சகோதரர்களே! உங்கள் மத சம்பந்தமான ஒரு சிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு என்னைத் தலைமை வகிக்க அழைத்ததற்கு நான் நன்றி செலுத்துகிறேன். என்னை அநேகர் மத துவேஷி என்றும் கடவுள் மறுப்புக்காரன் என்றும் சொல்லுவார்கள். இந்த ஊரிலும் பலர் சொல்லுவார்கள். அப்படியிருக்க நீங்கள் என்னை அழைத்து மிகவும் தைரியமென்றே சொல்ல வேண்டும். எப்படி இருந்தாலும் நான் இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் எனது அபிப்பிராயத்தை வெளியிட பின்வாங்குவதே இல்லை. சென்ற வருஷத்திலும் இதேமாதிரி கொண்டாட்டத்தில் நான் பேசி இருக்கின்றேன். அதிலும் பல இந்து முஸ்லீம்களுக்கு அதிருப்தி இருந்திருக்கலாமானாலும் அநேகருக்கு திருப்தி ஏற்பட்டு முஸ்லீம்களால் அல்லாசாமிப் பண்டிகை நிறுத்தப்பட்டதற்கு நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.

ஆனால் என்பேரில் கோபித்துக் கொண்ட இந்துக்கள் இவ்வூரில் தங்கள் மாரியம்மன் பண்டிகையைக்கூட நிறுத்திவிட சம்மதிக்காமல் மிகுதியும் காட்டுமிராண்டித்தனமான முறையிலேயே நடத்துகின்றார்கள். இப்படியேதான் எங்கும் நடைபெறுகிறது. இந்துக்களை விட இஸ்லாமானவர்கள் அறிவுக்கு மதிப்புக் கொடுப்பவர்கள் என்பதும் நியாயத்தை ஒத்துக்கொண்டு அதன்படி உடனே நடப்பவர்கள் என்பதும் இதிலிருந்து ஒருவாறு உதாரணமாய் விளங்குகிறது. ஆனால் இன்னும் அநேக விஷயங்களில் திருத்துப்பாடு ஆகவேண்டி இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள். முஸ்லீம் சீர்திருத்தத் தலைவர்கள் இதை வலியுறுத்திக்கொண்டே வருகின்றார்கள். கூண்டு திருவிழா முதலிய வற்றையும் நிறுத்தி விடுங்கள். இதனால் எல்லாம் இஸ்லாம் கொள்கைகள் கெட்டுப்போகாது. இவை இருந்தால் தான் பரிகாசத்திற்கிடமானதாகும்.

இந்த முக்கியமான நாள் என்பதில் வேலூர் மௌல்வி சாயபு அவர்கள் குர்ஆனின் மேன்மையையும் திரு. முகமது நபி அவர்களின் உபதேசத்தின் பெருமையையும் பற்றி சொன்னார்கள். என்னால் அந்தப்படி சொல்ல முடியாது. ஏனெனில் நான் அவற்றை படித்துப் பார்த்தவனல்ல. அந்த வேலைக்கு நான் போவதுமில்லை. நான் அதற்கு அருகனுமல்ல. அப்படி ஏதாவது நான் படித்து அதைப்பற்றி இங்கு பேசுவது என்பதும் அதிகப்பிரசங்கித்தனமேயாகும். ஏனெனில் பெரிய பெரிய மௌல்விகள் இருக்கும் போது அவர்கள் முன் நான் என்னதான் படித்தாலும் என்ன பேச முடியும்? அன்றியும் புஸ்தகத்தில் இருப்பதை விட பிரத்தியக்ஷத்தில் உள்ளதைப் பற்றிப் பேசுவதே பலனளிக்கக்கூடும். நான் இந்த சந்தர்ப்பத்தை எதற்கு உபயோகித்துக் கொள்ள கூடுமென்றால் மக்களிடம் பிரத்தியக்ஷத்தில் காணும் விஷயங்களைப் பற்றியும் இன்னமும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்கின்ற விஷயத்தைப்பற்றியும் பேசுவதும் பயன்படுவதாகும் என்று கருதுகின்றேன்.

திரு.நபி அவர்களின் இவ்வளவு அருமையான உபதேசம் என்பவற்றில் உலக மக்கள் எல்லாம் பயன்அடையும்படி செய்ய என்ன என்ன செய்யவேண்டும் என்பதற்கு ஆகவே நீங்களும் இந்த நாளை பயன்படுத்திக் கொள்ளப்பார்க்க வேண்டும் என்றே கருதுகிறேன்.

செட்டி முடுக்கா? சரக்கு முடுக்கா?

இஸ்லாம் மார்க்கம் “மக்களுக்கு உபதேசிப்பதிலும் வேதவாக்கியங்களிலும் மேன்மையானதாய் இருக்கின்றது” என்கின்ற திருப்தியானது மனிதசமூகத்திற்கு எல்லாப் பயனையும் அளித்துவிடாது. ஆனால் அதன் தத்துவத்திற்கொப்ப காரியத்தில் அதன் பயனை உலகத்தில் மேன்மையுறச் செய்து மக்களுக்கு நல்ல வழிகாட்டியாகி உலகமக்களை ஒன்றுபடுத்தவும் அனைவரையும் சகோதரத்தன்மையுடனும் இருக்கவும் பகுத்தறிவுடனும், சுயமரியாதையுடனும், சுதந்திரத்துடன் வாழவும் செய்யவேண்டும். எந்தக் கொள்கைக்காரனும் புஸ்தகத்தில் இருப்பதைக்கொண்டு தங்கள் முன்னோர்கள், பெரியார்கள் சொன்னார்கள் என்பதைக் கொண்டு இனி உலகத்தை ஏய்க்க முடியாது.

உலகம் பகுத்தறிவுக்கு அடிமையாகி எதையும் பிரத்தியக்ஷ அனுபவத்தைக் கொண்டு பரீட்சித்து சரிபார்க்க வந்துவிட்டது. அதற்கு துணிந்தும் விட்டது. செட்டி முடுக்கு செல்லாது. சரக்கு முடுக்காய் இருந்தால்தான் இனி செலாவணியாகும். ‘என் சரக்கை பரீக்ஷிக்கலாமா?’ என்கின்ற அடக்குமுறை இனிப்பலிக்காது. ‘அவர் ஒஸ்தியென்று சொன்னார்.’ ‘இவர் ஒஸ்தியென்று சொன்னார்’ ‘ஆண்டவன் சொன்னான்’ என்பதெல்லாம் அனுபவத்திற்கு நிற்காவிட்டால் காரியத்தில் நடந்து காட்டா விட்டால் இனி மதிப்புப்பெற முடியாது. ஆதலால் எந்தச்சரக்கின் யோக்கியதையும் கையில் வாங்கிப்பார்த்துதான் மதிக்க வேண்டியதாகும். அந்த முறையில் இஸ்லாம் கொள்கை என்பதும் முஸ்லீம் மக்களின் நடத்தையைக் கொண்டும் அவர்களது பிரத்தியட்சப்பயனைப் கொண்டும் தான் மதிக்கப் படமுடியும். உலகம் சிரிக்காதா?

இந்துக்கள் தேரிழுப்பதைப் பார்த்து முஸ்லீம்கள் பரிகாசம் செய்து விட்டு முஸ்லீம்கள் கூண்டுகட்டி சுமந்து கொண்டு கொம்பு, தப்பட்டை, மேளம், பாண்டு, பாணம் வேடிக்கைசெய்து கொண்டு தெருவில் போய்க் கொண்டிருந்தால் உலகம் திருப்பிச் சிரிக்கமாட்டாதா? என்று யோசித்துப் பார்க்கவேண்டும். இந்துக்கள் காசிக்கும், ராமேஸ்வரத்திற்கும் போய் பணம் செலவழித்துவிட்டு “பாவம் துலைந்துவிட்டது” என்று திரும்பி வருவதைப் பார்த்து முஸ்லீம்கள் சிரித்துவிட்டு முஸ்லீம்கள் நாகூருக்கும், முத்துப் பேட்டைக்கும், மக்காவுக்கும் பணத்தை செலவு செய்து கொண்டு போய் விட்டு வந்து தங்கள் “பாவம் எல்லாம் துலைந்து விட்டது” என்று கருதிக் கொண்டு புதுக்கணக்குப்போட வந்தார்களானால் மற்றவர்கள் சிரிக்க மாட்டார்களா? என்று நினைக்க வேண்டும்.

மக்கள் மார்க்கத்தைக் காப் பாற்றுவதென்றால் கொள்கைகளை பகுத்தறிவுக்கு இணங்கி இருக்கும்படி ஜாக்கிரதையாய் பார்த்து பயன்படுத்தவேண்டும். “தீர்க்கதரிசிகள் பகுத்தறிவுக்கு விறோதமாய் சொல்லி இருக்கமாட்டார்கள்” என்று கருதி அவற்றை தன் இஷ்டப்படி அருத்தம் செய்து கொண்டு பிடிவாதமாய் இருப்பது மூட நம்பிக்கையைவிட மோசமானதாகும். அம்மாதிரி மூட நம்பிக்கையின் பயனாய் தீர்க்கதரிசிகள் என்பவர்கள் சொன்னதின் கருத்தையும், உண்மையையும் அறிந்து கொள்ள முடியாமலும் போகும்.

பகுத்தறிவு

நமக்குப் பகுத்தறிவையும் நடுநிலைமையையும் எதிலும் பயன்படுத்த உறுதியும், துணிவும் இருந்தால்தான் உண்மையைக் கண்டு பிடிக்கவே முடியும். நாம் அறிவை உபயோகப்படுத்தாமல் நபிகள் வாக்கியத்திற்கு புரோகிதர்கள் சொல்லுகின்றபடி தப்பர்த்தம் செய்து கொண்டு ‘இதுதான் நபிகள் சொன்னது’ என்று சொன்னால் நபிகளுக்கு மரியாதை செய்ததாகுமா? நமது சொந்தக்கண்ணை பரிசுத்தப்படுத்திப் பரீட்சித்துப்பார்க்க வேண்டும். சாளேசரம் இருந்தால் சரியாய்த் தெரியாது. பக்கப்பார்வையாய் இருந்தாலும் சரியாய்த் தெரியாது. இரண்டுக்கும் தகுந்தபடி தூரத்தை சரிபடுத்தி நல்ல கண்ணாடி கொண்டு பார்க்கவேண்டும்.

மஞ்சள் கண்ணாடி போட்டுக்கொண்டு பார்த்தால் மஞ்சளாகத்தான் தெரியும். சிகப்பு சிகப்பாகவும், பச்சை பச்சையாகவுந்தான் தெரியும். நல்ல சுத்தமான எந்தவித நிறமும் இல்லாத கண்ணாடிகொண்டு பார்க்கவேண்டும். அது போலவே தைரியமான பகுத்தறிவுடன் சுத்தமான நடுநிலைமை மனதுடன் எதையும் பார்க்கவேண்டும். கண்ட உண்மையை தைரியமாய் வெளியில் எடுத்துச் சொல்ல வேண்டும். அப்படிக்கில்லாமல் தங்களுக்கு தெரிந்த தப்பிதங்களை மூடி வைத்திருந்தால் கடைசியாக ரிபேர் செய்யமுடியாத அளவு மோசமானதாகி விடும்.

நீங்கள் பார்க்கின்ற கண்ணும், நீங்கள் செய் கின்ற அருத்தமும், நீங்கள் அறிந்த மாதிரியும் யுக்திக்கும், அனுபவத்திற்கும் பொறுத்திப் பாராமல் எல்லாம் சரியானதாகத்தான் இருக்கும் என்று நினைத்து விடாதீர்கள். உங்களைப்போன்ற மற்றவர்கள் எப்படி நினைத்தார் கள்? நினைக்கிறார்கள் என்று பாருங்கள்.

மற்றவர்கள் மதிப்பது

நபி அவர்கள் உபதேசங்களை துருக்கியர் எப்படி மதிக்கின்றார்கள்? எப்படி அர்த்தம் செய்கின்றார்கள்? அவர்கள் என்ன பலன் அடைகின்றார்கள்? என்பவைபோல உலகத்தின் முஸ்லீம்களின் நடப்பு முழுவதையும், அமுலையும், பலனையும் நன்றாய் கவனித்துப் பார்க்க வேண்டும். உங்கள் ‘எதிரி’ மதத்தை (கொள்கைகளை) பரிசோதிப்பதுபோல் எதிரிஆதாரத்தை எந்தெந்த வழியில் பரிசோதித்து நியாயம் அநியாயம் சொல்லுவோமோ அந்த நோக்கத்துடன், அந்த வேகத்துடன் உங்கள் கொள்கைகள் என்று உங்களுக்குப் புரோகிதர்களால் போதிக்கப்பட்டு நீங்கள் நடக்கும் ஒவ்வொரு நடவடிக்கையையும் பரிசோதித்துப் பார்க்கவேண்டும்.

கண்ட உண்மையை வீரத்துடன் வெளியிட்டு குற்றமிருப்பின் திருத்தவேண்டும். மனிதன் முடிவுபெற்ற முற்போக்கானவன் என்று யாரும் கருதிவிடக்கூடாது. உலகமும் முழு முற்போக்கை அடைந்து விட்டதாகக் கருதிவிடாதீர்கள். திருத்தம் அவசியமானால் திருத்தியாக வேண்டும். திருத்தம் சரியென்று பட்ட வழியில் மனம் திரும்ப பயமோ வெட்கமோ அடையக்கூடாது.

இந்தியாவும் அப்படித்தான்

நபி அவர்கள் தோன்றிய காலத்தில் அரேபியாதேசம் எப்படி இருந்ததென்று மௌல்வீ சாயபு அவர்கள் சொன்னார்களோ அப்படியேதான் இன்னமும் இந்தியா இந்து கொள்கைகள் இருந்து வருகின்றது. அரேபியர்களிடத்தில் பெண் குழந்தை பிறந்தால் துக்கப்பட்டு கொல்லுகின்ற வழக்கம் இருந்ததாக மௌல்வி சாயபு சொன்னார்கள். இந்துக்களிடத்திலும் பெண் குழந்தை பிறந்தால் துக்கப்படும் வழக்கம் இன்னும் இருக்கின்றது. சமீப காலம் வரை பெண்களை பெரிய பெரிய பெண்களை புருஷன் இறந்துபோனால் பக்கத்தில் உயிருடன் வைத்து நெருப்புக்கொளுத்தும் வழக்கம் இருந்து வந்தது. இன்றும் பெண்களை அதைவிடக் கேவலமாய் விதவை என்று சொல்லி சகுனத்தடையாகப் பாவித்து கொடுமைப்படுத்தும் முறை இருந்துதான் வருகின்றது.

அரேபியர் பல கடவுள்களை வணங்கினதாகச் சொன்னார்கள். அதுபோலவே இன்றும் இந்துக்கள் ஒவ்வொருவரும் பல கோடிக்கணக்கான கடவுள்களை உருவத்துடன் மாத்திரமல்லாமல் பெண்டு, பிள்ளை வைப்பாட்டி ஆடு மாடு குதிரை யானை எலி பெருச்சாளி மயில் கெருடன் பாம்புவாகிய உருவங்களுடன் வணங்குகின்றார்கள். இவையெல்லாம் கீழ் மக்கள் என்று சொல்லுகின்றவர்களிடம்தான் இருக்கின்றது என்று நினைத்து விடாதீர்கள். மேல்மக்கள் என்று மதத்தின்பேரால் முடிவு கட்டப்பட்ட மக்களிடமே இருக்கின்றது. ஆதலால் திரு.மகமதுநபி அவர்கள் தோன்றுவதற்கு முன் அரேபியா பாலைவனம் எப்படிப்பட்ட காட்டுமிராண்டித்தனத்தில் இருந்ததோ அதுபோலவேதான் இன்றைய வரையில் இந்தியாவின் இந்து சமூகம் இருந்து வருகின்றது.

இந்த லட்சணத்தில் இதை எடுத்துச் சொன்னால் இந்துக்களுக்கு வரும் கோபத்திற்கு அளவே இல்லை. இந்தமாதிரியான ஒரு மதசம்பந்தமான முக்கிய நாள் என்பதற்கு உங்களைப் போல் இந்துக்கள் என்னைக் கூப்பிட வும் மாட்டார்கள். நான் ஏதாவது சொன்னால் பொறுக்கவும் மாட்டார்கள். என்னை வைவதையே அவர்கள் மதப்பிரசாரமாய் கருதுவார்கள். ஆனால் இஸ்லாம் கொள்கை என்பது எவ்வளவு பெருமையாய் எவ்வளவு சகோதரத் தன்மையாய் யாரையும் எந்தவித அபிப்பிராயக்காரனையும் கூப்பிடவும் அவர்கள் சொல்லும் எதையும் பொருமையாய் கேட்கவும் இருக்கின்ற சுதந்திரத்தைப் பார்த்து இவ்விஷயத்தில் இந்துக்கள் வெட்கப்பட வேண்டுமென்றே சொல்லுவேன்.

துலுக்கர் துடுக்கரா?

மௌல்வி ஆஜீ அப்துல் கரீம் சாயபு அவர்கள் துலுக்கன் துடுக்கன் என்று இந்துக்களால் சொல்லப்படுவதாய்ச் சொன்னார். இது இந்துக்களுக்குள் பலமில்லாத காரணத்தாலும் தங்களுக்குள் வீரமும் ஒற்றுமையும் இல்லாத காரணத்தாலும் சொல்லப்படுவதேயாகும். முஸ்லீம்களுக்குள் இருக்கும் ஒற்றுமையும் வீரமும் இந்துக்களுக்கு துடுக்கர்களாய் காணப்படுவது அதிசயமில்லை. என்னை ஒரு சாயபு அடித்தால் ஒரு அய்யரோ ஒரு செட்டியாரோ ஒரு முதலியாரோ சிபாரிசுக்கு வரமாட்டார். ஏனெனில் ஜாதிப்பிரிவு காரணமாக இந்துக்களுக்குள் சகோதரத்தன்மை இல்லாமல் போய்விட்டது. ஒருவனுக்கு மற்றவர்களிடம் அன்பு இல்லாமல் போய் விட்டது. ஜாதிப்பிரிவு இல்லாத காரணத்தாலேயே முஸ்லீம் மக்களுக்கு சகோதரத்தன்மை இருந்து வருகின்றது.

சகோதரர்களை தாராளமாய் உடையவனைக் கண்டால் யாரும் அஞ்சுவது வழக்கம்தான். ஆதலால் இந்துக்கள் உங்களை குற்றம் சொல்லுகிறார்களே என்று கருதி உங்கள் சகோதரத்தன்மையையும் வீரத்தையும் நழுவவிட்டு விடாதீர்கள். எண்ணிக்கையில் கொஞ்சமாயிருந்தாலும் உலகத்தில் நீங்களும் தலைசிறந்து விளங்கக் காரணமே உங்கள் சகோதரத்தன்மையே யாகும். ஆகையால் அதைவிட்டு விடாதீர்கள். ஆனால் மற்ற கொள்கைக்காரரையும் உங்கள் சகோதரர்களாக ஆக்கிக்கொள்ள முயலுங்கள். அதற்குத் தடையாயிருக்கும் சாதாரண காரியங்களையும் வெரும் வேஷமாத்திரத்தால் இருக்கும் வித்தியாசங்களையும் லக்ஷியம்செய்யாமல் ராஜிக்குத் தயாராயிருங்கள். இந்த வகையில் தான் ஒவ்வொரு கொள்கையும் செல்வாக்குப் பெற்று தலை சிறக்கமுடியும். இஸ்லாம் கொள்கையைப்பற்றி யாராவது தப்பிதமாய் நினைத்திருந்தால் தைரியமாய் திருத்த முற்படுங்கள்.

சந்தேகத்தை திருத்துங்கள்

உதாரணமாக மக்கா யாத்திரையைப் பற்றி மலேயா நாட்டில் உள்ள கிடாசுங்கப்பட்டானியில் என்னிடம் ஒரு இந்து என்பவர் ஒரு கேள்வி கேட்டார். அதாவது ‘இந்துக்களது காசி ராமேஸ்வரம் மதுரை யாத்திரையை மூடநம்பிக்கை என்கின்றாயே, இஸ்லாமானவர்கள் மக்கா யாத்திரை செய்ய மலேயாவில் அநேக முஸ்லீம்கள் செல்வதால் கஷ்ட நஷ்டப்படுகின்றார்களே’ என்றார். நான் பதில் சொல்லமுடியாமல் அப்படியானால் முஸ்லீம்கள் அநுசரிக்கும் கொள்கைகள் முழுவதும் பகுத்தறிவுக்கொள்கை என்று நான் சொல்லவரவில்லை என்றும் அதில் அநேக நல்ல கொள்கை பிரத்தியட்சத்தில் பார்க்கிறேன் என்றும் சொன்னேன்.

பிறகு சென்ற வருஷம் இதே கொண்டாட்ட நாளில் ஈரோட்டிற்கு வந்த மௌல்வி அப்துல் அமீது சாயபு பாகவியவர்களைக் கேட்டேன். அவர் விளக்கமாக்கினார். முஸ்லீம்கள் மக்காவுக்குப் போவதில் செல்வத்திலும், சரீர திடத்திலும் தகுதியுள்ளவர்கள் தான் போகவேண்டுமென்று இருக்கின்றதே தவிர எல்லோரும் போய்த்தீர வேண்டுமென்று இல்லை யென்றும் அந்த இடம் முகம்மதுநபி அவர்கள் உண்மையில் பிரத்தியட்சத்தில் பிறந்தஇடம் என்பதற்காக அங்கு போவது என்பது தவிர வேறு அற்புதமில்லை என்று அறிவு வளர்ச்சிக்கும் மற்ற மக்கள் நடை,

உடை, நாகரீகம் பார்த்து வரவும் பயன்படும் படியான ஒரு யாத்திரை என்றும் “கொலை களவு கொள்ளை நடத்தின பாபம் தீர்ந்து விடும் என்று சொல்லுவது தப்பு” என்றும் அந்த மாதிரி எண்ணத்துடன் யாரும் போவதில்லை என்றும் சொன்னார். யாராவது அந்தப்படி போனாலும் அது தெரியாத்தனமென்றே சொன்னார்கள். ஆகவே மக்களிலேயே பிறவியில் வித்தியாசமில்லை என்று சொல்லும் கொள்கையில் இடத்திற்கு இடம் வித்தியாசம் கற்பிக்கப்பட்டு இருக்காது என்பது பகுத்தறிவில் பட்டதேயாகும். ஆனால் இந்து கொள்கைகள் என்பவற்றில் ‘ஒரு மனிதன் எவ்வளவு அயோக்கியனாயிருந்தாலும், கொலை செய்தாலும், திருடினாலும், நம்பிக்கை துரோகம் வஞ்சகம் முதலிய காரியம் செய்தாலும், ஒரு ஊரை நினைத்தால் ஒரு ஊருக்குப் போனால் ஒரு ஊரில் ஒரு குளத்திலுள்ள தண்ணீரைத் தலையில் தெளித்துக் கொண்டால் பாபம் பரிகாரமாகிவிடும், மோட்சமடைந்து விடுவான்’ என்று எவ்வளவோ அடியோடு பொய் பெருமைகளை கற்பித்து மூடநம்பிக்கை உண்டாக்கி அங்குள்ள சோம்பேறிகள் பிழைக்க ஸ்தல யாத்திரை ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற தென்றும், அப்படிப்பட்ட ஸ்தல யாத்திரைப்புரட்டுகள் எல்லாம் பகுத்தறிவுக்கு விறோதமானது ,மூடநம்பிக்கையில் பட்டது என்றும் சொல்லும்போது மற்றவர்கள் யாராவது அது போல் செய்தாலும், அந்தந்த தலைப்பின் கீழ்தான் வருமல்லவா? என்பதை யோசித்து நடக்க வேண்டியது மக்கள் கடமையாகும் என்று ஒவ்வொருவரும் நினைக்க வேண்டும்.

இப்படிப்பட்ட நாள்

ஆகவே இப்படிப்பட்ட அருமையான நாட்களை மனிதன் மேன்மைக்கும் முற்போக்கிற்கும் ஒற்றுமைக்கும் அறிவு விளக்கத்திற்கும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்கின்ற எண்ணத்தின் மீதே இங்குள்ள இந்து முஸ்லீம்களை சகோதரர்களாகக் கருதியே என் மனதில் பட்டதைச் சொன்னேன். மௌல்வி சாயபு அவர்கள் இருவரும் சொன்ன விஷயங்களிலும் பெரிதும் அறிவுக்கு விறோதமானதோ கேள்விக்கு இடமானதோ இல்லை என்பதை முக்கியமாய் முஸ்லீம்களும் மற்ற இந்துக்களும் கவனித்துப் பார்த்து இதுபோலவே எல்லாக் கொள்கைகள் விஷயங்களிலும் பகுத்தறிவுடனிருக்க வேண்டுமென்றே கேட்டுக் கொள்ளுகிறேன்.

மற்றும் நான் சொன்ன விஷயங்களில் உங்கள் பகுத்தறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் ஒப்புக் கொள்ளாததைத் தள்ளி விடுங்கள். மற்றும் இம் மாதிரி நாட்களை வெறும் விருந்துக்கு உபயோகித்துக் கொள்ளாதீர்கள். இன்று சுமார் 500 ரூ. வசூல் செய்து பெரிய விருந்து சாப்பாடு செய்து சாப்பிட்டதாகத் தெரிகின்றது. இது பிரயோஜனமில்லை. பணங்கள் வசூல் செய்து பகுத்தறிவு பிரசாரம் செய்யவும் ஏழை மக்களுக்கு கல்விக்கும் கொள்கைகளின் உண்மை தத்துவத்தை பகுத்தறிவுக்குப் பொருத்திப் பார்த்து பயன்படுத்தும் தத்துவத்திற்கும் உபயோகிக்கச் செய்யவும் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன்.

02.08.1931 அன்று ஈரோடு முஸ்லீம் வாலிப சங்கக்கட்டிடத்திற்கு முன் நடைபெற்ற நபிகள் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் தந்தைபெரியார் அவர்கள் ஆற்றிய தலைமையுரை - “குடி அரசு” - சொற்பொழிவு - 09.08.1931

அனுப்பி உதவியவர்: தமிழ் ஓவியா