விஜயதசமி நாளன்று, பிள்ளைகளைப் பள்ளியில் சேர்க்கும் நடைமுறைக்கு அரசும் இணக்கமாக இருப்பது மதச்சார்பின்மைக்கு எதிரானது இல்லையா என்று ஒரு நண்பர் கேட்டார். மதச்சார்பின்மை என்பது இந்தியாவின் மற்றும் தமிழ்நாடு அரசின் கொள்கை என்றாலும், வெகுமக்கள் அரசு சில நேரங்களில் மக்களின் மத நம்பிக்கைகளோடு இணங்கிப் போக வேண்டி இருக்கிறது என்பது ஒரு கசப்பான உண்மை!இதனை ஒரு முறை நேருவே குறிப்பிட்டார். இந்தியா போன்ற, மத நம்பிக்கை கூடுதலாக உள்ள ஒரு நாட்டில், மதச்சார்பின்மையை ஓர் அரசு கடைபிடிப்பது என்பது மிக மிகக் கடினமானது என்றார் அவர். அதனால் மதச்சார்பின்மையை அரசு கைவிட்டு விட வேண்டும் என்பது அதன் பொருள் ஆகாது!
அறிவியல் பார்வையை, அறிவியல் சிந்தனையை மக்களிடம் வளர்ப்பதற்கு, அரசும், சமூக அமைப்புகளும் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். அஃது அத்தனை எளிதானதன்று! எனினும் விடா முயற்சியை நாம் கைவிட்டு விடக்கூடாது !
இன்று நாடு முழுவதும், வீடுகளிலும், அலுவலகங்களிலும், தொழிலகங்களிலும் - ஏன் - அரசு நிறுவனங்களிலும் கூட பூஜைகள் நடப்பதை நாம் பார்க்கிறோம். , புத்தகங்களையும், கருவிகளையும், மிதிவண்டி, கார் போன்ற வாகனங்களையும் சுத்தம் செய்து அவற்றிற்குப் பூவும் பொட்டும் வைத்து, அவற்றை வணங்கும் ஒரு தன்மை அன்று போலவே இன்றும் பரவி இருக்கிறது!
எல்லா அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிகளையும் பயன்படுத்திக் கொள்ளும் நாம். அவற்றைப் புறந்தள்ளிவிட்டு, மத நம்பிக்கைகளுக்குள் மூழ்கிக் கிடப்பதையே நடப்பில் பார்க்கிறோம்.
புத்தகங்களைப் படிப்பதை விட, வணங்குவது மக்களுக்கு எளிதாக இருக்கிறது. வணங்கினால் போதும், கல்வியும் அறிவும் வந்துவிடும் என்று பொய்யாக விதைக்கப்பட்டு இருக்கும் நம்பிக்கை மக்களின் மூளைகளில் பதிந்து கிடக்கிறது!
இதனை உடனடியாகப் போக்கிவிடவும் முடியாது. அதற்காக ஏற்றுக் கொள்ளவும் முடியாது. அரசுக்கும், சமூக அமைப்புகளுக்கும் "நிரம்ப இருக்கிறது வேலை " என்பதைத்தான் இச்சூழல் நமக்கு உணர்த்துகிறது!
அரசும் மதச்சார்பின்மையும்!
- சுப. வீரபாண்டியன்