பேரன்பு மிக்க தலைவர்களே, பெரியோர்களே, தாய்மார்களே, தோழர்களே, திராவிடர் கழகக் கொள்கை, கோட்பாடு ஆகியவைகளை எவ்வளவோ விளக்கமாகவும், உண்மையாகவும் எடுத்துக் கூறிவந்துங்கூட, ஒரு சிலர் வேண்டுமென்றே கழகத்தின் மீது பொய்யும் தவறுமானதுமான பிரசாரங்களைச் செய்து வருகின்றனர்.

பார்ப்பனர்களோ, காங்கிரசில் சிலரோ இவ்வாறு பொய்ப் பிரசாரம் செய்வதால் கூட நான் கஷ்டப்படவில்லை. ஆனால் நாட்டின் நிர்வாகப் பொறுப்பையும் தன்மையையும் கொண்டிருக்க வேண்டிய சர்க்காரே கழகத்தின் மீது காரண காரியமின்றி தவறான எண்ணத்தைக் கற்பித்து வருகின்றது.

சட்டசபையில் சிலரைப் பிடித்து கருப்புச் சட்டைக்காரர்கள் வகுப்புத் துவேஷப் பிரசாரம் செய்கின்றனர்; கலவரம் விளைவிக்கின்றனர். அதை அடக்க சர்க்கார் என்ன செய்யப் போகிறது என்பன போன்ற கேள்விகளைக் கேட்கச் செய்வதும் அதற்கு மந்திரிகள் பொறுப்பற்ற பதில் கூறுவதும் அதாவது "நான் நோகாமல் அடிக்கிறேன், நீ ஒயாமல் அழு" என்ற கதையைப் போல் சர்க்கார் நம் இயக்க விஷயத்தில் நடந்து வருகிறது.

உள்ளபடியே திராவிடர் கழகக் கொள்கையோ, திராவிடர் கழகத்தினரோ, பொது ஜனஅமைதிக்கு மாறாகக் கலவரங்களில் ஈடுபடுபவதாகவோ அல்லது கழக வேலைத் திட்டத்தின் காரணமாகச் சர்க்காரைக் கவிழ்ப்பதோ நாட்டுக்கும் மக்களுக்கும் அல்லது ஒயாமல் கூப்பாடு போடும் பார்ப்பனர்களுக்கோ இன்றுவரை ஒரு சிறு கலவரமோ, தொல்லையோ உண்டாக்கப்பட்டிருக்கிறது என்று மந்திரிகள் தானாகட்டும் அல்லது பொறுப்புள்ள பார்ப்பனர் என்பவர்களாவது பகிரங்மாக பாரபட்சமற்ற நியாய சபை முன் கூறமுடியுமா? என்று கேட்கிறேன்.

ஏதோ கைக்கூலி பெற்று வயிறு வளர்க்கும் சில அடிமைகள் கழகத்தைப் பற்றியும், அதன் கொள்கைகளைப் பற்றியும் கூப்பாடு போடக் கடமைப்பட்டு விட்டார்களென்றாலும் சர்க்காருக்குமா இந்தப் புத்தி இருப்பது?

இன்னும் கூற வேண்டுமானால், அமைதியாகவும், கழக உத்தரவுக்கேற்பவும், மனிதத் தன்மையுடன் பணியாற்றி வரும் கழகத் தோழர்களுக்குப் பல ஊர்களில் சர்க்காரால் தொல்லை விளைவித்து வருவது போதாதென்று பார்ப்பன ஆதிக்கத்துக்கு அடிமைப்பட்ட கூட்டத்தினர் பலாத்தாரத்திலிறங்கி கத்தி வாள்வெட்டு போன்ற நஷ்டம் விளைவித்து வருவதை அதிகாரிகள் கவனத்திற்குக் கொண்டுபோயிருந்தும் இன்று வரை அதைப்பற்றிக் கவலைப்படாதிருக்கும் போது அதற்கு மாறாக எங்கள் மீதே வீண்பழி கூற முற்படுவது? சிறிதேனும் மான ரோஷமிருக்க வேண்டாமா?

சுயராஜ்யத்தில் இவ்வளவு கீழ்த்தரமாகவா நியாயமும் நீதியுமிருப்பது? எங்களுக்கும் பதிலுக்குப்பதில் பலாத்காரத்திலிறங்கத் தெரியாதா? ஆனால், இன்னும் நாங்கள் அவைகளைப் பொருட்படுத்தாமல் இருந்து வர காலாடித்தனமும், கழகத்தின் மீது விடாமல் சாடி சொல்லுவதிலுமா எதிரிகள் முனைவது என்று கேட்கிறேன். இவ்வித பித்தலாட்டங்களினால் எத்தனை நாளைக்கு இந்நாட்டை ஆண்ட மக்களை ஏமாற்றி வாழமுடியும்?

எனக்கு எப்போதும் பலாத்காரத்தில் நம்பிக்கையில்லை. அதனால் நாட்டுக்கே நாசம். பலாத்காரத்தில் எந்தக் காரியம் வெற்றி பெற்றாலும் அது நிலைத்திருக்கவும், நிம்மதியாகவும் இருக்க முடியாது.

சுயராஜ்யம் வந்து 18 மாதங்களாகியும் நாட்டில் இதற்கு முன் இருந்ததை விட பலாத்காரச் செயல்கள் ஒன்றுக்குப் பத்தாகத் தானே வளர்ந்துள்ளது. தெரிந்தோ தெரியாமலோ தங்கள் காரியம் வெற்றியுற காங்கிரசார் மக்களிடம் பலாத்காரத்தைக் கற்பித்துவிட்டனர். பலாத்காரத்தை முன் வைத்துப் பிழைப்பதைத் தவிர வேறுவகையில்லா ஆட்களுக்குத் தியாகி, தேசபக்தன் என்றெல்லாம் பட்டம் சூட்டப்பட்டது.

அருமை நண்பர்களே! அதன் விளைவுதான் இன்று எங்கு பார்க்கிலும் சர்வசாதாரணமாக பலாத்காரச் செயல் முதல், கள்ளமார்க்கெட், லஞ்ச லாவண்யம் வரை சிறிதேனும் அச்சமில்லாமல், மனிதத்தன்மையை மறந்து கையாளப்படுகின்றன. காங்கிரசாரின் இவ்விதத் தொல்லைகளைக் காங்கிரஸ் சர்க்காரே சமாளிக்க முடியாமல் தவிப்பதும், ஆச்சார்ய கிருபாளனி போன்ற தலைவர்கள் மனவேதனையுடன் காங்கிரஸ் போக்கைக் கண்டிப்பதையும் நாம் காண்கிறோம்.

எனவே, பலாத்காரத்திலிறங்கி காரியங்களைச் சாதித்துக் கொள்வதென்பதும், அதேபோன்று பொய் - விஷமப் பிரசாரத்தின் மூலம் ஏமாற்றி வாழலாமென்பதும் நிலைத்திருக்கக் கூடியதல்ல என்பதை கழகக் கொள்கைக்கு எதிரிகளாய் இருப்பவர்களுக்கு எடுத்துக் காட்ட விரும்புகிறேன். அதைவிட தங்களின் தவறுகளை இனியாவது திருத்திக் கொண்டால், அவர்களுக்கும் எதிர்கால உலகில் சற்று நல்வாழ்வு இருக்க முடியும்.

நண்பர்களே! எங்களை ஒரு சிறு கூட்டமும் அதற்கு அடிமைப்பட்டுள்ள ஆட்களும் நாச வேலைக்காரர்கள் என்று கூறுகின்றனர். இந்தப் பட்டத்திற்காக நாங்கள் அஞ்சப் போவதில்லை. ஆனால் நாங்கள் செய்யும் நாசவேலை என்ன? யாருடைய பொருளையாவது கொள்ளையடித்து வாழ்கிறோமா? மக்களை மடையர்களாக்கி அதன் பேரால் வயிறு வளர்க்கிறோமா? மக்களுக்கு நல்ல ஆட்சி, உண்மையான சுயராஜ்யம் கூடாதென்கிறோமா? அரசியல் பேரால் தேர்தல் வேட்டையாடுகிறோமா? எந்தத் தனிப்பட்ட ஜாதி மதக்காரர்களின் உயிருக்கு நாசஞ் செய்தோமா? எங்களை நாச வேலைக்காரர்கள் என்று விஷமத்தனம் செய்வதும் சர்க்காரிடம் சாடி சொல்வதுமான இழிநிலையிலுள்ளவர்களைக் கேட்கிறேன், நாங்கள் செய்யும் நாச வேலையைப் புரிந்து கொண்டீர்களா என்று!

அப்படியே நாங்கள் நாசவேலைக்காரர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் இந்நாட்டுக்குச் சுயராஜ்யம் நாச வேலையால்தானே வந்தது. அதன் தலைவர்களே ஒப்புக் கொண்டிருக்கிறார்களே! தண்டவாளத்தைப் பெயர்த்தது, அதிகாரிகளைக் கொன்றது, தபாலாபீஸ், போலீஸ் ஸ்டேஷனைக் கொளுத்தியது நாசவேலையா அல்லவா? சுயராஜ்யம் வந்ததற்கு நாச வேலை தானே பயன்பட்டிருக்கிறது. இக்காரியங்கள் நடைபெறவில்லையென்று பண்டிதர் நேரு கூடக் கூற முடியாதே.

இந்த உருப்படாத சுயராஜ்யத்திற்கே இவ்வளவு நாசவேலையென்றால், ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மக்களை அடிமைப்படுத்தி வரும் ஜாதி மத வெறியையும் ஆணவத்தையும் ஒழிக்க எவ்வளவு நாசவேலை வேண்டும்?

பார்ப்பன ஆதிக்கம் நிலைத்திருப்பதற்கு அதாவது இந்த மதம் வாழ்வதற்கு என்றுதானே காந்தியாரைச் சுட்டுக் கொன்றான் கோட்ஸே. இது நாசவேலையில்லையா? ஓர் உயிரைக் கொன்றுதானே மதத்தைக் காப்பாற்றினான்? எனவே, நாங்களும் மனித சமூதாயத்தின் தன்மானத்துக்கு இடையூறு விளைவித்துவரும் பிற்போக்குச் சக்திகளை நாசஞ் செய்வதில் தவறு என்ன இருக்கிறது?

அது மட்டுமல்லாமல் இவ்வித நாச வேலையில் எவருக்கும் ஒரு சிறு தீங்கினை, உயிர் நாசத்தை பொருள் நாசத்தை உண்டாக்கியிருக்கிறோமா? எனவே எங்களது தொண்டை, புத்தியுள்ள எவனாவது தப்பு என்றோ, தேசத் துரோகம் என்றோ கூறுவானா? பார்ப்பனர் வேண்டுமானால் கூறலாம். ஏனெனில் எங்கள் நாசவேலை பார்ப்பன ஆதிக்கத்தை ஒழித்து பகுத்தறிவை வளரச் செய்வதால். ஆனால், காங்கிரஸ் திராவிடர் எங்களைப் பற்றிக் குறை கூறுவதோ, எதிர்ப்பதோ, துவேஷிப்பதோ என்றால், ஒன்று அப்பேர்ப்பட்டவர்கள் பைத்தியக்காரராய் இருக்க வேண்டும். இல்லையெனில் கூலிவாங்கிப் பிழைக்கும் கூலிப்படை என்பவர்களாகவே இருக்க முடியும்.

எங்களை நாசவேலைக்காரர்கள் என்று கூறி, சர்க்காரிடமும் கோள்மூட்டிவிடுவதால் எங்கள் தொண்டு ஸ்தம்பித்துவிடுமா, நாங்கள் அஞ்சி ஓடி ஒளிந்து விடுவோமா? இன்னும் கூறுவேன்; நாங்கள் நாசவேலைக் காரியத்தை இன்னும் செய்ய முற்படவில்லை. இதுவரை பெரும்பாலும் அதைப் பற்றிப் பேச்சளவில் பிரசாரத்தில் மட்டுமே இருந்து வருகிறோம். ஆனால் இனி செய்தே தீரவேண்டிய நிலைமைக்கு கழகமும் நாங்களும் கொண்டு வந்து விடப்பட்டிருக்கிறோம். கட்டாயம் செய்யவும் போகிறோம். கழகத் தோழர்களுக்கு இனி இருக்கும் முக்கிய தொண்டு அதேதான். அக்காரணம் பற்றியேதான் நாம் தேர்தல், ஒட்டு முதலியவைகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லையென்று அடிக்கடி கூறி வருவதின் நோக்கமாகும்.

பார்ப்பன ஆதிக்கமானது, நம்மை 200 ஆண்டுகளாக ஜாதி, மதம், சாஸ்திரம் புராணம், கடவுள் ஆகியவைகளின் பேரால் அடிமைப்படுத்தி நம் நாட்டையும், வெள்ளையன் முதல் இன்று வடநாட்டான் வரை சுரண்டுவதற்கு இடைத் தரகுபோல் இருந்து வந்ததை இன்று நாம் ஒரளவு உணர்வு பெற்று எடுத்துக் கூறுவதற்காக இவ்வளவு ஆத்திரப்படுகிறதே. எங்களை மேற்கண்டவாறு அடிமைப்படுத்தி வருவதை நினைக்குந்தோறும் எவ்வளவு மன வேதனையும், எழுச்சியும் உண்டாகும். இதைச் சிந்தித்துப் பார்த்துத்தானும் திருந்த பார்ப்பன ஆதிக்கத்துக்கு மனமில்லையா அல்லது புத்தியில்லையா என்று கேட்கிறேன்.

மேலும் மேலும், இவ்விதம் சமூதாயத்தில் நிரந்தரமான வேற்றுமைகளையும் குரோதத்தையும் வளரவிடுவது கடைசியில் பெரும் ஆபத்துக்கே கொண்டு போய்விடும் என்பதைப் பணிவாக எடுத்துக் காட்ட விரும்புகிறேன். ஜாதி மத பித்தர்கள் தங்களது தவறுதல்களைத் திருத்திக் கொண்டு யாவரும் சரி நிகர் சமானமாக வாழ முற்பட வேண்டும்.

இனி பழைமையை எவராலும் எந்த சக்தியாலும் காப்பாற்ற முடியாது. ஒருவனை ஒருவன் அவன் எந்த ஜாதியாயினும் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்பதை மக்கள் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். அனைவரும் இதை உணர வேண்டும். குறிப்பாக பார்ப்பனத் தோழர்கள் இதை உணருவது மட்டுமல்ல உணர்ந்து காரியத்திலும் நடக்க வேண்டும். இல்லாவிடில் இவ்வித கேடுகளை எதிர்கால மக்கள், பலாத்காரத்திலேயே ஒழித்து கட்ட முற்பட்டுவிடுவர்.

இதை நம் திராவிடத்துக்கு மட்டுமோ திராவிட மக்களின் நலனுக்காக மட்டுமோ, கூறுவதாகக் கருத வேண்டாம். இந்தியா பூராவுமே இவ்வேண்டுகோள் அறிவிப்பைப் கூற ஆசைப்படுகிறேன். எந்த நாடாயினும் அந்தந்த மக்கள் அறிவு வளர்ச்சி பெற்று அமைதியான ஆட்சியை நிறுவவேண்டுமென்ற ஆசையினாலேயே இவ்வாறு வற்புறுத்திக் கூறுகிறேன்.

பழமையையோ, பார்ப்பன ஆதிக்கத்தையோ, பணக்காரத் தன்மையையோ, காப்பாற்ற இன்று ராணுவத்துக்காக 165 கோடி ருபாய் செலவிடுவது போல, 10, 20 மடங்கு அதிகமாகச் செலவிட்டாலும் முடியவே முடியாது. அவ்வளவு முற்போக்கு வளர்ச்சிக்கு மக்கள் சென்று கொண்டிருக்கின்றனர்.

இன்று நான் கழகம் மூலமாகச் செய்து வரும் தொண்டினையும், கொண்டுள்ள கொள்கையினையும் இன்னும் பத்தாண்டுகளுக்குப் பின் தலையெடுக்கும் நமது திராவிட மக்கள் இது என்ன இவ்வளவு சாதாரணமாயிருக்கின்றதே இதைத்தானா பெரியார் செய்தது, இந்த நிலையில் நாம் சென்றால் முடியாது என்று கூறி இன்னும் சில மார்க்கங்களையும் கையாளக்கூடும். உலகக் கால நிலை, தினத்திற்கு தினம்மாறுதலையும், புதுமையையும் அடைந்து வருகிறது. அதிலிருந்து இந்தியாவோ அல்லது நம் திராவிட நாடோ எதிர்த்து நிற்கமுடியாது.

எனவே, திராவிடர் கழகக் கொள்கையைக் கண்டு வீணான துவேஷத்தை, கலவரத்தை, பொய்யுரையைக் கூற முற்படும் பார்ப்பன ஆதிக்கமே! இந்தக் காலத்தில் நீ திருந்திவிடுவதுதான் உனக்கும் நல்லது. மக்கள் உனக்கும் நல்லது செய்ததாகும். இன்றேல், எதிர்காலத்தில் என்ன ஆகுமோ என்பதை நினைக்கவும் எனக்குக் கஷ்டமியிருக்கிறது. உலகில் இந்த இந்தியாவைத் தவிர வேறெந்த நாட்டிலும் இவ்வித பிரிவுகள் கிடையாது.

இந்தியாவின் எல்லையாகிய பெர்சியாவிலோ, ஆப்கானிஸ்தானத்திலோ, மற்றும் மேல் நாடுகளிலோ பார்ப்பனன், சூத்திரன், பறையன் முதலியவைகள் கிடையாது. இந்தப் பாழாய்ப்போன நாட்டிலேதான் பாம்பிலே கூட பார்ப்பாராப் பாம்பு, பறப் பாம்பு என்பன போன்ற பிரிவுகள் வளர்ந்து கொண்டே வருகின்றன. நாட்டின் இன்றைய நிலையில் இது நியாயமாகுமா? மனிதத் தன்மைக்கு ஏற்றதாகுமா என்பதைப் பார்ப்பன ஆதிக்கம் உணரக் கூடாதா?

அன்பர்களே! எங்களை நாச வேலைக்காரர்கள் என்று கூறும் பார்ப்பன ஆதிக்கத்தைக் கேட்கிறேன், அது செய்யும் ஆக்கவேலை தான் என்னவென்று? மூக்கைப் பிடித்து ஜெபம் செய்வதா? ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற உயரிய கொள்கைக் கொண்ட மக்களிடையே மதம் ஜாதி கடவுள் பேரால் கொள்ளையடிப்பதா? முகத்தில் பிறந்தவன் என்று கூறி அதற்கான அடையாளமாக உச்சிக் குடுமி, பூணூல் அணிவதா? அன்பும் அறிவுமான கடவுளைப் பேராசைக்காரன், காமக்காரன், கொலை பாதகன், ஆண்மையற்றவன், வஞ்சகநெஞ்சன், பெருந்திண்டிக்காரன் என்னும் பொருள்படும்படியான புராணங்களை கதைகளை எழுதி வைத்து உண்மையான அறிவு (கடவுள்) வளர்ச்சியைத் திராவிட மக்களிடமிருந்து அறவே ஒழிப்பதா? ஆண்டுதோறும் ஆண்டவனுக்குப் பெண்டாட்டிகளைக் கல்யாணம் செய்து வைப்பதா? திதி, கருமாதிகளுக்கு செத்துப் போனவர்களுக்கு ஏஜெண்டாகயிருப்பதா?  

நூற்றுக்கு மூன்று பேராயுள்ள நீ கல்வித்துறையிலும் உத்தியோகத்திலும் 10 க்கு 16,17 வீதம் பங்கு பெறுவதா? இன்னும் வைதீகத்தின் பேரால் மக்களை மடையர்களாக்குவதா? இக்கொடுமைகள் ஒழிந்து மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு மனிதத்தன்மை அடைய வேண்டும் என்று பாடுபடுபவர்களை அரசியலாருக்குக் காட்டிக் கொடுப்பது அல்லது சுட்டுப் பொசுக்குவதா? பார்ப்பனீயமே! எது நீ செய்யும் ஆக்க வேலை என்று கேட்கிறேன்? உனக்கு நாட்டைப் பற்றியோ, பொதுவாக மக்களைப் பற்றியோ சிறிதேனும் நல்லெண்ணமிருந்தால் அதுவும் 1949 ஆண்டில் உலக மக்களெல்லாம் விஞ்ஞான அறிவு கொண்டு முற்போக்குத் துறையில் போட்டியிடும் இன்றைய நிலையில் எங்கள் நாட்டில் மடமையை வளர்க்கும் உன் பழக்கத்தை விட்டிருக்கமாட்டாயா? வேண்டாம், இனியாவது பழமை விரும்பிகள், பார்ப்பன ஆதிக்கத்தன்மைகள் திருந்தட்டும் என்று நல்லெண்ணத்துடன் எடுத்துக் காட்ட விரும்புகிறேன. இல்லையேல் எதிர்காலம் அதுவும் மிக விரைவில் மேற்கண்ட கொடுமைகளை நாசஞ்செய்துவிட்டே மறு வேலையைக் கவனிக்கும்.

என் போன்றவர்கள் நாளைக்கு உயிர் வாழ்ந்து பலாத்காரம் வேண்டாம் என்று மக்களை வேண்டியிருக்கவா முடியும்? என் உயிருக்கும் ஒரு கோட்சே வந்தால் தீர்ந்து விட்டது. ஆனால் பிறகு பார்ப்பன ஆதிக்கமும் அதைத் தாங்கி நிற்கும் மற்றவைகளும் என்ன ஆகும் என்பதைத் தயவு செய்து திராவிடர் கழகத்தின் மீது குறைகூறும், துவேஷத்தை வளர்க்கும் தோழர்கள் சிந்தித்துப் பார்த்தால் போதும்.

கழகமோ, நானோ, நாசவேலை ஏதாவது செய்வது உண்மையெனில், மக்களிடையே வளர்ந்துள்ள மடமையை, ஜாதிவெறியை, மூடப்பழக்க வழக்கங்களை அறவே நாசம் செய்வதேயாகும். அதைச் செய்தே தீருவேன். அதைத் தவிர கழகத்திற்கு வேறு தொண்டு கிடையாது. என்னைப் பொறுத்த வரை அதற்காகவே என் வாழ்நாளையும் அர்ப்பணம் செய்துவிட்டேன் கழகத் தோழர்களும் முக்கியஸ்தர்களும் இதை உணரவேண்டும்.

குறிப்பாக காங்கிரஸ், திராவிடர்கள் இவ்வுண்மையை அறிதல் வேண்டும். நாங்கள் பதவிகளில் காங்கிரசுக்குப் போட்டியிடும் சர்வ சாதாரணமான அரசியல் கட்சிக்காரர்கள் அல்ல. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக பார்ப்பனீயத்தால் அடிமைப்பட்டுள்ள நம் நாட்டை, மக்களை உருப்படுத்திப் புதியதோர் சமூதாயம் உண்டாக்குவதேயாகும். எனது பார்ப்பனத் தோழர்களும் இதை அறிந்து திருந்த வேண்டும்."

---------------------------------- 

14-03-1949 அன்று நடந்த உரத்தநாடு திராவிடர் கழக ஆண்டு விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு. 'விடுதலை' 23-03-1949