நம் சாமி, அம்மன் எல்லாம் இப்போது வெள்ளைக்காரப் பேர் வைத்துக் கொண்டு விட்டனவோ என்று நினைக்க வேண்டாம். நம் சாமிக்கெல்லாம் புதுச் சங்கதி எதுவும் அவ்வளவாகப் பிடிப்பதில்லை! சில வருஷங்களுக்கு முந்தி ‘சாமிக்குக் கண்கூசும்’ என்ற காரணம் கூறி எத்தனையோ கோயில்களில் மின்சார விளக்குப் போடுவதை எதிர்த்தார்களே, உங்களுக்குத் தெரியாதா?

kuthoosi gurusamyமனுஷன் சாமியைக்கூட ஏமாற்றுகிறானே! இதுதான் பெரிய அதிசயம்! தான் மட்டும் மோட்டாரிலே போகிறான்; சாமியை மட்டும் தேரில் வைத்து இழுப்பானேன்? தான் மட்டும் காபி, ஓவல்டின், சோடா, பூரி உருளைக் கிழங்கு, ரொட்டி, சாக்லெட் சாப்பிடுகிறானே! சாமிக்கு மட்டும் எப்போதும் ஒரே தினுசு சோறும், தோசையும் முறுக்கும் போதுமா? அதுக்கும் ஒரு நாளைக்காவது இரண்டு பூரி உருளைக் கிழங்கு சாப்பிட்டு விட்டு ஒரு கப் காபி குடிக்க வேணும் என்ற ஆசை இருக்காதா என்ன?

மனுஷனைப் போலவே சாமியைக் குளத்துக்கு அழைத்துப் போகிறானே! நாட்டியக் கச்சேரி காட்டுகிறானே! ஒரு நாளைக்காவது சினிமாவுக்கு அழைத்துப் போனாலென்ன?

மனுஷன் தன் வீட்டுப் பெண்களுக்கு வேறொரு ஆண் குளிப்பாட்டக் கூடாது என்கிறானே! அந்த மாதிரியே சாமியும் தன் பெண்சாதிக்கு எவனோ வழியிலே போகிற ஒருத்தன் தினந்தோறும் குளிப்பாட்டி விடுவதைப் பற்றி மனம் பதறாமலா இருக்கும்?

யாருக்காவது அம்மை போட்டவுடனே பக்தர்கள் என்ன செய்கிறார்கள்? எது எப்படியானாலும் கண்களில் அம்மை போட்டுவிடக் கூடாது என்றுதானே கவலைப்படுகிறார்கள்? எதற்காக? வேறு அவயவங்களில் ஏதாவது கோளாறு ஏற்பட்டால்கூடப் பொறுத்துக் கொள்ளலாம். கண்களில் மட்டும் ஒரு கோளாறும் ஏற்படக் கூடாது. எல்லாவற்றிலும் முக்கியமானது கண்தான். ஒருவர் மற்றவர்மேல் ஆசையாகக் கூப்பிடும்போதுகூட “என் முழங்காலே” “என் வாயே!” என்றா சொல்கிறார்கள்? "என் கண்ணே!” என்றுதானே சொல்கிறார்கள்?

அவ்வளவு முக்கியமான உறுப்பு, கண்.

“மாரியாத்தா! சமயபுரத்தாளே! ஆயிரங்கண்ணுடையாள்! என் பிள்ளையின் கண்ணைக் காப்பாற்று! உனக்கு ஒரு ஜோடி கண்ணடக்கம் (வெள்ளிக் கண்கள்) செய்து தாரேன்!”

“ஏழுமலையானே! என் கண்ணைக் கெடுத்து விடாதே! நான் உன் சன்னதிக்கு வந்து மொட்டை யடித்து விட்டு, கண்ணடக்கம் காணிக்கை தாரேன்!”

இந்த மாதிரி அடிக்கடி பேரம் பேசுவார்கள், பலர். நம்ப கடவுள்களும் சாதாரணமாய் அலட்சியமா யிருப்பதில்லை. சில நாணய மற்ற சர்க்கார் பெருச்சாளிகளைப் போலில்லாமல், வாங்குகிற லஞ்சத்திற்கு ஏகதேசம் ஒரு நன்மையாவது செய்து விடுவதுண்டு. இல்லாவிட்டால் பெரிய உண்டியல் நிறைய வெள்ளிக் கண்கள் எப்படி வரும்?

எத்தனையோ பேர் இந்தப் பேரத்தில் ஏமாந்துகூடப் போயிருக்கிறார்கள். சதா தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தால் நம் கடவுள்தான் என்ன செய்யும் பாவம்! ஏதாவது வேறு வேலையாயிருக்கிற சமயத்திலே இவர்கள் ‘பெட்டிஷன்’ போயிருக்கும். அதை வாங்கி மேஜை மேல் வைத்து ‘பேப்பர் வெயிட்’ வைத்திருக்கும், சாமி! அதற்குள்ளே ரொம்ப அவசரமாக யாராவது ஒரு ஆஸ்திகர் கூப்பிட்டிருப்பார்! அங்கே போயிருக்கலாம்! எத்தனையோ வேலைத் தொல்லை, பாவம்! அதுவும் மனுஷன் தானே!

மாரியாத்தாளும் ஏழுமலையானும் இங்கே செய்துவரும் வேலையை அமெரிக்காவில் மிஸஸ் பிரேக்கன் பிரிட்ஜ் என்பவர் செய்து வருகிறாராம்! செத்துப் போனவர்களின் நல்ல கண்களை எடுத்து பத்திரப்படுத்தி வைத்து, உயிருடன் இருப்பவர் கண்களை இழந்திருந்தால் அவைகளுக்குப் பதிலாகப் பொருத்தி விடுகிறாராம்!

இந்த மாதிரி பல குருடர்களுக்குப் பார்வையை உண்டாக்கித் தந்து விட்டாராம்!

‘இது என்ன, நடக்கும் காரியமா?' என்று கேட்கிறார், சமயபுரத்துப் பூசாரி! திருப்பதி அய்யங்கார்கூட அப்படித்தான் கேட்கிறார்! ‘விதியையாவது வெல்வதாவது? எல்லாம் சுத்தப் புரட்டு’, என்கிறார், விதிப்படி நடக்கட்டும் என்று சோற்றையே கையால் தொடாத உயர்திரு விதி நம்பிக்கைச் செட்டியார்!

“இது கலி காலமோன்னோ? எதுதான் நடக்காது?” என்கிறார், கலகாலத்தை அறவே வெறுத்து காபி கிளப் வைத்திருக்கும் ஸ்ரீமான் பகற்கொள்ளை அய்யர்!

“என் பெயரை இனிமேல் மிஸஸ் மகமாயி பிரேக்கன் பிரிட்ஜ் என்று மாற்றிக்கொள்ளப் போகிறேன்,” என்கிறாள் கண் கண்ட தெய்வமான ஆயிரங் கண்ணுடையாள், சமயபுரத்து மாரியாத்தாள்!

(குறிப்பு: குத்தூசி குருசாமி அவர்கள் விடுதலை ஏட்டில் தொடராக எழுதி அவற்றை தொகுத்து 1948இல் பலசரக்கு மூட்டை என்ற தலைப்பில் நூலாகத் தொகுத்து விடுதலை ஏட்டின் வெளியீடாக வெளியிட்டார். அதிலிருந்து ஒரு கட்டுரை இது.)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It