பொள்ளாச்சி நகரின் நட்ட நடுத்தெரிவில், கட்டிளங்காளையாகத் திகழும் ஓர் இளைஞன் போலீசாரால் இழுத்து வரப்பட்டான். மார்பின் குறுக்கே தோள்பட்டையிலிருந்து இடுப்பு வரை வரிந்து கட்டப்பட்ட இரண்டு சங்கிலிகள். இறண்டு கால்களிலும் வளையம் போடப்பட்டு, அதிலிருந்து கட்டப்பட்ட இரண்டு நீளமான சங்கிலிகள். கைகள் இறண்டிலும் மணிக்கட்டுப் பகுதிகளில் வளையம் போடப்பட்டு அதில் மாட்டப்பட்ட இரண்டு சங்கிலிகள். அனைத்துச் சங்கிலிகளின் மறுமுனைகளை காவல் துறையினர் கையில் பிடித்துக் கொண்டு வந்தனர். முழுக்க சங்கிலியால் கட்டப்பட்ட அந்த இளைஞன், எவ்வளவு முயன்றாலும் தப்பி ஓடிவிட முடியாது. சாலையில் இறுபுறமும் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக நின்றுகொண்டு இக்காட்சியைப் பரிதாபத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

இந்தக் காட்சியை உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருந்த பள்ளி மாணவனொருவன், இவர் யார்?” என்று அருகிலிருந்தவரிடம் கேட்டான். “பகத்சிங் எழுதிய ‘நான் நாத்திகன் ஏன்?’ என்ற நூலை தமிழில் மொழிபெயர்த்த குற்றத்திற்காக ஆங்கிலேய அரசு இவரை இவ்வாறு கொடுமைப்படுத்துகிறது” என்றனர் கூட்டத்திலிருந்தவர்கள். அந்தப் பொள்ளாச்சி மாணவன் வேறு யாறுமல்ல. பிற்காலத்தில் பொதுவுடைமை இயக்கத்தின் புகழ்மிக்க தலைவராகத் திகழ்ந்த கே.பாலதண்டாயுதம்தான். அதற்கு முன்பு ஜீவாவை பாலன் பார்த்ததில்லை. முதன் முதலில் பார்த்த இந்தக் காட்சிதான் பாலனின் இறுதிமூச்சு வரை அவரது நெஞ்சில் கல்வெட்டாய்ப் பதிந்திருந்தது.

பகத்சிங் தூக்கிலிடப்பட்ட காலமது. நாட்டில் இளைஞர்கள் கொந்தளிக்கும் நெருப்பாக உணர்ச்சிப் பிழம்பாக உலவிக்கொண்டிருந்த நேரமது. பகத்சிங்கின் ‘நான் நாத்திகன் ஏன்?’ என்ற நூலை தமிழில் மொழிபெயர்த்த ஒரே காரணத்திற்காக, ஜீவாவுக்கு ஆறுமாதகால சிறைத்தண்டனை. அச்சிட்டு வெளியிட்டதற்கு பெரியாரின் அண்ணன் ஈ.வெ.கிருஷ்ணசாமிக்கும் அதேபோன்று ஆறுமாத சிறை. அக்காலத்திலேயே பெரியாரின் பெருங்கொடையாக அந்த நூல் விளங்கியது. ஜீவாவை சங்கிலி பூட்டி ஒரு கிளைச் சிறையிலிருந்து இன்னொரு கிளைச் சிறைக்கு இந்தக் கோலத்தில் இழுத்துச் செல்லக் காரணமிருந்தது. விடுதலை வீரர்களை அவமானப்படுத்தி மக்கள் மத்தியில் பீதியை உண்டாக்கினால் புதிய விடுதலை வீரர்கள் முகிழ்த்து வருவதற்கு முட்டுக்கட்டை போட முடியும் என்பதே அது! நடந்தது வேறு!

இந்தக் காட்சியைப் பார்த்த பாலன், “ஆவேசம் எங்களுக்குப் பீறிட்டது. அன்றே என் போன்றோர் பலர் புரட்சிப் பணிக்கென எங்களை அர்பணித்துக் கொண்டோம். காந்தியத்திலிருந்த நாங்கள் நேராக சோசலிசத்திற்குத் தாவினோம்” என்று எழுதினார். திண்டிவனத்தில் நடைபெற்ற காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி மாநாட்டில் சிங்கமென கர்ஜித்தார் ஜீவா. அம்மாநாட்டில் பங்கேற்ற அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் அவரை பல்கலைக் கழகத்தில் பேச அழைத்தனர். அது பெரும் தேசபக்தக் கனலை மூட்டிய பேருரையாகத் திகழ்ந்தது!

அச்சமயத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் துடிப்புமிக்க மாணவராக விளங்கிய பாலதண்டாயுதம் இந்த உரை குறித்து, “உற்சாகம் கரைபுரண்டு ஓடிற்று. மாணவர் விடுதி முழுவதும் திரும்பிய பக்கமெல்லாம் அரசியல் கோஷங்கள் பொறிக்கப்பட்டன. மாணவர்கள் ஒருவரை ஒருவர் விளிக்கும் முறையிலேயே மாற்றம் பிறந்தது.! மிஸ்டர் காம்ரேட் ஆனார் என்று தனது நினைவுக் குறிப்பில் எழுதினார். சிதம்பரத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவராக இருந்த போதே தனது சொந்த ஊரான பொள்ளாச்சியில் ஓரு இளைஞர் அமைப்பைத் தொடங்கி அங்கும் ஜீவாவை அழைத்து உரை நிகழ்த்த வைத்தார் பாலன். உரையாற்றியதுடன் பாலன் தொடங்கிய அந்த இளைஞர் அமைப்பிற்கு ஜீவா புதுநெறி காட்டினார்! புரட்சிகர உணர்வூட்டினார்!

சிலகாலத்திற்குப் பிறகு திருமணமான நிலையில் திருச்சியிலிருந்தார் பாலன். காட்சியின் முழுநேர ஊழியராகப் பணியாற்ற பாலனை சென்னைக்கு அழைத்துச் செல்ல ஜீவா திருச்சியிலிருந்த பாலனின் இல்லத்திற்குச் சென்றார். ஜீவாவின் அழைப்பையேற்று பாலனும் சென்னை விரைந்தார். ஜீவாவைப் பற்றி பாலன் குறிப்பிடுகையில், “ஜீவா புரட்சிப் பணியிலும் சரி, பிரசங்க மேடையிலும் சரி திருமணப் பந்தலிலும் வாலிபர்களை வசீகரித்தார். ஒரு புதிய தலைமுறையை உருவாக்கினார். சிறுகச் சிறுக என்னை சிறந்த கம்யூனிஸ்ட் ஆக்கினார். என்னைப் போன்று என் தலைமுறையே சொல்லும் அவரைப் பற்றி” என்கிறார். ‘ஜீவாவால் உருவாக்கப்பட்டவன்’ என்று தன்னை அடக்கத்துடன் அறிமுகப்படுத்திக் கொண்டாலும், பிற்காலத்தில் தியாகத்திலும், திறமையிலும் ஜீவாவைப் போல் மதிக்கப்பட்ட மாபெரும் தலைவராகப் பரிணமித்தவர் கே. பாலதண்டாயுதம்.

நன்றி :  கே. பாலதண்டாயுதம்.

 

Pin It