kolathoormani_sathiyaraj

‘சுவரெழுத்து சுப்பையா சிந்தனைப் பொறிகள்’ நூல் அறிமுக விழா 5.8.2011 வெள்ளி மாலை சென்னை தியாகராயர் நகர் தெய்வநாயகம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் எழுச்சியுடன் நடைபெற்றது.

பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமை தாங்கினார். நூலை உருவாக்குவதில் முன்னின்று செயல்பட்ட கோவை வெ. ஆறுச்சாமி வரவேற்புரையாற்றினார். வழக்கறிஞர்கள் இளங்கோவன், குமார தேவன், செ. துரைசாமி, துணைத் தலைவர் ஆனூர் ஜெகதீசன், பொதுச் செயலாளர் கோவை இராம கிருட்டிணன், கழகத் தலைவர் கொளத்தூர் மணி, இயக்குனர் மணிவண்ணன் ஆகியோர் சுப்பையாவின் கொள்கை உறுதி, அவரது ஆழமான சிந்தனைகள், தன்னலம் பாராத எதிர் நீச்சல் தொண்டுகளை விளக்கிப் பேசினர். இறுதியில் நூல் அறிமுக உரையை இனமான நடிகர் சத்தியராஜ் நிகழ்த்தினார்.

தனது கல்விப் பருவத்தில் கோவையில் சுவரெழுத்து சுப்பையா எழுதிய சுவர் எழுத்துகள் தான், தன்னை பகுத்தறிவுப் பாதையில் திருப்பியது என்று கூறிய நடிகர் சத்யராஜ், பெரியார் திராவிடர் கழகத்தின் மேடையில் பேசுவதற்கு பெருமைப்படுவதாகக் குறிப்பிட்டார். பெரியார் திராவிடர் கழகத்தின் செயல் பாடுகளை மனம் திறந்து பாராட்டிய அவர், “ஒரு காலத்தில் இராணுவத்தை சந்திப்பேன் என்று நான் பெரிதும் மதிக்கும் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். பேசியபோது, அப்படி எல்லாம் சந்திக்க முடியுமா என்று நான் வியந்தேன். ஆனால் உண்மையிலேயே ராணுவத்தை சந்திக்க முடியும். அதுவும் அலைபேசி குறுஞ் செய்திகளை அனுப்பி, மக்களைத் திரட்டி சந்திக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டிய இயக்கம் பெரியார் திராவிடர் கழகம்” என்று பலத்த கரவொலிக்கிடையே குறிப்பிட்டார்.

தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சிக்கு, மேல்நிலைப் பள்ளி வளாகம் முழுதும் கூட்டம் நிரம்பி வழிந்தது. காஞ்சி சங்கராச்சாரி மீதான கொலை வழக்கு விசாரணையில் சாட்சிகள் பலர் விலைக்கு வாங்கப்பட்டுவிட்ட நிலையில், வழக்கிலிருந்து விடுதலை பெற பெரும் தொகை கைமாறி வருகிறது என்ற திடுக்கிடும் தகவலை வழக்கறிஞர் துரைசாமி தனது உரையில் அம்பலப்படுத்திய தோடு இது தொடர்பாக நடந்த உரையாடல் பதிவையும் ஒலிபெருக்கி வழியாக கூட்டத்தினரிடம், போட்டுக் காட்டினார். கூட்டத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இயக்கக் கொள்கையே உயிர் மூச்சாய்க் கொண்டு, சுவர்களை பகுத்தறிவுப் பாசறைகளாக்கி, தனது வாழ்க்கையை முடித்துக் கொண்ட கொள்கை வீரனை அங்கீகரித்து, கவுரவித்து, அந்த லட்சிய வீரரின் கருத்துச் சுரங்கத்துக்கு நூல் வடிவம் தந்து, பெருமை சேர்த்திருக்கிறது, தொண்டர்களால் இயங்கும் பெரியார் திராவிடர் கழகம். இது சுவரெழுத்து சுப்பையாவுக்கு நடக்கும் இரண்டாவது நூல் அறிமுக நிகழ்வு ஆகும்.

****

திராவிடத்தால் அல்ல; தமிழன் சாதியால் பிரிந்ததால் தான் வீழ்ச்சி

ஜூனியர் விகடன் ஏடு வெளியிட்ட கழுகார் கேள்வி-பதில் பகுதியிலிருந்து -

கேள்வி : திராவிடர்கள் என்று சொல்லிக் கொண்டால்தான் தமிழர்கள் அரசியல் உரிமையை அடைய வில்லை என்று சிலர் சொல்ல ஆரம்பித்துள்ளனரே?

கழுகார் பதில்: திராவிடர் என்பதும் தமிழர் என்பதும் ஒரே பொருள் தரும் இருவேறு சொற்கள்தான். அண்ணா ‘திராவிட நாடு’ கேட்டபோது, பெரியார், ‘தனித் தமிழ்நாடு’ என்றார். இரண்டுமே பரப்பளவில் ஒன்றுதான். இந்த வரலாறு தெரியாதவர்கள் வேண்டுமானால், இப்படிச் சொல்லலாம். திராவிடர் என்று சொல்வதால் தமிழன் வீழவில்லை. சாதியால் பிரிந்ததால் தான் வீழ்ச்சி.

‘சாதி ஒழித்தல் ஒன்று, நல்ல தமிழ்

 வளர்த்தல் மற்றொன்று - பாதியை

 நாடு மறந்தால் மற்றபாதி துலங்குவது இல்லை’

- என்பது பாரதிதாசன் பாட்டு. வெறும் தமிழைப் பிடித்துக் கொண்டு மட்டும் சிலர் தொங்குவதால்தான், இந்த ஒற்றுமை சாத்தியம் ஆகவில்லை. இந்த தமிழ்ப் போராளிகள் சாதிக்கு எதிரான போரைத் தொடங்கினால் மட்டுமே இன ஒற்றுமை சாத்தியம்.

‘ஜூனியர் விகடன்’ 10.8.2011