2022-2023 ஆம் ஆண்டிற்கான கர்நாடகாவின் நிதிநிலை அறிக்கையில் 2022 மார்ச் -ல் காவிரியின் குறுக்கே மேகேதாட்டில் (மேகதாது) அணைக்கட்ட மொத்தம் மதிப்பீடான ரூ.9,000 கோடியில் இவ்வாண்டு ரூ.1000 கோடியை கர்நாடக அரசு ஒதுக்கி யுள்ளது. இது 1892 மற்றும் 1924 ஆகிய ஆண்டுகளில் பிரிட்டிஷ் இந்தியாவில் போடப்பட்ட ஒப்பந்தங்களுக்கும், மேலும் 1974 மற்றும் 2007 ஆகிய ஆண்டுகளில் சுதந்திர இந்தியாவில் போடப்பட்ட ஒப்பந்தங்களுக்கும் எதிரானதாகும். கர்நாடக அரசின் செயலானது காவிரி ஒப்பந்தங்களுக்கு எதிரானது மட்டுமன்று, 1956 மாநிலங்களுக்கு இடையிலான தண்ணீர் தகராறு சட்டம், உச்ச நீதிமன்ற வழிகாட்டல்கள், உலகில் பின்பற்றப்படும் நதிநீர் சிக்கல் தொடர்பான சட்டங்களுக்கும் எதிரானதாகும். காவிரியில் “தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு தண்ணீர் தர முடியாது” என்பதே கர்நாடக அரசின் நிலைப்பாடு.

“காவிரியின் குறுக்கே மேகேதாட்டிலோ அல்லது காவிரியின் வேறு எந்தப் பகுதி யிலோ தமிழக மற்றும் இந்திய ஒன்றிய அரசின் அனுமதி இன்றி கர்நாடக அரசு அணைக்கட்டக் கூடாது” என தமிழ் நாடு சட்டப் பேரவையில் அனைத்துக் கட்சிகளின் துணையுடன் ஒரு மனதாக தீர்மானம் 2022 மார்ச் 21 ஆம் நாள் தி.மு.க. அரசால் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்தை இந்திய ஒன்றிய அரசோ அல்லது கர்நாடக அரசோ கண்டு கொள்ளப் போவதில்லை. கர்நாடக அரசின் மேகேதாட்டு அணைத் திட்டத்திற்கு எதிராக ஏற்கனவே தமிழ்நாடு சட்டப் பேரவையில் 1982, 2014, 2015, 2019 ஆகிய ஆண்டுகளில் இது போன்ற தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக ஏப்ரல் 2014 ‘குமுதம் ரிப்போர்டர்’ குறிப்பிடுகிறது.

cauvery 5901968 - 1980க்கு இடைப்பட்ட ஆண்டு களில் இந்திய அரசின் இசைவு இன்றி, இந்திய அரசின் நீர்வளத்துறை மத்திய நிர்வாக ஆணையம் இவற்றில் அனுமதி இன்றி, இந்திய அரசின் காடுகள் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் தடையில்லாச் சான்று பெறாமலேயே, இந்திய அரசின் திட்டக்குழுவின் அனுமதியின்றியே, காவிரி நதியின் 1892, 1924 ஆகிய ஒப்பந்தங்களுக்கு எதிராக கர்நாடக அரசின் மாநில நிதியலிருந்தே கபினி அணை, ஏரங்கி அணை, ஏமாவதி அணை, யாகாச்சி மற்றும் சுவர்ணவதி ஆகிய ஐந்து அணைகளை சட்டத்திற்குப் புறம்பாக கர்நாடக அரசு கட்டியுள்ளது. இது குறித்து இந்திய அரசோ, நீதித்துறையே கேள்வி எழுப்ப வில்லை. அந்தத் துணிவு தான் மேகேதாட்டில் அணைக் கட்ட கர்நாடக அரசு திட்டம் போட்டு செயல் படுத்தி வருகிறது.

காவிரி சிக்கலும், காவிரி ஒப்பந்தங்களும்

காவிரி குடகு தேசிய இன மக்களின் தாயகமான தலைக்காவேரி என்ற இடத்தில் உருவாகி தமிழ்நாட்டில் காவிரிப்பூம்பட்டினம் அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது. தலைக்காவேரி என்ற இடத்தை தலக்காவேரி என்று குடகிலும், கன்னடத்திலும் அழைக் கிறனர். குடகு என்பது கர்நாடகாவின் ஒரு மாவட்டமாக உள்ளது.குடகு மொழி பேசும் மக்கள் தனியான ஒரு தேசிய இனத்தைச் சேர்ந்தவர். இந்திய உருவாக்கத்திலிருந்து குடகு இன மக்கள் தங்களுக்கு தனியாக மாநிலம் வேண்டும் எனத் தொடர்ந்து போராடி வருகின்றனர். காவிரி குடகு தேசிய இனத் தாயகத்தில் தோன்றினாலும் அதன் பயன் பாட்டு உரிமையாளர்களாக முதன்மையாக தமிழர்கள் (தமிழ்நாடு - புதுச்சேரி) கன்ன டர்கள், குடகினர், மலையாளிகள் ஆகிய நான்கு தனித் தனியான தேசிய இனத்தினர் பரம்பரை உரிமை பெற்றவர்களாக உள்ளனர்.

காவிரிச் சிக்கலானது தமிழ்நாட்டிற்கும், கன்னடர்களுக்கும் மன்னர்களது ஆட்சிக் காலத்திலிருந்தே நீடித்து வருகிறது. கி.பி 1141 முதல் 1173 வரை கர்நாடகத்தை ஆட்சி செய்த போசள நாட்டு அரசன் முதலாம் நரசிம்மன் காவிரியின் குறுக்கே செயற்கை மலைகளை அமைத்து தமிழகம் வரும் தண்ணீரைத் தடுத்தான். சோழ நாட்டை ஆண்ட இரண்டாம் இராசராசன் பெரும் படையுடன் போசள நாட்டின் மீது போர் தொடுத்து முதலாம் நரசிம்மனைத் தோற்கடித்து அணையை உடைத்து காவிரியை மீட்டான். 17ஆம் நூற்றாண்டில் மைசூர் மன்னன் சிக்க தேவராயன் காவிரியின் குறுக்கே அணைக்கட்டி நீரைத் தடுத்தான். வெகுண்டெழுந்த மதுரை ராணி மங்கம்மாள் திரட்டிய படையும், தஞ்சையை ஆண்ட மராட்டியப் படையும் அந்த அணையை உடைக்க மைசூரை நோக்கிப் புறப்பட்டுச் சென்றன. அதற்குள் தானகவே வெள்ளம் வந்து அணை உடைந்து விட்டது. மன்னர்களது ஆட்சிக் காலத்தில் காவிரிச் சிக்கல் இவ்வாறுதான் தீர்க்கப்பட்டது. திப்புசுல்தான் சீரங்கப்பட் டினம் அருகே காவிரியில் குறுக்கே அணைக் கட்ட அடிக்கல் நாட்டியுள்ளார். ஆனால் அணைக் கட்டப்படவில்லை.

1892 காவிரி ஒப்பந்தம்

“மைசூர் அரசின் பாசனப் பணிகள் - சென்னை மைசூர் ஒப்பந்தம் 1892” என்ற ஒப்பந்தம் முதன்முதலாக தமிழ்நாட்டிற்கும், கர்நாடகாவிற்கும் இடையே போடப்பட்டது. இதன்படி மைசூர் அரசின் முதன்மையான ஆறுகள் A அட்டைவணையிலும், சிறிய ஓடைகள் மற்றும் நீர்ப்பிடிப்புகள் B மற்றும் C அட்டவணையிலும் சேர்க்கப்பட்டன. காவிரி மற்றும் 14 ஆறுகள் A அட்டவணையில் சேர்க்கப்பட்டன. ஒருவேளை அணைகள் கட்ட மைசூர் அரசு திட்டமிட்டால் அதனை சென்னை அரசுக்கு அனுப்பி ஒப்புதல் பெறவேண்டும்.இரு தரப்பினருக்கும் சிக்கல் எழுந்தால் அதனை இரு அரசாங்கங்களால் அல்லது இந்திய அரசால் நியமிக்கப்படும் நடுவர் மன்றங்கள் (தீர்ப்பாயங்கள்) முடிவுக்கு விட வேண்டும். சென்னை அரசு தனது பாசனத் திட்டங்களுக்கு பாதிப்பு வராத நிலையில் மைசூரின் புதிய திட்டங்களை மறுக்கக் கூடாது.1892ஆம் ஆண்டு ஏற்பட்ட காவிரி ஒப்பந்தமானது இரு தரப்பினரும் பல கட்டப் பேச்சு வார்த்தைகள், பல கடிதப் போக்குவரத்துகள் மூலமாக தங்களுக்கு இடையிலான பரம்பரை உரிமையை விட்டுக் கொடுக்காமல் ஏற்படுத்திக் கொண்டதாகும். இவ்வொப்பந்தம் மைசூரின் மன்னராட்சியில் மைசூர் பிரித்தானிய நிர்வாகமும்,பிரித்தானிய இந்திய அரசும் செய்து கொண்டதாகும்.

சென்னை மாகாணம் பிரித்தானிய இந்திய அரசின் கீழ் இருந்தது. இவ்வொப்பந்தம் உலக நாடுகளில் நதிநீர் தொடர்பாக நாடுகளுக்கு இடையில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களுக்கு இணையாகவே கருதப்படுகிறது. மத்தியிலும், கர்நாடகாவிலும், தமிழ்நாட்டிலும் அறம் சார்ந்த கொள்கைளைப் பின்பற்றினால் ஒப்பந்தத்தில் எந்தச் சிக்கலும் இல்லை. காவிரிச் சிக்கல் வெறும் ஆற்று நீர் உரிமைச் சிக்கல் இல்லை. கர்நாடகாவில் உள்ள அனைத்துக் கட்சிகளும் “தமிழ் நாட்டிற்கு ஒரு சொட்டு தண்ணீர் தர முடியாது” என்பதிலிருந்து; இது தேசிய இனங்களுக்கு இடை யிலான அரசியல் சிக்கலாக மாறிவிட்டது. எனவே இந்திய பார்ப்பனபனிய முதலாளி வர்க்கம் தனது அரசியல் நலனுக்கு ஏற்ற வகையில் இதனைக் கையாளுகிறது. இதுவே சிக்கல் நீடிக்கக் காரணம்.

1924 காவிரி ஒப்பந்தம்

1906-இல் மைசூர் அரசு காவிரியில் கண் ணம்பாடியில் கிருஷ்ணராஜசாகர் அணைக் கட்டத் திட்டம் போட்டது. கிருஷ்ணராஜசாகர் என்பது மைசூர் மன்னன் பெயர். இதே காலக்கட்டத்தில் சென்னை மாகாண அரசு மேட்டூர் அணைக் கட்டத் திட்டம் போட்டது. இவ்விரு அணைகள் கட்டுவதில் இவ்விரு அரசுகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்படாத தால் பிரித்தானிய இந்திய அரசு இச்சிக் கலை 1913ல் அலாகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி எச்.டி.கிரிஃபின் அவர்களை தீர்ப்பாளராகச் கொண்ட நடுவர் மன்றத்திற்கு (தீர்ப்பாயத் திற்கு) விட்டது. சென்னை, மைசூர் அரசுகள் முறையே மேட்டூர், கண்ணம்பாடி அணை களைக் கட்டிக் கொள்ளலாம் என்று 1914இல் தீர்ப்பாளர் ஆணை வழங்கினார். கண்ணம் பாடியில் அணைக்கட்டும் திட்டத்தை எதிர்த்து சென்னை அரசு பிரித்தானிய இந்திய அரசுக்கு மேல்முறையீடு செய்தது. இம் மேல்முறை யீட்டை இந்திய அரசு நிராகரித்த பின் சென்னை அரசு இலண்டனில் உள்ள இந்திய அமைச்சரக்கு மேல்முறையீடு செய்தது. இதன்படி 1921-1924 வரை பல கட்டப் பேச்சு வார்த்தை நடந்துள்ளன. இறுதியில் 1924 பிப்ரவரியில் கிருஷ்ண ராஜசாகரில் அணைக் கட்டுவது பற்றி இரு தரப்பிற்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. 1892 மற்றும் 1924 ஆகிய இரு ஒப்பந்தங்களையும் போட்ட வர்கள் பிரிட்டிஷ் அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வொப்பந்தப்படியே கிருஷ்ணா ராஜசாகர், மேட்டூர் அணைகள் கட்டப்பட்டன.

1924இல் ஏற்பட்ட காவிரி ஒப்பந்தம் சென்னை-மைசூர் அரசுகள் காவிரியில் கடைபிடிக்க வேண்டி செயல்முறை விதிகளை வகுத்துத் தந்துள்ளது. அந்த விதிகளில் ஒன்று ஒப்பந்தம் செயலுக்கு வந்து ஐம்பது ஆண்டுகள் முடிந்தபின் அனுபவ வெளிச்சத் தில் மறு ஆய்வு செய்து சம்மந்தப்பட்ட அரசுகளின் எல்லைக்குள் மேலும் பாசனத்தை விரிவுப்படுத்துவது பற்றி ஆராய மைசூர் மற்றும் சென்னை அரசாங்கங்கள் ஒத்துக் கொள்கின்றன. இவ்வாறான மறு ஆய்வுகள் மூலம் தக்க திருத்தங்கள் மற்றும் சேர்க்கைகள் செய்து கொள்ள அரசாங்கங்கள் பரஸ்பரம் ஒப்புக் கொள்கின்றன என்று 1924 ஒப்பந்தம் கூறுகின்றது. காவிரி ஒப்பந்தம் 50 ஆண்டுகளுக்குப் பிறகு மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்பதை மட்டுமே கன்னடர்கள் பிடித்துக் கொண்டு 1924 ஒப்பந்தம் காலாவதி யாகி விட்டது என்று வல்லடி வழக்கு செய்கின்றனர்.

சுதந்திர இந்தியாவும் தமிழர்களின் காவிரி உரிமையும்

கன்னடர்கள் மொழிவாரி மாநிலம் கோரி பேராடிய காலத்திலிருந்தே 1924 ஒப்பந் தத்தை எதிர்த்து வருகின்றனர். 1956 நவம் பரில் மொழிவாரி மாநிலம் அமைக்கப் பட்டு புதிய மைசூர் மாநிலம் (தற்போது கர்நாடகம்) உருவான உடனேயே இந்த ஒப்பந்தத்தை மாற்றியமைக்க கோரினர். இதற்காக அம்மாநில பொதுப் பணித்துறை அமைச்சர் சென்னை வந்து தமிழக முதல்வர் காமராசரை சந்தித்துப் பேசினார். காமராசர் கர்நாடகாவின் கோரிக் கையை ஏற்கவில்லை.

காவிரி சிக்கல் நீடிக்கும் போதே 1968க்குப் பிறகு கர்நாடக அரசு 1924 ஒப்பந்தங்களை மீறி சட்ட விரோதமான காவிரியின் குறுக்கே கபினி, ஏமாவதி, ஏரங்கி ஆகிய அணைகளைக் கட்டியது. இதனை எதிர்த்து 1971இல் தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கும், தஞ்சை மாவட்ட உழவர்கள் சார்பில் மன்னை நாராயணசாமி, முரசொலி மாறன் மற்றும் கருப்பையா மூப்பனார் ஆகியோர் தனித்தனியே மூன்று வழக்குகளும் போட்டனர். இவர்களோடு மன்னார்குடி சீனிவாச ஐயங்காரும் உண்டு. இவரின் மகன்தான் மன்னை சீ.இரங்கநாதன்.

இதற்கிடையில் காங்கிரசு கட்சியில் பிளவு ஏற்பட்டது. அகில இந்திய காங்கிரசு தலைவரான கன்னட நிஜலிங்கப்பா விற்கும், காமராசருக்கும் எதிராக, கர்நாடகாவிலுள்ள தேவராசு அர்சுவை வெற்றி பெறச் செய்வ தற்காக இந்திராவின் வேண்டுகோள்படி, இந்திராவுடன் தி.மு.க.தேர்தல் கூட்டணிக்காக கருணாநிதி 1971ல் உச்ச நீதிமன்றத்தில் போட்ட வழக்குகளை 1972இல் திரும்பப் பெற்றார். இச்செயலானது நடுவர் மன்றம் அமைக்க இருபது ஆண்டுகள் தள்ளிப் போக காரணமாக அமைந்தது.அதனை ஒட்டியே 1972இல் இந்திராவின் ஏற்பாட்டில் தமிழ்நாடு முதல்வர் கருணாநிதி, கர்நாடக முதல்வர் தேவராசு அர்சு மற்றும் கேரள முதல்வர் அச்சுதமேனன் ஆகியோர் மத்திய வேளாண் மைத்துறை அமைச்சர் பாபு ஜெகஜீவன் ராம் தலைமையில் பேச்சு வார்த்தை நடத்தினர். அதன்படி காவிரி நீர் தொடர்பாக உண்மையை கண்டறியும் குழு 1972இல் அமைக்கப்பட்டது. அக்குழு காவிரியின் எல்லாப் பாசனப் பகுதி களையும் சுற்றிப்பார்த்து கணக்கீட்டு அறிக்கை கொடுத்தது. அவ்வறிக்கையை அடிப்படையாகக் கொண்டு ஜெகஜீவன்ராம் தலைமையில் 1974 ஒப்பந்தம் கொண்டு வரப்பட்டது. இவ்வொப்பந்தத்தையும் கர் நாடக அரசு ஏற்கவில்லை. கர்நாடக அரசு பேச்சு வார்தையில் ஈடுபட்டுக் கொண்டே சட்டத்திற்குப் புறம்பாக அணைகளையும், ஏரிகளையும், குளங்களையும் வெட்டிய துடன் பாசனப் பரப்பை விரிவுபடுத்தியது. காவிரி நடுவர் மன்றம் கோரி இரண்டாவது முறையாக தமிழகம் சார்பில் உச்ச நீதி மன்றம் செல்வதற்கு இடையே மாநில முதல்வர்கள் மட்டத்திலான பேச்சு வார்த்தைகள் 5 முறையும், அதிகாரிகள் மட்டத்திலான பேச்சு வார்ததைகள் 18 முறையும் நடைபெற்றுள்ளன.எதனையும் கர்நாடக அரசு ஏற்கவில்லை.

இந்நிலையில் தமிழ்நாடு காவிரி நீர்ப்பாசன விளைப்பொருட்கள் விவசாயிகள் நல உரிமைப் பாதுகாப்புச் சங்கம் என்ற அமைப்பை பொன்னுசாமி ரெட்டியார், மன்னார்குடி சீ.இரங்கநாதன் போன்றவர்கள் ஏற்படுத்தினர். அதன்மூலம் காவிரி நடு மன்றம் கோரி உச்சநீதிமன்றத்தில் 1983இல் மீண்டும் வழக்குத் தொடுத்தனர். 1986இல் இவ்வழக் கில் தமிழ்நாடு அரசும் இணைந்து கொண்டது.

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புகள்

1990இல் உச்சநீதிமன்றத் தலைமை நீதியரசர் இரங்கநாத்மிசுரா தலைமை யிலான அமர்வு காவிரி நடுவர் மன்றத்தை ஒரு மாத காலத்திற்குள் அமைக்க நடுவணரசுக்கு கண்டிப்பான ஆணையை வழங்கியது. இதன்படி 1956 மாநிலங்களுக்கு இடையிலான ஆற்றுநீர் சிக்கல் தொடர்பான சட்டப்படி 1990ல் வி.பி.சிங் நடுவர் மன்றத்தை அமைத்தார்.

1990ல் தமிழ்நாடு மற்றும் புதுவை அரசுகள் இடைக்கால நிவாரணம் கேட்டும், 1972இல் முதலமைச்சர் கூட்டத்தின் முடிவு படியே எந்த மாநிலமும் தண்ணீரைத் பயன்படுத்தலாம் என்றும், தேக்கி வைக்க கூடாது என்றும் காவிரி நடுவர் மன்றத் திடம் விண்ணப்பித்தது. இடைக்கால நிவாரணம் வழங்க அதிகாரமில்லை என தமிழக, புதுவை மனுக்கள் காவிரி நடுவர் மன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன. பிறகு தமிழகமும், புதுவையும் உச்சநீதி மன்றத்திடம் இடைக் கால ஆணை கேட்டன. உச்சநீதிமன்ற ஆணைப்படி காவிரி நடுவர் நீதிமன்றம் 1990ல் இடைக்காலத் தீர்ப்பும் 2007ல் இறுதி தீர்ப்பும் அளித்தது.

காவிரி நடுவர் மன்றம் தமிழ்நாட்டிற்கு எதிராக கர்நாடக அரசின் இழுவைக் கெல்லாம் வளைந்து சென்று இடைக்கால தீர்ப்பையும், 2007இல் இறுதி தீர்ப்பையும் அளித்தன.

பிரித்தானிய இந்தியாவில் 1892 மற்றும் 1924 காவிரி ஒப்பந்தங்களை எடுத்துக் கொள்ளமுடியாது என்றும்,தமிழ்நாடு பண்டைக் காலம் தொட்டு பெற்று வந்த மரபுரிமை, அனுபோக உரிமை, இரு மாநிலங்களுக்கிடையில் கடந்த காலங்களில் பெறப்பட்ட கருத்தொற்றுமை எதனையும் காவிரி நடுவர் மன்றம் கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது என்றும் கூறிவிட்டது. கர்நாடகம் கோரியபடி அப்போது நிலவும் சிக்கலின் தகுதி அடிப்படையில் தீர்ப்பு வழங்கியது. இது தமிழர்களின் காவிரி மீதான மரபுரிமையை கர்நாடகம் பறிக்கவும், கடந்த கால ஒப்பந்தங்களை மறுத்து வாதிடவும் வழிவகுத்துள்ளது.

(தொடரும்...)

- பாரி