1925 இல் தொடங்கப்பட்ட இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி தனது நூற்றாண்டைக் கண்டுள்ளது. நாட்டின் விடுதலைக்கும், உழைக்கும் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கும் எண்ணிலடங்கா போராட்டங்களை நடத்தி அளப்பரிய தியாகங்களைச் செய்துள்ளது இடதுசாரி இயக்கம். அதற்கான வர்க்க அமைப்புகளைக் கட்டி வளர்ப்பதிலும் நாட்டின் முன்னோடி இயக்கமாக இருந்துள்ளது. அதுபோல தனது இலட்சியத்தை மக்களிடையே கொண்டு செல்லக் கூடிய கலை இலக்கிய அமைப்புகளையும் உரிய சூழலில் உருவாக்கியது. அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கம், இந்திய மக்கள் நாடக மன்றம் ஆகியவை முறையே 1936, 1943 ஆண்டுகளில் தொடங்கப்பட்டன. அவற்றின் பங்களிப்புகள் தனியே விரிவாகப் பார்க்க வேண்டியவை.

தமிழ்நாட்டின் முற்போக்கு இயக்கத்தின் கலை இலக்கிய அமைப்பு அதன் அரசியல் பயணத்துடன் இணைந்து தொடங்கப்படாமல் 1961 இல் தான் தொடக்கம் பெற்றது. நாட்டு விடுதலைப் போராட்டத்தில் தலைமை வகித்த தேசிய இயக்கங்கள் இதில் கவனம் செலுத்தவில்லை. மகாகவி பாரதியின் பாடல்கள் மக்களின் விடுதலை உணர்ச்சியைத் தூண்டியதும், தமிழுக்குப் புதிதொளி பாய்ச்சியதும் தமிழ்நாட்டின் பெருமை எனலாம். அவரைத் தனது குருவாக வரித்துக் கொண்ட பாவேந்தர் பாரதிதாசன் தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனை, மொழி உணர்வு சார்ந்து வீரியமிக்க கவிதைகளைப் படைத்துத் திராவிட இயக்கத்திற்கு உரம் சேர்த்தார்.

jeeva 408மேலும் நாட்டில் முற்போக்குச் சிந்தனையை அறிமுகப்படுத்தத் தேவர் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர். அந்த இலட்சியத்தைக் கலை இலக்கிய வெளிகளில் மக்களிடையே கொண்டு செல்லும் இயக்கப்பணியை முன்னெடுத்தவர், இலக்கியப் பேராசான் என்று போற்றப்பட்ட தோழர் ப.ஜீவானந்தம் என்பதில் மாற்றுக் கருத்து இருப்பதற்கு இடமில்லை. 1938ஆம் ஆண்டிலேயே பாரதி விழாக்களை தமிழகமெங்கும் நடத்திய ஜீவா வேண்டுகோள் விடுத்தார். தொழிலாளர்களின் வறிய நிலையை உருக்கமாகப் படம் பிடித்த ஜீவாவின்

"காலுக்குச் சேருப்பும் இல்லை கால் வயிற்றுக் கூழும் இல்லை"

என்ற பாடல் மக்களை ஈர்த்தது. பகுத்தறிவுக் கருத்துக்களை உள்ளடக்கிய பாடல்களையும் ஜீவா எழுதினார்.

உழைக்கும் மக்களின் பாடுகளைப் பதிவு செய்யும் இலக்கிய இதழ்களும் தோன்றின. தமிழ்ஒளியின் "முன்னணி", வ.விஜயபாஸ்கரனின் "விடிவெள்ளி", தொ.மு.சி.யின் "சாந்தி", இசமத் பாஷாவின் "சமரன்" ஜீவா தொடங்கிய "தாமரை" ஆகியவை மனிதநேயக் கலை இலக்கிய விழிப்புணர்வைத் தூண்டும் பணியை ஆற்றின.

ஜீவாவைப் போல, ஈரோடு வெ.நா.திருப்பூர்த்தி, மதுரை மணவாளன், எம்.பி.சீனிவாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், பாவலர் வரதராஜன், வில்லிசை வேந்தர் பிச்சைக்குட்டி, எஸ்.எம்.கார்க்கி, தர்மபுரி டேவிட் சையதப்பன், மதுரை குமார், சேலம் சிதம்பரபாரதி போன்ற இசைக் கலைஞர்களும், ஊர்கள் தோறும் இயங்கிய மேடை நாடகக் குழுக்களும் மக்கள் பிரச்சினைகளைக் கலை வடிவங்களில் வெளிப்படுத்துவதில் பங்களிப்பு செய்துள்ளனர்.

1947 இல் கே.பாலதண்டாயுதம், தொ.மு.சி.ரகுநாதன், தி.க.சிவசங்கரன் ஆகியோர் நெல்லையில் கலைஞர் கழகம் என்ற அமைப்பைத் தொடங்கி சில ஆண்டுகள் நடத்தினர். 1948 இல் அ.இ.மு.எ.சங்கத்தின் கிளையொன்று எழுத்தாளர் நாரண துரைக்கண்ணன் தலைமையில் தொடங்கப்பட்டது. 1950 இல் கல்கி கிருஷ்ணமூர்த்தி, வை.கோவிந்தன், பி.கோதண்டராமன், தொ.மு.சி.ரகுநாதன், நடிகர் டி.கே.சண்முகம் ஆகியோர் முயற்சியில் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஒன்று சென்னையில் தொடங்கப்பட்டது. அதே காலகட்டத்தில் தமிழ்நாட்டின் பல மாவட்ட மையங்களில் தமிழ்ச் சங்கங்கள் தொடங்கப்பட்டன.

1949 நவம்பரில் அ.இ.மு.எ. சங்கத்தின் தமிழ்நாடு கிளை மீண்டும் புதுப்பிக்கப்பட்டு, அதன் செயலாளராகக் கவிஞர் தமிழ்ஒளி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1952 இல், தொ.மு.சி., தி.க.சி., சிந்துபூந்துறை சண்முகம், நா.வானமாமலை ஆகியோரின் முயற்சியால் நெல்லையில் முற்போக்கு எழுத்தாளர் சங்கக் கிளை தொடங்கப்பட்டது. 1954 காரைக்குடி கம்பன் விழாவில் ஜீவா, எஸ்.ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு கம்பராமாயணத்தைப் புதிய கோணத்தில் விளக்கிப் பேசினர்.

அமைப்பு ரீதியான இத்தகைய கலை இலக்கியப் பின்புலத்தில் கம்யூனிஸ்டுக் கட்சியின் மாநிலத் தலைமையுடன் கலை இலக்கியத்திற்கென தனியானதொரு அமைப்பு உருவாக்கப்பட வேண்டிய கருத்தை ஜீவா தொடர்ந்து வலியுறுத்திப் போராடி வந்தார். 1958 இல் புதுக்கோட்டையில் நடைபெற்ற பாரதி விழாத் தருணத்தில் பெருமன்ற அமைப்பை உருவாக்கும் கருதுகோள் உருப்பெற்றது. 1958 ஆகஸ்டில் கட்சியின் மாநிலத் தலைமை கலை இலக்கியத்திற்காக ஒரு துணைக்குழுவை அமைக்க முடிவு செய்தது.

ஜீவாவின் தலைமையில், முகவை ராஜமாணிக்கம், ஆர்.கே.கண்ணன், எம்.பி.சீனிவாசன், புதுவை டாக்டர் ரங்கநாதன், கே.முத்தையா, விராதாகிருஷ்ணன், மாயாண்டி பாரதி, கே.ராமநாதன், மாஜினி உள்ளிட்ட 23 பேரடங்கிய துணைக்குழு அமைக்கப்பட்டது.

மாநில மாநாட்டை நடத்துவதற்கான திட்டமிடல் கூட்டம் 1959 ஜூன் 1 இல் காரைக்குடி அசோக் லாட்ஜில் நடந்தது. புதுக்கோட்டை சேதுராமன் கூட்ட ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டார். விவாதங்களின் இறுதியில் மாநில மாநாட்டை நடத்த கோவைதான் பொருத்தமான இடம் என்ற ஜீவாவின் கருத்து ஏற்கப்பட்டு 1961 மே மாத கைசியில் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.

கோவையில் இலக்கியவாதிகள் கூடுவது புதியதல்ல. கொங்கு வட்டார மக்களின் வாழ்வியலை அழகாகத் தனது நாவல்களில் பதிவு செய்த எழுத்தாளர் ஆர்.சண்முகசுந்தரம் போன்றோரின் முயற்சியால் 1944இலேயே கோவையில் ஒரு தமிழ் எழுத்தாளர் மாநாடு நடந்துள்ளது. 1959 ஆகஸ்டில், இடதுசாரி சார்பு கொண்ட திரைக்கலைஞர்களான டி.கே.பாலச்சந்திரன், எம்.என்.கண்ணப்பா இருவருக்கும் கோவையில் ஒரு பாராட்டு விழா நடத்தப்பட்டது. விழாவில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கலந்து கொண்டார். கவிஞர் கே.சி.எல். அருணாசலம், எம்.பூபதி, காஞ்சி நடராஜன், ஆர்.கே.பாண்டுரங்கன் ஆகியோர் முன்னின்று நடத்தினர்.

"ஜனசக்தி" இதழில் மாநாட்டிற்கான அறிவிப்பை வெளியிட்டு விட்டு, ஆர்.கே.கண்ணனும் ஜீவாவும் முன்னதாகவே கோவைக்கு வந்து மாநாட்டு நிதி வசூல் மற்றும் இதர வேலைகளைத் தொடங்கி விட்டார். பல்வர் த.வே.வீராசாமி, கே.பழனியப்பன், வழக்கறிஞர் இராசியண்ணன் (ஆதி) ஆர்.கே.பாண்டுரங்கன், தொழிற்சங்கத் தலைவர் பி.கே.ராமசாமி, செந்தமிழ் மாரியப்பன், சூ.ர.தங்கவேல், சூ.மீ.காளிமுத்து, க.பழனிசாமி, சினி ஆர்ட்ஸ் வேலாயுதம், அம்பி எஸ்.ரங்கசாமி, ஒவியர் மீனன் போன்றோரின் ஆதரவுடன் மாநாட்டு வேலைகளை நிறைவேற்றினார், ஜீவா.

தொ.மு.சி., ஆர்.கே.கண்ணன், நா.வானமாமலை ஆகியோரின் கருத்துக்களை உள்வாங்கிப் பேராசான் ஜீவா மனிதநேயம், தமிழ்ச் சமூகப் பின்புலம் ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்ட சுயமான கொள்கை அறிக்கையை உருவாக்கியிருந்தார். எதிர்காலச் செயல்பாடுகளுக்கு மாநாடு பல குழுக்களை உருவாக்கியது. இலக்கியம், நாடகம், இசை, ஒவியம், நாட்டுப்புற இலக்கியம் எனத் தனித் தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டன.

மார்க்சியப் பார்வையுடன் நாட்டுப்புற இலக்கியத்தை முன்னெடுத்த பேரா.நா.வானமாமலை, படைப்பு மற்றும் விமர்சனக்கலையில் கோலோச்சிய தொ.மு.சி., சிறுகதை, நாவல்கள் என தமிழ் இலக்கிய உலகில் புகழடைந்த ஜெயகாந்தன், சேர்ந்திசையைப் பயன்படுத்தி பன்முகப் பண்பாட்டைப் பரப்பிய இசைமேதை எம்.பி.சீனிவாசன், இன்னும் ஆற்றல் மிக்க எழுத்தாளர்களும், கலைஞர்களும் பங்கெடுத்த அற்புதத்தைக் கோவை மாநாடு சாதித்தது. கம்யூனிஸ்டுகளுக்கும் கலை இலக்கியத்திற்கும் சம்பந்தமில்லை என்ற கிண்டல் பேச்சுகளுக்குக் கோவை நிறுவன மாநாடு முற்றுப்புள்ளி வைத்தது. ஜீவாவைத் தலைவராகவும் தா.பாண்டியனைச் செயலாளராகவும் தேர்ந்தெடுத்த மாநாடு பெருமன்றத்தின் சாதனைப் பயணத்தைத் தொடங்கியது.

தமிழகமெங்கும் மாவட்ட, தாலுகா அளவில் கிளைகள் உருவாகின. பாரதி விழாக்கள், குன்றக்குடி அடிகளார் தலைமையில் பட்டிமன்றங்கள் எனச் செயல்பாடுகள் உற்சாகமாகத் தொடர்ந்தன. பேராசிரியர் நா.வானமாமலை வாய்மொழி இலக்கியமான நாட்டுப் பாடல்களைத் திரட்டி நூலாக்கினார். அவரது முயற்சியால் உருவான நெல்லை ஆய்வுக்குழு தமிழியல் ஆய்வில் ஒரு புதிய தடத்தைப் பதித்தது. மார்க்சியக் கோட்பாட்டின் அடிப்படையில் தமிழ்நாட்டின் வரலாற்றையும் தமிழ் இலக்கியங்களையும் ஆய்வு செய்யும் முறையியலுக்கு வழிகாட்டினார் பேரா.நா.வா. அவரால் நடத்தப்பட்ட "ஆராய்ச்சி" இதழ்களில் வெளிவந்த ஆய்வுக்கட்டுரைகள் கல்விப்புலத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. பல்கலைக்கழகங்களில் நாட்டார் வழக்காற்றியல் துறை என்ற பிரிவு தொடங்கப்படுவதற்கு நா.வா.வின் உழைப்பு முதற்காரணமாக இருந்தது என்றால் மிகையல்ல. அவருடைய வழித்தோன்றல்களான, பேரா.தோதாத்ரி, பேரா.ஆ.சிவசுப்ரமணியன், முனைவர் மே.து.ராகுமார், பேரா. நா.ராமச்சந்திரன், முனைவர் ந.முத்துமோகன் ஆகியோர் தமிழ்நாடு அறிந்த அறிஞர் பெருமக்களாவர்.

பெருமன்றம் தனது பயணத்தை நம்பிக்கையுடன் தொடங்கிய கூழலில், அதன் ஒளி விளக்காகத் திகழ்ந்த பேராசான் ஜீவா 1963 ஜனவரி 18 இல் காலமானது பெரும் இழப்பாகத் தாக்கியது.

1962 இல் பத்தாண்டுகள் சிறைவாசம் முடித்து வெளிவந்த தியாகச் செயல் மாளிகை பாலதண்டாயுதம் அன்றைய சூழலில் பெருமன்றத்தைக் கட்டியமைப்பதன் அவசியத்தை உணர்ந்தவராகக் களமிறங்கியது பெருமன்றத்திற்குப் புத்துணர்ச்சி ஊட்டியது. தொ.மு.சி. ஜீவா தொடங்கிய "தாமரை" இதழ், படைப்பிலக்கிய வளர்ச்சிக்குக் கணிசமாகத் துணை புரிந்தது. குறிப்பாக, திறனாய்வாளர் தி.க.சி. பொறுப்பேற்று நடத்திய பத்தாண்டுக் காலத்தில் இளம் படைப்பாளிகளின் படைப்புகள் வெளியாகி அவர்களை ஊக்குவிப்பதாக அமைந்தது. பேரா.நா.வா. வின் "ஆராய்ச்சி" இதழ்கள் மானுடவியல், அடித்தள மக்கள் ஆய்வு, நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகளை முன்னெடுத்தது. தொ.மு.சி. பின் "இளங்கோவடிகள் யார்" ஆய்வு நூல் தமிழ்ச் சமூக வரலாற்றுத் தளத்தை விரிவாக்கியது. சிறுகதை, கவிதை, நாவல் நூல்கள், ஆய்வு நூல்கள், ஈழத்தமிழ் ஆளுமைகள் கைலாசபதி, சிவத்தம்பி எழுத்துக்கள் ஆகியவற்றைப் பதிப்பித்து வெளியிட்டு என்.சி.பி.எச். நிறுவனம் முற்போக்கு இலக்கியப் பரப்பிற்கு உரமளித்தது.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு சேலம் பெத்தநாய்க்கன்பாளையத்தில் கூடிய மத்தியக்குழு தொ.மு.சி.ரகுநாதனைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தது. அடுத்த மாநாட்டை 1963 மே 31, ஜூன் 1,2 தேதிகளில் மதுரையில் நடத்தவும் முடிவெடுத்தது. பெருமன்றத்தின் சின்னம் அங்கு வடிவமைக்கப்பட்டது.

மதுரை மாநாடு மகாகவி பாரதி பணியாற்றிய சேதுபதி உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. மாநாட்டில் சிலம்புச் செல்வர் மா.பொ.சி., இலக்கியச் செல்வர் எஸ்.ராமகிருஷ்ணன், ஈ.வெ.கி.சம்பத், அவ்வை டி.கே. சண்முகம், நடிகர் டி.கே. பாலச்சந்திரன், எழுத்தாளர் கி.ராஜநாராயணன், பாவலர் வரதராஜன், எழுத்தாளர் கு.சின்னப்ப பாரதி, சிவகிரி எஸ்.எம். கார்க்கி, கே.சி.எஸ்.அருணாசலம் எனப் பல்துறை ஆளுமைகள் கலந்து கொண்டனர். பாவலர் வரதராஜனின் "ஒரு ஜீவ ஒவியம்" நிகழ்ச்சி பெரும் வரவேற்பைப் பெற்றது. தொ.மு.சி., தா.பாண்டியன் ஆற்றிய பேருரைகள் மக்களைக் கவர்ந்தது. இருவரும் தலைவர், செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பெருமன்றத்தின் இரண்டாவது மாநாடு, 1966 பிப்ரவரி 17-20 தேதிகளில் பொள்ளாச்சியில், அந்த மண்ணின் மைந்தர்களான கே.பாலதண்டாயுதம், கே.சி.எஸ்.அருணாசலம், பி.கே.ராமசாமி, சிற்பி பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அயராத உழைப்பால் வீச்சுடன் நடந்தேறியது. மாநாட்டில், இப்டா இயக்கத்தின் முன்னோடியும் புகழ்பெற்ற இந்தித் திரைப்பட நடிகருமான பால்ராஜ் சஹானி, மலையாள இலக்கிய ஜாம்பவான் தகழி சிவசங்கரன் பிள்ளை, கேரள மாநிலக் கல்வியமைச்சர் ஜோசப் முண்டசேரி, உருதுக் கவிஞர் அலி ஜூஃப்ரி அஹமது, தமிழறிஞர் சாலை இளந்திரையன் போன்ற சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர். சோசலிச எதார்த்தவாத இலக்கியக் கோட்பாட்டிற்கு அழுத்தம் கொடுத்த தொ.மு.சி.யின் கொள்கை அறிக்கை மாநாட்டில் ஏற்கப்படவில்லை. தொ.மு.சி., தா.பாண்டியன் இருவரும் மீண்டும் பொறுப்பாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மூன்றாவது மாநாடு திருச்சி நகரில் 1968 மே 30,31 ஜூன் 1,2 தேதிகளில் நடைபெற்றது. பேரா.எம்.எஸ்.நாடார், கே.பாலதண்டாயுதம், கே.பி.எஸ்.கோன் வரவேற்புக்குழுவாகச் செயலாற்றினர். தோழர் எம்.கல்யாணசுந்தரம், தோழர் கே.டி.ராஜு துணைபுரிய பிஷப் ஹீபர் பள்ளித்திடலில், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அரங்கில் மாநாடு நடைபெற்றது. அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தேசியச் செயலாளர் சஜ்ஜாத் ஜாகீர், கேரள மாநில மார்க்சிய அறிஞர் கே.தாமோதரன், எழுத்தாளர் பொன்குன்னம் வர்க்கி, மும்பை இந்தித் திரைப்பட இயக்குனர், எழுத்தாளர் கே.ஏ.அப்பாஸ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்றனர். கருத்தரங்க அமர்வுகள், கவியரங்கம், "முஷையரா" என்ற உருது மொழிக் கவிமேடை, பகத்திங் நாடகம், அறந்தை நாராயணன் நடித்த பஞ்சம் பசியும் நாடகம் "பாதை தெரியுது பார்" திரைப்படக் கலைஞர்களுக்குப் பாராட்டு விழா எனப் பல்கியுடன் மாநாடு சிறப்பாக நடந்தது. பேரா.நா.வானமாமலை தலைவராகவும், தா.பாண்டியன் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

1971இல் கோவை நாடாளுமன்றத் தேர்தலில் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த நிலையில் தோழர் பாலனுக்குப் பெருமன்றத்தை வழிநடத்தும் பொறுப்பும் தரப்பட்டது. எனவே பெருமன்றத்தின் அடுத்த மாநாட்டை கோவையில் நடத்த அவர் ஏற்பாடுகளைத் தொடங்கியிருந்த நேரத்தில்தான் அந்தப் பெரும் திர்ச்சி தந்த செய்தி வந்தது. 1973 மே 31 இல் டெல்லியருகே நடந்த விமான விபத்தில் பாலன் மரணமடைந்த செய்தி கட்சி மற்றும் பெருமன்றத் தோழர்களைத் துயரத்தில் ஆழ்த்தியது.

கம்யூனிஸ்டு இயக்கத்தில் ஏற்பட்ட அரசியல் பிளவு கலை இலக்கியத் துறையிலும் தொடர்ந்து 1975 இல் தமுசை துவக்கப்பட்டது.

ஆக, ஐந்தாண்டு இடைவெளிக்குப் பின்பு 1978 ஆகஸ்ட் 12, 13 தேதிகளில் திருப்பூரில் நான்காவது மாநாடு நடைபெற்றது. தோழர்கள் பி.கே.ராமசாமி, கே.சுப்பராயன், கவிஞர் புவியரசு, கவிஞர் சிற்பி, செந்தமிழ் மீ.மாரியப்பன், பி.என்.ராமலிங்கம், பி.கே.ராஜகோபால் மற்றும் திருப்பூர் தோழர்கள் ஆதரவுடன் மாநாடு சிறப்பாக நடைபெற்றது. இலங்கை எழுத்தாளர் அந்தோணி ஜீவா, மலையாள எழுத்தாளர் உண்கிக்கிருஷ்ணன், கன்னடக் கவிஞர் கே.வி.ராஜகோபால், நாடகப் பேராசிரியர் ராமாணாஜம் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டனர். பேரா. நா.வா. சமர்ப்பித்த கொள்கை அறிக்கை திருப்பூர் மாநாட்டின் சிறப்பு அம்சமாக வரவேற்பைப் பெற்றது. புவியரசு, ஜெயந்தனின் நாடகங்கள், புதுக்கவிதை, சிறுகதை அரங்குகள் பார்வையாளர்கள் ரசிக்கும்படியாக அமைந்தன. நா.வா. தலைவராகவும், கே.சி.எஸ். செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பெருமன்றத்தின் ஐந்தாவது மாநாடு 1988 ஏப்ரல் 2,3 தேதிகளில் புதுச்சேரியில் நடைபெற்றது. முன்னதாக, பொன்னீலனும் கே.சி.எஸ். இருவரும் மாநிலத்தை தெற்கு வடக்காகப் பிரித்துக் கொண்டு சுற்றுப் பயணம் செய்து மாவட்ட அமைப்புகளைப் புதுப்பித்தனர். புதுவைக் கவிஞர் வெ.நா.ரா., எம்.கே.ராமன், எம்.எஸ்.ராதாகிருஷ்ணன், அ.மு.சலீம் ஆகியோர் மாநாட்டு ஏற்பாடுகளைக் கவனித்தனர். அப்போது அமரரான இசைமேதை எம்.பி. சீனிவாசன் பெயரில் மாநாட்டு அரங்கம் அமைக்கப்பட்டது. இலங்கை நாட்டியக் கலைஞர் கார்த்திகா கணேசர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இதர தீர்மானங்களுடன் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த நூற்றாண்டு விழாவினைத் தமிழகமெங்கும் கொண்டாடிட மாநாடு தீர்மானம் நிறைவேற்றியது. பொன்னீலன் சமர்ப்பித்த கொள்கை அறிக்கை மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. 1988 செப்டம்பரில் எட்டையபுரத்தில் கூடிய மாநிலக்குழு ஆண்டுதோறும் சிறந்த படைப்பாளிகளுக்குப் பரிசு வழங்கும் திட்டத்தை அறிவித்தது. அதற்கான பரிசுத்தொகையை என்.சி.பி.எச். நிர்வாக இயக்குனர் ஆர்.ராதாகிருஷ்ணமூர்த்தி மகிழ்வுடன் ஏற்றார். அவ்வாறு தொடங்கப்பட்ட இலக்கிய விருது வழங்கும் திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட்டு படைப்பாளர்களுக்கு ஊக்கமளித்து வருவதை அறிவோம்.

அடுத்து, "மண்ணின் பாடல்கள்" என்ற பெயரில் கவிஞர்கள் தணிகைச்செல்வன், பரிணாமன், பச்சை நிலா மற்றும் பெயர் தெரியா நாட்டுப்புறக் கவிஞர்களின் பாடல்களுக்கு டாக்டர் கே.ஏ.குணசேகரன் இசையமைத்து கிராமிய மணத்துடன் ஒலிப்பேழை வெளியிடப்பட்டது.

படைப்பாளிகளைப் பயிற்றுவிக்கும் முகாம்களை நடத்துவதைப் பெருமன்றம் செயல்படுத்தியது. 1989 டிசம்பர் 29-31 தேதிகளில் திருவரங்கம் அமலா ஆசிரமத்தில் நடைபெற்ற மாநில அளவிலான முகாமில் இளம் தோழர்களுக்குச் சிந்தாந்தத் தெளிவை ஏற்படுத்தவும், அமைப்பை விரிவுபடுத்தும் நோக்கத்திலும் வகுப்புகள் நடத்தப்பட்டன.

பேரா.நா.வா.வின் முயற்சியால் 1975 இல் குமரி மாவட்டம் கீரிப்பாறையில் தொடங்கப்பட்ட தத்துவார்த்தப் பயிற்சி முகாம், 1980 இல் அவர் காலமான பிறகு பேரா.நா.வா. நினைவு முகாம் என்கிற பெயரில் ஆண்டுதோறும் மே மாதத்தில் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. கடந்த மே 24, 25 தேதிகளில் கன்னியாகுமரியில் 45-வது கலை இலக்கியப் பண்பாட்டு முகாம் நடந்தேறியுள்ளது. குமரி மாவட்டப் பெருமன்றத்தின் ஒரு வரலாற்றுச் சாதனையாக இது திகழ்கிறது.

ஒன்றுபட்ட கோவை மாவட்டத்தில் திருப்பூரில் ஆறு முகாம்களும், கோவையில் இரண்டு முகாம்களும் சிறப்பாக நடத்தப்பட்டன. முனைவர் கி.முப்பால் மணி மற்றும் எஸ்.ஏ.பாலகிருஷ்ணன் முகாம்களின் வெற்றிக்கு அச்சாணியாகப் பணியாற்றினர்.

பெருமன்றத்தின் ஆறாவது மாநாடு 1991 டிசம்பர் 27-29 தேதிகளில் கோவை பெர்க்ஸ் மேனிலைப்பள்ளியில் நடைபெற்றது. காலஞ்சென்ற பெருமன்றக் காவலர் செந்தமிழ் மீ.மாரியப்பன் நினைவாக மாநாடு மேடை அமைக்கப்பட்டது. தமிழகமெங்குமிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பேராளர்கள் கலந்து கொண்டனர். தொ.மு.சி., தோதாத்ரி, தி.சு.நடராசன், முப்பால் மணி, கோவை ஞானி, ந.முத்துமோகன், மற்றும் பல அறிஞர்கள் பங்கேற்ற கருத்தரங்கம், பொ.கைலாசபதியின் பாடல்கள், ஒவியக் கண்காட்சி, ராஜம் கிருஷ்ணன், இரவீந்திர பாரதி, விமலா ரமணி, கோமல் சுவாமிநாதன், டி.செல்வராஜ், ஸீனா மணிமேகலை, பசுமைக்குமார் போன்ற எழுத்தாளர்களும் உரையாற்றினர். கே.ஏ.குணசேகரனின் "சத்திய சோதனை" நாடகம் அரங்கேற்றப்பட்டது. பேரா.ராமாணாஜன், நாடக மேதை பிரக்டின் கருத்துக்களைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தக் கேட்டுக் கொண்டார்.

ஏழாவது மாநாடு 1999 ஆகஸ்ட் 11-13 தேதிகளில் சென்னையில் நடைபெற்றது. 1999 மே 28 இல் காலமான கவிஞர் கே.சி.எஸ். நினைவாக அரங்கம் பெயரிடப்பட்டிருந்தது. மூத்த தோழர் ஆர்.நல்லகண்ணு, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், எழுத்தாளர் வல்லிக்கண்ணன், எழுத்தாளர் திலகவதி, முதுபெருந்தோழர் கே.டி.கே.தங்கமணி கலந்து கொண்டு சிறப்பித்தனர். நடிகர் சத்தியராஜ், இயக்குனர் வி.சேகர் கலை விழாவில் பங்கேற்றனர். கவியரங்கம், கருத்தரங்கம், கலை நிகழ்ச்சிகள் என மாநாடு சிறப்புற நடத்தப்பட்டது. தலைமைக்குழுவாகக் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், கவிஞர் சிற்பி, தோதாத்ரி, வி.சேகர், முப்பால்மணி, தி.சு.நடராசன், பி.கே.ராஜகோபால் ஆகியோரும் பொதுச்செயலாளராகப் பொன்னீலனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

எட்டாவது மாநாடு மீண்டும் சென்னையில் 2000 ஏப்ரல் 11-13 தேதிகளில் நடைபெற்றது. மாநாட்டில் கூடிய தலைமைக்குழுவும் பொதுச்செயலாளராகப் பொன்னீலனும் நீடித்தனர்.

அடுத்த மாநாடுகளின் சுருக்கமான விபரம் வருமாறு:

40 வது ஆண்டு சிறப்பு மாநாடு 2002 மே 24-26 தேதிகளில் கோவையில் கோலாகலமாக நடைபெற்றது. உலகத் தமிழ்ப் பேரறிஞர் கலாநிதி சிவத்தம்பி கலந்து கொண்டு கருத்தாழமிக்க உரைய வழங்கினார்.

ஒன்பதாவது மாநாடு 2004 டிசம்பரில் திருவண்ணாமலையில் கவிஞர் பே.அன்புவின் தூரிகை வண்ணங்களில் ஜொலித்த ஒவியப் பதாகைகள் நகரை அலங்கரிக்க, பெருமன்றக் கலைஞர்களின் பாடல்கள், நாடகம், கலை நிகழ்ச்சிகள் என முழு இரவு கலைவிழா முத்திரை பதித்தது திருவண்ணாமலை மாநாடு. பொன்னீலன் தலைவராகவும் ஜெயகாந்தன் போன்ற கம்பீரத் தோற்றம் கொண்ட கரிசல் எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பெருமன்றத்தை வீறுகொண்டு வழிநடத்த இலட்சியப் பிடிப்பு மிக்க இனிய தோழராக தனுஷ்கோடி முன்வந்ததை இயற்கை தடுத்து அவரது உயிரை 2005 நவம்பர் 24 இல் பறித்துக் கொண்டது.

அவரது இடத்தில் சிறந்த எழுத்தாளரும் கவிஞருமான இரவீந்திர பாரதி பொறுப்பேற்றார்.

அடுத்த 10 வது மாநாடு திருச்சி மாநகரில் 2010 ஏப்ரல் 2-4 தேதிகளில் நடைபெற்றது. சமகாலத்தின் சமூகப் போக்குகளான தலித்தியம், பெரியாரியம், பெண்ணியம் ஆகியன பற்றிய காத்திரமான கருத்தரங்க உரைகள் நிகழ்த்தப்பட்டன. மாநாட்டுக் கலை விழா, நாடகங்கள், இசை நிகழ்ச்சிகள், பாராட்டு விழா என மக்களைக் கவர்ந்தது. பேரா.நா.வா.வின் அடியொற்றி அடித்தள மக்கள் வரலாறு, பொருள்சார் வரலாறு என ஆய்வுத்தளத்தில் தடம் பதித்துள்ள பேரா. ஆ.சிவசுப்ரமணியன் தலைவராகவும், கவிஞரும் எழுத்தாளருமான முனைவர் இரா. காமராசு பொதுச்செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பெருமன்றத்தின் 50 வது ஆண்டினைச் சிறப்பிக்கும் வகையில் 2012 மே 12, 13 தேதிகளில் கோவையில் பொன்விழா மாநாடு நடைபெற்றது. கேரள மாநிலத்தைச் சார்ந்த மார்க்சிய அறிஞர் கே.என்.பணிக்கர் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுக் காலப் பொருத்தமிக்க உரையை வழங்கினார். மாநாட்டையொட்டி நடைபெற்ற கலை விழாவில் கவிஞர் புவியரசு, எழுத்தாளர் பொன்னீலன் இருவருக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

பெருமன்றத்தின் 11 வது மாநாடு 2015 செப்டம்பர் 11-13 தேதிகளில் தஞ்சை மாவட்டம் மன்னார்குடியில் விமரிசையாக நடைபெற்றது. இலங்கை நாடகவியலாளர் மௌனகுரு சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். பேரா. நா.ராமச்சந்திரன் சமர்ப்பித்த கொள்கை அறிக்கை மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. தமிழ் உலகாயத தத்துவத்தை ஆய்வு செய்து பதிவு செய்துள்ள முனைவர் கி.முப்பால் மணிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. மாநாட்டுக் கலைவிழாவில் தஞ்சை சின்னப்பொண்ணு குழுவினர் மற்றும் பெருமன்றக் கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகளை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு களித்தனர். மாநாட்டில் குமரி மாவட்டப் பெருமன்றத்தை கட்டி வளர்க்க, இளந்தோழர்களை ஆற்றுப்படுத்துபவரும் சிறந்த மார்க்சியச் சிந்தனையாளருமான சி.சொக்கலிங்கம் தலைவராகவும், முனைவர் இரா.காமராசு பொதுச்செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பெருமன்றத்தின் 12 வது மாநாடு 2022 மே 20-22 தேதிகளில் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடைபெற்றது. அரசியல் தலைவர்களின் வாழ்த்துரை, கருத்தரங்கம், கவியரங்கம், கலை நிகழ்ச்சிகள், தொல்லியல் கண்காட்சி என மாநாடு அடர்த்தியாக நடைபெற்றது. மாநிலச் செயற்குழுவின் சார்பாகத் தோழர் எஸ்.கே.கங்கா சமர்ப்பித்த நகல் கொள்கை அறிக்கை விவாதிக்கப்பட்டு இறுதியாக அடுத்த மாநிலக்குழுவின் முடிவிற்கு விடப்பட்டது. கலை விழாவில் மக்கள் பாடகர் பரிணாமனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. மாநாட்டில் தோழர் சி.சொக்கலிங்கம் தலைவராகவும் மற்றும் த.அறம் பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தனது உடல்நிலை காரணமாகத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகிக்கொள்ளத் தோழர் சி.சொக்கலிங்கம் விடுத்த வேண்டுகோளை ஏற்று திருப்பூரில் நடைபெற்ற மாநிலக்குழு கூட்டத்தில் தோழர் எஸ்.கே.கங்கா மாநிலத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சாத்தூர் மாநாட்டிற்குப் பின், பெருமன்றம் வ.உ.சி- 150, கே.சி.எஸ். அருணாசலம், தொ.மு.சி. தமிழ்ஒளி, ராஜம் கிருஷ்ணன் போன்ற ஆளுமைகளின் நூற்றாண்டு விழாக்களை மாநிலத்திலுள்ள கல்லூரிகளின் தமிழ்த்துறையினருடன் இணைந்து பல மாவட்டங்களில் நடத்தியுள்ளது. பிப்ரவரி 21 இல் மாநிலமெங்கும் உலகத்தாய்மொழி நாள் விழாக்கள், 2023 பிப்ரவரியில் இந்தித் திணிப்பைக் கண்டித்து சென்னையில் கருத்தரங்கம், கரிசல் எழுத்தாளர்கள் கி.ரா., அழகிரிசாமி மற்றும் கவிஞர் தமிழ்ஒளி சிறுகதைகள் பற்றி இணையவழி உரைகள்,

திருக்குறள் 133 அதிகாரங்கள் குறித்து இணையவழி விளக்கவுரைகள், தோழர் எஸ்.கே.கங்கா தொடங்கிய ஜீவா-நாவா சிந்தனைப் பள்ளி, பேரா.நா.வா. ஆய்வுக்குழு, பெருமன்றத்தின் சென்னை மாவட்டக்குழு ஆகிய அமைப்புகளின் இணைய வழி உரைகள் எனப் புதிய முயற்சிகள் தொடர்கின்றன. குமரி மாவட்டப் பெருமன்றம், பேரா.நாவா. நினைவுக் கலை இலக்கியப் பண்பாட்டு முகாமை கடந்த 45 ஆண்டுகளாக நடத்தி, தத்துவார்த்த விவாதம், இலக்கிய அரங்கம், சிறார் பயிலரங்கு ஆகியவற்றை முன்னெடுத்து வருகிறது.

நாட்டுப்புறக்கலைகளைப் பாதுகாக்க அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு தோழர் ஜீவா அண்ணல் அம்பேத்கர் நாட்டுப்புறக் கலைஞர்கள் சங்கம் பெருமன்றத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

கலை இலக்கியத்துறையில் ஜீவா, நா.வா., தொ.மு.சி. தொடங்கிய பண்பாட்டுப் பயணத்தில் பெருமன்றம் ஆற்றியுள்ள குறிப்பிடத்தக்க பங்களிப்புகள்:

➢ பழந்தமிழ் செவ்வியல் இலக்கியங்களைச் சமுதாயக் கண்ணோட்டத்தில் வரலாற்று இயங்கியல் நோக்கில் நோக்கி அதன் சமூகப் பண்பாட்டு விழுமியங்களை வெளிக் கொணர்ந்தது.

➢ செவ்வியல் இலக்கியங்களுக்கு நிகராக நாட்டார், வாய்மொழி இலக்கியங்களைத் தொகுத்து, பகுத்து, பண்பாட்டு மானிடவியலை நிலை நிறுத்தியது.

➢ செவ்வியல் கலை வடிவங்கள் கோலோச்சிய நிலையை மாற்றி நாட்டார் கலைகளை மக்கள் மத்தியில் நிலை நிறுத்தியது.

➢ நவீன இலக்கிய வடிவங்களான புதுக்கவிதை, சிறுகதை, நாவல் போன்றவற்றில் சமுதாய வளர்ச்சி, முன்னேற்றத்தை மையப்படுத்திய முற்போக்கு எதார்த்தவாத எழுத்து முறைமையை வளர்த்தெடுத்தது.

➢ சிறுகதை, நாவல் வகைமைகளில் ஜெயகாந்தன், தமிழ்ஒளி தொடங்கிய வரிசையில் தொ.மு.சி., பொன்னீலன், கு.அழகிரிசாமி, தனுஷ்கோடி ராமசாமி, வல்லிக்கண்ணன், சு.சமுத்திரம், வாய்மைநாதன், அறந்தை நாராயணன், அ.ப.பாலையன், கொ.மா.கோதண்டம், சந்திரகாந்தன், ஆ.சந்திரபோஸ், ஸ்ரீதர கணேசன், சுப்ரபாரதி மணியன், ரவீந்திர பாரதி, மா.நடராசன், இரா.காமராசு, அண்டனார் சுரா, செம்மை மணவாளன், டாக்டர் சாந்திலால், வீர.வேலுசாமி, இரா.கதைப்பித்தன், மீரான் மைதீன், கே.வி.ராஜேந்திரன், நாணற்காடன், சசிகலா விஜயராஜா, துவாரகா சாமிநாதன், சோலச்சி, எனத் தொடரும் படைப்பாளர் அணியை உருவாக்கியது.

அதுபோலக் கவிஞர்கள் வரிசையில் ஜீவா, தொ.மு.சி., கே.சி.எஸ்.அருணாசலம் தொடங்கி, வெ.நா.திருபூர்த்தி, வெ.நாரா, கடலூர் பாலன், யமுனா ராஜேந்திரன், பரிணாமன், இரா.காமராசு, ஹெச்.ஜி.ரகுல், கலமணிமுடி, கே.திலகவதி, பசுமைக்குமார், ஹாமீம் முஸ்தபா, மு.செல்லா, கிருங்கை சேதுபதி, பெ.அன்பு, மு.ஆதிராமன், அறந்தை பாவா, கதிர்பாரதி, தி.பரமேஸ்வரி, அகிலா கிருஷ்ணமூர்த்தி, கண்மணிராசா, நேர்கேப்புக்கள் ஸ்ரீபதி, நீலநிலா, சேண்பக ராமன், மழையிசை, ரஜனி சபத்துராஜா, கவிஜோஜவஹர், ராம்சித்ரா, சிவா, கோ. கலியமூர்த்தி, அய்யாறு புகழந்தி, செங்கபாபு, என்.டி.ராஜ்குமார், இ.எம்.எஸ்.கேலவாணன், யோவான், ரெமிசிங், பேசல், சஹானா, ந.நாகராஜன், சு.சசல்வக்குமரன், கந்தேப்புக்கள் ஸ்ரீபதி, அஜய்குமார் கோஷ், வல்லம் ஜோஜுபால், நிலாவேனன், சேலம் ராஜா, நாகா, மழையிசை, உஷாகனகு, ஆனந்தி, துருவன்பாலா, நான்சி கோமகன் எனப் பெருமன்றக் கவிஞர்கள் தொடர்வது.

➢ தமிழ் இலக்கியத்தை உலக இலக்கியங்களுடன் இணைத்துப் பார்க்கும் ஒப்பிலக்கிய நெறியை உருவாக்கிக் காட்டியது.

➢ தமிழில் இருந்து பிறமொழிகளுக்கும், பிற மொழிகளிலிருந்து தமிழுக்கும் இலக்கியப் பரிமாற்றத்தை மொழிபெயர்ப்புகள் வழி செய்து காட்டியது.

➢ சாதி சமய தெய்வீக சடங்காச்சார விழாக்களுக்கு மாற்றாக மக்கள் கலை வடிவங்களை வெகுமக்கள் மத்தியில் அரங்கேற்றும் முழு இரவுக் கலை விழா வடிவங்களைத் தந்தது.

➢ நூல் பதிப்பு, புத்தக வாசிப்பு, நூல்கள் அறிமுகம் ஆகியவற்றை மக்கள் சார்ந்த முறையில் விரிவுபடுத்தியது.

➢ கல்விப்புல வட்டாரத்திலும் வெளியேயும், சமூகவியல் நோக்கிலானதும், மார்க்சிய ஆய்வுமுறையியல் அடிப்படையிலானதுமான பல்துறை ஆய்வுகளை வளர்த்தெடுத்தது.

➢ பெருமன்றத்தின் ஆரம்ப காலத்திலிருந்து அதன் வளர்ச்சியில் பங்களிப்புச் செய்துள்ள தொ.மு.சி.ரகுநாதன், தி.க.சிவசங்கரன், பொன்னீலன், சிற்பி பாலசுப்ரமணியன், புவியரசு, தமிழ்நாடன், பா.ஆனந்தகுமார், கமலவேலன் ஆகியோர் சாகித்திய அகாதமி விருதுகளைப் பெற்றுப் பெருமை சேர்த்துள்ளது.

➢ என்.சி.பி.எச். புத்தக நிறுவனத்துடன் இணைந்து கடந்த 32 ஆண்டுகளாக மாநில அளவிலான போட்டிகள் வழியாக வெற்றி பெறும் இலக்கியப் படைப்பாளிகள், ஆய்வாளர்கள், ஆவணப்பட, குறும்பட இயக்குனர்கள் ஆகியோருக்கு விருதுகளை வழங்கி வருவது.

➢ கலை இலக்கிய ஆளுமைகளுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது, தமிழியல் ஆளுமை விருது, வாழ்நாள் சாதனைக் கலைஞர் விருது ஆகிய விருதுகளையும் வழங்கி வருவது.

➢ படைப்பிலக்கிய வகைமைகளில் இளம் படைப்பாளிகளின் நூல்கள் வெளியீடு அறிமுக நிகழ்ச்சிகளை நடத்தி மக்கள் சார் இலக்கிய வளர்ச்சிக்கு உறுதுணையாகச் செயலாற்றுவது.

➢ தொல்லியல் ஆய்வுகளில் காத்திரமாகப் பணிகளைப் பெருமன்றத்தின் தலைமைக்குழு உறுப்பினர் செந்தீ நடராசன் வழிநடத்தும் செம்பவளம் ஆய்வுக்குழு முன்னெடுத்து வருவது. தமிழ்நாட்டின் வரலாற்றை வரலாற்றுப் பொருள்முதல்வாத அடிப்படையில் ஆய்வு செய்து வரும் ர.பூங்குன்றன், தி.சுப்ரமணியன், ஆ.பத்மாவதி உள்ளிட்ட தொல்லியலாளர்களின் பங்களிப்புகள்.

➢ அண்மைக் காலமாகச் சிறார்களின் ஆற்றல்களை வெளிக் கொணரும் சிறார் முகாம்களுக்குக் கவனம் செலுத்தி வருவது.

இப்படிச் சில முத்திரைகளைப் பதித்திருந்தாலும், பெருமன்றம் செல்ல வேண்டிய தூரமோ நெடியது. எதிர்கொண்டுள்ள பண்பாட்டுச் சவால்களும் மிகக் கடினமானவை. இவற்றைச் சந்திக்கவும் வெற்றிகாணவும் பெருமன்றம் மற்றும் அனைத்து இடதுசாரி, சனநாயக, பண்பாட்டு இயக்கங்களின் ஒன்றினைந்த செயல்பாடு பெருமளவில் வேண்டப்படும் கூழல் நிலவுகிறது. ஆட்சியதிகாரத்தைப் பயன்படுத்தி, நாட்டின் பன்மைத்துவத்தை, மதச்சார்பின்மையை, அரசியலமைப்பு வழங்கியுள்ள ஜனநாயகத்தைப் புரட்டிப் போட்டு, சமத்துவ நெறிக்குப் புறம்பான, செயற்கையான ஒற்றைப் பண்பாட்டைத் திணிக்கும் நாச வேலையை இந்தியப் பாசிசம் படிப்படியாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.

இந்தப் பேரபாயத்திலிருந்து நாடு காப்பாற்றப்பட, தமிழ்நாட்டின் தொன்மை, தமிழ் மொழியின், தமிழ் மக்களின் உரிமைகள் நிலைநாட்டப்பட, சமூக உணர்வு கொண்ட கலை இலக்கியப் பேராளிகளை வார்க்கும் உலைக்களமாகப் பெருமன்றம் உள்ளிட் அனைத்து முற்போக்குக் கலை இலக்கிய அமைப்புகளும் இயங்குவது காலத்தின் கட்டளையாகும். அதுவே பெருமன்றத்தின் பெருமைமிகு வரலாற்றினை முன்னோக்கிச் செலுத்துவதாக அமையும்.

- ப.பா.ரமணிமாநிலப் பொருளாளர், த.நா.கலை இலக்கியப் பெருமன்றம்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.