வரலாற்று ஆய்வுத்துறையை தேர்ந்தெடுத்தது பற்றியும் உங்கள் ஆய்வைப் பற்றியும் கூறுங்கள்?

வரலாற்று ஆராய்ச்சித்துறையில் நான் மிகவும் தாமதமாகவும், மரபுரீதியாகவும் இல்லாமல் தான் நுழைந்தேன். நான் பிரான்சில் முழு நேரமாக வேலை செய்து கொண்டிருந்த போது மேல் படிப்புக்காக வரலாற்றுத்துறையை தேர்ந்தெடுத்து முனைவர் பட்டத்தை பிரெஞ்சின் மிகப் பெரிய வரலாற்று ஆசிரியர்களில் ஒருவரான Fernand Braudel அமைத்த, Institute for Higher Studies in Social Science ல் ஆய்வை முடித்தேன். நான் ஆய்வுப் படிப்பை துவங்கும் போது தென்னிந்தியாவைப் பற்றி ஏதாவது ஆராய்ச்சி செய்யலாம் என நினைத்தேன். ஆனால் அங்கு தென்னிந்தியாவைப் பற்றி தெரிந்தவர்கள் யாருமே இல்லை. முஸ்லிம்களைப் பற்றி தெரிந்தவர்கள் இருந்தார்கள். அவர்கள் தமிழ்நாட்டு முஸ்லிம்களைப் பற்றிய ஆராய்ச்சிகள் இல்லை. அதனால் நீ அதை ஆராய்ச்சி செய் என்று சொன்னார்கள். அதன் பிறகு அந்த ஆய்வை தேர்ந்தெடுத்தேன்.

J.B.P.More

என்னுடைய ஆய்வுக்கு நல்ல வரவேற்பு இருந்தாலும் பல சிரமங்கள் ஏற்பட்டன. அதற்கு காரணம் என்னுடைய சில கொள்கைகளை நான் விட்டுக் கொடுக்காமல் ஆய்வை முடித்ததுதான். பிரெஞ்ச் நாட்டில் உள்ள சில வரலாற்று ஆய்வாளர்களுக்கு என்னுடைய ஆய்வின் முடிவுகளில் உடன்பாடு இல்லாததால் எனக்கு அங்கீகாரம் கொடுக்காமலும், பெரிய பொறுப்புகள் தராமலும், தடுத்தார்கள். அதனால் சுதந்திரமான முடிவை எடுக்கும் நிலைக்கு நான் தள்ளப்பட்டேன். ஆனாலும் ஆய்வு சம்பந்தமாக தொடர்ச்சியாக ஏதாவது வேலை செய்து கொண்டிருந்தேன். என்னுடைய முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்த ஆய்வேட்டினை சில மாற்றங்கள் செய்து (‘The Political Evolution of Muslims in Tamil Nadu’), என்று 1997 இல் ஓரியண்ட் லாங்மேன் வெளியிட்டது. அடுத்ததாக Freedom Movement in French India என்ற புத்தகம் 2001 இல் வெளியிடப்பட்டது. இந்த இரண்டு புத்தகங்களும் மேற்கத்தைய நாடுகளில் வெகுவாக வரவேற்கப்பட்டன. இதற்குப் பிறகுதான் மொரே முஸ்லிம்களின் நிபுணர் என்று அறியப்பட்டேன். இந்த நூல்கள் பற்றி இங்கிலாந்து, அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளிலிருந்து நல்ல விமர்சனங்களும் வந்தன. நான் ஆங்கிலத்தைப் போலவே பிரெஞ்ச் மொழியிலும் சரளமாக பேசுவேன். பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்தியவியல் அறிஞர் மரிதாஸ் பிள்ளையின் கையெழுத்து பிரதிகளை கண்டுபிடித்து, செப்பனிட்டு இரண்டு தொகுதிகளாக பிரெஞ்ச் மொழியில் 2003 இல் வெளியிட்டோம். 2004_இல் Muslim Identity, Print Culture and the Dravidian Factor in Tamil Nadu என்ற என்னுடைய புத்தகமும் வந்தது.

முஸ்லிம்களை மையமாக வைத்து ஆய்வு செய்யும்போது திராவிட இயக்கத்தைப் பற்றி குறிப்பிடுவது ஏன்?

முஸ்லிம்களை ஆராய்ச்சி செய்கிறபோது, திராவிட இயக்கத்தை பற்றிய ஆராய்ச்சியும் கட்டாயத் தேவையாக இருந்தது. முஸ்லிம்களுக்கும், திராவிட இயக்கத்துக்கும் அந்தக் காலத்தில் நிறைய தொடர்புகள் இருந்தன. சுயமரியாதை இயக்கத்தை அமைத்த ஈ.வெ.ரா. பெரியார் சமூகத்தில் கீழ்மட்டத்தில் இருக்கும் மக்களை இஸ்லாத்திற்கு மாற வேண்டும் என்று 1930 இல் கூறினார். இதனால் முஸ்லிம்களுக்கு ஈ.வெ.ரா. மீது ஒரு பற்று ஏற்பட்டது. இந்த உறவு 1940 இல் சீர்குலைகின்றன. சில முஸ்லிம்களுடனான கருத்து வேறுபாடால் இதுநிகழ்கிறது.

உதாரணமாக, ஈ.வெ.ரா. பெரியார் திராவிடம்தான் உயர்ந்தது என்றார். ஆனால், முஸ்லிம்களுக்கோ இஸ்லாம்தான் உயர்ந்தது என்று திராவிடத்தை விமர்சனம் செய்தனர். 1940இல் முகமது அலி ஜின்னா பாகிஸ்தான் ஒரு தனி நாடு வேண்டுமெனக் கேட்டார். அதை ஈ.வெ.ரா. பெரியார் ஆதரித்தார். அதே நேரம் ஜின்னா திராவிட நாட்டை ஆதரிப்பதாக சொன்னார். பிறகு அந்தக் கோரிக்கையை ஜின்னா நிராகரித்தார். பெரியாரின் நாத்திக கொள்கையை மையமாகக் கொண்டு அரசியல் செய்ததால் மதத்தையே மையமாக வைத்து முஸ்லிம்கள் செயல்படுவதால் ஈ.வெ.ரா பெரியாருக்கு, தமிழ்நாட்டு முஸ்லிம்களுக்கும் கருத்து வேறுபாடு வலுப்பெற்றது. ‘ஆகவே திராவிட நாடு கோரிக்கை என்பது உங்களுடைய பிரச்சனை. அதில் நான் தலையிட முடியாது. மேலும் நான் முஸ்லிம்களுக்காகத்தான் பேச முடியும். திராவிடர்களுக்காக நான் பேச முடியாது’ என்று ஜின்னா சொல்லிவிட்டு ஒதுங்க ஆரம்பித்தார். தமிழ்நாட்டில் இருக்கிற முஸ்லிம்களும் ஈ.வெ.ரா.பெரியாரை விட்டு ஒதுங்க ஆரம்பித்தனர். ஆனாலும் ஈ.வெ.ரா. பெரியார் தொடர்ந்து பாகிஸ்தான் கோரிக்கைக்கு ஆதரவாகவே இருந்தார். குறிப்பாக தாருல் இஸ்லாம் என்ற பத்திரிகையை முப்பது வருஷமாக நடத்தி வந்த தாவூத் ஷா ஈ.வெ.ரா. பெரியார் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தினார். இதையெல்லாம் 2004 இல் வெளிவந்த என்னுடைய புத்தகத்தில் விரிவாக எழுதி உள்ளேன்.

நீங்கள் எழுதிய தென்னிந்திய மதமும் மற்றும் சமூகமும் என்ற புத்தகத்தைப் பற்றிக் கூறுங்கள்?

முஸ்லிம்களைப் பொறுத்தவரைக்கும் முழுக்க முழுக்க மதத்தை நம்புபவர்களாக இருப்பார்கள். ‘ஹைதர் அலி, திப்பு சுல்தான் போன்றவர்களை அரேபியா, ஆப்கானிஸ்தான், பாரசீகம் போன்ற இடங்களிலிருந்து வந்தவர்கள்’ என்று வட இந்திய வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். ஆனால் எனக்கு பிரான்சில் கிடைத்த ஆவணங்களின்படி அவர் ஒரு கன்னடர் என்றுதான் தெரிகிறது. பாண்டிச்சேரியில் இந்து கிறிஸ்துவரின் உறவுகள், திப்பு சுல்தானும் கிறிஸ்துவர்களின் உறவும், சென்னை மாகாணத்தில் முஸ்லிம்களின் வேலைவாய்ப்புகள், அவர்களுடைய நிலைமைகள் ஆகிய கட்டுரைகள் The Religion and Society of South India என்ற புத்தகத்தில் நான் எழுதியுள்ளேன். இந்தப் புத்தகத்திற்கு முகவுரை லண்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ப்ரான்ஸிஸ் ராபின்சன் எழுதி இருக்கிறார். இவரும் முஸ்லிம்களைப் பற்றி நிறைய ஆய்வுகளை செய்தவர். இந்தப் புத்தகத்திற்கு இங்கிலாந்தில் நல்ல வரவேற்பு இருந்தது. Journal of the Royal Asiatic Society என்ற சர்வதேச ஆய்வு இதழில் நல்ல ஒரு மதிப்புரையும் வந்தது.

நீங்கள் இந்திய பிரிவினைப் பற்றிய புத்தகத்தை எழுதுவதற்கான அவசியம் என்ன?

Partition of India: Players and Partners என்ற புத்தகம் 2008 அக்டோபரில் வெளிவந்தது. இந்தப் புத்தகம் எழுதுவதற்கான ஆதாரங்களை நான் லண்டனில் தேடி எடுத்தேன். பொதுவாக, இந்தியா பாகி ஸ்தான் பிரிவினையை பற்றிப் பேசும்போது, ‘ஜின்னா பாகிஸ்தான் வேண்டுமெனக் கேட்டார். அதை அடைந்து விட்டார்’ என்று பாகிஸ்தானியர்கள் சொல்லுவார்கள். ‘ஜின்னா இந்தியாவைப் பிரித்து விட்டார்’ என்று இந்திய தேசிய காங்கிரஸ் சொல்கிறது. அதேபோல ‘பிரிட்டிசார் பிரித்ததாக’ இடதுசாரிகள் கூறுவார்கள். 1985இல் பாகிஸ்தான் பெண்மணி ஆயிஷா ஜலால் எழுதிய The Sole Spokesman: Jinnah, the Muslim League and Demand for Pakistan என்ற புத்தகம் வெளிவந்தது. இது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர்பட்ட ஆய்வுக்காக எழுதப்பட்டது. இந்த ஆய்வேடுதான் இப்போது இவ்வளவு குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்த ஆய்வில், ‘ஜின்னா ஒரு தேசியவாதி. அவர் இந்தியாவை பிரிக்க விரும்பவில்லை. அவர் பாகிஸ்தான் என்று தனிநாடு கோரவில்லை. பாகிஸ்தான் என்பதை அரசியல் கோஷாமாகத்தான் முன் வைத்தார். முஸ்லிம்களுக்கு சலுகைகள் ஒழுங்காக கொடுத்து இருந்தால் இந்தியா ஒன்றாக இருந்திருக்கும்; பிரிவினைகள் நடந்திருக்காது. நேரு, காந்தி, பட்டேல் போன்றவர்கள் முஸ்லிம்களுக்கு சலுகைளை கொடுக்க விரும்பவில்லை. ஜின்னா பல முயற்சிகள் செய்தும் முஸ்லிம்களுக்கு சலுகைகள் கிடைக்கவில்லை. அந்த நேரத்தில் ஜின்னா மீது பிரிவினையை திணித்தார்கள்’ என்று உள்ளது. ஆனால் உண்மையிலே இந்த ஆய்வு நோக்கு மிக பழமையானது. பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் இருந்தபோதே இது போன்ற செய்திகள் வதந்திகளாக உலா வந்தன. ஆயிஷா ஜலால் இன்றைக்கு கொடுக்கும் முக்கியத்துவம் அன்றைக்கு பிரிட்டிஷ் அரசு இந்தக் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. 1960இல் Bargaining Counter theory என்ற கோட்பாட்டை பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் முன்வைத்தனர். இந்திய ஆய்வாளரான ஏ.ஜி. நூராணி 1967 இல் கேம்பிரிட்ஜில் பி.எச்.டி. செய்யும் போது இந்தக் கருத்துக்கு ஆதரவு கொடுத்திருக்கிறார்.

ஆயிஷா ஜலாலின் புத்தகம் வெளிவந்த பிறகு ஏ.ஜி. நூராணி மற்றும் சிலரும், குறிப்பாக முஸ்லிம் ஆய்வாளர்கள், ‘ஜின்னா ஒரு தேசியவாதி, ஜின்னா மதசார்பின்மையை ஆதரித்தவர், ஜின்னா பிரிவினைவாதி அல்ல’ என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். இது பிரிட்டிஷ்காரர்களுக்கு மிகவும் ஆச்சரியமானதாகவும் சாதகமான விஷயமாகவும் இருந்தது. பிரிட்டிஷ்காரன்தான் இந்தியாவை உடைத்தது என்று இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளின் கருத்துக்கு எதிரானதாக ஆயிஷா ஜலாலின் கருத்து இருந்தது. இன்றைய பிரிட்டிஷ் ஆய்வாளர்களும் ஆயிஷா ஜலாலின் ஆய்வின் முடிவுகளே சரியானது. இது சம்பந்தமான மற்ற ஆய்வுகள் அனைத்தும் தவறானது என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். இந்தக் கருத்துகளை சொன்னவர்களில் முக்கியமானவர் எனது புத்தகத்திற்கு முன்னுரை கொடுத்தவரும் இஸ்லாத்தில் நிபுணரான பிரான்சிஸ் ராபின்சன். இந்த நிலைமை இப்போது தொடர்ந்து கொண்டிருக்க, சுமார் நான்கு, ஐந்து வருடங்களுக்கு முன்பு அத்வானியும் ஜின்னா மதசார்பற்றவர் என்றார். இப்போது ஆயிஷா ஜலால் ஆய்வை கொஞ்சம் அப்படி இப்படி மாற்றம் செய்து ஜஸ்வந்த்சிங் அப்படியே கூறுகிறார். இவையெல்லாம் தவறானது என்பதால் ஆறு மாதத்திற்கு முன்பே சரியான ஆதாரங்களோடு நான் ஆய்வு செய்ததை புத்தகமாக வெளியிட்டேன்.

சமீபத்தில் வெளியான ஜஸ்வந்த்சிங் எழுதிய நூலில் (Jinnah: India - Partition Independence)) ஜின்னா ஒரு தேசியவாதியாகவும், மதசார்பற்றவராகவும் கூறுகிறார். இதை பற்றி உங்கள் கருத்து என்ன?

இதைப்பற்றி சற்று விரிவாகத்தான் பேச வேண்டும். 1916 இல் லக்னோவில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் முஸ்லிம்களுக்கான பிரதிநிதித்துவம் என்பது அகில இந்திய முஸ்லிம் லீக்தான் என்று அங்கீகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஜின்னா ஒரு தேசியவாதி என்

பது அவர் இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினராகவும் முஸ்லிம் லீக்கின் உறுப்பினராகவும் இருந்தபோது மட்டுமே. காந்தி காங்கிரசில் நுழைந்த பிறகு இந்தச் சூழ்நிலைகள் மாறுகின்றன. இப்படி மாறுகின்ற சூழ்நிலையில் 1921 இல் காங்கிரஸோடு தன்னுடைய உறவுகளை முழுமையாக முறித்துக் கொண்டு அகில இந்திய முஸ்லிம் லீக் தலைவராக ஜின்னா ஆனார்.

அகில இந்திய முஸ்லிம் லீக் என்பது ஒரு வகுப்புவாத கட்சி. ஏனெனில் அந்தக் கட்சியில் முஸ்லிம்கள் மட்டுமே உறுப்பினராக முடியும். இந்த வகுப்புவாத கட்சியின் தலைவர் ஜின்னா. அன்றைய இந்திய துணைக்கண்டத்தில் முஸ்லிம்களின் மக்கள் தொகை 25 சதவிகிதம்தான். அப்போது முஸ்லிம்களுக்கு நாட்டில் அரசியல் மற்றும் கலாசாரரீதியாக என்ன ஆதரவு இருந்தது என்று தெரியவில்லை. பின் நாளில் அகில இந்திய முஸ்லிம் லீக்தான் முஸ்லிம்கள் எல்லோருக்குமான ஒரே கட்சி என்ற நிலை ஏற்பட்டது. இந்த வகுப்புவாத கட்சியின் தலைவரை ஜஸ்வந்த் சிங் எப்படி தேசியவாதி என்று கூறமுடியும்?

ஒரு வகுப்புவாத கட்சியின் தலைவர், இந்தியாவின் ஒற்றுமைக்காக ஒருவேளை பேசி இருந்தாலும், ஜின்னாவை வகுப்புவாத தேசியவாதி என்றே அழைக்க முடியும் என்று நினைக்கிறேன். அவரை நிச்சயமாக ஒரு தேசியவாதி என்று சொல்ல முடியாது. ஒரு மதத்தையோ, ஜாதியையோ சார்ந்து செயல்படும் எந்த ஒரு நபரையும் தேசியவாதியாக கூற முடியாது.

1937 இல் தேர்தலில் முஸ்லிம் லீக்கும், இந்திய தேசிய காங்கிரசும் போட்டியிட்டது. தென்னாட்டில் நீதிக்கட்சி மோசமான தோல்வியை தழுவியது. முஸ்லிம் லீக்கும் மோசமான தோல்வியை தழுவியது. காங்கிரஸ் இந்தியா முழுவதும் வெற்றிப்பெற்றது. இப்போது இயல்பாகவே ஒரு கேள்வி எழுகிறது. முஸ்லிம்களுக்கு நான்தான் தலைவர் என்று ஜின்னா சொல்லிக் கொண்டிருந்த போது ஏன் இப்படி மோசமான தோல்வி முஸ்லிம் லீக்கிற்கு ஏற்பட்டது? அப்போது காங்கிரசில் அபுல்கலாம் ஆசாத், அன்சாரி போன்றவர்கள் இருந்தார்கள். அந்த நேரம் காங்கிரஸ் மந்திரிசபை அமைத்தபோது முஸ்லிம் லீக் கூட்டணியை நிராகரித்தது. இதனால், நம்மை முற்றிலுமாக ஒதுக்கி விட்டார்கள் என்று ஜின்னா நினைக்க ஆரம்பித்தார்.

1939 இரண்டாம் உலகப் போர் வெடித்தது. அப்போது ஜின்னா வகுப்புவாத தேசியவாதியாகத்தான் இருந்தார். அவர் வகுப்புவாத தேசியவாதியிலிருந்து முஸ்லிம் தேசியவாதியாகவோ அல்லது தனிநாடு கோரிக்கைவாதியாகவோ எப்படி மாறினார் என்பதுதான் ஆய்வுக்குரிய விஷயம். அப்போது இருந்த காங்கிரஸ் மந்திரிசபை இரண்டாம் உலகப்போரில் பங்குபெறும் பிரிட்டிஷ§க்கு ஆதரவாக இல்லை. இதனால் இந்தியாவில் இருக்கும் காங்கிரஸ் மந்திரிசபைகள் ராஜினாமா செய்தன. இந்தச் சூழல் ஜின்னாவிற்கு வசதியாக போய்விட்டது. அப்போது ஜின்னாவிற்கு எந்த அதிகாரமும் இல்லை. அந்தச் சமயத்தில் காங்கிரஸ் செய்த இந்தத் தவறை ஜின்னா நன்கு பயன்படுத்திக் கொண்டு டிசம்பர் 1939 முஸ்லிம்கள் காங்கிரஸின் மேலாதிக்கத்திலிருந்து விடுதலை அடைந்து விட்டார்கள் என்று இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டன. தென்னிந்தியாவில் நடைபெற்ற கொண்டாட்டங்களில் பெரியார் ஈ.வெ.ரா கலந்து கொண்டு ஜின்னாவுக்கு ஆதரவாக பேசினார். அப்போது பிரிட்டிஷ்காரர்களின் முக்கிய நோக்கம் இரண்டாம் உலகப்போரில் எப்படியாவது ஜெயிக்க வேண்டும். அதற்கு யாரை, எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்பதுதான். அப்போது இருந்த இந்திய இராணுவத்தில் முஸ்லிம்கள் நாற்பது சதவிகிதத்தினரும், சீக்கியர்கள் முப்பது சதவிகிதத்தினரும் இருந்தனர். இதில் கூர்காக்களும், காஷ்மீர் டோக்கார்களும், மராட்டியர்களும் இந்துக்களாக இதர முப்பது சதவிகிதத்தில் இருந்தனர்.

இரண்டாம் உலகப்போரை காங்கிரஸ் ஆதரிக்க முடியாது என்று காந்தி சொன்னதால் பிரிட்டிசார் வேறு வழி இல்லாமல் முஸ்லிம் லீக் பக்கம் போக வேண்டியதாயிற்று. அப்போது ஜின்னா போரில் பிரிட்டிசை ஆதரிப்பதாகவும், அதற்கு மாற்றாக முஸ்லிம்களுக்கு வேண்டிய சலுகைகளை தரவேண்டும் என்று கோரினார். அந்த நேரத்தில் வைஸ்ராயாக இருந்த லின்லித் கௌ என்பவர் 1939-1940ல் கொடுக்கப்பட்ட உறுதிமொழியின் அடிப்படையில் Constitutional advance என்பது ஜின்னா ஆதரவு இல்லாமல் இந்தியாவில் எதுவும் நடக்காது என்ற உத்திரவாதத்தை அங்கீகரித்தார். இதனால் இந்திய தேசிய காங்கிரஸ் மிகப்பெரிய கட்சியாக இருந்தாலும் ஜின்னாவுக்கு கொடுக்கப்பட்ட உத்திரவாதத்தால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. இதன் மூலம், பிரிட்டிசார் தம் வழிக்கு வந்துவிட்டதாகவும் அதனால் தன்னுடைய நிலை உயர்ந்துவிட்டதாகவும் ஜின்னா நினைத்தார். அரசியல் அமைப்பு சட்ட வரையறையில் காங்கிரசை செயல்படாமல் தடுக்க ஒரு திட்டத்தை முன் வைக்குமாறு லின் லித் கௌ ஜின்னாவிடம்கோரினார்.

இந்த நேரத்தில் இன்னொன்றையும் சொல்ல வேண்டும். ஈ.வெ.ரா. பெரியார் திராவிட நாடு கோரிக்கையை முன் வைத்தார். 1938டிசம்பரில் முன்வைக்கப்பட்ட இந்தக் கோரிக்கைதான் இந்தியாவில் முதன் முதலில் எழுந்த பிரிவினைவாத கோரிக்கையாகும். திராவிட நாடு என்பது தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய பகுதிகளை மட்டும் கொண்டிருந்தாலும் பின்னாளில் ஒருமுறை பெரியார் வங்காளத்தையும் சேர்த்துக் கொண்டார். 1940 ஜனவரியில் Deliverence Day முடிந்த பிறகு பெரியார் ஈ.வெ.ரா, சி.என். அண்ணாதுரை இரண்டு பேரும் பம்பாயிற்கு சென்று ஜின்னாவை சந்தித்து, திராவிட நாடு கோரிக்கைக்கு ஆதரவு திரட்டினர். அப்போது ஜின்னா ‘என்னால் முடிந்தவரைக்கும் ஆதரவு தருகிறேன்’ என்றார். பிறகு அம்பேத்கரை சந்திக்கின்றனர். அப்போது பெரியார் ஈ.வெ.ரா., ஜின்னா, அம்பேத்கர் மூவரும் சேர்ந்து ஒரு முண்ணனி அமைக்கப் போவதாக பேச்சு நடந்தது. இந்தப் பேச்சு வார்த்தை நடந்த இரண்டு மாதத்திற்குப் பிறகு அதாவது மார்ச் 1940 இல் ஜின்னா தனிநாடு கேட்கிறார். இந்த இடத்தில்தான் வகுப்புவாத தேசியவாதியாக இருந்த ஜின்னா முழுமையான முஸ்லிம் தேசியவாதியாகி இந்தியாவிலிருந்து பிரிவினை கோருபவராக மாறுகிறார்.

பிரிவினைவாத தீர்மானம் லாகூரில் முதலில் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தை படித்துப் பார்த்தால் இந்தத் துணைக் கண்டத்தில் எங்கெங்கு முஸ்லிம்கள் தொடர்ச்சியாக பெரும்பான்மையாக வசிக்கிறார்களோ அங்கு இஸ்லாமிய அரசு உருவாக்க வேண்டும்; அதாவது, இந்தியாவின் வடகிழக்கு, வடமேற்குப் பகுதிகளை கொண்டதாக இருக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படுகிறது. அதை Separate Muslim Sovereign States என்றுதான் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அதில் பாகிஸ்தான் என்ற பதத்தை உபயோகிக்கவில்லை. (பாகிஸ்தான் என்ற பதத்தை முதன் முதலில் உபயோகித்தவர் சௌத்ரி ரஹமத் அலி என்பவர்தான்). இந்த தீர்மானத்தில் அவர்களுடைய கோரிக்கை தெளிவாக இருந்தது. ஆனால் ஆயிஷா ஜலால் இதில் கோரிக்கை எதுவும் தெளிவாக இல்லை என்கிறார். இது சம்பந்தமாக எந்த வரைபடமும் இல்லை என்று சொல்கிறார். ஆனால், வரைபடம் போடுவது ஜின்னாவின் வேலை இல்லை. அது பிரிட்டிஷ்காரர்களின் வேலை. இந்தத் தீர்மானத்தில் சிறுபான்மையினரைப் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதில் அமையப் போகும் இஸ்லாமிய அரசில் இந்து சிறுபான்மையினர், மற்ற பகுதிகளில் முஸ்லிம் சிறுபான்மையினர் ஆகியோர்களுக்கான அத்தியாவசியமான ஷரத்தில் சிறுபான்மையினரின் உரிமைகள், சலுகைகள் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது.

பாகிஸ்தான் கேட்பதற்கு முன்பே முஸ்லிம்கள் என்ன கேட்டாலும் கொடுக்க வேண்டியதுதான்; வேறு வழியில்லை என்று காந்தி பேச ஆரம்பித்து விட்டார். ஹரிஜன் பத்திரிகையிலும் எழுத ஆரம்பித்தார். பாகிஸ்தான் கோரிக்கை வந்த பிறகும் கொடுக்க வேண்டியதுதான் என்று காந்தி சொன்னாலும், இந்தியா ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று தொடர்ந்து சொல்ல ஆரம்பித்தார். இந்த நிலைமை 1940 இல் இருந்தது.

1942 ஏப்ரலில் உலகப்போர் உக்கிரமாக நடைபெறுகிறது. ஜப்பான் தெற்கு ஆசியப்பகுதிகளையும், அந்தமான் இம்பால் வரைக்கும் வந்துவிட்டது. இப்போது பிரிட்டிஷ் பெரிய பிரசனையில் இருந்தது. அப்போது பிரிட்டிஷ் பிரதமராக இருந்த வின்சென்ட் சர்ச்சில் மாஸ்கோவில் தூதராக இருந்த StaffordCripps என்பவரை இந்தியாவுக்கு அனுப்பினார். அவர் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை திருத்த சில யோசனைகளுடன் வந்தார். அந்தத் திருத்தத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மை உள்ள பகுதிகளை தனி அரசாக இருக்க வேண்டும் என்ற பேச்சு எழவில்லை. அதற்குப் பதிலாக எந்த மாகாணப் பகுதி தனியாக பிரிந்து செல்ல வேண்டும் என்று நினைக்கிறதோ, அந்த மாகாணப் பகுதிகள் தனியாக பிரிந்து செல்லலாம் என்று சொன்னார். இது ஒரு அதிர்ச்சியான விஷயம். ஆனால் இதில் ஜின்னாவுக்கு சந்தேகம் இருந்தது. அந்தச் சந்தேகம் என்பது பஞ்சாப் பிரிந்தால், பஞ்சாப்போடு வங்காளம் சேருமா என்பதுதான். ஏனெனில் இந்த இரண்டு இடங்களிலும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்தார்கள். மேலும் இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் பட்டானியர்கள் இருந்தனர். அவர்களும் முஸ்லிம்களுடன் சேருவார்களா என்ற சந்தேகமும் இருந்தது.

இந்தக் கோரிக்கைக்கு காங்கிரஸின் உயர்மட்ட தலைவர்கள் உடன்படவில்லை. அப்போது காங்கிரஸ் தலைவராக அபுல்கலாம் ஆசாத் இருந்தார். ஆனால் ராஜாஜி இதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார். இதை ஏற்றுக் கொண்டால் பெரும்பான்மையான மாகாணங்களை வைத்து இந்தியாவை உருவாக்கி விடலாம் என்றார். 1942 இல் சென்னை மாகாண காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் ஜின்னாவின் பாகிஸ்தான் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு அதற்கு ஆதரவாக தீர்மானத்தை நிறைவேற்றினர். இந்த தீர்மானத்திற்கு பின்னால் ராஜாஜி இருந்தார். 1942 இல் மே மாதம் அலகாபாத் காங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டத்திலும் இந்தத் தீர்மானத்தை ராஜாஜி கொண்டு வந்தார். அங்கு சென்னை மாகாணத்திலிருந்து வந்திருந்த கே. சந்தானம், சுப்புராயன் போன்றோர் ராஜாஜி கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவாக இருந்தனர். ஆனால் அங்கு நேரு உட்பட பல தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. தீர்மானத்திற்கு ஆதரவாக 15 வாக்குகளும், எதிராக 120 வாக்குகளும் விழுந்தன. அதனால் இந்த தீர்மானம் காங்கிரஸ் காரிய கமிட்டியால் நிராகரிக்கப்பட்டது. இதனால் ராஜாஜி காரிய கமிட்டியிலிருந்து ராஜினாமா செய்தார். ராஜாஜியின் ராஜினாமா காரிய கமிட்டியிலிருப்பவர்களை சிந்திக்கவும், திகைக்கவும் வைத்தது. அதே சமயத்தில் ராஜாஜியின் தீர்மானத்தை எதிர்த்து தனி நாடு கொடுக்க முடியாது என்ற தீர்மானத்தை கொண்டு வந்தார்கள்.

ஆனால் இங்கு ஒரு விஷயத்தை நாம் கவனிக்க வேண்டியுள்ளது. இதே காங்கிரஸ் காரிய கமிட்டி ஏற்கெனவே இந்தப் பிரசனையைப் பற்றி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. அந்தத் தீர்மானத்தில் எந்த ஒரு இந்தியாவில் இருக்கும் பகுதிகள் இந்திய அரசுக்கு வர விருப்பம் இல்லையோ, அந்தப் பகுதியினரை கட்டாயப்படுத்தி சேர்க்க மாட்டோம் என்று உள்ளது. ராஜாஜி கொண்டு வந்த இந்தத் தீர்மானம் மேற்கூறியத் தீர்மானத்திற்கு உட்பட்டதுதான். ஆனாலும் ராஜாஜியின் தீர்மானத்தை எதிர்த்து நேருவின் ஆதரவாளர்களில் ஒருவரான பீகாரைச் சேர்ந்த ஜகத் நாரயாண்லால் என்பவர் கொண்டு வந்தார். இதனால் காங்கிரசுக்குள்ளே ஒரு குழப்பமான நிலை உருவாகியது. காங்கிரசின் நிலமையை உணர்ந்து கொண்ட ஜின்னா, முழித்துக் கொண்டார். ஏனெனில் ஜின்னா கேட்டது பெரும்பான்மையாக முஸ்லிம்கள் வசிக்கிற இடங்கள்தான். ஆனால் கிரிப்ஸ் சொல்வது தனிநாடு. ஆகவே பொறுமையாக தன்னுடைய செயல் தந்திரங்களை மாற்றினார் ஜின்னா. அப்போது பஞ்சாபில் சிக்கந்தர் ஹையத் கான் என்ற ஒருவர் இருந்தார். அவர்தான் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்த இடங்களில் தனி அரசு என்கிற கருத்தை உருவாக்கியவர். 1943 க்குள் தனிநாடு வேண்டும் என்று ஜின்னா கேட்க ஆரம்பித்தார். அதே நேரம் கிரிப்ஸ் தனியாக பிரிந்து போகலாம் என்று சொன்னவுடன் பஞ்சாப்பில் சீக்கியர்கள் அதிகம் இருந்தாலும் நாம் சேர்த்துக் கொள்ளலாம் என்று ஜின்னா விரும்பினார். இது போலவே வங்காளத்தில் இந்துக்கள் அதிகமாக இருந்தாலும் பாகிஸ்தானோடு சேர்த்துக் கொள்ளலாம் என்று ஜின்னா கூறினார். இதோடு அசாமையும் சேர்த்துக் கொண்டார்.

‘ஜின்னா தனிநாடு கேட்கவில்லை. அவர் ஒரு தேசியவாதி’ என்றெல்லாம் இப்போது சொல்கிறார்கள். ஆனால் அவர் 1943 இல் தமது கொள்கையை மாற்றிக் கொண்டார் என்பதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. அப்போது முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கிற இடங்களில் தனி அரசு என்பது தனிநாடு அல்ல என்ற ஒரு குழப்பத்தை வைத்துக் கொண்டு, ஆயிஷா ஜலால் ஜின்னா தனிநாடு கேட்கவில்லை என்கிறார். அதை ஜஸ்வந்த் சிங்கும் வழிமொழிகிறார்.

அந்தச் சமயத்தில் பஞ்சாப் என்று எடுத்துக் கொண்டால், இன்றைக்கு இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் இருக்கும் பஞ்சாப் அல்ல. அன்றைய பஞ்சாப்பில் ஹரியானா, இமாசல பிரதேசம், உத்திரபிரதேசத்தின் சில பகுதிகள் ஆகியவை இருந்தன. இவ்வளவு பெரிய பகுதியையும் காஷ்மீரையும் எடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்தார் ஜின்னா. காங்கிரஸ் காரிய கமிட்டி ஆகஸ்ட் - 8 ல் வெள்ளையனே வெளியேறு தீர்மானத்தைக் கொண்டு வருகிறது. அதில் முதலில் விடுதலை வேண்டும். பிரிந்து போகும் பிரசனைகளை பிறகு நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்கின்றனர்.

இந்த நாடு விடுதலை அடைய வேண்டும் என்ற தீர்மானத்திற்கு நேரு, காந்தி, பட்டேல், ராஜேந்திரபிரசாத் போன்ற பெரிய தலைவர்களும் ஆதரித்தனர். நேருவுக்கு சில விஷயங்களில் தனிப்பட்ட கருத்துகள் இருந்தாலும் கடைசியில் காந்தி சொல்வதைத்தான் கேட்பார். பட்டேலை அரசியலுக்கு கொண்டு வந்தவரே காந்திதான். காந்தியின் சீடரும்கூட. ராஜேந்திர பிரசாத்தும் அப்படித்தான். தென்னிந்தியாவை பொறுத்தவரைக்கும் ராஜாஜிதான் காந்திக்கு நெருக்கமான நண்பர். மேலும் உறவினர். 1927 இல் சென்னையில் உள்ள ஹிந்தி பிரச்சார சபாவில் தேவதாஸ் காந்தி ஹிந்தி கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது ராஜாஜி மகள் லெட்சுமியை காதலித்தார். 1933 இல் தமிழ் பிராமணப் பெண்ணுக்கும், குஜராத்தை சேர்ந்த பனியாவுக்கும் திருமணம் நடைபெற்றது. அப்போது இது ஒரு பெரிய புரட்சிதான்.

அது ஒரு தனி கதை. ஏனெனில் ராஜாஜி ஒரு பிற்போக்குவாதி என்றெல்லாம் சொல்கிறார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரைக்கும் இது பெரிய விஷயம்தான்.

ராஜாஜிக்கும், காந்திக்கும் நல்ல உறவு இருந்ததால் ராஜாஜி கொண்டு வந்த தீர்மானத்தை காந்தி பலமாக எதிர்க்கவில்லை. வெள்ளையனே வெளியேறு இயக்கம் வந்தபோது பிரிட்டிஷ்காரர்களுக்கு நாம் ஆதரவாக இருக்க வேண்டும் என்றார் ராஜாஜி. அப்படி ஆதரவாக இல்லை என்றால் ஜப்பான்காரர்கள் நம்மை ஆக்கிரமித்து விடுவார்கள் என்றும், நாட்டில் பெரிய குழப்பம் வந்து விடும் என்றும், அதனால் வெள்ளையனே வெளியேறு தீர்மானம் வேண்டாம் என்றும் காந்தியிடம் சொன்னார். ஆனால் ராஜாஜியின் பேச்சை காந்தி கேட்கவில்லை. அதனால் ராஜாஜி காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி பிரிட்டிசாருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். ஏனெனில் பிரிட்டிஷ்காரர்களின் நம்பிக்கையைப் பெற்றுவிட்டால், இந்தியா ஒற்றுமையாக இருக்க உதவுவார்கள். மேலும் ஏதாவது பிரிவினை என்று வந்தால் பெரிய பிரச்சனை ஏதுவும் இருக்காது என்று ராஜாஜி நினைத்தார். இந்த நேரத்தில் பிரிட்டிஷ்க்கு எதிராக காங்கிரஸ் இருந்தது. பிரிட்டிஷ் அரசாங்கமோ இந்திய ராணுவத்தைச் சார்ந்து இருந்தது. பஞ்சாபிலிருந்து பல இலட்சம் பேர் பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் இருந்தனர். இதில் பெரும்பான்மையினர் முஸ்லிம்கள். அப்போது ஜின்னா கேட்டதையெல்லாம் பிரிட்டிஷ் அரசாங்கம் செய்து கொடுத்தது. மேலும் கொடுக்கவும் தயாராக இருந்தது. அதனால் ராஜாஜி, பிரிட்டிஷ்காரர்கள் ஜின்னாவை கைவிட மாட்டார்கள் என்றார்.

வெள்ளையனே வெளியேறு தீர்மானம் வந்தவுடன் காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். ராஜாஜி மட்டும் வெளியில் இருந்தார். பின்னால் காந்தியின் உடல்நிலை கருதி 1943 இல் விடுதலை செய்யப்பட்டார். அப்போது இந்தியாவில் எந்த அரசியல் செயல்பாடுகளும் நடைபெறவில்லை. ஆனால் ராஜாஜி காந்தியோடு தொடர்பில் இருந்து கொண்டிருந்தார். இந்த மோசமான மூன்று வருட காலக்கட்டத்தை பாகிஸ்தான் வரலாற்று அறிஞர்களும், வட இந்திய வரலாற்று அறிஞர்களும் தம்முடைய புத்தகங்களில் ஒரு பக்கத்தில் கூறி முடித்து விடுவார்கள். 1940 இல் வெள்ளையனே வெளியேறு தீர்மானம். 1942 ஆகஸ்டில் எல்லா காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். 1945 மே மாதத்திற்கு பிறகு சிறையில் இருந்த காங்கிரஸ் தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். அடுத்த 1 1/2 வருடங்களில் நாட்டிற்கு விடுதலை கிடைத்தது.

இந்த 1942 முதல் 1945 வரையானது முக்கியமான காலகட்டம். ராஜாஜி எப்படியாவது ஜின்னாவை சமரசம் செய்து ஒரு தேசிய அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்று நினைத்தார். காந்தியை இந்த திட்டத்திற்கு உடன்படவும் வைத்தார். காந்தியின் அனுமதியுடன் ஜின்னாவையும் சந்திக்க ஆரம்பித்தார் ராஜாஜி. காந்தி சிறையிலிருந்து விடுதலையான பிறகு காந்தியையும், ஜின்னாவையும் சந்திக்க ஏற்பாடு செய்தார்.

1944-இல் ஜின்னா காந்தியை சந்திக்க உடன்படுகிறார். செப்டம்பர் மாதம் முழுவதும் பேச்சுவார்த்தை நடக்கிறது. இந்த பேச்சுவார்த்தையில் காந்திக்கு ஆலோசகராக இருந்தவர் ராஜாஜி. பம்பாய் பிளசண்ட் சாலையில் இருக்கும் ஜின்னா வீட்டிற்கு காந்தி தினசரி சென்றார். அந்த பேச்சுவார்த்தையின் ஆவணங்களைப் பார்த்தால் ஜின்னா இரண்டு தேசக் கோட்பாட்டை முன் வைத்தார். அதில் ஒன்று இஸ்லாமிய தேசம் மற்றொன்று இந்து தேசம். ஆனால் காந்தியோ மதம் மாறினாலும் தேசியம் மாறாது; ஆகவே ஒரு தேசியம்தான் என்கிறார். இந்தப்

பேச்சுவார்த்தையில் முக்கிய பிரசனையாக இருந்தது பாகிஸ்தான் என்பது நிலத்தொடர்ச்சி சார்ந்ததா அல்லது மாகாணங்கள் சார்ந்ததா என்பதுதான். மற்றவையெல்லாம் அறிவுஜீவித்தனமான விவாதங்கள்தான் நடந்தது. கடைசியில் பேச்சுவார்த்தை முறிந்தது.

இந்தப் பேச்சுவார்த்தை முறிந்தாலும், காந்தி ஜின்னாவுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். முஸ்லிம்களின் பிரதிநிதியாக ஜின்னாவை பார்க்கும் பார்வையே நாடு முழுவதும் நிலவியது. இந்த நேரத்தில் (1943) பிரிட்டிஷ் சட்ட அறிஞர் சர் ரெஜினால்டு கப்லேண்ட் ஒரு திட்டத்தை முன்வைத்தார். அந்த திட்டத்தின் அடிப்படையில் ஹிந்து, முஸ்லிம் ஆகியோர்கள் இரு வெவ்வேறு தேசியத்தைச் சேர்ந்தவர்கள் என்று இங்கிலாந்து அங்கீகரிக்க வேண்டும். இந்த இரண்டு தேசியங்களும் ஒரு மத்தியத்திலிருந்து சம அந்தஸ்தில் ஒன்றிணைக்க முடியும். அதாவது சிறுபான்மை தேசத்திற்கும், பெரும்பான்மை தேசத்திற்கும் சரிசமமான அந்தஸ்தும், அதிகாரமும் கொடுக்கப்படும். பிரிட்டிசாரை பொறுத்தமட்டில் இந்தியாவில் இந்து தேசம், இஸ்லாமிய தேசம் ஆகிய இரண்டடின் இருப்பையும் கொண்டது. இது மான்செஸ்டர் பத்திரிகையில் வெளிவந்தது.

இந்தத் திட்டத்தை அப்படியே மாற்றி Cabinet Mission ஆக வந்தது. அதில் இந்துகளுக்கும், முஸ்லிம்களுக்கும் சம அந்தஸ்து வழங்கப்படும். இதுதான் இந்தியா ஒற்றுமையாக இருக்க சரியான வழி என்று கொண்டு வந்தார்கள். இந்தச் செய்தி அன்றைய தினசரிகளிலும் வந்தது. 25% சதவிகிதிமே கொண்ட சிறுபான்மையினர் மத்தியில் காங்கிரசுக்கு சமமானவர்கள். இதில் ஒரு பெரும் சிக்கல் வந்தது. உதாரணமாக அஸாமில் முஸ்லிம் தேசம், இந்து தேசம் என்ற கருத்தாக்கம் 1946 சிம்லாவில் மாநாடு நடந்தபோதே இருந்தது. Cabinet Mission வந்த பிறகு இரண்டு பிரிவுகளாக இருந்தது; பிறகு மூன்று பிரிவினைகளாக மாறியது. முதல் பிரிவு மேற்குப்பகுதி சார்ந்தும்; இரண்டாவது பிரிவு இந்தியா என்றும்; மூன்றாவது வங்காளம் அசாம் என்றும் இருந்தது. இதனால் மிகவும் சிக்கலான திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டது. அந்தந்த மாகாணத்திற்கு ஒரு constitution னையும் இந்த மூன்று பிரிவுக்கும் ஒரு அரசியல் சட்டம் என்றார். மத்தியில் ஒரு அரசியல் சட்டம். என்று Cabinet Mission சொன்னது.

எப்படியாவது இதை சரிபடுத்த முடியுமா என்று பிரிட்டிசார் நினைத்தார்கள். அதே நேரம் முடியாது என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தது. இருந்தும் இந்தத் திட்டத்தை முன்மொழிந்தார்கள். இந்தத் திட்டத்திற்கு காங்கிரஸ் ஓரளவுக்கு உடன்பட்டது. மத்தியில் சமமான அந்தஸ்து அளிக்கப்படும் என்றவுடன் ஜின்னா மகிழ்ச்சியாகவே உடன்பட்டார். இதை வைத்துதான் ஜின்னா ஒன்றுபட்ட இந்தியாவை ஆதரித்தார் என்று இன்று கூறுகிறார்கள். இந்த விபரங்களுக்கெல்லாம் செல்லாமல் ஜின்னா பற்றி பொத்தம் பொதுவாக கூறிக் கொண்டு இருக்கிறார்கள்.

லார்டு மவுண்ட் பேட்டன் ஆலோசகரான வி.பி. மேனன், கே.எம். பணிக்கர், பிரிட்டிசை சேர்ந்த பெண்டரல் மூன் ஆகியோர் காங்கிரஸ் இந்த திட்டத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டிருந்தால் நிலைமை வேறு மாதிரி ஆகி இருக்கலாம் என்றனர். ஆனால் பிரிட்டிஷார்களின் நோக்கம் பாகிஸ்தான் என்ற மாகாணத்தைக் கொடுத்து விடுவதுதான். எல்லா அரசியல் சட்ட வல்லுநர்களும் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டால், அதில் இரண்டு இஸ்லாமிய பெரும்பான்மை கொண்ட பகுதிகளாகவும், மற்றொரு பகுதி இந்து பெரும்பான்மை கொண்டதாகவும் இருக்கும் என்பதை ஏற்றுக் கொண்டனர். எப்படியாவது இந்த இரண்டு பிரிவுகளும் இந்தியாவிலிருந்து பிரிந்துபோகும் மாகாணத்தின் அடிப்படையிலேதான் ஜின்னா கோரினார். இதை செய்த ஜின்னாவை தேசிய ஒற்றுமையை ஏற்றுக் கொண்டவர் என்று எப்படி சொல்ல முடியும்? மிகப் பெரிய அரசியல் சட்ட வல்லுநர்கள் எல்லாம் இது பெரிய பிரிவினை ஆகிவிடும் என்றனர். Cabinet Mission னின் அடிப்படைகளை வைத்துக் கொண்டு ஜின்னா ஒரு தேசியவாதி என்றும் கூட்டாட்சி வேண்டும் என்றும் சொன்னார் என்கிறார் ஜஸ்வந்தசிங். எப்படி சொல்ல முடியும்? 25 சதவிகிதத்தினர் 75 சதவிகிதத்தினர் சமமாக முடியுமா? இது நிரந்தரமான பிரச்சனையாகும்.

பின்னால் நடக்கப்போகும் விஷயங்களை அவதானித்த ராஜாஜி, ஜின்னா ‘பெரிய பாகிஸ்தானுக்கு’ அடிபோடுகிறார், என்றும் அதனால் காங்கிரஸ் இதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றார். இதைத்தான் எல்லாரும் விமர்சிக்கிறார்கள். ‘காங்கிரஸ் பிரிவுக்கு உடன்படாது. ஒற்றுமைக்கு உடன்படாது. சமத்துவத்திற்க்கு உடன்படாது’, என்ற முடிவுக்கு வந்த ஜின்னா நேரடியான நடவடிக்கையில் இறங்கினார். நேரடியான நடவடிக்கை என்பது வன்முறையால் தன்னாட்சி பெற்ற பாகிஸ்தானைப் பெற்றுக் கொள்வது என்பதுதான். இந்த நடவடிக்கையால் நவகாளி போன்றவைகள் நடந்தன. இதனால் பெரும் எண்ணிக்கையில் மக்கள் மாண்டனர். இதை வைத்து பயம் காட்டியாவது பாகிஸ்தானை பெறலாம் என ஜின்னா நினைத்தார். இந்த பிரசனையில் பிரிட்டிஷ்காரர்களை மறந்து இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கான பிரச்சனை என்று அனைவரும் பேசிக் கொண்டனர். இன்னொரு பக்கம் Cabinet Mission-க்கு காங்கிரஸ் உடன்படாததால் ஜின்னா கேட்கிற பாகிஸ்தானை கொடுத்துதான் ஆக வேண்டும் என்ற நிலைமையும் இருந்தது. ஜஸ்வந்த் சிங் சொல்லும்போது இரண்டு பேருக்கு நடுவே மத்தியஸ்தராக பிரிட்டிசார் செயல்பட்டார்கள் என்கிறார். இந்த நிலைமை நிச்சயமாக கிடையவே கிடையாது.

இந்திய பிரிவினைக்கு முக்கிய காரணமாக எதை கருதுகிறீர்கள்?

பிரிட்டிஷ் நான்கு நூற்றாண்டுகளாக உலகை ஆண்டு கொண்டு இருந்தது. அதைத் தொடர்ந்து பாதுகாக்க ஏதாவது செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கத்தானே செய்தது. நான் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் என்ற வார்த்தையை உபயோகிக்க விரும்பவில்லை. ஆனால் பிரிட்டிஷ் முதலாளித்துவம் என்பதை ஒரு ஜாக்கிரதையாக சொல்கிறேன். இன்னொரு பக்கம் ரஷ்யாவில் கம்யூனிஸம். இந்த கம்யூனிஸம் ஆப்கானிஸ்தானிலும், இந்தியாவிலும் அப்போது பரவிக் கொண்டிருந்தது. இதை பிரிட்டிஷ் தடுத்தாக வேண்டும். மற்றொரு பக்கம் மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள எண்ணெய் பொருளாதாரம் அங்கேயும் கம்யூனிஸத்தை தடுக்க வேண்டும். இது 19 ஆம் நூற்றாண்டிலிருந்து நடந்தது. இதை Great Game என்று சொல்வார்கள். காங்கிரசுக்கும், முஸ்லிம் லீக் ஜின்னாவுக்கும் இதைப் பற்றியெல்லாம் கவலை இல்லை. இவர்கள் அடித்துக் கொள்ளட்டும். நமக்கு நமது நலன்தான் முக்கியம் என்பது பிரிட்டிசாரின் கொள்கையாக இருந்தது. ஜின்னா பாகிஸ்தான் கேட்டதற்கு காரணமே பிரிட்டிஷ்காரர்கள்தான். அந்த நேரத்தில் பிரிட்டனின் அரசாங்க உயர்மட்ட கூட்டத்தில் நடந்தவைகளைப் பார்த்தால் பிரிட்டிஷ் மற்றும் மேற்கத்திய நாடுகளில் புவி சார்ந்த அரசியல் மத்திய கிழக்கு நாடுகளிலும், இந்திய பகுதிகளிலும் அதைச் சுற்றி உள்ள இந்திய பெருங்கடல் பகுதியையும் தற்காத்துக் கொள்வதற்கான தந்திரமாக இருந்தது.

எண்ணெய் அவர்களுக்குத் தேவை. வான்வழிப் பயணம் இங்கிலாந்து, மத்திய கிழக்கு, இந்தியா, மலேசியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் மேல் பயணிக்க வேண்டியிருந்தது. இதையெல்லாம் பாதுகாத்துக் கொள்ளவேண்டும். ரஷ்யாவை தடுக்க வேண்டும். ஜின்னா கேட்டார் என்பதற்காக பாகிஸ்தான் கொடுப்பது சம்பந்தப்பட்ட பிரசனை மட்டுமல்ல. பிரிட்டிஷ்காரர்கள் உலகை ஆளும் அதிகாரத்திற்காக அனைத்தையும் தன்வயப்படுத்தும் செயலில் சிந்தித்து செயல்பட்டனர். இந்தியர்கள் இதையெல்லாம் நினைத்துப் பார்க்கவில்லை. ஜின்னாவும் இதையெல்லாம் நினைத்து பார்க்கவில்லை. பாகிஸ்தான் கொடுத்தால் போதும் நாம் தலைவராகி விடலாம் என்று நினைத்தார். பிரிட்டன் அரசின் உயர்மட்ட கூட்டத்தில் பிரிட்டிஷ் கொள்கைகளை பாதுகாக்க பல யோசனைகள் விவாதிக்கப்பட்டன. அதில் ஒன்று ‘பெரிய பாகிஸ்தான்’ கொடுக்க வேண்டும். அப்படி ஒருவேளை ‘பெரிய பாகிஸ்தான்’ கொடுக்க முடியவில்லை என்றால் ‘சிறிய பாகிஸ்தானாவது’ கொடுத்தால் நமக்குச் சாதகமாக இருக்கும். தொடர்ச்சியற்ற நிலப்பகுதி கொண்ட பாகிஸ்தான் கொடுத்தால் அத்தகைய பாகிஸ்தான் பின்னாளில் பிரிட்டிசாருக்கு ஆதரவாக இருக்கும்.

அதே நேரம் பெரிய பாகிஸ்தான் கொடுத்தாலும் அப்படித்தான். அதாவது கிழக்கு பாகிஸ்தானாக இருந்தாலும் மேற்கு பாகிஸ்தானாக இருந்தாலும் அது பிரிட்டிஷை சார்ந்திருக்கும். ஓலப்கரோ என்பவரின் திட்டத்தின்படி பெரிய மாகாண அடிப்படையில் பாகிஸ்தான் கொடுத்தால் ஆப்கானிஸ்தானை அடைவதற்கு ஒரு வழி கிடைப்பதோடு, மத்திய கிழக்குப் பகுதியை கட்டுப்பாட்டுப் பார்வையில் வைத்திருக்க முடியும். எண்ணெய் அங்கிருந்துதானே வருகிறது. இது உலக பொருளாதாரத்திற்கு தேவை. இதைப் பாதுகாத்துக் கொள்ள இந்தியா பிரிக்கப்பட்டாக வேண்டும். ஒன்றுபட்ட இந்தியாவை விட்டுச் சென்றால் ஒரே இரவில் பெரும் அதிகாரத்தை பெறுவதோடு, ருஷ்யாவோடும் அது ஒன்று சேரலாம். இந்த அபாயத்தை தடுப்பது எப்படி? அதற்கு ஜின்னாவை பயன்படுத்திக் கொண்டார்கள். ஜின்னாவுக்கு இதெல்லாம் தெரியவில்லை. ஜின்னாவை பெரிய புத்திசாலி என்று ஜஸ்வந்த்சிங் சொல்கிறார். நேரு, காந்தி, பட்டேல் போன்றவர்களும் இதைப்பற்றி சிந்தித்தார்களா என்று தெரியவில்லை.

இந்தியாவுக்கு எதிர்நிலையில் பாகிஸ்தான் உருவாக்கப்பட வேண்டும். இது ஜின்னா கேட்டதால் அல்ல. பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிர்நிலையில் நிறுத்தப்பட வேண்டுமென்று பிரிட்டிசார் விரும்பினார்கள். இது இன்றுவரை தொடர்கிறது. பிரிட்டிசார் நினைத்த மாதிரி ‘பெரிய பாகிஸ்தானை’ கொடுக்க முடியவில்லை. ஏனெனில் ஹிந்து, சீக்கியர்கள் பெரும்பான்மையாக கிழக்கு பஞ்சாப் மற்றும் மேற்கு வங்காளத்தில் இருந்தார்கள். அன்றைக்கு பிரதமராக இருந்த அட்லி கடைசிவரைக்கும் வங்காளத்தை மட்டும் தனியாகப் பிரித்து, காமன்வெல்த்தில் சேர்த்து விடுவோம் என்றார். அப்போது ஜின்னா, எங்களுக்கு ‘பெரிய பாகிஸ்தான்’ கொடுத்து விடுங்கள். நாங்களும் காமன்வெல்த்தில் சேர்ந்து கொள்கிறோம் என்றார். பிரிட்டிஷ் காமன்வெல்த் என்பதே பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கான ஒரு தந்திரம்தான்.எப்படி இருந்தாலும் இரண்டாம் உலக யுத்தம் பிரிட்டிசை பலவீனமாக்கிவிட்டது. அமெரிக்கா அவர்களின் இடத்தை எடுத்துக் கொண்டது. இறுதியாக மாகாணங்களை பிரிப்பதற்கு உடன்பாடு வந்தது. பஞ்சாப் இரண்டானது; வங்காளம் இரண்டானது; இந்தியா உருவானது; சிறிய பாகிஸ்தான் உருவானது. சிறிய பாகிஸ்தான் என்பது மூன்றில் ஒரு பகுதி நிலப்பரப்பைக் கொண்டது. சற்றேக் கற்பனை செய்து பாருங்கள். பெரிய பாகிஸ்தான கொடுத்திருந்தால் இந்தியாவின் மற்ற பகுதிகளின் நிலைமை என்னவாகியிருக்கும். ஆக இந்த தந்திரத்தின்படி பார்த்தால் பிரிட்டனில் தெற்காசியாவுக்கு ஒரு ஊன்றுகோல் கிடைத்ததுபோல் ஆனது.

இந்தியா ஒரு புதிய தேசம். பாகிஸ்தான் ஒரு புதிய தேசம். இவர்களுக்கு மேற்கத்திய உதவிகள் தேவை. இந்த ஊன்றுகோலில் பிரிட்டன் நாடானது இந்தியாவையும், பாகிஸ்தானையும் தன் பிடிக்குள் வைக்க ஆரம்பித்தது. நேருவும் அதுவரை காமன்வெல்த்தில் சேராமல் இருந்தார். அப்போது கிருஷ்ணமேனன் பேச்சை கேட்டு காமன்வெல்த்தில் சேர முன்வந்தார். அதற்கு நேரு பஞ்சாப்பையும், வங்காளத்தையும் இரண்டாக பிரித்து கொடுத்தால் காமன் வெல்த்தில் சேரலாம் என்றார். இன்று இந்தியாவும் பாகிஸ்தானும் காமன்வெல்த் உறுப்பினர்கள். காமன்வெல்த்உறுப்பினர்களாக இருந்து பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க நலன்களை பாதுகாக்கிறார்கள். இதுவே பிரிட்டிசார் தந்திரத்தின் முழுமையான வெற்றியாகும்.

Great Game கடைசி வைசிராயாக இருந்த மவுண்ட்பேட்டன் ஜின்னாவிடம், பட்டான்களை அமைதியாக வைத்துக் கொள்வதற்கு 3 1/2 கோடி செலவு செய்து இருக்கிறோம். எதிர் காலத்தில் நீங்கள் கூடுதலாக செலவு செய்ய வாய்ப்பு வரும் என்றார். இதற்காக ஜின்னா கவலைபடவில்லை. ஏனெனில் எல்லோரும் முஸ்லிம்தானே என்று நினைத்தார். ஆனால் இன்றைக்கு பட்டான்களை அமைதியாக இருப்பதற்கு எத்தனையோ மடங்கு செலவாகிறது. செலவு மட்டுமல்ல அங்கு படையும் தேவைப்படுகிறது. ஏன்? இந்தியா துண்டாக்கப்பட்டது. பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களை பேணிகாக்க, இந்தியா ஒரு வலுவான அரசு ஆவதை தடுக்கப்பட்டது. பிரிவினை மூலம் இந்தியா பலவீனமானது. தெற்கு ஆசியா பலவீனமானது. இதுவே பிரிட்டிஷ் ராஜதந்திரத்தின் மிகப் பெரிய வெற்றியாகும். இந்தியாவின் தலைவர்களும், பாகிஸ்தான் தலைவர்களும் சரியான திசையில் சிந்திக்காததின் விளைவுதான் இது. இதன் தொடர்ச்சிதான் பிரிட்டிஷ§ம், அமெரிக்காவும் இந்தியாவையும், பாகிஸ்தானையும் ஒவ்வொரு விஷயத்திலும் அப்படி செய் இப்படி செய்யென்று இன்றும் சொல்வதை பார்க்கமுடிகிறது.

பிரிவினை வரலாற்றின் அடிப்படையில் தற்போது தெற்காசிய பகுதியில் வசிக்கும் இஸ்லாமியர்களின் நிலைமை என்ன?

ஜின்னா என்ன சாதித்தார் என்றால் ஒன்றுமே இல்லை. பிரிட்டிஷ்காரர்களிடம் ஜின்னா கேட்ட பாகிஸ்தானும் கிடைக்கவில்லை. இந்திய துணைக் கண்டத்தில் முஸ்லிம் மக்கள் தொகை அன்றைக்கு 25% இருந்தது. தற்போது 450 மில்லியன் மக்கள் இருக்கிறார்கள். இந்தியத் துணைக்கண்டத்தில் இஸ்லாமியர்களின் வல்லமை என்ன? எல்லா இடங்களிலுமுள்ள இஸ்லாமியர் நலன்களை பாதுகாப்பதே ஜின்னாவின் நோக்கமாக இருந்தது. ஜின்னாவின் சாதனை என்பது முஸ்லிம்களை பிரித்ததுதான். முஸ்லிம்களை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் பிரித்துக் கொடுத்தார். இந்தியாவில் முஸ்லிம்கள் ‘சபாடினேட்டா’ ஆக்கப்பட்டனர். அடுத்து பாகிஸ்தானிலிருந்து வங்காளதேசம் பிரித்துக் கொடுத்தார். வங்காளதேசம் ஒரு பொருளாதார குழப்பம். பலுஸிஸ்தான் தனி நாடு கேட்டது. பட்டான்கள், தலிபான், அல்கொய்தா என்று பிரசனைக்கு மேல் பிரசனை. இதுதான் ஜின்னாவின் சாதனையா? இஸ்லாமியர்களை பாதுகாக்கப் போய் இப்படியெல்லாம் ஏன் நடந்தது? ஏனெனில் அவர்களுக்கு அரசியலிலும் உலக அரசியலையும் புரிந்து கொள்ள முடியவில்லை.

பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க நலன்களின் தன்மை மாறுவதையும் அதன் தத்துவத்தையும் எவ்வாறு புரிந்து கொள்வது என்பது தெரியவில்லை. ஆனாலும் இந்தியா ஏறக்குறைய காப்பாற்றப்பட்டது. ராஜாஜி முன்வைத்த பகுதிவாரி பாகிஸ்தான் உருவாக்கப்பட்டதால் மேற்கு பஞ்சாப், சிந்து, கிழக்கு வங்காளம் ஆகியவற்றை மட்டும் இழந்து குறைந்தபட்ச சந்தோஷமாவது அனுபவித்தார்கள். ஏனெனில் பலுசிஸ்தான் மற்றும் வடமேற்கு மாகாணங்கள் இந்தியாவின் பகுதிகளாக இருந்ததில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில்தான் இந்தப் பகுதிகளை பிரிட்டிசார் இந்தியாவோடு இணைத்தனர். இந்துக்கள் சற்றே இழந்தார்கள். இஸ்லாமியர்கள் நிறைய இழந்தார்கள். பஞ்சாப்பில் சீக்கியர்கள் அதிகம். மேற்கு பாகிஸ்தானிலிருந்து அவர்களைத் துரத்தி விட்டார்கள். இதற்கு முக்கிய காரணம் பிரிட்டிஷ் அரசாங்கம். (பிரிவினை போதும் ஏன் எப்போதுமே சீக்கியர்கள் பிரிவினைப்பற்றி அக்கறை காட்டியது கிடையாது. இதனால்தான் பிரிவினையின் போதே இவ்வளவு பெரிய வன்முறை நிகழ்ந்தது. இதே சீக்கியர்களை வைத்துதான் 1857இல் நடந்த கலகத்தை பிரிட்டிஷ் அரசாங்கம் அடக்கியது. இதுதான் பிரிட்டிசாரின் அரசியல்.)

இன்று பொறுப்பற்ற முறையில் ஜஸ்வந்த்சிங் இந்தியாவின் பிரிவினையின் போது பிரிட்டிசாரின் பங்கை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் ஜின்னா ஒரு தேசியவாதி என்று சொல்கிறார். நாம் எப்படி ஜஸ்வந்த்சிங்கை ஏற்றுக்கொள்ள முடியும்? ஜஸ்வந்த்சிங் மற்றும் பலர் பிரிவினையின்போது என்ன நடந்தது என்ற விவரங்களுக்குள் போவதில்லை. இவர்கள் வெறும் அரசியல்வாதிகள்தானே. பிரிட்டிஷ் மந்திரிசபையுடன் நடந்த விவாதங்களை இவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. ஆயிஷா ஜலால் புத்தகத்தை மட்டும் படித்துவிட்டு எழுதினால் போதும் என நினைக்கிறார் ஜஸ்வந்த் சிங். நான் இதில் முழுமையாக சொல்லி இருந்தாலும் எல்லா விபரங்களுக்குள்ளும் செல்லவில்லை. பிரிவினை என்பது ஒரு நகைச்சுவை அல்ல. அந்த தற்காப்பு பிரிட்டிசாருக்கு தேவைப்பட்டது. பிரிவினை கோரியதன் மூலம் ஜின்னா தவறை செய்துவிட்டார். அதை பிரிட்டிசார் பயன்படுத்திக் கொண்டனர். இந்த வரலாற்றின் நிகழ்வுகளின் காரணமான அதிகம் பாதிப்பிற்குள்ளானவர்கள் தெற்காசியாவில் வசிக்கும் முஸ்லிம்கள்தான்.

நேர்காணல்: முத்தையா வெள்ளையன்