பணகால் ராஜா அவர்கள் மந்திரி பதவிகளை பங்கிட்டுக் கொள்ளும் விஷயத்தில் சட்டசபை சம்பந்தப்பட்ட வரையில் ‘ஜஸ்டிஸ் கட்சி’ அல்லது பிராமணரல்லாதார் என்கிற கட்சிப் பெயரைக் கூட விட்டுவிட்டு அதற்கு வேறு பெயர் வைத்துக் கொள்ள சம்மதித்ததாக ‘மித்திரன்’ முதலிய பத்திரிகைகளில் காணப்படுகிறது. ‘‘செருப்புக்காகக் காலா? காலுக்காகச் செருப்பா?” என்னும் பழமொழி போல் கட்சிக்காக மந்திரியா, மந்திரிக்காக கட்சியா? மந்திரி உத்தியோ கத்திற்காக கட்சியின் பெயரை மாற்றிக்கொள்ள சம்மதித்த பணகால் ராஜாவின் நிலைமையை யாரும் கண்டிக்காமலிருக்க முடியாது. சட்டசபையில் பணகால் அரசர், தானும் தனது கட்சியாரும் பார்ப் பனரல்லாதார் கட்சிப் பிரதிநிதி என்பதை மாற்றிக் கொள்வார்களேயானால் சட்டசபையைப் பொறுத்த வரையில் வேறு யாருடைய பிரதிநிதி என்று சொல்லிக் கொள்ள அருகதையுடையவர்கள் ஆவார்கள்.

periyar 341டாக்டர் நாயரவர்களும் சர். தியாகராய செட்டியாரவர்களும் எந்த சமயத்திலும் தங்களுடைய கட்சிப் பெயரையோ கொள்கையையோ ஒரு கடுகளவு மாற்றிக் கொள்வ தற்கும் எப்பேர்ப்பட்ட நெருக்கடியான சந்தர்ப்பத்திலும் சிறிதும் சம்மதித்த வர்களல்லர். அந்த உறுதி அவர் களிடத்தில் இருந்ததினாலேயே பார்ப்பன ரல்லாதார்களுக்கே ஒரு அந்தஸ்து இருந்து வந்திருக்கிறது. அவர்கள் காலத்தில் நடந்த இரண்டு தேர்தல்களிலும் பூரண வெற்றி பெற்று மந்திரி களை நியமிக்கும் யோக்கியதைகளையும் அடைந்திருந்தார்கள். அவர்கள் காலமான பிறகு அது போல் உறுதியும் நேர்மையுமில்லாத தலைவர்கள் மூலம் அக்கட்சி நடைபெற வேண்டியிருந்தபடியால் பார்ப்பனர்கள் சூழ்ச்சி இக்கட்சியை வெகு சுலபத்தில் கலைக்கத் தைரியம் கொண்டு விட்டது. ஒரு சிறு மாறுதல் ஏற்பட்ட காரணத்தினாலேயே ஒரு நெருக்கடி யான சமயத்தை சமாளிக்க முடியாமல் கட்சியின் பெயரை விட்டு விட சம்மதித்தது கொஞ்ச மாவது சுயமரியாதையுள்ளவர்களும் சுயநலமற்றவர்களும் செய்யும் காரியமென்று சொல்ல முடியாது.

பணகால் அரசர் உண்மையிலேயே உறுதியும் சுயமரியாதையும் உள்ளவராகயிருந்தால், கவர்னர் பிரபு தன்னை அழைக்காமல் வேறு ஒருவரை அழைத்து, மந்திரி சபையை அமைக்கும் படி கேட்டதன் பின் கண்டிப்பாய் மந்திரி விஷயத்தைப் பற்றி எந்த விதத்திலும் கலந்து கொள்ளாமலிருப்பதே அறிவுடைமையும் சுயமரியாதை யுமாகும். எப்பொழுது கவர்னர் பிரபு தன்னைக் கூப்பிடவில்லையோ அப்போழுதே தான் தலைமை வகித்து நடத்தும் கட்சியாகிய பார்ப்பன ரல்லாதார் கட்சி சிறுபான்மைக் கட்சி என்றோ தோல்வியடைந்த கட்சி என்றோ கவர்னர் பிரபு நினைத்து விட்டாரென்பது அர்த்தமா அல்லவா? அப்படி அவர் நினைத்த பிறகு அம்மந்திரி பதவியை எந்த வழியிலாவது ஏற்பது மானமுடைமை யாகுமா?

கவர்னரே மறுபடியும் பனகால் அரசரைக் கூப்பிடுவதாயிருந்தாலும் மாட்டேன் என்று சொல்லிவிட்டு சட்டசபைக்கு வெளியில் இருந்து கொண்டு தீவிரப்பிரசாரம் செய்து தங்கள் கட்சியார் சிறுபான்மையோரா பெரும் பான்மையோரா என்பதை கவர்னர் அறியும் படிச் செய்வதும் சர்க்காரின் யோக்கியதையையும் பார்ப்பனர்களின் சூழ்ச்சி யையும் பொது மக்கள் அறியும்படி செய்வதும் முக்கியக் கடமையாகும். அப்படிக்கில்லாமல், கக்ஷி, மந்திரிசபை நியமிக்க முயற்சி செய்வதிலோ அல்லது மற்றவர்கள் முயற்சி செய்தால் அதில் தானும் அல்லது தனது கட்சியாரும் ஒன்றிரண்டு மந்திரி ஸ்தானத்தை ஒப்புக் கொள்வதிலோ கவலை செலுத்துவார்களேயானால் அடுத்த மூன்று வருஷத்திற்குப் பார்ப்பனரல்லாதார் கட்சியும் அவர்களது கொள்கையும் ஸ்தம்பிக்கப்பட்டுப் போய்விடும் என்றே எச்சரிக்கை செய்வோம்.

ஜஸ்டிஸ் கட்சி அடுத்த மூன்று வருஷ காலத்துக்கு மந்திரி பதவி விஷயத்தில் சம்பந்தப்படாமலிருந்து விடுமேயானால் பொது மக்கள் அக் கட்சியின் கொள்கையை முன்னிலும் பதின் மடங்கு வேகத்தோடு ஈடேற்றி வைப்பதற்குத் தானாகவே முன் வருவார்கள். அரசாங்கத்தாரும் ஒருவர் பேரில் ஒருவரை தூண்டிவிட்டு வேடிக்கைப் பார்க்கும் தன்மையிலிருந்தும் கொஞ்சம் மாறுவார்கள். அடுத்து வரப்போகும் மூன்று வருஷ காலத்துக் குள்ளாக மந்திரி பதவி இல்லாவிட்டால் பார்ப்பனரல்லாதார்கள் அடியோடு ஒழிந்து போய் விடுவார்களா? ஜஸ்டிஸ் கட்சியும் மந்திரி பதவி இல்லா விட்டால் செத்துப் போக வேண்டியதுதானா? ஒரு மயிர் உதிர்ந்து போனால் கவரிமான் வாழா தென்பார்கள். அப்படிப்போல் ஒரு மந்திரி பதவி போய் விட்டால் ஜஸ்டிஸ் கட்சி வாழ முடியாதா? மந்திரி பதவிக்காகவா இக்கட்சி ஏற்பட்டது? அப்படியானால் அது ஒழிந்து போக வேண்டியதுதான்; அப்படிக் கில்லாமல் பார்ப்பனரல்லாத மக்களின் சுயமரியாதைக்காக ஏற்படும் கட்சியா யிருக்குமானால் அது மந்திரி சபையை மறந்து வெளியில் வந்து ஆண்மை யுடன் போராட வேண்டியதுதானேயொழிய கட்சிப் பெயரை மாற்றியாவது பதவி பெற நினைப்பது சுயமரியாதைக்காகப் பாடுபடும் தலைவர்களின் கடமை அல்லவென்றே சொல்லுவோம்.

சட்டசபையின் மூலமும் மந்திரி பதவியின் மூலமும் நாட்டுக்கு ஒரு பலனும் ஏற்பட்டு விடாதென்பதை நாம் பல தடவை சொல்லியிருக்கிறோம். ஆறு வருஷ காலம் இப்பதவியை அநுபவித்தவர்களும் பெரும்பாலும் இதே அபிப்பிராயத்தை சொல்லி யிருக்கிறார்கள். அன்றியும் பார்ப்பனரல்லாத மக்களின் சுயமரியாதையின் எல்லை முழுவதும் சட்டசபையின் மூலம் அடைந்து விடலாம் என்பதும் பகற் கனவேயாகும். நமது சுயமரியாதையின் எதிரிகளால் ஏற்படும் சூழ்ச்சி களில் ஒரு சிறிது ஒழிக்க முடியுமானாலும் இச்சிறு நன்மைக்காக கட்சியின் பேரையே பலி கொடுப்பது பிள்ளை வரத்திற்குப் போய் புருஷனைப் பறிகொடுத்ததற் கொப்பாகுமே தவிர வேறல்ல. தவிரவும் ஏதாவதொரு கட்சிக்குத் தலைவர்களாயிருப்பவர்களுக்கு ஏதாவதொரு பதவியோ அதிகாரமோ கிடைக்கக் கூடிய சந்தர்ப்ப மேற்பட்டாலே அக்கட்சிக்கு முடிவு காலமென்றுதான் சொல்லவேண்டும். ஏனெனில் அதிகார பதவி களிலிருப்பவர்கள் ஒருக்காலும் யோக்கியமாய் நடந்து கொள்ள முடியவே முடியாது. அவ்வதிகாரத்தைக் காப்பாற்றிக் கொள்ளவும், கட்சி சேர்க்கவும் அநேக அயோக்கியத்தனமான காரியங்கள் செய்ய வேண்டியதோடு மற்ற வர்கள் செய்யும் அக்கிரமங்களையும் நாணயக் குறைவுகளையும் அநு மதிக்க வேண்டியும் வரும். ஆதலால் நிவர்த்தி இல்லாத சமயங்களில் மாத்தி ரம் ஏதோ பதவிகளை ஏற்றுக் கொள்ளலாமே தவிர மற்றபடி பதவிகளை வகிப்பது கட்சிக்கு ஆபத்தாகவே முடியும்.

பணகால் அரசர் சென்ற மூன்று வருஷங்களாக மந்திரி பதவியில்லாமல் வெளியிலிருந்திருப்பாரானால் ஜஸ்டிஸ் கட்சியின் நிலைமை தேர்தலில் வேறு மாதிரியாயிருந்திருக்கு மென்று உறுதியாய் சொல்லுவோம். சர்.தியாகராய பெருமானுக்கிருந்த மதிப் பெல்லாம் அவர் வெளியிலிருந்ததினால்தானே யொழிய மந்திரியா யிருந்த தினாலல்ல. ஆதலால் என்ன வரினும் கட்சியையும் கட்சிப் பெயரை யும் விட்டுக் கொடுக்காமலும் தலைவர்களாயிருப்பவர்கள் பதவிகளில் பிரவே சிக்காமலும் இருப்பதே கட்சியைக் காப்பாற்றுவதாகும். தவிரவும் மந்திரி பதவியை ஏற்பவர்கள் வாங்கும் சம்பளங்கள் ஒரு குறிப்பிட்ட சிறு தொகை தவிர மற்றவை கட்சிப் பிரசாரத்திற்கே ஒப்படைக்கப்பட வேண்டும். அது முடியாதாயின் மந்திரியின் சம்பளத்தை வருஷம் ஒன்றுக்கு பதினாயிரம் ரூபாய்களுக்குள்ளாகவே நிர்ணயிக்க வேண்டும். அப்பொழுது தான் பதவிகளுக்கு இத்தனை ஆத்திரங்களும் பதவியிலிருப்பவர்கள் மேல் இவ்வளவு பொறாமைகளும் விரோதிகளும் ஏற்படமுடியாது. பதவிகளை ஏற்ற பிறகும் பதவிகளைக் காப்பாற்றிக் கொள்ள இவ்வளவு அக்கிரமங் களும் செய்ய வேண்டி வராது.

அரசியலிலானாலும் சுயமரியாதையிலானா லும் கட்சி நலத்துக்கென்று சட்டசபைக்கு நிற்பவர்கள் மிகவும் அருமையா கவே இருக்கிறார்கள். ஏறக்குறைய இப்போது தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் சுமார் நூறு பேர்க ளிலும் 2 அல்லது 3 பேராவது கட்சியையோ தேசத் தையோ சமூகத்தையோ சுயமரியாதையையோ லட்சியம் செய்து சட்ட சபைக்கு வந்தார்களென்று யாராவது சொல்ல முடியுமா? அப்படி இருந்தால் கவர்னர் பிரபு வாலழைக்கப்பட்ட ஸ்ரீமான் நரசிம்ம ராஜு அவர்கள் மூன்று மாதத்தில் ஆறு கட்சி மாறியிருப்பாரா? பனகால் அரசர் கட்சிப் பெயரை மாற்றச் சம்மதிப்பாரா? ஸ்ரீமான் ஐயங்காரவர்கள் பதினாயிரக்கணக்கான புரட்டுப் பேசியிருப்பாரா? ஸ்ரீமான் ஆச்சாரியாரவர்கள் ஆயிரத்தெட்டு சூழ்ச்சிகள் செய்வாரா?

கட்சித் தலைவர்கள் என்று சொல்லிக் கொள்ளுபவர் களின் நிலைமையே இப்படியிருந்தால் மற்றபடி வாலர்களின் யோக்கியதை யைப்பற்றி எழுத ஆரம்பித்தால் அது படிப்பதற்கே அருவருக்கத்தக்கதாகு மென்றே நினைக்கிறோம். ஆதலால் ஜஸ்டிஸ் கட்சி என்பதோ பார்ப்பன ரல்லாதார் கட்சி என்பதோ மக்களுக்குப் பயன் அளிக்க வேண்டுமானால் இம்மாதிரி நிலைமைகளிலும் இம்மாதிரி தலைவர்களிடமும் சிக்கி அல்லல் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதோடு நமது சுயமரியாதைக்கு எதிரிகளான பார்ப்பனர்களும் மற்றவர்களும் தேர்தல் முடிவுகளைக் கூறிக் கொண்டு ஜஸ்டிஸ் கட்சி மாண்டு விட்டது; பார்ப்பனரல்லாதார் கட்சி செத்தது; வகுப்புத் துவேஷக் கட்சியை பொது ஜனங்கள் விரும்பவில்லை என்று பசப்பி ஓலமிட்டுத் திரிவதற்கு அநுகூலமாக நடந்து கொள்ளாமல் மன உறுதியுடனும் சுயமரியாதையுடனும் நடந்து கொள்ள வேண்டும். கட்சி என்று சொல்லுவ தெல்லாம் அதிலுள்ள கொள்கைகளுடையவும் திட்டங் களுடையவும் மதிப்பைப் பொறுத்ததே ஒழிய ஆள்களின் மதிப்பையும் ஆள் கூட்டத்தின் எண்ணிக்கையையும் பொறுத்தது அல்ல. ஆதலால், கொள்கையையும் உறுதியையும் கடைப்பிடித்த சிலரையாவது கொண்டு பார்ப்பனரல்லாதார் கட்சி கட்டுப்பாடாய் வேலை செய்யாத பக்ஷம் அடுத்த மூன்று வருஷத்திற்குள் கண்டிப்பாய் இருக்குமிடம் தெரியாமல் மறைந்து விடுமென்றே கவலையுடன் எச்சரிக்கை செய்கிறோம்.

(குடி அரசு - தலையங்கம் - 28.11.1926)

Pin It