இந்தியாவில் கொழுத்த செல்வந்தர்களிடமிருந்து வசூலிக்கப்படாமல் போகும் வரிப்பணம் எவ்வளவு தெரியுமா? ரூ. 90,000 கோடி (2007 நிதி நிலை அறிக்கை). இந்தியாவில் 7 லட்சம் பட்டியல் சாதியினர் கல்லூரிப் படிப்புகளும், முதுகலைப் படிப்புகளும், தொழிற்கல்வியும் பெறுவதற்கு அரசு முழு உதவி செய்கிறது எனில், தேவைப்படும் தொகை எவ்வளவு தெரியுமா? ஆண்டுக்கு ரூ. 5,000 கோடி மட்டுமே! அதாவது வசூலிக்கப்பட வேண்டிய ஆனால் வசூலிக்காமல் இருக்கும் தொகையில் 18இல் ஒரு பங்கு மட்டுமே. ரூ. 90,000 கோடி வரிதர மறுக்கும் நிறுவன உரிமையாளர்கள் ஈட்டும் லாபம் எவ்வளவு தெரியுமா? ஆண்டுக்கு ரூ. 3 லட்சம் கோடி! (நிறுவனங்கள் செலுத்தும் வருமான வரி ரூ. 1.46 லட்சம் கோடி - 2007 நிதி நிலை அறிக்கை. ஆகவே, லாபம் இதில் 2 மடங்குக்கு குறையாமல் வரும்).

இந்திய அரசு அனைத்து மக்களுக்காகவும் நடத்தும் செயல் திட்டங்களுக்காக ஒதுக்கும் திட்ட நிதியே சற்றொப்ப ரூ. 3 லட்சம் கோடிகள்தாம். இன்னொரு வகையாகச் சொல்ல வேண்டுமானால், ஓர் அரசு 100 கோடி மக்களுக்காக என்ன செலவிடுகிறதோ, அதே அளவு அல்லது அதற்கு மேல் வாணிப நிறுவனங்கள் தம் செல்வக் கொழிப்புக்கு செலவிட்டுக் கொள்கின்றன. நாட்டிலுள்ள 16 கோடி பட்டியல் சாதியினர் பொருளாதாரத்தில் மேலேறுவதற்கு உறுதுணை புரிய - அரசிடமோ அல்லது தனியாரிடமோ பணம் இல்லை என்ற நிலை இல்லை என்பதை இந்தப் புள்ளி விவரங்கள் பளிச்சென உணர்த்துகின்றன.

பட்டியல் சாதியினர் பொருளாதாரத்தில் உயர கல்வி மட்டும்தான் உதவும் என்பது தட்டையான வாதம் என்று கொண்டாலும், பட்டியல் சாதியினருக்கு வேறு எந்தத் தொழில் முனைப்பிற்கோ அல்லது வணிக முயற்சிக்கோ திட்டம் தீட்டாமல் போனாலும், நல்ல ஊதியம் ஈட்டக்கூடிய உயர் கல்வியை அவர்களுக்குத் தருவதையாவது தவறாமல் செய்ய வேண்டுமல்லவா? அதற்கு அரசுகளுக்கு கடமை இருக்கிறது அல்லவா? போதிய பணமும் இருக்கிறது எனும்போது, இது சாத்தியமாக வேண்டுமல்லவா?

தற்போது ரூ. 600 கோடி மட்டுமே செலவிடும் இடத்தில் (Postmatric Scholorship - Government of India 2007) ரூ. 5,000 கோடி செலவிடப்பட்டால், ஓராண்டுக்கு 7 லட்சம் பட்டியல் சாதியினர் குடும்பங்கள் பொருளில் குறையாத, சமூகத்தில் தாழ்வுபடாத நிலைக்கு உயர்ந்துவிடுவர். குடும்பத்தில் பெற்றோர் 2 பேர், பிள்ளைகள் 2 பேர், கணவன் மனைவி 2 பேர் என்று கணக்கிட்டோமென்றால், 7 லட்சம் x 6 பேர் = 42 லட்சம் பேர் நலவாழ்வு பெற்றுவிடுவர். ஒரு பத்தாண்டு காலத்தில் 15 கோடி பேரில் 5 கோடி பேர் தாழ்வு என்ற நிழலே படாத நிலைக்கு உயர்ந்துவிடுவர்.

இந்த வகையிலான பொருளாதார மேம்பாடு, அரசுகளின் ஈடுபாட்டால் சாத்தியப்படும். இதை உரிமையோடு கேட்டுப்பெற பட்டியல் சாதியினர் வியூகம் வகுக்க வேண்டும். பட்டியல் சாதியினர் துணைத் திட்டத்தின் கீழ் (Scheduled Caste Sub Plan - SCSP) மத்திய அரசின் திட்ட நிதியில் பட்டியல் சாதியினர் பங்காக (16%) ஆண்டுக்கு ரூ. 48,000க்குக் குறையாத தொகை இருக்கிறது. அதை முழுமையாகப் பெற முடியவில்லை என்றாலும் வரும் 11ஆவது அய்ந்தாண்டுத் திட்டக் காலத்திற்குள் மேற்படி கல்விக்காக அதில் 1/10 பங்கையாவது இவர்கள் கோரிப் பெற வேண்டும். இதுகூட முடியாமல் போனால், வேறெந்த கனவுகளுக்கும் எந்த ஒரு வழியும் திறவாமல் போகும்.

இந்த அரசின் பங்கைப் பெறுவதற்கு உயர் அரசுப் பதவிகளுக்கு வந்த பட்டியல் சாதியினர்க்கும், குறிப்பாக அய்.ஏ.எஸ்., அய்.எப்.எஸ்., அய்.ஏ.ஏ.எஸ்., அய்.ஆர்.எஸ். போன்ற பதவிகளுக்கு வருவோர்க்கும், பட்டியல் சாதி சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பெரும் கடப்பாடு உள்ளது. ஏனெனில், பட்ஜெட் தயாரிப்பில் நேரடியாக ஈடுபடுபவர்களும் இவர்கள்தான்; அதைப் பற்றி கருத்தாடல் செய்யக் கூடியவர்களும் இவர்கள்தான். பட்டியல் சாதியினர் துணைத் திட்டத்தின் கீழ் வரவேண்டிய பங்கை இவர்கள் பெற்றுத்தரக் குரல் கொடுக்காதவரை, இவர்கள் தத்தமது துறைப்பணிகளைச் செவ்வனே செய்பவராகக் கருதிக் கொண்டாலும், பட்டியல் சாதியினரது பங்கு அவருக்குக் கிட்டாமல் போவதற்கான எதிரிடை வேலைகளைத் தீவிரமாகச் செய்வதற்கு ஒத்துழைக்கிறார்கள் என்றே ஆகும். எமது விரலைக் கொண்டே எம்மவர் கண்களைக் குத்த வைக்கும் சதிக்கு ஆளாகுபவர்களாக இவர்கள் ஆகிப் போவார்கள்.

அரசு நினைத்தால் ‘பட்டியல் சாதியினர் துணைத் திட்ட'த்தின் கீழ் நிதியிலிருந்து மாபெரும் சமூகக் கட்டமைப்பு மாற்றங்களை (Social Structual Changes) எளிதில் அல்லது விரைவில் கொண்டு வர முடியும். ரூ. 48,000 கோடி என்பது சன்னத் தொகை அல்ல. வறுமைத் தணிப்புத் திட்டங்கள் (Poverty Allevation) அல்லது வேறு எந்தத் திட்டங்கள் அரசுகளுக்கோ ஆளுங்கட்சிகளுக்கோ ஏற்புடையது என்று நினைக்கிறார்களோ - அது பட்டியல் சாதியினரை மேலேற்றும் வல்லமை உடையதாக இல்லை எனினும் - அந்த அரசியல் ஆதாயங்களுக்காக மேற்குறித்த தொகையில் 50% செலவிட்டுக் கொள்ளட்டும். மீதி 50 சதவிகிதத்தை மேநோக்குத் திட்டங்களுக்காக பட்டியல் சாதியினரே வடித்தெடுக்கும் திட்டங்களுக்காக, கோரிப் பெற வேண்டும். இத்தகுத் திட்டங்களின் தாக்கங்கள் கீழ்வருமாறு இருக்க வேண்டும்.

* சமச்சீர்மை என்பது மேனோக்கிய வளர்ச்சியிலும் அமைய வேண்டும்.

* போட்டித் தகுதிக்கான திறன்களை வளர்ப்பதாக இருக்க வேண்டுமே அன்றி, வெறுமனே வயிற்றைக் கழுவுவதற்கான சலுகைகளாக இருக்கக் கூடாது.

* தன் முனைப்பான ஆளுமையின் மூலம் வறுமையைத் தானாகவே ஒழித்துக் கொள்ளும் வகையாகத் திட்டங்கள் அமைய வேண்டுமே அன்றி, பிறர்/பிற நிறுவனங்கள் தயவால் யாசகம் அளிக்கும் வகையாக அமைதல் கூடாது.

* பிறர் முதலாளிகளாக இருக்கும் நிறுவனங்களின் மூலம் தயவான பணிகளைச் செய்ய வைப்பதை விடுத்து, தலித்துகளை நிறுவன உரிமையாளர்களாக்க வேண்டும்.

எடுத்துக்காட்டாக, காலணித் தொழிலாளிக்கு அவர் ஏற்கனவே இருந்த நடைபாதையிலேயே சிறு தகரப்பெட்டி அளித்தல் என்பது, மேனோக்கு அடிப்படையில் வராது. அது ஏற்கனவே இருந்த இடத்திலேயே, இருந்த தொழிலிலேயே, இருந்த பொருளாதாரத்திலேயே அவரை இருத்தி வைப்பதாகும். முதலில், காலணித் தொழிலாளர் வேறு தொழில் முனைவோராக மாற்றும் வகையாக திட்டம் அமைய வேண்டும். இது, கூடுதல் பொருளைக் கொண்டுவராவிடினும், சமூக மாற்றத்தைக் கட்டாயம் கொண்டு வரும். அப்படியே ஒருவேளை அதே தொழிலில் ஒருவர் தொடர விரும்பினால், மாறிவரும் உலகமயமாக்கலின் ஓர் அங்கமான Franchise எனப்படும் சில்லரை உரிமங்களை இவர்களுக்குப் பெற்றத் தர வேண்டும். பத்துப் பேருக்கு தகரப்பெட்டிகள் கொடுத்து நடைபாதையில் நிறுத்துவதற்குப் பதிலாக, அதே செலவில் பத்து பேருக்கும் சேர்ந்து ஒரு நல்ல Roeback உரிமக் கடையை வைத்துத் தருவது, பொருளாதார மேன்மையையும் கொண்டு வரும்; சமூக மாற்றத்தையும் கொண்டு வரும்.

மேற்சொன்ன பட்டியல் சாதியினர் துணைத் திட்டத்தின் உரிமத் தொகையான ரூ. 48,000 கோடியில் 50 சதவிகிதம் ஆன ரூ. 24,000 கோடியில் 1/24 பங்கான 1,000 கோடி ரூபாய் பல்வேறு தொழில் முனைப்புத் திட்டங்களுக்காகச் செலவிடப்படலாம். ரூ. 10 லட்சம் முதலீட்டிலிருந்து ரூ. 10 கோடி முதலீடு வரை வகைவகையான திட்டங்கள் துறைதுறையாகக் கொண்டு வரப்படலாம். இந்த அரசுப் பணம் மானியம் வழங்கவும், அரசு பங்குத் தொகை வழங்கவும், அரசின் காப்புறுதி (Government Guarantee) தரவும் என்று இவ்வாறாகப் பலவகைகளில் வழங்கப்படலாம். ஏற்கனவே வறுமைத் தணிப்புத் திட்டங்களுக்குத் தனித் தொகை பிரிக்கப்பட்டு விடுவதால், இம்மாற்றமான தொழில் முனைவோர் திட்டங்களுக்குத் தனியாரின் முதலீடும் 10 சதவிகிதம் முதல் 25 சதவிகிதம் வரை அமைய வேண்டும். அப்போதுதான் பயனாளிகள் பினாமிகளாக மாறமாட்டார்.

பட்டியல் சாதியினரின் பொருளா தார வளர்ச்சி, அரசுகளின் ஈடுபாடு இல்லாமல் அறவே முடியாது என்று ஓய்ந்து போய் இருக்கலாகாது. அரசுகளின் பங்களிப்பு இல்லாமலும் நமது பொருளாதாரத்தைப் பட்டியல் சாதியினர் வளர்த்தெடுத்துக் கொள்ள முடியும். உலகமயமாகும் தனியார்மயமாக்கலில் இதற்கான வாய்ப்புகள் பெருகி வருகின்றன. இதற்கு தனியார் முனைப்போடு கூட்டு முயற்சியும் தேவை. இருபது அல்லது முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இல்லாத பணப்பெருக்கம், தற்போது பட்டியல் சாதியினரிடம் உண்டு. தொழில் வாணிப முதலீடு செய்யக்கூடிய பட்டியல் சாதியினர் முந்தைக்கு இன்று பலராக உள்ளனர். அவர்களுக்கு ஓர் உந்துவிசையாக மாவட்டங்களில் Chamber of Commerce உள்ளது போல் FICCI போன்ற தொழிலதிபர் முனையங்கள் இருப்பது போல் - ஆங்காங்கு பட்டியல் சாதியினர் தொழில் முதலீட்டு ஆலோசனைக் குழுமங்கள் உருவாக வேண்டும். தலித் ஆதார மய்யங்கள் போன்ற நிறுவனங்கள் இத்தகைய செயல்பாடுகளை மேற்கொள்ளலாம்.

தலித்துகளுக்கான ஆதரவான அமைப்புகள் பெரும்பாலும் வன்கொடுமைகளுக்கான தீர்வு, ஒதுக்கீடு விதிகளை எய்தல் ஆகியவற்றிலேயே முழுக்கவனத்தையும் செலுத்துகின்றன. இவர்கள் ஈடுபாட்டினால் வன்கொடுமைகளின் வீச்சு குறைந்து வருவது கண்கூடு. இந்த முயற்சிகளுக்குப் புதிய வலுவூட்டும் வண்ணம் பொருளாதார முதலீட்டுச் சிந்தனைகளையும் இவர்கள் வளர்த்தெடுக்க வேண்டும். வாய்ப்புகளுக்கு வடிவம் கொடுக்கத் தெரிய வேண்டும்.
வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்போருக்கும் சாமான்யருக்கும் பெண்கள் தன் உதவிக் குழுக்கள், புதிய படலங்களைப் படைத்து வருவதை அறிவோம். அரசுகளும் வரிந்துகட்டி வேலை செய்து வருகின்றன. பட்டியல் சாதியினர்க்கான பொருளாதார முயற்சிகள், இன்னும் சற்று மேல்தளத்தில் அமைய வேண்டும். ஒப்பந்தப் பணிகளை எடுத்துச் செய்ய முனைப்புகள் வளர வேண்டும். குறிப்பாக போக்குவரத்துத் துறை, கணினித் துறை, கட்டடத் துறை ஆகிய துறைகளில் உடனடி கவனம் தேவை.

முதலீட்டு வாய்ப்புகளுக்கான திட்டக் கருத்துருக்களை வகுத்து வசதி உள்ள பட்டியல் சாதியினரை இதற்கென்ற வழிகாட்டு மய்யங்களுக்கு அழைக்கும்போது, புதிய தொழில் முனைவோர் இனங்காணப்படுவர். தனியராக முதலீடு செய்யக் கூடிய தெம்பு இருந்தாலும், குழுமத் தொழிலாக நடத்தும்போது கிடைக்கும் வாடிக்கை வியாபார வாய்ப்புகள் போல, அது சிறப்பாக அமையாது. எடுத்துக்காட்டாக, ஒரு வாகனத்தை வாடகைக்கு விட்டு வாடிக்கை பெறுவது கடினம். ஆனால், பத்து பேர் இணைந்து ஆளுக்கு ஒரு காராக வாங்கி ஒரே குழுமமாக (Travel Agency) உருவானால், பத்து வண்டிகளுக்கும் ஒரே பெரிய நிறுவனத்தில் ஆண்டு குத்தகை ஒப்பந்தம் செய்து கொண்டு சீரான வருவாய் ஈட்ட முடியும்.

இந்த அடிப்படையில் நடத்தக்கூடிய பல்வேறு தொழில் முனைப்புகள் :

* சிற்றுந்து, பேருந்து, மகிழுந்து சேவைகள் * அலுவலகப் பராமரிப்புப் பணிகள் * கணினி பராமரிப்பு சேவை * எண்ணெய் டேங்கர், டிரைலர், காரேற்றி வாகனங்கள், பொக்கலைன் போன்ற அகழிகள் (Excavators) இன்ன பிற வாகனச் சேவைகள் * 5 - 10 மருத்துவர்கள் சேர்ந்து ஒரு மருத்துவமனை/சோதனைக்கூடம் (Lab) அமைத்தல் * 5 - 10 ஓய்வு பெற்ற பொறியாளர்கள் கூடி ஒரு கன்சல்டன்சி நிறுவுதல் * 10 பேர் சேர்ந்து ஒரே பெயரில் நகரின் பத்து இடங்களில் துரித உணவகம் பழமுதிர்ச்சோலைகள் நடத்துதல் *10 - 20 பேர் ஆளுக்கொரு செராக்ஸ் வாங்கி ஒரே இடத்தில் பெரிய கடையாக நடத்துதல் * 5 - 10 பொறியாளர்கள் சேர்ந்து கட்டடப் பணி (Building contract) எடுத்தல் * பத்து பேர் சேர்ந்து மனையடி வாணிபம் செய்தல்.

இதுபோல் நூற்றுக்கணக்கான தொழில் முனைப்புகளில் பட்டியல் சாதியினர் இறங்க வேண்டும். இதற்கு அரசின் தயவையோ நிர்வாகத்தின் தயவையோ தேடிக் களைக்க வேண்டியதில்லை. ஆனால், செல்வம் படைத்தவர்களும், நல்ல தனியார் அரசுப் பதவிகளில் இருப்பவர்களும்/இருந்தவர்களும், வங்கியாளரும், கல்வியாளரும் ஆகிய பட்டியல் சாதி மக்கள் குழும முனைப்புகளாக இதைத் தாமே மேற்கொண்டு செய்ய வேண்டும். அரசுகளிடமிருந்து தனியான சலுகைகளை எதிர்பார்க்காமலேயே இவை செய்யப்படலாம். ஆனால், தொழில் பெருக்கத்திற்கு மற்றவர்க்கு அரசுகள் என்ன ஊக்கங்கள் தருகின்றனவோ, அதே வகையான ஊக்கம் தருவது அரசுகளின் கடமை ஆகும்.

அரசுகள் தரும் ஊக்கத் திட்டங்களில் சில :

* அண்மையில் டாடா நிறுவனம் வெளிநாட்டு ‘கோரஸ்' நிறுவனத்தைக் கையகப்படுத்தியபோது, இதை முழுமை ஆக்குவதற்கு, அரசு எந்த வகையிலும் உதவ ஆயத்தமாக உள்ளது என்ற நிதி அமைச்சரின் பாந்தமான அறிக்கை * உபரியாக உற்பத்தி ஆகும் சர்க் கரையை கிடங்கில் வைத்திருப்பதற்கான வாடகைக்கு மானியம் (ரூ. 600 கோடி) *ஏற்றுமதியாளருக்கு வரிச்சலுகை ரூ. 50,000 கோடி * திரைப்படங்களுக்குத் தமிழ்ப் பெயர் சூட்டினால் வரிச்சலுகை * வருமான வரி கட்டும் செல்வந்தருக்குப் பல வரிச்சலுகைகள்/வரிக்குறைப்புகள் * பெண்களுக்கும் பெண் முதலீட்டாளருக்கும் தனி வரிச்சலுகை * பின்தங்கிய இடங்களில் தொழில் முனைப்பிற்கான பல்வேறு சலுகைகள். இன்னும் பலப்பல.

அதே போன்று, பட்டியல் சாதியினர் தொழில் தொடங்கும்போது, கீழ்வரும் ஊக்கத் திட்டங்களை அரசு வழங்க வேண்டும்.

* முதல் 5 ஆண்டுகளுக்கு வருமானவரி தள்ளுபடி.

* அடுத்து 5 ஆண்டுகளுக்கு தொழிலில் மறுமுதலீடு செய்யப்படும் லாபத் தொகைகளுக்கு வரிவிலக்கு.

* பேருந்து, சீருந்து, தானி (Auto), அகழிகள் போன்ற எந்த வாகனத்தைக் கொண்டும் நடத்தப்படும் வாணிபத்திற்கு வாகன வரி விலக்கு.

* ஒப்பந்த பதிவுத் தொகைகளிலிருந்து விலக்கு (Tender Registration Fee, Deposits முதலியவை).

மேற்சொன்னவை எல்லாம் சில மேலோட்டமான ஆனால் மேம்பாடான சிந்தனைகளே. இவற்றிற்குச் செயல்வடிவம் கொடுக்கும்போது, ஈரரத்தம் சிந்தியும் 1,000 ஆண்டுகளாகச் சாய்க்க முடியாத சாதிப் பேயாட்டத்தை - ஒரு பத்தாண்டுகளுக்குள் வீழ்த்துவதற்கான வலிமையைப் பட்டியல் சாதியினர் பெற்றுவிட முடியும் என்பது எம் அண்ணல் அம்பேத்கரின் மீது சத்தியம்.

17.3.2007 அன்று மதுரை தலித் ஆதார மய்யத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் கிருத்துதாசு காந்தி, இ.ஆ.ப. ஆற்றிய உரையின் சுருக்கம். இவர் தற்பொழுது தமிழக அரசின் சமூக சீர்திருத்தத் துறை செயலாளராகப் பணியாற்றுகிறார்.
Pin It