வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்றால் நமது பார்ப்பனர்கள் ஒரே கூச்சலாக ‘தேசம் போச்சுது’, ‘ஒற்றுமை குலைந்தது’, ‘வகுப்புவாதம் மிகக் கெட்டது’ என்று ஒரே கூச்சலாக எல்லாப் பார்ப்பனர்களும் ஒன்றாய்க் கூப்பாடு போடுவதுடன் கூலி கொடுத்தும், நம்மவர்களைப் பிடித்தும், அப்படியே கத்தச் சொல்வதும் நாம் எல்லோரும் அறிந்த விஷயமே. வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை ஏன் பார்ப்பனர்கள் எதிர்க்கிறார்கள் என்பதற்குக் காரணம் ஸ்ரீமான் சி.ராஜகோபாலாச்சாரியார் கொஞ்ச நாளைக்கு முன்பு “பொய் மான் வேட்டை” என்று நவசக்திக்கு எழுதிய ஒரு வியாசத்தில் தன்னை அறியாமலே காட்டிவிட்டார். அதாவது, “வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்பது பார்ப்பனர்களை இனி நீங்கள் நாட்டுக்குத் தொண்டு செய்ய வேண்டியதில்லையென்று ஒதுக்கி வைப்பதாகும். பல்லாயிர வருஷங்களாக நாட்டுக்குத் தொண்டு செய்து வந்த ஒரு ஜாதியினரை இவ்வளவு சுலபத்தில் (வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தின் மூலம் ) ஒதுக்கி விட முடியாது. அறிவும் பயிற்சியும் திறமையும் கொண்டவர்கள் நாட்டிற்கு வேண்டும்” என்று சொல்லியிருக்கிறார்.

periyar and pavanar

இதில் உள்ள மற்ற அம்சங்களைப் பற்றி இப்போது கவனிக்காவிட்டாலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் பார்ப்பனருக்குத்தான் கெடுதி என்பதாக அவரே வெளியிட்டிருக்கும் போது மற்ற பார்ப்பனர்கள் ஆnக்ஷபிப்பதற்குக் காரணம் வேண்டுமா? அது மாத்திரமல்லாமல் இப் பார்ப்பனர்கள் தங்களுக்கு கெடுதி என்று வெளிப்படையாய்ச் சொல்லிக் கொள்ள யோக்கியதையும் தைரியமும் இல்லாததால் தேசத்திற்கு கெடுதி என்று வெள்ளைக்காரர்கள் சொன்னார்கள்; ஜெர்மானியர்கள் சொன்னார்கள்; ஜப்பானியர்கள் சொன்னார்கள்; துருக்கியர்கள் சொன்னார்கள் என்றும் சமாதானமும், ஆதாரமும் சொல்லுகிறார்கள். இப்படிச் சொல்வதானது “பள்ளிக்கூடத்து குழந்தைகள், பள்ளிக்கூடம் போக திருட்டுத்தனம் செய்து விட்டு மறுநாள் போகும்போது உபாத்தியாயர் நேற்று ஏன் பள்ளிக்கூடத்திற்கு வரவில்லை என்று கேட்டால் எனக்கு நேற்று வயிற்று வலி சார் என்கிறதும், வயிற்று வலி என்றால் என்ன என்று கேட்டால் அதென்னமோ எங்கள் அம்மா சொன்னாங்க சார் என்கிறதும்,” போல் இருக்கிறது.

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கெடுதி, கெடுதி, என்றால் யாருக்குக் கெடுதி? பார்ப்பனருக்குக் கெடுதி. இதற்காக அவர்கள் மற்றவர்களை ஒருவருக்கொருவர் உதை போட்டுக் கொள்ளும்படியும், வைது கொள்ளும் படியும், தங்களை வந்து அடைக்கலம் புகும்படியும் செய்து வருகிறார்கள், கொஞ்ச நாளைக்கு முன்பு வைசிராய் பிரபுவும் கவர்னர் பிரபுவும் “வகுப்புவாதம் கூடாது” என்று சொன்னார்கள் என்றும் அதை தங்களுக்கு ஆதரவாய் வைத்துக் கொண்டும் பெரிய ஆர்ப்பாட்டம் செய்தார்கள். கடைசியாய் பார்க்கிறபோது மேன்மை தங்கிய வைசிராய் பிரபுக்கும் கவர்னர் பிரபுக்கும் முதலாளிகளான வெள்ளைக்காரர்கள் கான்பூரில் கூடிய எல்லா இந்தியா ஐரோப்பிய சங்கத்தின் மகாநாட்டில் இந்தியாவின் இயற்கை நிலையை உத்தேசித்து வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் இந்தியாவுக்கு அவசியம் வழங்க வேண்டும் என்பதாகவே பேசியிருக்கிறார்கள். தவிரவும் தற்காலம் நடை பெறும் அரசியல் விவகாரங்களில் வகுப்புப் பிரச்சினைகள் இல்லாத இலாக்காவோ, ஸ்தாபனமோ, தேர்தல்களோ கண்டிப்பாய் இல்லை என்றே சொல்லலாம். தவிரவும் அரசாங்கத்தாரால் அளிக்கப்படும் உத்தியோகங்களும், நியமனப் பதவிகளும், வகுப்புப் பிரச்சினையின் பலனாகவே அழிக்கப்பட்டு வருவதும் பொது ஜனங்களாலும் கேட்கப்பட்டு வருவதும் இரகசியமானதல்ல. அப்படியானால் எதற்காக இனியும் கேட்க வேண்டும் என்கிற கேள்வி பிறக்கலாம். உத்தியோகங்களும் பதவிகளும் சர்க்கார் தயவாலும், தேர்தல் களில் ஸ்தானங்கள் பார்ப்பனர்களின் தயவாலும் வகுப்புவாரிப் பிரதிநிதித் துவம் பெறக் கூடியதாயிருப்பதால் மக்கள் தங்கள் தங்கள் தேச சமூக நலத்தையே கவனிக்காமல் அனேக சமயங்களில் தேசத்தையும் வகுப்பையும் சர்க்காருக்கும் பார்ப்பனருக்கும் காட்டிக் கொடுத்தும் துரோகம் செய்து ஸ்தானம் பெற வேண்டியிருக்கிறது.

உதாரணமாக சட்டத்தில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டிருந் தால் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்திற்கு வியாக்யானம் செய்வதிலேயே ஸ்ரீமான் ஆர்.கே. ஷண்முகம் செட்டியார் போன்றவர்கள் சமயத்திற்குத் தகுந்தபடி பார்ப்பனர்களுக்கு பயந்துக் கொண்டு பேச வேண்டியதில்லை. ஸ்ரீமான் ஆர்.கே. ஷண்முகம் செட்டியார் அரசியலில் தலையிடும் போதே வகுப்புவாரிப் பிரதிநிதித்துவக் கட்சியார் மூலமாகவே அ , ஆ படித்தவர். ஸ்ரீமான் டி.எ. ராமலிங்கம் செட்டியாரும் அதுபோலவே வகுப்புப் பேரைச் சொன்னதினால்தான் அரசியல் உலகில் அன்னியர்களுக்கு மனிதர்களாக காணப்படுகிறார். ஸ்ரீமான் முத்தையா முதலியார் வகுப்புவாரிப் பேச்சு வெளியான பிறகுதான் அரசியல் உலகில் அப்படி ஒருவர் இருக்கிறார் என்று தெரியப்பட்டார். டாக்டர் வரதராஜுலு நாயுடு என்பவரும் வகுப்புவாரிப் பேச்சில்லாமல் இருந்தால் பூதக்கண்ணாடி வைத்துப் பார்த்தாலும் அரசியலில் கண்ணுக்குத் தென்படாத நிலையில் இருப்பார். ஸ்ரீமான் திரு.வி.கல்யாணசுந்திர முதலியார் என்பவரும் எந்தக் காரணத்தை முன்னிட்டும் பொது மக்கள் ஞாபகத்துக்கு வரக்கூடாதவராகவே இருந்திருப்பார். இம் மாதிரிச் செய்ய நமது பார்ப்பனருக்கு சக்தி உண்டு.

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ கொள்கை முற்ற முற்றத்தான் ஸ்ரீமான்கள் பாவலர், குப்புசாமி முதலியார், குழந்தை, வெங்கிட கிருஷ்ண பிள்ளை, ஷாபி மகம்மது சாயபு, அமீத் கான் சாயபு முதலிய கனவான்கள் பெயரும் பிரபலமாகவும், அவர்களே பார்ப்பனரல்லாதார் தலைவர்களாகவும் இடம் ஏற்பட்டுக் கொண்டு வருகிறது. (தலைவர் பட்டம் ஒருவருக்கே சாஸ்வதமா?) அல்லாமலும் வகுப்புவாரி உரிமை சட்டத்தில் இல்லாததால்தான் எல்லாத் தலைவர்களும் ஒரு நாள் வகுப்புவாரி உரிமை கேட்கவும், மறு நாளைக்கு வேண்டாம் என்கவும், ஒரு நாள் காங்கிரஸ்தான் நாட்டுக்கு நல்லதென்கவும், மறு நாளைக்கு எல்லோருக்கும் உரிமை இல்லாத நாட்டில் காங்கிரஸ் கேட்டை விளைவிக்குமென்கவும், ஒரு நாள் செல்வச் செருக்கும் செல்வாக்குப் பெருக்கும் நிலைக்காதென்கவும், மறுநாளைக்கு ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார்தான் யோக்கியமான தலைவர் என்கவும், ஒரு நாளைக்கு ஸ்ரீமான் சத்தியமூர்த்தி கையில் ஜால்ரா கொடுக்க வும், மறுநாளைக்கு ஸ்ரீமான் சத்தியமூர்த்தியைக் கூப்பிட்டு மந்திரிசபை அமைக்கச் சொல்லவும் நேரிடுகிறது. இப்படிப்பட்ட கனவான்களையே இன்னமும் தாராளமாய் ஆயிரக்கணக்காய் நமது பார்ப்பனர்கள் சிருஷ்டிக்கவும் அழிக்கவும் முடிகிறது. இந்த தைரியத்தால்தான் ஸ்ரீமான் தண்டபாணி பிள்ளை போன்றவர்களை அரசியல் மகாநாட்டிலிருந்து அடித்து துரத்தி விடலாம் என்கிற தைரியமும் அவர்களுக்கு உண்டாகிறது.

1919 க் கடைசியில் திருச்சினாப்பள்ளி தில்லை நாயகம் பிள்ளை படித்துறையில் பார்ப்பனப் பெண்கள் தண்ணீர் மொள்ளக் கூட யோக்கியதை இல்லாமல் நடுக்கமுற்றுக் கிடந்த காலத்தில் இந்தப் பார்ப்பனர்களுக்கு ஸ்ரீமான் தண்டபாணி பிள்ளையும், வரதராஜுலு நாயுடுவும், கலியாணசுந்திர முதலியாரும் வீரர்கள் போலவும், தென்னாட்டுத் திலகர்கள் போலவும், சாதுக்கள் போலவும் காணப்பட்டார்கள். அவர்களை திருச்சிக்கு கூட்டிக் கொண்டு போயும் பார்ப்பனரல்லாதார் கட்சியை திட்டச் செய்தும், வையச் செய்தும் தாங்களும் தங்களது பெண்களும் தாராளமாய்த் தெருவில் நடக்கும் யோக்கியதைப் பெற்றார்கள். இப்போது இவர்களுக்குப் பதிலாய் ஸ்ரீமான்கள் பாவலர், குப்புசாமி முதலியார், குழந்தை முதலியவர்களை ஏற்பாடு செய்து கொண்டவுடன் இவர்களையே அதாவது ஸ்ரீமான் தண்டபாணி பிள்ளையை அடிக்கவும் வரதராஜுலு நாயுடுவை ஒழிக்கவும் கல்யாணசுந்திர முதலியாரை மிரட்டவும் துணிந்து வெற்றி பெற்றும் வரு கிறார்கள். அதற்குப் பயந்து கொண்டு இவர்களும் நிமிடத்திற்கு ஒரு வேடம் போடவும் துணிகிறார்கள். ஆதலால் பார்ப்பனர்களுக்கு நம்முடைய தலைவர்களை ஆக்கவும் அழிக்கவும் சக்தியில்லாமல் செய்ய வேண்டுமானாலும் பார்ப்பனர் தயவும் சர்க்கார் தயவும் இருந்தால்தான் தலைவராகலாம், பதவி பெறலாம், மந்திரியாகலாம், உத்தியோகம் பெறலாம் என்கிற எண்ணத்தால் தேசத்தையும் சமூகத்தையும் பார்ப்பனருக்கு விட்டுக் கொடுக்காமலிருக்க வேண்டுமானாலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்பது சட்டத்தில் ஏற்கப்பட்டுவிட வேண்டுமே அல்லாமல் சர்க்கார் தயவிலும் பார்ப்பனர் தயவிலும் இருக்கக் கூடாது என்பதுதான் நமது கக்ஷி.

(குடி அரசு - கட்டுரை - 26.12.1926)

Pin It