உயர்கல்வியை ஒன்றிய அரசின் கட்டுப்பட்டுக்குள் முழுமையாக கொண்டுவரும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட அமைப்பு தான், தேசிய தேர்வு முகமை (National Testing Agency- NTA). இது நீட் (NEET) மற்றும் UGC-NET தேர்வுகளில் முறைகேடுகளுக்குப் பின் அதிகம் பேசுபொருளாகியுள்ளது.
இதில் UGC-NET என்பது பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் (Assistant Professor) மற்றும் இளநிலை ஆராய்ச்சி நிதியுதவி (Junior Research Fellowship) பெருவதற்கான தகுதியைத் தீர்மானிப்பதற்காக நடத்தப்படும் அகில இந்திய அளவிலான தேர்வு. இந்தத் தேர்வுகளில் நடந்த முறைகேடுகள் வெறும் நிர்வாகப் பிழைகள் மட்டுமல்ல; மோடி அரசு கல்வித்துறையில் செய்து கொண்டிருக்கும் மிகப்பெரிய மோசடியின் சிறிய உதாரணம்.
இந்தியாவில் லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் பல முக்கியமான தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு முகமை, சட்டபூர்வமாக உருவாக்கப்பட்ட அமைப்பு அல்ல. இது பாராளுமன்ற நடைமுறை இல்லாமல், 2017இல் ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் உயர் கல்வித்துறையின் கீழ் ஒரு தன்னாட்சி அமைப்பாக தேசிய தேர்வு முகமை உருவாக்கப்பட்டது. இதன் முதன்மையான வேலை, வெளிப்படைத் தன்மையுடன் உலக தரத்திலான நுழைவுத் தேர்வுகளை நடத்துவது. இது சங்கங்கள் பதிவு சட்டத்தின் (Societies Registration Act) கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.ஆனால், இதனைப் போன்ற UPSC (குடிமைப் பணி தேர்வுகளை நடத்தும் ஆணையம்) உள்ளிட்ட அமைப்புகள் எல்லாம் பாராளுமன்றத்தில் தனியாக சட்டம் இயற்றி உருவாக்கப்பட்டது. மோடி அரசு சனநாயகத்தையும், பாராளுமன்றத்தையும் மதிக்காமல் அவற்றைக் கேலிக்கூத்தாக்குவதன் அடையாளம் தான் இது. மேலும், இந்த முகமை ஒரு ஆளும் குழுவால் (governing body) வழிநடத்தப்படுகிறது. ஒன்றிய அரசின் இதர நிறுவனங்களைப் போல ’பொதுக்குழு’ என ஒன்று இல்லை. இது ஒரு பாராளுமன்ற சட்டத்தால் நிர்வகிக்கப்படவில்லை என்பதால் அரசு ஊழியர்களின் நடத்தையை நிர்வகிக்கும் சட்ட விதிகளுக்கு உட்பட்டது அல்ல. கொரோனா காலத்தில் உருவாக்கப்பட்ட PM Cares Fund போன்றது. சுருக்கமாக சொன்னால், தேசிய தேர்வு முகமை என்பது ஒன்றிய அரசு நடத்தும் தனியார் சங்கம் போன்றது.
இதன் தலைவராக உள்ள பிரதீப் குமார் ஜோஷி என்பவர் ஆர்எஸ்எஸ் விசுவாசி என்பதையும் வியாபம் ஊழலில் முக்கிய பங்காற்றியவர் என்பதையும் மே 17 இயக்கம் கட்டுரையில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
http://may17kural.com/wp/union-gvernment-institutions-are-rss-under-bjp-rule/
ஊழலே செய்யாத கட்சி என தம்பட்டம் அடித்துக் கொள்ளும் பாஜகவின் ஊழல் பெருமுகம் தான் பிரதீப் குமார் ஜோஷி. இவர் கல்விசார்ந்து எந்த ஒரு குறிப்பிடத்தக்க சாதனைகளையோ, ஆராய்ச்சிகளையோ செய்தவரல்ல. போதிய நிர்வாக அனுபவம் இல்லாத போதிலும், ஆர்எஸ்எஸ் பரிந்துரையினால், ஜோஷி பாஜக அரசின் பல செல்வாக்குமிக்க பதவிகளை அடுத்தடுத்து வகித்து வருகிறார்.
தேசிய தேர்வு முகமை உருவாக்கப்படுவதற்கு முன்பு, பல்கலைக்கழக மானியக் குழு (UGC), மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (JNU) போன்றவை தாங்களே தத்தமது நுழைவுத் தேர்வுகளை நடத்தி வந்தன. 2018க்குப் பிறகு இந்தத் தேர்வுகள் உட்பட 20க்கும் மேற்பட்ட முக்கியமான நுழைவுத் தேர்வுகளை, தேசிய தேர்வு முகமை நடத்தும் அதிகாரத்தை ஒன்றிய கல்வி அமைச்சகம் வழங்கியது. இந்த ஏழு ஆண்டுகளில் இதன் பொறுப்பில் நடந்த 12 தேர்வுகளில் இதுவரை முறைகேடுகள் நடந்தது வெளிப்படையாக அம்பலமாகியுள்ளது. மேலும், மோடி அரசு 2020இல் வெளியிட்ட ‘புதிய கல்விக் கொள்கை’ இந்தியா முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் நுழைவுத் தேர்வுகளை NTA நடத்துவதற்கு பரிந்துரைத்திருக்கிறது.
தேசிய தேர்வு முகமையில் பல பிரச்சனைகள் உள்ளன. முதலில், இந்த நிறுவனம் கணினி அடிப்படையிலான போட்டித் தேர்வுகளை நடத்துவதற்காக மட்டுமே உருவாக்கப்பட்டது. கணினி தேர்வுகள் மூலம் வினாத்தாள் கசிவது, தேர்வுக்கு பிந்தைய விடை தாளில் முறைகேடுகள் செய்வது உள்ளிட்டவற்றையும் தவிர்க்க முடியும் என அதன் இணையதளத்திலேயே கூறப்பட்டுள்ளது. CBSE நடத்திவந்த UGC-NET தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்த ஆரம்பித்தபோது, விடைத்தாளில் எழுதுவதிலிருந்து கணினி மூலம் எழுதும் தேர்வாக மாற்றியது. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, எந்தவொரு காரணமும் இன்றி, இந்த வருடம் (2024) மீண்டும் பழைய முறையில் (விடைத்தாளில் எழுதும் முறை) இந்த தேர்வை நடத்தியுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. 11 லட்சம் பேர் எழுதிய இந்த தேர்வு நடந்து முடிந்த அடுத்த நாளே ஒன்றிய கல்வி அமைச்சகம் இந்த தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக ரத்து செய்துவிட்டது. இதற்கான மறு தேர்வு கணினி முறையில் ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 4 வரை மீண்டும் நடத்தப்படும் என NTA அறிவித்துள்ளது.
முதலாவதாக, நீட் தேர்வை இந்த நிறுவனம் நடத்தும் பொறுப்பை ஏற்ற போது, சுகாதார அமைச்சகம் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் கணினி முறை தேர்வை ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் படி நீட் தேர்வை கணினி முறையில் நடத்த முடியாது. எனவே தேசிய தேர்வு முகமை, அதற்கு பழக்கமில்லாத ஒரு முறையில் நீட் தேர்வை நடத்த கட்டாயப்படுத்தப்பட்டது.
இரண்டாவதாக, இந்த தேர்வு முகமைக்குக் கொடுக்கப்பட்ட இவ்வளவு பெரிய வேலைகளை செய்ய போதுமான ஊழியர்கள் இல்லை என்பது கல்வியாளர்களின் கருத்து. இந்த நிறுவனம் வெறும் 25 நிரந்தர ஊழியர்களை மட்டுமே கொண்டு உருவாக்கப்பட்டது. இதன் முக்கியமான பல செயல்பாடுகளை ஆரம்பம் முதலே தன் தொழில்நுட்ப பங்காளிகளுக்கு (technical partners) கொடுத்துவிட்டது. 2024இல் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த 24 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் இந்தியா முழுமைக்கும் 5000 மையங்களில் தேர்வு எழுதினர். ஆனால் இவ்வளவு பெரிய தேர்வை நடத்தும் அளவுக்கு மனித வளம் மற்றும் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு இந்த நிறுவனத்துக்கு நிச்சயமாக இல்லை.
மூன்றாவதாக, NTA தனியார் நிறுவனங்களிடம் இந்த பெரும்பாலான வேலையை கொடுத்து விடுகிறது. TCS நிறுவனம், NTA தேர்வுகளை நடத்துவதற்குரிய உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மனிதவள உதவிகளை வழங்குகிறது. இது மிகப் பெரிய பிரச்சனை.
நான்காவதாக, NTA இவ்வளவு பெரிய விடைத்தாளில் எழுதும் தேர்வை நடத்துவதற்கு போதுமான வலுவான பொறிமுறையை (mechanism) உருவாக்கத் தவறிவிட்டது. அதாவது, வினாத்தாள் உருவாக்குவது மற்றும் அதன் பாதுகாப்பு, வினாத்தாள் அச்சடிக்கும் அச்சகத்தை தேர்ந்தெடுப்பது, தேர்வு மையத்தை தேர்ந்தெடுப்பது, அச்சகத்தில் இருந்து தேர்வு மையத்துக்கு கொண்டு செல்வது, வினாத்தாளை பாதுகாத்து விநியோகிப்பது மற்றும் விடைத்தாளை சேகரித்து பத்திரமாக திருத்தம் மையத்துக்கு அனுப்புவது உள்ளிட்ட இத்தனை செயல்பாடுகளுக்கும் போதுமான வலுவான செயல்பாட்டு வரைமுறைகளை உருவாக்கவில்லை. இதனை இந்தியா முழுவதும் செயல்படுத்தும்போது, வலுவான பாதுகாப்பு பொறிமுறைகள் இல்லாததால் ஒவ்வொரு நிலையிலும் முறைகேடுகள் நடக்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.
- 2021இல் நடந்த கணினி அடிப்படையிலான JEE (Mains) தேர்வில் ஹரியானாவில் ஒரு தேர்வு மையத்தில் தொலைநிலை அணுகல் (remote access) மூலம் தேர்வு எழுதப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு பயிற்சி மைய நிறுவனர்கள் சிபிஐயால் கைது செய்யப்பட்டனர். பின்னாடி இதே வழக்கில் ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு நபர் டெல்லி விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
- 2020 ஆம் ஆண்டில், JEE (Mains) என்ற தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவன (NIT) நுழைவுத் தேர்வில் அசாம் மாணவர் ஆள் மாறாட்டம் செய்து 99.8 சதவீத மதிப்பெண் பெற்றார். இதில் அந்த மாணவர், அவரின் தந்தை ஜோதிர்மாய் தாஸ், பயிற்சி மைய உரிமையாளர், TCS ஊழியர்கள் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்.
- அதே ஆண்டு நடந்த நீட் தேர்வில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த மாணவி வெறும் ’ஆறு’ மதிப்பெண்களே பெற்றதாக NTA தவறுதலாக முடிவை அறிவித்ததால் தற்கொலை செய்து கொண்டார். ஆனால், அவரின் தேர்வு விடைத் தாளை (OMR sheet) பதிவிறக்கம் செய்து பார்த்ததில் 590 மதிப்பெண்கள் பெற்றுள்ளது தெரிய வந்தது.
- அதே 2020ல் ராஜஸ்தானைச் சேர்ந்த மிருதுல் ராவத் என்ற மாணவர் 329 மதிப்பெண்கள் பெற்றதாக முடிவு வெளியானது. ஆனால் அவர் மறுஆய்வுக்கு சமர்ப்பித்தபோது, 650 மதிப்பெண் பெற்று பழங்குடியினர் பிரிவில் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றதாகவும் தேர்வு முகமை மின்னஞ்சல் மூலமாக அதனை அனுப்பியதாகவும் கூறினார். பின்னர் அது தேசிய தேர்வு முகமையால் மறுக்கப்பட்டது
- 2022இல் கணினி மூலம் நடந்த JEE (Main) தேர்வு எழுதிக் கொண்டிருக்கும் பொழுது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பல மாணவர்கள் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதாக குற்றம் சாட்டினர்.
- 2024 JEE (Main) தேர்வின் முடிவுகள் வெளியானதில் முறைகேடுகள் இருப்பதாக பலர் குற்றம் சாட்டியுள்ளனர். அதாவது மாணவர்கள் பெற்ற மதிப்பெண்ணுக்கும் கணக்கிடப்பட்ட சதவீதத்துக்கும் (percentile) முரண்பாடுகள் இருப்பதாக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
NTAவின் முறைகேடுகள் அம்பலமாகி இந்தியா முழுமைக்கும் பேசுபொருள் ஆகியதால், அதனை ஆய்வு செய்ய முன்னாள் இஸ்ரோ தலைவர் கே ராதாகிருஷ்ணன் தலைமையில் உயர்மட்ட குழு அமைத்துள்ளது. இந்தக் குழு, தேர்வு நடத்தும் முறை, பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் தேசிய தேர்வு முகமையின் செயல்பாடுகளை முழுவதுமாக மாற்றியமைப்பது தொடர்பாக இரண்டு மாதத்தில் பரிந்துரை அளிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் எத்தகைய தலைகீழ் மாற்றங்கள் வந்தாலும் தமிழ்நாட்டு மாணவர்களின் தகுதி, திறமையை சோதனை செய்யும் வகையில் நுழைவுத் தேர்வுகளை நடத்துவதற்கு, இப்படிப்பட்ட மோசமான முறைகேடான ஒரு அமைப்புக்கு எந்த அருகதையும் இல்லை.
நுழைவுத் தேர்வுகள் என்பவை அடிப்படையில் மனப்பாடத் திறன் வகையிலான தேர்வுகளே தவிர, அறிவு சம்பந்தப்பட்டவை அல்ல. ஒரு துறை சார்ந்த கல்வியை கற்பதற்கு உள்ளே செல்வதற்குரிய தகுதி பள்ளிக் கல்வியின் அடிப்படையில் வழங்கினாலே போதுமானது. ஆனால் அதை விட மேலான தகுதி வேண்டும் என நுழைவுத் தேர்வுகளை திணித்தது இந்தியப் பார்ப்பனியத்தின் சூழ்ச்சிகளில் ஒன்று. இத்தேர்வுகள் சாமானிய, கிராமப்புற மக்களை அந்நியப்படுத்தும் வகையில் திட்டமிட்டு நுழைக்கப்பட்டது.
சூத்திரர்களுக்கு எதை கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்னும் மனுசாஸ்திரத்தின் கொள்கையை நிலைநிறுத்த உருவாக்கப்பட்ட இயக்கம் ஆர்.எஸ்.எஸ். இன்று சமூகநீதிக் கொள்கைகளின் பாய்ச்சலால் அனைவருக்கும் கல்வி என்னும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் உயர்கல்விக்குள்ளும் நுழைந்து விடக் கூடாது, உயர்சாதியினரின் அதிக்கத்தின் கீழ்தான் உயர்கல்வி நிலையங்கள் இருக்க வேண்டும் என்ற எண்ணமே தேர்வாணையங்களின் தலைமை இடங்களில் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை சார்ந்தவர்களை நியமிக்கக் காரணமாக இருக்கிறது. இவர்களின் ஆக்கிரமிப்பினால் முறைகேடுகளால் நுழையும் பணம் படைத்தவர்களுக்கும், உயர்சாதியினருக்கும் மட்டுமே உயர்கல்வியின் பெரும்பாலான வாய்ப்புகள் கிடைக்கிறது. நீட் முறைகேட்டு முறைகளே இதற்கு சான்றாக இருக்கிறது.
- மே பதினேழு இயக்கம்