krishna raja sagara dam

கொட்டிக் கொடுத்த காவிரித் தாயை பிட்டுக் கொடுக்கச் சொல்லி உத்திரவிட்டது காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு. திராவிடக் கட்சிகளின் திறன் மிகு ஆட்சியால் அதையும் கூட ஏற்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டது தமிழகம்.

கடந்த 05.02.2007ல் நடுவர் மன்றம் 'ஆராய்ந்து' வழங்கிய இறுதித் தீர்ப்பின்படி காவிரியின் மொத்த நீரான 740 டி.எம்.சி யில் கர்நாடகம் நமக்கு வழங்க வேண்டியது வெறும் 192 டி.எம்.சி நீரைத்தான்.

உண்மையில் கர்நாடகம் எவ்வளவு நீர் வழங்குகிறது என்பதைவிடவும். அது எப்போது வழங்குகிறது என்பதே முக்கியமானது. ஏனென்றால் இப்போது பிரச்சனை எழ முக்கிய காரணமே ஆண்டுதோறும் நடுவர் மன்றம் அறிவித்த நீர் அளவுப்படி தற்போது சுமார் 50.052 டி.எம்.சி நீரை குறைவாக கா்நாடகா வழங்கியிருக்கிறது என்பது தான்.

நடுவர் மன்றத்தின் உத்திரவுபடி மாதா மாதம் கர்நாடகம் நீர் வழங்க வேண்டிய அளவு....

ஜனவரி. பிப்ரவரி. மார்ச். ஏப்ரல் மற்றும் மே ஆகிய மாதங்களில்
தலா 2.5 டி.எம்.சி நீரையும்
ஜுன் மாதத்தில் 10 டி.எம்.சி யையும்.
ஜுலையில் 34 டி.எம்.சியையும்,
ஆகஸ்டில் 50 டி.எம்.சி யும்,
செப்டம்பரில் 40 டி.எம்.சி நீரையும்,
அக்டோபரில் 22 டி.எம்.சி யையும்,
நவம்பரில் 15 டி.எம்.சி யையும்,
டிசம்பரில் 8 டி.எம்.சி யையும் வழங்க வேண்டும்.

ஆனால் கடந்த 19.02.2013ல் இறுதித் தீர்ப்பானது அரசிதழில் வெளிவந்த காலம் தொட்டு ஒரு ஆண்டு கூட இந்த உத்திரவை மதிக்காமல் கர்நாடகம் நடந்து வருகிறது.

கடந்த 02.06.1990ல் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்ட காலம் தொடங்கி அதன் இறுதித் தீர்ப்பு வரை சுமார் 17 ஆண்டுகள். 568 வாய்தாக்கள் என வழக்கினை இழுத்தடித்து நீர் வளத்தைச் சுரண்டும் துரோகத்தனமான வரலாற்றை பெரும் திறமையோடு கையாள்கிறது கர்நாடகம். அதற்கு எல்லா காலங்களிலும் ஒத்தூதியே வந்திருக்கிறது மத்திய அரசு. தற்போது வரை கூட காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததே இதற்கு சிறந்த உதாரணம்.

இப்போது கூட உச்சநீதிமன்றத்தில் தனது பழைய சித்து வேலையைத்தான் செய்ய விளைகிறது கர்நாடகம்.

மாதந்தோரும் ஏன் நீர் அவசியம் எனில் நமது தமிழகத்தில் மூன்று வகை நெல் விளைச்சலுக்கான பருவங்கள் இருக்கின்றன.

1. குறுவை (ஏப்ரல் முதல் ஜுலை வரை)
2. சம்பா (ஆகஸ்டு முதல் நவம்பர் வரை)
3. நவரை (டிசம்பர் முதல் மார்ச் வரை)

மேற்படி நீர் திறப்பு அளவானது நடுவர்மன்றத்தின் நெடிய தொரு ஆய்வுக்கு பிறகு இரு மாநிலங்கள் 1.மழை நீரின் அளவு 2. பயிரிடும் பரப்புகளுக்கான அளவு ஆகியவற்றை கவனத்தில் கொண்டே உருவாக்கப்பட்டது. ஆனால் தற்போது உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு மாதந்தோரும் நீர் வழங்குவதை கட்டாயமென நடுவர் மன்ற தீர்ப்பில் சொல்லவில்லை எனும் புழுகு மூட்டையை அவிழ்த்து விடுகிறது.

கடந்த 20.09.2016ல் உச்சநீதிமன்றம் வழங்கிய இடைக்கால உத்திரவை ஏற்க மறுத்த கர்நாடக அரசு "உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்று தண்ணீர் தர முடியாது" என தீர்மானம் நரைவேற்றி அணைகளின் கதவை ஒட்ட சாத்திக் கொண்டது. மேலும் நீதிமன்றத்தின் உத்திரவை மறுபரீசீலனை செய்யக்கோரி வழக்கம் போல சீராய்வு மனுவை தாக்கல் செய்தது. பதிலுக்கு தமிழகமும் சீராய்வு மனுவை நீதிமன்றம் உத்திரவிட்ட தண்ணீரை முழுவதும் வழங்கும் வரை விசாரிக்கக் கூடாது என பதில் மனு தாக்கல் செய்தது. இடையில் வாகனங்களை எரித்தும், தமிழர்களை தாக்கியும் அராஜகம் புரிந்தது கர்நாடகம்.

இரண்டு மனுக்களும் கடந்ந (27.09.2016) நீதிபதிகள் தீபக் மிஸ்ரா. யூ.யூ.லலித் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கம் போலவே கர்நாடகம் நீலிக்கண்ணீர் வடிக்க குழப்பமான மனநிலையில் உச்சநீதிமன்றம் மத்திய அரசின் முடிவு கேட்டு கடந்த 30.09.16க்கு ஒத்திவைத்து.

மத்திய நீர்வள மந்திரி உமா பாரதி இருமாநிலத்தவரையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி உடன்பாடு ஏதும் ஏற்படாமல் போகவே மீண்டும் உச்சநீதிமன்றத்துக்கே சென்றது வழக்கு.

உச்சநீதிமன்றமும், முத்தாய்ப்பான ஓர் வரலாற்றுச் சிறப்பு மிக்க உத்திரவை நேற்று வழங்கி உள்ளது. 4 நாட்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டுமென்ற அதன் உத்திரவானது மோடி சர்க்காருக்கும், கர்நாடகத்துக்கும் விஷமாய் விழுந்திருக்கிறது.

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு படி காவிரி மேலாண்மை வாரியத்துக்கு விசாலமானதோர் அதிகாரத்தை அது வழங்கி உள்ளது. அந்தத் தீர்ப்பின் 5 வது தொகுப்பில் 8 வது அத்தியாயத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தின் அமைப்பு பற்றி குறிப்பிடப் பட்டுள்ளது. மேலும் இதன் அதிகார எல்லை குறித்து உச்ச நீதிமன்றம் பல்வேறு முறை சுட்டிக் காட்டி உள்ளது.

நீரின் தேவை, வறண்ட காலங்களில் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் குறிப்பிடப் பட்டுள்ள விகிதாச்சாரப்படி நீரைப் பிரித்து வழங்குவது, மிகச்சரியாக தண்ணீரின் உற்பத்தியை கணக்கிடுவது என அதன் சிறப்பு மிகு பணிகள் நீள்கின்றன. யாவற்றுக்கும் மேலாக அணைகளைக் கையாளும் முழு அதிகாரமும் வாரியத்துக்கு உண்டு. அது பற்றி மேற்குறிப்பிட்ட அத்தியாயம் பத்தி 16ல் குறிப்பிடப் பட்டிருக்கிறது.

கனத்த மனதோடு வாரியத்துக்கான ஆயத்த வேலைகளை செய்யவண்டிய நிர்பந்தத்துக்குத் தள்ளப் பட்டிருக்கிறது மத்திய அரசு.

காவிரி விவகாரத்தைப் பொருத்தவரை இரண்டு தேசியக் கட்சிகளுமே தமிழக எதிர்ப்பு நிலையிலேதான் எப்போதும் இருந்து வந்திருக்கின்றன.

கடந்த உச்சநீதிமன்றத்தின் இடைகால உத்திரவு வந்த உடனேயே காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் நிலையே தேசிய கட்சியின் நிலை அறிவிக்கிறார்.

பா.ஜ.க வின் மோடி கர்நாடக, தமிழகச் சுழல் வேதனை அளிப்பதாகவும். மன நிம்மதியின்றி அவர் தவிப்பதாகவும். சட்டரீதியிலும், பேச்சுவார்த்தைகளிலும் தீர்வு காண முயர்ச்சிக்க வேண்டும் எனவும் நிலாவில் வடை சுடுவது போல கதை அளந்து கொண்டிருக்கிறார்.

தேவ கௌடாவின் உண்ணாவிரத நாடகம் உள்ளிட்ட பல்வேறு அராஜகங்களாலும், மறுபடியும் சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்திருக்கும் நிலையாலும், நிச்சயமாக கர்நாடகம் அவ்வளவு எளிதாக உச்ச நீதிமன்ற உத்திரவுக்கு ஒத்துழைக்காது என்றே படுகிறது.

எல்லாவற்றையும் தாண்டி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் கொடுக்கப்பட்டுள்ள வரைமுறைகளைக் கருத்தில் கொண்டு சரியான அதிகார அமைப்பாக (பாகரா-பியாஸ் போல) காவிரி நடுவர் மன்ற வாரியம் அமைக்கப்பட வேண்டிது அவசியம். மாறாக கண்துடைப்புக்காக வேண்டி வழக்கம் போல ஓர் பொம்மை அமைப்பை நிறுவி மத்திய அரசு, நீதிமன்ற நிர்பந்தத்தில் இருந்து தப்பிக்க விளையுமானால் காவிரியின் கண்ணீர் கதை ஒரு துயர்மிகு தொடர் கதையாகத்தான் இருக்கும்.

- பாவெல் இன்பன், தருமபுரி

Pin It