கிராமவாசி ஒருவன் ஒரு நாள் தன் மனைவியை அருகே அழைத்தான். “இந்தாடீ! நான் இங்கிலீஷ் கத்துக்கிட்டு வரப் போறேன்! அடுத்த வீட்டுப் பையன் மாதிரி பேசப் போறேன்! கொஞ்சம் கட்டுச்சோறு கட்டிக் கொடு!”

kuthoosi gurusamy 300“அதுதானுங்க மச்சான் சரி! இங்கிலீஷ் கத்துக்கிட்டு வந்துட்டா பெரிய வேலை ஏதாச்சும் கிடைக்கும். நம்ப கணக்கப்பிள்ளை மகன் கூட பட்டணத்திலே போய் இங்கிலீசு படிச்சுட்டு வந்துதானே இப்போது பெரிய ட்ராமா கம்பெணி நடத்துறாரு! ஆமா, போயிட்டு எப்போ வருவீங்க?”

“நாளை மதியத்துக்குள்ளே வந்துடுவேன் புள்ளே! சாக்கிரதையா இரு! போய்ட்டு வர்றேன்!”

சோற்று மூட்டையுடன் பட்டினத்தை நோக்கிப் புறப்பட்டான். 7-8 மைல் நடந்ததும் ரோடு ஓரத்தில் மரத்து நிழலில் உட்கார்ந்தான். அங்கு ஒருவர் பஸ்ஸில் போவதற்காக வெகு நேரமாகக் காத்திருந்தார். அவருக்கு அகோரமான பசி! பணமிருந்தால் பசி தீருமா? கிராமவாசியின் சோற்று மூட்டை அவர் கண்ணில் பட்டது!

“எங்கே போகிறாயப்பா?” என்று கேட்டார்.

விஷயத்தைச் சொன்னான், கிராமவாசி. ஒரு விநாடி யோசித்தார், அந்த மனிதர்!

“இது தானாப்பா பிரமாதம்? இங்கிலீஷ் கற்றுக் கொள்வதற்காகப் பட்டணமா போக வேண்டும்? நான் சொல்லித் தருகிறேன், இப்படி உட்கார்,” என்று சொல்லி முதலில் சோற்று மூட்டையைக் காலி செய்தார். கிராமவாசியும் மனத்திருப்தியோடு தன் உணவைத் தந்தான்.

“இதைக் கேளப்பா! இங்கிலீஷ் படிப்பது அவ்வளவு பிரமாதமல்ல! நீ பேசுகிற ஒவ்வொரு வார்த்தையிலும் ‘ஸ்’ (s) என்று சேர்த்துக் கொள்! அவ்வளவுதான்,” என்றார்!

எம்பிரான் உமையொரு பாகன் சனகாதி நால்வர்க்குத் தம் கைவிரல்களால் “சின் முத்திரை”யைக் காட்டி, ஒரே விநாடியில் உபதேசித்தார் அல்லவா? (நீங்கள் பார்த்த விஷயந்தானே? அதற்காகத்தான் இந்த உதாரணத்தைக் கூறுகிறேன்!) அதைப்போல ரெத்தினச் சுருக்கமாக இங்கிலீஷ் கற்றுக் கொடுத்தார், அந்த மனிதர்!

கிராமவாசி கை கூப்பித் தொழுது விட்டுச் சென்றான்.

வீடு திரும்பியதும் மனைவி அன்போடு வரவேற்றாள்!

"இதுக்குள்ளவா மச்சான் தீரும்பீட்டிங்க? இங்கிலீஷ் கத்துகிட்டீங்களா? எங்கே பேசுங்க பார்க்கலாம்!” என்று ஆவலோடு கேட்டாள்.

“அடீஸ்! பெண்டாட்டீஸ்! தண்ணீஸ் கொண்டாடீஸ்!” என்றான்!

“மச்சான் மச்சான்! எனக்குக் கூடப் புரிகிற மாதிரியே இருக்கே! இதோ தண்ணி கொண்டாறேன்!” என்று கூறிவிட்டு குதித்துக் கொண்டே ஓடினாளாம்!

நேற்று “சுதந்திர தின” கொண்டாட்டத்தை வர்ணித்து சென்னை ரேடியோ நிலையத்தில் ஒரு விமர்சனம் நடந்ததைக் கேட்டேன். சென்னையைப் பற்றி வர்ணித்துக் கொண்டே வந்தார்; இங்கிலீஷில், யாரோ ஒரு நிபுணர்!

பல வீடுகளும் பள்ளிகளும் தோரணங்களாலும் மாவிலைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன என்று இங்கிலீஷில் சொன்னார்! எப்படித் தெரியுமா?

“ழடிரளநள யனே ளுஉhடிடிடள றநசந நெனநஉமநன றiவா கூhடிசயயேஅள யனே ஆயஎடையளை”-

- தோரணம்ஸ் அண்ட் மாவிலைஸ்! -என்ற சொற்களைத்தான் கவனிக்க வேண்டும்! சுத்தமான தமிழ்! அதையே; வெகு சாதுர்யமாக இங்கிலீஷாக்கி யிருக்கிறார்! பித்தளை மெடலைப் பவுனாக ஆக்கி, சித்தூர் சுப்பிரமணிய பிள்ளைக்குச் சத்யமூர்த்தி அய்யர் காங்கிரஸ் மண்டபத்தில் பரிசாகக் கொடுத்துவிட்டு, தங்க மெடல் என்று பத்திரிகைக்குச் செய்தி கொடுத்திருந்தாரே! அதுபோல!

ரேடியோ நிலையத்தில் இங்கிலீஷ் சித்திரவதை! இங்கிலீஷ்காரன் இரண்டொருவன் இருப்பவன்கூட ஒரே வாரத்தில் ஓட்டமெடுப்பான்!

“ஓடு வெளியே!” என்று அவனை மிரட்டுவதைவிட இது நல்ல முறை! தோரணம்ஸ் அண்ட் மாவிலைஸ்! அடாடா! அந்தக் சுக்கிர தீபம் எதுவரைக்கும் படிச்சுதோ? “நாலாங் கிளாஸ்” வரைக்குமாவது இருக்குமா? அதே போதும்! இந்தக் காலத்துக்கு!

தமிழைக் கொலை செய்வதற்குப் பல பேர் அடிக்கடி ரேடியோ நிலையத்திற்கு வருவதனால், அவர்களுக்குப் போட்டியாக யாரோ ஒரு தமிழர் இப்படி இங்கிலீஷை வேண்டுமென்றே ஒருக்கால் கொலை செய்கிறார் போலிருக்கு! அப்படியானால் நியாயந்தான்! பழிக்குப் பழி வாங்க வேண்டியதுதான்!

- குத்தூசி குருசாமி (16-08-1949)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It