ஆயிரத்தில் மதிப்பெண் இருந்தும் ஆயிரமாயிரம் கவலைகள் தோன்றுகின்றன பொதுத்தேர்வு எதிர்கொண்ட மாணவர்கள் மனதினில். ஆடிப்பாடி புத்துணர்ச்சியுடன் கொண்டாட வேண்டிய மாணவர்கள் மனதினை ஆட்டிப்படைப்பதாய் உள்ளது நீட் தேர்வு. ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் கனவுகளை ஏக்கமாக்கும் வைரஸாகவே இது பரவி வருகிறது. அடிப்படைக் கல்வி முதலே மத்திய அரசின் கீழ் படித்து வரும் மாணவனுடன் மாநில சமச்சீர் கல்வி முறையையே பயின்று வரும் மாணவன் எவ்வாறு சரிநிகராகப் போட்டியிட முடியும்? இதனை நன்கறிந்த மத்திய அரசும், அதற்கு உடன்போகும் உச்சநீதிமன்றமும் இரு பிரிவினரையும் ஒரே அளவு கோலினால் அளக்க முற்படுவது என்ன நியாயம்? இந்தியா முழுவதும் மத்திய பாடத்திட்டத்தினைத் திணிப்பதற்கான ஓர் ஆயுதமாகவே நீட் தேர்வினைக் கையில் எடுத்துள்ளது அம்பலம். இது மேல் வர்க்கத்தினை மட்டுமே ஆதரிக்கும் செயலாக உள்ளது.

பெரும்பாலும் மத்திய பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களும் வசதியின் மூலம் சிறப்பு வகுப்பிற்கு செல்பவருமே அரசு கல்லூரி இடங்களைத் தட்டிச் சென்று விடுகின்றனர். இதன் காரணமாக பொதுத்தேர்வில் நிறைய மதிப்பெண் பெற்றிருந்தாலும், இத்தேர்வினால் சுயநிதிக் கல்லூரிகளில் பல லட்சங்கள் செலுத்தி பயிலும் நிலையே நடுத்தர வர்க்கத்தினருக்கு உண்டாகின்றது. இதனைப் பயன்படுத்தி அதிக பணம் வசூலித்து வகுப்பு நடத்தும் அசாதாரண நிலையே நிலவுகிறது. காலை முதல் மாலை வரை வகுப்பு நடத்தி மாணவர்களை ஓர் உளவியல் ரீதியான அச்சுறுத்தலுக்குள் கொண்டு செல்கின்றனர். இதைப் போன்ற ஓர் சூழலில் தான் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற மாணவர்கள் தேர்வை அணுகுகின்றனர்.

தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கானத் தொகையைச் செலுத்தவே பலர் இன்னல் படும் வேளையில், தேர்வு மையங்களைப் பல கிலோமீட்டர்கள் தாண்டி அமைத்திருப்பது அவலத்திலும் அவலம். மத்திய மாநில அரசுகள் எத்தனையோ போட்டித்தேர்வுகள் நடத்திய போது தமிழகத்தில் இருந்த இடங்கள் தற்போது எங்கே சென்று விட்டன? இதில் தமிழக மாணவர்களுக்கு மட்டும் தான் அவர்கள் விருப்பமின்றி பிற மாநிலங்களில் தேர்வு மையம் அமைக்கப் பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, குறித்த நேரத்தில் குறிப்பிட்ட இடத்தை அடைவதற்குள் தேர்வர்களும் பெற்றோரும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினர். தேர்வு வளாகத்திற்குள் நுழைவதற்கான நேரம் சிலருக்கு 7.30 மணியாக இருந்ததனால் பலரால் உணவு உண்ண இயலவில்லை. இது போதாதென இந்த ஆண்டு முதல், ஆயுர்வேதம் சித்த மருத்துவம் போன்ற படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப் பட்டுள்ளது. கல்வி வியாபாரம் ஆக்கப்பட்டு வருவதே இதன் பின்னணி.

மேலும், நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவிகள் துப்பட்டா அணிய அனுமதிக்கப் படவில்லை. இதனைப் போன்ற விஷயங்கள் தனிநபர் சார்ந்தவை. துப்பட்டா பறிக்கப்பட்ட பெண்களின் புகைப்படத்தை பெரிதளவில் பரப்புவதை விட அநாகரிகம் வேறென்ன இருக்க முடியும்?  தீவிரவாதிகளை சோதிப்பதைப் போல் காதுக்குள் டார்ச்  அடித்தது போன்ற செயல்களினால்  அனைவரும் வேதனை அடைந்தனர்.

இத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் சில உயிர்களையாவது பறித்துச் சென்று விடுவது வெளிப்படை. அனிதா அக்காவின் முடிவு இனி எவராலும் தேர்வு செய்யப் படக்கூடாத முடிவு. ஆனால், அவரின் பின்னணியும் படிப்பும் அனைவருக்கும் ஊக்கமளிக்க வல்லது. அவர் இந்த சமூகத்திற்கானவராக வாழ்ந்திருக்க வேண்டியவர். அதிகாரமும் அநீதியும் செய்த இந்த படுகொலையினால் ஏற்பட்ட இழப்பை எவரால் ஈடு செய்ய முடியும்? இத்தகைய ஓர் முடிவை எடுக்க அவர் மனம் கடந்து வந்த பாதையை வார்த்தைகளால் விளக்க இயலாது. அனிதா என்பவர் ஓர் சாதிக்குள் அடக்கப்படக் கூடாதவர். தன் தகுதிக்கான தீர்ப்பிற்காக அவர் போராடினார் என்பதே நிதர்சனம்.  நம் நாட்டின் நீதிமன்றங்களில் நிற்கும் நீதி தேவதைகளின் கண்கள் கட்டப்பட்டிருப்பதால் அனிதா என்னும் எழிலோவியத்தின் கண்ணீர் அவளுக்குத் தெரியவில்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது. எத்தனை சிரமங்கள் வந்தாலும் மகனை மருத்துவராக்க வேண்டும் என சென்ற தந்தை இறந்தது கூட தெரியாமல் மகன் தேர்வு எழுதிக் கொண்டிருந்தான். அந்த சிறுவனுடைய கேள்விக்கான பதிலை காற்றில் தான் தேட முடியும்.,. நீட் அனைவரின் மனதிலும் ஒரு நீள் துயரமாகவே மாறி விட்டது.

பொதுவாக ஓர் ஆண்டிற்கு அரசு மருத்துவக் கல்லூரியில் 13000 ரூபாயும், இதர கல்லூரிகளில் ஐந்து லட்சமும் வசூலிப்பது இயல்பாக இருந்தது. ஆனால், நீட் தேர்வு வந்ததற்குப் பின்னர் வெளிப்படையாகவே கோடிக்கணக்கான ரூபாய் கட்டணமாக  வசூலிக்கப் படுகிறது. "மருத்துவ படிப்பு இல்லையென்றால் வேறு படிப்பே இல்லையா?" என கேட்கும் நபர்கள் தான் இங்கு ஏராளம். நீட் என்ற ஒற்றைச் சொல்லால் எத்தனை எத்தனையோ மாணவர்களின் கனவுகள் பறிபோகும் நிலை நிகழ்ந்து வருகிறது. இவை அனைத்தும் விளிம்பு நிலை மக்களுக்கு எதிரான தந்திரம்.

 ஆக தொலை தூரத்தில் தேர்வு மையம், அலைச்சல், ஆடைக் கட்டுப்பாடு என அனைத்தையும் எதிர்கொண்டு தான் தேர்வெழுதச் செல்ல நேர்ந்தது. தன் கனவுகள் எவராலோ தட்டிப் பறிக்கப் படுகிறது என அறிந்தும் அவனால் எப்படி விரக்தி அடையாமல் இருக்க முடியும். சர்வாதிகாரம் என்னும் ஓங்கிய கையின் விரல்கள் என்றேனும் துண்டிக்கப் படும்.. அந்த நாளை நோக்கி

தமிழகம்..!