periyar on stageசரஸ்வதி பூஜை

தலைவரவர்களே! சகோதரர்களே! இன்று மூன்று விஷயங்களைப் பற்றி பேச நான் தலைவரால் கட்டளை இடப்பட்டிருக்கின்றேன். ஒன்று சீலையம் பட்டியில் 69 பேர்கள் மகம்மதியரானது, இரண்டு சரஸ்வதி பூஜை, மூன்று நெல்லூர் மகாநாடு.

முதலாவது விஷயமாகிய ஆதிதிராவிடர்கள் மதம் மாறி மகம்மதியரான விஷயத்தைப் பற்றி சில வார்த்தைகள் சொல்ல விரும்புகின்றேன்.

முதலில் மத சம்பந்தமான என்னுடைய அபிப்பிராயம் என்னவென்றால், எந்த மதமானாலும் அதன் கொள்கைகள் எவ்வளவு மாறுபட்ட அபிப்பிராய முடையவையானாலும் அம் மதமும் கொள்கைகளும் மனிதனுடைய இவ்வுலக வாழ்க்கைக்கு அவனுடைய பிரத்தியட்ச அனுபவத்திற்காக வகுக்கப்பட்ட கொள்கைகளுடையவைகள் என்றால் அதைப் பற்றி யோசிக்க நான் எப்போதும் தயாராயிருக்கின்றேன்.

அப்படிக்கின்றி மதமும் அதன் கொள்கைகளும் “மேல் லோகத்திலோ” அல்லது “கீழ் லோகத்திலோ” அல்லது செத்த பிறகு “சூட்சும” சரீரத்துடனேயோ அனுபவிக்கும் அனுபவத்திற்காகவே ஏற்படுத்தப்பட்டது என்றால், அது எப்படிப்பட்ட மதமானாலும் யார் செய்ததானாலும் அதற்கு என்ன ஆதாரம் சொல்லுவதானாலும் அதனால் என்ன விளைவதானாலும் நான் அதைக் கடின நேரம் கூடத் திரும்பிப் பார்க்கமாட்டேன்.

இது விஷயத்தில் என்னைப் பற்றி யார் எப்படி நினைத்துக் கொண்டாலும் எனக்கு அதைப் பற்றி கவலையில்லை, ஏனெனில் இந்தப்படி நினைப்பதற்கு எனக்குப் பூரண சுதந்திரம் இருக்கின்றது என்று நினைத்திருகிறேன்.

அதோடு எந்த லோகத்திலானாலும் இந்த உலக வாழ்க்கை அனுபவத்திற்கு விபரீதமான பலன் இருக்க முடியாதென்றுங் கருதுகின்றேன். இதை அனுசரித்தே தான் இவ்வாரத்தில் சீலையம்பட்டியில் 69 பேர்கள் மகமதியரான விஷயத்தைப் பற்றி எனது மகிழ்ச்சியை தெரிவிக்க சில வார்த்தைகள் பேசப் போகின்றேன், சகோதரர்களே! 69 ஆதிதிராவிடர்கள் மகம்மதியர்களாகி விட்டதால் அவர்களுடைய பாவங்களெல்லாம் மன்னிக்கப்பட்டு விட்டதென்றோ, அவர்களுக்கு “மோட்சலோகம்” கூப்பிடும் தூரத்திற்கு வந்துவிட்டதென்றோ “கடவுளோடு கலந்துவிட்டார்கள்” என்றோ கருதி நான் மகிழ்ச்சி அடையவில்லை.

இவைகளை நான் ஏற்றுக் கொள்ளுவதும் இல்லை. மற்றவர்கள் நம்பும்படி சொல்வதும் இல்லை. அன்றியும் ஒரு மனிதன் மதம் மாறுவதால் அவனுடைய செய்கைக்கும், எண்ணத்திற்கும் தகுந்த பலன் அடைவதில் வித்தியாச முண்டென்பதை நான் ஒப்புக் கொள்வதில்லை.

எந்த மதக்காரனாயிருந்தாலும் தனது செய்கைக்குத் தகுந்த பலன் ஒன்றாகவேதான் இருக்கும். இந்துவாயிருந்து பசுவைக் கொன்றால் பாவம் என்றும் மகம்மதியனாயிருந்து பசுவைக் கொன்று தின்றால் பாவமில்லை என்றும் மதத்தின் காரணமாகக் கருதுவது மூடநம்பிக்கையே ஒழிய இரண்டுவித அபிப்பிராயத்திலும் அர்த்தமே இல்லை.

உலகத்தில் உள்ள சகல மதங்களும் மூடநம்பிக்கையின் மீதே கட்டப்பட்டிருக்கின்றது. ஆகையால் பாவபுண்ணியத்தையும் மோட்ச நரகத்தையும் ஆதாரமாய் வைத்தும் நான் மகிழ்ச்சியடையவில்லை மற்றென்னவென்று கேட்பீர்களேயா னால் இந்து மதம் என்பதிலிருந்து மதம் மாறினதாக சொல்லப்படும் 69- ஆதிதிராவிடர்களும் பிறவியின் காரணமாக அவர்களுக்குள்ள இழிவிலிருந்து விடுதலை அடைந்ததோடு பாமரத்தன்மையும் காட்டுமிராண்டித்தனமுமான மிருகப் பிராயத்திலிருந்தும் அறியாமையிலிருந்தும் சிறிது விடுதலை அடைந்தவர்களானார்கள் என்பதற்காகவே மகிழ்ச்சியடைகின்றேன்.

அதாவது, மேற்கண்ட 69 பேர்களுக்கும் தீண்டாமை என்பது போய்விட்டது. இனி ஒருவன் அவர்களை பறையன், சக்கிலி, சண்டாளன் என்று இழிவாய்க் கூறமுடியாது. அவர்களும் மற்றவர்களை ‘சாமி’ ‘சாமி’ ‘புத்தி’ என்று கூப்பிட்டுக் கொண்டு தூர எட்டி நிற்க வேண்டியதில்லை.

மற்ற மனிதர்களின் காலில் விழுந்து கும்பிட வேண்டியதில்லை. ஊரை விட்டு வெளியில் குடி இருக்க வேண்டியதில்லை. குளிக்கத் தண்ணீரில்லாமல் குடிக்க தண்ணீரில்லாமல் திண்டாட வேண்டியதில்லை.

வண்ணான் நாவிதன் இல்லாமல் அழுக்குத் துணியுடனும் கரடி போல் மயிர் வளர்த்துக் கொண்டும் பார்ப்பவர்களுக்கு அசிங்கமாகத் தோன்றும்படி வாழ வேண்டியதில்லை. இனி எந்த பொது தெருவிலும் நடக்கலாம்; எந்த வேலைக்கும் போகலாம்; யாருடனும் போட்டி போடலாம்; அரசியலில் சமபங்கு பெறலாம்; மதசம்பந்தமாகவும் இனி அவர்கள் தங்கள் கோயிலுக்குள் போகத் தாராள உரிமை உண்டு; வேதம் படிக்க உரிமையுண்டு.

இவ்வளவையும் விட, இனி அவர் கல்லையும், செம்பையும், கூடை யையும், முறத்தையும்; விளக்குமாற்றையும் கடவுள் என்று வணங்க வேண்டியதில்லை.

மற்றும், அவர்கள் பாடுபட்டுச் சம்பாதித்த சிறிது பணத்தையும் கடவுளுக்கென்றும், கல்லுக்கென்றும் கருமாதிக்கென்றும் செலவு செய்யவேண்டியதில்லை. எனவே, இவர்கள் பொருளாதாரக் கஷ்டத்திலும் அறிவு வளர்ச்சித் தடையிலும் சமூக இழிவிலும் சுயமரியாதைக் குறைவிலும், அரசியல் பங்கு குறைவிலிருந்து ஒருவாறு விடுதலை அடைந்துவிட்டார்கள் என்பது போன்றவைகளை நினைக்கும்போது மகிழ்ச்சியடையாமலிருக்க முடியவில்லை.

ஏனெனில், தீண்டாமை நெருங்காமை, பார்க்காமை, பேசாமை முதலாகிய சகிக்க முடியாத கொடுமைகள் முதலாவதாக மதத்தின் பேரால், வேத சாஸ்திரங்களின் பேரால், கடவுள்களின் பேரால் உள்ளவைகள் எல்லாம் அடியோடு நீங்க வேண்டும் என்கின்ற தீவிர ஆசையே இம்மாதிரி நினைக்கச் செய்கின்றது.

இம்மாதிரி சுமார் ஆயிரம் வருஷங்களாக நினைத்துக் காரியத்தில் நடந்த பெரியவர்கள்தான் இன்றைய தினம் இந்தியாவில் 8 கோடி மகமதியர்களாகவும் ஒரு கோடி கிறிஸ்தவர்களாகவும் இருக்கின்றார்கள்.

இல்லாவிட்டால் இந்தியாவில் இவ்வளவு மகம்மதியர்களும் கிறிஸ்தவர்களும் எங்கிருந்து வந்தார்கள்? இந்த எண்ணிக்கையை பார்த்து பயந்தே நானும் திருவாளர்கள், தங்கபெருமாள், ஈஸ்வரன், மாரியப்பன் முதலியவர்களும் கோயம்புத்தூர் ஜெயிலிலிருக்கும் போதே ஜெயிலில் இருந்து விடுதலையானதும் தீண்டாமையை அடியோடு ஒழித்து விடுவதுடன் இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்குப் போனவர்களை எல்லாம் திரும்பவும் இந்துக்களாக்கும் முயற்சியில் வேலை செய்வது என்று முடிவுகட்டிக் கொண்டு வந்தோம்.

நாங்கள் வெளிவந்ததும் திரு.காந்தி கைது செய்யப்பட்டு சிறைசென்று விட்டதால் இந்த சமயத்தில் ஒத்துழையாமை விட்டுப் போகக் கூடாது என்று சில பார்ப்பனத் “தலைவர்கள்” கேட்டுக் கொண்டதால் மறுபடியும் காங்கிரஸ் வேலையை செய்தோம்.

பிறகு “குருகுல நடவடிக்கையையும் அது சம்பந்தமாக பார்ப்பனத் தலைவர்கள் மனப்பான்மையையும் அவர்களது உள் எண்ணத்தையும் தெரிந்த பிறகு “இந்து” மதமே அடியோடு அழிக்கப்பட வேண்டும் என்கின்ற முடிவுக்கு வந்துவிட நேர்ந்தது.

அதன் பேரில் இந்து மதத்தை விட்டாலும் பிறகு தங்களுக்கு ஏதாவது ஒரு மதம் இருந்துதான் தீர வேண்டு மென்று கருதும் மக்களுக்குக் கிறிஸ்துவ மதத்தை சிபார்சு செய்யலாமா? மகம்மதிய மதத்தைச் சிபார்சு செய்யலாமா என்று கருதி யோசித்து பார்த்தேன்.

கடைசியாக கிறிஸ்தவ மதமும் நமது நாட்டில் நான் பார்த்தவரை அதுவும் மற்றொரு பார்ப்பனீய மதமாகவே காணப்பட்டது. கிறிஸ்துவ மதப் பிரசாரத்தின் கருத்தெல்லாம் அரசியல் விஷயத்தை அடிப்படையாகவும், அந்தரங்க லட்சிய மாகவும் கொண்டு செய்யப்படுகின்றதே ஒழிய மக்கள் சமத்துவத்தையோ ஒற்றுமையையோ கொண்டதாகத் தெரியவில்லை என்கின்ற முடிவிற்கு வரவேண்டியதாயிற்று.

எப்படியென்றால் இன்றைய தினமும் கிறிஸ்துவ மதத்தில், ‘பறக் கிறிஸ்தவன்’, ‘சக்கிலிக் கிறிஸ்தவன்’, ‘வேளாளக் கிறிஸ்தவன், ‘உடையார் கிறிஸ்தவன்’, ‘நாயுடு கிறிஸ்தவன்’, ‘நாடார் கிறிஸ்தவன்’, ‘பார்ப்பனக் கிறிஸ்தவன்’ என்கின்ற பாகுபாடுகளும் குடியிருப்பு வசதி வித்தியாசங்களும் சர்ச்சு முதலிய பிரார்த்தனை இடங்கள் வித்தியாசம் காணப்படுவதைப் பார்த்தால் நன்றாய் தெரியவரும்.

ஆகையால் மகம்மதிய மதத்தை தழுவுவதினால் தான் தீண்டாதவர்களுக்கு இதுசமயம் சீக்கிரத்தில் உடனேயே சமூக சமத்துவத்தை அளிக்க முடியும் என்று கருதுகிறேன். இந்த நிலை நமக்கு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக நான் எவ்வளவோ பாடுபட்டு பார்த்தேன்.

ஈரோடு தேவஸ்தானத்தில் சகல இந்துக்களுக்கும் கோயில் நுழைவு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதின் பேரில் சில மேல் ஜாதிக்காரர்கள் என்பவர் களும், வெள்ளைக்கார அதிகாரிகளும் பார்ப்பன அதிகாரிகளும் கொண்ட மாதிரியானது எனக்குத் தீண்டப்படாத மக்களுக்கு சமத்துவம் கொடுப்பதற்கு அவசரமாய் இதைவிட வேறு வழியில்லை என்கின்ற முடிவு ஏற்படுத்தச் செய்துவிட்டது. நமது நாட்டில் ஜாதி வித்தியாசம் ஒழியவும் சமத்துவம் ஏற்படவும் வெள்ளைக்காரர்களும் சிறப்பாக பாதிரிமார்களும் சுலபத்தில் சம்மதிக்கமாட்டார்கள்.

ஆகையால் தீண்டாமை முதலிய கொடுமை ஒழிய வேண்டும் என்கின்ற கருத்துள்ளவர்களுக்கும் ஒற்றுமையை எதிர்பார்க்கும் கருத்து உள்ளவர்களுக்கும் மக்களுக்கு சுயமரியாதை உணர்ச்சியை ஊட்ட வேண்டும் என்னும் கருத்து உள்ளவர்களுக்கும் நமது நாட்டில் இப்போது உள்ள முக்கிய வேலை முதலில் தீண்டப்படாதவர்கள் மகம்மதியாராவதை ஆnக்ஷபியாதிருப்பதேயாகும் என்பது எனது தாழ்மையானதும் கண்ணியமானதுமான அபிப்பிராயம்.

நிற்க, சிலர் மகம்மதிய மதம் முரட்டுச் சுபாவத்தை உண்டாக்குகின்றது என்று எனக்கு எழுதியிருக்கிறார்கள். அது வாஸ்தவமானால் தீண்டப்படாதவர்களுக்கு அவர்களது தீண்டாமை ஒழிய மகமதிய மதத்தை சிபார்சு செய்வதற்கு அதுவே ஒரு நல்ல காரணம் என்று கருதுகிறேன்.

இப்பொழுது நமது தீண்டப்படாதவர்கள் தங்கள் தீண்டாமை நிலை நிற்கும்படி தாங்களாகவே அளவுக்கு மீறி ஒடுங்குகிறார்கள். காலில் விழுந்து கும்பிடுகிறார்கள்.

அடிக்க அடிக்க ஓடுகிறார்கள். கீழ்ப்படியவே தங்களை கடவுள் பிறப்பித்திருப்பதாய் கருதுகிறார்கள்; எவ்வளவு திட்டினாலும் ரோஷப்படுவதே இல்லை; கோபிப்பதேயில்லை; “முரட்டு சுபாவம் இல்லாத இந்துமதம்” இவர்களை இப்படிச் செய்துவிட்டதால் தங்களைப் பிறர் இழிவுபடுத்துவது தங்களுக்குத் தெரிவதில்லை.

ஆதலால், மகம்மதிய மதம் முரட்டு சுபாவத்தை உண்டாக்குவது உண்மையானால் அதில் சேர்ந்த இவர்கள் இனிமேலாவது இவ்வளவு தாழ்மை யாக நடந்து கொள்ள மாட்டார்கள் அல்லவா? மற்றவர்களும் அவர்களது முரட்டு சுபாவத்தைக் கண்டு பயந்து மரியாதையாய் நடந்து கொள்ள இடமேற் படும் அல்லவா? அன்றியும், மகம்மதியர்களைப் பற்றி இந்து மதத்தின் சார்பாய் இந்துக்கள் நினைத்துக் கொண்டிருந்ததென்னவென்றால், துருக்கியர் மிலேச்சரென்றும் மிக்க தாழ்ந்தவர்கள் என்றும் கருதிக் கொண்டிருந்தார்கள்.

அதற்கு ஆதாரமாய் இப்போதும் இந்து சாஸ்திரமும் நிகண்டும் இருக்கிறது. ஆனால், தீண்டப்படாதவர்களைப் போலவே மகம்மதியர்களும் ஒடுங்கி இருந்திருப்பார்களானால் இந்தியாவில் இந்திய தீண்டப்படாதார் 6 கோடியும், மகம்மதியர் தீண்டப்படாதார் 8 கோடியும் என்று சொல்ல வேண்டியதாய் இருந்திருக்கும்.

இப்போது அந்த நிலை மாறியிருப்பதற்கு மகம்மதியர்களின் முரட்டு சுபாவம் என்று சொல்லக் கூடாதானாலும், ஒடுங்க முடியாத, தாழ்மையையும் இழிவையும் ஒப்புக் கொள்ள இஷ்டமில்லாத தைரிய சுபாவம் என்றாவது சொல்லியாக வேண்டும்.

அந்த சுபாவம் இப்போதுள்ள தீண்டப்படாதவர்கள் என்பவர்களுக்கு வந்துவிட்டால் கூடப் போதுமானது என்றும், மதம் மாற வேண்டிய அவசியமில்லை என்றும் சொல்லலாம். ஆனால் அவர்கள் இந்துக்களாக இருக்கும் வரை சுலபத்தில் அவர்களுக்கு அந்த சுபாவம் வராது என்பதோடு மேல் வகுப்புக்காரர்கள் என்பவர்கள் சுலபத்தில் வர விடமாட்டார் கள் என்றே சொல்லுவேன்.

ஆகையால் இந்து சமூகத்தில் உண்மையான சமத்துவமும் ஒற்றுமையும் ஏற்படும் வரை தீண்டப்படாதவர்கள் கும்பல் கும்பலாய் மகம்மதியர் ஆவதை தவிர வேறு மார்க்கமில்லையாதலால் நாம் அதை ஆnக்ஷபிக்க முடியாதவர் களாய் இருக்கின்றோம்.

தவிரவும், மதத்தினிடத்திலோ, இந்து சமூகத்தினிடத் திலோ கவலையுள்ளவர்களுக்கு இதனால் ஏதாவது சங்கடம் இருப்பதா யிருந்தால் அவர்கள் தாராளமாய் வெளிக்கிளம்பி வந்து தீண்டப்படாத மக்களுக்கிருக்கும் கொடுமையையும் இழிவையும் நீக்க முன் வரட்டும்: அவர்களோடும் எப்போதும் ஒத்துழைக்கத் தயாராயிருக்கிறேன். மற்றபடி வீண் சோம்பேறி ஞானம் பேசிக் கொண்டிருப்பதனால், இனி யாதொரு நன்மையும் அடைய முடியாது.

அந்தக் காலம் மலையேறிவிட்டது. ஆதலால் ‘உண்மை நாடுவோர் சங்கத்’தின் இன்றைய கூட்டமானது சீலையம்பட்டியில் இந்துக்களில் உயர்ந்த வகுப்பார் என்பவர்களின் கொடுமையைச் சகிக்க மாட்டாமல், மகம்மதிய மதத்தை தழுவினதின் மூலம் தங்கள் இழிவிலிருந்து விலகிய 69 ஆதிதிராவிடர்களை மனமாரப் பாராட்டுகின்றது என்கின்ற தீர்மானத்தை நான் பிரேரேபிக்கின்றேன்.

பிறகு திருமதி. இலட்சுமி அம்மாள் அவர்கள் மகமதிய மதத்தில் பெண்களுக்கு உள்ள பெருமையையும் சுதந்திரத்தையும் எடுத்துச் சொல்லி ஆமோதித்தார்கள். மத்தியில் ஒருவர் மகம்மதிய மதத்தில் உள்ள கோஷா முறையைப் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன என்று ஒரு சீட்டு எழுதி அனுப்பினார்கள்.

அதற்கு திரு.ஈ.வெ. ராமசாமி தான் பதில் அளிப்பதாக முன் வந்து “கோஷா முறையை தான் ஒப்புக் கொள்ளுவதில்லை என்றும் சில படித்த மகம்மதிய கனவான்கள் கோஷா முறை குரானில் இல்லை என்று சொன்னார்கள் என்றும், தான் இங்கு குரானைப் பற்றி ஒரு வார்த்தையும் பேசவரவில்லை என்றும், தனக்கு அதைப் பற்றி தெரியாது என்றும், இந்த நாட்டில் கோஷா இல்லாத மகம்மதிய பெண்கள் அநேகர் இருக்கிறார்கள் என்றும், மலையாளத்தில் 100-க்கு 75 மகம்மதிய பெண்களுக்கு கோஷா இல்லை என்றும், தஞ்சை, திருச்சி, திருநெல்வேலி, ராமநாதபுரம் இந்த பக்கங்களில் காடுகளில் வேலை செய்வதைப் பார்த்ததாகவும் தனக்குத் தெரிந்தவரை கோஷா ஒரு அந்தஸ்தாக கருதப்படுகின்றதே தவிர முழுதும் மதக் கட்டளையாகக் கருதுவதாகச் சொல்ல முடியாது என்றும், இப்பொழுது அந்த மதத்தில் சேர்ந்த பெண்கள் கோஷாவாயில்லாவிட்டால் தள்ளிவிட மாட்டார்கள் என்றும், விதவாவிவாகம், கல்யாணரத்து, பெண்கள் படிப்பு, சொத்துரிமை ஆகியவைகள் பெண்களுக்கு அந்த மதத்தில் இருப்பதால் கோஷா ஒரு சமயம் இருந்தாலும் அந்த கஷ்டத்தை விட பல பங்கு மேல்பட்ட அதிக லாபமிருக்கின்றது என்றும், அன்றியும், துருக்கியைப் போலும் ஆப்கானிஸ்தானத்தைப் போலும் இங்கும் சமீபத்தில் சீர்திருத்தம் ஏற்படலாம் என்கின்ற நம்பிக்கை இருக்கின்றதென்றும் சொன்னார். கரகோஷத்தினிடையே தீர்மானம் நிறைவேறியது.

சரஸ்வதி பூசை

சரஸ்வதி பூஜை என்பது ஒரு அர்த்தமற்ற பூஜை, கல்வியையும், தொழிலையும், ஒரு பெண் தெய்வமாக்கி அதற்கு சரஸ்வதி என்று பெயர் கொடுத்து அதை பூஜை செய்தால் கல்வி வரும், வித்தை வரும் என்றும் சொல்லி நம்மை நமது பார்ப்பனர்கள் ஏமாற்றி கல்வி கற்க சொந்த முயற்சி இல்லாமல் சாமியையே நம்பிக்கொண்டு இருக்கும்படி செய்துவிட்டு நாம் அந்த சாமி பூஜையின் பேரால் கொடுக்கும் பணத்தைக் கொண்டே அவர்கள் படித்துப் பெரிய படிப்பாளிகளாகிக் கொண்டு நம்மை படிப்பு வரமுடியா மக்குகள் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.

முதலாவது சரஸ்வதி என்னும் சாமியின் சொந்த யோக்கியதையை கவனித்தால் அது பார்ப்பனர்கள் புராணக் கதைகளின்படியே மிக்க ஆபாசமானதாகும். அதாவது சரஸ்வதி என்கிற ஒரு பெண் பிரம்மனுடைய சரீரத்தில் இருந்து உண்டாக்கப்பட்ட பிறகு அவளுடைய அழகைக் கண்டு அந்த பிரம்மனாலேயே மோகிக்கப்பட்டு அவளைப் புணர அழைக்கையில், அவள் பிரம்மனைத் தகப்பன் என்று கருதி, அதற்கு உடன்படாமல் பெண்மான் உரு எடுத்து ஓடவும், பிரமன் தானும் ஒரு ஆண் மான் உருவெடுத்து அவளைப் பின் தொடர்ந்து ஓடவும், சிவன் வேட உருவெடுத்து ஆண் மானைக் கொல்லவும், பிறகு சரஸ்வதி அழுது சிவ பிரானால் மறுபடியும் உயிர்ப்பிக்கச் செய்து, பிரம்மனுக்கு மனைவியாக சம்மதித்ததாக சரஸ்வதி உற்பவக் கதை சொல்லுகிறது.

அதாவது தன்னைப் பெற்றெடுத்த தன் தகப்பனையே மணந்து கொண்டவள் என்று ஆகிறது. மற்றொரு விதத்தில் பிரம்மாவுக்கு பேத்தி என்று சொல்லப்படுகின்றது. அதாவது, பிரம்மா ஒரு காலத்தில் ஊர்வசியின் மீது ஆசைப்பட்டபோது வெளியான இந்திரியத்தை ஒரு குடத்தில் விட்டுவைக்க அக்குடத்திலிருந்து அகத்தியன் வெளியாக அவ்வகத்தியன் சரஸ்வதியைப் பெற்றான் என்று சொல்லப்படுகின்றது.

இதனால் பிரம்மனுக்கு சரஸ்வதி மகன் வயிற்று பேத்தி ஆகிறாள். எனவே சரஸ்வதியின் பிறப்பும் வளர்ப்பும் நடவடிக்கையும் ³ பார்ப்பனப் புராணப்படி மெத்த ஆபாசமும் ஒழுக்க ஈனமுமானதாகும்.

நிற்க, இந்த யோக்கியதையுடைய அம்மாளை எதற்காக மக்கள் பூசை செய்கிறார்கள் என்பது இதைவிட மிகவும் வேடிக்கையான விஷயமாகும்.

அதாவது சரஸ்வதி வித்தைக்கு அதிபதியான தெய்வமாதலால் வித்தையின் பயன் தொழிலென்றும், தொழிலுக்கு ஆதாரமானது ஆயுதங்கள் என்றும் கருதிக் கொண்டு, சரஸ்வதி பூஜை என்றும், ஆயுத பூஜை என்றும் ஒரு நாளைக் குறித்துக் கொண்டு அந்த நாளை விடுமுறையாக்கி புஸ்தகங்களையும் ஆயுதங்களையும் வைத்து பூசை செய்கிறார்கள்.

இந்தப் பூசையில் அரசன் தனது ஆயுதங்களையும், வியாபாரி தனது கணக்குப் புத்தகங்கள், திராசு, படிக்கல், அளவு மரக்கால்படி, உழக்கு, பெட்டி முதலியவைகளையும் தொழிலாளிகள் தங்கள் தொழில் ஆயுதங்களையும் இயந்திரச் சாலைக்காரர்கள் இயந்திரங்களையும், மாணாக்கர்கள் புத்தகங்களையும், குழந்தைகள் பொம்மைகளையும், தாசிகள் தங்கள் ரவிக்கைகளையும், சீலைகளையும், நகைகளையும், வாத்தியக்காரர்கள் வாத்தியக் கருவிகளையும் மற்றும் இதுபோலவே ஒவ்வொரு வர்களும் அவரவர்கள் லட்சியத்திற்கு ஆதாரமாக வைத்திருக்கும் சாமான்களை வைத்து பூஜை செய்கின்றார்கள்.

இதனால் அந்த தினத்தில் தொழில் நின்று அதனால் வரும் வரும்படிகளும் போய் பூஜை ஒய்வு முதலிய ஆடம்பரங்களுக்காக தங்கள் கையில் இருக்கும் பணத்திலும் ஒரு பாகத்தை செலவு செய்தும் போராவிட்டால் கடன் வாங்கியும் செலவு செய்வதைவிட யாதொரு நன்மையும் ஏற்படுவதாக சொல்லுவதற்கே இல்லாமல் இருக்கின்றது.

ஆயு தத்தை வைத்து பூசை செய்து வந்த வருகின்ற அரசர்கள் எல்லாம் இன்றைய தினம் நமது நாட்டில் ஆயுதத்தை வைத்து பூஜை செய்யாத வெள்ளைக்கார அரசனுடைய துப்பாக்கி முனையில் மண்டி போட்டு சலாம் செய்து கொண்டு இஸ்பேட் ராஜாக்களாக இருந்து வருகின்றார்களே ஒழிய ஒரு அரசனாவது சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை ஆகிய பூஜையின் பலத்தால் தன் காலால் தான் தைரியமாய் நிற்பவர்களை காணோம்.

சரஸ்வதி பூஜை செய்யும் வியாபாரிகளில் ஒரு வியாபாரியாவது சரஸ்வதிக்கு பயந்து பொய்கணக்கு எழுதாமலோ, தப்பு நிறை நிருக்காமலோ குறை அளவு அளக்காமலோ இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. அதுபோலவே கைத்தொழிலாளிகளும் தங்கள் ஆயுதங்களிடத்தில் வெகு பக்தியாய் அவைகளைக் கழுவி விபூதி சந்தனம் குங்குமப் பொட்டு முதலியவைகள் போட்டு விழுந்து கும்பிடுவார்களே தவிர ஒருவராவது நாணய மாய் நடந்து கொள்கின்றார்கள் என்றாவது அல்லது அவர்களுக்குத் தாராளமாய் தொழில் கிடைக்கின்றது என்றாவது சொல்லுவதற்கு இல்லாமலே இருக்கின் றார்கள். அதுபோலவே புஸ்தகங்களையும் பென்சிலையும் கிழிந்த காகிதக் குப்பைகளையும் சந்தனப் பொட்டுப் போட்டு பூசை செய்கின்றார்களே அல்லாமல் காலோ கையோ பட்டுவிட்டால் தொட்டுக் கண்ணில் ஒத்திக் கும்பிடு கின்றார்களே அல்லாமல் நமது நாட்டில் படித்த மக்கள் 100க்கு 5 பேர்களுக் குள்ளாகவே இருந்து வருகின்றார்கள். இவ்வளவு ஆயுத பூஜை செய்தும், சரஸ்வதி பூஜை செய்தும் இவ்வளவு விரதங்கள் இருந்தும், நமது அரசர்கள் அடிமைகளாக இருக்கின்றார்கள். நமது வியாபாரிகள் நஷ்டமடைந்து கொண்டு வருகிறார்கள்.

நமது தொழிலாளர்கள் தொழிலில்லாமல் பிழைப்பைக் கருதி வேறு நாட்டிற்கு குடிபோகின்றார்கள். நமது மக்கள் நூற்றுக்கு ஐந்து பேரே படித்திருக்கிறார்கள். சரஸ்வதியின் ஜாதியைச் சேர்ந்த பெண்கள் ஆயிரத்திற்கு ஒன்பது பேரே படித்திருக்கிறார்கள்.

இதன் காரணம் என்ன?

நாம் செய்யும் பூசைகளை சரஸ்வதி தெய்வம் அங்கீகரிக்க வில்லையா? அல்லது சரஸ்வதி தெய்வத்திற்கும் இந்த விஷயங்களுக்கும் ஒன்றும் சம்பந்தமில்லையா? அல்லது சரஸ்வதி என்கின்ற ஒரு தெய்வமே பொய்கற்பனையா? என்பவையாகிய இம்மூன்றில் ஒரு காரணமாகத்தான் இருக்க வேண்டும்.

என்னைப் பொறுத்தவரையில் இவைகள் சுத்த முட்டாள்தனமான கொள்கை என்பதே எனது அபிப்பிராயம்.

வெள்ளைக்கார தேசத்தில் சரஸ்வதி என்கின்ற பேச்சோ கல்வி தெய்வம் என்கின்ற எண்ணமோ சுத்தமாய் கிடையாது.

அன்றியும் நாம் காகிதத்தையும் எழுத்தையும் சரஸ்வதியாய்க் கருதித் தொட்டு கண்ணில் ஒத்திக் கொண்டும், நமக்குக் கல்வி இல்லை. ஆனால் வெள்ளைக்காரன் மல உபாதைக்குப் போனால் சரஸ்வதியைக் கொண்டே மலம் துடைத்தும், அவர்களில் நூற்றுக்கு நூறு ஆண்களும் நூற்றுக்கு அறுபது பெண்களும் படித்திருக்கிறார்கள்.

உண்மையிலேயே சரஸ்வதி என்ற ஒரு தெய்வமிருக்குமானால் பூசை செய்பவர்களை தற்குறிகளாகவும் தன்னைக் கொண்டு மலம் துடைப்பவர்களை அபார சக்தி வாய்ந்த அறிவாளிகளாகவும். கல்வி வான்களாகவும் செய்யுமா என்பதை தயவு செய்து யோசித்துப் பாருங்கள்.

உண்மையிலேயே யுத்த ஆயுதம், கைத் தொழில் ஆயுதம், வியாபார ஆயுதம் ஆகியவைகள் உண்மையிலேயே சரஸ்வதி என்னும் தெய்வ அம்சமாயிருக்குமானால் அதை பூசை செய்யும் இந்த நாடு அடிமைப்பட்டும் தொழிலற்றும் வியாபாரமற்றும், கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கவும், சரஸ்வதியை கனவிலும் கருதாததும் சரஸ்வதி பூசை செய்கின்றவர்களைப் பார்த்து முட்டாள்கள், அறிவிலிகள், காட்டுமிராண்டிகள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் நாடு சுதந்திரத்துடனும், வியாபாரிகள் அரசாக்ஷியுடனும் தொழிலாளர் ஆதிக்கத்துடனும் இருக்க முடியுமா என்பதையும் யோசித்துப் பாருங்கள். இந்த பூஜையின் மூலம் நமது முட்டாள்தனம் எவ்வளவு வெளியாகின்றது பாருங்கள்.

ராஜாக்கள் கொலுவிருப்பது, பொம்மைகள் கொலுவிருப்பது, சாமிகள் கொலுவிருப்பது. இதற்காக ஜனங்கள் பணம் செலவு செய்வது, நேரம் செலவு செய்வது, அறிவு செலவு செய்வது, பத்து லட்சக்கணக்கான ரூபாய்களுக்கு பொம்மைகள் சந்தனம், குங்குமம், கற்பூரம், சாம்பிராணி கடலை பொரி சுண்டல் வடை மேளவாத்தியம் வாழைக் கம்பம், பார்ப்பனர்களுக்கு தட்சணை, சமாரா தனை, ஊர்விட்டு ஊர்போக ரயில் சார்ஜு ஆகிய இவைகள் எவ்வளவு செலவாகின்றது என்பதை எண்ணிப்பாருங்கள்.

இவைகள் எல்லாம் யார் வீட்டுப் பணம்? தேசத்தின் செல்வமல்லவா என்று தான் கேழ்க்கின்றேன். ஒரு வருஷத்தில் இந்த ஒரு பூஜையில் இந்த நாட்டில் செலவாகும் பணமும் நேரமும் எத்தனை கோடி ரூபாய் பெறுமானது என்று கணக்குப் பார்த்தால் மற்ற பண்டிகை, உற்சவம், புண்ணியதினம், அர்த்தமற்ற சடங்கு என்பவைகளின் மூலம் செலவாகும் தொகை சுலபத்தில் விளங்கிவிடும்.

இதை எந்த பொருளாதார இந்திய தேசிய நிபுணர்களும் கணக்குப் பார்ப்பதே இல்லை.

புரட்டாசி சனிக்கிழமை

இனி அடுத்தாற்போல் வரும் புரட்டாசி சனிக்கிழமை உற்சவங்களும், திருப்பதி முதலிய நூற்றுக்கணக்கான சனிக்கிழமைப் பெருமாள்கள் உள்ள ஊர்களின் உற்சவங்களும், சனிக்கிழமை பிடிப்பதன் மூலம் அவரவர்கள் வீட்டில் ஏராளமாய் சமைத்துக் கொண்டு சோம்பேறிகளையும் அயோக்கியர்களையும் மெனக்கட்டுத் தேடிப் பிடித்து வந்து அவர்களுக்கு வயிறு நிறையவும் போட்டு மற்றும் மூட்டை கட்டிக் கொண்டும் போகக்கூடிய அளவு மேல் கொண்டும் போட்டு கஞ்சாவுக்கோ கள்ளுக்கோ சூதாடவோ கையில் பணமும் கொடுத்து, இவ்வளவும் போராமல் அந்த நாளெல்லாம் பட்டினி கிடந்து அந்த சோம்பேறிகளின் காலிலும் விழுந்து மாலை 3 மணி 4 மணி சுமாருக்கு சாப்பிடும் பண்டிகையிலோ விரதத்திலோ கடுகளவு அறிவு இருக்கின்றதா என்று கேழ்க்கின்றேன்.

புரட்டாசி சனிக்கிழமை வந்தால் எத்தனை பேர்கள் தங்களுக்கும் பட்டை நாமம் போட்டுக் கொண்டு சொம்புக்கும் நாமத்தை குழைத்து போட்டுக் கொண்டு, துளசியை அரளிப்பூவையும் அந்த சொம்புக்கு சுத்திக் கொண்டு “வெங்கிடாசலபதி கோவிந்தா” என்றும் “நாராயணா கோவிந்தா” என்றும் கூப்பாடு போட்டு அரிசியோ காசோ வாங்கிக் கொண்டு போவதில் ஏதாவது பலனுண்டா என்றுதான் கேட்கின்றேன்.

மற்றும் திருப்பதிக்குப் போகிறேன் என்று சொல்லிக் கொண்டு தலை மயிரும் தாடி மயிரும் வளர்த்து வெரும் மஞ்சள் நனைத்த துணிக்கட்டிக் கொள்ளுவதும் மேளம் வைத்துக் கொள்வதும் பெண்டுபிள்ளைகள் சுற்றத்தார்களை அழைத்துக் கொள்வதும் வருஷமெல்லாம் பணம் போட்டு மொத்தமாய் பணம் சேர்ப்பதும் அல்லது வேண்டுதலையின் மேல் இவ்வளவு பணம் என்று கடன் வாங்கியாவது எடுத்துக் கொள்வதும் அல்லது வியாபாரத்திலோ வேறு வரும் படியிலோ லாபத்தில் இத்தனை பங்கு என்று கணக்கு வைத்து சேர்த்து எடுத்துக் கொள்வதும் ஆன பணமூட்டை கை கட்டிக்கொண்டு கடைவாயிலும் நாக்கிலும் வெள்ளி கம்பியை குத்திக் கொண்டு போதாக் குறைக்கு தெருவில் கூட்டமாய் “கோவிந்தா” “கோவிந்தா” “கோவிந்தா” என்று கூப்பாடு போட்டுவிட்டு வீட்டு வீட்டுக்கு, கடைகடைக்கு காசு பணம் வாங்கி ஒருபகுதியை ரயிலுக்கு கொடுத்து திருப்பதி போவதும், அங்கு முழங்கால் முறிய மலையேறுவதும் ஆண்களும் பெண்களும் தலைமொட்டை அடித்துக் கொள்வதும் அந்த மலைச்சுனைத் தண்ணீரில் குளிப்பதும் அந்த பட்டை நாமம் போட்டுக் கொள்வதும் கொண்டுபோன பணத்தை கடாரத்தில் காணிக்கையாக கொட்டுவதும், ஆண்களும் பெண்களும் நெருக்கடியில் இடுபடுவதும், பிடிபடுவதும் வெந்ததும் வேகாததுமான சோற்றை தின்பதும் மற்றும் பல சோம்பேறிகளுக்கும் மேக வியாதிகாரர்களுக்கும் வேக வைத்தோ விலைக்கு வாங்கியோ போடுவதும் விறகு கட்டையிலும் வேர்களிலும் செய்த மரமணி மாலைகளை வாங்கி கழுத்தில் போட்டுக் கொள்வதும். மலைக்காய்ச்சலோடு மலையைவிட்டு இறங்கி வருவதும் வீட்டுக்கு வந்து மகேஸ்வரபூசை “பிராமண சமார்த்தனை” செய்வதும் தவிர மற்றபடி இவைகளால் ஏதாவது செய்த வனுக்கோ, கூடப்போன மக்களுக்கோ, நாட்டுக்கோ, ஒழுக்கத்திற்கோ, மதத் திற்கோ கடுகளவு நன்மை உண்டாகுகின்றதா என்று கேட்கின்றேன்.

திருப்பதிக்கு போய் வந்த பிறகாவது யாராவது தங்கள் துர்க்குணங்களையோ கெட்ட செய்கைகளையோ விட்டுவிட்டதாகவாவது அல்லது திருப்பதி யாத்திரையானது இம்மாதிரி குணங்களை விடும்படி செய்ததாகவாவது நம்மில் யாராவது பார்த்திருக்கின்றோமா என்று கேட்பதுடன் இம்மாதிரி அறிவீனமான காரியத்திற்காக நமது நாட்டில் வருஷத்திற்கு எத்தனை கோடி ரூபாய் செலவாகின்றது என்பதை எந்தப் பொருளாதார இந்திய தேசீய நிபுணராவது கணக்குப் போட்டார்களா என்று கேட்கின்றேன்.

தீபாவளி

இனி அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை என்று கஷ்டமும் நஷ்டமும் கொடுக்கத்தக்க பண்டிகையொன்று வரப்போகின்றது. அதிலும் ஏதாவது, அறிவுடைமை உண்டா என்று கேட்கின்றேன்.

தீபாவளி பண்டிகையின் கதையும் மிக்க ஆபாசமானதும், இழிவானதும், காட்டுமிராண்டித்தனமானது மாகும், அதாவது விஷ்ணு என்னும் கடவுள் பன்றி உருக்கொண்டு பூமியைப் புணர்ந்ததன் மூலம் பெறப்பட்டவனான நரகாசூரன் என்பவன் வருணனுடைய குடையைப்பிடுங்கிக் கொண்டதால் விஷ்ணு கடவுள் கிருஷ்ணாவதாரத்தில் கொன்றாராம்.

அந்த தினத்தைக் கொண்டாடுவதற்கு அறிகுறியாக தீபாவளி பண்டிகை கொண்டாடுவதாம்.

சகோதரி சகோதரர்களே! இதில் ஏதாவது புத்தியோ மனிதத் தன்மையோ இருக்கின்றதா என்று பாருங்கள். விஷ்ணு என்னும் கடவுள் பூமியை புணருவது என்றால் என்ன என்றாவது, அது எப்படி என்றாவது, நரகாசூரன் என்றால் என்ன? வருணன் என்றால் என்ன? வருணன் குடை என்றால் என்ன? என்பதாவது, அப்படி ஒன்று இருக்க முடியுமா என்றாவது, இவைகள் உண்மையா? என்றாவது கருதிப் பாருங்கள்!

இப்படி பொய்யானதும் அர்த்தமற்றதுமான பண்டிகையினால் எவ்வளவு கஷ்டம்? எவ்வளவு ரூபா நஷ்டம்? எவ்வளவு கடன்? எவ்வளவு மனஸ்தாபம்? எவ்வளவு பிரயாணச் செலவு? என்பவைகளை ஒரு சிறிதுகூட நமது மக்கள் கவனிப்பதில்லையே! அப்பண்டிகையை உத்தேசித்து ஒவ்வொருவரும் தனது யோக்கியதைக்கும் தேவைக்கும் மேற்பட்ட பணம் செலவு செய்து, துணி வாங்க ஆசைப்படுகிறான்;

கடன் என்றால் வட்டி அல்லது ஒன்றுக்கு ஒன்றரை பங்கு கிரையம் ஏற்பட்டுவிடுகின்றன. இதுதவிர மாமனார் வீட்டு செலவு எவ்வளவு. தவிர சுத்தமுட்டாள்தனமான பட்டாசுக்கொளுத்துவது எவ்வளவு? மற்றும் இதனால் பலவித நெருப்பு உபாதை ஏற்பட்டு வீடு வேகுதலும், துணியில் நெருப்பு பிடித்து உயிர் போதலும், பட்டாசு சுடுவதாலும் செய்வதாலும் மருந்து வெடித்து உடல் கருகி கண், மூக்கு, கை, கால், ஊமையாவதுமான காரியங்கள் எவ்வளவு நடக்கின்றது? இவ்வளவும் அல்லாமல் இந்த பண்டிகை கொண்டாடுவதற்கு அறிகுறியாக எவ்வளவு பேர்கள் கள்ளு சாராயம் குடித்து மயங்கி தெருவில் விழுந்து புரண்டு, மானம் கெடுவது எவ்வளவு? மேலும் இதற்காக ‘இனாம் இனாம்’ என்று எத்தனை பாமர மக்கள் பிச்சை எடுப்பது அல்லது தொந்தரவு கொடுத்து பணம் வசூல் செய்வது ஆகிய இந்தக் காரியங்களால் எவ்வளவு பணம், எவ்வளவு நேரம், எவ்வளவு ஊக்கம், எவ்வளவு பணம் செலவாகின்றது என்று கணக்குப் பாருங்கள்.

இவைகளை எல்லாம் எந்த இந்திய பொருளாதார தேசீய நிபுணர்களாவது கவனிக்கிறார்களா? என்று கேழ்க்கின்றேன். துலாஸ் தானம் தவிரவும் இந்து மதத்திலேயே அய்ப்பசி துலாஸ்நானமென்று புதுத் தண்ணீர் காலத்தில் நதிகளில் போய் அழுக்குத் தண்ணீரில் தினம் தினம் காலையில் குளிப்பதும், புதுத்தண்ணீர் ஒத்துக் கொள்ளாமல் கஷ்டப்படுவதும் இதற்காக ஊரைவிட்டுவிட்டு ஊர் பணம் செலவு செய்து கொண்டு போய் கஷ்டப்படுவதும்.

ஒன்று இரண்டு தண்ணீர் இழுத்து கொண்டு போகப்படுவதும், குளித்து முழுகிவிட்டு நதிக்கரையில் இருக்கும் பார்ப்பனர்களுக்கு அரிசி பருப்பு பணம் காசு கொடுத்து அவன் காலில் விழுவதுமான காரியங்கள் செய்வதும், ஆதிமுதல் அந்தம் வரை அத்தனையும் பொய்யும் ஆபாசமுமான காவிரிப்புராணம் படிக்க கேட்பதும் அதற்காக அந்த பொய்யையும் கேட்டு விட்டு பார்ப்பானுக்கு சீலை வேஷ்டி சாமான் பணம் கொடுத்து காலில் விழுவதுமான காரியம் செய்கின்றோம்.

காவேரியை பெண் தெய்வமென்பதும் அதில் ஆண்கள் குளிப்பதுமான காரியம் ஆபாசமல்லவா?

கார்த்திகை தீபம்

இனி அதற்கு அடுத்த மாதமாகிய கார்த்திகை மாதம் வந்தால் கார்த்திகைப் பண்டிகை என்று வீணாக ஆயிரக்கணக்கான தீபம் கொளுத்துவ தின் மூலம் எண்ணெயையும், நெய்யையும் பாழாக்கி புகைப்பதும், மலைகளின் பேரில் கட்டைகளையும் விறகுகளையும் போராய் குவித்து அதில் நெய்யையும் வெண்ணெயையும் டின்னு டின்னாய், குடம் குடமாய் கொட்டி கொளுத்துவதும், இந்த வேடிக்கை பார்க்க திருவண்ணாமலை, திருச்செங்கோடு முதலிய மலைக் கோயில் உள்ள ஊர்களுக்கு ஜனங்கள் லட்ச லட்சமாய் பணம் செலவுசெய்து ரயில் சார்ஜ் கொடுத்து நெருக்கடியில் சிக்கிக் கஷ்டப்பட்டு கண்ட ஆகாரத்தை புசித்து வயிற்றைக் கெடுத்துக் கொண்டு ஊர் வந்து சேருவதும் விளக்கு நெருப்பில் பல பெண் குழந்தைகள் துணியில் நெருப்புப் பிடித்து உடல் வெந்து சாவதும் ஆகிய காரியங்கள் இல்லாமல் அவைகளால் வேறு ஏதாவது பலன் உண்டா என்று கேழ்க்கின்றேன்.

முன் போலவே இந்தப் பண்டிகை மூலமும் வருஷம் ஒன்றுக்கு இந்த நாட்டில் எவ்வளவு ரூபாய்கள் செலவாகிறது என்றும் எவ்வளவு நேரமும் அதிலும் செலவாகின்றது என்றும் எந்த இந்திய தேசீய பொருளாதார நிபுணர்களாவது கணக்குப் பார்த்தார்களா? என்று கேழ்க்கின்றேன்.

வைகுண்ட ஏகாதசி பூசம்

இனி அதற்கு அடுத்த மார்கழி மாதம் வந்தால் வைகுண்ட ஏகாதசி என்று கூட்டம் கூட்டமாய் சீரங்கம் முதலிய ஊர்களுக்குப் பணம் செலவு செய்து கொண்டு போவதும், தை மாதம் வந்தால் பூசம் என்று காவடிகளைத் தூக்கிக் கொண்டு பழனி முதலிய மலைகளுக்குப் போவதும், பொய்யையும் புளுகையும் காவடிக் கதையாய்ச் சொல்வதும், அறுத்துச் சமைத்த பாம்பும் மீனும் கோழியும் உயிர் பெற்றுவிட்டது என்பதும், மண்ணு சர்க்கரையாகி விட்டது என்பதும், வெட்டித் துண்டாக்கப்பட்ட குழந்தை உயிர் பெற்று எழுந்துவிட்ட தென்பதும், இன்னும் இதுபோல பல பொய்களை வெட்கமில்லாமல் சொல்லுவதும், அழுக்கு குளங்களில் குளித்து அழுக்கு தண்ணீரை சாப்பிட்டு பஞ்சாமிர்தம் என்னும் ஒரு அசிங்கமான வஸ்துவை கண்டபடி சாப்பிட்டு வயிற்றுப் போக்கெடுத்து காலரா ஏற்பட்டு திரும்பிப் போகும் போது வழியில் சாவதும், சிலர் அந்த கால்ராவை தங்கள் தங்கள் ஊருக்குக் கொண்டுபோய் பரவவிட்டு அங்குள்ளவர்களை கொல்லுவதும், அவர்கள் நதி வாய்க்கால் ஓரங்களில் குடி இருந்தால் அந்த கால்ரா அசிங்கம் வாய்க்கால்களில் கலந்து கரை ஓரங்களில் இருக்கும் ஊர்களிலெல்லாம் பரவி மக்கள் நூற்றுக்கணக்காக சாவதுமான காரியங்கள் வருஷந்தோறும் நடைபெறுகின்றது.

சாதாரணமாக சீரங்கம் வைகுண்ட ஏகாதசி உற்சவத்திலும் பழனி தைப்பூச உற்சவத்திலுமே ஏற்பட்ட சுகாதாரக் கெடுதியால் ஒவ்வொரு வருஷமும் முதல் முதல் அங்கு கால்ரா உற்பத்தியாகி பிறகு இரண்டு மூன்று மாதம் தென்னாடெல்லாம் பரவி ´ 1க்கு இரண்டு, மூன்று ஆயிரம் பேருக்கு குறைவில்லாமல் கொள்ளை கொண்டு போகின்றது.

இதன் உண்மையை ஒருவரும் அறியாமல் ‘பேதியாயி’ ‘மாரியாயி’ ‘ஓங்காளியாயி’ ஊருக்கு ஒருகுடம் எண்ணெய் கொண்டு வந்து ஆளுக்கு அரை கரண்டி கொடுத்துவிட்டாள் என்று சொல்லி ஊரிலுள்ள மக்களில் சில பாகம் செத்து கால்ரா தானாக ஒடுங்கியபின் ஓங்காளியின் பொங்கலும் காளி பூசையும் செய்து பேதியை நிறுத்திவிட்டதாக வெட்கமில் லாமல் பேசிக் கொள்வதும், அன்றியும்,

கிராம தேவதை

கிராமங்களிலெல்லாம் மார்கழி, தை மாதங்களிலேயே மாரியம்மன் பண்டிகை கொண்டாடி வெந்தும் வேகாதப் பொங்கலும், பச்சைமாவும், சரியாய் சுத்தம் செய்யாத வேகாத மாமிசமும் கண்டபடி புசிப்பதால் அஜீரணம், கால்ரா முதலிய வியாதிகள் உண்டாவதையும் பார்க்கின்றோம். பொதுவாகவே நமது நாட்டில் கூட்டம் சேர்ந்தாலே அசுத்தம் உண்டாகி வியாதிகள் ஏற்படுவதை அனுபவத்தில் பார்த்து வருகின்றோம்.

சிவராத்திரி

இனி அதற்கடுத்த மாசி மாதம் வந்தால் சிவராத்திரி என்று கண்டபடி கிழங்கு வகைகளையும், தானியவகைகளையும், பலகார வகைகளையும் ஒரே நாளில் செய்து அளவுக்கு மேல் தின்று குழந்தைகளையும் தின்னச் செய்து அஜீரணத்தையும் வயிற்று வலியையும் உண்டாக்கிக் கொள்வதோடு இதனால் ஏற்படும் செலவு எவ்வளவு என்பதை யாராவது யோசித்துப் பார்க்கின்றார்களா? என்று கேழ்க்கின்றோம்.

இப்படியே ஒவ்வொரு மாதமும் உற்சவமும் பண்டிகைகளும், விரதங்களும், சடங்குகளும் ஏற்பட்டு மொத்தத்தில் வருஷத்தில் எவ்வளவு கோடி ரூபாய்கள் செலவு, எவ்வளவு வியாதிகள் வரவு, எவ்வளவு உயிர்கள் போக்கு என்பவைகளை யார் கவனிக்கின்றார்கள்.

இந்தப் பணம் எல்லாம் தேசீய பணமல்லவா? ஏழைதேசம், தரித்திர தேசம், அடிக்கடி பஞ்சம் வரும் தேசம், வேலையில்லாமல் தொழிலில்லாமல் கூலிக்காரர்கள் கும்பல் கும்பலாய் பட்டினி கிடந்து மடிவதுடன் பெண்டு பிள்ளை குழந்தைகளுடன் வெளிநாட்டிற்கு கூலிக்காக கப்பலேறும் தேசம் என்று சொல்லி கொண்டிருக்கின்ற நாம், எத்தனை நாட்களை, எத்தனை ரூபாய்களை, எத்தனை ஊக்கங்களை இந்தப் பாழும் அர்த்தமற்ற பொய்யான ஒரு காசுக்கும் உதவாததான நமக்கு இழிவையும் அவமானத்தையும் தருவதான பண்டிகைக்கும் உற்சவத்திற்கும் பூசைக்கும் சடங்குக்குமாக ஒவ்வொருவரும் செலவு செய்கின்றோம் என்பதை கவனித்தால் இந்த நாடு பணமில்லாத நாடா அல்லது புத்தி இல்லாத நாடா என்பது நன்றாய் விளங்கும்.

இது யார் சூட்சி

எனவே, இப்படிக்கெல்லாம் சொல்வதைப் பார்த்தால் இந்த பண்டிகைகளையும் உற்சவம் முதலியவைகளையும் ஏற்படுத்தியவர்கள் எல்லோரும் அறிவில்லாதவர்களா என்கின்ற கேள்வி பிறக்கலாம். நான் அவர்களை அறிவில்லாதவர் என்று சொல்ல இஷ்டப்பட மாட்டேன்.

மற்றப்படியோ, என்றால் பெரும்பாலும் அவர்கள் சுயநலக்காரர்களும், தந்திரக்காரர்களும் அதிகார ஆசை உடையவர்களுமாயிருக்க வேண்டுமென்றே சொல்லுவேன்.

என் புத்திக்குட்பட்ட வரையில் இந்த பண்டிகை உற்சவம் முதலியவை கள் எல்லாம் புரோகிதர்களான பார்ப்பனர்களும் ஆக்ஷிக்காரர்களான அரசர்களும் கலந்து கண்டுபிடித்து செய்த தந்திரமென்பதே எனது அபிப்பிராயம். உலகத்தில் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் அறியாமைக்கும் கொடுமைக்கும் புரோகிதர்களும் அரசர்களுமே சேர்ந்து கூட்டுப் பொறுப்பாளர்களாவார்கள்.

சாதாரணமாக உலக சரித்திரத்தில் கொடுமைக்காரர்களும் சூக்ஷிக்காரர்களுமாய் இருந்தவர்களே புரோகிதர்கள் என்கின்ற உயர்ந்த ஜாதிக்காரர்களாகவும் கொள்ளைக்காரர்களும் மூர்க்கர்களுமாயிருந்தவர்களே அரசர்களாகவும் ஏற்பட்டு இருக்கிறார்கள்.

இவ்விருவர்களும் ஜனங்களை ஏய்த்து ஆதிக்கம் செலுத்த வகை கண்டு பிடிக்கவேண்டிய அவசியமுடையவர்கள்.

அந்தப்படி மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தி வாழ வேண்டுமானால், அந்த மக்களை அறிவினாலும் செல்வத்தினாலும் தாழ்மைப்படுத்தி வைத்திருந்தால்தான் முடியும். ஒரு மனிதன் அறிவுடையவனாயிருப்பானானால் புரோகிதனுக்கு ஏமாற மாட்டான்.

செல்வமிருக்குமானால் அரசனுக்கு பயப்படமாட்டான். ஆகையால் அறிவும் செல்வமும் இல்லாமல் செய்வதற்கே கோயில் உற்சவம் பண்டிகை சடங்கு ஆகியதான செலவுக்கு ஏற்றவழிகளை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

மக்கள் சம்பாதிக்கும் பணங்களில் கணக்குப் பார்த்தால் பெரும்பாகமும் இவைகளுக்கே செலவு செய்யும் படியாகவும் மேல்கொண்டு மீதி ஆவதெல்லாம் இவர்கள் சமூகத்திற்கே பயன்படும்படியாகவும் மற்றும் மேல்கொண்டு ஒவ்வொரு குடும்பமும் அதாவது நூற்றுக்கு தொண்ணூறு குடும்பங்கள் இவைகளின் பயனாய் கடன்காரர்களாக இருக்கவுமே இருந்து வரப்படுகின்றது.

எனவே, நமது நாடு என்றைக்காவது அறிவுள்ள நாடாகவும், செல்வமுள்ள நாடாகவும், சுயமரியாதை உள்ள நாடாகவும் இருக்கவேண்டுமானால் முதலில் உற்சவம், பண்டிகை, சடங்கு, கோயில், பூசை ஆகியவைகள் ஒழிந்தாக வேண்டும்.

இவைகளை வைத்துக் கொண்டு மலைகளை எல்லாம் தங்கமும் வைரமுமாக ஆக்கினாலும் சமுத்திரங்களையெல்லாம் பாலும் நெய்யும் தேனுமாக ஆக்கினாலும் மேல் கண்ட உற்சவம் சடங்கு கோவில் பூசை பண்டிகை ஆகியவைகளே சாப்பிட்டு விடும்.

ஆதலால் இனி மேலாவது இம்மாதிரியான காரியங்களுக்கு அடிமையாகி வீண் செலவு செய்யக் கூடாது என்பதே எனது ஆசை.

குறிப்பு : ஈரோடு உண்மை நாடுவோர் சங்கத்திலும் வளையக்காரத் தெரு பார்ப்பனரல்லாதார் வாசக சாலையிலும் நடைபெற்ற வாராந்தரக் கூட்டத்தில் சொற்பொழிவு.

(குடி அரசு - சொற்பொழிவு - 20.10.1929)

Pin It