கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

தமிழகத்தை உலுக்கிய கோகுல்ராஜ் கொலை வழக்கில் கீழமை நீதிமன்றம் வழங்கிய "இறுதி மூச்சு" வரையிலான சிறைத் தண்டனையைச் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கடந்த 2/06/2023 அன்று உறுதி செய்தது.

சேலம் ஓமலூரைச் சார்ந்த 21 வயது பட்டியல் இனத்தைச் சார்ந்த பொறியியல் பட்டதாரியான கோகுல்ராஜ் சக தோழியான, இடைநிலைச் சாதியைச் சார்ந்த சுவாதியுடன் பழகி வந்ததை ஏற்க மனம் இல்லாத தீரன் சின்னமலைக் கவுண்டர் அமைப்பை நடத்தி வந்த யுவராஜ் மற்றும் அவனது கூட்டாளிகள் கோகுல்ராசுவைக் கோவிலில் இருந்து கடத்தி வதை செய்து மர்மமான முறையில் கொலை செய்துவிட்டு, கோகுல் ராஜாவையே வீடியோவில் பதிவாக்கியும் தற்கொலைக் குறிப்பை அவரிடம் இணைத்தும் ரயில் தண்டவாளத்தில் வீசிச்சென்றுள்ளனர்..

எவ்விதப் பெரிய ஆதாரமும் இல்லாத இந்தக் கொலை வழக்கில் இறுதியாக மேற்படி யுவராஜைக் காவல்துறைத் தேடிய நிலையில் 107 நாட்கள் தலைமறைவாகத் திமிராகச் சுற்றித்திரிந்து காவல்துறையை அலைக்கழித்துச் சாதி வெறியர்களுடன் சேர்ந்து வந்து கடந்த அக்டோபர் 11, 2015-இல் சரணடைந்தான்.. மேற்படி காவல் துறையை அலைக்கழித்ததன் காரணமாக, உயர் அதிகாரிகளின் தீவிர அழுத்தத்தின் நெருக்கடியால் இந்த வழக்கைக் கையாண்ட பட்டியல் சாதியைச் சார்ந்த இளம் காவல் துணைக் கண்காணிப்பாளர் விஷ்ணு பிரியா அவர்கள் தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் கோகுல்ராஜ் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில் யுவராஜ் உட்பட 15 பேரின் மீது இ.த.ச 120-பி 302, 364, 465, 468, 471, 212, 216, 201, 149 பிரிவின் கீழும் 3(2) Sc/St (POA) சட்டத்தின் கீழும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு 725 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

மேற்படி வழக்கு sc no 31/2019 கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு மன்றம் மூன்று சிறப்பு நீதிபதி Sc/St வழக்கு மதுரையில் நடைபெற்றது. அரசுத் தரப்பில் 106 சாட்சிகளும் 550 ஆவணங்களும் அடையாளப்படுத்தப்பட்ட 107 ஆவணங்களும் குறியீடு செய்யட்டும், 9 நீதிமன்ற ஆவணங்களும் 2 நீதிமன்ற சாட்சிகளும் விசாரிக்கப்பட்டது. குற்றவாளிகளின் தரப்பிலும் ஆறு ஆவணங்கள் தங்களின் தரப்பிலும் குறியீடு செய்யப்பட்டது. அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞராக மக்கள் வழக்கறிஞர் தோழர் ப. பா. மோகன் அமர்த்தப்பட்டார்.

இந்த வழக்கில் சாதி வெறியர்களுக்குத் தண்டனை பெற்றுத்தர கடுமையாக உழைத்தும் தன்னுடைய கூர்மையான வாதங்களை முன் வைத்தார். வழக்கு தொடக்கத்திலிருந்து இறுதிவரை கிடைத்த பல்வேறு சாட்சிய சான்றுகளையும் (சிசிடிவி காட்சி ஆதாரங்கள் உட்பட) முன்வைத்து வாதாடினார்.

முக்கிய சாட்சியான கோகுல்ராஜின் தோழி சுவாதி பிறழ் சாட்சியாக மாறிய போதும், சிசிடிவி ஆவணங்கள் மற்றும் சூழல் சாட்சிகளை அடிப்படையாகக் கொண்டு வாதாடியதன் விளைவாக யுவராஜ் உட்பட 10 பேர் குற்றவாளிகள் எனவும், "இறுதி மூச்சு வரை"சிறை தண்டனையை அனுபவிக்க கீழமை நீதிமன்றம் கடந்த 8-3-2022 அன்று தீர்ப்பளித்தது.

மேற்படி தீர்ப்பை எதிர்த்து யுவராஜ் உட்பட 10 பேரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் குற்றவியல் மேல்முறையீட்டு மனு எண் ( மதுரை) 228, 230, 232, 233, 515, 536, 747 / 2022 என்ற வழக்கினைத் தாக்கல் செய்தனர். மேற்படி மனு பல்வேறு நாட்களில் நீதி அரசர்கள் எம். எஸ். ரமேஷ் மற்றும் ஆனந்த வெங்கடேசு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்து பல நாட்கள் விசாரணை நடைபெற்றது. முக்கிய சாட்சியான சுவாதி பிறழ் சாட்சியாக மாறி சம்பவ நாளில் தான் கோவிலில் இல்லை வீட்டில் இருந்ததாகவும் உண்மைக்குப் புறம்பான வெளிப்படையான சிசிடிவி காட்சிகளின் உண்மைகளையும் மறுத்தார். இதனால் கோபமடைந்த நீதி அரசர்கள் சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையைத் தொடங்கினார்கள். மற்றொருபுறம் நீதி அரசர்களே அரிதினும் அரிதாக நேரில் சம்பவ இடத்தைச் சான்றுகளை ஆய்வு செய்யும் நடைமுறையைப் பின்பற்றி இறுதியாக கோகுல்ராசு, சுவாதி சென்ற கோவில், சிசிடிவி பதிவுகள், இடங்கள், ரயில் தண்டவாளம் ஆகியவற்றை நேரில் ஆய்வு செய்தனர். சுவாதி பிறர் சாட்சியாக மாறிய நிலையில் சிசிடிவி பதிவு உள்ளது கோகுல்ராசும் சுவாதியும்தான் என உறுதி செய்தனர். இந்த வழக்கில் நேரடி சாட்சிகள் இல்லாத நிலையில் கொலைக்கான காரணம், கோகுல்ராஜ் தற்கொலை செய்து கொண்டதாக அவரிடமே குறிப்புகளை வலுக்கட்டாயமாக உருவாக்கியது ஆகியவற்றை நீதிமன்றம் கணக்கில் எடுத்துக் கொண்டது.

குறிப்பாகக் கடைசியாகப் பார்த்த ஒன்பது பேருக்கும் தண்டனைக் குறைப்பு இல்லாத சாகும் வரையிலான சிறைத் தண்டனையை அனுபவித்தல் வேண்டும் என ஒரு (last seen theorem) கொலை செய்யப்பட்ட வரை இறுதியாக யார் சந்தித்தார்கள் அணுகினார்கள் என்ற கோட்பாட்டை அரசு தரப்பு விரிவாக எடுத்துரைத்தது.

பல கட்ட விசாரணை மற்றும் இருதரப்பு வாத பிரதிவாதங்களுக்குப் பிறகுக் கீழமை நீதிமன்ற உத்தரவுகளில் 13 14 குற்றவியல் ஆயுள் தண்டனையை ஐந்தாண்டுகளாகத் தளர்த்தியும் யுவராஜ் உட்பட மற்ற ஒன்பது பேருக்கும் தண்டனைக் குறைப்பு இல்லாத "சாகும் வரையிலான" சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பினைக் கடந்த 2-06-2023 அன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உறுதி செய்தது.

உயர்நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பாக எவ்வித முன்பகையும் கொலை செய்யப்பட்டவர் மீது குற்றவாளிகளுக்கு இல்லாத நிலையில், இந்த கொலை நடப்பதற்கு சாதியே காரணமாக உள்ளது எனவும், மேற்படி குற்றவாளிகள் மரண தண்டனை பெறவும் உரியவர்களாகவே இருந்துள்ளனர் எனவும் சாதி வெறியர்களுக்கு எதிரான நீதிமன்றம் சாட்டையை சுழற்றி உள்ளது.

ஆக சமூக சிந்தனையும், சமூக பற்றும் உள்ள மனிதனை மனிதனாக மதிக்கும் சிந்தனையை பெற்றவர்கள் நீதி அரசர்களாக இருந்தாலே போதும் சாதி வெறியர்களும், ஆதிக்க சாதிகளும் தற்காலிகமாவது அடங்கிப் போவார்கள் என்பதற்கு மேற்படி வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பே சான்றாகும்.

எண்ணங்களும் விருப்பங்களும் மட்டுமே தீர்வை வழங்காது. அவற்றை ஊக்கத்துடனும் உறுதியுடனும் அச்சமின்றி, அறிவுக் கூர்மையுடன் சமரசம் இன்றி உழைத்தாலே இலக்கை அடைய முடியும் என்பதற்கு தோழர் ப. பா. மோகன் அவர்களே சான்றாகும். தோழர் ப. பா. மோகனின் அளப்பரிய உழைப்பும் கூர்மையான அறிவும் இந்த வழக்கில் கொட்டிக் கிடக்கின்றது என்பதற்காக அவருக்கு நம்முடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வோம்.

- வழக்கறிஞர் வெற்றி