தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் உயர்திரு. சி. இராஜகோபாலாச்சாரியார் அவர்கள் பணம் வசூலிப்பதற்காக வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் அந்தப் பணத்தின் மூலம் செய்யப்படும் வேலைத் திட்டங்களையும் குறிப்பிட்டிருக்கின்றார். அவைகளில் 5-வது திட்டமாக:-
ஹிந்தி:- “ஜனங்களிடையே இருக்கும் குருட்டு நம்பிக்கையையும், மூடப்பழக்க வழக்கங்களையும் போக்கி பகுத்தறிவும் ஏற்படுவதற்குப் பாடுபட வேண்டும்”
என்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார். இது தற்காலத்திற்கு ஏற்றதொரு வேஷமேயானாலும் இவர்களும் இவர்களது சிஷ்யகோடிகளும் செல்லுமிடங்களிலெல்லாம் பாரதக் கதையையும், ராமாணயக் கதையையும், நளன் கதையையும் மற்றும் விஷ்ணுவின் 10 அவதாரக் கதைகளையும் பிரசங்கம் செய்து, பிரசாரம் செய்து கொண்டே போவது குருட்டு நம்பிக்கையையும், மூடப்பழக்க வழக்கங்களையும் ஒழித்து பகுத்தறிவை உண்டாக்கும் பிரசாரமாகுமா? என்று வணக்கத்துடன் கேட்கிறோம்:
அன்றியும் அந்த அறிக்கையில் உள்ள 8 திட்டங்களிலும் தீண்டாமை விலக்கு திட்டத்தை மாத்திரம் வெகு ஜாக்கிரதையாகவே நமது ஆச்சாரியாரவர்கள் அடியோடு ஒரு வார்த்தை கூட சொல்லாமல் விட்டிருக்கிறது மிகவும் குறிப்பிடத் தக்கதாகும்.
(குடி அரசு - கட்டுரை - 24.05.1931)