நேர்காணல் :
எஸ். பாலச்சந்திரன் (1967) ஒரு மார்க்சிய ஆய்வாளர்; மார்க்சிய நூல்களையும், ஆப்பிரிக்க, இலத்தீன் அமெரிக்கப் படைப்புகளையும், உலக அளவிலான பல புரட்சிகர ஆளுமைகளின் வாழ்க்கை வரலாறுகளையும், பல நாவல்களையும் தமிழில் மொழி பெயர்த்திருப்பவர். கோவையில் வசித்து வரும் இவர் இடதுசாரி இயக்கங்கள் மற்றும் இலக்கியங்களின்பால் தான் ஈர்க்கப்பட்டது பற்றியும், மொழிபெயர்ப்புகள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் பற்றியும், கல்விப்புலம் சார் ஆய்வுலகம், கல்விப்புலத்திற்கு வெளியே உள்ள படைப்பாளிகளின் செயல்பாடுகளும் இணைந்து செய்ய வேண்டிய பணிகள் பற்றியும் பேசுகிறார். இந்த நேர்காணலைச் செய்தவர் பீட்டர் துரைராஜ்.
கேள்வி: நீங்கள் இடதுசாரி இயக்கத்திற்கு வருவதற்கு எவை காரணமாக என்று சொல்ல முடியுமா ?
பதில்: ஈரோடு மாவட்டத்தில் உள்ள கவிந்தப்பாடி எனது சொந்த ஊர். எனது தந்தையார் திராவிட இயக்கச் செயற்பாட்டாளர். அவர்தான் எனக்குப் பள்ளிப் பருவத்திலேயே பெரியாரின் நூல்களையும் பாரதிதாசன் கவிதைகளையும் பரிசளித்து, நூல் வாசிப்பிலும் பகுத்தறிவுச் சிந்தனை மீதும் எனக்கு ஈடுபாடு ஏற்படக் காரணமாக இருந்தார்.
வாடகைக் கார் ஓட்டுநராக இருந்த அவர், கோவை, சென்னை போன்ற நகரங்களுக்குச் செல்லும் போதெல்லாம் அங்கிருந்த புத்தகக் கடைகளுக்குச் சென்று, என் வயதைச் சொல்லி, அதற்கேற்ற புத்தகங்களாகத் தருமாறு கேட்டு வாங்கி வந்து தருவார்.
கவிந்தப்பாடியிலும் எனக்கு மிகச் சிறந்த ஆசிரியர்கள் கிடைத்தார்கள். குறிப்பாக, ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிப்பாடங்களை அநேகமாக தமிழகத்திலேயே மிகச்சிறந்த பள்ளியாசிரியர்களிடம் நான் பயின்றேன் எனலாம். எட்டு அல்லது ஒன்பது வயதிலிருந்தே, எங்கள் ஊரில் இருந்த கிளை நூலகத்திற்குச் செல்லுவது எனக்கு வழக்கமாக இருந்தது.
முக்கியமாக, 1982 ம் ஆண்டில் பாரதி பிறந்த நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதிலும் கொண்டாடப்பட்ட போது, இலக்கியப் போட்டிகளில் கலந்துகொண்டு நிறையப் பரிசுகளைப் பெற்றேன்.
அப்போதுதான் என்சிபிஎச் நிறுவனமும் பாவேந்தர் நூலகம் என்னும் பேருந்து விற்பனை நிலையத்தை எங்கள் ஊருக்கு கொண்டுவந்து நூல்களை விற்பனை செய்தது; அப்போது நிறைய நூல்களை வாங்கிப் படித்தேன். மேலும் பீடித் தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த தோழர்களும் தொலைத் தொடர்புத் துறையின் கவிந்தப்பாடி கிளைப் பணியாளர்களுடனும் எனக்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது.
கிட்டத்தட்ட அதே காலத்தில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தில் நான் இணைந்து செயல்படத் தொடங்கினேன். இஸ்கஸ் (இந்தோ சோவியத் கலாச்சாரக் கழகம்) அமைப்பின் மாணவர்களுக்கான கிளையையும் தொடங்கி நடத்தினோம். இதெல்லாம் சேர்ந்துதான் இடதுசாரி இயக்கங்களின்பால் நான் ஈர்க்கப்பட்டேன் என்று சொல்ல வேண்டும்.
கேள்வி: இலக்கிய நூல்களை தீவிர வாசிப்புக்கு உட்படுத்துவதிலும் மொழிபெயர்ப்பிலும் நீங்கள் ஈடுபட்டது எப்படி ?
பதில்: கல்லூரி நாட்களில் ஆங்கில மொழியில் வெளிவந்த பிறமொழி இலக்கியங்களைப் படிப்பதில் அதிக நேரம் செலவிட்டு வந்தேன். முக்கியமாக கவிதைகளைப் படிப்பதில் எனக்கு ஆர்வம் மிகுதியாக இருந்தது. ஆகவே, அவற்றைக் குறித்து என் நண்பர்களிடம் பேச வேண்டும் என்பதற்காகவே கவிதைகளை அதிகமாக மொழிபெயர்த்து வந்தேன்.
அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினல் செயல்பட்டு வந்தேன். ஆகவே அன்றைய நாட்களில் மாணவர், இளைஞர் அமைப்புகளின் தலைவர்களின் உரைகளைத் தமிழில் மொழிபெயர்த்தேன். ஏறத்தாழ அதே காலகட்டத்தில் "மானுடம்" என்ற கையெழுத்துப் பத்திரிகையை நடத்தி வந்தேன். அதில் விபின் சந்திரபால், சந்திரலேகா ஆகிய புனைப்பெயர்களில் பல படைப்புகளை மொழிபெயர்த்து வெளியிட்டேன்.
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்கு இணையானதொரு வரலாற்றுத் துறையைக் கொண்டிருந்த சென்னை கிறித்தவக் கல்லூரியின் வரலாற்றுத் துறை தலைவராக நீண்ட காலம் பணியாற்றிய டாக்டர். எஸ்.கிருஷ்ணசாமி அவர்கள் ஈரோடு ஸ்ரீ வாசவிக் கல்லூரியின் முதல்வராகப் பணிபுரிந்து வந்த காலத்தில் அக் கல்லூரியில் பயின்ற எனக்கு, ழான் போல் சத்தார், ஆல்பெர் காம்யு போன்ற ஐரோப்பிய அறிஞர்களின் படைப்புகளையும், தோழர் எஸ்.வி.ராஜதுரையின் எக்சிஸ்டென்ஷியலிசம் போன்ற நூல்களையும் எனக்கு அவர் அறிமுகப்படுத்தினார்.
தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை தொடக்க காலத்தில் நிறுவியவர்களில் ஒருவரும் மார்க்சிய அறிஞருமாகிய தோழர் சி.எஸ்.சுப்பிரமணியம் அவர்கள் எனக்கு பிளேட்டோவின் 'குடியரசு', அரிஸ்டாட்டிலின் 'அரசியல்' ஆகிய நூல்களை அறிமுகப்படுத்தினார்.
ஸ்ரீ வாசவிக் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியரான டாக்டர் ஓ.கே.நல்லமுத்து, டாக்டர் சதாசிவம், டாக்டர் குருநாதன், டாக்டர் என்.சந்தானம் ஆகியோரும், ஆங்கிலப் பேராசிரியர்கள் டாக்டர் எஸ்.கிருஷ்ணசாமி (துறைத் தலைவர்), திரு.நாராயணன், திரு.எத்திராஜ், அகிலன் ஆகியோரும் எனது இலக்கிய வாசிப்பையும், மொழிபெயர்ப்பு ஆர்வத்தையும் ஊக்கப்படுத்தினார்கள்.
அப்போது அண்ணாச்சி பொன்னீலன் அவர்கள் எழுதிய 'கொள்ளைக்காரர்கள்', 'கரிசல்' ஆகிய நாவல்களையும், 'ஊற்றில் மலர்ந்தது' என்னும் குறுநாவல்களின் தொகுப்பையும் வாசித்திருந்தேன். பொன்னீலன் அவர்கள் முதியோர் கல்வித் திட்ட அலுவலராக மொடக்குறிச்சிக்கு மாற்றலாகி வந்ததை அறிந்து அவரைச் சென்று சந்தித்தேன்.
சென்னிமலையைச் சேர்ந்த தோழர் கவிதாபாரதி, சிவகிரியைச் சேர்ந்த தோழர். ஜீவா தங்கவேல், தாண்டம்பாளையம் தங்கவேல், சிவகிரி கார்த்திகேயன் போன்ற தோழர்களோடு நெருக்கமான தோழமை கொண்டிருந்த நாட்கள் அவை. எனது இளம்பருவ நண்பர்களான கௌதம சித்தார்தன், தேவிபாரதி ஆகியோரோடு மிக நெருக்கமான நட்பும் இலக்கியரீதியான பரிமாறல்களும் ஆழமடைந்தன.
பொன்னீலன் அண்ணாச்சியின் வழிகாட்டுதலில் ஈரோடு மாவட்டத்தில் கலை இலக்கியப் பெருமன்ற கிளைகளை ஈரோடு, சிவகிரி, சென்னிமலை, கவிந்தப்பாடி ஆகிய இடங்களில் தொடங்கினோம். இவ்வாறாகத்தான் மொழிபெயர்ப்பாளனாகவும், கலை இலக்கியப் பெருமன்ற அமைப்பாளனாகவும் ஆனேன்.
கேள்வி: நீங்கள் மொழிபெயர்த்த நூல்கள் குறித்து ....?
பதில்: 1988 ஆம் ஆண்டு முதல் எனது மொழிபெயர்ப்புகள் பல்வேறு இலக்கியப் பத்திரிகைகளில் தொடர்ந்து வெளிவந்தன. முக்கியமாக, கௌதம சித்தார்தன் நடத்திவந்த "உன்னதம்", இலக்கிய இதழிலும், கவிஞர் அறிவுமதி நடத்திவந்த " மண்" இலக்கிய இதழிலும், "தாமரை" மற்றும் "திணை" ஆகிய இதழ்களிலும் வெளிவந்தன.
எனினும், காலஞ்சென்ற சிவஞானம் அவர்கள் நடத்தி வந்த விடியல் பதிப்பகம்தான் மொழிபெயர்ப்பு குறித்த எனது அவற்றில் எனது பெருங்கனவுகள் நிஜமாகக் காரணமாக இருந்தது. அங்குதான் மொழிபெயர்ப்பு செயல்பாட்டின் மீது தனித்த கவனம் செலுத்திவந்த தோழர்கள் வெ.கோவிந்தசாமி, வி.நடராஜ், கண்ணன்.எம் (பாண்டிச்சேரி) ஆகியோரைச் சந்தித்தேன். விடியல் சிவா அப்போது மார்க்சிய நூல்களையும் தலித்திய நூல்களையும் பெரியாரின் சிந்தனைகள் குறித்த ஆய்வு நூல்களையும் வெளியிட்டு வந்தார்.
மெக்சிகோ நாட்டின் தலை சிறந்த எழுத்தாளரான யுவான் ருல்ஃபோ எழுதிய "எரியும் சமவெளி" என்ற நூலின் எனது மொழிபெயர்ப்பை விடியல் பதிப்பகம் 2000 ஆண்டில் வெளியிட்டது. அதன் பிறகு "உபாரா" "உச்சாலியா" "அனார்யா" ஆகிய தலித் சுயசரிதை நாவல்களையும், சே குவாரா, மாவோ, ஃபிரான்ஸ் ஃபிளான், வால்டர் பெஞ்சமின் போன்றோரின் வாழ்க்கை வரலாறுகளையும், அமில்கர் கப்ரால், சே குவாரா, துணைத்தளபதி மார்க்கோஸ், மாஜானே சத்ரபி போன்றோரின் நூல்களையும் எனது மொழிபெயர்ப்பில் விடியல் பதிப்பகம் தொடர்ந்து வெளியிட்டது.
எனது மொழிபெயர்ப்பில் வெளியான உபாரா, உச்சாலியா, அனார்யா ஆகிய நூல்களும், தோழர் வெ.கோவிந்தசாமி அவர்களின் மொழிபெயர்ப்பில் வெளியான "குலாத்தி" "ஜூதான்" "ஒரு தலித்திடமிருந்து" ஆகிய நூல்களும் சேர்ந்து தமிழகத்தில் தலித் படைப்பிலக்கியத்தின் போக்கின் மீது முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தின என்றே சொல்ல வேண்டும்.
தலித் ஆதார மையம் (மதுரை), புத்தா வழிகாட்டு மையம் (கோவை) உள்ளிட்ட சில தலித் அமைப்புகள் நடத்திய பல்வேறு அரங்குகளில் மார்க்சியம், தலித்தியம், புரட்சிகர உலக வரலாறு, கருப்பின மக்களின் விடுதலை இயக்கங்கள் உள்ளிட்ட பல பொருண்மைகளில் சொற்பொழிவுகளையும், வகுப்புகளையும் நடத்துவதற்காக கர்நாடகத்தின் பெங்களூரு, ஆந்திரத்தின் சித்தூர், தமிழகத்தின் பல்வேறு நகரங்கள் ஆகியவற்றிற்கு தொடர்ச்சியாகப் பயணம் செய்து வந்தேன்.
நான் மொழிபெயர்த்த இந்த யுவான் ருல்ஃபோவின் மொத்த படைப்புகளும், சேகுவாராவின் படைப்புகளும், ஜோர்ஜ் ஜி காஸ்டநாடா எழுதிய "சே குவேரா: வாழ்வும் மரணமும்", அகஸ்டோ ருவா பஸ்டோஸ் எழுதிய "போர் தொடர்கிறது" என்ற நாவலும் அப்போது வாசகர்கள் மத்தியில் மிகுந்த புகழ் பெற்றிருந்தன.
பழங்குடி மக்களின் வாழ்வையும் போராட்டத்தையும் பற்றி பேசுகின்ற பல முக்கியமான நூல்களையும் நான் மொழிபெயர்த்திருக்கிறேன். "போர்க்குதிரை"(Crazy Horse) வாழ்க்கை வரலாறும், லியோனார்ட் பெலடியரின் சிறைக்குறிப்புகள் அடங்கிய "சூரியனை தொடரும் காற்று", துணைத் தளபதி மார்க்கோஸ்- இன் படைப்புகளைக் கொண்ட "எதிர்ப்பும் எழுத்தும்" ஆகியவை அவற்றுள் சில.
கேள்வி: மொழிபெயர்ப்புகளுக்காக ஏதேனும் விருது பெற்றிருக்கிறீர்களா ?
பதில்: 2000 ஆண்டிற்கான திருப்பூர் தமிழ்ச்சங்கத்தின் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான விருதும், 2005 ஆண்டிற்கான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் வ.சுப.மாணிக்கனார் விருதும், 2012 ம் ஆண்டின் மக்கள் சிந்தனைப் பேரவை (ஈரோடு) வழங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கான பாராட்டு மடலும் எனது மொழிபெயர்ப்பு நூல்களுக்கு கிடைத்திருக்கின்றன.
கேள்வி: சிறந்த நூல்களை மொழிபெயர்ப்பதில் மொழிபெயர்ப்பாளர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்னவென்று நீங்கள் நினைக்கிறீர்கள் ?
பதில்: மொழிபெயர்ப்பு சிறப்பாக இருக்க வேண்டும் என்றால் வெறும் மொழியறிவு மட்டும் போதாது. தீவிரமான வாசிப்பு, வாசித்த நூல்களின் மீதான விவாதங்களில் ஈடுபடுவது, தொடர்ச்சியான எழுத்து பயிற்சி ஆகியவை அவசியம்.
மூல நூலின் மொழிநடைக்கு இணையான மொழிநடையை மொழிபெயர்ப்பில் உருவாக்க வேண்டும். இது மிகப்பெரும் சவால்தான் எனினும், நிறைய இலக்கிய நூல்களை வாசிக்கும் பயிற்சி உள்ளவர்கள் இதில் சிறந்து விளங்க முடியும்.
ஒரு நூலை மொழிபெயர்க்கும் முன் அந்த நூல் எழுதப்பட்ட எழுதப்பட்டதன் சமூக, அரசியல் பின்னணியை மொழிபெயர்ப்பாளர்கள் அறிந்திருப்பது நல்லது. எடுத்துக்காட்டாக கேப்ரியேல் கார்ஸியா மார்க்வெஸ் எழுதிய ஏதேனும் ஒரு நாவலை மொழிபெயர்க்கும் ஒருவர் கொலம்பிய நாட்டின் வரலாற்றையும், அதன் கலாச்சாரத்தையும் பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
மூலப்பிரதியின் அடிப்படை உணர்வை புரிந்து கொள்ளாமல் வார்த்தைக்கு வார்த்தை அப்படியே மொழிபெயர்ப்பது, மொழிபெயர்ப்புக்கான மொழிநடையில் அதிதீவிர தூய்மைவாதத்தை கடைபிடிப்பது, மூலப் பிரதியிலிருந்து விலகிச் சென்று, தான் புரிந்துகொண்டு உள்வாங்கிக் கொண்டவிதத்திற்கு ஏற்றவாறு "தழுவலாக" மொழிபெயர்ப்பது ஆகியவற்றின் மூலம் சிறந்த மொழிபெயர்ப்பு நூல்களைத் தர முடியாது மொழிபெயர்ப்பு என்பது ஒரு நடைமுறை சார்ந்த செயல்பாடாகும் (Translation is a pragmatic activity, a practice).
முன்கூட்டியே தொகுத்து வைத்துக் கொண்ட தீர்வுகளின் அடிப்படையில் மொழிபெயர்ப்புகளைச் செய்ய முடியாது. மொழிபெயர்ப்பிற்கு எடுத்துக் கொள்ளப்படுகின்ற ஒவ்வொரு புதிய நூலும் புதிய புதிய பிரச்சினைகளை முன் வைக்கின்றன, புதிய புதிய சவால்களை விடுகின்றன. அச்சவால்களை வருமொழியின் ஆற்றல்கள் அனைத்தையும் பயன்படுத்தி எதிர் கொள்வதன் மூலமாக மட்டுமே மொழிபெயர்பாளர் வெற்றி பெறமுடியும். அவ்வாறன்றி, ஒரு மூலப் பிரதியின் சாரத்தை மட்டுமே தர முடியும் என்றால் அது தழுவலாகத்தான் இருக்க முடியுமே தவிர, ஒரு மொழிபெயர்ப்பாக இருக்க முடியாது.
எனது மொழியாற்றலுக்குச் சவால் விடுகின்ற நூல்களை மட்டும்தான் இதுவரையில் நான் மொழிபெயர்த்திருக்கிறேன். மொழி ரீதியான சவால்களை முன்வைக்காத நூல்களை மொழிபெயர்ப்பதால், ஒரு படைப்பாக்க முயற்சி என்ற முறையில், இதுபோன்ற நடவடிக்கைகளால் ஒரு மொழிபெயர்ப்பாளர் புதிதாகக் கற்று கொள்ளப் போவது ஒன்றுமில்லை.
புதிதாக மொழிபெயர்க்க வருபவர்களை மிரட்சியடையச் செய்வதற்காக நான் இதை சொல்லவில்லை. தம்மிடமுள்ள ஆற்றல்களைப் பயன்படுத்தி சாத்தியமற்றதையும் சாத்தியமாக்குகின்றபோது தான் மொழியின் எல்லைகளும் விரிவடைகின்றன என்பதுடன் மொழிபெயர்ப்பாளரின் ஆற்றலும் பணியும் முழுமை அடைகின்றன.
கேள்வி: மொழிபெயர்ப்பில் மட்டுமின்றி, மார்க்சியத் தத்துவம் குறித்த ஆய்வுகளிலும் ஈடுபட்டு வருகின்ற நீங்கள், தமிழ்நாட்டின் தற்போதைய ஆய்வுத் துறை வளர்ச்சி நிலையைப் பற்றி என்ன கருதுகிறீர்கள் ?
பதில்: தமிழ் இலக்கியம் பற்றிய சீரிய ஆய்வுகளைக் கல்வி புலத்திற்கு வெளியே சுயேச்சையாக மேற்கொண்டுவரும் இலக்கிய, தத்துவ விமர்சகர்களின் பணியையும், கல்வி புலத்திற்குள் பல்கலைக்கழக மற்றும் கல்லூரி மட்டங்களில் கல்வியாளர்களாலும் ஆய்வு மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களாலும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணியைப் பற்றியும் கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.
பேராசிரியர் நா.வானமாமலை மேற்குறிப்பிட்ட முதலாவது போக்கில் மிகப்பெரிய மடை மாற்றத்தைச் செய்த மாபெரும் அறிஞர் ஆவார். அதுமட்டுமன்றி தனது பணியை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கின்ற ஆய்வாளர்களாகத் தனது மாணவர்களை உருவாக்கிய பெருமையும் அவருக்கு உண்டு.
இந்தியத் தத்துவ இயல் குறித்துத் தமிழ்ச்சூழலில் "ஆய்வு வட்டத்தின்" மூலமாகத் தீவிர விவாதங்களை நடத்திய வெ.கிருஷ்ணமூர்த்தி, தமிழ் நாவல்களின் கதாப்பாத்திரம் குறித்த ஆழமான மார்க்சிய மதிப்பீடுகளை முன்வைத்து பேராசிரியர் எஸ்.தோதாத்ரி, புனைக்கதை, கவிதை ஆகியவற்றின் உருவம், உள்ளடக்கம் பற்றி கோட்பாட்டு ரீதியான பார்வைகளை முன் வைத்த பேராசிரியர் தி.சு. நாகராஜன், அசலான மார்க்சிய அணுகுமுறையோடு நாட்டார் வழக்காற்றியலை வளர்த்தெடுத்த பேராசிரியர் ஆ. சிவசுப்ரமணியன், டாக்டர்.நா. ராமச்சந்திரன், சோழர் கால அரசியல் மற்றும் பொருளாதாரம் குறித்து ஆய்வுகளை மேற்கொண்ட மே.து. ராசுகுமார், இலக்கிய இயக்கங்களையும், இலக்கிய மற்றும் இயக்க ஆளுமைகளையும் பற்றிய பல ஆய்வு நூல்களை எழுதிய நாவலாசிரியர் பொன்னீலன் ஆகியோர் அவர்களில் சிலர். "ஆராய்ச்சி" குழுவிற்கு வெளியிலும் கோ.கேசவன், தொ.பரமசிவன், பேராசிரியர் செ.ராமானுஜம் போன்ற ஆய்வாளர்கள் மிகச் சிறந்த ஆய்வுகளை தத்தமது துறைகளில் செய்து இருக்கிறார்கள்.
இவர்களில் சிலர் இன்று இல்லை. மற்றவர்களோ மிகவும் மூப்பு அடைந்து விட்டார்கள்.இவர்களின் இடங்களை நிறைவு செய்யக் கூடிய, புதிய தலைமுறையைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இன்னும் உருவாகவில்லை என்பது உண்மை. எனில், எதிர்காலத்தில் இலக்கிய ஆய்வுகள் எந்த நிலைமை அடையப் போகின்றன என்ற கவலை எழாமல் இருக்க முடியாது.
பல்கலைக்கழக மற்றும் கல்லூரி மட்டங்களில் பணிபுரிந்த பல பேராசிரியர்கள் சிறந்த இலக்கியவாதிகளாகவும், மொழி பெயர்ப்பாளர்களாகவும் இருந்திருக்கிறார்கள். அவர்கள் கல்விப்புலத்திற்கு வெளியே செயல்பட்டு வந்த இலக்கியவாதிகளுடன் ஆரோக்கியமான உறவுகளை பேணி வந்திருக்கிறார்கள்.
அவர்களது படைப்புகளை பற்றிக் கல்விப்புலம் சார்ந்த ஆய்வுகளுக்கும், விவாதங்களுக்கும் ஊக்கமளித்து வந்திருக்கிறார்கள். ஆனால் இப்போது சில விதிவிலக்குகளைத் தவிர, பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் ஆய்வுத் தரம் குறைந்துவிட்டது.
பெரும்பாலான ஆய்வேடுகள் பதவியை தக்கவைத்துக் கொள்வதற்கும், பதவியைப் பெறுவதற்கும், பதவி உயர்வு பெறுவதற்குமே பயன்படுகின்றன. இந்த ரக ஆய்வேடுகளால் தமிழ் இலக்கிய சூழலுக்கோ, தமிழ்ச் சமூக மேம்பாட்டிற்கோ எந்த பயனும் விளைவதில்லை. அச்சுக் கலையின் தொழில்நுட்பம் வெகுவாக வளர்ந்திருப்பதன் விளைவாக, நூல்கள் அச்சிடுவது மிகவும் எளிமையானதாகிவிட்டது.
எனவே தாங்களும் நூல்களை வெளியிட்டு இருக்கிறோம் என்று சொல்லிக் கொள்வதில் இத்தகைய பேராசிரியர்களும் ஆய்வாளர்களும் பெருமை கொள்கிறார்கள். பல்கலைக்கழகங்களின் புதிதாக உருவாகி வளர்ந்து வருகின்ற நாட்டார் வழக்காற்றியல், மானிடவியல், தொல்லியல், மொழியியல் போன்ற துறைகளில் இந்த நோய் இன்னும் முற்றி விடவில்லை என்பது சற்றே ஆறுதலாக இருக்கிறது.
இந்த துறைகளில்தான் ஏதேனும் செயல்பாடுகள் நடைபெறுவது போல தோன்றுகின்றது. இந்து மத அடிப்படைவாதம் என்னும் கறையானால் நமது நாட்டின் வரலாறு கொஞ்சம் கொஞ்சமாக அரிக்கப்பட்டு வருகின்ற புதிய பாசிசச் சூழலில் இத்துறைகளில் உள்ள உண்மையான ஆய்வாளர்களின் முன்னால் புதிய சவால்கள் உருப்பெற்று வருகின்றன. அவற்றை விரிவும் ஆழமும் மிக்க ஆய்வுப்புலச் செயல்பாடு செயல்பாடுகளின் மூலம்தான் முறியடிக்க முடியும்.
கேள்வி : உங்களுடைய படைப்புகள் குறித்து உங்கள் மதிப்பீடு என்ன? அது உங்களுக்கு திருப்தி அளிக்கிறதா ?
பதில்: நான் முழுமையான மனிதனாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஒரு கம்யூனிஸ்டாக வாழ விரும்புகிறேன். கருத்தியல்ரீதியான தேவைகளை நிறைவு செய்வது இவ்வாறு வாழ்வதற்கான அடித்தளங்களில் ஒன்று என்று கருதுகிறேன்.
ஆகவேதான் எழுதுவதிலும் மொழிபெயர்ப்பதிலும் நான் ஈடுபட்டு வருகிறேன். நான் ஒரு அரசியல் செயல்பாட்டாளன், நான் விரும்பும், மதிக்கும் அரசியலை, அழகியலை, இலட்சியத்தை முன்வைக்கும் படைப்புகளை மட்டுமே மொழிபெயர்க்கிறேன்.
என்னை ஈர்க்காத படைப்பாக இருப்பின், பிறர் கேட்கிறார்கள் என்பதற்காக அவற்றை நான் மொழிபெயர்ப்பது இல்லை. அதே நேரத்தில், இதுவரை நான் மொழிபெயர்த்த நூல்களோடு நிறைவு காணவும் எனக்கு விருப்பமில்லை. இன்னும் செய்ய வேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளன.
ஏராளமான வாசகர்கள் எனது மொழிபெயர்ப்பு நூல்களை மிகவும் நேசிக்கிறார்கள். எப்போதோ நான் மொழிபெயர்த்த நாவல்களையும், சிறுகதைகளையும், வாழ்க்கை வரலாறுகளையும் படித்துவிட்டு, தொலைபேசியில் என்னை அழைத்து, தன் கருத்தைத் தெரிவிக்கும் வாசகர்களை இன்றும் கூட நான் எதிரிடுகிறேன்.
யுவான் மூல்ஃபோ எழுதிய "பெட்ரோ பராமோ" என்னும் நாவலை 20 ஆண்டுகளுக்கு முன்பு நான் மொழிபெயர்த்து இருந்தேன். அப்போது வெளியான இந்த நாவலின் மறுபதிப்பு இன்னும் வெளியாகாத இன்றைய நிலையில், மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரி மாணவர்களும், மதுரைக் கல்லூரி மாணவர்களும் இந்த நாவலை ஜெராக்ஸ் செய்து படித்ததாகக் கேள்விப்பட்டேன்.
இதேபோன்று, சில ஆண்டுகளுக்கு முன்பு, தோழர் சா. தேவதாஸ் ஏற்பாடு செய்திருந்த ஒரு இலக்கியக் கூட்டம் ராஜபாளையத்தில் நடைபெற்றபோது, சில நண்பர்களை அங்கே சந்தித்தேன். அவர்கள் இந்த நாவலை நகலெடுத்து படித்திருந்தார்கள். திருச்சி சட்டக்கல்லூரி பொருளாதாரப் பேராசிரியராக பணிபுரிகின்ற பணிபுரிகின்ற எஸ்.பாலச்சந்திரன் என்னும் தோழர், அமில்கர் கப்ரால் எழுதிய "வேர்களை நோக்கி" "தத்துவம் என்னும் ஆயுதம்" ஆகிய நூல்களில் இருந்து பல பகுதிகளை - அந்நூல்கள் வெளியிடப்பட்டு 18 அல்லது 19 ஆண்டுகள் கடந்த நிலையில் அப்படியே மனப்பாடமாக ஒப்பிப்பதைக் கண்டு வியந்து போயிருக்கிறேன்.
இந்நூல்களை வகுப்புகளில் மேற்கோள் காட்டுவதாகவும், தான் சிறந்த முறையில் பணிபுரிவதற்கு இந்த நூல்கள் தனக்கு மிகுந்த உத்வேகத்தை அளித்ததாகவும் இவர் கூறினார். விருதுகளையும், பரிசுகளையும் விட இப்படிப்பட்ட எதிர்வினைகளைத்தான் நான் முக்கியமானதாக கருதுகிறேன்.
ஒடுக்கப்பட்ட மக்களின் போர்க்குணம் மிக்க குரல்களை வெளிப்படுத்துகின்ற படைப்புகளை, மனித வாழ்க்கையை மேம்படுத்த உதவும் படைப்புகளை மட்டுமே நான் மொழிபெயர்த்து வெளியிட்டு வந்திருக்கிறேன். எனக்கு ஏதேனும் மனநிறைவு ஏற்படுகிறது என்றால், இக்காரணங்களுக்காகத்தான் ஏற்பட வேண்டும்.
கேள்வி: நீங்கள் எழுதிய கட்டுரைகள் பற்றி சொல்லுங்கள்?
பதில்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஜனசக்தியில் 1992 - 93 வாக்கில் நிறைய கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். அப்போது 'ஜனசக்தி'க்கு தோழர் எம் ஏ பழனியப்பன் அவர்கள் பொறுப்பாசிரியராக இருந்தார்.
பேராசிரியர் நான் வானமாமலையின் மறைவுக்குப் பிறகு அவரது மாணவர்கள் நடத்தி வந்த "நாவாவின் ஆராய்ச்சி" என்ற செய்தி என்ற பெயரில் நடத்தி வந்த பத்திரிக்கையில் "பெர்ட்டோல்ட் ப்ரெக்ட்டின் நாடகக் கோட்பாடுகள்" என்னும் எனது ஆய்வுக் கட்டுரை 1889 இல் முதன் முதலில் வெளியாயிற்று. அந்த ஆண்டுகளில் நிறைய கட்டுரைகளை நான் எழுதிய போதிலும் அவற்றை நான் தொகுத்து வைக்காததால் புத்தகங்களாக வெளியிட முடியவில்லை.
பின்னர் விடியல் பதிப்பகத்தில் வெளியான ஏராளமான நூல்களுக்கு நான் முன்னுரைகளையும், பின்னுரைகளையும், அணிந்துரைகளையும் எழுதியிருக்கிறேன்.
இவை உட்பட, கிடைக்கின்ற கட்டுரைகளையெல்லாம் தொகுத்து வெளியிடுவதற்கான முயற்சிகளை அன்புக்குரிய தோழர் எஸ்.கே. கங்கா அவர்கள் மேற்கொண்டு வருகிறார்.அவ் வேலைகள் நிறைவடையும் பட்சத்தில் எனது கட்டுரைத் தொகுப்பு ஒரு தொகுதியாக வெளி வரக்கூடும்.
நேர்காணல்: பீட்டர் துரைராஜ்