தர்மம் – அதாவது ஏழைகளுக்குப் பிச்சை இடுதல் முதல், மற்றவர்களுக்குப் பல உதவிகள் செய்வது என்பதுவரை, அனேக விஷயங்கள் தர்மத்தின் கீழ் சொல்லப்பட்டிருக்கின்றன. இந்த மாதிரி தர்மத்தைப் பற்றி எல்லா மதங்களுமே முறையிடுகின்றன. இந்து, முஸ்லிம், கிறிஸ்துவம் முதலிய மதங்களில் இந்த தர்மத்தை – பிச்சை கொடுத்தலை மிக நிர்பந்தமாக கட்டாயப்படுத்திச் சொல்லப்பட்டிருக்கிறது. எப்படியெனில், தர்மம் கொடுக்காதவன் பாவி என்றும், அவன் நரகத்துக்குப் போவான் என்றும், கடவுள் அவனைத் தண்டிப்பார் என்றும், இப்படியெல்லாம் பயமுறுத்திச் சொல்லப்பட்டிருக்கிறது. இவை கடவுள் வாக்கெனவும் கூறப்பட்டிருக்கிறது.
இந்து மதம் என்பதில் தர்மத்தை 32 விதமாகக் கற்பித்து, 32 தர்மங்களையும் ஒருவன் செய்ய வேண்டும் என்றும், அந்தப்படி செய்தால் அவனுக்கு இன்னின்ன மாதிரி புண்ணியம் கிடைக்கும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அதாவது, அறம் 32 : ஒரு மனிதன் – சரித்திரம் படிப்பவர்களுக்குச் சாப்பாடு, சத்திரம் கட்டுதல், பக்தர்களுக்கு உணவு, பசுவுக்கு வாயுறை, கைதிகளுக்கு சாப்பாடு, இரப்பவர்களுக்குப் பிச்சை, தின்பண்டம், அனாதைகளைக் காத்தல், பிள்ளைப் பேறுக்கு மருத்துவம் செய்தல், அனாதைப் பிள்ளைகள் வளர்த்தல், தின்பண்டம், பிள்ளைகளுக்குப் பால் வார்த்தல், அனாதைப் பிணம் சுடுதல், ஏழைகளுக்கு ஆடை கொடுத்தல், வழிப்போக்கர்களுக்கு சுண்ணாம்பு கொடுத்தல், வைத்தியம் செய்தல், வண்ணான் உதவல், நாவிதன் உதவல், கண்ணாடி காட்டுதல், காதோலை கொடுத்தல், கண்ணுக்கு மருந்து செய்தல், தலை முழுக்காட்ட எண்ணெய் தருதல், பெண் போகம் வேண்டுவோருக்கு போகப் பெண் உதவுதல், கஷ்டத்தில் சிக்குண்டவர்களுக்கு உதவி செய்து விடுவித்தல், தண்ணீர்ப் பந்தல் வைத்தல், மடம் கட்டுதல், ரோடு போடுதல், சாலை மரம் வைத்தல், மாடு – எருமை ஆகியவை தங்கள் தினவுகளைத் தீர்த்துக் கொள்ளச் சொரிகல் நடுதல், மிருகங்களைக் காத்தல், கக்கூசு கட்டல், விலை கொடுத்து உயிர் மீட்டல், பெண்தானம் செய்தல் ஆகிய 32 தருமங்கள் செய்ய வேண்டியது, ஒவ்வொரு மனிதனின் கடமை என்று சொல்லப்பட்டிருக்கிறது.
அது போலவே, இஸ்லாம் மதம் என்பதிலும் அன்னியனுக்குப் பிச்சை கொடுத்தாக வேண்டும் என்றும், அது ஒருவனுடைய வருஷ வரும்படியில் அவனுடைய செலவு போக மீதி உள்ளதில் 40 இல் 1 பாகம் வருஷந்தோறும் பிச்சையாகப் பணம், சாப்பாடு, துணி முதலியவைகளாய்க் கொடுக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இந்தப்படி செய்யாவிட்டால் மதத் துரோகம் என்றும், இந்தப்படி செய்யாதவன் இஸ்லாம் ஆக மாட்டான் என்றும்கூட கூறப்படுகிறது.
அதுபோலவே, கிறிஸ்தவ மதத்திலும் தர்மம் கொடுக்க வேண்டியது மிக முக்கியமானதென்றும், தர்மம் செய்யாதவனுக்கு மோட்சமில்லை என்றும், உதாரணமாக ஓர் ஊசியின் காதோட்டை வழியாக ஒரு ஒட்டகம் நுழைந்தாலும் நுழையுமே ஒழிய, பிச்சை கொடுக்காத பணக்காரன் ஒரு காலமும் மோட்சத்துக்குப் போக மாட்டான் என்றும் சொல்லப்படுகிறது. இந்தப்படிக்குத் தர்மங்கள் செய்ய வேண்டிய அவசியங்களை வற்புறுத்தி, அந்த வற்புறுத்தல்களை – பகவான் சொன்னான், ஆண்டவன் சொன்னான் என்று வேதங்கள் என்பவைகளிலும் எழுதி வைக்கப்பட்டிருக்கின்றன.
இந்த தர்மங்கள் எல்லாம், இருக்கிறவர்கள் அதாவது செல்வவான்கள் – இல்லாதவர்களுக்கு, ஏழைகளுக்குக் கொடுக்க வேண்டும் என்பதுதான் இதன் தாத்பரியமாகும். செல்வவான்களுக்குச் செல்வம் கடவுளால் கொடுக்க வேண்டும் என்பதுதான் இதன் தாத்பரியமாகும்.
"செல்வவான்களுக்குச் செல்வம் கடவுளால் கொடுக்கப்பட்டதாகும். ஆகையால் கடவுள் கொடுத்ததைக் கடவுளின் சிருஷ்டியாகிய – கடவுளின் பிள்ளைகளாகிய ஏழை மக்களுக்குக் கொடுக்க வேண்டியது அவசியமாகும்' என்பதே அந்தத் தாத்பரியத்தின் உள் கருத்தாகும். செல்வவான்களுக்குக் கடவுள் செல்வங்களைக் கொடுத்தார் என்றால், செல்வமில்லாத ஏழை தரித்திரவான்களுக்குச் செல்வமில்லாமல் செய்ததும் கடவுள்தான் என்பதை – எந்த மதவாதியும் ஆஸ்திகனும் மறுக்க மாட்டான் என்றும், மறுக்க முடியாது என்றும் சொல்வேன்.
ஆனபோதிலும், கடவுளே ஒருவனைச் செல்வவானாக ஆக்கினார் என்றும், கடவுளே ஒருவனை ஏழையாக ஆக்கினார் என்றும் வைத்துக் கொள்வதானாலும், தர்மம் – பிச்சை கொடுக்கிற அதிகாரத்தை மாத்திரம் ஏன் பணக்காரனுக்குக் கொடுத்து, அவனுக்கு இஷ்டமிருந்தால் பிறத்தியானுக்குப் பிச்சை போட்டு மோட்சத்துக்குப் போகும் படியும், அவனுக்கு இஷ்டமில்லையானால் பிச்சை கொடுக்காமல் இருந்து நரகத்துக்குப் போகும் படியும், எதற்காகக் கற்பிக்க வேண்டுமென்பது நமக்குப் புலப்படவில்லை.
அன்றியும், ஏதோ இரண்டொரு பணக்காரன், பிச்சை கொடுத்து, தர்மம் செய்து மோட்சத்திற்குப் போவதற்காகவும், பலர் பிச்சை கொடுக்காமலிருந்து நரகத்திற்குப் போவதற்காகவும் – எத்தனையோ கோடிக்கணக்கான பிச்சைக்காரர்களை ஏன் சிருஷ்டித்தார் என்பதும் நமக்கு விளங்கவில்லை.
– தொடரும்
(குடி அரசு கட்டுரை - 21.4.1945)