மனிதன் காட்டுமிராண்டியாக இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் பெற்று மனிதனாக வளர்ந்து வருகிறான். ஆதிகாலத்தில் மனிதன் மிருகத்துக்கும் அவனுக்கும் வித்தியாசம் தெரியாத அளவுக்கு வாழ்ந்தான். இரண்டாயிரம், மூவாயிரம் வருடங்களுக்கு முன்பு மனிதனுக்கு ஆயுளே இரண்டு அல்லது மூன்று வயதுதான். கிருஸ்து பிறந்த ஆண்டிலே உலகிலேயே மக்கள் தொகை இருபது கோடிதான். 1950–ல் மனிதன் சராசரி வயது 25–தான். இன்றைக்கு 1973–லே நமக்கு சராசரி வயது அய்ம்பத்தி இரண்டு.

உலகத்திலேயே வெறும் 50-லட்சம் மக்கள் மட்டும் வாழ்ந்த காலம் உண்டு. அந்தக் காலத்திலே கடவுள் என்ற எண்ணமுங்கூடத் தோன்றவில்லை. வேதத்தில் கூட கடவுள் என்ற சொல் கிடையாது. இரண்டாயிரம், மூவாயிரம் வருடங்களுக்குள் தோன்றியது தான் இந்தக் கடவுள் சங்கதி. அதுவும் இந்தக் கடவுளை நமது ஆள் உண்டாக்கவில்லை. வெள்ளைக்காரன் தான் இந்தக் கடவுளையே உண்டாக்கியவன். அதைப் பார்ப்பான் ஒன்றுக்குப் பத்தாய்ப் பெருக்கி விட்டான். ஒரு கடவுள் பெயர் கூடத் தமிழ்ப் பெயரே கிடையாது. இங்கு இருக்கிற கடவுள்களின் பெயர்கள் எல்லாம் வடமொழிச் சொற்கள் தான். கடவுள் என்ற சொல்லே தமிழில் கிடையாது. தமிழனுக்குக் கடவுளே இல்லை. இன்றைக்கும் தமிழ்ச் சொல்லில் உள்ள ஒரு கடவுளும் கிடையாது.

வெள்ளைக்காரனும் காட்டுமிராண்டியாக இருந்த காலத்தில் தான் கடவுளைக் கற்பித்தான். அந்தக் கடவுளுக்கு நிறம், மஞ்சள் வர்ணம் என்றும் சொன்னான். அந்தக் கடவுளைக் காட்டு மனிதனாக சிங்காரித்தான். அதற்கு உடை என்னடா என்றால் புலித்தோல் என்றான். தலை எல்லாம் சடை, காது எல்லாம் பெரிய ஓட்டை, நகைகள் எல்லாம் பாம்புகள், குடி இருக்கிற இடமோ சுடுகாடு, கையில் இருக்கிற கருவிகளோ மண்டை ஓடுகள். இவை எல்லாம் மனிதனுக்கு இருக்கக்கூடிய யோக்கியதையா? இவை எல்லாம் காட்டுமிராண்டித்தனமான சின்னங்கள் அல்லவா?

வெள்ளைக்காரன் கடவுள் ஜூபிடர். பார்ப்பான் அதற்குக் கொடுத்த பெயர் இந்திரன்.

வெள்ளைக்காரன் - மைனாஸ் 

பார்ப்பான் வைத்த பெயர் - எமன் 

வெள்ளைக்காரன் - நெப்டியூன் 

பார்ப்பான் - வருணன் 

வெள்ளைக்காரன் - லூனஸ் 

பார்ப்பான் - சந்திரன் 

வெள்ளைக்காரன் - சைனேஸ் 

பார்ப்பான் - வாயு 

வெள்ளைக்காரன் - ஜூனஸ் 

பார்ப்பான் - கணபதி 

வெள்ளைக்காரன் - அப்பாலோ 

பார்ப்பான் - கிருஷ்ணன் 

வெள்ளைக்காரன் - மெர்குரி 

பார்ப்பான் - நாரதன் 

வெள்ளைக்காரன் - மார்ஸ் 

பார்ப்பான் - கந்தன்

இப்படியாக வெள்ளைக்காரனைப் பார்த்துக் காப்பி அடித்தவன் தான் இந்தப் பார்ப்பான். அப்படிக் காப்பி அடித்த கடவுள்களுக்கும் கதைகள் எழுதி, புராணங்கள் எழுதி பார்ப்பான் வயிறு வளர்க்க ஆரம்பித்து விட்டான். அதை அப்படியே தமிழன் நம்பி ஏற்றுக் கொண்டு விட்டான்.

அப்படி ஏற்றுக் கொண்ட கடவுள்களில் ஒன்றுதான் இந்த விநாயகன். விநாயகன் என்ற சொல்லே தமிழ் கிடையாது. கடவுளுக்கு நாட்டில் என்ன பொதுவாக இலக்கணம் சொல்கிறார்கள்?

கண்ணுக்குத் தெரியாது, கைக்குச் சிக்காது, புத்திக்கும் எட்டாது என்கிறான். அப்படியானால் எப்படி கடவுளை நம்புவது என்று கேட்டால், நம்பு என்கிறான். நம்பு என்பதில் தான் கடவுளை வைத்து இருக்கிறான். கிருஸ்தவனும், துலக்கனும் அதைத்தான் சொல்கிறான். கண்ணுக்குத் தெரியாத கடவுளுக்கு எப்படி உருவத்தை உண்டாக்கினான்? கருணையே வடிவானவர் என்கிறான். அவர் கையில் ஏன் சூலாயுதம், வேலாயுதம், அரிவாள், மண்வெட்டி, கோடாரிகள் எல்லாம்? இவைகள் எல்லாம் கருணையின் சின்னங்களா? கொலைக்காரப் பசங்களுக்கு இருக்க வேண்டிய கருவிகள் எல்லாம் கடவுளுக்கு எதற்கு?

ஒன்றும் வேண்டாத கடவுளுக்கு என்னத்துக்கு ஆறுகால பூசை? எந்த மடையன் கடவுளுக்கு சோறு தின்னுவதைப் பார்த்தான்? பார்த்து இருந்தால் சொல்லட்டுமே! கடவுளுக்கு ஒழுக்கத்தையாவது நல்ல முறையில் கற்பித்து இருக்கிறானா? எந்தக் கடவுள் இன்னொருத்தனுடைய மனைவியைக் கெடுக்காமல் இருந்திருக்கிறான்? விபச்சாரம் செய்யாத கடவுள் ஒன்றாவது உண்டா? இருந்தால் சொல்லட்டுமே; ஏற்றுக் கொள்கிறேன்.

கடவுள் பிறப்பைப் பற்றித்தான் எழுதி வைத்து இருக்கிறானே – கொஞ்சமாவது யோக்கியம் வேண்டாமா? விநாயகன் பிறப்பு எவ்வளவு ஆபாசமானது! சிவனும், பார்வதியும் காட்டிற்குப் போனார்களாம். அங்கு ஆண் யானை ஒன்றும் பெண் யானை ஒன்றும் கலவியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்ததாம். அதைக் கண்ட அந்த இருவருக்கும் இச்சைப் பிறந்ததாம். உடனே இருவரும் ஆண் - பெண் யானைகளாக உருவெடுத்துக் கலவியில் ஈடுபட்டு இச்சைத் தீர்த்துக் கொண்டார்களாம். அப்போது ஒரு குட்டி பிறந்ததாம். யானை முகத்தோடு அவன் தான் விநாயகனாம். இதை நம்புகிறீர்களா? அறிவுள்ளவன் ஏற்றுக் கொள்ள முடியுமா? இதை இன்றைக்கும் பார்ப்பான் பிரச்சாரம் செய்கிறான் என்றால் நம்மை முட்டாளாகவும், சூத்திரனாகவும் ஆக்குவதற்குத் தானே!

பார்ப்பானின் இந்தக் கடவுள்களை ஏற்றுக் கொண்டால் நாம் சாத்திரப்படி சூத்திரன் தானே. இந்தியாவில் கிறிஸ்தவன், துலுக்கன், பார்ப்பான் தவிர, அத்தனைப் பேரும் சூத்திரன் தானே – சாத்திரத்தில் மட்டுமல்ல - இன்றைய சட்டப்படியும் இந்த இழிநிலை. இந்து என்று நாம் ஒப்புக் கொள்ளும் வரை - இந்தியா என்ற ஒன்று இருக்கும் வரை நாம் சூத்திரன் தானே, இந்த ஆட்சி உள்ளவரை நாம் இந்து தானே. இந்த ஆட்சி ஒழிந்து ஒரு வெள்ளைக்காரனோ, ஒரு ஜப்பான்காரனோ ஆட்சி செய்தால் ஒழிய நமது சூத்திரத்தன்மை எப்போது ஒழியப் போகிறது.

தோழர்களே! இன்றைக்கு நாம் சூத்திரர்களாக இருக்கிறோம் என்றால் அது பார்ப்பானால் மட்டுமல்ல – நாமே அதை ஒத்துக் கொண்டு இருக்கிறோம். பார்ப்பான் நம்மை சூத்திரன் என்று சொல்ல பயந்துவிட்டான். ஆனால் நாமே நாம் இந்து என்று ஒப்புக் கொண்டு கோயில்களுக்குச் செல்வதன் மூலமாகவும், நெற்றியில் சாம்பலைப் பூசிக் கொள்வதன் மூலமாகவும் சூத்திரன் என்பதை ஏற்றுக் கொள்கிறோம். 1973-ஆம் ஆண்டிலே இன்னும் நாம் கோயிலின் கர்ப்பக்கிரகத்திற்குள் நுழையக் கூடாத ஜாதியாக வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்றால் இதை விட ஈனத்தன்மை நமக்கு என்ன வேண்டும்? அவனவன் மந்திரியாகப் போகவும், பெரிய மனிதனாகவும் ஆசைப்படுகிறானே தவிர இந்தப் பிறவி இழிவை ஒழிக்க யார் முன் வருகிறான்?

இன்றைக்கு இருக்கிற அரசாங்கம் நமது அரசாங்கம் என்று பேர். என்னத்துக்காக இந்த பண்டிகைகளுக்கு எல்லாம் லீவு விட வேண்டும்? நம்மை இழிமகன் என்று முத்திரைக் குத்திக் கொள்வதா? துணிச்சலாக இந்த லீவுகளை எல்லாம் கான்சல் செய்ய வேண்டும்.

இந்த அரசாங்கங்கூட இந்த இடிந்து போன கோயில்களை எல்லாம் பழுது பார்த்துப் புதுப்பித்துக் கொண்டு இருக்கிறது. என்ன அர்த்தம்? நம்மை என்றென்றும் தேவடியாள் மக்களாக்கச் செய்யும் முயற்சிதானே இது? வெட்கப்பட வேண்டாமா? இளைஞர்களே! நன்றாக நாமத்தையோ போட்டுக் கொண்டு போனால் அவனுக்கு மானம் வருவது போல காரித் துப்புங்கள்.

'நீ இன்னும் ஏன் பார்ப்பானுக்கு வைப்பாட்டி மகனாக இருக்க ஆசைப்படுகிறாய்?' என்று கேளுங்கள்.

இவ்வளவு துணிச்சலாக என்னைத் தவிர வேறு எவன் சொல்லப் போகிறான்? வேறு எவனுக்குக் கவலை?

இன்னும் எத்தனை நாளைக்கு நான் சொல்லிக் கொண்டு இருக்கப் போகிறேன்? இன்றைக்குத் துணிந்து வந்து முயற்சிக்கவில்லை என்றால் உங்களுடைய சந்ததிகளும், தலைமுறைக்கும் தலைமுறைக்கும் சூத்திரர்கள் தானே!

எங்களுடைய இயக்கம் இந்த நாட்டில் தோன்றிப் பாடுபடவில்லை என்றால் - இந்தக் கடவுளைச் செருப்பாலடித்துச் சாத்திரங்களைக் கொளுத்தி எரிக்கவில்லை என்றால் நமக்குப் படிப்பு ஏது? உத்தியோகம் ஏது? இன்றைக்கு நூற்றுக்கு நூறு தமிழனாகவே இந்த நாட்டை ஆட்சி செய்கிறார்களே, இது எப்படி வந்தது? நம்முடைய முயற்சியால் அல்லவா! 

- (29.08.1973- அன்று சிதம்பரத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரையில் ஒரு பகுதி "விடுதலை" – 05.09.1973) 

அனுப்பி உதவியவர்: மகிழ்நன்

Pin It