத் தீர்ப்பை வழங்கி நிற்பார்.

“பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்

கருமமே கட்டளைக் கல்”

“பிறப்புக்குணம் அறிவென்பனவற்றான் மக்களெய்தும் பெருமைக்கும் மற்றைச் சிறுமைக்கும் உரைகல்லாவது; தாம்தாம் செய்யும் கருமமே, பிறிதில்லை.”

“மக்களது பெருமையுஞ் சிறுமையுந் தப்பா மறியல் உறுவார்க்குப் பிறகருவிகளும் உளவாயினும் முடிந்த கருவி செயலென்பது தேற்றேகாரத்தாற் பெற்றாம்” - பரிமேலழகர்55

அவரவர் வினைபடு பாலாற் கொளல் என வள்ளுவன் உரைப்பாராக அவரவர் வினைப்பயன் வழியாகவே அளக்க முற்படுவார் பரிமேலழகர். வள்ளுவர்க்கு ‘கருமமே கட்டளைக்கல்’பரிமேலழ கர்க்கோ ‘கர்மவினையே கட்டளைக்கல்’வள்ளு வர்க்கு ‘பிறப்பொக்கும் எல்லாஉயிர்க்கும்’என்னும் ஒப்புரவறிதேல உயிர்நாடி. பரிமேலழகர்க்கோ வர்ணதர்மமே ஜீவநாடி. இங்கும் பெருமைக்கும் சிறுமைக்கும் பிறப்பிலிருந்தே தொடங்குவாரவர்.

“கையூட்டினாலும் இனஉணர்ச்சியினாலும் கண்ணோட்டத்தாலும் கவர்வினாலும் சிலர் மேன்மையடையினும், உன்மையான உயர் விற்கு ஏதுவாயிருப்பது வினைமுயற்சியே என்பது ஆசிரியர் கருத்து”

‘பெருமையுஞ் சிறுமையுந் தான்தர வருமே’என்னும் அதி வீரராமபாண்டியன் கூற்று இக்குறட்பாச் சுருக்கமாகும்.

“ஒருவனுக்கு அறிவாற்றல் மிக்கிருப்பினும் அவற்றைப் பயன்படுத்தும் வினைத் திற மின்றேல் அவற்றாற் பயனில்லை யென்ப தாம். பரிமேலழகர் பெருமை சிறுமைக்குக் காரணியமாகப் பிறப்பையுங் குறித்துள்ளார்” - ஞா. தேவவேநயப் பாவாணர்56

இவற்றுடன் ஒருசேர ‘நினைக்கப்பட’வேண்டியன வாக இன்னுஞ் சிலவற்றை இத்துடன் காண்போம்.

“தீதும் நன்றும் பிறர்தரவாரா என்பதற்கு உரையாசிரியர் தாமேவரினல்லது பிறர்தர வாரா என்று உரை கூறுவார். கேடு இழப் பையும் ஆக்கம் ஊழியத்தையும் உணர்த்துவன. இதே பொருளில் வள்ளுவர் ‘அவ்விய நெஞ்சத் தான் ஆக்கமும் செவ்வியான்/ கேடும் நினைக்கப்படும்’என்று விளக்குவார்” - க. நெடுஞ்செழியன்.’57

ஆகுவது ஆக்கம் - ஆகுதல் மேன்மேலுயர்தல் எனப் பாவாணர் ‘சிறப்பீனும்’எனவரும் குறளுரைக்கு உரைகாண்கையில் எடுத்துரைப்பார் (ப. 73) ‘ஆக்கமும் கேடும்’எனவரும் குறளுக்குரை கூறுகையில் ‘ஆக்கத்திற்கு ஏதுவாகிய நற்சொல் லையும், கேட்டிற்கேதுவாகிய தீச்சொல்லையும்”எனவும்; ‘ஓதங்கொண்டு ஊதியம் போகவிடல்’என்புழி, கேடென்பதற்கு ‘வறுமை பழிபாவங்கள்’எனவும் ஆக்கம் என்பதற்குச் செல்வம், புகழ் அறங்கள் எனவும் பரிமேலழகர் எடுத்துரைப்பார். இவற்றோடு ‘பெருமைக்கும்’எனவருங்குறட் பாவும், ‘தன்னைத் தலையாகச் செய்வானுந்தான்’என்னும் நாலடியார் வரியும் எண்ணத் தகும். ‘எனைத்தும் உணர்ச்சியில்லோர் உடைமை உள்ளோம்/ நல்லறிவு உடையோர் நல்குரவு/ உள்ளுதும் பெரும் யாம் உவந்து நனி பெரிதே’எனும் மதுரைக்குமரனார் புறப்பாடலும் இங்கே நினைக்கப்படும். இவை மட்டுமா? உண்ணாழி கையில் மூலவராய் வள்ளுவனார் உறைந்திருக்க, உற்சவமூர்த்தியாய் உச்சிமேற் புலவர் கொள் பரிமேலழகர் குறுக்குச் சால் ஓட்டி உலா வரலும்; ஊடறுக்கும் பெருநந்தியாய் ஒருதனியே வசி மறுத்து வீற்றிருப்பதும் இவை எல்லாமும் ஒரு சேரவே ‘நினைக்கப்படும்’.

‘அயோத்திதாசரின் ஆய்வுப்படி திருக்குறள் திரிக்குறளாகும்; பௌத்த திரிபிடகத்தின் சார்பு நூலாகும். பௌத்த தரும சாஸ்திர மாகும். ‘முப்பால்’என்ற இதன் மூலப்பெயர் ‘திரிபிடகம்’என்பதன் தமிழ் ஆக்கமாகும். திருக்குறளை அயோத்திதாசர் பௌத்த தரும நோக்கில் விரிவாகப் பொருள் கண்டிருப்பது அவர் காலத்திய தலித் அரசியல் செயல் பாடாகும்” - ராஜ் கௌதமன்58

இவ்வாறே புலவர் குழந்தை திருக்குறளுக்கு உரை வகுத்ததும், பாரதிதாசன் உரைவகுக்க முற்பட்டதும் அவரவர் காலத்திய திராவிட இயக்க அரசியல் செயல்பாடேயாகும். அவர்கள் உரைவகுத்ததற்கான எதிர்த்தலைக் காரணி என் பதும் பரிமேலழகர் உரையே யாகும்.

பரிமேலழகர் திருக்குறளுக்கு உரைவகுத்ததும் வர்ண தர்மத்தைக் காக்குமுகமான அவர் காலத்திய வைதிக அரசியல் செயல்பாடே. வேறு வார்த் தையில் கூறுவதானால், திருக்குறளின் உள்ளார்ந்த உட்கிடையான மூல அறத்தோடு பரிமேலழகர்க் குள்ள அடிப்படை முரண்பாட்டின் பெறுபேறே அவருடைய உரையெனலாம்.

அடிக்குறிப்புகள்

1.      ‘முப்பால் ஒளி’: கா. அப்பாத்துரையார் - ப. 44

2.      ‘உரையாசிரியர்கள்’ - மு.வை. அரவிந்தன்- ப. 451 - 453

3.      திருக்குறள் மணிவிளக்கஉரை’ - 1967. கா. அப்பாத் துரையார்

4.      ‘உரைக்கொத்து’ - அறத்துப்பால்- காசிமடப்பதிப்பு- ப. 211

5.      ‘ஆய்வுகள் அகழ்வுகள்’ - நா. பாலுசாமி - ப. 72- 73

6.      ‘உரையாசிரியர்கள்’ - மு.வை. அரவிந்தன் - மேற்கோள் - ப. 458

7.      ‘திருக்குறள் தமிழ் மரபுரை’ - ஞா. தேவநேயப் பாவாணர்- ப. 151 - 152

8.      ‘பரிமேலழகர் உரை’ - காசிமடப்பதிப்பு - ப. 378

9.      முற்சுட்டியநூல் - மு.வை. அரவிந்தன் - ப. 461

10.     முற்சுட்டியநூல் - பாவணர் - ப. 476

11.     ‘பரிமேலழகர் உரை’ - ப. 136 - 137

12.     முற்சுட்டியநூல் - மு.வை. அரவிந்தன்- ப. 436

13.     முற்சுட்டியநூல் - மு.வை. அரவிந்தன்- ப. 197- 198

14.     பரிமேலழகர் உரை - ப. 229

15.     முற்சுட்டியநூல் - பாவாணர் - 303 - 304

16.     பரிமேலழகர் உரை - ப. 297

17.     முற்சுட்டியநூல் - மு.வை. அரவிந்தன் - ப. 447

18.     முற்சுட்டியநூல் - மு.வை. அரவிந்தன் - ப. 380 - 381

19.     முற்சுட்டியநூல் - மு.வை. அரவிந்தன் - ப. 380 - 381

20.     பரிமேலழகர் உரை - ப. 301

21.     முற்சுட்டியநூல் - பாவாணர் - ப. 387

22.     பரிமேலழகர் உரை - ப. 416

23.     முற்சுட்டியநூல் - பாவாணர் ப. 562

24.     ‘தமிழினி’ - ஏப். 2009 - அ.கா. பெருமாள்

25.     ‘தமிழினி’ - ஏப். 2009 - அ.கா. பெருமாள்

26.     ‘தமிழினி’ - ஏப். 2009 - அ.கா. பெருமாள்

27.     தொல். சொல். ஆராய்ச்சிக் காண்டிகையுரை முதற்பதிப்பு: 1998 - ச. பாலசுந்தரம் - ப. 159

28.     தொல். சொல். ஆராய்ச்சிக் காண்டிகையுரை முதற்பதிப்பு: 1998 - ச. பாலசுந்தரம் - ப. 159

29.     மேலது - ச. பாலசுந்தரம் - ப. 20-21

30.     முற்சுட்டியநூல் - பாவாணர் - ப. 563

31.     ‘தொல்காப்பியம் - திருக்குறள் காலமும் கருத்தும்’ - 2010 க. நெடுஞ்செழியன் - ப. 123

32.     பரிமேலழகருரை - ப. 19

33.     முற்சுட்டியநூல் - ந. பாலுசாமி - ப. 57

34.     முற்சுட்டியநூல் - பாவாணர் - ப. 563

35.     தொல். திருக்குறள் - க. நெடுஞ்செழியன் - ப. 118 - 119

36.     தொல். திருக்குறள் - க. நெடுஞ்செழியன் - ப. 118 - 119

37.     தொல். திருக்குறள் - க. நெடுஞ்செழியன் - ப. 118 - 119

38.     ‘தமிழ்நேயம்: 30’ - 15. 8. 07. செ. நாராயணசாமி

39.     தொல். திருக்குறள் - க. நெடுஞ்செழியன் - ப. 120 - 121.

40.     ஆசீவகம் என்னும் தமிழர் அணுவியம் - 19. 2. 2002 - க. நெடுஞ்செழியன் 221 - 222.

41.     ‘வள்ளுவத்தில் மெய்ப்பொருட் சுவடுகள்’ - ச. தண்டபாணி தேசிகர் ப. 197- 198

42.     ‘தமிழகத்தில் ஆசீவகர்கள்’ - ர. விஜயலட்சுமி - முன்னுரை

43.     ‘தமிழகத்தில் ஆசீவகர் வெற்றி’ - க.த. திருநாவுக்கரசு

44.     ‘பரிமேலழகர் உரை’ப. 155

45.     ‘ஆசீவகம்’... - க. நெடுஞ்செழியன் - ப. 217 - 219

46.     தொல். திருக்குறள் - க. நெஞ்செழியன் - ப. 125

47.     ‘வடிவிழந்த வள்ளுவம்’ - கு.உ. ஆனந்தன் - ப. 35

48.     ‘பரிமேலழகருரை’ - ப. 68- 69

49.     முற்சுட்டியநூல் - பாவாணர் - ப. 128

50.     பரிமேலழகருரை - ப. 69

51.     முற்சுட்டியநூல் - பாவாணர் - ப. 129

52.     தொல். திருக்குறள்’ - க. நெடுஞ்செழியன் - ப. 128

53.     ‘ஆசீவகம்’.... க. நெடுஞ்செழியன் - ப. 228 - 229

54.     தொல். திருக்குறள்’ - க. நெடுஞ்செழியன் - ப. 132 - 133

55.     பரிமேலழகர் உரை - ப. 213 - 214

56.     முற்சுட்டியநூல் - பாவாணர் - 287- 288

57.     ‘தமிழ் இலக்கியத்தில் உலகாய்தம்’ - ப. 236 - க. நெடுஞ்செழியன்

58.     ‘தமிழினி’ - செப். 2010 - ‘பாட்டும் தொகையிலிருந்து முப்பால் மாறுபடும் இடங்கள்’ - ராஜ் கௌதமன்

Pin It