மனித வாழ்வில் தாய்வழிச்சமுதாயம் நிலவிய காலம் வரை பாலினச் சமத்துவம் நிலவியது. தந்தை வழிச் சமுதாயத்துக்கான வித்துக்கள் ஆழ ஊன்றப்பட்ட காலத்திலிருந்தே பாலினப் பாகுபாடுகளும் தோன்றின. அப்போதிருந்தே சமுதாயத்தின் அனைத்துப் படிநிலைகளிலும் பெண் இரண்டாம் நிலையாக, அடிமையாக, எந்தவித முன்னுரிமையும் அற்றவளாக ஆக்கப்பட்டுப் பல நூறு ஆண்டுகளாய் உலகம் முழுவதும் கொடுமைகளை எதிர்கொண்டு வந்தாள்.

19ஆம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் பெண்கள் நிலையிலிருந்து அவள் சிந்திக்கத் தொடங்கினாலும் பெண் விடுதலையின் அடிப்படையை மனித குல விடுதலையின் ஓர் அங்கமாக சிந்திக்கக் கற்றது மார்க்சிய மூலவர் தம் வழிமுறைகளிலிருந்தே... மார்க்ஸ், எங்கெல்ஸ் தொடங்கி லெனின் போன்ற சர்வதேசக் கம்யூனிச இயக்க ஆளுமைத் தலைவர்கள் பெண் விடுதலை குறித்த சிந்தனையையும் பார்வையையும் முன்வைத்தாலும் அதற்கான அடிநாதமாக வர்க்க பேதங்களற்ற சமுதாயத்தில்தான் பெண் விடுதலை என்பது முழுமையாகச் சாத்தியமாகும் என்பதையும் அவர்கள் உணர்த்தியிருக்கிறார்கள். பெண்கள் விடுதலையை எட்டுவது என்பதன் இலட்சியமாகக் கொள்ள வேண்டியது சோஷலிசத்துக்கான போராட்டமே என்பதையும் இடதுசாரி அமைப்புக்குள் இயங்கும் பெண்கள் அறிவார்கள்.

தொழில் புரட்சிக்குப் பிறகு ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் வளர்ச்சி பெறத் தொடங்கின. அங்கு கோடிக்கணக்கில் தொழிலாளர்களும் உருவானார்கள். ஆண்களும் பெண்களும் இணைந்து தொழிற்சாலைகளில் இடையறாது அடிமைகளைப்போல் பணியாற்றினர். அதனூடாக முதலாளிகள் தங்கள் உழைப்பைச் சுரண்டிக் கொழுப்பதற்கு எதிராகவும் அவர்கள் போராடினார்கள். 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் 8 மணி நேர வேலைத் தேவைக்கான போராட்டங்களாகவும் அவை வெடித்தன.

உருவானது மகளிர்தின அனுசரிப்பு முறை

உலகம் முழுவதும் சுரண்டப்படும் தொழிலாளர்களை ஒன்று திரட்டி அணி சேர்ப்பதற்காகக் கார்ல் மார்க்ஸ் வழிகாட்டுதலில் இக்காலகட்டத்தில் 'முதல் அகிலம்' அமைக்கப்பட்டிருந்தது. புகழ் பெற்ற மே தினப் போராட்டம் நிகழ்ந்ததும் கூட அப்போதுதான். இதனைத் தொடர்ந்து பின்னர் ஃபிரெட்ரிக் எங்கெல்ஸின் உதவியுடன் 'இரண்டாவது அகிலமும்' உருவானது. இது, 'சோஷலிஸ்ட் அகிலம்’ என்றும் அழைக்கப்பட்டது. இதன் வளர்ச்சிப்போக்கிலேயே சோஷலிஸ்ட் பெண்கள் இயக்கம் உருவானது.

Clara Zetkinஇதையடுத்து, கிளாரா ஜெட்கின் வழிகாட்டுதலில் ஜெர்மனியின் ஸ்டட்கார்ட் நகரில் 1907ஆம் ஆண்டில் முதல்முறையாக 'உலக சோஷலிஸ்ட் பெண்கள் மாநாடு' நடைபெற்றது. அதுகாறும் 'ஆண்கள் மட்டுமே பெற்று வந்த வாக்குரிமை பெண்களுக்கும் வேண்டும்' என்று தீர்மானம் நிறைவேற்றியது இந்த மாநாடு. அது பெண்களிடையே புதியதோர் எழுச்சி அலையையும் உண்டாக்கியது. இது உடனடியாக அமெரிக்காவிலும் எதிரொலித்தது.

1908ஆம் ஆண்டு மே 3ஆம் நாளன்று, அமெரிக்காவின் சிகாகோ நகரில் மகளிர் தினக் கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. நகர அளவில் அனுசரிக்கப்பட்ட முதல் ‘மகளிர் தினம்’ இதுவேயாகும். அடுத்த ஆண்டு, 1909, பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவின் பல இடங்களிலும் ‘வாக்குரிமைக்கான ஆர்ப்பாட்டம்' சிறப்பாக நடந்தேறியது. இதுவே தேசிய அளவில் முதன்முறையாகக் கடைப்பிடிக்கப்பட்ட 'மகளிர் தினம்'. உலக அளவில் வரலாற்றுச் சிறப்பு மிக்க மாநாடு மகளிர் தினம் அனுசரிப்பதற்கும் வழிவகுத்தது. டென்மார்க் நாட்டின் தலைநகர் கோபன்ஹேகனில் 1910 ஆகஸ்ட் 26, 27 ஆகிய இரு நாட்கள் 'உலக சோஷலிஸ்ட் பெண்கள் மாநாடு' நடைபெற்றது. கிளாரா ஜெட்கின் தலைமை ஏற்ற இந்த மாநாட்டில் 17 நாடுகளைச் சேர்ந்த சுமார் 100 பெண் பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இம்மாநாட்டில் விரிவான விவாதங்கள் நடத்தப்பட்டுப் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த மாநாட்டில்தான் 'சமூகப் பிரச்சினைகள் குறித்த சோஷலிசக் கண்ணோட்டத்துடன், பெண்கள் பிரச்சினைகள் அனைத்துடனும் வாக்குரிமைக் கோரிக்கையையும் சேர்த்து அனைத்து நாடுகளையும் (தேசிய இனங்கள்) சேர்ந்த பெண்கள், ஆண்டில் ஏதேனும் ஒரு நாளை மகளிர் தினமாக அனுசரிக்க வேண்டும்' என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்கதொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் 'கிளாரா ஜெட்கின், கேட் டங்கர் உள்ளிட்ட தோழர்கள்' கையெழுத்திட்டிருந்தார்கள். 'உலக மகளிர் தினம்' அனுசரிப்பதற்கு இந்தத் தீர்மானமே உண்மையான காரணமாகும்.

இதையடுத்து சில நாடுகளில் உலக மகளிர் தினம் கடைப்பிடிப்பது வழக்கத்துக்கு வந்தது. கடுமையான எதிர்ப்புகளுக்கிடையே 1911 மார்ச் 19 அன்று ஜெர்மனி, ஆஸ்திரியா, ஸ்விட்சர்லாந்து, டென்மார்க் போன்ற நாடுகளில் முதல்முறையாக அனுசரிக்கப்பட்டது. பின்னர் பல நாடுகளுக்கும் இந்த நடைமுறை பரவியது.

இரஷ்யாவைப் பொறுத்தவரை பெண்ணியம் என்பது தொடக்கத்தில் மேட்டுக்குடி மற்றும் நடுத்தர வர்க்கப் பெண்கள் சார்ந்ததாகவே இருந்தது. அது ஒரு பின்தங்கிய நாடு. அங்கு தொழில்புரட்சியும் மிகத் தாமதமாகவே நிகழ்ந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கொண்டு வரப்பட்ட கல்விச் சீர்திருத்தங்களே பெண்களுக்குக் கல்வியையும் அறிமுகப்படுத்தின. அதே நேரத்தில் அயல்நாடுகளில் கல்வி கற்றவர்கள் மத்தியில் ஏற்பட்ட அரசியல் விழிப்புணர்வு, குறிப்பாய்த் தீவிரவாத அரசியல் இரஷ்யாவில் ஜார் ஆட்சியைத் தூக்கியெறிவதற்கென்று இரகசியமாகச் செயல்பட்டது. இவ்வாறு செயல்பட்ட நரோத்னிக்குகளில் சில புரட்சிகரப் பெண்களும் இருந்தனர். அவர்களில் வேரா ஜசுலிச், மரியா ஸ்பிரிடோனோவா, வேரா ஃபிங்கர், காதரீன் பிரெஷ்கோவ்சுக்காயா உள்ளிட்டோரும் அடங்குவர். ஆனால் இந்த இயக்கம் படுதோல்வியைச் சந்தித்தது.

இரஷ்யாவில் உருவாயிருந்த புதிய தொழிலாளிகளுக்கிடையே லெனின் தலைமையில் புரட்சிகர இயக்கம் உருவானது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஜார் ஆட்சியின் கொடுங்கோன்மைச் சட்டங்களை எதிர்த்துத் தொழிலாளர்களும் போராடினர். அவர்களிடையே அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பெண் தொழிலாளர்களின் குரல்களும் கலந்து ஒலிக்கத் தொடங்கின. குறிப்பாக, பெண் தொழிலாளர்கள் மத்தியில் வர்க்க உணர்வை ஊட்டுவதற்காகத் துணிவுடன் செயல்பட்ட அலெக்சாந்திரா கொலந்தாய், நதியெஸ்தா குரூப்ஸ்காயா, இனெஸ்ஸா அர்மந்த், கொன்கோர்டியா சாமோயிலோவா போன்ற பெண் தலைவர்கள் மிக முக்கியமானவர்களாக வரலாற்றில் அறியப்பட்டவர்கள்.

மக்களை உருக்குலைத்த உலகப்போர்

1914 ஆம் ஆண்டு வெடித்த முதல் உலகப் போரில் மக்கள் விருப்பத்துக்கு மாறாக ஜெர்மனியுடன் இரஷ்யா கூட்டணி சேர்ந்தது. இந்த உலகப்போரில் மட்டும் இரஷ்ய ராணுவத்தில் சுமார் ஒன்றரை கோடி இரஷ்ய ஆண்கள் சேர்க்கப்பட்டனர். குறிப்பாக அடித்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்களும் ஏழைகளும் அவர்களின் விருப்பத்துக்கு மாறாக வலுக்கட்டாயமாக இராணுவத்தில் சேர்க்கப்பட்டனர். இதனால் தொழிற்சாலைகளில் ஏற்பட்ட வெற்றிடங்களில் பெண்கள் வலிந்து திணிக்கப்பட்டனர். ஆலைகளில் தொழிலாளர்களாகவும் வீட்டில் தாயாகவும் அவர்கள் இரட்டைச் சுமைகளைத் தாங்கினர்.

இந்தப் போர்ச்சூழலுக்கு நடுவே 1915 மார்ச் 26-28ல் சுவிட்சர்லாந்து நாட்டில், உலக சோஷலிஸ்ட் பெண்கள் மாநாடும் நடைபெற்றது. "பாட்டாளி வர்க்கப் பெண்களே! இந்தப் போரினால் நீங்கள் அடையப் போவது எதுவும் இல்லை. ஆனால், அனைத்தையும் நீங்கள் இழக்கப் போகிறீர்கள்! எனவே போரை எதிர்த்துப் போராடுங்கள்!” என்று அந்த மாநாட்டில் அறைகூவல் விடுக்கப்பட்டது.

முதல் உலகப்போரின் உக்கிரமாக இரஷ்யா & ஜெர்மனி நாடுகளுக்கு இடையில் மூன்றாண்டுகள் போர் நடைபெற்றது. இதில், இரஷ்யா தோல்வியைத் தழுவிக்கொண்டிருந்தது. 1914, 15, 16 மூன்றாண்டுகளில் மட்டும் கொல்லப்பட்ட இரஷ்யப் படைவீரர்களின் எண்ணிக்கை 17 இலட்சம்! போர்க்கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டவர்களோ 20 இலட்சம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 10 இலட்சம்! இலட்சக்கணக்கான தாய்மார்களும், மனைவிமார்களும் இவர்களை இழந்து வேதனையில் துடித்தார்கள்; வாழ வழியின்றித் தவித்தார்கள். உலக சோஷலிஸ்ட் பெண்கள் மாநாடு விடுத்த அறைகூவலை ஏற்றுக்கொள்வதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை.

ஒரு கட்டத்தில் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை பத்து இலட்சத்துக்கும் மேலாக உயர்ந்தது. எந்தவிதச் சட்டப் பாதுகாப்பும் இல்லாத நிலையில் ஒரு நாளைக்கு 12 முதல் 16 மணி நேரம் வரை ஆலைகளில் எந்திரம் போல் பணியாற்றிவிட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து மற்ற வேலைகளையும் பார்க்க வேண்டிய நிலை பெண்களுக்கு. கற்பனை செய்துகூட பார்க்க முடியாத கொடுமைகளை இந்தப் பெண்கள் அனுபவித்தனர்.

பெண் சமத்துவத்துக்கான முன்னணி

இத்தருணத்தில்தான் ஆலைகளின் வேலை நேரத்தை 'எட்டு மணி நேரமாகக் குறைக்க வேண்டும்' என்ற கம்யூனிஸ்டுகளின் குரல் அவர்கள் காதுகளில் தேனாகப் பாய்ந்தது. ஏராளமான பெண்கள் செங்கொடியின் கீழ் ஒன்று திரண்டனர். கொலந்தாய், குரூப்ஸ்காயா போன்ற பெண் தலைவர்கள் அவர்கள் மத்தியில் தீவிரமாகப் பணியாற்றினர். தொழிலாளியாகத் தமக்கான உரிமைகளை வென்றெடுப்பதுடன் காலம் காலமாக ஆணாதிக்க நுகத்தடியில் பெண்கள் விலங்கிடப்பட்டுள்ள கொடுமையிலிருந்தும் விடுதலை பெற வேண்டிய அவசியத்தை அவர்கள் பெண் தொழிலாளிகள் மத்தியில் போதித்தனர். இதற்காக 'ரபோட்னிஷா' (பெண் தொழிலாளி) என்ற இதழையும் அவர்கள் நடத்தினர். மேலும் 'பெண் சமத்துவத்துக்கான முன்னணி” என்ற அமைப்பும் தொடங்கப்பட்டது. வெற்றிகரமாக இதைத் தொடங்கி நடத்தியதில் இரஷ்யாவின் முதல் மகப்பேறு பெண் மருத்துவர் போலிக்சேனா ஷிஷ்கினா-யவீன் முக்கியமானவர்.

1913 ஆம் ஆண்டு இவர்கள் தலைமையில் நடந்த மகளிர் தின எழுச்சி மேடையில் எளிய பெண் தொழிலாளி அலெக்சீவா ஆற்றிய உரையைக் கேட்டு குரூப்ஸ்காயாவும் கொலந்தாயும் மெய் மறந்தனர். ஒட்டுமொத்தப் பெண் சமுதாயத்தின் உரிமைக்குரலாக உணர்ச்சிப் பிரவாகமாக அது பெருகியது. அதே அலெக்சீவா பின்னர் மாபெரும் போல்ஷ்விக்காக உயர்ந்தார். அவரது சுயசரிதை இலட்சக்கணக்கில் விற்பனையானது. இதுபோன்ற எண்ணற்ற ஆலைத் தொழிலாளிகள் கம்யூனிஸ்ட் கட்சியால் உத்வேகம் பெற்றும் பெண் உரிமைகளுக்காகவும் போராடினர்.

முதல் உலகப் போரில் இரஷ்யா கடும் தோல்வியைச் சந்தித்தது. ஒவ்வொரு நாளும் இரஷ்ய ராணுவம் பின்னடைவைச் சந்தித்தது. இதன் கடுமையான சுமை பொதுமக்கள் மீதே சுமத்தப்பட்டது.

வேண்டும்... வேண்டும்... எங்களுக்கு ரொட்டி வேண்டும்”

குறிப்பாகத் தொழிலாளர்கள் அடிமைகளாகவே நடத்தப்பட்டனர். அதிலும் பெண் தொழிலாளிகள் அடிமையிலும் கேவலமான அடிமையாக நடத்தப்பட்டனர். நாள் முழுவதும் ஆலையில் உழைத்தாலும் ஒரு தாயால் தன் குழந்தைக்கு ஒரு துண்டு ரொட்டியைக்கூட வாங்கி வயிறார ஊட்ட முடியவில்லை. கொடுங்கோன்மை ஜார் அரசு அதைக்கூடப் பிடுங்கி போர்ச்செலவுகளுக்கு எனப் பயன்படுத்தியது.

இந்த நிலையில்தான் 1917 மார்ச் 8 விடிந்தது. அன்று மகளிர் தினம் கடைப்பிடிக்க பெண் புரட்சியாளர் பெண் சமத்துவத்துக்கான முன்னணியும் கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள பெண்ணியவாதிகளும் முடிவு செய்தனர். அவர்களின் பிரதான முழக்கமே “எங்களுக்கு ரொட்டி வேண்டும்" என்பதாகத்தான் இருந்தது. அவர்கள் தங்களுக்காகக்கூட ரொட்டி வேண்டுமெனக் கேட்கவில்லை. தங்கள் குழந்தைகளுக்காகவும், விருப்பத்துக்கு மாறாகப் போரில் திணிக்கப்பட்டு உயிரிழந்த இராணுவ வீரர்களின் குழந்தைகளுக்காகவும் தாய்மார்களுக்காகவும் மனைவிமார்களுக்காகவும் ரொட்டி வேண்டுமெனக் கோரினர். பெட்ரோகிராட் நகரில் மட்டும் சுமார் 40,000 பெண்கள் ரொட்டி வேண்டுமெனக் கேட்டுப் பேரணியாகத் திரண்டனர்.

ஓடும் டிராமை நிறுத்திய ஒற்றைப்பெண்

ரொட்டிக் கடைகளில் கால்கடுக்க வரிசையில் நிற்பதைவிடவும் தங்கள் உரிமைகளுக்காகப் போராடுவதே சரி என்று பெண்கள் சாரி சாரியாகத் திரண்டனர். அன்றோடு மட்டும் பெண்களின் எழுச்சி ஓயவில்லை. மறுநாள் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான பெண்கள் அணி திரண்டனர். அதற்கு அடுத்த நாள் போக்குவரத்தை முடக்கும்படி பெண் தொழிலாளிகளுக்கு லெனின் அறைகூவல் விடுத்தார்.

பெட்ரோகிராட் நகரில் அகாட்ஷனோவா என்ற பெண் தனி மனுஷியாக நின்று ஓடும் டிராமை நிறுத்தினாள். முன்னே வந்து கொண்டிருந்த டிராமை மறித்துத் தண்டவாளத்தின் நடுவே நின்றாள். டிராம் நிற்காமல் முன்னேறினாலும் எதற்கும் அஞ்சாமல் நின்றாள். டிராம் அவள் மீது மோதுவது போல வேகமெடுத்து வந்தாலும் பின்னர் பணிந்து நின்றது. தொடர்ந்து மற்ற டிராம்களும் அங்குலம் கூட நகர முடியவில்லை. அன்று பெட்ரோகிராடில் போக்குவரத்து முழுவதும் வெற்றிகரமாக முடக்கப்பட்டது.

அகாட்ஷனோவா என்ற தனி மனுஷியின் ஆக்ரோஷம் நாடு முழுவதும் பரவி பெரும் புரட்சி அலையாக எழுந்து, இரஷ்யா முழுவதும் பரவி புரட்சியை நிறைவு செய்த பின்னரே ஓய்ந்தது. "போரை நிறுத்த வேண்டும். மன்னராட்சி ஒழிய வேண்டும்" என்று இதே காலகட்டத்தில் லெனின் தலைமையில் கம்யூனிஸ்டுகளும் சோஷலிஸ்டுகளும் போராடி வந்தனர். சோஷலிஸ்ட் பெண்களும் இப்போராட்டத்தில் தீரமுடன் பங்கெடுத்தனர்.

மார்ச் 8! இரஷ்யத் தலைநகர் பெட்ரோகிராடில் பெண்கள் வீதியில் இறங்கியதோடு, ஆண் தொழிலாளர்களையும் தங்களோடு வீதியில் அணிவகுக்கச் செய்தார்கள். பேரணியின் உக்கிரத்தால் ஈர்க்கப்பட்ட மாணவர்களும் அலுவலக ஊழியர்களும் கூட்டம் கூட்டமாகக் கலந்து கொண்டார்கள். இடையறாத போராட்டம் எட்டு நாள்கள் தொடர்ந்தது. துப்பாக்கிச் சூடும் படுகொலைகளும் மேலும் எதிர்ப்பை உறுதிப்படுத்தின. நவம்பர் புரட்சியில் பெண்களின் பங்கு என்பது இரத்தமும் சதையும் போல. அது பெண்ணும் ஆணும் இணைந்து நிகழ்த்திய புரட்சி. அது உலகுக்கே புத்தொளி பாய்ச்சிய புரட்சி!

இராணுவமும் போராட்டக்காரர்களோடு இணைந்தது. பெண்கள் தொடங்கிய இந்த மாபெரும் புரட்சியின் எட்டாம் நாள் முடியாட்சி சரிந்தது. ஜார் வீழ்ந்தார்! மாற்றாக இடைக்கால அரசும் அமைந்தது.

மக்களின் கோரிக்கைகளை இடைக்கால அரசாங்கத்தாலும் நிறைவேற்ற இயலவில்லை. இதே உழைக்கும் மக்கள் நவம்பர் 7 அன்று, லெனின் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் மீண்டும் புரட்சி செய்தார்கள். அதுவே புகழ் பெற்ற நவம்பர் புரட்சி; உலகின் முதல் சோஷலிசப் புரட்சி. இதன் விளைவாய் எல்லோர்க்கும் எல்லாமும் என்ற நிலை உருவாக்கப்பட்டது. ஆண் பெண் சமத்துவம் நிலை நாட்டப்பட்டது.

இரஷ்யப் புரட்சியின் செய்தி உலகம் முழுவதும் பரவியது. பல நாடுகளில் தொழிலாளர்கள் ஒன்று திரண்டனர். உலகம் முழுவதும் புரட்சி பரவத் தொடங்கியது. இதற்குமுன் உலகம் கண்டிராத அளவுக்குப் புரட்சியைத் தொடங்கி வைத்தவர்கள் இரஷ்யப் பெண்களும் தாய்மார்களும்தான்.

பெண் அமைச்சர்களின் பங்களிப்பு

அலெக்சாந்திரா கொலந்தாய், லெனின் அமைச்சரவையில் பொது நல அமைச்சராக நியமிக்கப்பட்டார். தன்னைத் திருநங்கை எனப் பகிரங்கமாக அறிவித்துக்கொண்ட ஜியார்ஜி சிச்செரின், சோவியத் இரஷ்யாவின் வெளியுறவுத்துறை கமிஷனராக நியமிக்கப்பட்டு 12 ஆண்டுகள் அதே பதவியில் நீடித்தார். பின்னர் ஜெர்மனியுடன் நிகழ்ந்த பிரெஸ்ட்-லிடோவ்ஸ்க் பேச்சுவார்த்தையின்போது டிராட்ஸ்கியின் உதவியாளராகப் பங்கேற்றார்.

இரஷ்யப் புரட்சிதான் 18 வயது நிரம்பிய அனைத்துப் பெண்களுக்கும் ஆண்களுக்கும் சம வாக்குரிமையை முதன்முறையாகக் கொண்டு வந்து சேர்த்தது. இதற்குப் பல ஆண்டுகளுக்குப் பின்னர் பிற முதலாளித்துவ நாடுகளிலும் அனைவருக்கும் சம வாக்குரிமை அமலானது.

புரட்சி முடிந்ததும் ஆட்சியில் அமர்ந்த லெனின் முதலில் கொண்டு வந்த சட்டம் போருக்கு எதிரானது. இரண்டாவது சட்டம் 'நிலங்களைப் பொதுவுடைமை' ஆக்கி, அதில் 'ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை' வழங்கியது.

பேறுகாலத்துக்கு முன்னும் பின்னும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு, பணியிடங்களில் தனி ஓய்வறைகள், கூடுதல் நேரப்பணி, இரவுப் பணி ஆகியவற்றிலிருந்து விலக்கு போன்ற உலகிலேயே முதல் முறையாக என்று சொல்லத்தக்க பல உரிமைகள் பெண்களுக்கு வழங்கப்பட்டன.

மேலும், பெண் சமுதாயம் இதுவரை கண்டிராத பல உரிமைகளை நவம்பர் புரட்சி பெண்களுக்கு வழங்கியது. திருமணச் சட்டங்கள் மதத்தின் பிடியில் இருந்து விலக்கி வைக்கப்பட்டன. பிறக்கும் அனைத்துக் குழந்தைகளையும் 18 வயது வரை பராமரித்துக் கல்வியும், சுகாதாரமும் வழங்குவது அரசின் கடமையாகக் கொள்ளப்பட்டது.

எந்த ஒரு பெண்ணும் தன் விருப்பத்தின் பேரில் குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்பட்டது. கருக்கலைப்பு பெண்ணின் விருப்பமாகவும் அறிவிக்கப்பட்டது. திருமணம் செய்து கொள்வது, சேர்ந்து வாழ்வது, ஓரினப் பாலுறவு போன்றவை அவரவர் விருப்பம் சார்ந்தவை என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சோவியத் இராணுவத்தில் அதாவது செஞ்சேனையில் சுமார் 80,000 பெண்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இது மொத்தப் படையில் 2 சதவீதம் ஆகும்; ஒரு நாட்டு இராணுவத்தின் கிளைப் பிரிவுகளில்கூட பெண்களைச் சேர்க்கத் தயங்கிய அக் காலத்தில் மொத்தச் செம்படை இராணுவத்தில் ஐம்பதில் ஒருவர் பெண் ஆவார்.

நூறாண்டுகளுக்கு முன் இவை எல்லாம் நிகழ்த்தப்பட்டன என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். இத்தனை அதிசயங்களை நவம்பர் புரட்சி நிகழ்த்திக் காட்டினாலும் லெனின் மனநிறைவு கொள்ளவில்லை. இத்தனை சாதனைகளுக்குப் பிறகும் பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக சோஷலிச அமைப்பிலும் தொடர்ந்து போராட வேண்டியிருக்கும் என்றே கூறினார்.

மேலும், "அனைத்துச் சட்டங்களுக்குப் பிறகும் பெண் என்பவள் சமையல், குழந்தை வளர்ப்பு போன்ற வீட்டு வேலைகளுக்கு அடிமையாகவே நீடிக்கிறாள். இந்த வேலைகள் அவளின் குரல்வளையை அழுத்தி நெரிக்கின்றன. இதற்கு எதிராக அதிகாரம் கொண்ட பாட்டாளி வர்க்கம் எங்கே எப்போது போராட்டம் தொடங்குகிறதோ, அங்கே அப்போது உண்மையான பெண் விடுதலையும் உண்மையான கம்யூனிசமும் தொடங்குகிறது. இந்த வீட்டு வேலைகள் அனைத்தும் பெரிய அளவிலான சோஷலிசப் பொருளாதாரமாக மாற்றம் அடையும்போதுதான் உண்மையான பெண் விடுதலையும் உண்மையான கம்யூனிசமும் தொடங்குகிறது" என்றும் உறுதிபடக் கூறினார். அன்றைக்கு உருவான சோவியத் யூனியனில் மட்டுமல்ல; உலகெங்கிலும் இன்றளவும் அவை அத்தனையும் உண்மைதானே!

இரஷ்யப் புரட்சியின் செய்தி உலகம் முழுவதும் பரவியது. பல நாடுகளில் உள்ள தொழிலாளர்கள் அணி திரண்டனர். உலகம் முழுவதும் புரட்சி பரவத் தொடங்கியது. இதற்குமுன் கண்டிராத அளவு இப் புரட்சியைத் தொடங்கி வைத்தவர்கள் இரஷ்யப் பெண்களும் தாய்மார்களும்தான். இதையொட்டி, இனெஸ்ஸா, கிளாரா ஜெட்கின், அலெக்சாந்திரா கொலந்தாய், நதியெஸ்தா குரூப்ஸ்காயா மேலும் பலரின் முயற்சியால் 'உலகக் கம்யூனிஸ்ட் பெண்கள் அகிலம்' அமைக்கப்பட்டது. இதன் இரண்டாவது மாநாடு 1921ஆம் ஆண்டு ஜூன் மாதம், 9-15 தேதிகளில் மாஸ்கோவில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட பல்கேரிய நாட்டுத் தோழர்கள் ஒரு ஆலோசனையை முன்வைத்தார்கள். "1917, மார்ச் 8 அன்று பெட்ரோகிராட் நகரில் பெண் தொழிலாளர்கள் முன்னின்று நடத்திய பேரணிதான் இரஷ்யப் புரட்சியை நோக்கி இட்டுச் சென்றது. இரஷ்யப் பெண் தோழர்கள் மகளிர் தினத்தை மார்ச் 8 அன்றுதான் கொண்டாடி வருகிறார்கள். எனவே அனைத்து நாடுகளிலும் அதே மார்ச் 8 தேதியில் ஒவ்வோர் ஆண்டும் மகளிர் தினத்தைக் கொண்டாட வேண்டும்" என்றும் அவர்கள் கூறினார்கள். இந்த ஆலோசனையை ஆரவாரத்துடன் வரவேற்றவர்கள் அவ்வாறே முடிவு செய்தனர். இந்த முடிவே மார்ச் 8 அன்று மகளிர் தினம் நிரந்தரமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படக் காரணமாய் அமைந்தது.

இந்த முயற்சியே இந்தியாவிலும் இடதுசாரிப் பெண்கள் இயக்கம் வேர் கொண்டு நிலைத்து நிற்பதற்கான முயற்சிகளில் இறங்கியது.

- பா.ஜீவசுந்தரி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.