ஈரோடு மாநாட்டைப் பற்றி எந்தக் காங்கிரஸ் தினசரியும் ஒரு வரி செய்திகூட வெளியிடவில்லையே! ஏன்?” என்று கேட்கிறார், வெளியூர்த் தோழர் ஒருவர். அவர்கள் வெளியிடாததற்கு அவர்களைக் கேட்க வேண்டுமே யொழிய என்னைக் கேட்டால் நானென்ன செய்ய முடியும்?

kuthoosi gurusamy 268“கழுதைக்குப் பின்னால் போனால் உதைக்கிறதே! ஏன்? அதற்கென்ன செய்யலாம்?” என்று கேட்டான், ஒரு சிறு பையன் தன் தந்தையைப் பார்த்து.

“உதைப்பது தானேயப்பா கழுதையின் குணம்? நீ ஏன் அதன் பின்னே போகிறாய்?” என்று புத்தி சொன்னார், தந்தை.

காங்கிரஸ் பத்திரிகைகளைக் காசு போட்டு வாங்கிப் படிப்பதானால் தானே அவைகள் செய்கிற கோட்ஸே வேலையைக் கண்டு நமக்கு ஆத்திரம் வருகிறது? அவைகளைக் கையினால் கூடத் தொடாமலிருந்தால்?

பந்தல் தீப்பிடித்தது; அடிதடி நடந்தது; போலீசார் தடியடிப் பிரயோகம் செய்தனர்; மகாநாடு குழப்பத்தில் முடிந்தது! - இந்த மாதிரி ஏதாவது நடந்திருந்தால் காங்கிரஸ் பத்திரிகைகளில் செய்தி வரும்!

இதெல்லாம் எதுவுமில்லாமல், 50-60 ஆயிரம் பேர் வந்திருந்து, அதிலும் 5000 பேருக்கு மேல் பெண்களாகவே வந்திருந்து, உணர்ச்சி பொங்கும் படியாக ஒரு மாநாடு நடப்பதென்றால், எதிர்க்கட்சிப் பத்திரிகைக்காரர்கள் வயிற்றில் புளியைக் கரைத்த மாதிரி யிருக்காதா?

காங்கிரஸ் பத்திரிகைக்காரர்கள் மேல் குற்றஞ் சொல்லக் கூடாது. இயற்கையிலேயே சில பிறவிகளுக்கு இந்த மாதிரிக் குணமுண்டு.

கல்யாண வீட்டில் மூஞ்சியைத் தேவாங்கு மாதிரி வைத்துக் கொண்டிருக்கும் பெண்கள் சிலர் உண்டு. இவர்கள் முகத்தில் புன்சிரிப்போ, நகைப்போ காணவே முடியாது. ஒரு லட்ச ரூபாய் ‘லாட்டரி’ விழுந்திருக்கிறது என்ற செய்தி வந்தால்கூட ஒரு பல் கூட வெளியே தெரியாது. (இவர்களுக்குப் பல்லே இருக்கிறதோ, இல்லையோ என்று கூடச் சந்தேகிக்க வேண்டி வரும், பல் துலக்குவதைப் பார்க்க முடியா விட்டால்!)

இந்தப் பெண்கள் எப்போது தெரியுமா சுறுசுறுப்பாயிருப்பார்கள்? சாவு வீட்டில் தான்!

ஒரு நோயாளி கண்ணை மூடிக் கொண்டு கொஞ்சம் மயக்கமாகப்படுத்திருந்தால் போச்சு! மூச்சு இருக்கிறதா இல்லையா என்பதைக் கூடக் கவனிக்க மாட்டார்கள்! உடனே ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விடுவார்கள்! இது இந்தத் தமிழ் நாட்டிலுள்ள ஒரு தனிக் கலை! படித்த பெண்கள் தவிர மற்றவர்களெல்லாம் இந்த ஒப்பாரிக் கலையில் கரை கண்டவர்கள்! சேலையை வரிந்து கட்டிக் கொண்டு இராக தாளத்தோடு பாடத் தொடங்கி விடுவார்கள்! ‘மாங்கு’ ‘மாங்கு’ என்று மாரடித்துக் கொள்வார்கள் மயக்கத்திலுள்ள நோயாளி திடுக்கிட்டு விழித்துப் பார்த்து, “அய்யோ, நான் சாகவா போகிறேன்? அல்லது செத்தே போய்விட்டேனா?” என்று திகைப்பான். அந்தத் திகைப்பினாலேயே உயிர் போய்விடும்!

படிப்பில்லாத பெண்களுக்கு ஒப்பாரி, பேய், முடி கொடுக்கும் வேண்டுதல், சாமி வருதல் - ஆகிய இத்தனையும் தாமாகவே வந்துவிடும்! செத்துப் போனதற்காக யாருக்காவது பாட்டு வருமா? ஆண்களில் யாராவது ஒப்பாரி வைத்த அழுகிறார்களா? இந்த மானங்கெட்ட வழக்கத்தை நம் பெண்கள் ஒழிக்க வேண்டுமானால் ஒப்பாரி சொல்ல ஆரம்பித்த வுடனேயே அவர்களை வீட்டை விட்டுத் துரத்திவிட வேண்டும். அது முடியாவிட்டால் நாம் ஓடிப் போய் விடவேண்டும்! இந்தப் பீடைகள், ஆசாமி, உயிருடனிருக்கும் போதே ஓரணா கொடுத்து, “ஒப்பாரிக்கண்ணி”ப் புத்தகம் வாங்கி வைத்துக் கொண்டு மனப்பாடம் பண்ணுதுகள்! அசல் மண்ணாங் கட்டிகள்! சுத்த ஆபாசம்! வடிகட்டின மடத்தனம்!

இந்த ரகத்தைச் சேர்ந்தவைகள் தான் இங்குள்ள காங்கிரஸ் பத்திரிகைகள்! அத்தனையும் ஒப்பாரி நிபுணர்கள்! அவைகள் அமங்கலிகளானாலுஞ் சரி, கணவன்மார்களாகிய நாம் சாக வேண்டும்! அப்புறம் அதுகள் ஆசை தீர ஒப்பாரி வைத்து அழ வேண்டும்! நமக்குக் கேடு வந்தால் இவைகளுக்குப் பேரானந்தம்!

சாக்ரட்டீசுக்கு வாய்த்த “பேய்” மனைவி மாதிரி இவைகள் நமக்கு வாய்த்திருக்கின்றன! ஒழுக்கங்கெட்ட மனைவிக்குச் சோறு போட்டு வளர்த்தால், அவள் ஒப்பாரி பாடும் நாளைத் தானே எதிர்நோக்கிக் கொண்டிருப்பாள்? அவளைக் குற்றஞ் சொல்லி என்ன பயன்? சோறு போட்டு, புடவை தந்து, பூச் சூட்டி, அழகு பார்க்கும் நாமல்லவா நம் தலையில்......... அடித்துக் கொள்ள வேண்டும்?

- குத்தூசி குருசாமி (30-10-1948)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It