உங்களுடைய சங்கத்தின் ஐந்தாவது நோக்கம் மததர்ம பரிபாலனங்களை ஒழுங்காக நடைபெறச்செய்தல் என்பது. இது தற்காலம் நாடார் சமூகத் திற்கு மாத்திரமல்ல, இந்து மதத்திற்கே - இந்தியாவிற்கே - ஏன் உலகத்திற்கே மிகவும் அவசியமானது.

கடவுள் என்றால் என்ன?

குறிப்பாகவும் சிறப்பாகவும் கடவுள் என்பது என்ன என்பதைப் பற்றியும், மதம் என்பது என்ன என்பதைப் பற்றியும், தர்மம் என்பது என்ன என்பதைப் பற்றியும், பரிபாலனம் என்பது என்ன என்பதைப் பற்றியும் இந்துக்கள் என்போர்களில் ஆயிரத்திற்கொருவருக்குக் கூட குறைந்த அளவு ஞானமுமில்லாமலே இருக்கிறது. இதைப்போல ஒரு பெரிய ஜன சமூகத்திற்கு கேடான காரியம் வேறெதுவும் இல்லை. நம்மில் அநேகர் கடவுள் என்றால் என்ன என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். கடவுள் நம்மைப் போல் மனிதஉருவத்தோடு இருப்பதாயும்; அதற்கு பெண்டாட்டி, பிள்ளை, தாய் , தகப்பன், வீடு வாசல், சொத்து சுகம் உண்டென்றும், அதற்கும் கல்யாணம், ருது, சாந்தி, படுக்கை, வீடு, சீமந்தம், பிள்ளைப்பேறு உண்டென்றும் இப்படி ஆயிரக்கணக்கான கடவுள் ஆயிரக்கணக்கான பெயரினால் இருக்கிற தாகவும் அதற்கு அபிஷேகமோ, பூஜையோ, தீபாராதனையோ, உற்சவமோ செய்வது தான் பக்தி என்பதாகவும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஹிந்து மதம் எது?

அதுபோலவே மதம் என்பதையும் நெற்றியில் நாமமோ, விபூதியோ, கோபியோ, சந்தனமோ பூசுவதுதான் இந்துமதம் என்றும், ஒருவரை ஒருவர் தாழ்ந்த ஜாதி உயர்ந்த ஜாதி என்று சொல்லுவதைத்தான் இந்து மதம் என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இம்மாதிரி சுவாமிகளுக்குக் கோயில் கட்டுவதையும், உற்சவம் நடத்துவிப்பதையும், இந்த உற்சவத்திற்கு வரும் ஜனங்களுக்கு மடம் கட்டுவதும், சத்திரம் கட்டுவதும், சாப்பாடு போடுவதும் தர்மம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்விதகாரியத்தை பிரசாரம் செய்வதையும் இவ்வித காரியங்களை நிர்வகிப்பதையும் இதற்காகப் பொது ஜனங்கள் பொருளை செலவு செய்வதையும் பரிபாலனம் என்று நினைக்கிறார்கள்.

 கடவுளும் மதமும்

இந்து சமூகத்திற்கு அடிப்படையான குற்றம் - அதாவது அஸ்திவாரத் திலேயே பலவீனம் - நாம் கடவுளையும் மதத்தையும் அறிந்திருக்கும் பான்மையேதான். இந்தப்பான்மையுள்ள சமூகம் உருப்படியாவதற்கு மார்க்கமேயில்லை. தொட்டதற்கெல்லாம் ‘கடவுள் செயல்’ என்பதும் நமது தேவைகளையெல்லாம், நமது பிரயத்தனமில்லாமல், கடவுளை ஏமாற்றி அடைந்துவிடலாம் என்கிற பேராசைப் பயித்தியமும் நம்மைவிட்டு நீங்க வேண்டும். கடவுள் கை, கால், கண், மூக்குடன் மனிதனைப்போல் எங்கேயோ ஓரிடத்தில் இருக்கிறார், அவரை நினைத்தாலோ, பணிந்தாலோ, “தேங்காய் பழம் உடைத்து பொங்கல் வைத்து பூஜை செய்தாலோ, பூசாரிக்குப் பணம் கொடுத்தாலோ மனிதனாய்ப் பிறந்ததற்கு செய்ய வேண்டிய கடன் தீர்ந்துவிட்டது, மனிதன் செய்யும் தப்பிதம் எல்லாம் தீர்ந்துவிட்டது என்று எண்ணுகிற எண்ணத்தைப்போல் ஒரு முட்டாள்தனமான எண்ணம் வேறொன்றுமே யில்லை. மனிதர்கள் இவ்வளவு அக்கிரமங்கள் செய்யக்காரணமே, கட வுளை சரியானபடி உணராததும் உணர்ந்திருப்பதாய் நினைக்கும் பலர், கடவுளை வணங்கி மன்னிப்புக் கேட்டால் மன்னித்துவிடுவார் என்கிற நம்பிக்கையும்தான்.

 கடவுள் ஒருவர் இருக்கிறார், அவர் எல்லாவற்றையும் அறிந்து கொண்டு இருக்கிறார் என்று எண்ணுகிற மக்களிலேயே 1000-தில் ஒருவன் கூட கடவுள் கட்டளைக்குப் பயந்து நடப்பது அருமையாய்த்தான் இருக்கிறது. இவற்றிற்குக் காரணம் இயற்கைக்கு விரோதமான கட்டளைகளையும் உண்மையான கடவுள் தன்மையையும் அறியாததேதான்.

 கடவுளின் கட்டளை எது?

கடவுள் கட்டளை என்று சொல்லுவது ஒவ்வொரு தேசத்திற்கும் ஒவ் வொரு ஜாதிக்கும் ஒவ்வொருவிதமாக இருந்து வருவதை நாம் காண்கிறோம். இவைகளை எப்படி கடவுள் கட்டளையாக மதிக்கப்படும். அது போலவே பாவ புண்ணியம் என்பது தேசத்திற்கு ஒரு விதமாகவும் மதத்திற்கொரு விதமாகவும் ஜாதிக்கொரு விதமாகவும்தான் கருதப்படுகிறது. நமது கல்யாணங்களிலேயே மதத்திற்கு மதம் வித்தியாசம்; ஜாதிக்கு ஜாதி வித்தியாசம். சிலர் தனது சிறிய தகப்பனார், பெரிய தகப்பனார் புத்திரியை மணக்கிறார்கள்; சிலர் அத்தை மாமன் புத்திரியை மணக்கிறார்கள்; சிலர் யாரையும் மணக்கிறார்கள். ஆகார விஷயத்திலோ சிலர் பசுவை உண்ணுவது பாவம் என்கிறார்கள், சிலர் பன்றியை உண்பது பாவம் என்கிறார்கள். சிலர் கோழியை உண்பது பாவம் என்கிறார்கள், ஜெந்துக்களிலேயே சிலர் பசுவை அடித்து துன்புறுத்தி வேலை வாங்கலாம், ஆனால் பாம்பை அடிப்பது பாவம் என்கிறார்கள். சிலர் எந்த ஜீவனையும் வதைக்கக் கூடாது என்கிறார்கள். சிலர் எல்லா ஜீவனும் மனிதன் தன் இஷ்டம்போல் அனுபவிப்பதற்குத்தான் படைக்கப்பட்டது என்கிறார்கள். இந்த நிலையில் எது உண்மை? எது கடவுள் கட்டளை? எது பாவம்? என்று எப்படி உணர முடியும். இவற்றைப்பற்றி எவராவது ஆராய்ச்சி செய்யப் புகுந்தால் உடனே அவரை நாஸ்திகர் என்று சொல்லுவதும், இதெல்லாம் உனக்கு எதற்காக வேண்டும் பெரியவர்கள் சொன்னபடியும், நடந்தபடியும் நடக்கவேண்டியதுதானே என்றும் சொல்லி விடுவார்கள்.

 “பெரியவர்கள்” யார்?

 பெரியவர்கள் யார் என்று யோசிக்கப்போனால் அதிலிருக்கும் கஷ் டத்திற்கு அளவே இல்லை. அன்றியும் அவர்கள் சொன்னதையும் நடந்த தையும் கவனிக்கப் போனால் அதிலுள்ள கஷ்டத்திற்கும் வியவகாரத்திற்கும் முடிவேயில்லை. உதாரணமாக சிலர் ‘வேதம்’ என்று ஒன்றைச் சொல்லி அதன்படி எல்லாரும் நடக்கவேண்டும் என்று சொல்லுவார்கள். அதில் என்ன சொல்லியிருக்கிறது, நான் பார்க்கலாமா என்றால், அது கடவுளால் சொல்லப்பட்டது, அதை நீ பார்ப்பது பாவம், நான் சொல்லுவதைத்தான் நம்ப வேண்டும் என்பார்கள். உலகத்தில் எத்தனைக் கடவுள் இருப்பார்கள். ஒரு கடவுள்தானே! அவர் சொல்லியிருப்பாரானால் அது உலகத்திற்கெல்லாம் ஒப்புக் கொள்ளப்பட்டதாயிருக்க வேண்டாமா? அப்படியானால், கிருஸ்து, மகம்மது முதலிய மதங்களும் இந்தியா தவிர மற்ற தேசங்களும் இதை ஒப்புக்கொள்ளும்படி கடவுள் ஏன் செய்யவில்லை? ஆனதனால் இது கடவுள் சொன்னார் என்பது பொய் என்று யாராவது சொன்னால் உடனே அவனை ‘வேதப் பிரஷ்டன்’ என்று சொல்லி விடுவார்கள். இம்மாதிரி மூடுமந்திரமானதும் இயற்கைக்கும் அனுபவத்திற்கும் நாணயத்திற்கும் விரோதமானதுமான கொள்கைகள் நமது நாட்டில் இந்து மதத்தின் பெயரால் இருந்துகொண்டு ஒரு பெருஞ்சமூகத்தையே தேய்ந்து போகும்படி செய்வதோடு - இதன் பரிபாலனம் என்னும் பெயரால் தேசத்தின் நேரமும் அறிவும் பொருளும் அளவற்று அநாவசியமாய்ச் செலவாகியும் வருகிறது.

 மதத்திற்கொரு கடவுளா?

மதத்திற்கொரு கடவுளா? ஜாதிக்கொரு கடவுளா? மதத்திற்கொரு வேதமா? மதத்திற்கொரு புண்ணிய பாவமா? கடவுளுக்கும் மோக்ஷத்திற்கும் நரகத்திற்கும் வேறு ஒரு உலகமிருக்கிறதா? ஒருக்காலும் இருக்கவே முடியாது. பெரியவர்கள் கோவிலில் சுவாமி கும்பிடும்போது கட்கத்திலிருக்கும் குழந்தை எப்படி ஒன்றும் அறியாமலும், மனதில் ஒன்றும் நினைக்காமலும் தானும் கைகூப்பி கும்பிடுகிறதோ, அதுபோலவே நமக்கும் தெய்வம்-மதம்-தர்மம் என்கிற சொற்கள் மற்றவர்கள் சொல்லுவதைக்கேட்டு அர்த்தமில்லாமல் நமக்குள் பதிந்துவிட்டன. இது போலவே பக்தி- தொண்டு - அஹிம்சை என்னும் பதங்களும் அர்த்தமில்லாமலே வழங்கப்படுகின்றன. யோசித்துப் பார்ப்போமேயானால் நம்மிடையில் உள்ள மக்களிடம் காட்டும் அன்புதான் நாம் பக்தி செய்யத்தக்க கடவுள்; அவர்களுக்குச் செய்யும் தொண்டுதான் கடவுள் தொண்டு; அம்மக்களின் விடுதலைதான் மோக்ஷம்; அச்ஜீவன்களிடம் கருணை காட்டுவதும் அவைகள் வேதனைப்படாமலிருப்பதும்தான் அஹிம்சை.

 அஹிம்சை எது?

மாமிசம் சாப்பிடுவதில்லை என்பது மாத்திரமே அஹிம்சையாகாது. பகுத்தறிவுள்ள மக்களை கஷ்டப்படுத்தாமல், அவர்கள் மனவேதனை அடையச்செய்யாமல் இருப்பதும், அவர்களுடைய கஷ்டத்தையும் அடி மைத்தனத்தையும் நீக்க உழைப்பதும்தான் அஹிம்சையாகும். மாட்டு மாமிசம் சாப்பிடாமலிருந்து விட்டு, மாட்டை வண்டியில் கட்டி சுமக்க மாட்டாத பாரம் வைத்து தினம் கஷ்டப்படுத்துவது ஒருக்காலும் அஹிம்சையாகாது. இப்படியே ஒவ்வொரு விஷயத்திலும் மற்றொரு ஜீவனுக்கு உபத்திரவமும் கொடுமையும் செய்யாமலிருப்பதுதான் அஹிம்சை.

ஆச்சாரம்


மனிதனுக்கு மனிதன் பார்ப்பது பாவம், தெருவில் நடப்பது பாவம் என்று சொல்லிக்கொண்டும் பட்டை நாமம் போட்டுக்கொண்டும் பஞ்ச கச்சம் வைத்து வேஷ்டி கட்டிக்கொண்டும் வாயால் ‘ராம் ராம்’ என்று ஜபித்துக் கொண்டும் இருந்தால் அது ஆச்சாரமும் பக்தியுமாய்விடுமா?

சத்திரமும் சாப்பாடும்

நம்மைச் சுற்றி கோடிக்கணக்கான மக்கள் குடியிருக்க நிழல் இல்லாம லும் இரண்டு நாளைக்கு ஒருவேளை கூட சாப்பிட சக்தியில்லாமல் தரித்திரத்தால் வாடிக்கொண்டிருக்கும் போது சோம்பேறிகளும், விபசாரிகளும் தங்கும் படி மடங்களும் சத்திரங்களும் கட்டுவதும், வயிறு நிறைய சாப்பிட்டு விட்டு ‘பாயசத்திற்கு குங்குமப்பூ போட வில்லை’, ‘பொங்கலுக்கு பாதாமி பருப்பு போதவில்லை’ என்று சொல்லிவிட்டுப் போகும் தடியர்களுக்கு பொங்கிப் போடுவதும், சமாராதனை செய்வதும் தர்மமாகுமா? இவைகளை உணராமல் சுயநலக்காரர்கள் தங்கள் நன்மைக்கு எழுதிவைத்திருக்கும் ஆபாசக் களஞ்சியங்களை நம்பிக்கொண்டு நமது பொருள், நேரம், அறிவு முதலியவற்றை வீணே பாழாக்குகிறோம்.

ஆச்சாரியார் கொடுமை

இவற்றை இந்துக்கள் என்போர்களோ இந்து மத ஆச்சாரியார்கள் என்போர்களோ சிறிதும் கவலையற்று தங்களது வாழ்வுக்கு இதைத் தொழிலாய் வைத்துக்கொண்டு காலங் கழித்து வருகிறார்கள். இப்படி நடந்து வருவது சில தனிப்பட்ட நபர்களுக்கும் சில தனிப்பட்ட வகுப்புகளுக்கும் அனுகூலமாயிருப்பதால் இவ்வாபாசங்களை வெளியார் அறியாமலிருப்பதற்கு அவ்வகுப்பாரின் கட்டுப்பாடான சூழ்ச்சியும் மற்ற வகுப்பாரின் அறியாமையும் உதவி செய்து வருகிறது. நமது சென்னை மாகாணத்தில் மாத்திரம் இந்து மத சம்மந்தமான சடங்குகள் பெயராலும், மதப்பெயராலும், தெய்வங்கள் பெயராலும் வருடம் 1-க்கு 10 கோடி ரூ. க்கு அதிகமாக செலவாகி வருகிறது என்று சொல்லுவது அதிகமாகாது. அதாவது எவ்வளவு யாத்திரை ஸ்தலம், எவ்வளவு வேண்டுதல் ஸ்தலம், எவ்வளவு உற்சவ ஸ்தலம், எவ்வளவு மதச்சடங்குகள் இவைகளுக்கேற்படும் செலவு, மெனக்கேடு இவைகளைக் கணக்குப் பார்த்தால் எவ்வளவு 10 கோடி ரூபாயாகும்? இதனால் என்ன பலனை அடைகிறார்கள்? மனதில் ஏற்படும் ஒரு குருட்டு நம்பிக்கையாலும் இதனால் லாபமடையும் வகுப்பார்களால் ஏமாற்றப்படுவதாலும்தானே நமது மக்கள் இவ்வித கஷ்ட நஷ்ட மெனக்கேடுகளுக்கு கட்டுப்பட வேண்டியிருக்கிறது. அல்லாமலும் இதனால் எவ்வளவு அடிமைப் புத்தி வளர்கிறது?

மத தர்ம பரிபாலனம்

இவ்விஷயங்களையெல்லாம் ஒழுங்குபடுத்தவும் இம்மாதிரி கஷ்ட நஷ்ட மெனக்கேடுகள் ஏற்படாமலும் அவை உண்மையில் பலனளிக்கத்தக்க வழியில் உபயோகப்படவும் வேண்டிய முயற்சிகள் எடுத்துக் கொள்வதுதான் மததர்ம பரிபாலனங்களை ஒழுங்காக நடைபெறச் செய்தல் என்பது. இவற்றை உத்தேசித்தே இந்துமத பரிபாலன சட்டம் என்று சென்னை சட்டசபையில் ஒரு சட்டம் கூட நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஆனாலும் அச்சட்டம் பண சம்பந்தமான வரவுசெலவுகளை தணிக்கை பார்க்கக் கூடியதாய் இருக்கிறதே தவிர நான் மேலே சொல்லியுள்ள குற்றங்களை நிவர்த்தி செய்யத்தக்கது என்று சொல்லமுடியாது. ஆனாலும் இவ்வளவாவது எவ்வளவோ சூழ்ச்சிக் கிடையில் நிறைவேற்றி முடித்தவர்களின் வீரத்தைப் போற்றாமலிருக்க முடியாது. ஆனாலும் இன்னமும் அச்சட்டத்தை ஒழிப்பதற்கு அதனால் இப்போது கொள்ளையடிக்க முடியாத ஒரு வகுப்பாரால் எவ்வளவோ காரியங்கள் நடைபெற்று வருகின்றன. ஸ்ரீமான்கள் ளு. சீனிவாசய்யங்கார், ஊ. ராஜகோபாலாச்சாரியார் முதலியவர்கள் ‘சுயராஜ்யக் கட்சி’ பெயரைச் சொல்லிக்கொண்டும் கள்ளு நிறுத்துவதென்பதைச் சொல்லிக்கொண்டும் சட்டசபைக்கு ஆள் பிடிப்பதும் அவர்களுக்கு ஓட்டு வாங்கிக் கொடுப்பதும் இதே கருத்தைக் கொண்டுதான். நமது மதத்தின் பெயரால் நமது மக்களிடமிருந்து கோடிக்கணக்காய் வசூலாகும் பணத்திற்கு கணக்குக் கேட்பது கூட நமது அய்யங்கார் - ஆச்சாரியார் கூட்டங்களுக்கு கஷ்டமாய் இருப்பதன் காரணம் என்னவென்பதை ஊன்றிக் கவனித்தால் யாவருக்கும் அதன் இரகசியம் விளங்கும். ஆதலால் தர்ம பரிபாலனமென்பது ஒவ்வொரு மனிதனும் கவலையெடுத்துக் கொண்டு அது பிரயோஜனப்படத்தக்க வழியில் உழைக்க வேண்டியது ஒவ்வொரு மனிதனின் முக்கியமான கடமை. அப்பேர்ப்பட்ட கடமையை நீங்கள் ஐந்தாவது கொள்கையாக வைத்திருப்பதைப் பற்றி நான் மிகுதியும் போற்றுகிறேன். ஆகவே, உங்கள் சங்கம் நீடூழி வாழ்ந்து அதன் கொள்கைகள் பூராவும் நிறைவேறி தங்கள் சமூகத்திற்கும் நாட்டிற்கும் தக்க பலனையளிக்க எல்லாம் வல்ல சக்தியை வேண்டுகிறேன்.

குறிப்பு :- ஏழாயிரம் பண்ணையில் 16.5.26 - ஆம் நாள் நடைபெற்ற பாலிய நாடார் சங்கத்தின் இரண்டாவது ஆண்டு கொண்டாட்ட தலைமை உரை - தொடர்ச்சி.)

(குடி அரசு - சொற்பொழிவு - 30.05.1926)

Pin It