உலக அளவில் உருவாகிவரும் பிரம்மாண்டமான முப்பது சந்தைகளில் இரண்டாவது பெரிய ஈர்க்கத்தக்க சந்தை இந்தியா தான் என்று எ.டி.கர்னி நிறுவனம் அடையாளம் கண்டுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14% பங்களிப்புடன் மொத்த தொழிலாளர்களில் 7% (விவசாயத்தில் மட்டுமே இதைவிடக் கூடுதல்) கொண்டுள்ள சில்லறை வர்த்தகத் தொழில் உறுதியாக இந்தியப் பொருளாதாரத்தின் தூண்களில் ஒன்றாக விளங்குகிறது.

walmart_360இந்தியாவின் மொத்த வர்த்தகத்தில் 98% அமைப்புசாரா வடிவத்தில் நடைபெறுகிறது. அமைப்பு சார்ந்த வர்த்தகம் 2% மட்டுமே. 2003ல் ரூ. 11,00,000 கோடியாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 44% ஆக உயர்ந்துள்ளதாக மதிப்பிடப்டுள்ள்ளது. இது ஆண்டொன்றுக்கு 40% வேகத்தில் வளர்ச்சிபெற்று வருகிறது. இதில் உணவுப்பொருள் விற்பனை மட்டுமே 63% ஆகும். இப்போது 28 பில்லியன் டாலர்களில் இருக்கும் அதன் வணிகம் 2020ல் 260 பில்லியன் டாலர்களாக அதிரிக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.

இதில் அமைப்பாக்கப்பட்ட பிரிவில் 5,00,000 பேர் வேலைவாய்ப்புப் பெற்றுள்ளனர். அமைப்புசாராப் பிரிவில் 3,95,00,000 பேர் வேலைவாய்ப்புப் பெற்றுள்ளனர். இந்தியாவில் 110,00,000 சில்லறை விற்பனை கடைகள் உள்ளன, இவற்றில் 4% மட்டுமே 500 சதுர அடிக்கு மேல் உள்ளவையாகும்.

இந்தியாவின் சில்லறை விற்பனையாளர் ஆண்டொன்றுக்கு ரூ.1,86,075 க்கு மட்டுமே விற்பனை செய்கிறார். அமைப்புசாரா சில்லரைவணிகத்தில் ஆண்டுக்கு ரூ.7,35,000 கோடிக்கு விற்பனையாகிறது, 4 கோடி பேர் வேலை செய்கின்றனர்.

இந்நிலைலையில், மத்திய அரசின் தாராளமயக் கொள்கையால் இந்தியாவுக்குள் நுழையும் சில்லரை வர்த்தக அந்நிய நிறுவனங்கள் இந்தியச் சில்லறை வர்த்தகத்தைக் கைப்பற்றும் நோக்குடன் தான் வருகின்றன.

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டால் நுகர்வோருக்கு 5-10% விலைகள் குறையும், சில்லறை விற்பனை நிலையங்களிலும் பொருள் போக்குவரத்துத் துறையிலும் ஏராளமானவர்களுக்கு வேலை கிடைக்கும், விவசாயிகளுக்கு விளைபொருட்களுக்கு 10-30% கூடுதல் விலை கிடைக்கும் என்றெல்லாம் ஆட்சியாளர்கள் கூறுகின்றனர். ஆனால் உண்மை நிலை என்னவாக இருக்கிறது?

வால்மார்ட் - ஒரு உதாரணம்

வால்மார்ட் நிறுவனத்தின் ஆண்டு விற்பனைத் தொகை ஏறத்தாழ ரூ. 2,00,0000 கோடி, அது ஆண்டுதோறும் சராசரியாக 12-13% அதிகரித்து வருகிறது. அதன் ஆண்டு லாபம் ஏறத்தாழ 45000 கோடி ஆகும், அதன் 4800 கடைகளில் 14 லட்சம் பேர் வேலை செய்கின்றனர். அவற்றில் 1355 கடைகள் அமெரிக்காவிற்கு வெளியில் உள்ளன. வால்மார்ட் கடையின் சராசர் பரப்பளவு 85,000 சதுர அடிகளாகும். ஒரு கடையின் சராசரி விற்பனை ரூ. 25 கோடியாகும். ஒரு தொழிலாளி சராசரியாக ரூ. 1 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்கிறார். 2004 ஆண்டில் அது சொத்துகளின் மீது 9% லாபத்தை ஈட்டியுள்ளது, அதன் பங்கு மதிப்பில் 21% லாபம் ஈட்டியுள்ளது.

கனடாவில் 11 ஆண்டுகளுக்கு முன்பு நட்டத்தில் நடந்து கொண்டிருந்த சில்லறை விற்பனைத் தொடரைக் கைப்பற்றிய வால்மார்ட் இன்று கனடாவின் சில்லறை வணிகத்தில் 52 விழுக்காட்டைக் கைப்பற்றியுள்ளது.

அது மட்டுமல்ல ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படும் வால்மார்ட் நிறுவனம் தனது தொழிலாளர்களை நடத்தும் விதம் அமெரிக்காவில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் வைத்துக்கொள்ள அனுமதிப்பதில்லை. ஊதிய உயர்வு கோரி போராட அனுமதிப்பதில்லை. தொழிற்சங்க முயற்சிகளைத் தடுக்கக் கொலை செய்யவும் தயங்குவதில்லை. அதனால் தானோ என்னவோ அது நாட்டுக்கு நாடு பெயரையும் மாற்றிகொள்கிறது.

வால்மார்ட் போன்றே ஸ்வீடனின் எச்&எம், ஐகியா, ஜப்பானின் உனிக்டோ, பிரிட்டனின் டாப்ஷாப், அமெரிக்காவின் ஆப்பிள், போலோ. அபெர்க்ரோம்பீ, பெஸ்ட் பை போன்றவை இந்தியாவில் நுழையக் காத்திருக்கும் பிற சில்லறை வர்த்தக சங்கிலித் தொடர் நிறுவனங்களில் முக்கியமானவை ஆகும்.

மூலதனத்தின் மூலம் 

இந்தியாவிலிருந்து திருட்டுத்தனமாக சுவிஸ் வங்கிகளில் மறைத்து வைக்கப்படிருக்கும் ஆயிரக்கணக்கான லட்சம் கோடி ரூபாய் பணத்திற்கு அவற்றை மறைத்து வைத்திருப்போருக்கு வட்டி எதுவும் தருவதில்லை மாறாக அப்படி மறைத்து வைத்திருப்பதற்கு அவர்களிடமிருந்து கட்டணங்கள் பெறுகின்றன. அந்த பணத்தை சில்லறை வணிகத்தில் இந்தியாவில் முதலீடு செய்வதற்கு அமெரிக்க, ஐரோப்பிய நிறுவனங்களுக்கு வெறும் 2-3% வட்டியில் பணம் தர சுவிஸ் வங்கிகள் முன்வந்திருக்கின்றன. இந்திய சில்லறை வர்த்தக நிறுவனங்கள் இந்திய வங்கிகளில் பெறும் கடனுக்கு 13% வரை வட்டி தரவேண்டியுள்ளது. ஒரு கோடி ரூபாய் கடன் பெற்ற இந்திய நிறுவனங்கள் 13 லட்சம் ரூபாய் வட்டி கட்டவேண்டும், அதே தொகைக்கு அந்நிய நிறுவனங்கள் வெறும் 3 லட்சம் மட்டுமே வட்டியாகச் செலுத்தினால் போதும். இதில் வேடிக்கையும் ஆத்திரமும் என்னவென்றால் சுவிஸ் வங்கியில் அந்த அந்நிய நிறுவனங்கள் கடனாகப் பெறும் தொகையில் இந்திய கள்ளப்பணமும் அடங்கியுள்ளது. அதாவது இந்தியப் பணத்தைக் கொண்டு, இந்தியாவில் சில்லரை வர்த்தகத்தில் நுழைந்து, கோடிக்கணக்கானவர்களின் வாழ்வாதாரத்தைப் பறித்து, வேலை வாய்ப்பைப் பறித்து, பெரும் லாபத்தையும் அள்ளிக்கொண்டு செல்லலாம்.

அவர்கள் ‘நட்டத்துடன்’ வணிகத்தைத் தொடங்கி, இந்திய சில்லறை வணிகச் சந்தையைக் கைப்பற்றிப் பின்னர் பெரும் லாபத்தை ஈட்ட இந்த சுவிஸ் வங்கிப் பணம் உதவும். விவசாயிகளின் விளைபொருட்களுக்கு கூடுதல் விளை கொடுப்பதாக ஆசை காட்டி, உள்நாட்டுப்போட்டியை ஒழித்த பிறகு, அவர்களைத் தாங்கள் கேட்கும் விலைக்கு விற்கச் செய்யவும் தாங்கள் சொல்லும் பொருளை விளைவிக்கச் செய்யவும் ஆட்டிவைக்கலாம்.

மூலதனத்தின் அடிமைகள் 

சில்லறை வர்த்தகத்தில் அந்நியமுதலீட்டை அனுமதிக்கும் முடிவிலிருந்து பின்வாங்கப் போவதில்லை என்று ஏகாதிபத்திய நாடுகளின் சுரண்டல் கருவியான முன்னாள் உலகவங்கி அதிகாரியும் இப்போதைய இந்தியப் பிரதமருமான மன்மோகன்சிங் உறுதிபடக் கூறியுள்ளார். தனது முன்னாள் (இப்போதும் தான்) எஜமானர்களுக்கு விசுவாசமாக அவர் நடந்துகொள்கிறார்.

இந்தியாவில் நுழைந்து இந்தியச் சந்தையைக் கைப்பற்றி கொள்ளை லாபம் ஈட்டிட 51% - 100% வரை முதலீடு செய்ய அந்நிய நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டால் இந்தியத் தொழில்வளம் பெருகும் என்று கூறும் ஆட்சியாளர்கள், காமன்வெல்த் ஊழல், 2ஜி ஊழல், சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியக் கருப்புப்பணம் ஆகியவற்றை மீட்டால் இந்தியாவின் தொழில்வளம் பெருகாதா?

பன்னாட்டு நிறுவனங்களோடு கூட்டுச் சேர்ந்து இந்திய மக்களின் உழைப்பையும் செல்வத்தையும் கொள்ளையிடத் துடிக்கும் இந்தியப் பெருமுதலாளிகளின் பிரதிநிதியான இந்திய அரசாங்கம் தனது விசுவாசத்தைக் காட்டுகிறது.

பன்னாட்டு நிறுவனங்களின் லாபத்தை உத்தரவாதப்படுத்தும் வகையில் சில்லறை வணிகத்தில் ஈடுபட்டுள்ள இந்தியச் சிறுவணிகர்கள், தெருவணிகர்கள், குடிசைத் தொழில் மூலம் உணவுப்பொருள் தயாரித்து விற்போர் ஆகியோரின் பிழைப்பை முடக்கும் வண்ணம் பல வணிகவரி சட்டம், உணவுப் பொருள் தரக்கட்டுப்பாட்டு சட்டம் உள்ளிட்ட சட்டங்களையும் கட்டுப்பாடுகளையும் கொண்டுவர முனைந்துள்ளது இந்திய அரசு.

மம்தா, மாயாவதி, ஜெயா மாநில அரசுகளும் முலாயம், பா. ஜ. க. வினர், தி. மு. க. வினர் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்ப்பது போலக் காட்டிக்கொண்டாலும் அவர்கள் தமது பாராளுமன்றவாத அரசியல் லாப நட்டக் கணக்கைக் கொண்டே செயல்படுவார்கள் என்பது யாரும் அறியாததல்ல.

போராடாமல் மாற்றம் இல்லை

சில்லரை வணிகத்தில் மட்டுமல்லாது அனைத்துத் துறைகளிலும் நாட்டைக் கூறு போட்டு அந்நிய பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்கத் துணிந்துவிட்ட இந்திய அரசாங்கத்தை எதிர்த்து விவசாயிகள், தொழிலாளர்கள், நடுத்தரவர்க்கத்தினர், அடித்தட்டு மக்கள், பெண்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் ஆகிய அனைத்துத் தரப்பினரும் போராடிவருகின்றனர். இதை ஆதரிப்போர் பெருமுதலாளிகள் மட்டுமே. பன்னாட்டு நிறுவனங்களோடு கூட்டுச் சேர்ந்து கொள்ளையிட மொத்த அரசாங்கத்தையும் தமது எடுபிடியாக ஆக்கிக் கொண்டவர்களிடமிருந்து நாட்டையும் மக்களையும் காக்க வேண்டுமானால் இந்த அரசாங்கத்தை ஒட்டுமொத்தமாகத் தூக்கியெறிந்துவிட்டு, அனைத்து மக்களின் நலன்களையும் பாதுகாக்கக் கூடிய, குறிப்பாக நாட்டின் மக்கள் தொகையில் என்பது விழுக்காட்டுக்கும் மிகுதியாக இருக்கும் உழைக்கும் ஏழைமக்களின் நலன்களை முன்னிறுத்தக் கூடிய ஒரு மக்கள் அரசாங்கத்தை உருவாக்கும் போராட்டத்தில் அனைவரும் தங்களை இணைத்துக் கொள்ளவேண்டும்.

- வெண்மணி அரிநரன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It