பெண்களின் பிரச்சினைகளைப் பேசுகின்ற கலையும், படைப்புகளும் குறைவாகவே உள்ளன. பெண்கள், தம் நிலையைப் பேசக்கூடிய சுயசரிதை நூல்கள் மிக அரிதாகவும் குறைவாகவுமே வெளிவந்துள்ளன. ஆணின் வரலாறே சமூகத்தின் வரலாறாகக் கொண்டாடப்படுகிறது. பெண்கள் அவர்களுடைய அனுபவங்களை வெளிப்படையாக எழுதினால், வெளிப்படுத்தினால், இந்தச் சமூகம் என்னவாகப் பார்க்கும், சமூகத்தின் எதிர்வினையை எதிர்கொள்ள முடியுமா என்கிற அச்சத்திலேயே பல பெண்களும் அவர்களுடைய அனுபவங்களை வெளிப்படுத்தத் தயங்குகின்றனர். ஓர் ஆண் எதை வேண்டுமானாலும் எழுதலாம், எழுத முடியும். எல்லா அசிங்கங்களைக் கூட எழுதிவிட முடியும். அதையும் இந்தச் சமூகம் அங்கீகரித்துப் பெரிய படைப்பாளியெனக் கொண்டாடும்.
கல்வி மற்றும் பொருளாதார நிலையில் ஏற்பட்ட முன்னேற்றத்தினால் குடும்பம் என்கிற நிறுவன அமைப்பில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. காலங்காலமாக கெட்டிதட்டிப் போயிருந்த குடும்ப அமைப்பில் ஏற்பட்டுள்ள தளர்வுகள், திருமண வாழ்வில் மணமுறிவுகள் அதிகமாவதற்கான ஒரு காரணமாய் அமைகின்றது. மணமுறிவினால், தனிப் பெற்றோர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் தனிப் பெற்றோர்களின் பிரச்சினைகளைக் களைவதற்கான உரையாடல்கள் தொடர்ச்சியாக நிகழ்த்தப்பட்டு வருகின்றன. இந்தியா போன்ற இறுகிப்போன குடும்ப அமைப்பு கொண்ட நாட்டில் தனிப் பெற்றோர்களின் பிரச்சினைகள் மீதான உரையாடல்கள் இன்னமும் தொடங்கப்படவில்லை என்பது வேதனைக்குரியதாகும்.
ஒற்றைப் பெற்றோராக ஆண் பெண் இருபாலரும் இருப்பினும் பெரும்பான்மை தனிப்பெற்றோர்களாகப் பெண்களே இருக்கின்றனர். தனிப்பெற்றோராய் இருக்கும் ஆணைவிடவும், தனித் தாய்மார்கள் சந்திக்கும் பிரச்சினைகள் கூடுதலானது. தனித் தாய்மார்கள், சமூகத்தால் ஊனமுற்றவர்களாக, பரிதாபத்திற்குரியவர்களாக, விளிம்பு நிலையில் வைத்துப் பார்க்கப்படுகின்றனர். இதில் சமூகக் கட்டமைப்பின் அழுத்தம் ஆண்களைவிடப் பெண்களுக்கே கூடுதலான சிக்கல்களை ஏற்படுத்துகிறது. இதுநாள் வரையிலும் பெண்கள் மீதான குடும்ப வன்முறை, பாலியல் வன்முறை குறித்தெல்லாம் பேசியும், எழுதியும், போராடியும் தீர்வு கண்டு வந்துள்ளதைப்போல, தனித் தாய்மார்களின் பிரச்சினைகள் குறித்தும் உரையாட வேண்டியது இன்றைய காலத்தின் அவசியத் தேவையாக உள்ளது. அவ்வாறான உரையாடலை இன்றைய சமூக அமைப்பின் மதிப்பீடுகளை உள்வாங்கிக்கொண்டு பண்பாட்டுத் தளப் புரிதலிலிருந்து நடத்த வேண்டும்.
இந்தத் தலைப்பை நான் தேர்ந்தெடுத்ததற்கான இரண்டு நியாயமான காரணங்கள் இருக்கின்றன.
(1) சொல்லப்படாத காயங்களை, மனவலிகளை, மௌனங்களைப் புதைத்துக் கொண்டு வாழும் தனித்தாய்மார்களின் குறியீடாக நான் இருக்கின்றேன்.
(2) என் தனியொருத்தியின் பிரச்சினை மட்டுமல்ல, என்னைப் போன்ற இலட்சக்கணக்கான பெண்களின் பிரச்சினை. தனி மனுஷியாகவும், சமூக மனுஷியாகவும் இந்தப் பிரச்சினைகளை எதிர்கொண்ட அனுபவத்திலிருந்து இதற்கான தீர்வுகள் சிலவற்றை முன்வைக்கின்றேன். இந்த உரையாடல் சமூகத்தில் ஒற்றைப் பெற்றோர் குறித்த பிரச்சினைகளுக்கான தீர்வுகளை முன்வைத்துச் சிறிதளவேனும் அவர்களைப் புரிந்துகொள்ள உதவுமென்று நம்புகிறேன்.
தனித்தாய்மார்கள் எதிர்கொள்ளும் பொருளாதாரச் சிக்கல்கள்:
கணவன் மனைவி என இருவருடைய வருமானத்தில் சமாளிக்க வேண்டிய குடும்பச்செலவுகளை ஒருவரே சுமக்க வேண்டிய நிலையில் அதிகப்படியான அழுத்தங்களை தனித் தாய்மார்கள் எதிர்கொள்கின்றனர். இதனால், தனித் தாய்மார்களின் உடல்நலமும் மனநலமும் பாதிப்படைகின்றது. சீரான தூக்கம் இல்லாமை, தன்னைப் பராமரிப்பதற்கான நேரத்தை ஒதுக்க இயலாமை, மனக்குழப்பம் போன்ற இடர்ப்பாடுகளைச் சந்திக்கின்றனர். தனித்தாயாக இருப்பதால் அவர், பணிக்குச் செல்லும் நேரம், பணி முடிந்து வீடு திரும்பும் நேரம், விடுமுறை நாட்கள் இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டும் தன்னுடைய வருமானத்திற்குட்பட்ட கல்விக் கட்டணம் செலுத்தக் கூடிய பள்ளி எது என்பதையெல்லாம் கருத்தில் கொண்டும்தான் முடிவுகளைத் தான் ஒருவரே எடுக்க வேண்டிய நிலை உள்ளது. இதுகுறித்து யாரிடமும் பேசுவதற்கோ, ஆலோசனைகள் பெறுவதற்கோ வாய்ப்பில்லாத நிலையில் தனித்தாய் உணர்வு நிலையில் பாதிப்படைகிறாள்.
ஆணாதிக்கச் சமூகத்தின் உடைமைப் பார்வையும் நுகர்வுப் பார்வையும்:
ஆணைக் குடும்பத் தலைவனாகக் கொண்டு, ஆணால் நிர்வகிக்கப்படும் குடும்பமே உயர்வானது, நிறைவானது; அதே சமயம் ஆணின் துணையில்லாமல் தனிப் பெற்றோராகப் பெண்களால் நிர்வகிக்கப்படும் குடும்பங்கள் ஒழுங்கில்லாதது, முழுமை பெறாதது என்பன போன்ற ஆணாதிக்க மதிப்பீடுகள் நிறைந்த சமுதாய அமைப்பில் தனித் தாய்மார்கள் இழிவாகவே பார்க்கப்படுகின்றனர். சமூகத்தின் விதிவிலக்குகளாகப் பார்க்கப்பட்டுப் புறக்கணிக்கப்படும் தனித்தாய்மார்கள் சமூகத்தால் அதீதக் கண்காணிப்புக்கு உள்ளாகின்றனர். எங்கு செல்கிறார்கள், யாருடன் பேசுகிறார்கள், எத்தனை மணிக்குத் திரும்புகிறார்கள், என்ன உடை உடுத்துகிறார்கள், அவர்கள் வீட்டிற்கு யார் யாரெல்லாம் வந்து போகிறார்கள் என ஒரு குற்றவாளியைப் போலீஸ்காரர் கண்காணிப்பதைப் போலச் சுற்றியுள்ளவர்களால் கண்காணிக்கப்படுகின்றனர். இந்தக் கண்காணிப்பினால் தனித்தாய்மார்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளாகின்றனர். கணவனைப் பிரிந்த பெண்கள் குடும்பத்து ஆண்களிடமும், சமூகத்திலும் பணி செய்யும் இடங்களிலும், ஆண் நண்பர்களிடமும், இயல்பாகப் பேசமுடியாத அச்சத்திலேயே வாழ்கின்றனர். வாழ்வின் இயல்பான நிகழ்வுகளைக் கூட இந்தச் சமூகம் நம்மைத் தவறாக நினைத்துவிடுமோ என்ற அச்சத்தில் மிகுந்த எச்சரிக்கையோடு கையாள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
தனித்தாய்மார்கள் நன்றாக உடை உடுத்துவதும், மனம் விட்டுச் சிரிப்பதும் கூட இயல்பாகப் பார்க்கப்படாமல் அப்பெண்களின் ஒழுக்க நிலை கேள்விக்குட்படுத்தப்படுகிறது. நல்ல உடை உடுத்தினால் “எப்படி மினுக்கிக் கொண்டு திரிகிறாள் பாருங்கள்" என்றும், சிரித்துப் பேசினால், "புருஷன் இல்லையென்னும் கவலை கொஞ்சமேனும் இருக்கிறதா பாரேன்" என்பன போன்ற வன்மம் படைத்த பேச்சுகளுக்கு அஞ்சி வாழ வேண்டிய சூழலே இன்றளவும் நிலவுகின்றது.
திருமண விழாக்களில், சுபநிகழ்வுகளில் மற்றும் நிகழ்த்தப்படும் சடங்குகளில் தனித்தாய்மார்கள், அபசகுனமாகக் கருதிப் புறக்கணிக்கப்படுகின்றனர். குடும்ப விழாக்களில் கணவரின் துணை இல்லாமல் தனியே செல்லும் பெண்களிடம், 'அவர் ஏன் வரவில்லை? எங்கு இருக்கிறார்?' எனத் தெரிந்தே கேட்கப்படும் வியாக்கியானங்களுக்கும், விசாரணைகளுக்கும் பதில் சொல்ல அஞ்சியே வீட்டை விட்டு வெளி நிகழ்வுகளுக்குச் செல்லாமலும், எந்த இடத்திலும் வெளிப்படுத்திக்கொள்ளாமலும், தன்னை மறைத்துக்கொண்டு வாழும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
தனித்தாய்மார்கள் பணிசெய்யும் இடங்களும், இவ்வகையான விசாரணைகளுக்கு விதிவிலக்கல்ல. தனித்தாய் நன்றாகப் படித்து உயர் பதவியில் இருக்கும்போதும் இதுபோன்ற விஷமத்தனமான கேள்விகள் அவளை நோக்கிக் கேட்கப்படுகின்றன. பணியிடத்தில் அறிவுநிலையில் அவர்களை எதிர்கொள்ள இயலாதபோது, தனித்தாயின் தனிப்பட்ட வாழ்க்கையைக் கேள்விக்குட்படுத்தி அவர்களைக் காயப்படுத்துவதன் மூலம் அவர்களை வெற்றிகொண்டதாக நினைக்கும் குரூர மனம் கொண்டவர்களே அதிகமாக இருக்கின்றனர். "மேடம், நீங்க தாலி போடவில்லையா? மெட்டி எங்கே? புருஷன் எங்கே?" என்ற விசாரிப்புகள் ஒரு புறமும், "நேற்று அவருகூட கல்யாணத்துக்குப் போயிட்டு வந்தேன். அவருகிட்ட கேட்டுத்தான் முடிவெடுக்கணும், அவர் எனக்குப் புடவை வாங்கிட்டு வந்தார்", எனத் தங்களின் கணவன்மார்களின் பெருமைகளைப் பேசுவது ஒரு புறமாகவும் இருக்கும். இப்பண்பாட்டுச் சூழல் தனித் தாய்மார்களை உணர்வு ரீதியாகக் காயப்படுத்துகிறது.
தனிப்பெற்றோர்களுக்கு வாடகை வீடு கிடைப்பது பெரும் போராட்டமாக இருக்கின்றது. இதுநாள் வரையிலும் சமூக ரீதியாகத் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள், திருநங்கைகள், சிறுபான்மையினர் போன்றோருக்கு வீடு தருவது மறுக்கப்படும் நிகழ்வுகள் பொதுவெளியில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் இவர்களைப்போலவே தனிப் பெற்றோர்களுக்கும் வீடு மறுக்கப்படும் அவலம் பலருக்குத் தெரிந்தும் அது ஒரு சிக்கலாகவே விவாதிக்கப்படுவதில்லை. வாடகை வீடு பார்ப்பதற்குத் தனியே ஒரு பெண் செல்லும்போது அவள் ஏளனமாகப் பார்க்கப்படுகின்றாள். வீட்டு உரிமையாளரிடமிருந்து “உங்கள் வீட்டுக்காரர் எங்கே? என்ன வேலை செய்கிறார்? அவரை அழைத்து வரவில்லையா?" என்பன போன்ற கேள்விகளை எதிர்கொள்கிறாள். இந்தக் கேள்விகளுக்குத் தனித்தாய் ஒரு பொய்யான பதிலைத் தயாராக எடுத்துச்செல்வாள். எந்தமாதிரியான கேள்வி கேட்டால் அதற்கு என்னென்ன பதில்களைச் சொல்ல வேண்டும் என அவளுக்கு அதற்கு முன்பு கிடைத்த அனுபவங்களிலிருந்து சில பதில்களைத் தயார் செய்து கொண்டு செல்வாள். அந்தப் பதில், கணவர் வெளியூரில் இருக்கின்றார் என்றோ, வெளிநாட்டில் பணிபுரிகிறார் என்பதாகவோ இருக்கும். அப்படியென்றால் எவ்வளவு நாட்களுக்கு ஒருமுறை வீட்டுக்கு வருவார் என்பதாக வீட்டு உரிமையாளரின் கேள்விகள் இருக்கும். இவ்வளவு கேள்விகள் கேட்டபிறகும் கணவன் இல்லாமல் தனியே இருப்பதால் வீடு கொடுக்க வீட்டின் உரிமையாளர் மறுத்து விடுவார். இதுபோன்ற அர்த்தமற்ற விசாரணைகளால், அந்தத் தனித்தாய் கூனிக் குறுகி ஏதோ பெரிய தவறு இழைத்தவரைப் போலச் சுயமரியாதை இழந்து குற்ற உணர்ச்சியுடன் நின்று கொண்டிருப்பார்.
இந்தப் பரந்த உலகில் திருடர்கள், போதைப்பொருள் கடத்துபவர்கள், ஏமாற்றுக்காரர்கள் இவர்களுக்கெல்லாம்கூட வாழ ஒரு வீடு எளிதாகக் கிடைத்துவிடுகிறது. ஆண் துணை இல்லாமல் ஒரு பெண் இந்த உலகில் வாழ்வதற்குத் தகுதியற்றவராகவே பார்க்கப்படுகிறார். பிறப்பின் அடிப்படையில் பார்க்கப்படும் தீண்டாமையை விடவும் இந்த நவீனத் தீண்டாமை பெண்களுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதியாகும். தனித் தாய்மார்களை ஊனமுற்றவர்களைப் போலப் பார்க்கும் சமுதாயம் அவர்களையும் சக மனிதர்களாகப் பாவிக்க வேண்டும். மாறாக, கணவருடன் வாழாமல் தனித்திருக்கும் தனித் தாய்மார்களைப் பாலியல் ரீதியாகப் பயன்படுத்திக்கொள்ள நினைப்பது, அவர்களின் அநாதரவான நிலையைப் பயன்படுத்தி அவர்களை ஏமாற்ற நினைப்பது என இன்னும் எத்தனை வதைகளை இந்தச் சமூகம் அவர்களுக்கு இழைக்கும்?
ஆணின் துணையில்லாமல் தனியே வாழும் பெண்களிடம் வீட்டு வேலைக்கு வரும் பிளம்பர்கள், மெக்கானிக் போன்றோரும் செய்யும் வேலைக்கு மேலாக அதிகப் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றுவது, விலை குறைந்த பொருட்களை அதிக விலை சொல்லிப் பணம் பறிப்பது போன்ற ஏமாற்றுகளும் நடக்கின்றன. ஏனென்றால், பெண்ணுக்குத்தான் இதைப்பற்றியெல்லாம் ஒன்றும் தெரியாதே! இவர்களை ஏமாற்றினால் யார் கேட்கப் போகிறார்கள் என்னும் மலிவான எண்ணம்தான் இத்தகைய செயல்களுக்குக் காரணம். ஆண் என்ற உருவத்திற்குத் தரும் மரியாதையை, இந்தச் சமூகம், படித்து, நல்ல நிலையில் இருக்கும் ஒரு பெண்ணுக்குத் தருவதில்லை.
கணவனுடன் வாழும் பெண்களுக்குக் கிடைக்கும் மரியாதை கணவனால் கைவிடப்பட்டு தனித்து வாழும் பெண்களுக்குக் கிடைப்பதில்லை. விதவைத் தாய்மார்கள் மீது காட்டப்படும் இரக்கம் கூட கணவனிடமிருந்து பிரிந்து தனித்து வாழும் தாய்மார்களுக்குக் கிடைப்பதில்லை. இந்தச் சமுதாயம் காட்டும் பரிதாப உணர்ச்சியையும் கழிவிரக்கத்தையும் தனித் தாய்மார்கள் கோரவில்லை. அவர்களைச் சகமனுஷியாக மதிக்கமுடியாத மனிதர்களின் இரக்கம், அப்பெண்களை அவமரியாதை செய்வதற்கு ஒப்பாகும். அது அப்பெண்களைப் பலவீனப்படுத்தவே செய்யும்.
கொடுமைக்காரக் கணவர்களிடமிருந்து, விவாகரத்துப் பெற்ற பின்னரும், பெரும்பான்மையான பெண்கள் மறுமணம் குறித்து யோசிப்பதே இல்லை. இதற்குக் காரணம், பெண் மறுமணம் செய்வதில் சமூகம் விதித்திருக்கும் தடைகளே ஆகும். மனைவியை இழந்த, மனைவியைப் பிரிந்த ஆண்கள் எந்தத் தடைகளும் இல்லாமல் இன்னொரு வாழ்வை அமைத்துக் கொள்கின்றனர். இளம் பெண்கள் கூடச் சமூகத்திற்கு அஞ்சிக் குழந்தைகளுக்காக வாழ்கிறேன் என்று சொல்லி தியாக உணர்வுடன் மறுமணம் பற்றி யோசிக்காமல் இருக்கின்றனர். சமூகத்தில் அடித்தட்டு நிலையிலிருக்கும் பெண்கள் கூட இந்தத் தடைகளையெல்லாம் சாதாரணமாய் உடைத்து விட்டுத் திருமணம் செய்து கொண்டோ, திருமணம் செய்யாமல் சேர்ந்தோ வாழ்கின்றனர். பெரும்பாலும் நடுத்தர, மேல்தட்டு வர்க்கத்துப் பெண்களே மறுமணம் செய்வதற்குத் தயங்குகின்றனர். உடல் சார்ந்த தேவைகளை, உணர்ச்சிகளைப் புறக்கணித்துத் தன்னைத் தானே வருத்திக்கொண்டு வாழ்கின்றனர். ஆணுக்கான உடல் தேவையைத் திருமணம் செய்து கொள்ளாமலேயே அவனால் நிறைவேற்றிக்கொள்ள முடிகிறது. சமூகம் அவனுக்கு நிறைய சலுகைகளைத் தந்திருக்கிறது. ஆனால் அது பெண்ணுக்கு ஊரறிய ஏற்றுக்கொள்ளப்படும் சமூக மதிப்பீடுகளை உள்ளடக்கியது.
மறுமணம் சட்டத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பினும், ஆணாதிக்க, மரபார்ந்த சிந்தனைகளால் கட்டமைக்கப்பட்டுள்ள சமூகத்தால் அது புறக்கணிக்கப்படுகிறது. எனவே இந்த மாற்றங்களைச் சட்டத்தினால் மட்டுமே கொண்டுவர முடியாது. கருத்தியல் தளத்தில் ஏற்படும் பண்பாட்டு மாற்றமே தீர்வாக அமையும்.
உடல், உளச் சிக்கல்களை எதிர்கொள்ளல்:
சமூகத்தின் ஆதரவும் குடும்பத்தினரின் ஒத்துழைப்பும் இல்லாமல் தனியாகப் பிள்ளைகளை வளர்த்துக் கொண்டிருப்பதால் ஏற்படும் மன அழுத்தம் தனித்தாய்மார்களின் உடலையும் சேர்த்தே பாதிக்கின்றது. பாதுகாப்பற்ற சூழலில் குழந்தைகளைத் தனியே விட அஞ்சி கங்காரு தன் குட்டிகளை எப்போதும் வயிற்றில் வைத்துச் சுமப்பதைப் போல எங்கு சென்றாலும் குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு அலைய வேண்டியிருக்கிறது. இது தாயை மட்டுமல்ல குழந்தைகளையும் சோர்வடைய வைக்கிறது. தனியொருவராகக் குழந்தைகளை வளர்ப்பதால் தனக்கு ஏதேனும் நடந்து விட்டால் தன் குழந்தைகளை யார் பார்த்துக்கொள்வார்கள்? அவர்களின் நிலை என்னவாகும் என்பன போன்ற அச்சங்கள் ஒற்றைத் தாயை எப்போதும் மன அமைதியற்ற குழப்பமான நிலையிலேயே வைத்திருக்கின்றது.
தனித்தாயால் வளர்க்கப்படும் குழந்தைகள் வாழ்வில் வெற்றி பெற்றவர்களாகிச் சாதித்தால் அதைப் பெரிதாகக் கொண்டாடும் சமூகம், அதே குழந்தை தவறான வழிக்குச் சென்றாலோ, தாழ்ந்துபோனாலோ அதற்குத் தாய் மீது மட்டுமே குற்றம் சுமத்தும். பெண்ணால் வளர்க்கப்பட்டதால்தான் அந்தக் குழந்தை இந்நிலையை அடைந்ததாக அவமானப்படுத்தும். இதற்கெல்லாம் அஞ்சியே தம் குழந்தைகளை அதீதக் கட்டுப்பாட்டுடன் வளர்க்க நினைக்கிறார்கள்.
ஒற்றைத் தாய் தன்னால் வளர்க்கப்படும் ஆண் குழந்தைகளை விடப் பெண் குழந்தைகளை எண்ணியே மிகவும் கவலை அடைகிறாள். பெண் குழந்தைகளை வளர்ப்பதில், சமூகத்தில் நிகழும் பாலியல் பிரச்சினைகளை மையமிட்டே சிந்திக்கின்றனர். பெண் குழந்தைகளை அருகிலிருக்கும் கடைகளுக்கோ, விளையாட்டுத் திடலுக்கோ, தனியே அனுப்ப அஞ்சுவது, இசை வகுப்பு போன்ற வகுப்புகளுக்கு அழைத்துச் சென்றால், எவ்வளவு நேரமானாலும் அங்கேயே இருந்து அழைத்து வருவது, பெண் பிள்ளைகளுக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிடுமோ என்கிற அச்சத்திலேயே பாதுகாப்பு என்ற பெயரில் அனைத்து நிகழ்வுகளையும் கட்டமைப்பது போன்றவை தாயை மனச்சோர்வுக்கு உள்ளாக்குவதுடன் குழந்தையின் சுதந்திரத்தையும் தடை செய்கின்றது.
கல்லூரிப் பேராசிரியரான நான் வகுப்பறையில் மூன்று மணி நேரம் பாடம் நடத்தி விட்டு வந்தாலும், வீட்டில் வந்து ஓய்வெடுக்க முடிவதில்லை. குழந்தைகளை, என் வலி வேதனை சோர்வையெல்லாம் தாண்டி அரவணைத்துக் கொள்ள வேண்டியுள்ளது. “என் குழந்தைகளுக்கு என்னை விட்டால் யார் இருக்கின்றார்கள்? அவர்கள் செய்த தவறு என்ன? அவர்களின் பகிர்தலை நான் மட்டுமே கேட்கமுடியும். அவர்கள் இழந்த தந்தைமை உணர்வையும் சேர்த்துத் தரவேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறேன்" - இது என் அனுபவத்தின் மொழி.
பாதுகாப்பு இல்லாத தனிமை உணர்வு எப்போதும் தனித் தாய்மார்களுக்கு இருக்கின்றது. காரணம், குடும்பமும் சமூகமும் அவர்களை இழிவாகக் கையாள்வதும், புறக்கணிப்பதுமே ஆகும். தனித் தாய்மார்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால்கூட விடுப்பு எடுத்துக்கொள்ள முடியாது. அவர்களுடைய குழந்தைகள் நோயுற்றால்கூட தனித்தாய்தான் விடுப்பு எடுக்க வேண்டியுள்ளது. தன்னை கவனிப்பதற்கும், குழந்தைகளைப் பாதுகாப்பதற்கும் வேறொருவரும் இல்லாததால் உடல்நிலை சரியில்லாத போதும் பணிக்குச் செல்ல வேண்டிய நிர்பந்தத்திற்குத் தள்ளப்படுகின்றனர். நாற்பதைக் கடக்கும் ஒற்றைத்தாய்மார்கள் மெனோபாஸ் (Menopause) காலங்களில் கூடுதலான நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர். இதுபோன்ற காலங்களில், இவர்களைக் கவனித்துக்கொள்ளவும், வலிகளைப் பகிரவும் துணை இல்லாத சூழலில் தனித்து விடப்பட்டோராய் உணர்கின்றனர்.
ஒற்றைப் பெற்றோர் (Single Parent) என்று வார்த்தையின் வசதிக்காக வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் இருவரின் பணியையும் ஒருவரே செய்யும் நிலையிலிருக்கும் இவர்களை ஒற்றைப் பெற்றோர் என்று அழைப்பது எவ்வாறு பொருத்தமாகும்? இன்னும் தனிப் பெற்றோர்களைக் குறிப்பதற்கான தனித்த சொல் கூட தமிழ்ச் சமூகத்தில் உருவாக்கப்படவில்லை என்பது வேதனைக்குரியதாகும்.
குழந்தையை எதிர்கொள்ளலும் குழந்தைகள் எதிர்கொள்ளலும்:
தந்தையைப் பிரிந்து தாயுடன் மட்டுமே வளர்க்கப்படும் குழந்தைகள் தந்தை என்ற உறவு தரும் உணர்வையும் அதனால் கிடைக்கக் கூடிய அன்பையும் அரவணைப்பையும் இழக்க நேரிடுகின்றது. உறவுகளும் விலகியே இருப்பதால் சமூகத்துடனான இவர்களின் புரிந்துணர்வு, இணக்கம் குறைவாகவே இருக்கிறது. தந்தையிடம் இழந்த அரவணைப்பை வீட்டிற்கு வரும் நண்பர்கள் உறவினர்கள் என அனைவரிடமும் எதிர்பார்க்கின்றனர்.
தன்னுடைய பொறுப்போடு சேர்த்து இன்னொருவரின் பொறுப்பையும் வாழ்நாள் முழுவதும் சுமக்கும் தனித் தாய்மார்களின் வலியை எல்லோராலும் உணர முடியாது. இரண்டு இயந்திரங்கள் செய்யக்கூடிய பணிகளை ஒரே இயந்திரம் செய்தால் என்ன ஆகும்? சீக்கிரமே பழுதடையும். அதைப்போலத்தான், எல்லாவற்றையும் தனி ஒருவராய் சுமக்கும் தனித் தாய்மார்கள் இளம் வயதிலேயே உடலியல் சார்ந்த பல்வேறு பிரச்சினைகளைச் சந்திக்கின்றனர். எப்போதும் பதற்றத்துடனும், குழப்பத்துடனுமே வாழும் மனநிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
குழந்தைகளிடம் பள்ளியில் சேர்ந்த முதல் நாளே கேட்கப்படும் கேள்வி "உன் அப்பா என்ன செய்கிறார்?" என்பதே ஆகும். கல்வி நிலையங்களில் உடன் பயிலும் சக மாணவர்களால், 'உங்க அப்பா ஏன் பேரண்ட்ஸ் மீட்டிங்க்கு வரல?', 'உங்க அப்பாவ நாங்க பார்த்ததே இல்லயே' - இதுபோன்ற கேள்விகளால் தந்தை இல்லாத குழந்தைகள் பெரும் மனப் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். ஒருமுறை என்னுடைய இளைய மகள் என்னிடம், "அம்மா என்னுடைய பிரண்ட்ஸ், உன்னோட அப்பா எங்கே, நான் பார்த்ததே இல்லை, இந்த முறை பேரண்ட்ஸ் மீட்டிங்க்கு கட்டாயம் உங்க அப்பாவைத் கூட்டிட்டு வா என்று சொன்னதாகவும், வெளியூரில் அப்பா இருக்கிறார் என்று சொன்னபிறகும் கூட, தொடர்ந்து கேட்டுத் தொல்லை கொடுத்ததாகச் சொல்லி வருந்தினாள். மற்றொருமுறை என்னுடைய பெரிய மகளிடம் இளைய மகள், "ஏய் அக்கா, ஸ்கூல்ல எல்லார்ட்டயும் அப்பா எங்கன்னு கேட்டா ஒரே மாதிரி அப்பா வெளியூர்ல இருக்கார்ன்னு சொல்லு, நீ மாத்தி சொல்லிட்டா, அப்புறம் நாந்தான மாட்டிப்பேன்" என்று உபதேசம் செய்து கொண்டிருந்தாள். இவ்வாறு என் மகள் பேசும்போது, சிந்திக்கும்போது அவளுக்கு ஏழு வயது. இதுபோன்று பிறரின் கேள்விகளுக்குத் தங்களுடைய வயதுக்கு மீறிய பக்குவத்துடன் பதில் சொல்லும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இக்குழந்தைகள் சிறுவயதிலேயே வயதுக்கு மீறிய பொறுப்புடன் வாழ, சிந்திக்க நிர்பந்திக்கப்படுகின்றனர். இதனால் தங்களுடைய குழந்தைப்பருவ இன்பங்களை, அனுபவங்களை, மழலைத்தனத்தின் சுயாதீனத்தை இழக்க நேரிடுகிறது. ஒரு குழந்தை, குழந்தைமையை இழப்பது மிகப் பெரிய துயரம். அது எத்தகைய விளைவுகளை அவர்கள் வாழ்வில் உண்டுபண்ணும்!
பள்ளியில் நடக்கும் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பில் தந்தை தாய் என இருவரும் சேர்ந்து வரும் நண்பர்களின் பெற்றோர்களைப் பார்க்கும்போது, தாயோ தந்தையோ இல்லாத குழந்தைகள் தம்மை அவர்களோடு ஒப்பிட்டுப் பார்த்து ஏக்கமடைகின்றனர்; தாழ்வு மனப்பான்மைக்கு உள்ளாகின்றனர். இதுபோன்ற மன நெருக்கடியான சூழலில் வாழும் தனிப்பெற்றோரின் குழந்தைகளைப் பாதுகாப்பது, பொறுப்பாக நடந்துகொள்வது ஆசிரியர்களின் கடமையாகும். பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள் தனிப்பெற்றோரின் குழந்தைகளுடன் மனம் திறந்து பேசும் சூழல் உருவாக்கப்பட வேண்டும்.
வேலைக்குச் செல்லும் தனித் தாய்மார்கள் வீடு திரும்பும் வரை பணியிடத்தில் பதற்றத்துடனேயே இருக்க நேரிடுகின்றது. வீட்டில் தனியே இருக்கும் பெண் குழந்தைகள் அதிகமான பாலியல் தொந்தரவுகளை எதிர்கொள்கிறார்கள். இதனால் குழந்தைகள் போதிய பாதுகாப்பின்றி வளரும் நிலை உருவாகின்றது. இதுபோன்ற வன்முறைகளால் குழந்தைகளின் கல்வியும், மன வளர்ச்சியும் பாதிக்கப்படுவதைக் காண முடிகின்றது. ஆணுடன் இருப்பதே பாதுகாப்பானது, ஆணால் மட்டுமே ஒரு குடும்பத்தைக் காப்பாற்ற முடியும் என்கிற ஆணாதிக்க மனப்போக்குடைய சமுதாயத்தில், தந்தையின் துணையில்லாமல் தனியாக வளரும் குழந்தைகளைக் கேட்பதற்கு யார் இருக்கிறார்கள் என்கிற குரூர மன நிலையே பிறர் அவர்களைத் தொந்தரவு செய்யக் காரணமாகிறது.
ஒற்றைத் தாயால் வளர்க்கப்படும் குழந்தைகளுக்குத் தந்தை இல்லை என்கிற துயரத்தை விடவும், குடும்பத்தின் ஆணிவேராக இருக்கும் தாய் எப்போதும் மன அழுத்தத்துடன் காணப்படுவது, அழுவது, நோயுறுவது, வெளியாட்கள் தன்னுடைய தாயை இழிவாகப் பேசுவது போன்றவை குழந்தைகளின் மனநிலையை அதிகம் பாதிக்கின்றது.
முன்வைக்கும் தீர்வுகள்:
தனித்தாய்மார்கள், என்னுடைய வாழ்வு இப்படி ஆகிவிட்டதே என்று தன்னிரக்கம் கோராமல் தங்களுடைய வலியிலிருந்து விடுபட்டு வெளியே வரவேண்டும். சுதந்திரம் விலைமதிப்பில்லாதது. வெட்டப்பட்ட சிறகுகள் முளைக்க வேண்டுமெனில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் முன்னேறிச் செல்ல வேண்டும். இந்தச் சமூகம் என்ன சொல்லும் என்று பயந்தால், முடங்கித்தான் இருக்க நேரிடும். துணிந்து முடிவெடுத்தால் பயங்கள் தானாய் விலகும்.
காலம் முழுக்கத் தன்னை மட்டுமே சார்ந்து வாழவேண்டிய நிலையிலிருக்கும் குழந்தைகளைத் தனித்தாய்மார்கள் புரிந்து கொண்டு அவர்களைத் தோழமையோடு அணுகவேண்டும். அவர்களுக்கும் வாழ்வின் சூழலைப் புரிய வைக்க வேண்டும். ஆதரவற்ற வாழ்வின் அழுத்தங்களிலிருந்து மீண்டுவர வாழ்வை இரசித்து வாழக் குழந்தைகளிடம் உரையாடலை நிகழ்த்துதல் அவசியம். இத்தகு மாற்றங்களுக்குச் சமூகத்தின் பங்களிப்பும் ஒத்துழைப்பும் தேவை.
பாதிக்கப்பட்ட தனித்தாய்மார்களை இழிவாக நடத்தாமல் கருணையுடனும் மனிதத் தன்மையுடனும் அவர்களைப் புரிந்து கொள்ளவது அவசியமாகிறது. பாதுகாப்பில்லாமல் வாழும் தனிப் பெற்றோரின் குழந்தைகளைப் பாதுகாக்கப் பணி செய்யும் இடங்களில் கட்டாயமாகக் குழந்தைகளுக்கான பகல் நேரப் பராமரிப்பு மையம் (Day Care Centre) ஏற்படுத்த வேண்டும். அரசு இதற்கான வழிவகை செய்ய வேண்டும்.
பணிக்குச் செல்லும் தனித்தாய்மார்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துச்செல்ல ஒருவரும் இல்லாத நிலையில் ஆட்டோ டிரைவரையோ பிறரையோ நம்பி அனுப்புவதற்கு அஞ்சுகின்றனர். பாதுகாப்புத் தொடர்பான இதுபோன்ற அச்சங்களைக் களைய அனைத்துப் பள்ளிகளும் பேருந்து வசதியைக் குழந்தைகளுக்கு ஏற்படுத்தித் தரவேண்டும்.
ஓய்வில்லாமல் அனைத்துப் பணிகளையும் ஒருவரே செய்யும் தனிப் பெற்றோர்களுக்கு அரசு கூடுதல் சலுகைகளை வழங்க வேண்டும். அவர்களுக்குக் கூடுதல் விடுமுறைகளும் தரப்பட வேண்டும். கல்வி நிலையங்களில் தனிப் பெற்றோரையும் அவர்களுடைய குழந்தைகளையும் அணுகுவதற்குப் பயிற்சி பெற்ற உளவியல் நிபுணர்களைப் பணியமர்த்த வேண்டும். உளவியல் நிபுணர்கள் பண்பாட்டுத்தளப் புரிதலிலிருந்து அவர்களிடம் உரையாடலை நிகழ்த்த வேண்டும்.
திருமண முறிவின்போது ஒற்றைத் தாய்மார்கள் சமூகத்தில் சந்திக்கும் பிரச்சினைகளை எவ்வாறு கையாள்வது என்பன போன்ற உளவியல் ஆலோசனைகளை நீதிமன்றங்கள் உருவாக்கித் தர வேண்டும்.
நவீன வாழ்வின் கசந்த பக்கமாகச் சமூகத்தால் புறந்தள்ளப்பட்ட ஒற்றைப் பெற்றோர் மீதான மதிப்பீடுகளை இந்தச் சமூகம் மாற்றிக் கொள்ளுதல் மிகவும் அவசியம். பண்பாட்டுத் தளத்திலிருந்து இந்த மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளை எடுப்பதும், அதை நோக்கிய திசையில் பயணிக்க வேண்டியதும் காலத்தின் கட்டாயத் தேவையாகிறது.
- முனைவர் இரா. செங்கொடி, உதவிப் பேராசிரியர், சர் தியாகராயா கல்லூரி, சென்னை.