கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

"ஹிந்து சமூகத்தில் ஜாதி, வர்ணம் வகுப்பு சம்பந்தமான வேற்றுமைகளுக்கு அங்கீகாரம் கொடுத்தலாகாது என்ற நோக்கத்தைக் கொண்டு" தோழர் (தென்னேட்டி) விஸ்வநாதம் என்பார் (இவர் ஆந்திரப் பார்ப்பனர். இட ஒதுக்கீடு அரசு ஆணை கூட்டத்தில் ஜி.ஓ. கூடாது என்று சட்ட மன்றத்தில் வாதாடிய தெலுங்குப் பார்ப்பனர் ஆவார்) இவர். சட்டசபையில் ஒரு மசோதாவைக் கொண்டு வருவதற்கு நோட்டீஸ் கொடுத்திருப்பதாக அறிகிறோம். "எந்த ஹிந்துவும் தனது பெயருடன் ஜாதியைக் குறிக்கும் வார்த்தையைச் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்றும், ஜாதியின் காரணமாக அணுகூலம் தேடுகிறவரோ, கொடுப்பவரோ, ஒரு மாத வெறுங்காவல் அல்லது 1.000 ரூபாய் அபராதம் தண்டனையாக விதிக்கப்படலாம் என்றும், ரிக்கார்டுகளில் ஜாதியைக் குறிக்கும் வார்த்தைகள் எடுபட்டு விட்டதாகக் கருதப்படும் என்றும், இதற்குச் சட்டத்தில் அங்கீகாரம் கிடையாது" என்றும் இம்மசோதாவில் காணப்படுகிறது.

வாசகர்கள் கீழேயுள்ளதையும் படிக்குமாறு வேண்டுகிறோம்:-

"மக்கள் பிறவியினால் உயர்வு தாழ்வு உண்டு என்ற கொள்கையை அடியோடு மறுப்பதுடன், அதை ஆதரிக்கின்ற மதம், வேதம், சாஸ்திரம், புராணங்கள் ஆகியவற்றைப் பொதுமக்கள் பின்பற்றக் கூடாது என்றும்;

வருணாசிரமம் என்ற கொடுமையான கட்டுப்பாட்டையும் சமுதாய முறையில் காணப்படும் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர், பஞ்சமர் முதலிய ஆட்சேபகரமான பிரிவுகளையும் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றும்;

மக்கள் தங்கள் பெயர்களோடு ஜாதி அல்லது வகுப்பைக் காட்டுவதற்காகச் சேர்க்கப்படும் பட்டங்களை விட்டுவிட வேண்டும் என்றும்;

ஜாதி அல்லது சமயப்பிரிவுகளைக் காட்டும் குறிகளை யாரும் அணிந்து கொள்ளக்கூடாது என்றும்;

இம்மகாநாடு தீர்மானிக்கிறது"

1929-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17, 18 தேதிகளில் தோழர் சௌந்திரபாண்டியன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற செங்கற்பட்டு முதலாவது சுயமரியாதை மாகாண மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 5, 6, 9, 10 ஆகிய நான்கு தீர்மானங்களே மேலே நாம் எடுத்துக் காட்டியிருப்பவை.

அந்தக் காலத்தில் தோழர் விஸ்வநாதம் ஆகட்டும், அவரை ஆதரித்து இன்று பத்தி பத்தியாக எழுதும் "பாரத தேவி" ஆசிரியர் ஆகட்டும், சமுதாயப் பிரச்சனை சம்பந்தப்பட்ட மட்டில் விலாசம் தெரியாத பேர்வழிகள்; அல்லது சுயமரியாதைக்காரர்களை இதே தீர்மானங்களுக்காகக் கல்லாலும் சொல்லாலும் தாக்கிய வைதீகத்திற்குத் துணை நின்ற காங்கிரசில் கலந்தவர்கள்.

தொலையட்டும் இத்தகைய புரட்சிக் கருத்துக்களுக்கு 18 ஆண்டுகளாக விதையூன்றிய ஓர் இயக்கத்திற்கு இப்போதாவது இவர்கள் நன்றியுடையவர்களாக இருக்கிறார்களா என்றால், அதுவுமில்லை. சுயமரியாதைப் பற்றுக் கொண்ட பள்ளி ஆசிரியர்கள் மீதும் பொது மக்கள் மீதும் பாணம் தொடுக்கிறார்கள்! காரணம் மத எதிர்ப்புப் பிரசாரமும் நாஸ்தீகப் பிரச்சாரமும் செய்கிறார்களாம்! ஜாதிகளை ஒழிக்கக்கூடாது என்று மதமோ, கடவுளோ கூறுவதாக வைதீகர்கள் ஆதாரம் காட்டுவார்களேயானால், அப்போது தென்னேட்டி விஸ்வநாதம் அவ்வைதீகர்களுக்குப் பதில் கூறுவாரா அல்லது தம் மசோதாவை நழுவ விட்டு விடுவாரா? பதில் கூறுவாரேயானால் வருணாசிரம தர்மத்தை வற்புறுத்தும் பகவத் கீதையை மறுத்துக் கூறுவாரா? "தஸ்யூக்கள் (திராவிடர்கள்) தலையில் இடியைப் போடு. ஓ, இந்திரனே!" என்று கூறும் வேதத்தைத் தீயிலிட்டப் பொசுக்க வேண்டும் என்று கூறத் துணிவாரா?

"பிராமணன் சம்பளம் கொடுத்தேனும் கொடாமலேனும் சூத்திரனிடத்தில் வேலை வாங்கலாம்; ஏனெனில் சூத்திரன் பிராமணனுக்குத் தொண்டு புரிவதற்காகவே பிராமணனால் சிருஷ்டிக்கப்பட்டிருக்கின்றானல்லவா?" என்று எட்டாவது அத்தியாயம் 413- வது சுலோகத்தில் கூறும் மனுதர்ம சாஸ்திரத்திற்கு விஸ்வநாதம் என்ன பதில் கூறுவார்? அது அபத்தம், சுத்தப் பித்தலாட்டம், அயோக்கியத்தனம் என்று கூறத் துணிவிருக்குமா? அப்படிக் கூறினால் அவருடைய கூட்டுத் தோழர்களான சகஜானந்த "சாமி"யும் "சர்தார்" வேதரத்தினமும் கொண்டு வரவிருக்கும் மதக் கண்டனத் தடை மசோதாவின்படி தண்டிக்கப்படுவாரே!

தோழர் விஸ்வநாதம் முயற்சியானது உண்மையிலேயே ஜாதியை ஒழிக்கும் நல்லெண்ணத்துடன் கொண்டுவரப்படுவதாக நாம் கருதவேயில்லை. சுப்பிரமணி பாரதியார் பேரனுக்கு விவசாயக் கல்லூரியில் இடங்கிடைக்க கஷ்டமாயிருந்தது என்பதற்காகவும் திருச்சி ஹாலாஸ்யமய்யரின் மகனுக்கு மெடிக்கல் காலேஜில் இடம் கிடைக்கவில்லை யென்பதற்காகவும், அருணாசலமய்யர் (அய்.சி.எஸ்) கூட்டுறவு இலாகா ரிஜிஸ்டரார் பதவியை விட்டுப் போக வேண்டி ஏற்பட்டது என்பதற்காகவும், சென்னை கவர்னர் பதவியை தோழர் ஆச்சாரியாருக்குக் கொடுக்கக்கூடாது என்று தோழர் ஓமத்தூர் ராமசாமியவர்கள் பிடிவாதமாயிருந்தார் என்பதற்காகவும், இம்மாதிரி ஒரு மசோதாவைக் கொண்டு வருகிறாரே தவிர உண்மையில் ஜாதிகள் ஒழிய வேண்டும் என்ற எண்ணம் இவருக்கு இருப்பதற்காத் தெரியவில்லை.

அப்படி இருக்குமேயானால் கீழ்க்கண்ட காரியங்களையும் அவர் சட்டம் மூலம் சாதிக்க வேண்டும்:-

1. எவரும் பூணூல் அணியக்கூடாது.

2. எவரும் ஜாதியைக் குறிக்கும் நெற்றிக் குறியை அணியக்கூடாது.

3. கிருஸ்தவர்களும் ஜாதிப்பட்டங்களை விட்டுவிட வேண்டும்.

4. ஆரியர்கள் திராவிடர் வீடுகளுக்குப் புரோகிதம் வைப்பதன் மூலம் தங்கள் ஜாதி உயர்வை நிலைநாட்டுவதை ஒழிக்க வேண்டும்.

5. ஆரியர்கள் கோவில் மடப்பள்ளி, மூலஸ்தானம் ஆகிய இடங்களை விட்டு வெளியேறிவிட வேண்டும்.

6. பிராமண மகா சபை, நாடார் சங்கம், முதலியார் சங்கம், வன்னியர் சங்கம், வன்னியர் சங்கம் போன்ற ஜாதிச் சங்கங்கள் எல்லாம் சட்ட விரோதமாக்கப்பட வேண்டும்.

7. ஒரே ஜாதியில் திருமணம் செய்து கொள்வது சட்டபூர்வாகத் தடுக்கப்பட வேண்டும்.

8. ஜாதியைக் குறிக்கும் பாடம் புத்தகங்கள், கதைகள், புராணங்கள், இதிகாசங்கள், மனுதர்மம், பகவத் கீதை போன்ற நூல்கள் யாவும் கொள்ளுத்தப்பட வேண்டும்; அல்லது சட்டம் மூலமாகத் தடுக்கப்பட வேண்டும்.

9. நகரங்களிலும் கிராமங்களிலும் 'அக்கிரகாரங்கள்' என்ற பெயரால் இருந்துவரும் ஆரியச் சேரிகள் காலி செய்யப்பட வேண்டும்; அல்லது அங்கு மற்றவர்களும் கலந்து குடியிருக்க வேண்டும்.

10. ஜாதி உயர்வைப் பாராட்டாமல் ஆரியர்களும் அவர்களைக் காப்பியடிக்கும் "மேல் ஜாதிக்காரர்களும்" மற்றவர்களைப் போலவே சவரத் தொழிலோ, துணி வெளுக்கும் தொழிலோ, பயிர் வேலையோ, வீடு கட்டுவதோ, வண்டியிழுப்பதோ கல்லுடைப்பதோ - எதையும் செய்ய முன்வர வேண்டும்.

இவ்வளவும் நிகழ்ந்தாலொழிய ஜாதி ஒழியாது. இவைகள் நிகழும் போது இந்து மதம் சவக்குழியில் சவக்குழியில் கிடக்கும்; அதன்மீது புல் முளைத்திருப்பதைக் காணலாம். இதைதான் சு.ம.காரர்களும் கூறி வருகின்றனர். இவர்களைத் தான் முட்ட வருகின்றன. வைதீகப் பிறவிகள். தோழர் விஸ்வநாதம் அவர்களின் ஜாதி ஒழிப்பு மசோதாவானது ஜாதி ஒழிப்பதற்குப் பயன்படவே படாது என்பதை பொது மக்கள் கல்மீது செதுக்கி வைத்துக் கொள்ளலாம். திராவிடர்கள் கண்ணில் மிளகாய்ப் பொடியைத் தூவி ஆரியர்கள் சர்க்கார் பதவிகளில் அமர்வதற்கும் ஆரிய மாணவர்கள் 20 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிகளை ஆக்கிரமித்து கொண்டிருந்தது போல இனியும் ஆக்கிரமித்துக் கொள்ளவதற்குத்தான் பயன்படும்.

மேற்குறிய நம் ஆலோசனைகளை ஏற்காவிடில் இந்த மசோதவைத் திராவிடர்களாகப் பிறந்த யாவரும் எதிர்த்து மண்டையிலடித்தே தீர வேண்டும். அதையும் மீறி சட்டமாக்கப்படுமானால் அந்தச் சட்டத்தை மீறி சட்டமாக்கப்படுமானால் அந்தச் சட்டத்தை மீறி சிறைக் கூடங்களை நிரப்புவதுதான் திராவிட இனத்தில் பிறந்தவர்களின் முதல் வேலையாயிருக்க வேண்டும்.

------------------------------

தந்தை பெரியார் - “விடுதலை” தலையங்கம், 05.08.1947
அனுப்பி உதவியவர்:- தமிழ் ஓவியா