periyar 522அன்புள்ள சகோதரர்களே! பெரியோர்களே!!

இஸ்லாமிய உலகத்திற்கு மிகவும் முக்கியமானதும், மக்களின் நன்மைக்காக உலகத்தில் தோன்றிய பெரியார்களில் மிக ஒப்பற்ற சிறந்த வருமான ஒருவரின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காகக் கூட்டப்பட்ட இக்கூட்டத்திற்குத் தலைமை வகிக்க இரண்டாம் தடவையாகவும் அழைத்தது பற்றி நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இதற்காக சென்ற ஆண்டிலும் என்னை அழைத்து தலைமை வகிக்கச் சொன்னீர்கள்.

நிற்க, இன்றைய நிலைமையில் நாம் இந்து முஸ்லீம் ஒற்றுமைக்குப் பாடுபட ஆசை கொண்டிருக்கின்றோம் என்றாலும் இந்தியாவை இந்தியர் களே ஆளுவது என்று ஏதாவது ஒரு காலத்தில் நடக்கக் கூடியதானாலும் ஆகலாம். ஆனால் இன்றைய நிலையில் இந்து முஸ்லீம் ஒற்றுமை ஏற்படுவதென்பது சுலபத்தில் முடியாதென்பதே எனது அபிப்பிராயம்.

நான் இப்படிச் சொல்லுவது பற்றி உங்களில் சிலர் திடுக்கிடலாம். இரு சமூக ஒற்றுமைக்கும், என்றைக்கும் மதக் கொள்கைகள் என்பது முட்டுக்கட்டை யாகவேதான் இருக்கிறது. மதத்தைவிட மோட்சத்தைவிட மக்கள் ஒற்றுமை முக்கியமும் அவசியமுமானதாகும் என்று பட்டால்தான் இரு சமூகமும் ஒற்றுமையடைய முடியும்.

அப்படிக்கில்லாதவரை இப்படியே வெறும் வாய்ப் பேச்சு ஒற்றுமையாகவே இருக்க வேண்டியது தான். மற்ற நாட்டின் மக்கள் நடந்து கொள்வதைப் பார்த்தாவது நாம் நடந்து கொள்ள முயற்சிப்பதில்லை. நமக்கு மதமெல்லாம் நடை, உடை, பாவனை முதலிய வேஷத் தில் இருக்கின்றதே தவிர மதம் எதற்காக என்று ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றதோ அதற்காக உபயோகப்படக் கூடியதாயில்லை.

இன்றைய தினமும் மதமும், சமயமும் ஒருவனுக்கு அவன் அணியும் வேஷம் என்றுதான் மதத்தில் பட்டவர்களில் 100க்கு 99 பேர்கள் நினைத்துக் கொண்டு அதன்படி நடந்து வருகிறார்கள். பொதுவாக அந்த உணர்ச்சியும், வேஷமும் ஒழிந்தா லொழிய உலக மக்களுக்கு ஒற்றுமையும், சாந்தமும் கண்டிப்பாய் கிடையவே கிடையாது.

நிற்க, சென்னையிலிருந்து வந்திருக்கும் ஜனாப் பஷிர் அகமது சையீது சாயபு அவர்கள் இப்போது சென்னை சட்டசபைக்கும் அபேட்ச கராக இருக்கிறார்; ஆதலால் அவர் இந்த பிராந்தியத்திற்கு வந்து தனது மகமதிய சகோதரர்களிடத்தில் பேசிப் போக வந்திருக்கிறார்.

ஆகவே அவர்கள் முதலில் சில விஷயங்களைப் பற்றிப் பேசுவார்கள். அவர்கள் பேசியப் பிறகு முடிவுரையாக கடைசியில் நான் பேசுகிறேன். (எனச் சொல்லி ஜனாப் பஷிர் அகமது சையீது சாகிப் அவர்களைப் பேசும்படி கேட்டுக் கொண்டார். அவர் பேசி முடித்த பின் கடைசியாக முடிவுரையாக)

சகோதரர்களே! பெரியோர்களே!

நிகழ்ச்சிக் குறிப்பில் மற்றொரு கனவான் பேசுவார் என்றிருந்தது. ஆனால் அது நிறுத்தப்பட்டு விட்டது. முதலாவதாக ஜனாப் பஷீர் அகமது அவர்கள் இன்றைய விசேடத்தைப் பற்றி எடுத்துச் சொன்னார்கள். அவர்கள் ஆங்கிலத்தில் எம்.ஏ.பி.எல். படித்து பட்டம் பெற்றவர்கள்.

அவர்கள் பேசிய திலிருந்து மதத்தில் எவ்வளவு ஆராய்ச்சி செய்து வருகிறார்கள் என்பது தெரிகிறது. அவர்கள் இதுவரை சொன்னதை விட வேறு விசேடமாகச் சொல்ல எப்படித்தான் முடியும். அவர்கள் பொதுவாழ்வு முக்கியமானது. நான் எதிர்பாராமலே இங்கு வந்து நண்பர் எடுத்துச் சொன்னார்கள்.

அது மிகவும் சிலாகிக்கத் தக்கதேயாகும். ஆகையால் நான் இஸ்லாம் சமூகம் ஹிந்து சமூகமாகிய இருவருக்குமாக சில சொல்லுகிறேன். அதைப் பற்றிச் சொல்லுவது மிகையாகாது. இஸ்லாம் மத தத்துவம் அநேகமாய் உலக மக்கள் எல்லோருக்குமே பொருத்தமானது. ஏனெனில் அது சமீபத்தில் ஏற்பட்ட மதமானதினால் மிகவும் திருந்திய மதமென்றே சொல்லுதல் வேண்டும்.

உலகமெல்லாம் ஒரு காலத்தில் காட்டுமிராண்டித் தனமாயிருந்த பிறகு நாளாக நாளாக பல வழிகளிலும் சீர்திருத்தமடைந்து வந்திருக்கின்றது. இந்து மதத்திற்கும் இஸ்லாம் மதத்திற்கும் சரியான பெயர் சொல்ல வேண்டுமானால் பழயமதம் புதியமதம் என்றுதான் சொல்ல வேண்டும்.

பழய மதக்காரரும் புது மதக்காரரும் சுலபத்தில் ஒற்றுமையாக முடியாது. இருவரும் மக்கள் நன்மைக்கு மதம் ஏற்படுத்தப்பட்டது என்று கருத வேண்டுமே ஒழிய மதத்திற்காக மக்கள் ஏற்பட்டார்கள் என்று கருதக்கூடாது. மதத்தைக் காப்பது என்கின்ற உணர்ச்சியே தப்பான உணர்ச்சியாகும்.

மக்கள் நன்மையையும் அவர்கள் க்ஷேமத்தையும் சாந்தியையும் காப்பாற்றுவது தான் பொது நல வாதிகள் கடமை என்கின்ற உணர்ச்சி இருக்க வேண்டும். இந்துக்களும், முகமதியர்களும் ஒரே நாட்டிலே ஒரே மாதிரி சுதந்திரத்துடன் வாழ வேண்டியவர்களேயாவார்கள். இதற்கு முட்டுக்கட்டையாக மதக் கொள்கைகளை போட்டுக் கொண்டிருந்தால் ஒரு நாளும் ஒற்றுமையாய் வாழ முடியாது.

ஆகையால் இருவரும் வேஷத்தை விட்டு உண்மை மனித தர்மத்தையும், அன்பையும் அடிப்படையாய் வைத்து சகோதரர்களாக வேண்டியது மிக்க அவசியமானது. முகமதியர்களை விட இந்துக்களே ஒற்றுமைக்கு அதிக இடையூறாக இருக்கின்றார்கள்.

இந்துக் கொள்கை மிக்க மூடக் கொள்கையும், அன்புக்கும் ஒற்றுமைக்கும் இடந்தராததுமாய் இருக்கின்றது. மகமதியர்களும் வேஷ வித்தியாசத்தை விட்டு அவர் மத முக்கிய தத்துவங்களைக் கடைபிடித்தால் யாருடனும் கூடி வாழ சவுகரியம் உண்டு. ஆகவே இருவரும் சீர்திருந்தி மக்களை சீர்படுத்தி ஒற்றுமையாக வாழ வேண்டும்.

குறிப்பு : சத்தியமங்கலம் பழைய பள்ளி வாசலுக்கு எதிரிலுள்ள சவுக்கில் 08-08-1930 ஆம் நாள் நடைபெற்ற நபிகள் நாயகம் பிறந்த நாள் விழாவில் தலைமையேற்று பேசியது.

(குடி அரசு - சொற்பொழிவு - 24.08.1930)

Pin It