அன்று ஆண்டு இறுதித்தேர்வு. அதுவும் கணிதத்தேர்வு. அனிதா அதிகாலையிலேயே எழுந்து, குளித்து, படித்து, பள்ளிக்குக் கிளம்பி தன் நண்பர் ஜா இல்லத்திற்கு சொன்ன நேரத்திற்கு வந்து சேர்கிறார்.

ஜா இல்லத்திலோ கதவு அருகே ஒரே பரபரப்பு. ஜாவின் தாயும் தந்தையும் கதவருகில் நின்று கொண்டு கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டு குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டிருக்கின்றனர். அனிதாவிற்கோ ஒன்றுமே புரியவில்லை. அவர்களை வியப்பாய்ப் பார்க்கிறார். இப்படி மனிதர்கள் குறுக்கும் நெடுக்குமாய் பரபரப்பாய் நடந்து இயங்கும் காட்சியைத் திரைப்படங்களில் மட்டுமே பார்த்துள்ளார். அதுவும் மகப்பேறு அறை முன்னால்.

அனிதா வந்ததைப் பார்த்துவிட்டு, ஜாவின் அம்மா, “வாம்மா. ஜா இதோ வந்திடுவாம்மா” என்று கூறிவிட்டு மீண்டும் பரபரப்பு நடைபயணத்தைத் தொடர்ந்தார்.

திடீரென்று ஜாவின் அப்பா, “ஆயிடுத்து” என்றதும் பரபரப்புச் சூழல் மெல்ல குறையத்தொடங்கியது. அனைவரும் வாசல்கதவையே உற்றுப் பார்க்கின்றனர். அனிதா மட்டும் உற்றுப் பார்ப்பவர்களையே வியப்பாய்ப் பார்த்துக் கொண்டிருக்கிறார். வீட்டின் உள்ளே இருந்து ஜா தன் புத்தகப் பையுடன் வெளியே வருகிறார். வெளியே வந்து பார்த்தால், அங்கே தன் நண்பர் அனிதா வந்து காத்து இருப்பதைக் கவனிக்கிறார்.

ஜா, “ஏய் அனிதா. சாரிடி. கொஞ்சம் லேட்டாயிடுத்து. தேங்க்ஸ் சரியான நேரத்துக்கு வந்ததுக்கு” என்றார்.

அனிதா, “பரவாயில்ல” என்றார்.

ஜா, “அப்பா! இப்ப எக்ஸாம்க்கு போகலாமா?”

அப்பா, “போலாம் பட்டு. போய் நல்லா பெஸ்டா எக்ஸாம் எழுது” என்றார்.

ஜா, “சரிப்பா”

அம்மா, “ஏண்டி நெத்தியில் குங்குமம் எங்க? ‘ராமஜெயம்' 1000 முறை சொல்லச் சொன்னேனே. சொன்னியோன்னோ? நெற்றியில் குங்குமம் இல்லையே.” என்றார் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு.

ஜாவின் அம்மா வீட்டு உள்ளே சென்று குங்குமச் சிமிழை எடுத்து வந்து, ஒரு சிட்டிகைக் குங்குமத்தைக் கிள்ளி எடுத்து ஜாவின் நெற்றியில் குங்குமம் வைத்துக் கொண்டே, “மார்க் கீர்க் கொறஞ்சா என்னடி ஆவறது?” என்றார் வெற்றிப் பெருமிதத்துடன்.

இவ்வளவு நேரம் பெரியவர்கள் பேசுவதை அமைதியுடன் கேட்டுக் கொண்டிருந்த அனிதா, குங்குமம் வைக்கவில்லை என்றால் மார்க் குறைஞ்சிடும் என்று ஜாவின் அம்மா சொன்னதைக் கேட்டவுடன், மனதுக்குள் மென்மையாய் சிரித்துக் கொண்டார்.

ஒருவழியாக ஜா வீட்டு வாசல் களேபரங்கள் முடிய, ஜாவும் அனிதாவும் தெருவில் நடக்கத் தொடங்கினர்.

கணக்கு தேர்வு என்பதால், அனிதா தன் மனதுக்குள் Formula-வை ஒப்புவித்துப் பார்த்துக் கொண்டே நடந்து வருகிறார்.

ஜாவோ மனதுக்குள் ‘ராமஜெயம்’ சொல்ல வேண்டியது பாக்கி இருக்கிறதே என்று அவற்றை மனதுக்குள் சொல்லிக் கொண்டே நடந்து வருகிறார்.

மூன்று தெரு நடந்திருப்பார்கள்.

ஜா,”இன்னைக்கு நல்லா படிச்சிட்டு வந்திருக்கியா?” என்றார்.

அனிதா, “ம். ஏதோ முடிஞ்சத படிச்சிருக்கேன். பாப்போம். நீ எப்படி படிச்சிருக்க?”

ஜா, “ஏதோ படிச்சிருக்கேன். படிக்கறது கூட பாதிதான். பூஜை புனஸ்காரம், நல்ல நேரம், அந்த நேரம், இந்த நேரம் அப்படின்னு எங்க வீட்ல ஏகப்பட்ட கட்டுப்பாடு.”

அனிதா, “நா கூட கேக்கனும்னு நெனச்சேன். காலைல உங்க வீட்ல வாசல்ல நின்னு எல்லாரும் பரபரப்பா நின்னுட்டு இருந்தாங்களே. அது ஏன்?”

ஜா, “ஓ! அதுவா. இன்னைக்கு பப்ளிக் எக்ஸாமோன்னோ, அதான் தேர்வுக்கு புறப்படறச்சே நல்ல நேரத்தில் கிளம்பிப் போகச் சொல்லி சொன்னா, அதான். நீ சொன்ன நேரத்துக்கு டான்னு வந்திட்டியே. சூப்பர்டி. எங்க வீட்ல அது முடியல.”

அனிதா, “அதென்ன நல்ல நேரம்? அப்படின்னா என்ன?”

ஜா, “அது என்னவோ எனக்குத் தெரியாது. எனக்கு தெரிஞ்சத சொல்றேன். தினமும் எங்க அம்மாவும் அப்பாவும் சுவற்றில் தொங்கும் காலண்டர்ல ஏதோ Tabular columnல ஒரு லிஸ்ட் பாப்பாங்க அதுல ஒரு row ‘நல்ல நேரம்’ row. நல்ல நேரம் அப்படின்னா அந்த நேரத்தில தொடங்கற காரியம் சுபமா நடக்கும் அப்படின்னு எங்க ஆத்துல சொன்னாங்க.”

அனிதா, “தினமும் பாப்பாங்களா?”

ஜா, “ஆமாம்.”

அனிதா, “நாளைக்கு உள்ள நல்ல நேரம் இன்னைக்கே தெரியுமா என்ன?”

ஜா, “ஆமாம். காலண்டர்ல அதெல்லாம் இருக்குமாம்.” என்றார் அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டே.

அனிதா, “அது எப்படிடி? பேருந்து எல்லா நேரமும் ஓடிட்டு இருக்கு. ட்ரெயின் எல்லா நேரமும் ஓடிட்டு இருக்கு மின்சாரம் எல்லா நேரமும் கிடைச்சிட்டு இருக்கு. விமானம் எல்லா நேரமும் பறந்திட்டு இருக்கு.ஆம்புலன்ஸ் எல்லா நேரத்திலயும் இயங்கிட்டு இருக்கு. காவல்துறை எல்லா  நேரத்திலயும் இயங்கிட்டு இருக்கு. உணவுக்கடை எல்லா நேரத்திலயும் இயங்கிட்டு இருக்கு. இதெல்லாம் மட்டும் ஏன் நல்ல நேரத்தில் மட்டும் இயங்காம எல்லா நேரத்திலயும் இயங்குது?”

ஜா, “உன்கிட்ட வாய் கொடுத்து என்னால மாளாதுடி. ஏதோ ஐதீகம், பழக்கம், வழக்கம், நம்பிக்கை, மரபு, பாரம்பரியம், கலாச்சாரம் அப்படின்னு எங்க ஆத்துல சொன்னத சொன்னேன். பார்ப்போமே மார்க் வந்தவுடன் யாருக்கு எவ்ளோ மார்க் வருதுன்னு.” என்றார் சிணுங்கலுடன்.

அனிதா, “சரிடி கோச்சுக்காத. நீயும் நல்ல மதிப்பெண் எடு. நானும் நல்ல மதிப்பெண் எடுக்கறேன். எங்க அம்மா அப்பா, எனக்கு ‘அந்த நேரம்-இந்த நேரம்’ ‘நல்ல நேரம்-நொல்ல நேரம்’ எல்லாம் சொல்லித் தரலடி. அன்பு, அறிவு, உழைப்பு, அர்ப்பணிப்பு இருக்கனும்னு சொல்லி இருக்காங்கடி. அவ்ளோதான்”

ஜா, சிறிது யோசித்துக்கொண்டே “ம். எனக்கும் அதுதான் சரின்னு படறது”

பேசிக்கொண்டே வந்ததில் இருவரும் பள்ளிக்கூடம் வந்திருந்தினர். தேர்வு அறையை நெருங்கினர்.

இருவரும் தேர்வு அறைக்குள் செல்கின்றனர். தேர்வு நடைபெறுகிறது. தேர்வு முடிந்து இருவரும் மீண்டும் சந்திக்கின்றனர்.

ஜா, “ஏய் அனிதா எப்படிடி பரீட்சை செஞ்ச?”

அனிதா, “ஏதோ செஞ்சேன். ஓரளவுக்கு நல்லா செஞ்ச மாதிரி இருக்கு. மார்க் வரட்டும் பார்ப்போம். சரி நீ எப்படி செஞ்ச.”

ஜா, “அத ஏண்டி கேக்கற? பரீட்சையில பாதியில Formula எழுதற சமயத்தில ராமஜெயம்தான் ஞாபகத்துக்கு வந்து தொலையறது. ஒரு Formula எழுதும் போது, ராமஜெயம்னு எழுதித் தொலச்சிட்டேண்டி. அத புரிஞ்சுகிட்டு சுதாரிச்சு திருத்தறதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆயிடுத்துடி”

அனிதா வாய் விட்டுச் சிரிக்கிறார்.

ஜா,”ஏண்டி? என்ன பாத்தா காமெடியா இருக்கா?”

அனிதா, “ஆமாம் இருக்காதா பின்ன. ‘பை ஆர் ஸ்கொயர்’ (πr2) எழுதற நேர்த்தில் ‘பை ராமர்' ன்னு ஞாபகம் வந்தா பின்ன சிரிக்காம என்னடி செய்வேன். நெனச்சாலே சும்மா கிர்ருன்னு தல சுத்துது. நெனச்ச எனக்கே இப்படின்னா, எழுதுன உனக்கு எப்படி இருக்கும்ன்னு நெனச்சேண்.அதான் சிரிப்பு வந்திட்டு” என சிரிக்கிறார்.

இருவரும் தம் இல்லம் சேர்கின்றனர்.

காலம் காலண்டருக்குள்ளா கட்டுண்டு இருக்கிறது? காலம் தன் கடமையாய் தன் இயக்கத்தை இயக்கியது. ஒருமாதம் உருண்டு ஓடுகிறது. தேர்வு முடிவு வெளியாகிறது. இணையத்தில் தேர்வு முடிவு வெளியான நேரம், காலண்டர் படி நல்ல நேரம்தான்.

ஜா எடுத்த மதிப்பெண், 850/1200

அனிதா எடுத்த மதிப்பெண், 1176/1200

ஆனால், உண்மையில் யாருக்கு நல்ல நேரம்?    

Pin It