கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

தி.மு.க. தலைவர் திரு. மு.கருணாநிதி அவர்கள் இராமாநுஜர் என்ற ஒரு தொலைக்காட்சித் தொடர் ஒளிபரப்ப இருப்பதைப் பற்றி 4.4.2015 அன்று கூறுகையில் இராமாநுஜர் சாதியத் தடைகளைத் தகர்த்தவர் என்று கூறி உள்ளார். இராமாநுஜர், சூத்திர மக்கள் கொடுமைப்படுத்தப்படுவதைக் கண்டித்தார் என்பதையும், அவர்கள் விலக்கி வைக்கப்பட்டு இருந்த சமூக நடவடிக்கைகளில் பங்கு கொள்ள வைத்தவர் என்பதையும் ஒப்புக் கொள்ளலாம். ஆனால் அவர் சாதிய / வருண அமைப்பை எதிர்த்தார் என்பதற்கு எந்த விதமான சான்றும் இல்லை.

ramanujarவருண அதர்மப்படி, பார்ப்பனர்களுக்குத் திறமை இருந்தாலும் சரி; திறமை இல்லாவிட்டாலும் சரி, அவர்கள் அவர்கள் உயர்நிலை வேலைகளைச் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். திறமைக் குறைவான பார்ப்பனர்கள் உயர்நிலை வேலைகளைச் செய்ய நேரும் போது, நிர்வாகம் சீரழிந்து போனாலும், அதைப் பற்றிக் கவலைப்படக் கூடாது. சூத்திரர்கள் திறமைசாலிகளாக இருந்தாலும், அவர்கள் உயர்நிலை வேலைகளுக்காக ஆசைப்படக் கூடாது. கீழ் நிலை வேலைகளையே செய்ய வேண்டும். அதனால் மனித வளம் வீணாகப் போனாலும் அதைப் பற்றிக் கவலைப்படக் கூடாது. (பார்க்க பகவத் கீதை 18: 46,47,48). இந்த ஏற்பாடு சமூக வளர்ச்சிக்கு மட்டும் அல்ல; சமூக இயக்கத்துக்கே கொடூரமான கேடுகளை விளைவிக்கும்.

ஆனால் இராமாநுஜர் இந்த வருணாசிரம அதர்மத்திற்கு எதிராக சுட்டு விரலைக் கூட - சுட்டு விரல் என்ன? சுண்டு விரலைக் கூட - அசைக்கவில்லை. அவர் செய்தது எல்லாம் சமூகவிலக்கம் செய்யப்பட்டு இருந்த சூத்திர மக்களை, சமூக நடவடிக்கைகளுக்குள் இழுத்து வந்து, அதன் மூலம் வருணாசிரம அதர்ம முறையை வலுப்படுத்தியது தான்.

அவர் ஏன் அப்படிச் செய்தார்? இராமாநுஜர் கி.பி.1017ஆம் ஆண்டில் பிறந்தார். 120 ஆண்டுகள் வாழ்ந்து கி.பி.1137ஆம் ஆண்டில் மறைந்தார். இந்து மதம் என்று இன்று அழைக்கப்படும் சனாதன மதம் பார்ப்பனர்களுக்கு உயர்ந்த பட்ச பாதுகாப்பையும், உயர்ந்த பட்ச வசதிகளையும் அளித்தது. ஒரு போர் நடக்க வேண்டும் என்றால், பார்ப்பனர்களைப் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு சென்ற பின் தான் நடத்த வேண்டும் என்ற விதி, எதிர் எதிராக நின்ற மன்னர்களும் ஒப்புக் கொண்ட விதியாக இருந்தது. அது மட்டும் அல்ல. பார்ப்பனர்களுக்கு ஏதாவது ஊறு நேர்ந்தால், ஊறு செய்தவர்களுக்கு மட்டும் அல்ல; அந்நாட்டு மன்னனுக்கும், அந்நாட்டு மக்களுக்கும் கேடு சூழும் என்ற நம்பிக்கை வலுவாக வேரூன்றப்பட்டு இருந்தது. ஆகவே யாருமே பார்ப்பனர்களுக்குத் தீங்கு செய்வதைப் பற்றி அஞ்சியே இருந்தனர்.

இராமநுஜர் காலத்திற்கு முன் தான் கஜினி முகம்மது* இராஜஸ்தான் மீதும், குஜராத் மீதும் படையெடுத்து, அங்குள்ள செல்வங்களைக் கொள்ளை அடித்துக் கொண்டுச் சென்றார். அவ்வாறு இஸ்லாமியர்கள் படை எடுத்த பொழுது, அவர்கள் பார்ப்பனர்களுக்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்ற விதியைச் சட்டை செய்யவில்லை. சொல்லப் போனால், நாட்டின் செல்வங்களில் பெரும் பகுதி கோவில்களிலும், பார்ப்பனர்களிடத்திலும் இருந்ததால், பார்ப்பனர்களை நோக்கியே அவர்களுடைய தாக்குதல்கள் இருந்தன.

பார்ப்பனர்களுக்கு ஊறு செய்தால் அழிந்து போவார்கள் என்ற நம்பிக்கையில் இருந்த மக்களுக்கு, இது பெரும் அதிர்ச்சியைத் தந்தது. படையெடுத்தவர்கள் தவறுதலாகக் கூட அல்ல; நேரடியாகவே பார்ப்பனர்களைத் தாக்கிய போதும், தாக்கியவர்களுக்கு எவ்விதத் தீங்கும் ஏற்படவில்லை என்பதைக் கண் கூடாகக் கண்டார்கள். அது மட்டும் அல்ல; தொடர்ந்து படையெடுத்து வெற்றி மேல் வெற்றி பெறுகிறார்கள் என்றால் அது, இது வரைக்கும் தாங்கள் கொண்டிருந்த நம்பிக்கைக்கு முற்றிலும் மாறாக இருப்பதை உணர்ந்தார்கள். பார்ப்பனர்கள் தங்களைப் பற்றிக் கட்டி வைத்து இருந்த மாய உரு (image) கரைய ஆரம்பித்தது.

அக்காலத்தில் செய்திகளைப் பரப்பும் பணியைத் துணை வேலையாகக் கொண்டு இருந்த புலவர்கள், ஊர் சுற்றிகள் (யாத்திரீகர்கள்), வணிகர்கள் ஆகியோர் மூலம் ஒரு பகுதியில் நடந்த இந்நிகழ்வுகள் பற்றிய செய்திகள் மற்ற பகுதிகளில் பரவ ஆரம்பித்தன. அது பார்ப்பனர்கள் புனிதர்கள் என்ற மாயையைக் கலைக்க ஆரம்பித்தது.

சக மனிதர்களை மேலாண்மை செய்வதில் இரு உத்திகள் உள்ளன. முதல் உத்தி அவர்களை ஒறுத்து, அச்சுறுத்தி, தங்கள் விருப்பப்படி நடக்க வைப்பது. இரண்டாவது உத்தி அவர்களிடம் அன்புடன் பேசி, தங்களுக்கு இணங்க வைத்து, தங்கள் விருப்பப்படி நடக்க வைப்பது. இரண்டு உத்திகளுக்கும் இறுதி நோக்கம் ஒன்று தான். "எது வெற்றி தரும்?" "எது வெற்றி தராது?" என்பது இடம், பொருள், காலத்தைப் பொறுத்தது. பார்ப்பன மாயை கலைந்து கொண்டு இருந்த நிலையில், பார்ப்பன மேலாதிக்கத்தைக் கட்டிக் காக்க விரும்பியவர்களுக்கு இரண்டாவது உத்தி தான் சரியான வழியாக இருந்தது. அதைத் தான் இராமாநுஜர் கையாண்டார்.

அவர் எந்த நிலையிலும் அறிவுத் திறன் குறைந்த பார்ப்பனர்கள் உடல் உழைப்பு செய்து தான் வாழ வேண்டும் என்றும், அறிவுத் திறன் மிகுந்த சூத்திரர்கள் ஆட்சி அதிகாரத்தில் அமர வேண்டும் என்றும், அதற்கு எவ்விதத் தடையும் இருக்கக் கூடாது என்றும் கூறியதே இல்லை. இத்தைகையவரின் வாழ்க்கை வரலாற்றைப் புகழ்ச்சியாக மக்களிடையே பரப்புவதன் மூலம், வருணாசிரம அதர்மத்திற்கு எதிரான போராட்டத்தை முனை மழுங்கச் செய்ய முடியுமே ஒழிய, சாதிய / வருணக் கொடுமைகளுக்கு முடிவு கட்ட முடியாது.

பார்ப்பனர்கள் (இராமநுஜர் உட்பட) அனைவரும் வருணாசிரம அதர்மம் சிதைந்து விடக் கூடாது என்பதற்காக அனைத்து வழிகளிலும் அனைத்து விதமாகவும் போராடுகிறார்கள். ஒடுக்கப்பட்ட மக்கள் அதற்கு எதிராகப் போராடி விடுதலை பெறுவது தான் தீர்வு.

பார்ப்பனர்களில் நல்லவர்கள் இருந்தால், அவர்கள் வருணாசிரம அதர்மத்தை வேருடன் கெல்லி எறிவதற்கு, அனைத்துத் துறைகளிலும் அனைத்து நிலைகளிலும் விகிதாச்சாரப் பங்கீட்டு முறையை அமல் படுத்த வேண்டும்; குறைந்த பட்சம் அதற்கான விழிப்புணர்வையும் பொதுக் கருத்தையும் ஏற்படுத்த வேண்டும்.

- இராமியா

*கஜினி முகம்மது பதினாறு முறை தோல்வி அடைந்து, பதினேழாவது முறை வெற்றி பெற்றார் என்று சிலர் கதை விடுகின்றனர். ஆனால் அவர் பதினேழு முறையும் வெற்றி பெற்றார். பதினேழாவது முறை மிகப் பெரிய வெற்றி பெற்றார்.

(இக்கட்டுரை மக்கள் நெஞ்சம் (மாதமிரு முறை ஏடு) 14.4..2015 இதழில் வெளி வந்துள்ளது)