பவுத்த பண்பாட்டிற்கும் பார்ப்பனியப் பண்பாட்டிற்கும் இடையே இடையறாது நடைபெற்ற போராட்டமே இந்தியாவின் வரலாறு என்றார் பாபாசாகேப் அம்பேத்கர். அந்த வகையில், இத்துணைக் கண்டத்தில் பவுத்த மறுமலர்ச்சிக்கு வித்திட்ட அம்பேத்கரின் சிலையை அவமதிப்பது, இப்பண்பாட்டுப் போர் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருப்பதையே உணர்த்துகிறது. பவுத்த பண்பாட்டின் குறியீடான அம்பேத்கர், தம் கொள்கைகளால் உயிர் வாழ்வதைச் செறிக்க முடியாத இன்றைய இந்து (பார்ப்பனிய) பண்பாடு, அவரை அவமதிக்க முயல்கிறது. அதற்கெதிராக மகாராட்டிரம், கர்நாடகம் மற்றும் தமிழகத்திலும் தலித்துகள் தக்க பதிலடி கொடுத்துள்ளனர். இந்தியாவின் பிற மாநிலங்களிலும் இத்தகைய எதிர்வினைகள் காத்திருக்கின்றன. எச்சரிக்கை.

தம்மப் புரட்சி பொன்விழா கொண்டாட்டங்கள் நடைபெற்ற அதே நேரத்தில், மனித இனமே வெட்கித் தலைகுனியக் கூடிய அளவுக்கு கயர்லாஞ்சி படுகொலையும் நிகழ்ந்தது. ‘தலித்துகள் பவுத்தம் தழுவிய பிறகும் அவர்கள் மீதான வன்கொடுமைகள் தொடர்கிறதே' என்ற அய்யத்தை இது எழுப்பியிருக்கிறது. உரிமைகளைத் தட்டிக் கேட்டால் கொடுமைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதற்காக, உரிமைகளைக் கேட்காமல் இருக்க முடியாது. அது போலத்தான் இதுவும். தலித்துகளிடையே தன்மானத் தீ கொழுந்து விட்டெறிய பவுத்தம் காரணமாக இருந்திருக்கிறது. இந்தத் தன்மானத் தீயே உரிமைகளை வென்றெடுத்து மானமும் அறிவும் உள்ள மக்களாக நம்மை வாழவைக்கும். இந்துவாகவே நீடித்தால் அடிமை என்ற பட்டம்தானே எஞ்சியிருக்கும்!

‘‘நீங்கள் பவுத்தம் தழுவிய பிறகும், அனைத்து அரசியல் உரிமைகளையும் உங்களுக்குப் பெற்றுத் தருவேன்'' என்று உறுதி அளித்தார் அம்பேத்கர். அதன் தொடர்ச்சியாகத்தான் 1990 ஆம் ஆண்டு அவருடைய நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின்போது, தலித் இயக்கங்களின் இடையறாத போராட்டத்தின் விளைவாக, ‘பவுத்தம் தழுவிய தலித்துகளுக்கு இடஒதுக்கீடு உண்டு' என்ற சட்டம் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. ஆனால், அரசமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்ட தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு, இப்படி ஒரு சட்டம் இயற்றப்பட்டதே கடந்த 16 ஆண்டுகளாகத் தெரியவில்லை. இது, வெட்கக் கேடானது மட்டுமல்ல; இத்தகைய ஆணையங்கள் அரசமைப்புச் சட்டத்தை எந்தளவுக்கு மதிக்கின்றன என்பதையும் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.

28.9.2006 அன்று இவ்வாணையம் வெளியிட்ட விளம்பரத்தில், ‘ஒரு தலித் பவுத்தத்திற்கு மாறினால், அவருக்கு இடஒதுக்கீடு உரிமை கிடையாது' என்று அறிவித்திருந்தது. இந்த அநீதியைக் கண்டு டாக்டர் அம்பேத்கர் மய்யத்தின் தலைவரும், வேலூர் ஊரிசுக் கல்லூரிப் பேராசிரியருமான அய். இளங்கோவன் அவர்கள் கிளர்ந்தெழுந்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் 6.11.2006 அன்று பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். இதன் மூலம் 23.11.2006 அன்று ‘பவுத்தம் மாறியவர்களுக்கு இடஒதுக்கீடு உண்டு' என்ற சிறப்பானதொரு தீர்ப்பு கிடைத்தது (தீர்ப்புரையின் முழு பகுதியை பக்கம் 34 இல் பார்க்க). மேலும், பவுத்தர்களுக்கு இடஒதுக்கீடு உண்டு என்ற விளம்பரமும் உடனடியாக வெளியிடப்பட்டது.

‘ஒரு பவுத்தரின் கடமை நல்ல பவுத்தராக இருப்பது மட்டும் அல்ல. அவருடைய கடமை பவுத்தத்தைப் பரப்புவதே' என்ற அம்பேத்கரின் ஆணைக்கேற்ப பேராசிரியர் அய். இளங்கோவன், பவுத்தத்தைப் பரப்பும் இம்முயற்சியில் ஓர் இயக்கமாகவே செயல்பட்டார். அம்பேத்கரைப் படமாக மட்டுமே ஏற்றுக்கொண்ட இயக்கங்கள் மற்றும் பவுத்த அமைப்புகள், இத்தகைய அநீதி கண்டு அமைதி காத்த நிலையில், பவுத்தத்தைப் பரப்புவதில் இம்முயற்சி ஒரு முக்கிய மைல்கல்லாகவே என்றென்றும் திகழும்.

மேலும், மதமாற்றம் தொடர்பாக, கடந்த முறை தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது, ‘‘பிறப்பால் கிறித்துவராக இருப்பவர் இந்துவாக மாறினால், அவர் ஆதிதிராவிடர் சாதிச் சான்றிதழ் பெறவோ இடஒதுக்கீட்டிற்குரிய சலுகைகளைப் பெறவோ தகுதியில்லை'' (கடிதம் நகல் எண்.81/நாள் : 19.9.2000) என்றொரு ஆணையை வெளியிட்டிருந்தது. இந்த ஆணையை ரத்து செய்யக் கோரியும் பேராசிரியர் அய். இளங்கோவன்தான் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கைத் தொடுத்தார். அது இன்று வரை நிலுவையில் உள்ளது. இந்த ஆணையை தி.மு.க. அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இல்லையெனில், மதமாற்றத் தடைச்சட்டம் ரத்து செய்யப்பட்டது முழுமை பெறாது என்று நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தனது தவறைத் திருத்திக் கொண்டது. ஆனால், தி.மு.க. அரசு மேற்கூறிய ஆணையை ரத்து செய்யத் தயாராக இல்லை. டிசம்பர் 6 அன்று விடுதலை சிறுத்தைகள் நடத்திய சமூக நீதி மீட்சி மாநாட்டில், ‘‘அம்பேத்கர் சிலையை அவமதிப்பவர்களை குண்டர் சட்டத்தில் தண்டிக்க வேண்டும்'' என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். ஆனால், அம்பேத்கரின் கொள்கைகளை அவமதித்து, அவர் வலியுறுத்திய உயிர்க் கொள்கையான மதமாற்றத்திற்கு இன்றளவும் இடையூறாக இருப்பவர்களை, எந்தச் சட்டத்தின் கீழ் தண்டிப்பது?
Pin It