periyar with follower familyமேல்நாட்டில் கூட சிலர் சுவாமி என்றும் மோக்ஷம் என்றும் நரகம் என்றும் சூக்ஷ&ம சரீரம் என்றும் சொல்லுகின்றார்களென்றும் ஆதலால் அவைகள் நிஜம் என்றும் ஒரு ‘சூக்ஷ&ம சரீரக் காரர்’ தனது பத்திரிகையில் எழுதுகிறார். நாம் அதற்கு ஒரு பதில் தான் சொல்லக் கூடும். அது, முட்டாள்களுக்கும் அயோக்கியர்களுக்கும் இந்தியாவும் சிறப்பாக தமிழ் நாடும் மாத்திரம் சொந்தமா? என்பதுதான்.

(குடி அரசு - சிறு குறிப்பு - 18.11.1928)

***

கார்பொரேஷன் தலைவர்

சென்னை கார்ப்பரேஷன் தலைவர் தேர்தலில் திரு. ஏ. ராமசாமி முதலியார் அவர்கள் வெற்றி பெற்றார் என்ற சேதியைக் கேட்டு மகிழ்ச்சியடையாத உண்மைத் தமிழ் மக்கள் இந்நாட்டில் இருக்க மாட்டார்கள் என்றே நினைக்கின்றோம். தவிர இந்த முடிவானது சென்ற வருஷம் முதலே உறுதியாய் எதிர்பார்த்த முடிவாகும். மேலும் இந்த முடிவானது, சென்னை பார்ப்பனர்கள் தங்களுக்குள்ளாகவோ தங்கள் அடிமைகளுக்குள்ளாகவோ காங்கிரஸ் வேஷத்தாலோ தேசீய வேஷத்தாலோ யாரையும் நிறுத்த முடியாமல் போனதைப் பொருத்தவரையில் பார்ப்பனரல்லாதாருக்கு ஒரு பெரிய வெற்றியானாலும் ஜஸ்டிஸ் கட்சியில் கட்சிப் பிளவை உண்டாக்கும் வேலையில் கரும் பார்ப்பனர்களும் வெள்ளைப் பார்ப்பனர்களும் ஒருவாறு வெற்றி பெற்று விட்டார்கள் என்றே சொல்ல வேண்டும்.

திரு. ராமசாமி முதலியாருக்கு ஏற்பட்ட வெற்றியின் சந்தோஷத்தைவிட ஒரே கட்சியில் ஏற்பட்ட அபிப்பிராய பேதம் வருந்தத் தக்கதேயாகும் என்றாலும் திரு. ராமசாமி முதலியார் அவர்களை தலைவராகக் கொண்ட சென்னை கார்ப்பொரேஷனை நாம் பாராட்டாமலிருக்க முடியாது. சென்னை கார்ப்பொரேஷனுக்கு இதுவரை இருந்த கெட்ட பெயரும் இழிவும் திரு முதலியார் காலத்தில் மாறி அதற்கு ஒரு கௌரவம் ஏற்படும் என்று எதிர்பார்க்கின்றோம்.

(குடி அரசு - செய்தி விளக்கம் - 18.11.1928)

***

லாலா லஜபதி

திருவாளர் பஞ்சாப் லாலா லஜபதிராய் அவர்கள் தமிழ்நாட்டை வந்து நேரில் பார்த்து விட்டு போன பிறகு சென்னை உலகம் என்று “தியாகபூமி”யில் ஒரு வியாசம் எழுதியதை சோழவந்தான் திரு. முனகால் பட்டாபிராமய்யர் அவர்கள் மொழிபெயர்த்து பிரசுரிக்க அனுப்பியிருந்ததை எளிய நடையில் மற்றொரு பக்கம் பிரசுரித்திருக்கின்றோம். அதில் சென்னை அரசியலைப் பற்றியும் கோயில், குளம், புராணம், பண்டிதர்கள், தலைவர்கள் ஆகியவைகளின் யோக்கியதைகளைப் பற்றியும் நன்றாய் விளக்கியிருக்கின்றார். எனவே வாசகர்கள் தயவு செய்து பொறுமையுடன் விஷயம் முழுதையும் படித்துப் பார்க்க வேண்டுகிறோம்.

(குடி அரசு - செய்திக் குறிப்பு - 18.11.1928)