வெற்றிக் கொண்டாட்டம் என்னும் பேரால் நமது பார்ப்பனர்கள் தங்களது பார்ப்பனப் பிரசாரங்களை மறுதேர்தல்களுக்கும் கூட சேர்த்து இப்பொழுதிலிருந்தே நடத்த ஆரம்பித்து விட்டார்கள். யாரோ வெகு பேர் கள் இவர்களை உத்தியோகம் ஏற்றுக்கொள்ளும்படியும் மந்திரி சபை களை அமைக்கும்படியும் கேட்டுக்கொண்டது போலவும் வாக்காளர்களுக்குத் தாங்கள் கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டி மந்திரி பதவிகளை மறுப்பது போலவும் வேஷம் போடுகிறார்கள். இதைப் பாமர ஜனங்களும் நம்பி “ஆ! ஆ!! நமது பார்ப்பனர்கள் என்ன, சுயராஜ்யக் கட்சிக்காரர்கள் என்ன, காங்கிரசுக்காரர்கள் என்ன! ஆகிய ஸ்ரீமான்கள் ஸ்ரீநிவாசய்யங்கார், சத்தியமூர்த்தி, ஏ.ரங்கசாமி அய்யங்கார் முதலியவர்கள் எவ்வளவு நாண யக் காரர்கள் மந்திரி உத்தியோகத்தைக் கூட வேண்டாமென்று சொல்லி விட்டார்கள்” என்று இவர்களைப் பாராட்டுவதில் ஏமாந்து போனாலும் போவார்கள். இப்பொழுது ஜயித்தவர்கள் யார்? பார்ப்பனர்களா? சுயராஜ்யக் கட்சியாரா? காங்கிரசுக்காரர்களா? யார் என்று தக்க ஆதாரத்துடன் பதில் சொல்ல யார் தயாராயிருக்கிறார்கள்?

periyar kamarajarகட்சி என்பதற்கு என்ன பொருள்? சுதேசமித்திரனும் இந்துவுமான பார்ப்பனப் பத்திரிகைகள் கலம் கட்டி எழுதி விட்டால் அதுவே முடிவு என்று அர்த்தமா? கட்சியாக மித்திரன் குறித் துள்ள கணக்குப்படி காங்கிரசுக்காரர்கள் என்போர்கள் 47 பேரில் காங்கிரஸ் மெம்பர்கள் எத்தனை பேர்? எது முதல் இவர்கள் காங்கிரஸ்காரர்கள்? என்றைய தினம் கையெழுத் துப் போட்டு சேர்ந்தார்கள்? காங்கிரசில் எந்தக் கொள்கைகளைப் பின்பற்றினார்கள்? மித்திரனும் இந்துவும் கண்ணை மூடிக் கொண்டால் உலகமே கண்ணை மூடிக் கொண்டதாக அருத்தமா? ஸ்ரீமான் சத்தியமூர்த்தி முதல் எந்த பிராமணராவது தங்களை காங்கிரசுக்காரர் என்று சொல்ல அவர்களுக்கு யோக்கியதை இருக்கிறதா? சத்தியமூர்த்தி இந்த 5 வருஷ காலத்தில் என்றைக்காவது ஒரு நாள் காங்கிரஸ் கொள்கைப்படி நடந்ததாகச் சொல்ல முடியுமா?

என்றைக்காவது ஒரு நாள் சர்க்காரின் குற்றங்களைப் பற்றி சர்க்காரைக் கண்டித்து பேசியதாகவோ, சர்க்கார் உத்தி ரவுகளை மறுத்ததாகவோ, சர்க்கார் தயவை எதிர்பாராததாகவோ இருந்த தாகச் சொல்ல முடியுமா? அல்லது சர்க்காரிலிருந்து ஏதாவது ஒரு உத்தி யோகம் கிடைப்பதாயிருந்து வேண்டாம் என்று சொன்னதாக யாராவது சொல்ல முடியுமா? அல்லது இன்றைய தினமாவது நமது சர்க்காரால் கொடுக் கப்பட்ட ஏதாவது ஒரு கவுரவ மெம்பர் ஸ்தானம் தான் அடைந்திருக் கவில்லை என்று சொல்ல முடியுமா? மித்திரன் கலத்தில் ‘தலைவர்’ தலைப்பில் பேர் போட்டவர் யோக்கியதையே இப்படி இருந்தால் மற்றபடி அந்தக் கூட்ட யோக்கியதையைச் சொல்ல வேண்டுமா? அந்த வரிசையில் பட்டம் பெற்றவர்கள் இல்லையா? கவுரவ சர்க்கார் உத்தியோகஸ்தர்கள் இல்லையா? நேற்று ஒரு கட்சிப் பேர் இன்று ஒரு கட்சிப் பேர் சொன்னவர் கள் இல்லையா? நாளைய தினம் வேறு கட்சிக்குப் போகிறவர்கள் இல்லையா? இவர்கள் எல்லோரும் மித்திரனுக்கு காங்கிரசுக் காரர்கள் என்று எப்படித் தெரியும்? ஸ்ரீமான் வேணாவுடையக் கவுண்டர் காங்கிரசுக்காரரா?

ஸ்ரீமான் ராவ் பஹதூர் சி.வி.எஸ். நரசிம்ம ராஜு காங்கிரஸ் உத்தியோகம் ஏற்றுக்கொள்ளும் என்று ஸ்ரீமான் ஸ்ரீனிவாசய்யங்கார் சொன்னதை நம்பி வந்தேன்; இப்போது அவர் பொய் பேசுகிறார்; ஆதலால் நான் சுயராஜ்யக் கட்சியையும் காங்கிரசையும் விட்டுப் போகிறேன் என்று சொல்லிப் போன வர்தானே? ஸ்ரீமான் முத்தையா முதலியார் தனது பிரசார அறிக்கையில் காங்கிரஸ் திட்டத்தையே ஒப்புக் கொள்ளாமலும் காங்கிரஸ் என்கிற வார்த்தையைக் கூட பிரஸ்தாபிக்காமலும் காங்கிரஸ் கொள்கைக்கு விரோத மாகவே நான் சட்டசபையில் அது செய்கிறேன் இது செய்கிறேன் என்று சொல்லி எழுதி ஓட்டு வாங்கினவர்தானே? ஸ்ரீமான் சேதுரத்தினமய்யர் தான் காங்கிரஸ்வாதி என்று சொல்லாமலும் சொல்லுவதற்குப் பயந்து கொண்டும் வேறு பெயரைச் சொல்லிக் கொண்டு அபேக்ஷகராய் நின்றவர் தானே? அதுபோலவே ஜனாப் டாஜுடீனும் தான் சுயராஜ்யக் கட்சியாரோடு சேருவ தில்லை என்று தனது சமூகத்தாருக்கு வாக்கு கொடுத்தவர்தானே?

ஸ்ரீமான் கோபால் மேனனுக்கும் காங்கிரசுக்கும் என்ன சம்பந்தம்? அவர் காங்கிரஸ் பெயரைச் சொல்லிக் கொண்டு நின்றாரா? ஸ்ரீமான் யூ.ராமசாமி அய்யருக்கு காங்கிரஸ் என்றால் என்ன என்று தெரியுமா? அவர் காங்கிரஸ் பெயரைச் சொல்லிக்கொண்டு நின்றாரா? இரண்டு ஆடுகள் போட்ட சண்டையின் பலனாக ஒழுகின ரத்தத்தை குடித்து வந்தவர்தானே? இதில் யாரைப்பற்றி எழுதுவது? யாரின் காங்கிரஸ் பக்தியைப் பற்றி வர்ணிப்பது? ஸ்ரீமான் எல்.கே. துளசிராம் என்றைக்கு காங்கிரஸ் மெம்பர் ஆனார்? மகாத்மாவிடம் பதினாயிரம் சர்க்கா மதுரையில் சுற்ற வைக்கிறேன் என்றாரே அன்றைக்கா? தேவஸ்தான மசோதா செய்யும்போது பனகால் கூடவே இருந்தாரே அன்றைக்கா? பார்ப்பனரல்லாதார் சார்பாக காங்கிரசின் அக் கிரமங்களை எடுத்துச் சொல்ல சீமைக்குப் போனாரே அன்றைக்கா? அல்லது மதுரைக் கலெக்டரிடம் சட்டசபை அபேக்ஷக விண்ணப்பம் போடும்போது தன்னைக் காங்கிரசுக்காரர் அல்லவென்றும் சுயராஜ்யக் கட்சிகாரர் அல்ல வென்றும் தாம் சுயேச்சை, தாராள கொள்கைக்காரர் என்று வாக்கு மூலம் கொடுத்தாரே அன்றைக்கா? அல்லது ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அய்யர் அவர் கள் மதுரை பிளாட்பாரத்தில் ஸ்ரீமான் துளசிராம் அவர்களை, பனகால் ஒழிந்து விட்டார்; தங்களை நான் மந்திரியாக்கப் போகிறேன் என்று வாக்கு கொடுத் தாரே அன்றைக்கா? என்றைக்கு என்று மித்திரன் சொல்லக்கூடுமா?

உத்தி யோகங்களுக்கு ஆசைப்பட்டு மந்திரி கட்சி என்று பனகாலின் வாலைப் பிடித்துக் கொண்டு திரிந்து உத்தியோகம் பட்டம் பதவிகள் எதிர்பார்த்தபடி கிடைக்காததால் ஏமாந்து போய் மந்திரி கக்ஷியுடன் சண்டைபோட்டுக் கொண்டு வந்த சிலரை தாங்கள் ஆசை வார்த்தைகள் சொல்லி ஏமாற்றி தங்கள் ஆளுகள் என்று பெயர் கொண்டதினாலேயே அவர்கள் காங்கிரசுக் காரர்கள் ஆகிவிடுவார்களா? உத்தியோகம் இல்லை யென்று தெரிந்தால் இவர்களுடன் இருப்பார்களா? உத்தியோகம் கிடைப்பதாயிருந்து ஒப்புக் கொள்வதாகவே இருந்தால் இப்போது வாக்குத்தத்தம் செய்து சேர்ந்திருக் கும் ஆட்களுக்கெல்லாம் உத்தியோகம் கொடுக்க முடியுமா? கொடுக்கா விட்டால் இந்தப் பார்ப்பனர்களை விட்டு மறுபடியும் பனகாலிடம் போய் சேரமாட்டார்களா? மூன்று மந்திரி, மூன்று காரியதரிசி, ஒரு பிரசிடெண்ட் ஆக 7 ஸ்தானங்களை “50 காங்கிரஸ்கார” ருக்கும் “25 சுயேச்சைக்கார” ருக்கும் ஆக 75 பேருக்கு எப்படி பங்கிட்டுக் கொடுக்க முடியும்? அப்படி கொடுப்பதாயிருந்தால் பார்ப்பனர்களுக்கும் கொடுக்க வேண்டாமா? மகம் மதியர்களுக்கும் கொடுக்க வேண்டாமா? கிறிஸ்தவர்களுக்கும் கொடுக்க வேண்டாமா? அல்லது இவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை என்றால் கவர்ன் மெண்டு ஆபீசு கதவடைத்துப் போகுமா?

வெற்றி! வெற்றி! என்று வெள்ளிக் கோலில் அடிபடுவதைத் தவிர தேசத்திற்கோ சமூகத்திற்கோ அல்லது பார்ப்பனரல்லாதாருக்கோ முக்கால் துட்டு லாபமுண்டா? பணங்களை வாரி இறைத்ததுதான் பலன்; தொண்டைக் கிழிய கத்தினதுதான் பலன்; அல்லாமல் சாதிப்பது ஒன்றுமில்லை என்ப தோடு மறுபடியும் பனகால் ராஜ்யத்தை வெற்றிலை பாக்கு வைத்து அழைக் கப் போகிறார்கள் என்பது உறுதி என்றே சொல்வோம். இதுகள் எல்லாம் பொது ஜனங்களுக்குத் தெரியாது என்று நினைத்து கலம் போட்டு 47 பேர்க ளின் பெயர்களை எழுதி விட்டால் ஜஸ்டிஸ் கட்சி செத்துப் போய்விடும். இங்கி லீஷ் அரசாங்கம் மத்தியதரைக் கடலில் மூழ்கிப்போகும், தாங்கள் போய் கை கொடுத்து மறுபடியும் கூட்டி வரலாம், அதன் மூலம் பார்ப்பனர் ஆதிக்கம் நிலைத்துவிடும் என்று நினைத்துக்கொண்டு கனவு கண்டதாகத் தெரிகிறது.

அதைப்பற்றி இங்கு யாருக்கும் கவலையில்லை. இன்னமும் 98 பெயர்களையும் காங்கிரசுக்காரர்கள் என்று சொல்லிக் கொண்டு அவர்கள் படத்தையும் போட்டுக் கொண்டாலும் நமக்கு அதைப்பற்றி கவலையில்லை. இப்பொழுது எப்படித் தங்களை சுயராஜ்யக் கட்சிக்காரர் என்று சொல்லிக் கொள்ளவே பயப்படும்படியாக ஆகிவிட்டதோ அது போலவே அடுத்த தேர்தலுக்குள் தங்களை காங்கிரசுக்காரர்கள் என்று சொல்லிக் கொள்ளவும் ‘தேசபக்தர்கள்’ என்று சொல்லிக் கொள்ளவும் பயப்படும்படியான காலத்தை இவர்களுடைய ‘தேசபக்தி’ கொண்டுவரப் போகிறது நமக்குத் தெரியும். ஜஸ்டிஸ் கட்சியின் கொள்கையை இதுவரையில் யாரும் தப்பு என்று சொல்லி காங்கிரசுக்காரருக்கோ சுயராஜ்யக் கட்சிக்காரருக்கோ ஓட்டு கொடுத்து விடவில்லை என்பதும் நாம் அறிவோம். பாமர மக்களை ஏமாற்றி யதிலும் மகந்துக்களுனுடையவும் மடாதிபதிகளினுடையவும் பணங்காசு செலவு செய்ததிலும் தந்திரத்திலும் வஞ்சகத்திலும் ஓட்டுக் கிடைக்கிறதே அல்லாமல் சர்க்காருக்கு 10 ரூபாய் பூமி கந்தாயம் கொடுக்கும் ஒவ்வொரு ஓட்டரும் தேசத்தின் தத்துவத்தையும் நிற்பவர்களின் யோக்கியதையும் காங்கிரசின் நாணயத்தையும் கவனித்து ஓட்டுக் கொடுத்தார்கள் என்று யாரா வது சொல்ல முடியுமா? என்று கேட்கிறோம். பார்ப்பனப் பத்திரிகைகள்தான் இம்மாதிரி புரட்டுகளைச் செய்கிறது என்று சொன்னால் பார்ப்பனரல்லா தாரால் நடத்தப்படும் சில பத்திரிகைகளும் “ஈ அடித்தான் காப்பி” என்று சொல்வது போல் கொஞ்சமும் முன்பின் யோசிக்காமலும் பகுத்தறிவை உபயோகப் படுத்தாமலும் பார்ப்பனப் பத்திரிகைகளின் கூற்றை அப்படியே எடுத்து காப்பி அடித்திருக்கின்றன. அதோடு மாத்திரமில்லாமல் அவை களையே பின்பற்றி தங்கள் அபிப்பிராயமும் எழுதுகின்றன. இவற்றை நினைக்கும் போது நமது மக்களின் நிலையைக் குறித்து வெட்கப்படாம லிருக்க முடியவில்லை.

ஆதலால் இதுகளுக்குத் தக்க மருந்து, யார் மந்திரியாய் வருவார்கள்? யார் அரசாங்கத்தை நடத்தப் போகிறார்கள்? யார் அரசாங்கத்தை தகர்க்கப் போகிறார்கள்? என்பதல்ல. அதைப்பற்றி கவலையும் வேண்டியதில்லை. எப்படி பாமர மக்களை இக்கொடுமையிலிருந்து தப்புவிக்கிறது என்கிற விசயத்தில்தான் நமது நாட்டினிடமோ சமூகத்தினிடமோ உண்மையான கவலை உள்ளவர்கள் செய்ய வேண்டியது என்பதாகத் தெரிவித்துக் கொள்ளு கிறோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 21.11.1926)

Pin It