கோவில் பிரவேச மசோதா என்னும், டாக்டர் சுப்பராயன் மசோதா வுக்கு சிறிது காலத்துக்கு முன் ஜிண்டான் மாத்திரைக்குச் செய்யப்பட்ட விளம்பரத்துக்கு மேலாகவே செய்யப்பட்டு வருகின்றது. இவ்விளம்பரம் தோழர் ராஜகோபாலாச்சாரி சிபார்சின் மீது தோழர் காந்தியாலும் செய்யப்பட்டு வருவதைக் கண்டு டாக்டர் சுப்பராயனைப் பாராட்டாதவர்கள் இல்லை. டாக்டர் சுப்பராயன் அவர்களுக்கு இது ஒரு சகட யோகமேயாகும். ஆனால் மசோதாவின் யோக்கியதை என்ன என்பதையும், பயன் என்ன என்பதையும் இதன் கருத்து என்னவென்பதையும், எதை உத்தேசித்து இந்தப் பித்தலாட்ட பிரசாரம் மகாத்மாக்களாலும், தேசீய பத்திரிக்கைகளாலும் நடைபெருகின்றது என்பதை சீக்கிரத்தில் நாமே விவரமாக வெளிப்படுத்த இருக்கிறோம். சிறிது தாமதம் ஆவதால் ஒன்றும் முழுகிப் போகாது. ஆதலால் அது சம்மந்தமாக வந்திருக்கும் பல வியாசங்களை வெளியிடாததற்கு நிருபர்கள் பொருத்துக் கொள்வார்களாக.
(குடி அரசு - செய்தி விளக்கக் குறிப்பு - 08.01.1933)
***
கத்தோலிக்கர்களுக்கோர் விண்ணப்பம்
நமது பகுத்தறிவு இயக்கத்தை தாக்கி எழுதும் முறையில் திருச்சி “கிங்ஸ் ரோலி” என்ற ஆங்கில மாதச் சஞ்சிகையையும், சர்வவியாபி என்ற ஒரு தமிழ் வாரப் பத்திரிகையும் நம்மை திட்டி எழுதியிருந்தவைகளை நமக்கோர் நற்சாட்சிப் பத்திரமாக எண்ணி நமது கொள்கைகளை ஆதரிக்கும் அமெரிக்கா, ஐரோப்பாவிலுள்ள பகுத்தறிவு இயக்க ஸ்தாபனங்களுக்கு அதன் பிரதிகள் சிலவற்றை வாங்கி அனுப்பினோம். அவர்கள் நமது தொண்டைக் கண்டு மகிழ்ந்து அதற்கு வெகுமதியாக
1. Priest the Women and the Confessional
2. Question for Catholics
3. Roman Catholicism Analyzed
4. Fifty years in the church of Rome
5. Confession of a Nun
முதலிய புத்தகங்களை அனுப்பியுள்ளார்கள். அவைகளின் மொழி பெயர்ப்பு இனி குடி அரசில் வெளியாகிக் கொண்டு வரும். கத்தோலிக்கர்களுக்கும் மற்ற வைதீக கிறிஸ்துவர்களுக்கும் நாமாக ஏதாவது சொல்வதாயிருந்தால் தான் அவர்கள் கோபித்துக் கொள்ள இடமேற்படலாம். ஆதலாலேயே இனி கத்தோலிக்கு பாதிரிகளும், பிஷப்புகளும் மற்றும் கிறிஸ்துவ அறிஞர்களும் சொன்னவற்றையே முதலில் சமர்ப்பிக்கிறோம். இதற்கும்கூட கோபிப்பார்களோ என்னமோ தெரியவில்லை. நம்மைக் கண்டிப்பவர்கள் நாம் எழுதியவைகளை எடுத்து ஓதியோ, எழுதியோ அவற்றிற்கு சமாதானத்துடன் கண்டித்தால் மிகவும் நன்றி உள்ளவர்களாய் இருப்போம் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
(குடி அரசு - கட்டுரை - 08.01.1933)