1933-வருடம் மே மாதம் 21-தேதி ஞாயிற்றுக்கிழமை சுயமரியாதையோரால் தமிழ்நாடு முழுமையும் கொண்டாடப்படும்.
உலகெங்கும் கடந்த 50 வருஷமாக மே தினத்தை ஓர் பெருநாளாகத் தொழிலாளர், கிருஷிகள் முதலியோர் கவனித்து வருகின்றார்கள். தாழ்த்தப் பட்டவர்களுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும், ஏமாற்றப்பட்டவர்களுக்கும் இந்நாள் வொன்றே உவந்த தினமாகும். இந்நாளில் கோடான கோடி மக்கள் தாங்கள் படும் கஷ்டங்களையும், குறைகளையும் தெரிவிப்பான் வேண்டி, ஆங்காங்கு கூட்டங்கள் போடுவதும், ஊர்வலம் வருவதும், உபன்யாசங்கள் செய்வதும் வழக்கமாயிருந்து வருகிறது. இவ்வருஷம் 'மே' தினமாகிய சென்ற திங்களில் (1933, மே, 1-²) ஆங்கில நாட்டிலும் (England) பிரான்சிலும் (France) ருஷ்யாவிலும் (Russia) ஜெர்மனி (Germany) இட்டலி (Italy) அமரிக்காவிலும் (America) இந்தியாவிலும் (India) ஜப்பானிலும் (Japan) மற்றுமுள்ள தொழிலாளர், முதலாளி தேசங்களில் கோடான கோடி மக்கள் தம்தம் குறைகளைத் தெரிவித்தும், குறைகளுக்குப் பரிகாரம் தேடியும், யோசித்தும், பற்பல தீர்மானங்கள் செய்தும் வந்திருக்கின்றனர்.இந்த வருஷம் பாரிஸ் பட்டணம், இந்நாளை தொழிலாளர் விடுமுறை நாளாகக் கொண்டாடியது. சமதர்ம நாடாகிய சோவியத் ருஷியாவில் 16 கோடி ஆண், பெண் குழந்தை கள் அடங்கலாக யாவரும், ருஷியா தேச முழுமையும், இத் தினத்தைக் கொண்டாடினார்கள். சமதர்மிகளாகிய நாமும் இத்தினத்தைக் கவனிக்கா மலிருப்பது பெருங்குறைவேயாகும். இம்மாதம் முதல் நாள் கடந்து விட்ட போதிலும், வருகிற ஞாயிற்றுக்கிழமை மே மாதம் 21 தேதி சுயமரியாதை சமதர்ம சபைகள் யாவும், சமதர்ம கொள்கைகளை ஏற்றுக் கொண்ட சங்கங் கள் யாவும், அத்தினத்தை பெருந்தினமாகக் கொள்ளல் மிக்க நலமாகும். அன்று காலையிலும், மாலையிலும், அந்தந்தக் கிராமங்களிலும், பட்டணங்களிலும் சமதர்மிகள் ஊர்வலம், சமதர்ம சங்கீதங்களுடன் வரலாம். ஆங்காங்கு கூட்டங்கள் கூட்டி சமதர்மம் இன்னதென்றும், தொழிலாளருக்கும் விவசாயிகளுக்கும் விளக்கமுறச்செய்யலாம். துர்ப்பழக்க வொழுக்கங்களை வொழிக்குமாறு பல தீர்மானங்களைச் செய்யலாம். இவ்விதமாக ஒழுங்காகவும், நியாய முறைப்படி கூட்டங்களையும், ஊர்வலங்களையும் நடத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுகின்றேன்.
- ஈ. வெ. ராமசாமி
(குடி அரசு - அறிக்கை - 14.05.1933)