சென்னை மாகாணத்தில் காங்கிரசின் யோக்கியதையும், தேசியத்தின் யோக்கியதையும் எவ்வளவு தூரம் வெளியாகிவிட்டது என்பதும் அதை பொது ஜனங்கள் எவ்வளவு தூரம் மதிக்கின்றார்கள் என்பதும் சமீப காலமாக சென்னை நகரிலும் வெளியிடங்களிலும் நடந்து வரும் நடவடிக்கைகளிலிருந்து நன்றாய் அறியலாம்.
உதாரணமாக “காங்கிரசின் முக்கிய கொள்கைகள் எல்லா ஸ்தல ஸ்தாபனங்களைக் கைப்பற்றுவதுதான்” என்பதாக இருந்தும் மற்றும் எல்லாக் கட்சிகளும் அதாவது சுயராஜ்ஜியக் கட்சி, சுயாட்சி கட்சி, தேசப் பிரதானக் கட்சி, உத்தியோகப் பிரதானக் கட்சி, தேசியக் கட்சி, சுயேச்சை கட்சி என்கின்ற இத்தனை கட்சிகளும் கூட இதையே அதாவது தேர்தல் ஸ்தாபனங்களை கைப்பற்ற வேண்டியதே முக்கிய கடமை என்பதாக இருந்தும் கூட இவ்வளவு கட்சிகளும் சேர்ந்து ஒரே அடியாய் ஜஸ்டிஸ் கட்சியை அழிக்க வேண்டும் என்றும் அதன் ஆதிக்கத்தை ஒழிக்கவேண்டும் என்றும் இரவு பகலாய் எழுதியும் தொண்டை கிழிய கத்தியும் போதாக் குறைக்கு கூலி ஆட்களையும் காலி ஆட்களையும் விட்டு கத்தும்படி செய்தும் கலகம் செய்யும்படி செய்தும் மற்றும் எவ்வளவோ சூழ்ச்சிகள் செய்தும் அதாவது ஜஸ்டிஸ் கட்சி சுயமரியாதைக் கட்சியில் அடங்கி விட்டது என்றும் சுயமரியாதைக் கட்சி நாஸ்திகம் பரப்பி நாட்டைக் கெடுக்கின்றது என்றும் இவை இரண்டும் சேர்ந்து சாமிக்குப் பணம் செலவு செய்ய வேண்டாம் என்றும் ஜாதி இல்லை என்றும் கோயில் கட்ட வேண்டாம் என்றும் கடைசியாக சாமியே இல்லை என்று சொல்லுகின்றதென்றும் மற்றும் எவ்வளவோ விஷமப் பிரசாரம் செய்தும் கடைசியாக தேர்தல்கள் வரும் சமயங்களில் காங்கிரஸ் அடியோடு மறைந்து கொள்ளுவதும் போலீசாரை வைத்துக் கொண்டு பொதுக் கூட்டம் நடத்துவதும், காலிகளை வைத்துக் கொண்டு கமிட்டிக் கூட்டம் நடத்துவதுமான நிலைமைக்கு வந்துவிட்டதை அறியாதாரில்லை.
உதாரணமாக சென்னையில் மகாஜன சபை மண்டபத்தில் நடந்த மாகாணக் கமிட்டி கூட்டமும் ஜில்லா காங்கிரஸ் கமிட்டி கூட்டமும் நடத்தப்பட்ட வைபவங்கள் “தமிழ்நாடு” “சுதேசமித்திரன்” முதலிய தேசீயப் பத்திரிகைகள் என்பனவற்றிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
இன்னமும் தெளிவாய் யாருக்காவது அவற்றின் யோக்கியதைகள் தெரிய வேண்டுமானால் அக்கமிட்டிகளிலும் மற்றும் வெளியிடங்களில் உள்ள கமிட்டிகளிலுமுள்ள அங்கத்தினர்களைப் பற்றி அறிவதன் மூலமும் தெரிந்து கொள்ளலாம்.
அன்றியும் இந்த ஒரு வருஷ காலமாக எங்காவது காங்கிரஸ் கமிட்டி எந்த தேர்தலுக்காவது அபேட்சகர்களை நிறுத்தி இருக்கின்றதா என்பதன் மூலமாகவும் நிறுத்தி எங்காவது வெற்றி பெற்றிருக்கின்றதா என்பதன் மூலமாகவும் நன்றாய்த் தெரிந்து கொள்ளலாம்.
சமீபத்தில் சென்னை நகரில் காலமான காங்கிரஸ் கட்சி சட்டசபை அங்கத்தினர் திரு.பக்தவச்சலம் அவர்களுக்கு பதிலாக ஒரு அபேட்சகரை நிறுத்த காங்கிரஸ் கட்சி முதலியவைகள் தங்களால் கூடுமான வரை பாடுபட்டுப் பார்த்தும் அக்கட்சித் தலைவர்கள் செலவுக்குப் பணம் கொடுப்பதாய் சொல்லியும் ஒருநபர் கூட கிடைக்காமல் போய்விட்டதும் பிறகு ஆந்திர காங்கிரஸ் கமிட்டியின் பேரால் நிறுத்தப் பாடுபட்டுப் பார்த்து, அதற்கும் ஆட்கள் கிடைக்காமல் போய்விட்டதும், கடைசியாக ஜஸ்டிஸ் கட்சி ஆட்களிலாவது ஒருவரைப் பிடித்து தங்கள் கட்சி பேரால் நிறுத்த முயற்சித்து எவ்வளவோ சூழ்ச்சி செய்து பார்த்தும் ஒன்றும் முடியாமல் கடைசியாக ராவ்பகதூர் சி.நடேச முதலியார் அவர்களைப் போய் “நீங்கள் ஜஸ்டிஸ் கட்சியின் பேரால் நிற்காதீர்கள். தனியே நில்லுங்கள் நாங்கள் உதவி செய்கின்றோம்” என்று சொல்லிப் பார்த்தும் ஒன்றும் பிரயோசனப் படாமல் முக்காடு போட்டு மூலையில் உட்கார்ந்து கொண்டார்கள்.
ஆனாலும் சிலருக்கு ஜஸ்டிஸ் கட்சியில் ஏதாவது பிளவு ஏற்பட்டு அக்கட்சியின் பேரால் யாரையும் நிறுத்தாமல் போனால் அதை ஒரு சாக்காக வைத்துக் கொண்டு மற்றபடி வேறு யார் நின்றாலும் அவர்களை தங்கள் கட்சிக்காரர் என்று சொல்லிக் கொள்ளலாமா என்றும் பார்த்தார்கள்.
இந்த முயற்சியில் திரு.வரத ராஜுலு வெகு பாடுபட்டு பார்த்தார். திரு. ராமசாமி முதலியார் வீட்டுக்கு டஜன் கணக்கான முறை நடந்தும் பார்த்தார். கடைசியாக திரு.நடேச முதலியார் தாம் ஜஸ்டிஸ் கட்சி அபேட்சகராய் நிற்பதாக வெளிப்படுத்தினவுடனும் ஜஸ்டிஸ் கட்சியாரும் தங்கள் கட்சிக்காக திரு.நடேச முதலியாரை ஒப்புக் கொண்டு திரு.ராமசாமி முதலியாரால் பிரேரேபிக்கப்பட்ட நியமனச் சீட்டை தாக்கல் செய்தவுடனும் மற்ற எல்லாக் கட்சிகாரர்களுக்கும் சுவாசம் அடங்கி விட்டது.
திரு.நடேச முதலியார் அவர்களும் போட்டியன்னியில் சென்னை நகரத் தொகுதிக்கு சட்டசபை அங்கத்தினராகத் தெரிந்தெடுக்கப்பட்டாய் விட்டது.
காங்கிரஸ்காரர்கள் ஜஸ்டிஸ் கட்சியை ஒழிப்பதற்கென்று வேறு மார்க்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஆஸ்திக சங்கத்தின் பேரால் செய்யும் விஷமப் பிரசாரக் கூட்டத்திற்கு திரு.நடேச முதலியாரை தலைமை வகிக்கச் செய்து பார்த்தும்கூட, திரு. முதலியார் கடைசியாக அதன் யோக்கியதை யையும், சூழ்ச்சியையும் தெரிந்து அவர் முகத்தில் கரியைப் பூசிவிட்டது மிகவும் பாராட்டத்தக்கதாகும்.
என்றாலும் மறுபடியும் காங்கிரஸ்காரர்களும் அவர்களது உட்கட்சிகாரர்களும் தங்களுக்கு நாட்டில் செல்வாக்கு இல்லை என்பதையும் தங்களிடம் நாட்டின் நன்மைக்கு ஏற்ற எவ்வித கொள்கையும் இல்லை என்பதையும் நன்றாய் அறிந்திருந்தாலும் இனியும் அவர்களுக்கு சிறிதாவது நம்பிக்கை எதனால் இருக்கின்றது என்று பார்ப்போமானால் ஒரே ஒரு விஷயம் தான் என்று உறுதியாய்ச் சொல்லுவோம்.
அதென்னவெனில் ஜஸ்டிஸ் கட்சியாருக்கும் சுயமரியாதைச் சங்கத்தாருக்கும் ஏதாவது மனஸ் தாபம் வந்ததா என்பதிலும் அல்லது ஜஸ்டிஸ் கட்சிக்காரர்களுக் குள்ளாகவோ ஏதாவது பிரிவினை ஏற்பட்டதா என்கின்ற நம்பிக்கையிலுமே அவர்கள் உயிர் வைத்திருக்கின்றார்கள்.
சுமார் ஐந்து மாத காலமாக சென்னை நகர் முழுவதும் ஆஸ்திகப் பிரசாரம் செய்து கடவுள்களையும் புராணங்களையும் தெருத் தெருவாய், திண்ணை திண்ணையாய்க் காப்பாற்றியும் காங்கிரசின் யோக்கியதையும் தேசியத்தின் யோக்கியதையும் அதன் தலைவர்களின் யோக்கியதையும் ஐயோ பாவம்! அழுவாரற்ற பிணமாய் போனதைத் தவிர வேறொன்று மில்லை. இனியும் பார்ப்போம்.
(குடி அரசு - கட்டுரை - 25.08.1929)