இந்தியாவுக்கு வரப்போகும் சுயராஜியம் என்பதும் சீர்திருத்த மென்பதும் இப்போதிருப்பதை விட இன்னும் மோசமான அடிமை விலங்காகவே வந்து முடியப் போகின்றது.

periyar 450 copyஇந்தியாவுக்கு வந்த சைமன் கமிட்டியானது இந்தியாவின் உண்மை நிலைமையையும், தேவையையும் அறியத் தொடங்கியதால், நமது பார்ப்பனர்கள் அதற்கு இடம் கொடுத்தால் தங்களுக்கு ஆபத்து வந்துவிடுமென கருதி, ஏதாவது ஒரு தந்திரம் செய்து கமிஷன் விசாரணையை வெற்றியடையாமல் செய்யவேண்டும் என்ற எண்ணத்தின்மீது அநேக சூட்சிகள் செய்தார்கள். அவைஒன்றும் தமிழ்நாட்டு மக்களிடம் பலிக்காமல் போகவே, கடைசியாகச் சத்தியாக்கிரகம் என்பதாக ஆரம்பிக்கச் செய்து ஒருபக்கம் கலகம் செய்தார்கள். இவற்றிற்கெல்லாம் காரணம் காங்கிரஸ் என்பதான பார்ப்பன ஸ்தாபனம் ஒன்று அவர்களுக்கு கை ஆயுதமாய் இருப்பதால் எதுவும் செய்ய முடிகின்றது என்பதுடன் மற்ற மக்களுக்கும் அதனால் பல தொல்லைகள் ஏற்பட முடிந்தன. இதனாலேயே சென்ற வருஷம் சத்தியாக் கிரகம் என்னும் பேரால் (பார்ப்பனத்)தொல்லை நிகழ்ந்தது எனினும், மற் றொரு பக்கம் சமதர்ம உண்மைக் கொள்கைகள் முன்னிலும் அதிகமாகத் தலைகாட்ட ஆரம்பித்து விட்டது. இந்த நிலைமையில் அரசாங்கத்தார் வருணாச்சிரம தருமத்திற்கு ஆதரவுகொடுத்தால் சமதர்மக்காரர்கள் தொல் லையும், மற்ற நேச தேச அரசர்கள் இகழ்ச்சியும் ஏற்படுவதாய்க் காணப் படுகிறது. சமதர்மத்திற்கு ஆதரவு கொடுப்பதானாலோ, தங்கள் போக போக் கியங்களை விட்டுவிட வேண்டியதாக ஏற்படும் போல் காணப்படுகின்றது. ஆகவே, இந்தக் கஷ்டத்தில் இருந்து தப்புவதற்குப் பிரிட்டிஷார் பார்ப்பனர் களுடன் கலந்தே ஒரு தந்திரம் செய்யவேண்டியதாய்ப் போய்விட்டது.

அதாவது, தங்கள் (பிரிட்டிஷார்) நிலைமையை பந்தோபஸ்தாய் இருக்கும்படி பார்த்து வருணாச்சிரமக்காரர்கள் நிலைமையும் கெடாமல், ஏதாவது வழிகள் கண்டு பிடித்து, அதை இந்தியர்கள் ஒப்புக்கொள்ளும்படி செய்து, சரிப்படுத்திக் கொண்டு வரவேண்டியது என்கின்ற ஒப்பந்தத்தின் மீது மற்ற விஷயங்களில் எந்தவிதமானாலும் சரி என்கின்ற முறையில் ஒரு புதிய வழி கண்டு பிடித்தார்கள்.

அதாவது இந்தநிலைமையில் இந்தியப் பார்ப்பனரும், பிரிட்டிஷா ரும் சேர்ந்து, இருவர் நிலைமையும் காப்பாற்றக்கூடிய சுதேச சமஸ்தான மன்னர்களையும், சீர்திருத்தத் திட்டத்தில் சேர்த்துக் கொள்வதென்றும், காங்கிரஸ், அதாவது திரு. காந்தி இதற்குச் சம்மதித்தால் எந்தவித அரசியல் கொள்கையை வேண்டுமானாலும் ஒப்புக்கொள்வதென்றும் முடிவுகட்டி, இராஜியின் மூலம் முதலில் திரு காந்தியை இதற்குச் சம்மதிக்கும்படி சரிபடுத்திக் கொண்டார்கள். திரு காந்தியும் வருணாச்சிரமம் காப்பாற்றப்பட வேண்டி ஐக்கிய அரசியல் திட்டத்தையும், அதில் சுதேச மன்னர்கள் கலப்பையும் ஒப்புக்கொண்ட பின்பு தங்களுக்கு இனி எவ்வித ஆபத்தும் இல்லை என்கின்ற நிலைமையில் வெகுபந்தோபஸ்தாக இருக்கின்றார்கள்.

காங்கிரசுக்கும் யார் என்ன சமதர்மம் பேசினாலும், சுதேச அரசர்கள் வருணாச்சிரமத்தை காப்பாற்றுவதோடு சமதர்மத்திற்கும் விரோதமாயிருப் பார்களாதலால் எப்படியானாலும் அவ்விருவருக்கும் பயமில்லை என் கின்ற நிலைமையிலிருக்கின்றது.

இந்தத் தைரியத்தினாலேயே திரு காந்தி வருணாச்சிரமம் பேசுவதும், திரு.ஜவஹர்லால் சமதர்மம் பேசுவதுமாயிருப்பதுடன் திரு. ஜவஹர்லால் பேச்சை கண்டிப்பவர்களுக்குக் காந்தி பேச்சைக் காட்டி மயக்குவதும், திரு.காந்தி பேச்சைக் கண்டிப்பவர்களுக்கு திரு.ஜவஹர்லால் பேச்சைக் காட்டி மயக்குவதுமான வேலையில் ஆட்களைப் பிடித்துப் பிரசாரம் செய்து, காங்கிரசை ஆதரிக்கச் செய்து வரவும் பாடுபடுகின்றார்கள்.

ஆகவே இதிலிருந்து இனிவரப்போகும் சுயராஜியம் வருணாச்சிரம இராஜியமாகவும், சமதர்மத்திற்கு முட்டுக் கட்டையான இராஜிய மாகவும்தான் ஏற்படப் போகின்றது என்பது உறுதி!உறுதி!!உறுதி!!!

நமது சுதேச மன்னர்களை அடியோடு ஒழிக்க வேண்டும் என்று நாம் கருதிக்கொண்டிருக்கும் இக் காலத்தில் - இயற்கையாகவே அவர்கள் அழிந்து, ஒழிந்து போக சகல சௌகரியமும் ஏற்பட்ட இந்தச் சந்தர்ப்பத்தில், காங்கிரசானது அவர்களுக்குச் சிரஞ்சீவிப் பட்டத்தைக் கொடுக்க முனைந்து கொண்டிருக்கின்றது.

ஆகவே பார்ப்பனிய சூட்சி வெற்றி பெறப்போகின்றது. ஏனெனில் நமது சுதேச சமஸ்தான அரசர்கள் என்பவர்கள் பார்ப்பனீயத்தைவிட மோசமானவர்கள். பார்ப்பனீயமோ பிச்சை கேட்பதின் மூலம் பாடுபடுபவர் களின் செல்வத்தைக் கொள்ளை கொள்வதாகும். சமஸ்தானமோ பாடுபடு பவர்களின் செல்வத்தை அடித்து, உதைத்துப் பிடிங்கிக்கொள்வதேயாகும்.

பார்ப்பனர்களுக்கோ நமது நாட்டைப்பற்றிய எவ்விதப்பொறுப்பும் இல்லை. அதுபோலவே சமஸ்தானங்களுக்கும் நாட்டைப்பற்றிய எவ்வித கவலையும் இல்லை.

இந்திய சமஸ்தானங்களில் நடக்கும் அக்கிரமங்கள் போலவும், அவர்கள் செய்யும் அதிக்கிரமங்கள் போலவும் இந்த உலகத்தில் வேறு எங்குமே காணமுடியாது.

உதாரணமாக இரண்டொரு விஷயங்களை மாத்திரம் சொல்லுவோம். இவைகள் தக்க ஆதாரத்தின் மீதே சொல்லப்படுவதாகும்.

அதாவது இந்திய சமஸ்தான அரசர்கள் அரசியல் நடவடிக்கை யையும், ஐரோப்பிய சமஸ்தான அரசர்கள் அரசியல் நடவடிக்கையையும் பற்றிய சில குறிப்புகளை குறிப்பிடுவோம்.

இந்தியாவிலுள்ள அரசர்கள் தங்களுடைய சொந்த செலவுக்கென்று சமஸ்தான மக்கள் வரிப்பணத்திலிருந்து பெறும் தொகையானது அவர்களது சமஸ்தான மொத்தவரும்படியிலிருந்து 1/16,1/8, 3/16, 1/4, 1/3, 1/2 வீதம் பங்கு பாகத்துக்குக் குறைவில்லாமல் பெற்றுக் கொள்ளுகிறார்கள். உதாரணமாக நம்மரசர்களென்று சொல்லப்படும் திருவிதாங்கூர் மகாராஜா தேச வரும்படியில் 17ல் ஒருபாகமும் ( அதாவது மாதம் 1,00,000 ரூபாயும்) மைசூர் மகாராஜா 14ல் ஒரு பாகமும் ( அதாவது மாதம் 2,00,000 ரூபாயும்) ஐதராபாத் நவாபு பதின்மூன்றில் ஒரு பாகமும் ( அதாவது மாதம் 4,00,000 ரூபாயும்) தங்கள் சொந்த செலவுக்காகப் பெற்றுக்கொள்ளுகிறார்கள்.

பரோடா அரசரும் தனது வரும்படியில் 13ல் ஒரு பாகமும், காஷ்மீர், பிகானீர், இந்தூர் முதலிய அரசர்கள் 5ல் ஒரு பாகமும், மற்றும் சில ஆழ்வார் முதலிய அரசர்கள் 3ல் ஒரு பாகமும், சிலர் வரும்படியில் சரிபகுதியுமாக தங்கள் சொந்த செலவுக்கெனப் பெற்று, அனுபவித்துக்கொண்டு வரு கின்றார்கள். ஆனால் ஐரோப்பிய அரசர்களோ, அவர்கள் பெறும் சொந்தச் செலவுப் பணத்தைக் கணக்குப் பார்த்தால், இந்திய அரசர்களைவிட எத்தனையோ மடங்கு குறைந்த அளவாகத்தான் பெற்று வருகிறார்கள்.

உதாரணமாகச் சமீபத்தில் பட்டத்திலிருந்து துரத்தப்பட்ட ஸ்பெயின் தேசத்து அரசர் தனது தேச வரும்படியிலிருந்து 500ல் ஒரு பாகமும், ஜப்பான் அரசர் 400ல் ஒரு பாகமும், டென்மார்க் அரசர் 300ல் ஒரு பாகமும், இட்டாலி அரசர் 500ல் ஒரு பாகமும், நெதர்லேண்ட்ஸ் அரசர் 600ல் ஒரு பாகமும், நார்வே அரசர் 700ல் ஒரு பாகமும், பெல்ஜிய அரசர் 1000ல் ஒரு பாகமும், நமது சக்ரவர்த்தியும் இங்கிலாந்து அரசருமான ஐந்தாவது ஜார்ஜ் அரசர் 1600ல் ஒரு பாகமும்தான் பெற்று வருகிறார்கள். அப்படி யிருந்தும், ஜனங்கள் அரசர்களைப் பட்டத்தைவிட்டு இறக்க வேண்டுமென்று அந்நாடுகள் முயற்சி செய்து கொண்டு வருகின்றன. ஆனால் 2ல் ஒரு பாகமும் 3ல் ஒரு பாகமும், 8ல் ஒரு பாகமும் கொள்ளையடிக்கும் நமது நாட்டு அரசர்களை இன்னமும் பட்டத்தில் வைத்திருப்பதை சகித்துக் கொண்டிருப்பதோடல்லாமல், இந்திய அரசாங்கத்திலும் அவர்களுக்கு ஆதிக்கம் கொடுக்க வேண்டுமென்று நமது “பூரண சுயேச்சைக் கொள்கை கொண்ட காங்கிர”சானது சத்தியாக்கிரகம் செய்து வருவதைப் பார்த்தால் நமது நாட்டு அரசியல் ஞானமும், யோக்கியதையும் நன்றாய் விளங்கும். நிற்க, 10 லட்ச ரூபாய் வரும்படியுள்ள ஒரு அரசர் வருஷம் ஒன்றுக்கு 4,20,010 ரூபாய் வீதம் தனது சொந்த செலவுக்கு எடுத்துக் கொள்வதோடு, இவ்வள வும் போறாமல் 15,00,000 ரூபாய் கடனையும் வைத்துக்கொண்டு முழுச் செலவையும் விபசாரத்திற்கே பயன்படுத்திக் கொண்டிருப்பதோடு, பல தாசிகளையும் இராணிகளாகக் கலியாணம் செய்து கொண்டிருப்பதோ டில்லாமல், ஒரு தாசி இராணியின் சகோதரனும், சொந்தக்காரர்களும் அரசாங்கத்தில் செல்வாக்குள்ள ஆதிக்கக்காரர்களாயிருந்து கொண்டு, அரசாங்கத்தை ஆட்டி வருகின்றார்கள்.

மற்றொரு அரசர் 2,19,000 ரூபாய் வரும்படியுள்ள சமஸ்தானத்தில் 1,36,000 ரூபாய் வீட்டுச் செலவுக்கென கொடுக்கப்பட்டு வருகின்றார். இது தவிர அவருடைய குதிரை லாயத்திற்கென வருஷம் 14,000 ரூபாயும் செலவு செய்யப்பட்டு வருகின்றது. ஆனால் அந்த இராஜியத்தின் சுகாதாரத்திற்காக 5000 ரூபாய்தான் வருஷத்தில் செலவு செய்யப்படுகின்றது.

மற்றும், இந்தூர் சமஸ்தானத்தைப் பற்றி 14.6.27ல் வெளியான “சர்வென்ட்ஸ் ஆப் இந்தியா” என்னும் பத்திரிகையில் காணப்படும் குறிப்பாவது:-

“இந்தூர் சமஸ்தான வாசிகளுக்கு 1926ம் ஆண்டானது மிக முக்கிய மான ஒரு வருடமாகும். ஏனெனில், அந்த ஆண்டில்தான் சிம்மாதனத்தை வகிப்பவர்களில் ஓர் பெரிய மாறுதலேற்பட்டது. துக்கோஜிராவ் அவ்வாண் டின் ஆரம்பத்திலேயே தனது சிம்மாதனத்தைத் துறந்துவிட்டார். அவருக் குப் பதிலாக அவருடைய குமாரர் எஸ்வந்ராவ் என்பவர் மகாராஜாவாக முடி சூட்டப்பட்டார். அவ்வித மாறுதலால் எத்தகைய வித்தியாசங்கள் ஏற்பட்ட போதிலும்கூட, அரண்மனைச் செலவில் மட்டும் சிறிதுகூட வித்தியாசமேற்படவில்லை. 1924-25 வருஷத்தில் அரண்மனை செலவென 21,28,257 ரூபாயாக இருந்ததானது, அடுத்த வருஷத்திலேயே 23,22,924 ரூபாயாக உயர்ந்து விட்டது. அவ்வருஷத்திய வருமானம் 1,28,10,887 ரூபாய் தான் ஆகின்றது. ஆகையினால், அரண்மனை செலவுமட்டும் கணக்கிட்டால் 100க்கு 18 விழுக்காடாக ஏற்படுகின்றது.

அரண்மனை செலவென்று குறிப்பிட்டிருக்கும் இதர கணக்கையும் நாம் இத்துகையுடன் சேர்த்தோமானால், அப்பொழுது அரண்மனையின் மொத்த செலவு இன்னுமதிகமாகவேயிருப்பதைக் காணலாம். ஆனால், அந்த செல வெல்லாம் பல விஷயங்களுடனும் சேர்க்கப்பட்டு விட்டதால், இதுமட்டும் தனியாக காட்டப்பட்டிருப்பதே இத்துகையாகின்றது. அத்தகைய அரண்மனை செலவு என்னும் தலைப்பின் கீழ் “லால்பாக் அரண்மனை வேலை” என்பதற்குச் செலவான துகையையும் நாம் சேர்த்துக் கொள்ள வேண்டியது மிக்க அவசியமாகும். இதனுடைய செலவுமட்டும் சுமார் ஆறு லட்சமாகின்றது, ஆனால் ஆச்சரிய கரமாகவே ‘மகாராஜாவின் வாசஸ்தான ரிப்பேர் செல’வென்பதாக குறிப் பிட்டு, இச்செலவையும் மராமத்து இலாகாவின் செலவோடு சேர்க்கப் பட்டிருக்கின்றது. உண்மையில் அரண்மனை ரிப்பேர் செலவு அவ் வருஷம் ஏறக்குறைய 6000 ரூ. தானாகின்றது. இம்மாதிரியாகவே தான் வேட்டையாடுவதினிமித்த மேற்பட்ட செலவு சுமார் 12,000 ரூபாயும் “பாரஸ்ட்ஸ்” என்னும் தலைப்பின் கீழ் காட்டப்பட்டிருக்கின்றது. இவ்வித மாக செலவிடப்படும் பணங்களை எல்லாம் நாம் மொத்தமாகச் சேர்த்து கணக்கிட்டுப் பார்த்தோமேயானால், அப்பொழுது அவை சமஸ்தான மொத்த வரும்படியில் நூற்றுக்கு 18-பங்கு அல்லவென்றும். ஆனால், நூற்றுக்கு 22 பங்கு வீதமெனவும் ஏற்படும். இம்மாதிரியாக “அரண்மனை செலவு ” என்னும் தலைப்பின்கீழ் அபரிமித மான பணம் செலவிடப்படுவதால்தான், அச்சமஸ்தானத்திலுள்ள, மக்கள் விருத்தியடைவதற்குரிய கல்வி நிலையங்களும், சுகாதார நிலைமையும் கவனிக்கப்படாமலிருக்கின்றன.

மற்றொன்று

“பிரிட்டிஷாரின் பாதுகாப்பில், இந்திய அரசர்கள் ”அதாவது “ஐனேயைn ஞசinஉநள ருனேநச க்ஷசவைiளா ஞசடிவநஉவiடிn ” என்னும் புஸ்தகம், பக்கம் 147ல் திரு.சட்கர் என்பவர் கீழே காணுவது போலுரைத்திருக்கின்றார்.

“தனது அரசாங்கத்தின் வரும்படியில் 100க்கு பத்துவீதம் தான் தன்னு டைய சொந்த செலவுக்கென எடுத்துக்கொள்ளுவதாகக் கூப்பாடு போட்டு வரும் பிகானீர் மகாராஜா அவர்கள், தான் வாசம் செய்யும் அரண் மனையைப் பழுதுபார்ப்பதாலேற்படும் செலவையும் “சிவில் ஒர்க்ஸ்” என்னும் தலைப்பின்கீழ், அரசாங்க செலவோடு சேர்த்து விடுகின்றார். 1926-27வது வருடத்திய பிகானீர் அரசாங்க அறிக்கையில் “பழுது பார்க்க வேண்டிய” தென்னும் தலைப்பின்கீழ் 47 இனங்கள் குறிக்கப்பட்டிருக் கின்றன. அவைகளுக்கென்று 40,000 பவுனும் செலவிடப்பட்டிருக்கின்றது. ஆனால் அவ்வறிக்கையில் காணப்படும் 47 இனங்களிலும், 4 இனங்கள் மட்டுமே தான் அரசாங்கப்பொதுக் கட்டடங்களாகும். அவைகளைப் பழுதுபார்ப்பதற்காக ஏற்பட்ட செலவோ மொத்த துகையில் 100க்கு 5 வீதம்தான் எனவு மேற்படு கின்றது”.

மற்றுமோர் சான்று

1925-26வது வருடத்திய ஜாம்நகர் சமஸ்தானத்தின் அறிக்கையை கவனித்தோமே யானாலும் இம்மாதிரியேதான் “சிவில் லிஸ்டு” என்னும் தலைப்பின் கீழ் செலவான மொத்தத் துகை 40000 பவுன் அல்லது 4,80,000 ரூபாய் என, அதாவது கட்டடங்களைப் பழுதுபார்த்ததனாலேற்பட்ட செலவென்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. “அரண்மனை செலவு” என்னும் தலைப்பின்கீழ் அரசரின் சொந்த செலவுக்கென மட்டும் 1,25,000 பவுன் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இவ்விரண்டின் மொத்தத்தொகையும் 1,65,000 பவுன்களாகின்றது. அதாவது சமஸ்தானத்தின் மொத்தவரும்படியில் 100 க்கு 20 வீதமாகின்றது. இத்துடனின்றி “அரண்மனைச் செலவு” என்னும் தலைப்பின் கீழ் காணப்படுபவைகளைத் தவிர்த்து மீண்டும் தனியாக மோட்டார் செலவெனவும், அரண்மனைச் செலவு மென்பதாகவும் குறிப்பிட்ட வகைகளில் செலவானது 2,00,000 பவுனாகும். இதையும் அரசருடைய சொந்த செலவில் சேர்ப்போமேயானால் அப்பொழுது அவருடைய செலவுமட்டும் மொத்தம் பிரதி வருடமும் 3,75,000 பவுன் என அதாவது சமஸ்தான வருமானத்தில் சரிபாகம் தனது சொந்த செலவுக்காக அரசர் செலவிடுகின்றாரெனவும் ஏற்படுகின்றது. 1926-27 வருடத்திய அறிக்கையை நாம் பார்ப்போமேயானால், அப்பொழுது நாமின்னும் இதைவிடப் பன்மடங்கு பிரமிப்படைய வேண்டி வரும். அரசருடைய சொந்த செலவைக் குறிப்பிடப்பட்டிருக்கும் 6,00,000 பவுனிலும் 2,00,000 பவுன் எதிர்பாராத செலவு என்பதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப் பட்டிருக்கின்றது”.

மற்றுமோர் அரசாங்கத்தில், (பெயரைப்பற்றி நாம் அதிகக்கவலைப் பட வேண்டியதில்லை. சில வருடங்களுக்கு முன்பதாகத் தான் முதன் முதலாக வரவும் - செலவும் கணக்கிடப்பட்டது.

அந்த சமஸ்தானத்தின் அதிபர் தனது சொந்த செலவைக் குறைப்ப தானது தன்னுடைய கௌரதையைக் குறைத்துக்கொண்டதாக வேற்படும் என நினைத்துக் கொண்டிருந்ததால் அவருடைய சமஸ்தானத்தின் வரவு - செலவின் விபரமே ஒருவருக்கும் புலப்படாமலிருந்தது. பிறகு, அவரைப் போலுள்ள சகோதர அரசர்களால் தூண்டப்பட்டு, இப்பொழுதுதான் முதலா வதாக அவருடைய வரவு-செலவு கணக்கெடுக்கப்பட்டது. கடைசியில் மொத்தம் பார்த்தபொழுது, அந்த அரசாங்கத்தின் மொத்த வருமானம் ஒரு கோடி ரூபாயிக்கும் சற்று அதிகமெனவே ஏற்பட்டது. இந்த அறிக்கை யானது தான் யாவரும் பின்பற்றக்கூடிய தெனவும் கூறப்பட்டு வந்தது. அவ்வறிக்கையை சுருக்கிக் கூற வேண்டுமானால், கீழே காணுவது போலதான் உரைக்க வேண்டும்.

அதாவது:-

அரசாங்கத்தின் மொத்த வருமானம் 125 லட்சம் இந்த 125 இலட் சத்தில் 50 இலட்சம் “சம்பளம்” என்னும் தலைப்பின் கீழ் செலவிடப் படுவதற்கு ஒதுக்கி வைக்கப்பட்டு விட்டது. இத்தலைப்பின்கீழ் அரசாங்கத் திலுள்ள பட்டாளத்திற்குச் செலவாகும் 20 லட்சமும் சேர்ந்ததேயாகும். அவ்வப்போதேற்படும் செலவினிமித்தமென 15 லட்சம் தனியாக எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த 15 லட்சத்திலும் 10 இலட்ச ரூபாய் தனியாக அரண் மனை (அரசருடைய) செலவுக்கென ஒதுக்கி வைக்கப்பட்டது. படிச்செல வென்பதாகவும், வேலையிலிருந்து நீங்கியவர்களுக்கு உபகாரச் சம்பள மென்பதாகவும் 5 லட்ச ரூபாய் ஒதுக்கி வைக்கப்பட்டது. இவைகள் போக மீதி யிருக்கக்கூடிய 55 லட்ச ரூபாயும் அரசருடைய சொந்த செலவுக்கென ஒதுக்கப்பட்டு விட்டது. ஆகையினால், அவ்வப்போதேற்படும் செலவு, படிச்செலவு, உபகாரச்சம்பள செலவு என்பதாக அரசாங்கத்திற்கு மொத்தம் 40 லட்சமே செலவிடப்படுகின்றது. இந்த 40 லட்சத்திலும் கல்விக்காக செலவிடப்படும் 2 லட்சமும் சேர்க்கப்பட்டிருக்கின்றது. ஆனால், அவ்வப் போதேற்படும் செலவுக்கு என ஒதுக்கி வைக்கப்பட்ட 15 லட்சத்தில் அரண் மனை (அரசருடைய) செலவுக்கு என ஒதுக்கி வைத்திருக்கும் 10 லட்சமும், வருமானத்தில் செலவு போக மீதியேற்படும் 55 லட்சமும், ஆக 65 லட்ச ரூபாய் அரசரின் செலவுக்கென ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. பொருளா தாரத் துறையைக் கவனித்துக்கொண்டு வரும் மாணாக்கர்களுக்கு 125 லட்ச ரூபாய் வரும்படியுள்ள ஒரு சமஸ்தானத்தில், 65 லட்ச ரூபாய் சமஸ்தான அதிபதியின் சொந்த செலவுக்கெனவும், 40 லட்சம் அரசாங்க சிவில் நிர்வாகத்திற் கெனவும், 20 லட்சம் ரூபாய் அரசாங்க மில்டேரி நிர்வாகத்தின் செலவுக் கெனவும் ஒதுக்கி வைக்கப்பட்டிருப்பதானது ஒரு சமயம் ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், இந்த சமஸ்தானத்தில் கல்விக்கென இரண்டு லட்ச ரூ.மட்டும் செலவிடப்படுவதானது இதைவிட இன்னும் பன் மடங்கு ஆச்சரியத்தை விளைவிக்கும்”.

இவர்களது தர்பார் செலவு விஷயங்கள் இவ்விதமிருப்பதொரு புறமிருக்க, இவர்கள் அரசநீதி, அரசாட்சி செய்யும் அரசியல் நீதி எப்படி யிருக்கின்றதென பார்த்தோமானால், ஒன்னே முக்கால் கோடி ரூபாய் வரும் படியுள்ள ஒரு இராஜபுதன அரசாங்கத்தில் 3,25,000 ரூபாய் மோட்டாருக்காக செலவு செய்யப்பட்டு வருகிறது. ஆனால் கல்விக்கோ 2,75,000 ரூபாய் மாத்திரமே செலவு செய்யப்பட்டு வருகின்றது.

தவிர தலையொன்றுக்கு 15 ரூ. வீதம் வரிவசூல் செய்யும் பிகானீர் அரசாங்கம் கல்விக்குத் தலையொன்றுக்கு 5 அணா வீதமே செலவு செய்கின்றது. தலையொன்றுக்கு 20 ரூபாய் வீதம் வரிவசூல் செய்யும் நவநகர் அரசாங்கம் தலையொன்றுக்கு 6 அணா வீதமே கல்விக்காக செலவு செய்கின்றது. தலையொன்றுக்கு 10 ரூபாய் வீதம் வரிவசூல் செய்யும் ஆள் வார் அரசாங்கம் தலையொன்றுக்கு 3 அணா வீதமே கல்விக்காக செலவு செய்கின்றது. சுகாதாரத்திற்கோ தலையொன்றுக்கு 1 அணா வீதமே செலவு செய்கின்றது.

ஆனால், இந்தியாவில் தலையொன்றுக்கு 6-4-0 ரூபாய் வீதம் வரிவசூல் செய்யும் இந்திய அரசாங்கம் கல்விக்காகத் தலையொன்றுக்கு 9 அணா வீதம் செலவு செய்கின்றது.

இவை “பிரின்சுலி இந்தியா” என்னும் பத்திரிகையில் காணப்படும் விபரங்களாகும். இந்திய அரசர்களின் நிர்வாகம் இந்தப்படி பல இருந்தாலும் இவர்களுடைய ஒழுக்கங்களைப் பற்றி யோசிப்போமானால் ஒரு அரசர் தன்னுடைய அதிகாரியொருவருக்கு எழுதிய கடிதத்தைப் பார்த்தாலே விளங்கும். அதாவது:-

“ பிரியமுள்ள .................. க்கு உம்முடைய லீவ் ( ரஜா ) விண்ணப்பம் கிடைத்தது. ரஜா அனுமதிக்கப்பட்டது. உன்னுடைய கடிதத்தில் காணப்படும் உறுப்படிகளுடன் நீர் சீக்கிரம் திறும்பி வரவேண்டும். அவைகள் மிக்க அழகாயிருக்கவேண்டும். அவைகளென்மனதிற்குத் திருப்தியை அளிக்குமானால் அப்பொழுதுதான் உம்மை இராஜபக்தியுள்ள ஓர் சிப்பந்தியாகக் கருதுவேன்.

உம்முடைய அன்பான

ராஜா சாகிப்”

என்று ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.

இந்த ரஜா விண்ணப்பம் எழுதிய சிப்பந்தி அந்த சமஸ்தானத்தில் ஒரு பெரிய அதிகாரியேயாகும், இந்தப்படிக்கு எத்தனையோ அரசர் களுடைய நடவடிக்கைகள் நமக்கு வெளிப்படையாகவும், வெளிப்படை யான இரகசியமாகவும் தெரிந்தே வருகின்றது என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது.

ஆகவே, இப்படிப்பட்ட அரசர்களைக் கொண்டுவந்து நம்முடைய இந்திய அரசாங்கத்தில் ஒன்றாகச்சேர்த்து விட்டால் இந்தியாவில் எந்தவித மான சீர்திருத்தத்தை எதிர்பார்க்க முடியும்? என்பதை காங்கிரஸ் பக்தர்கள் தான் யோசிக்கவேண்டும்.

இவர்களோடு நமது நாட்டுப் பார்ப்பனர்களும், ஜமீன்தாரர்களும், மற்றும் நமது நாட்டு பெரும் மிராசுதாரர்களும், மைனர்களும், வக்கீல்களும், முதலாளிகளும் கலந்து கொண்டால் நாட்டில் எப்படி சமதர்மமும், பொருளாதார சமத்துவமும் ஏற்படுத்த முடியுமென்பதை சுயராஜ்யக் காரர்கள் தான் விளக்கவேண்டும்.

ஒரு சமயம் “சுயராஜ்யம் வந்து விட்டால் சுதேச அரசர்களையும் கூட சேர்த்து, திருத்தப்பாடு செய்யலாமென்று சிலர் சொல்லக்கூடும். இது வார்த்தைக்கு அலங்காரமானதும், மூடர்களுடைய செவிக்கு இன்பமானதாக வுமிருக்கலாம். எல்லா மனிதர்களுக்குமே ஓட்டுரிமை இருப்பதாயிருந் தாலும், இந்த அரசர்கள் தேர்தலில் தங்களுடைய ஆட்களை நிறுத்தி, 10 லட்சக்கணக்கான பணங்களை செலவு செய்ய முன்வந்து, அவர்களுக்கு உதவியாக நமது நாட்டு ஜமீன்தாரர்களையும், மிராசுதாரர்களையும், பார்ப்பனர்களையும், முதலாளிகளையும் சேர்த்துக் கொண்டு, இப்போதைப் போலவே கூலி தேச பக்தர்களைக்கொண்டு, பிரசாரம் செய்யச்செய்தால் எப்படிப்பட்ட பிரதிநிதிகள் வரக்கூடுமென்பதைப் பற்றியும், எப்படிப்பட்ட நிர்வாகம் நடைபெறுமென்பதைப்பற்றியும் நாம் நமது வாசகர்களுக் கெடுத்துக் கூற வேண்டுமா? என்று கேட்கின்றோம்.

உலகம் இயற்கையாகப் போகும் போக்கானது இப்பொழுது எவ்வளவோ முன்னேற்றத்தையும் விடுதலையுணர்ச்சியையும், கண்விழிப்பையும் மக்களுக்குத் தானாக அளித்துக்கொண்டு வருமிந்த சமயத்திலிம் மாதிரி புதிய ஆபத்தொன்று முளைத்து, மக்களை இன்னும் அடிமைப் படுத்தத்தக்க நிலைமை யேற்பட்டிருப்பதானது, அதுவும் “பூரண விடுதலை” யின் பேராலும் “சுயராஜ்யத்தின்” பேராலும் யேற்பட்டிருப்பது மிகவும் துக்கப்படத்தக்க விஷயமேயாகும் என்று வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

(குடி அரசு - தலையங்கம் - 12.07.1931)

Pin It