இந்த இரண்டுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்று நான் சொன்னால், ‘குத்தூசி’ பார்ப்பன துவேஷி என்பார்கள்! “ஆமாம்! பரந்த நோக்கமே யில்லை,” யென்பார்கள் புரட்சி வீரர்கள்!

kuthoosi gurusamy 300“ஏனப்பா புரட்சி வீரா, ரிக்வேதத்தைக் கையில் வைத்திருக்க வேண்டிய பார்ப்பான் ரிவால்வரை ஏந்திக் காந்தியாரைச் சுட்டுக் கொன்றானே! அது மட்டும் நியாயமா? அதை இந்த நாட்டு இப்பந்திப் பத்திரிகைகள், ஆஷாட பூதி ஏடுகள் அத்தனையும் மறைத்து விட்டனவே! அது மட்டும் சிற்றினச் செய்கை அல்லவா?” என்று கேட்டால், ஹீ! ஹீ! என்று இளிக்கிறார், புரட்சிக்கார இளங்காளை!

இந்தக் காலத்தில் முறையாக வேதஞ் சொல்கிற பிராமணனே கிடையாது. மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்தால் சிவப்பு நிறமாக வேண்டும். ஆனால் ஆகவில்லை; ஆகையால் மஞ்சளோ சுண்ணாம்போ மாறியிருக்க வேண்டும்; அல்லது கெட்டுப் போயிருக்க வேண்டும். வேத மோதினால் நினைத்தபோது மழை பெய்ய வேண்டும். ஊர் செழிக்க வேண்டும். இது சாஸ்திர விதி. இன்று மழையுமில்லை செழிப்புமில்லை. ஆனால் கோயில்களில் கத்தும் சில தவளைகளை வேதப்பிராமணர் என்று மட்டும் கூறுகிறோம்! அவர்களுக்கு இலவசச் சாப்பாடு போட்டு வருகிறோம், வெட்கமில்லாமல்!

இன்று எல்லா பிராமணர்களுக்கும் வேதம் தெரியாது. ஆனால் க்ஷவரத் தொழில் தெரியும். தினம் அதிகாலையில் சுய க்ஷவரம் செய்து கொள்வதைத் தான் கூறுகிறேன்! இதையே தம் தொழிலாக வைத்திருப்பவர்களை மட்டும் கீழ் ஜாதி என்று சொல்லுகிறார்களே! அவர்கள் மூளையில் களி மண் (மாளவியா லண்டனுக்குக் கொண்டுபோன சரக்கு) அதிகமாயிருக்க வேண்டும். தன் துணியைத் தானே வெளுத்துக் கொள்ளும்போது அது உயர்ந்த வேலையாம். அதையே ஒரு தோழன் செய்து தந்தால் அது தாழ்ந்த தொழிலாம்! அதைச் செய்பவன் வீட்டில் சாப்பிடக் கூடாதாம்! நம் வீட்டுக் குழந்தையின் மலத்தை நாமே எடுத்தால் நாம் ‘கீழ் ஜாதி’ ஆகி விடுவதில்லை. ஆனால் அதையே தொழிலாகச் செய்பவன் “கீழ் ஜாதி”யாம்! தொழிலின் அருமையே தெரியாத சோம்பேறிக் கூட்டம் கட்டிவைத்த கற்பனையப்பா இது! இதைச் சொன்னால், “ஹே! ஹே! பிராமண துவேஷம்,” என்பார்கள்! அவர்களுடைய “பரந்த அநுபவத்தில் இது பொடி” விஷயமாகி விடுகிறது.

காலஞ்சென்ற சுப்பிரமணிய பாரதியார் ஒரு கதம்பக் கொள்கைக்காரார். ‘ஆரியத்’தின் மேல் அளவு கடந்த ஆசை. புராணத்திலும் அப்படித்தான். ஆனாலும் ‘சில விசேஷ சமயங்களில் ரொம்ப அழுத்தமாகக் கண்டித்து விடுவார், தமக்குப் பிடிக்காத விஷயங்களை. இதோ ஒரு துண்டு:- “தப்பாக வேதம் சொல்பவனைக் காட்டிலும் நன்றாகச் சிரைப்பவன் மேல் குலத்தான் என்று கூவு”

“லோகோபகாரி” ஆசிரியர் பரலி சு. நெல்லையப்பருக்கு 1915 ஜூலை 19 -ந் தேதியில் புதுச்சேரியிலிருந்து எழுதிய கடிதத்திலிருந்து எடுக்கப்பட்டது இவ்வாக்கியம். ஆகையால் தான் 100 -க்கு 90 பிராமணர்கள் வேதம் ஓதுவதை விட்டு விட்டார்கள்; நாம் தான் அவர்களை முட்டாள் தனமாக ‘பிராமணர்’ என்று அழைக்கிறோம். அவர்கள் சொல்லிக் கொடுத்திருப்பதை மறந்து விட்டோம். அவரவர் செய்கிற தொழிலைக் கண்டுதான் இனி அவர்களை அழைக்க வேண்டும்! வேட்டி துவைக்கும்போது வண்ணார வைத்தியனாதன் என்று கூப்பிட வேண்டும்; வைத்தினாதய்யர் என்று அழைப்பது தவறு! சுய க்ஷவரம் செய்து கொள்ளும்போது மருத்துவ மகாதேவன் என்று கூப்பிடலாம்; மகாதேவ சர்மா என்று கூப்பிடக் கூடாது. செருப்புக் கடை வைத்திருக்கும் ஆரியரைச் செருப்புத் தொழில் சீனுவாசாச்சாரி என்று அழைக்கலாம்.

எப்படி அழைத்தாலும் அவர்கள் உயர்ந்த ஜாதியார்களாகத் தானே இருக்கிறார்கள்? தங்கள் பூணூலையோ, காயத்ரியையோ விடுவதில்லையே! அவர்களை எப்படி நம்மோடு சேர்த்துக் கொள்வது?” என்று சிலர் கேட்கலாம்.

கஷ்டந்தான். சுட்ட மண்ணும் ஈர மண்ணும் ஒட்டாது தான். ஏதாவதொரு நவீன விஞ்ஞான முறையையாவது கண்டு பிடித்து ஒட்டித்தானே தீர வேண்டும்? அதற்காக அவர்களை விரட்டிவிட முடியுமா, என்ன? இங்கேயே பிறந்து, இங்கேயே வளர்ந்தவர்கள் அல்லவா? அவர்களையே கேட்டுப் பாருங்கள், ஒட்டிக் கொள்கிறீர்களா? அல்லது ஓடிப் போகிறீர்களா,? என்று. அவர்களே ஒரு நல்ல வழியைக் கண்டுபிடித்துச் சொல்வார்கள்! ரொம்ப கெட்டிக்காரர்களாச்சே! சமயோசித புத்தி படைத்தவர்களாச்சே!

(குறிப்பு: குத்தூசி குருசாமி அவர்கள் விடுதலை ஏட்டில் தொடராக எழுதி அவற்றை தொகுத்து 1948இல் பலசரக்கு மூட்டை என்ற தலைப்பில் நூலாகத் தொகுத்து விடுதலை ஏட்டின் வெளியீடாக வெளியிட்டார். அதிலிருந்து ஒரு கட்டுரை இது.)

நன்றி: வாலாசா வல்லவன் 

Pin It