‘இளந்தமிழகம் இயக்கம்’ பெரியார் பிறந்த நாளையொட்டி ‘பெரியாரும் தமிழ் தேசியமும்’ எனும் தலைப்பில் நடத்திய கருத்தரங்கில் நிகழ்த்திய உரை.

“பெரியாரும் தமிழ்த் தேசியமும்” என்ற பெயரில் இந்த கருத்தரங்கத்தை ஒருங்கிணைத்திருக்கும் இளந்தமிழகம் இயக்கத் தோழர்களுக்கும், இந்த நிகழ்ச்சிக்கு வருகை புரிந்திருக்கும் அனைத்து தோழர்களுக்கும் எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். “பெரியாரும் தமிழ்த் தேசியமும்” என்ற தலைப்பில் சில செய்திகளை உங்களுடன் சுருக்கமாக பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

பெரியார், தமிழ்த் தேசியம் அல்லது தேசியம் என்ற கோட்பாட்டை உள்வாங்கிக் கொண்டு அதனடிப்படையில் அல்லது அதற்கு பொருத்தமாக ஒரு தேசியத்தை முன் வைத்தாரா என்றால் இல்லை. அவர் எடுத்துக் கொண்ட ஜாதி ஒழிப்புக் கொள்கையின் நீட்சியாகத்தான் தனித் தமிழ்நாட்டு கருத்தை முன்வைத்தார். என்றாலும்கூட தேசியம் என்ற சொல்லாடலில் உள்ள அனைத்து கூறுகளும் அதில் உள்ளடங்கி இருந்தன.

பெரியார் தனது கொள்கைகளை, கோட்பாடு களாக வரையறுக்கவில்லை. அவர் அறிஞர்களை நோக்கி எழுதியவர் அல்ல; அறியாத பாமரர்களிடம் போய் பேசியவர். தான் அவர்கள் முன்னால் வைக்க விரும்பிய கருத்துக்களை, காண விரும்பிய மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக அவர்களிடம் போய் அவர்கள் நடையில் அவர்கள் மொழியில் அவர்கள் அளவுக்கு இறங்கி பேசியவர்தான் பெரியார். அப்படிப்பட்ட கருத்து பதிவுகளைத் தொகுத்துத் தான் அவற்றை கோட்பாடுகளாக்க முயலுகிறோம்.

இது பெரியாரின் கொள்கை என்று ஒரு செய்தியை அறுதியிட்டு புரிந்து கொள்ள நாம் அவருடைய அனைத்து கருத்துக்களையும் படிக்க வேண்டியவர் களாக இருக்கிறோம். ஒன்றிரண்டு கருத்துக்களைப் படித்துவிட்டு இதுதான் பெரியார் கொள்கை என்று கூறுவது பொருத்தமாக இருக்காது என்பது என் கருத்து. ஆனால், இப்போது பெரியாரைப்பற்றி வைக்கப்படும் விவாதங்கள், விமர்சனங்கள் எல்லாம் எங்கோ யாரோ கூறியதை வைத்தும் ஏதோ ஏடுகளில் படித்ததை எடுத்துக் கொண்டும்தான் வைக்கிறார்கள்.

அந்த வாதத்திற்கு எப்படிப்பட்ட பதிலை நாம் தந்தாலும்கூட பெரியாரைக் கொச்சைப்படுத்த விரும்புபவர்கள் அதைப் புரிந்து கொள்ள முயற்சியைக்கூட எடுக்க விரும்புவதில்லை என்பது தான் நம் வருத்தம். ‘திராவிடர் கழகம்’ என்ற பெயரைப்பற்றிகூட அருகோ அவர்கள் எழுதி யிருந்தார்கள். “காலையில் தமிழர் கழகம் என்றுதான் பெயர் வைப்பதாக இருந்தது. மாலைக் குள் பெரியாருக்கு ஞானோதயம் வந்து தன்னை ஒதுக்கிவிடுவார்கள் என்று திராவிடர் கழகம் என்று மாற்றிவிட்டார்” என்று கூறியிருக்கிறார்.

‘திராவிடர் கழகம்’ என்ற பெயரை - ஒன்றரை ஆண்டுகள் கட்சியில் விவாதித்து, ஏறத்தாழ எல்லா மாவட்ட அமைப்புகளின் கருத்துகளை, இயற்றி யுள்ள தீர்மானங்களைக் கருத்தில் கொண்டு, தென்னிந்திய நல உரிமை சங்கத்தின் தலைமைப் பொதுக் குழு 1943ஆம் ஆண்டு (26.11.1943) சேலத்தில் கூடி அடுத்த ஆண்டு சேலத்தில் நடைபெற உள்ள மாநில மாநாட்டில் சங்கத்தின் பெயரை தமிழில் ‘திராவிடர் கழகம்’ என்றும் ஆங்கிலத்தில் ‘South Indian Dravidian Federation’ என்றும் மாற்ற வேண்டும் என்று தீர்மானித்தார்கள். அதைத்தான் அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதம் (27.8.1944) செய்தார்கள். காலையில் முடிவு செய்து மாலையில் பெயர் மாற்றம் செய்யப்படவில்லை. இதை நாம் பலமுறை பேசியிருக்கிறோம்; பலர் பலமுறை எழுதியிருக்கின்றனர். சத்தியமூர்த்தி அய்யர் பெரியாருக்கு தொலைபேசியில் பேசியதாக அருகோ குறிப்பிட்டிருக்கிறார்.

1943ஆம் ஆண்டே மறைந்து விட்ட சத்தியமூர்த்தி 1944ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொலைபேசியில் பேசியிருக்க வாய்ப்பில்லை. இப்படியெல்லாம்தான் பெரியார் மீது விமர்சனம் வைக்கின்றனர். பெரியார் பேசிய திராவிடம் அல்லது திராவிடர் யாரைக் குறிக்கிறது?

பெரியாரின் பொது வாழ்வு தொடங்கிய காலந் தொட்டே சாதி ஒழிப்பே அவரது முதன்மையான பணியாக இருந்தது. மறைமலையடிகள் தலித் மக்களைப் பற்றி வைத்த விமர்சனங்களுக்கு 1925ஆம் ஆண்டு காரைக்குடி காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமை தாங்கி பேசிய பெரியார் பதில் கூறுகிறார்.

நீங்கள் குளத்து நீரை குடிக்கவே அவர்களை அனுமதிக்காதபோது அவர்கள் குளிக்கவில்லை; உடை தூய்மையாக இல்லை என்று குறை கூற என்ன யோக்கியதை இருக்கிறது என்று பொது சமூகத்தைப் பார்த்துக் கேட்கிறார்.

மலத்தையும், குப்பையையும், சளியையும், அழுகிய வற்றையும் தின்று வளர்ந்த கோழியை தின்பவன் உயர்ந்தவன், நல்ல புல்லையும், புண்ணாக்கையும் தின்று வளர்ந்த மாட்டைத் தின்பவன் தாழ்ந்தவன் ஆகிவிட்டானா? என்று வினவுகிறார்.

“கள் குடிப்பது குற்றம், குடிப்பவன் தாழ்ந்த சாதியானால் மரத்தை வளர்த்து அதனால் வருமானம் பார்ப்பவனும், கள் இறக்கி வியாபாரம் செய்பவனும், கள் குடிப்பவனும் யார்” என்று கேட்கிறார்.

1925ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கம் தொடங்கிய பின்பு சாதியம் என்பது தனியாக இல்லை, பெண்ணடிமை என்பதோடு பிணைக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிகிறார். இரண்டையும் சேர்த்து ஒழித்தாலொழிய சாதி ஒழியாது என்று கருதினார். புரட்சியாளர் அம்பேத்கரும் அதைத் தான் சொல்கிறார். காலப்போக்கில் பெரியார் சாதி ஒழிந்த, பெண்ணடிமைத்தனம் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க வேண்டுமென்றால் சாதியத்திற்கும் பெண்ணடிமைத்தனத்திற்கும் அடிப்படையான இந்துமதத்தின் அரசியல் வடிவமான இந்தியாவில் இருந்துகொண்டு இதை செய்ய முடியாது என்பதை உணர்ந்தார்.

ஆக சாதி ஒழிப்பின் நீட்சியாகத்தான் இந்தியாவை விட்டு வெளியே வரவேண்டுமென்று கருதினார். அதுதான் அவரது நோக்கமாக இருந்திருக்கிறது. இப்போது “தமிழ்நாடு தமிழர்க்கே” என்ற முழக்கத்தை யார் முதலில் வைத்தது பெரியாரா அல்லது தமிழறிஞர்களா என்று விவாதம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு மாநாட்டில் தமிழ் அறிஞர் ஒருவர்தான் முன்மொழிந்தார் என்று இப்போது கூறுகிறார்கள். மாநாடுகளில் எந்த தீர்மானத்தை முன்மொழிய போகிறார்கள் என்று மாநாடு நடத்துபவர்களுக்குத்தான் தெரியும். தீர்மானத்தை வாசிப்பவரா முன்மொழிபவர்?

பெரியார் தனியாக செயல்படவில்லை; அப்போது இருந்துவந்த சென்னை மாகாணத்தில் இருந்துதான் பொது வாழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். சென்னை மாகாணம் என்பது தமிழர்கள் மட்டும் வாழும் பகுதியாக இருக்கவில்லை. தெலுங்கு, கன்னடம், மலையாள மொழி பகுதியாக இருக்கவில்லை.

தெலுங்கு, கன்னடம், மலையாள மொழி பேசும் மக்கள் வாழ்ந்த சில மாவட்டங்களையும் சேர்த்ததுதான் சென்னை மாகாணம். அப்போது அவருடன் இணைந்து செயல்பட்டவர்கள் தமிழ்நாடு தமிழர்க்கே என்றால் எங்கள் கதி என்னவென்று கேட்கிறார்கள்.

எனவே 1938ஆம் ஆண்டு “தமிழ்நாடு தமிழர்க்கே” என்றவர் 1939ஆம் ஆண்டு “திராவிடர் நாடு திராவிடர்க்கே” என்று முழக்கத்தை மாற்றுகிறார். அதற்கு விளக்கமும் அளிக்கிறார்.

1940ஆம் ஆண்டு திருவாரூரில் நடைபெற்ற கட்சியின் மாநாட்டில் “நான் கூறும் திராவிட நாடு என்பது சென்னை மாகாணம்தான்” என்று தீர்மானமிடுகிறார்.

மீண்டும் அந்த முழக்கம் எப்போது மாறுகிறது என்றால் மொழிவாரி மாநிலங்களாக 1956 ஆம் ஆண்டு கேரள, கர்நாடக, ஆந்திர மாநிலங்கள் தமிழ்நாட்டில் இருந்து பிரிக்கப்பட்ட பின். இன்னும் எதற்கு திராவிட நாடு என்ற முழக்கம் “தமிழ்நாடு தமிழருக்கே” என்றார். காரணம் அவர் பணியாற்றும் அரசியல் களத்தின் வடிவம் மாறியிருந்தது.

ஆக 1956லேயே ‘திராவிட நாடு திராவிடர்க்கே’ என்ற முழக்கம் முடிந்துவிட்டது. அதற்குப் பிறகு அதை சொல்லி கொண்டிருந்தவர்கள் ‘திராவிட முன்னேற்றக் கழகம்’ என்று கட்சி ஆரம்பித்தவர்கள் தான். பிறகு 1963ஆம் ஆண்டு ஒரு தடை சட்டம் வந்தபின் அவர்களும் அதைக் கைவிட்டுவிட்டார்கள். அதை நாம் இப்போது விமர்சிக்க வேண்டியதில்லை. ஐம்பது ஆண்டுகள் கடந்துவிட்டன.

1963 முதல்,  அன்றிலிருந்து இன்று வரை திராவிட நாடு பற்றி பேசுபவர்கள் யாருமில்லை. ஆனால், இன்றைக்கும் அந்த திராவிட என்ற சொல்தான் சிக்கலாக இருப்பதாக கூறுகின்றனர். நாட்டு மருந்து கடைகளில் மருந்து வாங்கும்போது மருந்து தின்றுவிட்டு புளி மட்டும் உண்ண வேண்டாம், உண்டால் மருந்து வேலை செய்யாது என்பார்கள். அதுபோல தமிழ்நாடு விடுதலைக்குத் தடையாக இருப்பது இந்த “திராவிட” என்ற சொல்தான் என்கிறார்கள்.

பெரியாரை விட்டுத் தள்ளுங்கள், சிறு எண்ணிக்கையாக இருக்கிற பெரியாரிய இயக்கத்தவரை விட்டுத் தள்ளுங்கள்; மற்றவர்களால் ஏன் தமிழ்நாட்டு விடுதலயை வென்றெடுக்க முடியவில்லை? ஆடத் தெரியாதவள் கூடம் கோணல் என்றதைப்போல எதையோ பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறார்களே தவிர, நாம் இந்த முன்னெடுப்புக்கு என்ன செய்ய வேண்டும் என்ற முயற்சி அற்றவர்களாக இருக்கின்றனர் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

பிறகு ஏன் பெரியார் ‘திராவிடர்’ என்ற சொல்லை பயன்படுத்திக் கொண்டிருந்தார் என்கிறார்கள். பெரியார் அரசியல் விடுதலைக்கு ‘தமிழ்நாடு தமிழர்க்கே’ என்ற முழக்கத்தை வைத்திருந்தார். அதேபோல சமூக விடுதலை என்று வருகிறபோது ‘திராவிடர்-ஆரியர்’ என்ற எதிர்வுகளை வைத்து ஆரியர்களுக்கெதிரான பண்பாட்டுப் போரை ஒருபுறம் நடத்திக் கொண்டிருந்தார்.

‘தமிழர்’ என்ற அடையாளத்தோடு நம் நாட்டு அரசியல் விடுதலையை வென்றெடுக்க இந்தியாவிடமும், ‘திராவிடர்’ என்ற அடையாளத்தோடு நமக்கெதிரான சாதி தத்துவங்களைப் படைத்து நிலைநிறுத்திக் கொண்டிருக்கும் ஆரியத்திற்கு எதிராகவும் போராடினார் என்று புரிந்து கொள்ளலாம்.

பெரியார் மீது இன்னொரு குற்றச்சாட்டு உண்டு. ஆரியர், திராவிடர் என்று தனித்தனியாக யாரும் கிடையாது. பெரியார் அறியாமையால் பேசுகிறார் என்கின்றனர். அதற்கும் அவரே விளக்கத்தைக் கூறிவிட்டு சென்றிருக்கிறார். “ஆரியர், திராவிடர் என்பது கலந்து போய்விட்டது.

பிரிக்க முடியாது, இரத்தப் பரிசோதனையிலும் கண்டுபிடிக்க முடியாது என்று சிலர் வாதாடலாம். அது நமது கருத்தை அறியாமல் பேசும் அறிவற்ற பேச்சே என்று சொல்லு வேன். ஆரிய திராவிட இரத்தம் கலந்திருக்கலாமே தவிர ஆரிய திராவிட அனுஷ்டானங்கள் கலந்து விட்டனவா? சட்டைக்காரர் என்றொரு கூட்டம் இருக்கிறது.

அது வெள்ளை ஆரிய-கருப்பு திராவிட இரத்தக் கலப்பு என்பதில் யாருக்கும் ஆட்சேபணை இருக்க முடியாது என்றாலும் நமக்கும் அவர்களுக்கும் எதில் கலப்படம் இருக்கிறது?” என்று கேட்கிறார். ஆங்கிலேயர்களுக்கும் தமிழ்நாட்டில் இருந்த பெண் களுக்கும் பிறந்தவர்கள்தான் ஆங்கிலோ இந்தியர்கள். அவர்கள் தமிழர்கள் என்று உணர்ந்து கொள்கிறார் களா? அப்படித்தான் ஆரியர்கள் என்று சொல்கிறார்.

“இந்த நாட்டில் உள்ள பார்ப்பனர் ஆரியரும் திராவிடரும் கலந்த சமுதாயமாகும். ஆனால் கொள்கையில் நடப்பில் ஆரியர்களே ஆவார்கள்” இதுதான் பார்ப்பனர்களைப் பற்றிய பெரியாரின் கருத்து. நாம் இரத்தப் பரிசோதனை செய்து ஆரியர் திராவிடர் என்று பிரிப்பதில்லை. அது அவர்களுடைய பழக்க வழக்கங்களை நடப்புகளை கொண்டிருக்கின்ற கொள்கைகளைப் பார்த்து பிரித்துப் பார்க்கிறோம். அதில் ஏறத்தாழ பார்ப்பனராய் பிறந்த அனைவரும் அதே கருத்தோடுதான் இருக்கிறார்கள்.

தமிழை நாம் தாய்மொழி, உயர்ந்த மொழி என்றால் அவனுக்கு சமஸ்கிருதம் தான் தாய்மொழி, உயர்ந்த மொழி என்று மனதுக்குள் கருதிக் கொள்வான். ஆக இவற்றை வைத்து பெரியார் ஆரியர், திராவிடர் என்று பிரித்தாரே தவிர பிறப்பின் அடிப்படையில் அல்ல.

இப்போதெல்லாம் நிறைய இரத்தப் பரிசோதனை அறிக்கைகளை படிக்க நேரிடுகிறது. சமீபத்தில் சுப.வீரபாண்டியனை வேற்று மொழியாளர் என்று எழுதியிருந்தார்கள். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. சாதிப்படி பார்த்தாலும் அவர் தமிழர்தானே அவரை எப்படி வேற்றுமொழிக்காரர் என்கிறார்கள் என்று. தோழர் குணா அவர்களின் நண்பர் ஒருவரிடம் கேட்டபோது, அவரிடம் கேட்டுவிட்டு சொன்னார்; காவிரிப்பட்டினம் கடல் கொண்டபோது அங்கிருந்த நகரத்தார்கள் மேட்டுப் பகுதியை நோக்கி இடம் பெயர்ந்தனராம். அங்கு அவர்களிடம் வீட்டு வேலைக்கு வந்த நரிக்குறவப் பெண்களுக்கும் குழந்தைகள் பிறந்தனவாம்.

ஒரு சில நூற்றாண்டுகள் கழித்து அவர்களது சாதிப் பஞ்சாயத்து கூடி இனிமேல் அந்த குழந்தைகளையும் நம் சாதியோடு சேர்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தனராம். சுப.வீரபாண்டியனுடைய முக அமைப்பை பார்த்தால் நரிக்குறவ  சாயல் தெரிகிறதாம். அதனால் அவர் பிற மொழியாளர் என்கின்றனராம். தமிழின மீட்சியு னுடைய இரண்டாம் பதிப்பில் இதை எழுதியிருக் கிறார்கள். இவற்றிற்கெல்லாம் நம்மால் பதில் கூற இயலாது.

(தொடரும்)

‘பெரியாரும் தமிழ்த்  தேசியமும்’ நூலிலிருந்து

Pin It