கடவுளைப்பற்றி நான் எதிர்ப்பாய் இருக்கிறேன் என்றால், ஏனப்படி இருக்கிறேன் என்று - ஒரு கடவுள் பக்திக்காரரும் சிந்திப்பதில்லையே.
நான் ஏன் கடவுளை ஒழிக்க வேண்டுமென்கிறேன் ? கடவுளை உண்டாக்கிக் கொண்ட எவருமே - யோக்கியமான அல்லது யோக்கியத் தன்மையுடைய கடவுளை ஏற்படுத்திக்கொள்ளவில்லையே!
அவரவர் சுயநலத்திற்கேற்ப, முட்டாள்தனத்திற்கேற்ப, ஒழுக்கமற்ற, நேர்மையற்ற, சக்தியற்ற கடவுள்களையும், தங்கள் தங்கள் சுயநலத்திற்கேற்ற கடவுள்களையும், தம் எதிரிகளைஒழிக்க வேண்டுமென்கிற ஆவலுக்கேற்ற கடவுள்களையும் உண்டாக்கிக் கொண்டால், அவற்றை - அவற்றால் பாதிக்கப்படுபவர்களும், அறிவாளிகளும் ஏற்றுக் கொள்ள முடியுமா? சுயநலமற்றவர்கள் ஏற்றுக் கொள்வார்களா?
உலக மனித சமுதாயத்திற்கு ஒருவன் தொண்டு செய்ய வேண்டுமானால், முதல் தொண்டாக இப்படிப்பட்ட கடவுள்கள் ஒழிப்பு வேலையில் இறங்கினால்தானே அவன் உண்மையான, யோக்கியமான, அறிவாளியான தொண்டனாக இருக்க முடியும்?
உதாரணமாக, ஒரு மனிதன் தான் மற்ற மனிதனைவிட மேலான, மேல் பிறவியான உயர்சாதி மனிதன் என்று சொல்லிக்கொண்டு அதற்காகவென்று ஒரு கடவுளையோ பல கடவுள்களையோ கற்பித்துக்கொண்டு, அதுவும் அயோக்கியத்தனமான, ஒழுக்கங்கெட்ட கடவுள்களைக் கற்பித்துக்கொண்டு, ‘அவைகள்தாம் என்னை எங்களை உயர்சாதியாய்ப் பிறப்பித்தது’ என்றால் - அந்த உயர் சாதியல்லாத மற்றவன் அதனால், அவற்றால் இழிசாதி, கீழ்ச் சாதியமாக ஆக்கப்பட்டவன் அந்த - அவற்றிற்கு ஆதாரமாகக் காட்டப்படும் கடவுளை - கடவுள்களை ஒழிக்க, அழிக்க, சின்னப்படுத்த முன்வராதவன் மனிதனாவானா? அறிவாளியாவானா? மானமுள்ளவனாவானா? தன்னை மனிதன் என்று சொல்லிக்கொள்ளத் தகுதியுடையவன் ஆவானா?
கடவுள் நம்பிக்கைக்காரர்கள் யாராகத்தான் இருக்கட்டுமே, அவர்களை, ‘எதற்காகக் கடவுள் ஏற்பட்டது? அதனால் உனக்கு என்ன பலன்?’ என்று கேட்டால், என்ன பதில் சொல்லுவான்? அவன் ஏதாவது ஒரு பதிலைச் சொல்லுவானானானல் ‘அதனால் எல்லா மக்களும் பயனடைகிறார்களா? மகிழ்ச்சியடைகிறார்களா? யாராவது துக்கம், வேதனை, இழிவு, கவலை அடையாமல் இருக்கிறார்களா? என்றால் என்ன பதில் சொல்லுவான்? மகிழ்ச்சி, நலம், மேன்மையடைந்திருக்கும் எவனும், ‘கடவுள் சித்தத்தால்” என்றால் என்ன பதில் சொல்லுவான்? அவற்றிற்கு நேர்மாறான துன்பம், தொல்லை, கவலை அடைந்து கொண்டிருப்பவன் முட்டாளாய் இருந்தால், ‘கடவுள் சித்தம்” என்பான். ஏனப்படியென்றால், ‘என் கர்மம்” என்பான். இப்படிப்பட்ட அயோக்கியர்களுக்காக, மடையர்களுக்காக நாமும் இவர்களோடு சேர்ந்து கொண்டு இந்தக் கடவுள்களைக் காப்பாற்றுவதா?
‘உயர்’சாதிக்காரன், ‘நலன் அனுபவிப்பவன்’ கடவுளைக் காப்பாற்றினால் - ‘தாழ்ந்த’ சாதிக்காரன், ‘கேடு அனுபவிப்பவன்’ கடவுளை ஒழிப்பது என்பதுதானே நியாயமும், நேர்மையுமாகும்; அறிவுமாகும்?
அப்படிக்கில்லையானால், அவன் அடிமை, மானமற்றவன், கூலி, சுயநலக்கார மடையன் என்றுதானே கொள்ளப்பட வேண்டும்?
ஆகவே, தோழர்களே,
கவலையும், துன்பமும், இழிவும் உள்ளவர்களே சிந்தியுங்கள். தங்களுக்கு விமோசனம், விடுதலை, மனிதத் தன்மை - கடவுள் ஒழிப்பிலும், அழிப்பிலும், இழிவுபடுத்துவதிலுந்தானிருக்கிறது.
இதனால், யோக்கியமான, அறிவாளியான யார் மனமும் புண்பட இடமில்லை. சுயநலத்திற்காகச் சிலர் ஆத்திரப்படலாம்; ‘மனம் புண்படுகிறது” என்று சொல்லலாம். அதைப்பற்றிக் கவலைப்படாதீர்கள்; சிறிதும் அச்சப்படாதீர்கள். நாம் யாரையும் அவர் மனம் புண்படுவதற்காக இதைச் சொல்லவில்லை; செய்யவில்லை, இதற்காக அறிவறறவர்களால், சுயநலக்காரர்களால், கூலிகளால் நமக்குத் தொல்லை ஏற்பட்டால், மகிழ்ச்சியோடு ஏற்று, மானத்தோடு பாய்ந்தெழுங்கள், யார் மீதும் வெறுப்பு, குரோதம் கொள்ளாதீர்கள்.
(நூல் : ‘கடவுள் ஒரு கற்பனையே” - 1971)