“பிர்ம்மாதான் எல்லா மனிதர்களையும் (ஆகாகான், சர்ச்சில், ஸ்டாலின், கோட்சே உட்பட) உண்டாக்குகிறார் என்றால், அவரைப் பெற்றெடுத்தது யார்?”

அவர் மகாவிஷ்ணுவின் உந்திக் கமலத்திலிருந்து பிறந்தார்.

kuthoosi gurusamy 300“மகாவிஷ்ணு எப்படிப் பிறந்தார்?”

“அவர் மும்மூர்த்திகளில் ஒருவர். தானாகவே தோன்றியவர். சத்தியமாகச் சொல்கிறேன். சந்தேகமிருந்தால் ஏசுநாதரைக் கேட்டுப் பாருங்கள்.”

“பிர்ம்மா இந்தியாவுக்கு மட்டும் சிருஷ்டி கர்த்தாவா? பாகிஸ்தானுக்குக் கூடவா? உலகத்திற்குக் கூடவா?”

“இதென்ன, நாஸ்திகக் கேள்வி? கும்பகோணம் சங்கராச்சாரியாரே ‘லோககுரு’ என்னும்போது பிரம்மா என்ன, சாமான்யப்பட்டவரா? உலகத்துக்கே சிருஷ்டிகர்த்தாதான்.”

“அதுசரி! பிரம்மா ஏன் நான்கு தலைகளுடன் உற்பத்தியானார்?"

“சும்மா, ஒரு தமாஷ்தான்! அப்பத்தானே, எல்லோரும் வேடிக்கை பார்க்க வருவார்கள்? கண்காட்சியில் நாலுகால் பசு மாடு வந்திருக்கிறது என்றால் யார் சட்டை செய்வார்கள்? ஆறுகால் மாடு, இரட்டை வால் நாய் என்றால்தானே யாருக்கும் ஆச்சரியமா யிருக்கும்?”

"பிரம்மாவுக்கு 4 தலை; ஆறுமுகக் கடவுளுக்கு 6 தலை; இராவணனுக்கு 10 தலை; ஆதிசேஷயனுக்கு (பாம்பு) 1000 தலை! ‘இதெல்லாம் கடைந்தெடுத்த புராணப் புளுகு’ என்பீர்கள், நீங்கள்.

இதோ படியுங்கள்; திருப்பதி சர்க்கார் ஆஸ்பத்திரியில் 2 தலையுடனும், 4 கைகளுடனும், 4 கால்களுடனும் ஒரு குழந்தை பிறந்தது. தாயும் குழந்தையும் உடனே இறந்து போய்விட்டார்கள். குழந்தையை மட்டும் ஆர்ட்ஸ் காலேஜ் கண்காட்சி சாலையில் வைத்திருக்கின்றனர்.

இதற்கென்ன சொல்கிறீர்கள்? பிர்ம்மாவில் பாதி! ஆறுமுகக் கடவுளில் மூன்றில் ஒரு பங்கு! ராவணனில் ஐந்தில் ஒரு பங்கு!

இம்மாதிரியே ஒரு மைசூர் மாது (சுமார் 35 வயது) கண்காட்சியில் கொண்டு வரப்படுவதைப் பலர் பார்த்திருக்கலாம்.

இது என்ன? தெய்வீகப் பிறவியா? அல்லது அதிசயப் பிறவியா? நான்கு கிளைகளுடைய தென்னை மரம், இரண்டு வால்களுடைய மாடு முதலியவைகளைப்போல் இதுவும் ஒரு அதிசயப் பிறவிதான் என்பார்கள் சிலர்.

ஆனால் வேறு சிலர் இம்மாதிரிக் கேட்கலாம்:-

1. சரஸ்வதிக்கும் லட்சுமிக்கும் நாலு கைகள் ஏன்?

2. விநாயகருக்கு யானை முகம் ஏன்?

3. அவர் சகோதரருக்கு ஆறு முகம் ஏன்?

4. பரமசிவனுக்குப் பல கைகள் ஏன்?

5. மகாவிஷ்ணுவுக்கு இரண்டுக்கு மேற்பட்ட கைகள் ஏன்?

இவர்களெல்லாம் அதிசப் பிறவிகளா? அப்படியானால் இவர்களையும் ஏன் மியூசியத்தில் வைத்து வேடிக்கை காட்டக் கூடாது?”

சரியான கேள்விதான். அதிசயப் பிறவிகள் ஆனால் தான் நம் முன்னோர்கள். இவர்களை மியூசியங்களில் வைத்திருக்கிறார்கள். அவைகளுக்கு அந்தக் காலத்தில் 'கோயில்' என்று பெயரிட்டிருக்கலாம்! அவர்கள் நல்ல எண்ணத்துடன்தான் வைத்திருக்கிறார்கள். பின் சந்ததியார்கள் தெரியாத்தனமாக அவைகளைக் கடவுள் என்று கருதிக் கொண்டு கும்பிட்டால் அதற்கு நம் முன்னோர்களா பொறுப்பு? சென்னை எழும்பூர் மியூசியத்திற்கு வந்து பாருங்கள்! எல்லாக் கடவுள்களும், (அதிசயப் பிறவிகளும்) இருக்கின்றன! தினம் ஆயிரக்காணக்கானவர் வந்து போய்க் கொண்டு தானிருக்கிறார்கள்! எதற்காவது அபிஷேகமோ; ஆராதனையோ, படுக்கை அறையோ, உல்லாசப் பயணமோ, உண்டா? இதற்காக எந்த 'சாமியாவது' இது வரையில் வாயைத் திறந்ததுண்டா? தெய்வமேண்ணு இருக்குதுகள்! வேணுமானால் காவற்காரனைக் கேட்டுப் பாருங்களேன்!

இந்த விஷயம் தெரிஞ்சுதானே கொஞ்ச காலமாக மகாவிஷ்ணு, பரமசிவன் எல்லோரும் இந்த உலகத்துக்கு முன்போல அடிக்கடி வருகிறதில்லை! வந்தால் யாராவது ஆராய்ச்சிப் பேர்வழிகள் அவர்களைப் பிடித்து தைல பாட்டிலுக்குள்ளே போட்டு மியூசியத்திலே வைத்து விட்டால் என்ன செய்கிறது?

‘காலம் கெட்டுப் போச்சு!’ என்று அடிக்கடி சொல்கிறார்களே! இது அவர்கள் காதுக்கும் எட்டியிருக்கும் போலிருக்கு!

(குறிப்பு: குத்தூசி குருசாமி அவர்கள் விடுதலை ஏட்டில் தொடராக எழுதி அவற்றை தொகுத்து 1948இல் பலசரக்கு மூட்டை என்ற தலைப்பில் நூலாகத் தொகுத்து விடுதலை ஏட்டின் வெளியீடாக வெளியிட்டார். அதிலிருந்து ஒரு கட்டுரை இது.)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It