உண்மையான சீர்திருத்தக்காரரும், தேசபக்தருமான திரு. விபினசந்திர பாலர் அவர்கள் காலஞ்சென்ற செய்திகேட்டு வருந்துகின்றோம். நமது நாட்டில் அரசியல்வாதியாகவும், சமுதாய சீர்திருத்தவாதியாகவும் விளங்கிய தலைவர்கள் சிலரேயாவார்கள், அவர்களில் காலஞ் சென்ற லாலா லஜபதிராய் ஒருவர் என்பது நாடறிந்த செய்தி. அவரைப் போன்றே திரு. விபினசந்திர பாலரும் சமுதாய சீர்திருத்தக் காரராகவும், நிதானமுள்ள அரசியல்வாதியாகவும் விளங்கினார்.
சென்ற 1925 ல் சென்னையில் நடைபெற்ற ஒரு வாலிபர் மகாநாட்டில் திரு. விபினசந்திர பாலர் அவர்கள் தலைமை வகித்துப் பேசும் போது “நீங்கள் உண்மையில் வீரர்களாகவும், தேசத்திற்கு உழைக்கக் கூடியவர்களாகவும் இருக்க விரும்புவீர்களானால் 25 வயதிற்குமுன் ஒருக்காலும் மணம் புரிந்து கொள்ளாதீர்கள்! ஒரு சமயம் உங்கள் பெற்றோர்கள் கட்டாயப்படுத்தி மணம் செய்து வைக்கத் துணிவார்களாயின் வீட்டை விட்டு ஓடிப் போய்விடுங்கள்” என்று கூறினார். இதைப் போலவே பெண்கள் மணவிஷயத்திலும் பால்ய மணம் கூடாது என்ற அபிப்பிராயமுடையவர்.
அன்றியும் திரு. பாலர் அவர்கள் தமது முதல் மனைவி இறந்தபின் இரண்டாவதாக ஒரு விதவைப் பெண்ணையே மணம் புரிந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் தமது இளம் வயதிலேயே சீர்திருத்த அபிப்பிராயங்களை உறுதியாகக் கொள்ளத் தொடங்கி விட்டார். பிரம்ம சமாஜ ஸ்தாபகரான பாபு கேசவசந்திரசென் அவர்களின் மாணவராகிப் பிரம்ம சமாஜத்தில் ஈடுபட்ட பொழுது இவரது தந்தை அதில் ஈடுபடக்கூடாது எனத்தடுத்தும் கேட்காமல் பிரம்ம சமாஜக் கொள்கைகளை மேற்கொண்டதால் தமது சொத்துக்களை இவருக்குக் கொடுக்காமல் வேறொருவருக்கு எழுதி வைத்தும்; வீட்டை விட்டுத் துரத்தியும் கூட தமது உறுதியான கொள்கையினின்றும் சிறிதும் தவறாத வீரராக விளங்கினார். இத்தகைய அஞ்சா நெஞ்சம் படைத்த சீர்திருத்த வீரர் நமது விபினசந்திர பாலர்.
காங்கிரஸ் திரு. காந்தியின் கையில் சிக்கி தாறுமாறாகும் வரையில் காங்கிரசில் சேர்ந்து இருந்தார்; காங்கிரஸ் பயனற்ற ஆவேசமான காரியங்களில் புகுந்த போது அதைவிட்டு விலகித் தனித்து நின்று தேச ஊழியம் புரிந்து வந்தார்.
சாதாரணமாக சுயராஜியம் என்னும் பெயரால் மக்களை ஆவேசமான வழிகளில் தூண்டிவிட்டு வீண்கிளர்ச்சிகளை உண்டாக்கி நாட்டில் பொருளாதாரக் கஷ்டத்தையும் மற்றும் பல தொல்லைகளையும் உண்டாக்கும் ஆவேசக்காரர்களுக்குத் தேசத் தலைவர் பட்டம் கிடைப்பதும், நாட்டின் முன்னேற்றத்திற்கு உண்மையாகவும், அமைதியாகவும் பலனுண்டாகும் படியும் அரசியலிலும் சமுதாய விஷயங்களிலும் ஈடுபட்டு உழைக்கின்றவர்களுக்குத் தேச துரோகப் பட்டம் கிடைப்பதும் போலவே நமது திரு. விபினசந்திரபாலர் அவர்களுக்கும் காங்கிரசிலிருந்து விலகிய பின் வசைமொழிகளும், தேசத் துரோகப் பட்டமும் கிடைத்து வந்தன. ஆயினும் அவர் சிறிதும் அஞ்சாமல் இறக்கும் வரையிலும் தமது அபிப்பிராயங்களை அடிக்கடி பத்திரிகைகளில் வெளிப்படுத்துவதன் மூலம் தேச ஊழியம் புரிந்து கொண்டு வந்தார்.
பேசுந் திறமையில் இவரைப் போல் சிறந்தவர் வேறு எவரும் இல்லை யென்று சொல்லலாம். 1907-ம் ஆண்டில் சென்னை கடற்கரையில் இவர் செய்த பிரசங்கத்தொனி இன்னும் இந்திய மக்கள் மனத்தைவிட்டு நீங்கியிருக்க முடியாது.
இத்தகைய பெரியார் தமது 76 - வது வயதில் காலஞ் சென்றது பற்றி நாம் அதிகமாக வருந்துவதற்கு நியாயமில்லை. வயதேறியவர்கள் இறப்பது இயல்பே என்று சமாதானமடைவதே முறையாகும். இவர் கொண்டிருந்த அரசியல் அபிப்பிராயத்தையும், சமுதாய சீர்திருத்த அபிப்பிராயத்தையும் நமது நாடு பின்பற்றியிருக்குமாயின் தற்பொழுதுள்ள மோசமான நிலை மாறி எவ்வளவோ ஒழுங்கான முறையில் முன்னேறியிருக்கக்கூடும் என்ற விஷ யத்தை இச்சமயத்தில் ஞாபகப்படுத்த வேண்டியது தேச ஊழியர்களின் கடமையாகும்.
காலஞ் சென்ற திரு. விபினசந்திரபாலர் அவர்களின் தேச ஊழியத்தைப் போற்றுகின்றவர்களும் அவருடைய சமுதாய ஊழியத்தைப் பாராட்டுகின்றவர்களும் அவருக்குச் செய்ய வேண்டிய நன்றி அவருடைய உயர்ந்த கொள்கைகளைப் பின்பற்றி நாட்டின் நன்மைக்கு உழைப்பதேயாகும் என்று தெரிவித்துக் கொள்ளுவதுடன் அவருடைய அன்பினர்களுக் கெல்லாம் நமது அநுதாபத்தையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
(குடி அரசு - துணைத் தலையங்கம் - 29.05.1932)