தொடக்கப் பள்ளிக் காலத்தில் இருந்தே பாடப்புத்தகங்களிலும் எங்கள் சிற்றூரின் நூலகத்திலும் காணக் கிடைத்த தின; வார; மாதப் பத்திரிகைகளில் வந்த பல்வேறு விதமான ஒவியர்கள் வரைந்த பல்வேறு வகையான ஒவியங்கள் வழியாகத்தான் எனக்கு "ஒவியம்" அறிமுகமானது.

ஒரு பத்திரிகையில் கவிதை; சிறுகதை; நாவல்; நகைச்சுவை; கட்டுரை; ஆன்மீகம் ; அரசியல்; பொதுஅறிவு; கதைகள் எனப் பற்பல துறைகள் சார்ந்தவை வரும்போது ஒவியம் மட்டும் என்னை ஈர்த்தது எப்படி?

aadhimoolam"ஐந்தாம் வயதிலிருந்து எனக்கு ஏன் ஒவியம் பிடித்திருந்தது?" என நான் பணி ஓய்வு பெற்ற இந்த அறுபதாம் அகவையில் சிந்திக்கும் போது... மிகத் தெளிவான பதில் கிடைக்கவில்லை. எனினும், மேற்குறிப்பிட்ட கவிதை தொடங்கி கலைகள் வரை அனைத்திற்கும் சிறப்பு செய்யும் விதமாகக் கருப்புக் கோடுகளால் வரையப்பட்ட ஓர் ஒவியம் உறுதியாக இடம்பெற்றிருக்கும்.

அப்படி இடம் பெற்றதாலேயே பிடித்ததா? என்ற கேள்வி எழும்.

இந்தக் கட்டுரையை இப்படிச் சிக்கலான முறையில் நான் தொடங்கி இருக்கக் கூடாதோ?

பகவான் அனுக்கிரகம்,
பிறவிப்பேறு,
பூர்வஜென்மத் தொடர்பு,
பிரம்மனின் எழுத்து
போன்ற எளிய ; விளக்கத் தேவையில்லாத உலக அளவில் (ஜூனா சபை வரை ஏற்றுக் கொள்ளப்படும் காரணங்களைக் கூறாமல் ஆழ்ந்து சிந்தித்தது தவறா!

இப்படிப் பார்ப்போம்...

குழந்தைகளுக்குப் படம் பிடிக்கும்தானே? அந்த வகையில் (நீங்கள் நம்பவில்லை எனினும்) நானும் குழந்தையாய் இருந்து வந்தவன்தானே? ஆகவே, படம், படங்கள் பிடித்திருந்தன.

எல்லாப் படங்களையும் தொடர்ந்து பார்த்து வந்தேன். அப்படிப் பார்த்து வந்த படங்களில் சிலரின் படங்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அப்படி எனக்குப் பிடித்திருந்த படங்களாக இருந்தவை படங்கள் அல்ல; அவைகள்தான் ஒவியங்கள் என்ற பார்வைத் தெளிவு ஏற்பட்டது.

பிறகு ஒவியங்களைத் தொடர்ந்து பார்த்துப் பார்த்துச் சுவைக்கச் சுவைக்க அதன் நுட்பங்களை அறிய, அறிய பல ஒவியங்களில் இருந்து சில ஒவியங்களை அற்புதமானவை என்ற முடிவுக்கு வந்தேன். அந்த அற்புதமான சில ஒவியங்கள் ஒவியங்கள் அல்ல அவை தான் படைப்புகள் என்ற புரிதல் கொண்டேன்.

இப்படிப் படத்தில் இருந்து படைப்பு வரை கண்டு, உணர்ந்து, தெளிவு கொள்ள எனக்கும் என் கண்கள் வழி பார்வையும், பார்வை வழிப் புரிதலும் உணர்வும் என் அறிவுக்கு எட்ட 55 ஆண்டுகள் ஆகியிருக்கிறது.

இந்த நிலையில்தான் எனக்கு ஒரு தெளிவு ஏற்படுகிறது. 1965 இல் பிறந்த நான் இந்தத் தெளிவின் வழியாக என்னை 1983 இல் 12 ஆம் வகுப்பு முடிக்கும் வரை தொடர்ந்து ஒவியங்களைப் பார்ப்பவனாகவும்; காதலிப்பவனாகவும்; அதன் வரை முறையில் துய்ப்பவனாகவும்; ஒவ்வொரு ஒவியனின் வரை முறையையும் (Style) தொழிந்தவனாகவும் கண்கள் வழியாக அறிவின் பெட்டியில் சேர்த்து வைத்திருந்தேன்.

அறியாமலேயே ஒவியம் என்ற ஒரு மொழியைக் கற்றிருக்கிறேன் என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன்.

உலக மொழிகள் அனைத்திற்கும் தாய் மொழியான ஒவியம் என்ற ஒரு மொழியைக் கற்றிருக்கிறோம் என இந்தத் தருணத்தில் புரிந்து கொண்டேன்.

இதற்கு உலக அளவில் வேறு எந்த மொழியைப் பேசுபவரும் எதிர்ப்புத் தெரிவிக்கவும் உயர் நீதிமன்ற, உச்சநீதிமன்ற, ஐநா சபை போன்ற அமைப்புகளை அணுகி அவை இக்கருத்துக்காக மன்னிப்புக் கேட்கும்படி என்னை வற்புறுத்தாது எனவும், எனது படத்தைப் பிற இடங்களில் காட்சிப்படுத்தத் தடையும் விதிக்காது எனவும் நம்புகிறேன்.

1983 இல் 12 ஆம் வகுப்பு முடிக்கும் வரை தொடர்ந்து ஒவியங்களைப் பார்ப்பவனாகவும்; காதலிப்பவனாகவும்; அதன் வரைமுறையில் துய்ப்பவனாகவும்; ஒவ்வொரு ஒவியனின் வரைமுறையையும் (Style) தொழிந்தவனாகவும் கண்கள் வழியாக அறிவின் பெட்டியில் சேர்த்து வைத்திருந்தேன்.

தொடர்ந்து கலந்து கொள்பவனாகவும், சில நேரங்களில் பரிசு பெறாமலும் பல நேரங்களில் பரிசு பெறுபவனாகவும் இருந்திருக்கிறேன்.

பன்னிரண்டாம் வகுப்பிற்குப் பிறகு சிவகிரி ஒவிய ஆசிரியர் திரு.நா.ஜனார்த்தனன் அவர்களின் வழிகாட்டலில் Freehand ஒவியத் தேர்வு எழுதித் தேர்ச்சி பெற்றேன். பிறகு, மதுரை தே.கல்லுப்பட்டியில் 1986 மே மாதம் தொடங்கி மூன்று மாதங்கள் ஒவிய ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்து தேர்ச்சி பெற்றேன்.

1987 ஜூன் மாதம் ஒவிய ஆசிரியராக ஈரோட்டுப் பள்ளியில் சேர்ந்தேன்.

ஒரு முழுமையான ஒவிய ஆசிரியர் என்பவர் இத்தோடு தனது ஒவியப் பணியை மூட்டை கட்டி (சிறிதும் காத்துக் கருப்பு அண்டாமல் இறுக்கிக் கட்டி) ஒரு ஓரமாக வைத்துவிட்டு தனக்கு ஒதுக்கப்பட்ட ஒவியப் பிரிவு வேளைகளைப் பிற ஆசிரியர்களுக்கு இழந்து விட்டு, அலுவலகத்தில் உட்கார்ந்து, முன்னால் உட்கார்ந்து வந்து, மாணவர்கள் கேட்டால் மட்டும் ஒவியத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டும் அந்தக் காலத்தில் ஆசிரியர் ஒவியப் பிரிவு / ஒவியர்களின் செயல்களைப் பார்த்துப் படிப்படியாக உள்ளே வந்து உட்கார்ந்து ஒவியம் வரைந்து கொண்டிருப்பர்.

இருப்பினும், நான் அந்த வழியில் ஒவிய ஆசிரியராக சேர்ந்த போது என் அறியாமையை உணர்ந்தேன். ஆனால், நான் விரும்பிய இந்த வாழ்க்கையில் நான் மட்டும் உள்ளே வந்து உட்கார்ந்திருந்தால் எனக்கு எந்தப் பயனும் இல்லை. நான் என்ற மனது மிகவும் பணிவானது; எளியது. அதனால் எனக்கு எந்த விதமான மனத்தடையும் இல்லாமல் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற உந்துதல் இருந்தது.

ஆனால், எனக்கு முன்னே வந்து உட்கார்ந்திருந்தவர்களின் செயல்பாடு அவ்வளவு திருப்திகரமாக இல்லை. எளிய கருவிகளைக் கொண்டு நான் எவ்வாறு ஒவியம் வரையலாம் என்று தயக்கத்துடன் இருந்தேன். அவர்கள் மேற்கொண்ட கருப்பு வெள்ளை, உள்ளரங்க, செயற்கை ஒவியங்கள், நீர்க்காட்சிகள், வாழ்க்கை வரலாற்று நிகழ்வுகள், வெண்மை ஒவியங்கள், நூல் ஒவிய மேதைகளின் கட்டுரைகள் போன்றவற்றை கவனித்து ரசித்தேன்.

மேலும் நிறைய சுதந்திரமான காலங்களில், ஒவியம் வரைவதற்கான முயற்சிகளை மேற்கொண்டேன். இயற்கை ஒவியத்தின் பல்வேறு வடிவங்களை ஆராய்ந்தேன்.

1983 இல் தொடங்கிய எனது பயணம் விளம்பரப் பலகைகள், தட்டிகள், எழுதும் ஒவியனாகத்தான் பயணித்தேன்.

ஒவியம் வரைய மிகச் சாதாரண வெள்ளைச் சார்ட்; ஆர்ட் பேப்பர்: பென்சில், ரப்பர், கிரவுன்குயில், 2 இந்தியன் இங்க், சார்கோல் பென்சில்: 2 ஒரு கெட்டி அட்டை (இவற்றையும் 35 கிலோமீட்டர் தள்ளி உள்ள ஈரோட்டில் மட்டுமே வாங்க இயலும்) எனப் பத்தே பத்துப் பொருட்கள் மட்டுமே கொண்டிருந்த எளிய ஒவியனாக இருந்த எனக்குப் பத்திரிகைகள் காட்டிய ஒவிய உலகு வேறு; கண்காட்சிகளின் வழியாக நான் கண்டடைந்த ஒவிய உலகம் வேறு; இயல்பு வாழ்வில் நான் எதிர்கொண்ட ஒவிய உலகம் வேறு.

பத்திரிகையில் ஓர் ஒவியர் எழுத்தாளரின் படைப்புக்கு அழகு சேர்ப்பவராக இருந்தார். அதாவது எழுத்தாளரின் கதைக்கு உண்டான கதைக் களத்தைக் காட்சிப்படுத்துபவராக (illustrator) இருந்தார். கண்காட்சிகளில் தன் படைப்புகளைக் காட்சிப்படுத்திய ஒவியரோ தன் மனம் கவர்ந்த ஒன்றையோ, தன் மனதில் இருந்த ஒன்றையோ வரைந்து காட்சிப்படுத்தும் சுதந்திரம் கொண்டவராகவும், சுய படைப்பாளியாகவும் இருந்தார்.

இயல்பு வாழ்வில் நான் கண்ட... விளம்பரப் பலகைகள்; தட்டிகள்; பேனர்கள்; கட்டடங்கள் வரையும் ஒவியர்கள் - தன் ஒவியத் திறனால் மற்றவரின் தேவையை நிறைவு செய்யும் அதே வேளையில், தங்களுக்கான வருமானத்தை ஈட்டித் தங்கள் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் திறன் பெற்றவர்களாக இருந்தார்கள்.

1983 இல் தொடங்கிய எனது பயணம் விளம்பரப் பலகைகள், தட்டிகள், எழுதும் ஒவியனாகத்தான் பயணித்தேன்.

1987 இல் எனக்கு நிலையான வேலை வாய்ப்புக் கிடைக்கும் வரை அதைக் கெட்டியாகப் பற்றிக் கொண்டிருந்தேன்.

வருவாய் உறுதியான பிறகு நான் ஒவியத்தின் பின்னால் சுதந்திரமாகச் சுற்ற ஆரம்பித்தேன். அந்தக் காலகட்டங்களில் ஆனந்த விகடன், ஜூனியர் விகடன், விகடன் போஸ்ட், குங்குமம், பாவை சந்திரனை ஆசிரியராகக் கொண்ட புதியபார்வை, குழுதம், தீராநதி, குழுதம் ஸ்பெஷல், கணையாழி, தினமணி, தினமணி கதிர், காலச்சுவடு போன்ற பத்திரிகைகளிலும் இதழ்களிலும் வந்த ஒவியங்கள், ஒவியம் சார்ந்த கட்டுரைகளைத் தேடித் தேடிப் படிக்கும் பழக்கத்தை வழக்கமாகக் கொண்டிருந்தேன் (சிலவற்றைக் காசு கொடுத்து வாங்கும் செல்வாக்கும் பெற்றிருந்தேன்.) இந்த நிலையில் ...

1989-இல் ஆனந்த விகடனில் கி.ராஜநாராயணன் எழுதிய கோபல்லபுரத்து மக்கள் என்ற 34 வாரங்கள் வந்த தொடர் என்னைப் புரட்டிப் போட்டது.

அந்தக் கதையும் அந்தக் கதைக்கு ஒவியர். ஆதிமூலம் வரைந்த ஒவியங்களும் என்னுள் பேரதிர்ச்சியை ஏற்படுத்தின.

ஒவியம் என்பது மிகப்பெரிய கித்தான்களில் ஆயில்; அக்ரலிக் வண்ணங்களைக் கொண்டு வரையப்படுவையே எனவும், அவ்வாறு வரையப்படுவையே மதிப்பு மிக்கதாகக் கொண்டாடப்படும் தகுதி பெற்றவை எனவும் நான் வரிந்து வரைந்து வைத்திருந்த பிம்பத்தைத் தவிடு பொடியாக்கியது அந்த ஒவியங்கள்.

மேலும், ஒரே பத்திரிகையில் (இதழ்களில்) பிற பக்கங்களில் வந்த கதைகளுக்கு வரையப்பட்ட ஒவியத்தில் இருந்த மனிதர்களிடமிருந்து இவர் வரைந்த மனிதர்கள் வேறுபட்டு இருந்தார்கள்.

ஒளிப்படம் போன்று வரையப்பட்ட கதை மாந்தர்களிடமிருந்து இவர் வரைந்த மனிதர்களின் ஒவியங்கள் முற்றிலும் வேறுபட்டு இருந்தன.

கிராமப்புறப் பெண்களும், ஆண்களும், அவர்கள் அணிந்திருந்த அணிகலன்களும், ஆடைகளும், அவர்கள் வாழ்வோடு இணைந்த பொருட்களும், காளைகளும், எருமைகளும் மிக மிக எளிய துண்டுக் கோடுகளில் உயிர் பெற்று எழுந்தன.

அதுவரை நான் கணக்கிலே எடுத்துக் கொள்ளாமல் புறக்கணித்திருந்த இவர்களைப் போன்ற எளிய மனிதர்களிடம் பொதிந்திருந்த அழகை இவர்கள் வெளிக் கொண்டு வந்து (சம்பட்டி அடியாக நடுமண்டையில் போட்டு) விளக்கிக் காட்டினார்.

இதற்கு முன்பு, ஆதிமூலத்தின் எண்ணெய் வண்ண (Oil Colour -Abstract painting) அரும்ப வகை ஒவியங்களை மட்டுமே பார்த்திருந்த எனக்கு இவரின் கோட்டோவியங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. ஆகவே, அவரின் கோட்டோவியங்களைத் தேடித் தேடிப் பார்க்க முற்பட்டேன். அக்காலகட்டத்தில் ஆதிமூலம் பல எழுத்தாளர்களின் நூல்களுக்கு அட்டைப்பட ஒவியங்கள் வரைந்து தந்துள்ளார். அவையும் சிறந்த படைப்புகளே. அவ்வாறு நான் தேடித்தேடிப் பார்த்து உணர்ந்த ஆதிமூலத்தின் ஒவியங்கள் எனக்குள் ஏற்படுத்திய தாக்கங்கள் பற்றி...

அவரது துண்டு துண்டான சிறிய கோடுகளின் வழியாக அவர் உருவாக்கிய ஒவியங்கள் எனக்குள் பரவசத்தை ஏற்படுத்தின.

நான் ஒவியம் வரைவதற்காக அழகான சிலைகள் கொண்ட புகழ்பெற்ற கோயில்கள்; அதன் சிற்பக்கூடங்கள் எனத் தேடி மதுரை, கொடுமுடி, கரூர், பேருர் எனப் பயணித்த தருணத்தில்....

இவரோ ஒரு கிராமத்தின் சிதிலமடைந்த கோயிலின் மிகச்சிதிலமடைந்த அய்யனார்; அவரின் குதிரை; அய்யனாரைத் தெய்வமாக ஏற்றுக் கொண்ட எளிய மக்கள்; அந்த மக்கள் தங்கள் கோரிக்கையை நிறைவேற்றிய அய்யனாருக்குப் பரிசளித்த காளைகள்; மற்றும் சிறிய உருவங்கள் என இவற்றைத் தீட்டிக் கொண்டு காட்சிப்படுத்திக் கொண்டே இருந்தார்.

மாபெரும் இராஜராஜர்கள் உருவாக்கிய பெரும் ஆலயங்களில்... மன்னர்களின், கலை விற்பன்னர்களின் ஆதரவைப் பெற்ற சிற்பிகளால் செதுக்கப்பட்டுப் பெருங் கோயிற் சுவர்களை அலங்கரித்து நின்ற சிற்பங்களின் பேரழகு பலராலும் விதந்தோதப்பட்டு அதன் பெருமை ஆலயம் தாண்டிப் பொங்கி வழிந்து பிரவாகமெடுத்து என் வீட்டு வாசல் வரை வந்து நின்றது.

என் மனம் அத்தகைய சிறந்த சிற்பங்களையே வரைய ஆசைப்பட்டது. ஆனால், ஆதிமூலமோ அந்த ஆலயங்களில் இருந்து இடம் மறுக்கப்பட்ட; ஊரின் ஒதுக்குப்புறத்தில் இருந்த; மேன்மக்களால் கவனிக்கப்படாத இன்னும் சொல்லப்போனால் புறக்கணிக்கப்பட்ட எளிய மக்கள் கலைஞர்களால் தாம் வாழ்ந்த அந்த மண்ணையே பிசைந்து உருவாக்கப்பட்ட அய்யனார் சிலைகளிலும் மண் குதிரைகளிலும் காளைகளிலும் பொதிந்திருந்த பேரழகைத் தன் அழுத்தமான, அழகான, சிறு சிறு துண்டுக் கோடுகளின் நெருக்கத்திலும் இடைவெளிகளிலும் சில இடங்களில் ஆழ்ந்த கருப்பிடித்தை உருவாக்கிய முறையிலும் நம்மை அதன் அழகில் சொக்கிப்போகச் செய்தவர் ஆதிமூலம்.

ஆதிமூலம் உழைக்கும் மக்களின் வெளிப்பாடாக அமைந்த கலைகளில் பொதிந்துள்ள அழகைப் பேரரசர்களின் பெரும்படைப்புகளோடு ஒப்பிடும்போது இவற்றின் கலைத்தன்மை அதற்குச் சற்றும் குறைந்ததோ கீழானதோ அல்ல, ஒருபடி மேலானது என்பதை வார்த்தைகளில் சொல்லாமல், அதன் கம்பீரத்தையும் அழகியலையும் எளிய கருப்புக் கோடுகளின் வழியாக மௌனமாக மெய்ப்பித்துக் காட்டினார்.

இவரின் வழியாகத்தான் நான் டி.ஆர்.பி மூக்கையா; தட்சிணாமூர்த்தி; பெருமாள் போன்றவர்களின் எளிய படைப்புகளில் பொதிந்திருந்த பேரழகை உணர்ந்து கொள்பவனாக ஆனேன்.

ஒவியரும் நோபல் பரிசு பெற்ற கவிஞருமாகிய இரவீந்திரநாத் தாகூர் தன் கவிதைச் செயலில் இவ்வாறு சொல்லி இருப்பார்...

மலர்களின், கடல்களின், அழகைக் காண பெரிய அளவில் செலவு செய்து நெடுந்தொலைவு பயணம் செய்தேன்.

வீட்டிலிருந்து இரண்டு தூரத்தில் நெற்பயிரின் நுனிமீது தொங்கிக் கிடக்கும் பனித்துளியின் அழகைக் காணத் தவறி விட்டேன் - என. தன் கோட்டோவியத் தொடரின் வழியாக ஆதிமூலமும் இதைத்தான் சொல்லாமல் சொல்லி இருக்கிறார் என்று எண்ணத் தோன்றுகிறது.

கோபல்ல கிராமத்து மக்கள் தொடரில் அக்கிராமத்தின் மக்களின் உணர்வும் உழைப்பும் எளிமையும் வீரமும் அன்பும் ததும்பி வழிவதைக் குறைந்த கோடுகளின் வழியாகவே வரைந்து காட்டியிருப்பார்.

முன்னோர்களின் பயணத்தில் தாம் பார்த்த தெய்வங்களைக் கண்டு உள்வாங்கி மனதில் அலசி ஆராய்ந்து பின்னர் ஒவியமாகத் தீட்டினார்கள். அதன் தொடர்ச்சியான மரபாக, அந்தக் கண்ணியின் அறுபடாத தொடர்ச்சியாக ஆதிமூலம் இருக்கிறார் என்பதை அவர் வரைந்த நூற்றுக்கணக்கான கிராமியத் தெய்வங்களின் ஒவியங்கள் நமக்குக் காட்டுகின்றன.

எளிமையின் வலிமையை உலகுக்கு உணர்த்தியவர் காந்தி அடிகள். அந்தக் காந்தியையே மேலும் எளிமையாக்கி மறு உருவாக்கி நமக்குக் காட்சிப்படுத்தியவர் ஆதிமூலம். அவர் வரைந்த காந்தியின் தொடர் ஒவியங்கள் (நூறு ஒவியங்கள்) இந்தியா தாண்டி உலகெங்கிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.

துண்டுக் கோடுகள், சிறு கோடுகள் மூலம் கிராமத் தெய்வங்களை வரைந்த ஆதிமூலம் காந்தி தொடரில் அவற்றோடு கூட நீர்கோடுகள், மிக மிகக் குறைந்த அவசியமான சில கோடுகள் மூலம் மட்டுமே காந்தியை - அவரின் எளிமையை; அன்பு; சோகம்; புன்னகை மாறாமல் வரைந்திருப்பார்.

நான் வாழ்ந்த கிராமப்புற வறுமையின் சூழல் காரணமாக வெறும் கிரவுன்குயில் நிப்பும் இந்தியன் இங்க் மட்டுமே வைத்துக் கொண்டு ஒவியத்தில் என்ன சாதித்து விட இயலும்? என்று கவலையோடு இருந்த எனக்கு ஆதிமூலம் முதுகில் தட்டிக் கொடுத்து வரைய ஊக்குவித்தது போல் அமைந்தன இத்தகைய ஒவியங்கள்.

இதை அடுத்து ஆதிமூலம் வரைந்த மகாராஜா தொடர் ஒவியங்களில்... பல்வேறு விதமான ஆபரணங்கள், வைர வைடூரியங்கள் பதித்த தலைப்பாகைகள், விலை உயர்ந்த மேலாடைகள் அணிந்த மகாராஜாக்களின் கம்பீரமான தோற்றத்தையும் தன் எளிய துண்டுக் கோடுகளின் மூலம் மிக மிகச் சிறப்பாக வரைந்து இருப்பார்.

அதே ஒவியத் தொடரில் அதிகாரமற்ற செல்வம் இழந்த மகாராஜாக்களின் சோகத்தையும் பிழிந்து தந்திருப்பார்.

வாழ்க்கையின் நடுக்கத்தில் நிற்கும் பல்வேறு கட்டங்களில் இவ்வாறு எளிய கோடுகளால் வடிக்கப்பட்ட மகாராஜாக்களின் சோக வடிவங்கள் எனக்கு மிகப் பெரும் உணர்வைத் தந்தன. அதே போன்று சோக நிகழ்வுகளை எளிய கோடுகளால் வரைந்து காட்டி, அவற்றின் உள்ளடக்கத்தை நான் உணர்ந்து கொள்ள முடிந்தது. அதுபோல, இந்த எளிய கோடுகளின் வெளிப்பாடு மிக அற்புதமானது.

மகாராஜாக்களின் சோக வடிவங்கள் ஒருபுறம் இருந்தாலும், அவரின் மனிதப் பங்களிப்பு மூலம் மகாராஜாக்களின் உணர்வுகளை இன்னும் ஆழமாக வெளிப்படுத்தியுள்ளார். அவர் வரைந்த மகாராஜாக்களின் தொடர் ஒவியங்கள் அவற்றின் தனித்துவமான பாணியில் மிகவும் பிரபலமானவை. அந்த ஒவியங்களைப் பார்த்த பல பிரபலங்களும் கலைஞர்களும் அதைப் பாராட்டி உள்ளனர். அவருடைய இந்த வரைபடங்கள் கலை உலகில் ஒரு முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளன.

மகாராஜாக்களின் சோகத்தை வரைந்த ஆதிமூலம், அவர்களின் வாழ்க்கை நிகழ்வுகளையும், இழப்புகளையும், அவர்களின் மனநிலையையும் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். இந்த ஒவியங்கள் அவரின் மனிதநேயத்தைப் பறைசாற்றுகின்றன.

ஆதிமூலம் அவர்கள் 1998 ஆம் ஆண்டு காலமானார். ஆனால், அவரது ஒவியங்கள் இன்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அவரது கோடுகள், அவரது பார்வை, அவரது கலை உணர்வு ஆகியவை இன்றைய இளம் ஒவியர்களுக்கு வழிகாட்டியாக உள்ளன.

நானும் ஒரு ஒவியனாக, ஆதிமூலம் அவர்களின் பாதையில் செல்லும் ஒரு சிறு முயற்சியாளன். அவரைப் போன்று எளிமையை, மக்களின் வாழ்வை, இயற்கையின் அழகை எளிய கோடுகளில் வெளிப்படுத்த முடியாவிட்டாலும், அவரது ஒவியங்கள் எனக்கு ஒரு பாடமாகவும், வழிகாட்டியாகவும் இருந்து வருகின்றன.

ஒவிய உலகில் மாபெரும் மாற்றங்களைத் தன் கோடுகள் வழியாகச் செய்த ஆதிமூலம் அவர்கள் தன் வலக்கரத்தைக் கூப்பி என்னைப் பாராட்டினார் என்பது எனக்கு வாழ்நாள் பெருமை.

மு.சுந்தரன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.