ஆந்திரா காங்கிரஸ் கமிட்டியார்கள் இந்தியா சட்டசபைத் தேர்தலுக்கு அபேக்ஷகர்களை நிறுத்தியாய் விட்டது. அதாவது, மூன்று ஸ்தானங்களுக்கும் மூன்று பிராமணர்களையே நிறுத்தியாய் விட்டது. அவர்களின் பெயர்களாவன:- 1. வி.வி. ஜோகைய பந்துலு 2. டி. பிரகாசம் பந்துலு 3. சி. துரைசாமி அய்யங்கார்

முதல் இரண்டு பேர்களும் தெலுங்குப் பிராமணர்கள்; மூன்றாவதவர் தமிழ் அய்யங்கார் பிராமணர். ஆக மூன்று பேரும் பிராமணர்களேயாவார் கள். ஆந்திரா தேசம் சுமார் 10 ஜில்லாக்களையுடையது. இதில் நூற்றைம்பது லக்ஷம் ஜனங்களுக்கு மேல் மகமதியரல்லாதவர்கள். அதாவது (பிராமண ரல்லாத) இந்துக்கள். இந்த ஒன்றே முக்கால் கோடி பிராமணரல்லாதவர்கள் அடங்கிய சமூகத்தில் இந்தியா சட்டசபைக்கு அபேக்ஷகராய் நிற்பதற்கு ஒரு பிராமணரல்லாதார்கூட கிடைக்கவில்லை என்றால், அதாவது இந்தியா சட்டசபைக்கு நிற்க ஒரு பிராமணரல்லாதாருக்குக் கூட யோக்கியதை இல்லை என்றால் இவர்கள் சுயராஜ்யம் அடைய எப்படி யோக்கியதை உடையவராவார்கள்.

மகமதியர்களில் யோக்கியதை உள்ளவர்கள் இருக்கிறார்கள். கிறிஸ்தவர்களில் யோக்கியதை உள்ளவர்கள் இருக்கிறார்கள். ஆனால், பிராமணரல்லாத இந்துக்களில் மாத்திரம் யோக்கியதை உடையவர்கள் இல்லாமல் போய்விட்டார்கள். காரணமென்ன? மகமதியருக்கும் கிறிஸ்தவர்களுக்கும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனால் அவர்களில் யோக்கியதை உள்ளவர்கள் இருக்கிறார்கள் . பிராமணர் அல்லாதாருக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் இல்லை. அதனால் அவர்களில் யோக்கியதை உடையவர்கள் இல்லை. இதுதான் காரணமா அல்லது வேறு ஏதாவது காரணம் உண்டா ? என்று “வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைத்” துலைக்கக் கங்கணம் கட்டிக்கொண்டு தனது தொண்டையைக் கிழித்துக் கொள்ளத் தயாராயிருக்கும் ஸ்ரீமான் முதலியார் அவர்களை வணக்கத்துடன் கேட்கிறோம்.

இனி தமிழ்நாட்டின் கதி எப்படி இருக்கிறதோ! இன்னும் தெரியவில்லை. ஆனாலும் சென்னைக்கு ஸ்ரீமான் எஸ். சீனிவாசய்யங்கார் செங்கல்பட்டு, தென்னாற்காடு இவைகளுக்கு ஸ்ரீமான் எம். கே.ஆச்சாரியார், மதுரை, திருநெல்வேலி, ராமநாதபுரம் இவைகளுக்கு ஸ்ரீமான் சேஷய்யங்கார்; இவரில்லாவிட்டால் வேறு ஒரு அய்யங்கார்; தஞ்சை, திருச்சி இதுகளுக்கு ஸ்ரீமான் ஏ. ரெங்கசாமி அய்யங்கார். கோயமுத்தூர், சேலம், நீலகிரி இவைகளுக்கு ஸ்ரீமான் ஆர்.கே. ஷண்முகஞ் செட்டியார் பேர் அடிபடுகிறது. ஆன போதிலும் “கலியுகக் கர்ணனான” ஸ்ரீமான் சி.வி. வெங்கிட்டரமணய்யங்கா ருக்கு கோயமுத்தூர் ஜில்லாவில் சென்னை சட்டசபைக்கு ஓட்டுக் கிடைக்காது. ஸ்ரீமான் இரத்தினசபாபதி முதலியார் ஜெயித்து விடுவார் என்கிற சந்தேகம் வருமானால் ஸ்ரீமான் செட்டியார் பாடு ஆபத்துதான். சுயராஜ்யக் கட்சியில் இருந்து விலகியாவது இன்னொரு 2, 3 லக்ஷ ரூபாய் தர்ம விளம்பரம் செய்தாவது இந்தியா சட்டசபைக்கு நின்று விடுவார் . அப்புறம் செட்டியார் பாடு மறுபடியும் ஜஸ்டிஸ் கட்சிக்குப் போக வேண்டியதுதான். இதன் முடிவு ஸ்ரீமான் சி. எஸ். இரத்தினசபாபதி முதலியார் கோயமுத்தூர் ஜில்லாபோர்டு பிரசிடெண்டு எலெக்ஷனில் பெறும் ஜெயம் அல்லது தோல்வியில் அடங்கியிருக்கிறது. ஆகவே இந்தியா சட்டசபைக்கு தமிழ்நாடு சார்பாக 4 அய்யங்கார் உறுதி, ஒரு அய்யங்கார் சந்தேகம். தமிழ்நாட்டில் இந்தியா சட்ட சபைக்குப் போக யோக்கியதை உள்ளவர்கள் அய்யங்கார் ஜாதியார்தானா? பிராமணரல்லாதாரில் எவரும் இல்லையா? வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கிடைத்தால் இந்த ஸ்தானங்களுக்குப் பிராமணரல்லாதார் நிற்காமல் காலியாகி சர்க்கார் நாமினேஷனுக்குப் போய்விடுமா என்று ஸ்ரீமான் முதலியார் அவர்களை கேட்கிறோம். சென்னை சட்டசபையைப் பற்றி பின்னால் எழுதுவோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 02.05.1926)

Pin It