Ilangovanமேலவளவு வழக்கில் மேல்முறையீடு செய்யாத அரசைக் கண்டித்தும், அத்தியூர் விஜயா வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களுக்கு உயர் நீதிமன்றம் கொடுத்துள்ள பிணையை ரத்து செய்ய, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதைத் தாமதப்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தியும் 30.12.2006 அன்று, வி.ஆர். லட்சுமி நாராயணன் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

‘கண்டனக் குரல் கொடுப்போம்; கவன ஈர்ப்பு முழக்கமிடுவோம்' என்ற முழக்கத்தை முன் வைத்து பேராசிரியர் அய். இளங்கோவன், தி.மு.க.வைச் சார்ந்த முருகேசன் கொலையான வழக்கில் தி.மு.க. அரசு மேல்முறையீடு செய்யாமல் தட்டிக் கழிப்பதை அம்பலப்படுத்தினார். அரசு மேலவளவு வழக்கில் மேல்முறையீடு செய்ய வேண்டும்; அத்தியூர் விஜயா வழக்கில் விசாரணை நீதிமன்றம் ஆயுள் தண்டனை கொடுத்து, புதுச்சேரி காவல் துறையைச் சார்ந்த 6 பேரை தண்டித்துள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர். பாலசுப்பிரமணியன் மற்றும் ஆறுமுகம் பெருமாள் ஆதித்தியன் ஆகியோர் ஜாமீன் கொடுத்துள்ள உத்திரவின் மீது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என வி.ஆர். லட்சுமி நாராயணன் வலியுறுத்தினார்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அனைவரும், உயர் நீதிமன்ற நீதிபதிகள் சதாசிவம் மற்றும் பால் வசந்தகுமார் ஆகியோர் மேலவளவு வழக்கில் 19.4.2006 அன்று தீர்ப்பு கொடுத்துள்ளதை சுட்டிக்காட்டினர். தீர்ப்பின் பத்தி 5 இல் உயர் நீதிமன்றம், "தமிழ் நாடு அரசு விசாரணை நீதிமன்றம் 17 பேருக்கு ஆயுள் தண்டனை கொடுத்தும், 23 பேரை விடுதலை செய்தும் தீர்ப்புக் கொடுத்ததின் மீது மேல்முறையீடு செய்யாததால், சாட்சியம் இருந்தும் விடுதலையான 23 பேரை தண்டிக்க முடியவில்லை'' எனச் சுட்டிக் காட்டியுள்ளதை குறிப்பிட்டனர். இதனடிப்படையில் தமிழ் நாடு அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்யவும், திறமையான மூத்த வழக்கறிஞர்களை நியமித்து மேல் முறையீட்டை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைத்த சமூக நீதி வழக்கறிஞர் மய்யம், வெளியிட்டுள்ள துண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவை அனைவரது கவனத்தையும் ஈர்க்கக் கூடியதாக இருந்தது. இந்த வழக்கில் 41 நபர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கலானது. இடையில் ஒருவர் இறந்ததால் 40 பேர் மீது சேலம் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. பலவித இடையூறுகளை சந்தித்து, தலித் மக்கள் வழக்கில் சாட்சியம் அளித்தனர். விசாரணை நீதிமன்றம் 17 பேருக்கு ஆயுள் தண்டனையும் 23 பேருக்கு விடுதலையும் கொடுத்து தீர்ப்பளித்தது. அப்போது அ.தி.மு.க. ஆட்சி நடந்தது. இரு கட்சிகளின் ஆட்சியிலும், தலித் மக்களது நலனுக்கு எதிரான போக்கையே - நிர்வாகமும் அரசு வழக்கறிஞர்களும் கடைப்பிடித்தனர்.

தீர்ப்புக்குப் பிறகு தி.மு.க. ஆட்சிக்கு வந்துள்ளது. இந்தச் சூழலில் வழக்கறிஞர்கள் 34 பேர், தமிழக அரசுக்கு 29.11.2006 அன்று நீண்ட கடிதம் அனுப்பினர். உச்ச நீதிமன்றத்தில் அரசுத் தரப்பில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என அதில் சுட்டிக் காட்டியுள்ளனர். 1.12.2006 அன்று தமிழக அரசு கடிதத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் உயர் நீதிமன்றத் தீர்ப்பு நகலுடன் சமூக நீதி வழக்கறிஞர் மய்யம் 30.11.2006 அன்று கடிதம் அனுப்பி, தமிழக அரசை தலைமை நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வலியுறுத்தவும் கேட்டுக் கொண்டுள்ளனர். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஆகிய கட்சிகள், முதலமைச்சரிடம் இது தொடர்பாக நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளனர். மற்ற கட்சிகள் அக்கறையற்ற போக்கையே கடைப்பிடிக்கின்றன.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் தோழர்கள் பூ. சந்திரபோசு, பிரபா. கல்விமணி, கோ. சுகுமாரன், இர. அபிமன்னன், சீனிவாசன், யாக்கன், தடா. து. பெரியசாமி மற்றும் கோவை ரவிக்குமார் ஆகியோர் அரசின் போக்கைக் கண்டித்து உரையாற்றினர். வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை வலுவாக நடைமுறைப்படுத்த இயக்கம் நடத்துவோம், சமூக நீதிக்கான தோழமைச் சக்திகளை ஒருங்கிணைப்போம் என்ற கருத்துகளை அனைவரும் வலியுறுத்தினர்.

பாதிக்கப்பட்ட அத்தியூர் விஜயா, தனக்கு நீதி கிடைப்பதற்காகப் பலரும் போராடி வருவது - ஆறுதலாக இருப்பதாகவும், ஏழ்மை நிலையிலுள்ள போதும் தளர்ந்துவிடாமல் வழக்கில் கவனம் காட்டுவதாகவும் குறிப்பிட்டுச் சொன்னது, அனைவரது மனித உரிமை உணர்வையும் வலுப்படுத்துவதாக அமைந்தது.

- நம் செய்தியாளர்
Pin It