திருவாங்கூர் சமஸ்தானத்தில் கொஞ்ச காலமாக சில புதுமைகள் நடந்து வருகின்றன. அவற்றுள் அரசாங்கம் சமீபத்தில் பத்திரிகைகள் மீது தொடுத்துள்ள பாண முறையும் ஒன்றாகும். திருவாங்கூர் சமஸ்தானத்திற்கு தாய் அரசாங்கமாய் விளங்கும் இந்திய அரசாங்கத்தில் கூட இத்தகைய சட்டம் இது சமயம் இல்லையென்றே சொல்லலாம்.

இப்பொழுது செய்துள்ள சட்டப்படி திருவாங்கூர் சமஸ்தானத்தில் பத்திரிகை நடத்துவோர் ஜாமீனாக முதலில் ரூபாய் 500 கட்ட வேண்டும். பத்திரிகையில் ஏதாவது குற்றங் காணப்பட்டால் ஜாமீன் தொகையான ஐநூறு ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டுவிடும். அதன் பிறகு அப்பத்திரிகை நடை பெற வேண்டுமானால், அரசாங்கம் சம்மதித்தால் ரூ. 2,500 ஜாமீன் கட்ட வேண்டும். மறுபடியும் குற்றங் காணப்பட்டால் அத்தொகை பறிமுதலாவ தோடு பத்திரிகையும் அழிந்தொழிய வேண்டியதுதான். இதுவே இப்பொழுது திவானாகயிருந்து லீவின் பேரில் சென்றிருக்கும் திவான் வாட்ஸ் துரை மகனாரின் பெரு முயற்சியால் பிரயோகிக்கப்பட்ட அருமையான சட்டம்.

சுதந்திரத்தையும் உரிமையையும் நோக்காகக் கொண்டே பத்திரிகை நடத்தப்படுவதாகும். பத்திரிகை நடத்த வேண்டிய உரிமையையும் சுதந்திரத் தையும் பறித்து விட்டால் அப்பத்திரிகை நடந்தென்ன? நடக்காமல் அழிந்தென்ன? ஆட்சி முறையில் குற்றங் கண்டவிடத்துக் கடிந்தும், குணங் கண்ட விடத்துப் போற்றியும் வருவதே பத்திரிகையின் இயல்பு.

“இடிப்பாரை இல்லாத வேமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும்.”

என்னும் தமிழ் வேதப்படி, குற்றங்கண்ட விடத்தில் இடித்துக்கூறும் அமைச்சன் இல்லாவிட்டால், கெடுப்பான் இல்லாவிட்டாலும் அரசன் கெடு வான் என்பதைப் போல, குற்றங் கடிந்தும், குணம் புகழ்ந்தும் பேசும் பத்திரி கைகளுக்கு வாய் பூட்டிடுதல் திருவாங்கூர் சமஸ்தானத்திற்கே அவமான மாகும்.

இதை உணர்ந்து மேன்மை தங்கிய ரீஜண்ட் மகாராணியார் இந்த புதிய பத்திரிகைச் சட்டத்தை ரத்து செய்வதே கண்ணியம் பொருந்திய செயலாகும். இல்லாக்கால் தன்னுடைய பிரஜைகள் தன் ஆக்கினையை மீறி சிறை செல்வ தால் தானே பணிந்து வாபஸ் பெற வேண்டிய நிலை சம்பவிக்கும் யென் பதையும் வணக்கத்துடன் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

அல்லாமலும், இது தற்காலம் ஆட்சி செலுத்தும் ரீஜண்ட் மகாராணி யாரிடம் நாம் எதிர்பார்த்த குணங்களுக்கு முற்றும் விரோதமாயிருக் கிறது. அமைதியாகவும் குடிகள் விரும்பும் முறைப் படியும் ஆட்சி செலுத்த வேண் டியது நல்லரசின் முறை. அப்படிச் செலுத்த தன்னால் முடியாவிட்டால் தன்னிடம் பிரஜைகள் நல்லபிப்பிராயம் கொண்டுள்ள இக்காலத்திலேயே தன்னுடைய ரீஜண்ட் பதவியிலிருந்து விலகி வேறு ஒருவரிடம் ஒப்புவித்து பழி பாவங்களிலிருந்து தப்புவித்துக் கொள்ளுவதே நல்லது. இல்லாவிட்டால் இவ்வாறான கொடுங்கோலாட்சிக்குத் தன்னை பாத்திரமாக்கிக் கொள்வது புத்திசாலித்தனமாகாதென்றே சொல்லுவோம்.

இனி, திருவாங்கூர் பிரஜைகள் இக்கொடுமையைச் சகித்துக்கொண்டு சும்மா இருக்கக்கூடாது. அரசாங்கம் மூச்சடைத்துத் திணறும்படி செய்தல் வேண்டும். அரசாங்கம் ஒத்து வராவிட்டால் அரசாங்கத்திற்கு (டிபாசிட்டு) ஜாமீன் தொகை கட்டாமலேயே ஒவ்வொருவரும் பத்திரிகைகள் வெளியிட முன் வரவேண்டும். அதனால் அரசாங்கத்தார் கைது செய்வரேல் ஜெயிலுக்குப் போகத் தயாராயிருக்க வேண்டும். இப்படியே ஒவ்வொரு நாளும் தினம் 10,20-பத்திரிகைகள் வீதம் ஆரம்பித்து, அதனால் உறுதியுடன் தினம் 10,20-பேர் ஜெயிலுக்குப் போய் ஜெயிலை நிரப்பிக் கொண்டேயிருந்தால் அப்பொ ழுது அரசாங்கம் தானே பணிந்துவிடும் என்று திருவாங்கூர் பிரஜைகளுக்கு விண்ணப்பம் செய்துக் கொள்ளுகிறோம்.

குடி அரசு - வேண்டுகோள் - 06.06.1926

Pin It