periyar karunanidhi veeramani“சுயமரியாதை இயக்கமானது எவ்வித சத்தியாக்கிரகமும் செய்ய வில்லை” என்பது இன்றைய தினம் அதன் மீது துவேசமும், பொறாமையும் கொண்டவர்களால் சொல்லப்படும் ஒரு பெரிய குற்றமாகும்.

மற்றபடி அதன் கொள்கைகளைப் பற்றி யாரும் இதுவரை எவ்விதக் குற்றமும் சொல்லவில்லை. அன்றியும் இந்த மேற்கண்ட குற்றத்தை மனதில் வைத்துக்கொண்டுதான் “சுயமரியாதை இயக்கம் இதுவரை என்ன சாதித்துவிட்டது?” என்பதாகவும் சிலர் நம்மைக் கேட்கின்றார்கள்.

சுயமரியாதை இயக்கம் “சத்தியாக்கிரகம்” என்பதாக ஒரு கிளர்ச்சியை ஆரம்பித்து, சில வாலிபர்களைச் சேர்த்து அவர்களுக்கு சாப் பாடும் விளம்பரமும் கொடுத்து, ஏதோ இரண்டொரு கோவில்களின் முன்போ, அல்லது குளங்களின் முன்போ கொண்டுபோய் நிறுத்தி, அவ் வாலிபர்களுக்கு கொஞ்சம் அடியும் உதையும் வசவும் வாங்கிக் கொடுத்து, ஜெயிலுக்கும் சிலரை அனுப்பி, அதற்குத் தகுந்த விளம்பரங்களும் பாராட்டுக் கூட்டங்களும் போட்டு ஆடம்பரங்கள் செய்வதுமான காரியங்களைச் செய்திருக்குமேயானால் அந்தக் காரியங்களால் நமது லட்சியம் வெற்றி பெற்றாலும் - பெறாவிட்டாலும் லட்சியத்திற்கே முட்டுக்கட்டையாக இருந்தாலும்கூட, சிறிதும் கவலை இல்லாமல் “சுயமரியாதை இயக்கம் நிரம்ப காரியம் சாதித்துவிட்டது” என்பதாக நமது மக்கள் கருதி விடுவார் கள். மற்றபடி இவ்வியக்கத்தால் பயன்பட்டதான காரியம் எவ்வளவு நடை பெற்றிருந்தாலும் நமது மக்கள் தெரிந்து கொள்ளுவது என்பது சாத்தியமற்ற காரியமாகும்.

ஏனெனில், முதலாவது நமது மக்களுக்கு பெரும்பாலும் பகுத்தறிவு ஆராய்ச்சி என்பது தடைபடுத்தப்பட்டு விட்டது.

இரண்டாவதாக, ஏதாவது சிலருக்குப் பகுத்தறிவு உணர்ச்சி இருந்தா லும் அதை நேர்வழியில் பயன்படுத்த யோக்கியமோ, நாணையமோ, நன்றி யறிதல் தன்மையோ கிடையாது.

ஆகவே, இந்த இரண்டு காரணங்களாலேயே பொதுநல வாழ்க்கை நாணையமாய் இல்லாமல் இருப்பதுடன் ஒன்றிரண்டு நாணையமாய் உண்மையாய்ப் பாடுபட்டாலும் அதை மக்கள் அறிய முடியவோ, நன்றி செலுத்தவோ முடியாமல் போய்விடுகின்றது.

நிற்க, சுயமரியாதை இயக்கம் ஆரம்பத்தில் அரசியலில் இரண்டு காரியத்தை லட்சியமாய் கொண்டு ஆரம்பத்திலிருந்தே கதறி வந்திருப்பது டன், அந்த லட்சியத்திற்காகவே சுயமரியாதை இயக்கப் பிரமுகர்கள் காங்கிரசிலிருந்து பிரிந்தும் வந்ததுமான காரியம் யாவரும் அறிந்ததாகும். அந்த லட்சியம் ஒருவாறு வெற்றிப்பெற்றது என்பதை இன்று அதன் எதிரி களும் மறுக்கமாட்டார்கள்.

அதாவது, இவ்வியக்கம் தோன்றிய காலம் தொட்டு அரசியல் பிரதிநிதித்துவ தேர்தலிலும், அரசியல் உத்தியோகத்திலும், பல மதம், பல வகுப்பு, கீழ்-மேல் நிலைமை ஆகியவைகள் ஏற்பட்ட இன்னாட்டு மக்களுக்கு வகுப்புவாரிஉரிமை ஏற்பட வேண்டுமென்று கூப்பாடு போட்டு வந்ததேயாகும். சுயமரியாதை இயக்கம் இந்த மாதிரிகூப்பாடு போட்டு இந்தப்படிக் கேட்பதை இழிவான தேசத்துரோகமான காரியமென்று திரு.காந்தியும், காங்கிரசும் பிரசாரம் செய்தும் அது இழிவானதல்ல, தேசத் துரோகமானதல்ல என்பதான உணர்ச்சியை மக்களுக்குள் உண்டாக்கி அந்தப்படி இழிவென்றும் தேசத் துரோகமென்றும் சொல்லி வந்த அதன் எதிரிகளையெல்லாம் முறியடித்து வந்திருக்கின்றது.

மேலும் “சுயமரியாதை இயக்கம் எந்த சமூகத்தாருக்காக வகுப்பு வாரி உரிமை கேட்டுவந்ததோ அந்த சமூகத்தாரின் நன்மைக்காக ஏற்பட்ட தாகச் சொல்லிக்கொண்டு உத்தியோகங்களையும் பதவிகளையும் சுய நலத்துக்குக் கொள்ளையடித்தக் கூட்டத்தார்களாலேயே வகுப்பு வாரி உரிமைக்கு விரோதமாய் செய்யப்பட்ட செய்கைகளை சமாளித்தும், மற்றும் அரசியல் ஸ்தாபனங்கள், தேசீய ஸ்தாபனங்கள், பார்ப்பனத் தலைவர்கள், மகாத்மாக்கள் முதல் அனேகர் அதற்கு விரோதமாயிருந்தும் அவ்வள வையும் சமாளித்து, அரசியல் - பிரதிநிதித்துவங்களிலும், பதவிகளிலும், உத்தியோகங்களிலும் அரசாங்கத்தாராலேயே வகுப்புவாரி உரிமையை ஒப்புக்கொள்ளச் செய்தும், அதை அமுலுக்கு கொண்டுவரச் செய்தும் இன்றைய தினம் அமுலில் நடந்தும் வருகின்றது.

நாளையதினம் வரப்போகும் அரசியல் சீர்திருத்தத்திலும் 1000 மகாத்மாக்கள் விரோதமாய் இருந்தாலும் கூட இந்தக் கொள்கைகள் ஒப்புக் கொள்ளப்பட்டு அமுலில் வரவும் போகின்றது.

மற்றும் அடுத்த மாதம் நமது நாட்டில் நடக்கப்போகும் ஸ்தல ஸ்தாபன பிரதிநிதிகள் தேர்தல்களிலும் பறையர் என்பவரும், பள்ளர் என்ப வரும், சக்கிலி என்பவரும், சாம்பர் என்பவரும் தேர்தலில் நின்று வெற்றி பெற்று, மனிதராக வந்து சபையில் சரிசமமாக உட்காரப்போவதும் உறுதியாகி விட்டது.

மற்றும் மனித சமூகத்திலேயே சுதந்திரத்திற்கு அருகதையற்றவர்கள் என்று இழித்துக்கூறி, தாழ்மையாய்க் கருதி, அடிமைகளாய் நடத்தி வந்த “பொட்டை” என்னும் பெண்மக்களும் தேர்தலில் நின்று வெற்றிபெற்று மனித உணர்ச்சியுடன் சபையில் வந்து சுதந்திரத்துடன் உட்காரப் போவதும் உறுதி. மற்றபடி மகமதியர், கிறிஸ்துவர்கள் என்பவர்களும் தங்கள் மானத்தையும் மனசாக்ஷியையும் இழக்காமல் ஸ்தானம் பெறக்கூடிய யோக்கியதை அடைந்திருக்கிறார்கள்.

இதுபோலவே சர்க்கார் உத்தியோகத்திலும் சுயமரியாதை இயக்கம் விரும்பியவாரே இத்தனை பறையன், இத்தனை பார்ப்பனன், இத்தனை பார்ப்பனரல்லாதவன், இத்தனை முகமதியன், இத்தனை கிறிஸ்துவன் என்று விதி ஏற்பட்டு அநேக விஷயங்களில் அந்தப்படி நடைபெற்றும் வருகின்றது. இனி கூடிய சீக்கிரம் பெண்களுக்கும் இந்த உத்தியோகங்களில் பங்கு கிடைக்க முயற்சிக்கிறது.

இவைகளெல்லாம் சுயமரியாதை இயக்கத்தால் ஏற்பட்டதா? அல்லது அல்லவா? என்பதை விவகாரத்தில் வைத்து கொண்டாலும் சுயமரியாதை இயக்கம் என்று ஒன்று ஆரம்பமான காலத்தில்- அதன் (அவ்வியக்கத்தின்) அவசியத்திற்காக - கொள்கையாக சொல்லப்பட்ட காரணங்களில் இந்த வகுப்புவாரி உரிமையேதான் முக்கியமாய் சொல்லப்பட்டதா? அல்லது அல்லவா? என்பதில் ஒரு கடுகளவு விவாதமும் செய்யமுடியாது. யாராவது செய்யக் கூடுமானால் அவர்களுக்கு திருவண்ணாமலைக் கான்பரன்சும், காஞ்சீபுரம் கான்பரன்சும், கதர் ஸ்தாபன தகராறும் முதலாகியவைகளும் “குடிஅரசி”ன் 1926-ம் வருஷத்திய தலையங்கங்களும், உப தலையங் கங்களும் மற்ற நிரூபங்களும் தோல்ப்பிக்கத் தயாராய் இருக்கின்றன.

நன்றி அறிதலற்ற தன்மை, குறோதம், பொறாமை, எதிரிகளிடம் கூலிபெறுவதால் அதற்குத் தகுந்தபடி பேச வேண்டியதாகிய குணங்கள் இல்லாதவர்கள் இதை ஒப்புக்கொள்ளுவார்கள் என்றே கருதுகின்றோம்.

ஆகவே மேற்கண்டபடி அரசியல் துறை மாத்திரமல்லாமல் சமுதாயத் துறையை எடுத்துக் கொண்டோமேயானாலும் ஜாதி அகம்பாவம், ஆணவம் ஆகியவைகளை வெளிப்படையாய் காட்டும் மனோபாவம் நமது நாட்டில் 100க்கு 50 வீதமாவது மறைந்திருப்பதைக் காணலாம். மற்றும் மத சம்பந்தமான சடங்கு, உற்சவங்கள் விஷயமாய் உள்ள உணர்ச்சிகளும் 100க்கு 50 பங்கு அறிவாளிகள் என்பவர்கள் மனதிலேயே முக்கியஸ்தமும் பிடிவாதமும் குறைந்து ஏதோ கடன் கழிப்பது என்கின்ற முறையில் நடத்த வேண்டியதாகி, சிறிது சிறிதாய் குறைந்து வருவதைக் காணலாம். இவை ஒருபுறமிருந்தாலும் பார்ப்பனர் உட்பட எல்லா ஜாதி மக்களும் இன்று சமபந்தியில் இருப்பதற்கு முன் போல் பயப்படாமலும், கஷ்டப்படாமலும் தாராளமாய் இருந்து உண்பதையும் காணலாம். அது மாத்திரமல்லாமல் ஸ்பரிச தோஷமில்லாமல் பல உயர்ந்த ஜாதியினர் சமமாக ஆகாரம் உட்கொள்ளுவதையும் காணலாம்.

உதாரணமாக, ஈரோடு சுயமரியாதை மகாநாட்டிலிலும், விருதுநகர் சுயமரியாதை மகாநாட்டிலிலும் ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே பந்தியில் சமமாக உட்கார்ந்து சாப்பிட்டதை இயக்க எதிரிகளும் கூட இருந்து பார்த்துக் கொண்டுதான் இருந்தார்கள். எவ்வித ஒழிமறைவுமில்லாமல் பார்ப்பனரல்லாத-சைவர்கள் அல்லாத நாடார்கள்தான் சமையல் செய்தார் கள். ஈரோட்டில் பறையர்கள் முதல் எல்லா ஜாதியாரும், எல்லாமதக்காரரும் பறிமாறினார்கள். சைவ வேளாளர், தொண்டமண்டல முதலியார், காரைக் காட்டு சைவர், பார்ப்பனர், நாடார், நாயக்கமார், செங்குந்தர், வாணிய வைசியர், நாடார், க்ஷத்திரியர், நாட்டுக்கோட்டை-வைசியர் ஆகிய எல்லோருமே சமமாக உட்கார்ந்து, ஒன்றாகச் சாப்பிட்டார்கள். அதுவும் பந்தி 1-க்கு 150 பேர் வீதம் சாப்பிட்டார்கள். எந்த அரசியல் மகாநாட்டிலும் பார்ப்பனரல்லாதார் சமையல் செய்ததோ, “தீண்டா” ஜாதியார் பறிமாறி னதோ பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் எல்லோரும் ஒரு பந்தியில் இருந்து சாப்பிட ஏற்பாடு செய்ததோ இதுவரையில் நாம் அறிய நடந்ததே இல்லை. மற்றும் பெண்கள் ஆண்களுடன் சரிசமமாக தங்களைக் கருதிக் கொண்ட தும் மற்றும் அவர்கள் நிர்பந்தங்கள் ஒழிந்ததுமான சம்பவங்கள் இவ் வியக் கத்தின் பயனாய் காணப்பட்டதுபோல் வேறு எதிலாவது காணப்பட்டது என்று யாரும் சொல்ல வரமாட்டார்கள். மற்றும் கடவுள், மதம், சமயம், வேதம், புராணம் முதலியவைகளைப் பற்றியும், இனியும் பல காரியங் களும் ஏற்பட்டதை சொல்லாமலே விட்டுவிடுகின்றோம். அதை அவரவர் களே நினைத்துப் பார்த்தால் தெரியும். ஆகவே சொன்னவரையிலும் கூட இதன் தன்மைக்கு ஒரு விஷயத்தை ஞாபக மூட்டுகின்றோம்.

அதாவது, எந்த மக்களுக்கு என்ன விதமான நன்மை செய்ய வேண்டுமென்று கருதினோமோ அந்த மக்களின் எதிர்ப்புக்கிடையிலேயே இவை செய்யப்பட்டது என்பதுடன், பலன் அடைந்த சமூகத்தாரே இன்றும் எதிரிகளாய் இருந்து வருகின்றார்கள் என்பதையும் ஞாபகமூட்டுகின்றோம்.

மேலும் சுயமரியாதை மகாநாடுகளின் தீர்மானங்களின்படி பால்ய மணம் தடுப்பு - பெண்களுக்குச் சொத்துஉரிமை-விவாகரத்து-விதவை உரிமை-தீண்டாமை விலக்கு முதலியவைகளுக்கு சட்டசபைகளில் சட்டங் கள் கொண்டு வரப்பட்டு சில நிறைவேறியும் சில விவாதத்திலும் யோசனை யிலும் இருந்து வருகின்றன. தீண்டாதவர்கள் என்பவர்கள் விஷயத்தில் அவர்களுக்குக் கல்வி வசதியும் பூமி வசதியும் சிற்சில இடங்களில் சர்க் காரால் நடத்தப்பட புதிய உத்திரவுகளும் போடப்பட்டு வருகின்றன. இவை கள் எல்லாம் சுயமரியாதை இயக்கத்தால்தான் ஆயிற்றா? என்பது ஒரு முக்கிய கேள்வியாய் இருக்கலாம். அதற்கு பதில் சொல்ல நாம் ஆசைப்பட வில்லை. ஆனால் ஒன்றை மாத்திரம் நினைப்பூட்டுகிறோம். அதாவது சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகள்-சுயமரியாதை இயக்கத்தின் தேவைகள்-விருப்பங்கள் ஆகியவைகள் பற்றி அவ்வியக்கம் தெரிவித்துக் கொண்டபடி காரியங்கள் நடந்து வந்திருக்கின்றது-நடந்தும் வருகின்றது டன் இவைகளைப்பற்றி இதுவரை எந்த அரசியல் இயக்கமும் தெரிவிக்க வில்லை - தனது லட்சியமாய்க் கொள்ளவும் இல்லை என்பதாகும். ஆகவே இவை யாரால் ஏற்பட்டதாய் இருந்தால் என்ன? என்பதோடு இனியும் எவ்வளவோ ஆக வேண்டி இருக்கின்றது என்பதையும் நாம் மறைக்க வில்லை.

சத்தியாக்கிரகம்

இனி எடுத்துக் கொண்ட விஷயத்தைக் கவனிப்போம். அதாவது சத்தியாக்கிரகம். மேற்கண்ட இந்தக் காரியங்கள் செய்வதற்கு சுயமரியாதை இயக்கமானது இதுவரை எவ்வித சத்தியாக்கிரகமும் செய்யவில்லை. அன்றி யும் எவ்வித பலாத்காரமும் செய்யவில்லை.

மற்றபடி அது என்ன செய்ததென்றால் மனதில் உள்ளதை உள்ளபடி தைரியமாய் வெளியில் எடுத்துச் சொல்லிற்று. பேனாவைத் தாராளமாக ஓட்டிற்று. தத்துவார்த்தத்திற்கு இடம் கொடுக்கவில்லை. ஊர் ஊராய், கிராமம் கிராமமாய், பட்டணம் பட்டணமாய் சென்று பட்டி தொட்டிகளிலும், காடு மேடுகளிலும் கூப்பாடு போட்டது. சமயத்துக்குத் தகுந்தபடி பேசவில்லை. பின்னால் போகவில்லை என்பதைத் தவிர வேறு ஒன்றும் பிரமாதமாகச் செய்து விடவில்லை. மக்களுக்குள் இயற்கையாய் ஏற்படும் சுயநலமும், உத்தியோகப் போட்டியும், பொறாமைகளும் இவ்வியக்கத்தில் கலந்து கொண்ட சிலருக்கு சற்று குறைவாய் ஏற்பட்டு இருந்திருக்குமானால் சுய மரியாதை இயக்கத்தால் இன்னமும் சற்று அதிகமான பலன்கள் ஏற்பட்டி ருக்கும் என்பதை நாம் மறைக்கவில்லை. அவைகள் சற்று அளவுக்கு மீறி அதிகமாக ஏற்பட்டு விட்டதால் ஏற்பட்ட பலன்கள் குறைவாய் இருப்பதாகக் கருத வேண்டியிருக்கின்றது. இவை எப்படியோ ஆகட்டும். பொதுவாகவே சுயமரியாதை இயக்க வேலையானது வெறும் விளம்பரக் கிளர்ச்சியும் மக்களின் மூடத்தன்மையை பயன்படுத்திக் கொள்ளுவதும் அல்லவாகை யால் அதன் வேலை சற்று கஷ்டமானதாக இருந்து வருகின்றது.

அன்றியும் “இந்துக்களின் சுயராஜியத்திற்காக வெள்ளைக்காரனு டன் சண்டை பிடிக்கப் போகின்றோம், வாருங்கள்” என்று ஒரு தேசத்தார் மீது மற்றொரு தேசத்தாரை ஏவி கூட்டம் சேர்ப்பது போன்ற சுலபமான காரிய மாயில்லை என்பதோடு மாத்திரமல்லாமல் இந்தியர்களின் நன்மைக்காக இந்துக்கள் மீதே அவர்களது உயிர்போன்ற உணர்ச்சிகளை, சுயநலங்களை தகர்த்தெரிய போர்தொடுக்க வேண்டியதான மிக்க கஷ்டமான வேலை யாகயிருந்து வருகிறது.

ஆகையால் சுயமரியாதை இயக்க வேலை அக்கஷ்டமான காரிய மாயிருக்கின்றதால் இந்து மக்களுக்குள் பிரசாரம் செய்து பகுத்தறிவை எழுப்பி போதனை ஏற்றி அவர்களை சரிபடுத்துவதின் மூலம் பயன்பட வேண்டியதாய் இருக்கின்றது. இப்படிப்பட்ட நிலைமையில் அப்படிப்பட்ட மக்களோடு எடுத்த எடுப்பில், “சத்தியாக்கிரகம்” செய்வதென்பது எப்படி சாத்தியமாகக் கூடியதாகும்? என்பதை பொறுப்புடன் இருந்து யோசித்துப் பாருங்கள். உண்மையிலேயே நம் (சுயமரியாதை இயக்கத்து) எதிரி என்ப வனும் அதாவது எதற்காக எவனிடம் நாம் சத்தியாக்கிரகம் செய்ய வேண்டு மென்று கருதுகின்றோமோ அவனும், அதற்காக அந்தக் காரியத்தை சத்தியமாகக் கருதி சத்தியாக்கிரகம் செய்யும் முறையிலேயே நமது சத்தியாக் கிரகத்தை எதிர்த்து நம்மோடு சத்தியாக்கிரகம் செய்ய வேண்டுமென்று எண்ணுகின்றான்.               

வாசகர்கள் இந்த இடத்திலுள்ள ஒரு முக்கியமான கஷ் டத்தை நன்றாய் கவனிக்க வேண்டுகின்றோம். சத்தியாக்கிரகம் என்பதாக முதல் முதலாக ஆரம்பித்தவர்களான அதன் கருத்தாக்கள் சத்தியாக்கிரகம் என்பதை ஒரு தருமமாகவும் அதாவது கடமையாகவும், நீதியாகவும் அதாவது தெய்வக்கட்டளையாகவும் கருதி அதற்கு அது ஒரு தெய்வீகசக்தி வாய்ந்ததென்ற பொருள் கொடுத்து அதில் தெய்வீகத்தன்மை புதைந்து கிடக்கின்றதென்றும் சத்தியாக்கிரகம் செய்ய ஆரம்பித்து விட்டால் எப்படி யானாலும் அது ஜெயித்துத்தான் தீருமென்றும், அதற்கு அநேக விதமான தெய்வீக பத்தியங்கள் (நிபந்தனைகள்) ஏற்படுத்தி அதன் மூலமே மக்க ளுக்கு சத்தியாக்கிரகத்தில் நம்பிக்கையுண்டாக்கி காரியத்தில் அதை நடத்தி வருகின் றார்கள். அனுபவ பலன் எப்படியிருந்த போதிலும் இன்றும் அந்தக் கருத்திலேயே தான் அது நடைபெற்று வருகின்றது.

ஆனால், சுயமரியாதை இயக்கக்காரர்களோ தெய்வீகம் என்பதி லேயே சத்தியாக்கிரக கர்த்தர் போன்ற நம்பிக்கையுடையவர்களல்ல. சத்தியா கிரகத்தை ஒரு தெய்வீக சக்திப் பொருந்திய காரியமாக அவர்கள் கருதுவது மில்லை. அன்றியும் சத்தியம் என்கின்ற ஒன்றுக்கு மனித சக்திக்கு மீறினதான ஒரு சக்தி இருப்பதாக அவர்கள் கருதுவதுமில்லை.

மற்றும், சத்தியாக்கிரகம் என்பதின் பேரால் செய்யப்படும் காரியங் கள் எல்லாம் சத்தியமானதாய் இருக்க வேண்டுமென்றோ, அல்லது சத்திய மானதாய் இருந்து விட்டதாலேயே வெற்றிபெற்றுவிடுமென்றோ, வெற்றி பெறக் கட்டுப்பட்டதென்றோ கருதுவதில்லை.

ஏனெனில், சத்தியம் என்பது ஒரு விஷயத்தில் எல்லாருக்கும் ஒன்று போலவே படும் என்று நினைக்கக் கூடியதாய் இல்லை.

நாம் சத்தியமென்று கருதுவது மற்றொருவன் அசத்தியமென்று கருத உரிமையுடையதேயாகும்.

அன்றியும் சத்தியம் என்று ஒரு மனிதனுக்குப் பட்டதெல்லாம் உண்மையானதும், நியாயமானதும் என்று கருதி விடவும் முடியாது.

உதாரணமாக மாட்டை அறுத்து அதன் மாமிசம் சாப்பிடுவது சத்திய மானதாகவும், நியாயமானதாகவும் மௌலானா சௌக்கத் அலிக்குத் தோன் றலாம். அதைத் தடுக்க வேண்டியது சத்தியமாகவும், அதற்காக சத்தியாக் கிரகம் செய்ய வேண்டியது நியாயமாகவும் திரு.காந்திக்குத் தோன்றலாம்.

“இருவரும் கடவுள் பக்தர்கள்-மத பக்தர்கள் இருவரும், சத்தியத்தில் அதாவது-கடமையிலிலும், நியாயத்திலும் நம்பிக்கை வைத்தே இந்தப்படி முடிவு காண்கின்றார்கள்”என்றால் இதில்         

எது சத்தியம்?

எது அசத்தியம்?

எது சத்தியாக்கிரகத்திற்குறியது?

எது துராக்கிரகத்திற்குறியது?

இதற்கு என்ன பரீiக்ஷ? என்பவனற்றை கவனித்துப்பாருங்கள். மற்றும் கள்ளும், சாராயமும் சாமிக்கு வைத்துப்படைத்துக் குடித்து, கூத்தாட வேண்டியது கருப்பன், காட்டேரி, மதுரை வீரன், முருகன் முதலியவை களைக் கடவுளாக கும்பிடும் பல ஜாதி மக்களுக்கு தர்மமாகவும், நியாய மாகவும் தோன்றலாம்.

அதைத் தடுக்க வேண்டியது தர்மமாகவும், நியாயமாகவும் அதற்கு சத்தியாக்கிரகம் செய்ய வேண்டியது அவசியமாகவும் காங்கிரசுக்காரருக்குத் தோன்றலாம். இதில் எது நியாயமானது? இதற்கு என்ன ஆதாரம்? என்று பாருங்கள்.

மற்றும் “மற்றொருவன் சமைத்ததை சாப்பிடுவது பாவம்” என்றும் “மற்றொருவன் தொட்ட தண்ணீரை குடிப்பது தோஷம்” என்றும் “மற்றொருவன் பார்க்க தண்ணீர் சாப்பிடுவது நரகம் சித்திக்கக்கூடியது” என்றும் பண்டித மாளவியா போன்ற “உத்தம பிராமணர்”களுக்குத் தோன்றலாம். ஆனால் இந்தப்படி நினைப்பதே மகா அக்கிரமமென்றும், ஜாதி ஆணவமென்றும், அறிவீனம் என்றும், சுயநலம் என்றும், அந்த வழக்கத்தை ஒழித்தாலொழிய நாடு ஒற்றுமையும், முன்னேற்றமும், சமத்து வமும் அடையாதென்றும், அதை ஒழிக்க சத்தியாக்கிரகம் செய்ய வேண்டு மென்றும் சமூக சீர்திருத்தக்காரருக்குத் தோன்றலாம்.

இப்படியே இன்னும் பல உண்டு. இவற்றுள் எது சத்தியம்? எதைப்பற்றிச் செய்யும் சத்தியாக்கிரகம் வெற்றி பெறுவதற்குரியது? என்று யோசிப்போமானால் என்ன முடிவுக்கு வர முடியும்?

முதலாவது சத்தியத்திற்கு இலக்ஷணம் என்ன என்பதை நிர்ணயிக்க நம்மிடம் என்ன பரீiக்ஷக்கருவி இருக்கின்றது? அப்படியே கண்டுபிடித் தோமாயினும் அந்த சத்தியம் ஜெயித்தாக வேண்டும் என்பதற்கு என்ன ஆதாரமோ, நிர்பந்தமோ, அல்லது நடத்துவிக்கும் சக்தியோ இருக்கின்றது?

சத்தியத்தையும், அசத்தியத்தையும் பற்றி தீர்ப்புச் சொல்ல அருகர் யார்?

சத்தியாக்கிரகம் வெற்றி பெற்றதாலேயே சத்தியாக்கிரகம் செய்யப் பட்டதற்காக இணங்க வந்தவன் தான் சத்தியத்திற்கு கட்டுப்பட்டு விட்டதாக நினைத்து திருப்தி அடைகிறானா? அல்லது நிர்பந்தத்திற்காக தொல்லை சகிக்கமாட்டாமல் அதாவது திருடனது அடி பொறுக்கமாட்டாமல் மறைத்து வைத்திருந்ததை, குரங்குப்பிடியாய் கட்டிப்பிடித்துக் கொண்டிருந்ததை எடுத்துக் கொடுத்து விட்டதுபோல் இணங்கவேண்டியதாயிற்றே என்று கருதுகின்றானா? என்பனவாகியவற்றை யோசித்துப்பார்த்தால் சத்தியாக் கிரஹத்தின் யோக்கியதை விளங்காமல் போகாது.

நாம் கடை வைத்து வியாபாரம் செய்யும்போது நல்ல வியாபாரம் நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் ஒரு பிச்சைக்காரன் மேலெல்லாம் அசங்யத்தைப் பூசிக்கொண்டுவந்து கடைக்கெதிரில் நின்று கொண்டு “ஐய்யய்யா ஐய்யய்யா” வென்று கூப்பாடு போட்டால் உடனே காசு கொடுத்து அனுப்புகின்றோமே? இதற்கு என்ன பெயர்? மற்றொருவன் அசங்யமான புண்ணைக் காட்டிக் கொண்டு எதிரில் நின்று கெஞ்சினால் என்ன சொன்னாலும் போக மாட்டேன் என்று பிடிவாதமாய் இருந்தால் அவன் முகத்தைக் கூட பார்க்காமல் பேசாமல் காசு கொடுத்து அனுப்புகி றோமே? இதற்கு என்ன பெயர்? இந்தக் காரியங்கள் எல்லாம் சத்தியாக் கிரகமாகுமா? அல்லவானால் இவை எப்படி வெற்றி பெறுகின்றன? என்பவைகளைப் பார்த்தால் சத்தியாக்கிரஹம் வெற்றி பெருவதின் இரகசி யம் விளங்காமல் போகாது.       

சாதாரணமாக சண்டித்தனத்திற்கு 100-க்கு 50க்கு மேற்பட்ட விஷயங்களில் வெற்றி ஏற்படுகின்றதை நேரில் பார்க்கின்றோம். இந்த சண்டித்தனத்திற்கு வேண்டியதெல்லாம் மானாவமானம் கருதக்கூடாது, மற்றவன் செய்யும் கொடுமைக்குப் பின் வாங்கக்கூடாது என்பவைகளே யாகும். ஆகவே இக்காரியங்களுக்குத் தயாராய் இருந்தால் ஏறக்குறைய அனேக காரியங்களில் வெற்றி அடையலாம். ஆனால் சத்தியாக்கிரக எதிரி யும் மானத்திற்குப் பயந்தவனாகவும் தொல்லைக்கு ஈடுகொடுக்க சக்தி யில்லாதவனாகவும் இருந்தால் தான் முடியும். அவனும் சத்தியாக்கிரகிகளைப் போல் சண்டித்தனத்திற்கு மானாவமானமற்ற தன்மைக்குத் துணிந்து விட்டானேயானால் யார் ஜெயிப்பார்கள்? என்பது சூதாடுவது போலத்தான் முடியும்.

எப்படியானாலும் இவ்வெற்றிகளுக்கு “ஏமாற்றி ஜெயித்து விட்டோம்” “தந்திரம் செய்து ஜெயித்துவிட்டோம்” என்று தான் சொல்ல வேண்டுமேயொழிய சத்தியத்தினால் என்று சொல்ல முடியவே முடியாது. சுருக்கமாக உண்மையைச் சொல்லவேண்டுமானால் இந்த வெற் றிக்கு நாணையத்தையும் சுயமரியாதையையும் விலையாகக் கொடுத்துதான் வெற்றி பெற்றோம் என்று சொல்ல வேண்டுமேயொழிய மற்றபடி நியாயம் வென்று விட்டது-சத்தியம் ஜெயித்துவிட்டது என்று சொல்லுவது பித்தலாட் டமே யாகும். ஆகவே சத்தியாக்கிரஹம் என்கின்ற பெயரே அர்த்தமற்ற தாகும் என்பதும் அதன் பேரால் கையாளப்படும் முறைகளும் தன்மதிப் பற்றதாகும் என்பதும் ஒருவனுடைய முடிவானால் அவன் தன்மதிப்பைப் பறிகொடுத்து ஒரு காரியத்தை நிறைவேற்றுவது என்பது கண்ணை விற்று சித்திரம் வாங்குவது போலவேயாகும்.

அன்றியும் சத்தியாக்கிரகத்தில் அகிம்சை இருக்கின்றது என்றும், பலாத்காரம் இல்லையென்றும், ஆதலால் வெற்றிபெற அது ஒரு சாதனம் என்றும் சொல்லப்படுகின்றது. இதிலும் ஏதாவது உண்மை இருக்கின்றதா என்பதை யோசித்தால் விளங்காமல் போகாது. இம்சை என்பதற்கு அருத்தம் என்ன? என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு மனிதனின் சரீரத்தை நோகச் செய்வதோ ஒரு மனிதனுடைய மனதை நோகச் செய்கின்றதோ ஆகிய இரண்டு காரியங்களும் இம்சையில் பட்டதேயாகும். இது ஒவ்வொரு மனிதனுடையவும் அனுபவமேயாகும். யாருடைய சரீரமும் நோகாமல், மனமும் நோகாமல் எந்தக் காரியத்திற்கா கிலும் சத்தியாக்கிரகம் செய்யக்கூடும் என்று யாராலும் சொல்லமுடியாது.

ஆகவே சத்தியாக்கிரகத்தில் அகிம்சை இருக்கின்றது என்று சொல்வ தெல்லாம் உண்மையை மறைத்தும், திரித்தும் சொல்லுவதாகுமே யொழிய மற்றபடி நாணையமான வார்த்தை யாகாதென்றே சொல்லுவோம்.

நிற்க, மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் சுயமரியாதை இயக்கத்தின் லட்சியம் சமதர்மத்தன்மையும், சமஉடைமைத் தன்மையும் என்று முடிவு செய்து கொண்ட பிறகு, கையில் வலுத்தவனும், தந்திரத்தில் வலுத்தவனும், உலக சுகபோகங்கள் தனக்கே வரும்படி செய்து கொண்டு இளைத்தவனையும், சாதுவையும் அடிமைகளாக்கி ஆண்டு, பயன்பெற்று வரும் போதும், இதுவே சத்தியம், இதுவே தருமம், இதுவே நீதி, இதுவே கடவுள் கட்டளை, இதுவே வேதத்தின் கருத்து, சாஸ்திரத்தின் சம்மதம் என்று ஏற்பாடு செய்து வைத்திருக்கும் போதும், சத்தியத்தின் பேரால் எதற்கு சத்தியாக்கிரகம் செய்யமுடியும் என்பதை யோசித்தால், சத்தியாக்கிரகத்தின் பயன்படாத தன்மை விளங்கும்.             

கோயிலை இடிப்பதும், சாமி சொத்துக்களையும் மடாதிபதிகள் சொத்துக்களையும் பறிமுதல் செய்து “பஞ்சமர்களுக்கு”ப் பிரித்துகொடுத்து, மடாதிபதிகளை விவசாயத் தில் போடுவதும், ஜமீன்தாரர்கள் பூமிகளைக் குடிகளுக்கு பங்கு போடு வதும், அரசர்களும் பிரபுக்களும் நாழி அரிசியுடனும், நான்குமுழத் துண்டு டனுமேதானிருக்க வேண்டுமென்பதும் முதலாகிய காரியங்களுக்கெல்லாம் சத்தியாக்கிரகம் செய்ய முடியுமா? செய்தால் அதற்கு சத்தியாக்கிரகம் என்கின்ற பெயர் தகுமா? என்பவற்றை யோசித்துப்பாருங்கள்.

இவைகளையெல்லாம் நன்றாகக் கவனித்து பகுத்தறிவுடன் சமதர்ம நிலைமையில் இருந்து பார்த்தோமேயோனால் சத்தியாக்கிரகம் என்னும் வார்த்தையும், அதன் பிரசாரமும், அனுபவமும் மறைமுகமாய் வைதீகத்தை - வருணாசிரமத்தை பிரசாரம் செய்யப்படுவதேயொழிய வைதீகத்திலும், தெய்வீகத்திலும் நம்பிக்கை உண்டாக்கச் செய்வது என்பதைத் தவிர மற்ற படி நமது மக்களுக்கு இன்று உண்மையாய் கிடைக்க வேண்டிய மனிதத் தன்மையான நியாயத்தையும் அதை நிறைவேற்ற வேண்டியதான தர்மத்தை யும் உணர்த்துவதாகாது என்பது நன்றாய் விளங்கும்.

எனவே, இதுவரை சொல்லி வந்தவைகளில் இருந்து ஒரு மனிதன் தனது லக்ஷியம் வெற்றி பெறுவதற்கு சத்தியாக்கிரகம் செய்யப்படுவது என்பது பொருளற்றதென்றும், தன்மதிப்பற்ற தென்றும் தான் எடுத்துக் காட்டப் பட்டதேயன்றி, லக்ஷிய சித்திக்காக எவ்வித முயற்சியோ, தியாகமோ செய்யப்படாது என்பதற்காக சொல்லப்பட்டவைகள் அல்ல என்பதை தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

இனி லக்ஷியத்திற்காக மனிதன் சுயமரியாதைக்காரன் கையாளப் பட வேண்டிய முறைகளைப் பற்றியும், தியாகம் செய்யவேண்டிய துறை களைப் பற்றியும் பின்னால் விவரிப்போம்.

(குடி அரசு - தலையங்கம் - 06.09.1931)

Pin It