இன்றைய தினம் ‘இந்தியா தேசத்தில் இந்திய மக்களுக்குள் இருந்துவரும் ஜாதி மத பேதங்களுக்குத் தகுந்தபடியான பிரதிநிதித்துவம் ஏற்படக்கூடாது’ என்பதே தான் இந்திய காங்கிரஸ் கொள்கையாகவும், தீவிர தேசீயமாகவும் இருந்து வருகின்றது. அன்றியும் இந்தப்படி சொல்லுகின்றவர்கள் தான் தேசீயவாதிகளாகக் கூடும். நம்மைப்பொறுத்தவரையிலும், ‘ஜாதி மத வகுப்புப்படி மக்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும்’ என்று சொல்லுவதாலேயே தீவிர தேசீயவாதிகள் லிஸ்டில் நமது பெயர் பதியப்படாமல், வகுப்புவாதிகள் தேசத்துரோகிகள் லிஸ்டிலும் நமது பெயர் பதியப்பட்டு விட்டது. ஆனபோதிலும் ஜாதி, மதம், வகுப்பு ஆகியவை களை அடியோடு அழிக்க வேண்டும் என்று சொல்லுகின்ற ‘ஜாதிமதத் துரோக’ லிஸ்டிலும் நமது பெயர் மாத்திரமேதான் இருக்கின்றதே யொழிய மற்றபடியான ‘தீவிர தேசீயவாதிகள்’ பெயரெல்லாம் ஜாதிமத வகுப்பைக் காப்பாற்றும் லிஸ்டிலேயே தான் பதியப்பட்டிக்கின்றன.

periyar 431இதில் இருந்து பகுத்தறிவுள்ள மக்கள் ஜாதிமத வகுப்புவாதிகள் யார்? என்பதை ஒருவாறு உணர்ந்து கொள்ளலாம். ஆனாலும் சொந்த அறிவே சிறிதும் இல்லாத பாமரமக்கள் நம்மை குறை கூறாமல் இருக்க மாட்டார்கள். இந்த நாட்டில் நாமறிய சுமார் 20 வருஷ காலமாகவே பிராமணர்கள் மகாநாடு, வருணாச் சிரம மகாநாடு, கிருஸ்துவர் மகாநாடு, முஸ்லீம்கள் மகாநாடு, சைவர் மகாநாடு, வைணவர் மகாநாடு, ஆரியதர்ம பரீக்ஷித்து மகாநாடு, மற்றும் க்ஷத்திரியர், வைசியர், பார்ப்பனரல்லாதார், பறையர், சக்கிலியர், வண்ணார், நாவிதர், நாயக்கர், பள்ளர்கள், வணியவைசியர்கள், வேளாளர், படையாட்சி, வேடுவர், கோமுட்டி வைசியர், நாட்டுக்கோட்டை வைசியர், அகமுடையர், உடையார், நாடார், மறவர், கள்ளர், வீரசைவர், தேவாங்கர், இராஜபுத்திரர், சாலியர், மராட்டியர், கைக்கோளர், சௌராஷ்டிரர்கள், பலிஜியர்கள், குயவர்கள், கோனார் முதலிய பல முக்கிய வகுப்புக்காரர்களின் தனித்தனி மகாநாடுகளும், மற்றும் இவற்றுள் நூற்றுக்கணக்கான உட்பிரிவு வகுப்புகள் மகாநாடுகளும் நடைபெற்ற வண்ணமாகவே இருந்து வருகின்றன.

மற்றும் தேசீய கொள்கைகள் என்பவைகள் எல்லாம் ஜாதிமத வகுப்புகளை காப்பாற்றுவதிலும் அவற்றின் பரம்பரை உரிமைகளை காப்பாற்றுவதிலும் பழக்க வழக்கங்களை காப்பாற்றுவதிலும் தவரமாட்டோ மென்று அந்த வகுப்பாருக்கு உறுதிக்கொடுப்பதாகவே தான் தீர்மானித் திருக்கின்றன. சர்க்காரார் கணக்கிலும் ஜாதிக்கொரு கலமும், மதத்திற்கொரு கலமும், வகுப்புக்கொரு கலமும் போடப்பட்டு அதை அனுசரித்தே சிவில் கிரிமினல் சட்டங்களும், ஆக்ஷியும் நடத்தப்பட்டு வருகின்றன. வியாபாரத் துறையிலும் ஜாதி வகுப்புகள் ஆதிக்கமும், விவசாயத் துறையிலும் ஜாதிமத வகுப்புகள்ஆதிக்கமும் இருந்து வருவதோடு சமூகத் துறையிலும் ஜாதிமத வகுப்பு ஆதிக்கம் தலை சிறந்தே விளங்குகின்றன.

உதாரணமாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திரு.இராஜ கோபாலாச்சாரியார் அவர்களே தலைவர் ஹோதாவில் ‘எவனாவது கள் குடித்தால் அவனை ஜாதியை விட்டும் வகுப்பைவிட்டும் பகிஷ்காரம் செய்து அதாவது அவனுக்கு நீர், நெருப்பு, பூமி ஆகியவை யாரும் கொடுக்காமல் கொடுமைப்படுத்துவதான ஜாதி வகுப்பு கட்டுப்பாட்டை பலப்படுத்துங்கள்’ என்று அறிக்கை விட்டிருக்கின்றார். இந்த மாதிரியான முறையில் தேசீயம் முதல் காந்தீயம் வரை ஜாதி மத வகுப்பு பிரிவினை களுக்கு இரும்புப் பூண்கள் போடப்பட்டது போல் உறுதிப்படுத்தி, கட்டுப்படுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. அன்றியும், இவை சுலபத்தில் ஒழிக்கப்பட யாராலும் சம்மதிக்க முடியாது என்பதிலும் எவரும் எவ்வித சந்தேகமும் கொள்ள முடியாது. ஒரு பறையர் ஒரு பொதுத் தெருவில் நடந்தால் இன்ன தண்டனை, ஒரு வாணிய வைசியர் ஒரு பொது கோவிலுக்குள் போனால் இன்ன தண்டனை, ஒரு நாடார் க்ஷத்திரியர் ஒரு பொதுக் குளத்தில் தண்ணீர் மொண்டால் இன்ன தண்டனை என்கின்ற பினல் கோட் சட்டமும், அதற்காக இன்ன நஷ்டம் கொடுக்க வேண்டும் என்கின்ற சிவில் கோர்ட் சட்டமும், கிராம முன்சீப் முதல் பிரிவி கவுன்சில் வரை செலாவணி ஆகிக் கொண்டு தான் இருக்கின்றது.

அன்றியும் இதற்கு விரோதமாய் பேசுபவன் ஒவ்வொருவனும் ஒவ்வொரு ஜாதி மத வகுப்புக்கும் விரோதியே யாகின்றானேயொழிய, அவன் சமரசகாரனாவதில்லை. இவை மாத்திரமல்லாமல் பொது ரோட்டில் ஒரு இந்து மேளம் அடித்தால் மகமதியர்கள் கத்தியால் குத்துகிறார்கள். பொதுத் தெருவில் ஒரு மகமதியர் மாட்டைப் பிடித்துக் கொண்டு போனால் இந்துக்கள் அவரை கத்தியால் வெட்டுகிறார்கள். சீக்கியரும், முகமதியரும் தங்களை ஒருவருக்கொருவர் ஜன்ம விரோதிகள் என்று சொல்லிக் கொள்வதில் பெருமையடைகிறார்கள். ‘பிராமண’ருக்கும் ‘சூத்திர’ருக்கும் இருக்கும் ‘ஒற்றுமை’யை எடுத்து காட்ட வேண்டியதில்லை. இந்த நிலை மையில் உள்ள மக்களுக்கு ஜாதிப்படியோ, மதப்படியோ, வகுப்புப்படியோ பிரதிநிதித்துவம் மாத்திரம் கூடாதாம்!

ஏனெனில், அது தேசீயத்திற்கு விரோதமாகி விடுமாம்! ஆனால் அப்படிப்பட்ட ஜாதிமத வகுப்புகளை என்றும் நிலையாய் இருக்கும்படி காப்பாற்றுவது மாத்திரம் தேசீயமாம். அதற்காகவே திரு.காந்திக்கும் காங்கிர சுக்கும் சுயராஜ்யம் வேண்டுமாம். இந்தநிலைமையுள்ள இதன் யோக்கியதை ஒரு புறம் இருக்க பொது ஜனங்களுக்கு அளிக்கப்படும் (பிரதிநிதிகளை தெரிந்தெடுக்கும் முறை) நிலைமையைப் பற்றி சிறிது யோசிப்போம்.

ஓட்டானது கல்வியைப் பொறுத்ததாகவும் பணத்தைப் பொறுத் ததாகவும், வரும்படியைப் பொறுத்ததாகவும் இருக்க வேண்டும் என்ற அளவில் தான் நிர்ணயிக்கப்படுகின்றது. இந்தியாவில் உள்ள மற்ற எந்த மதத்திற்கும், எந்த ஜாதிக்கும், எந்த வகுப்புக்கும் கல்வி, சொத்து, வரும்படி ஆகியவைகள் இருந்தாலும் பஞ்சமர், ஆதிதிராவிடர், தீண்டப்படாதார், என்கின்ற 7 கோடி மக்களில் கல்வியோ, சொத்தோ குறிப்பிட்ட வரும் படியோ 1000ல் ஒருவருக்காவது இருக்கின்றதா என்று பார்த்தாலே அதன் இல்லாமை உண்மை நன்றாய் விளங்கும். பார்ப்பனர்களுக்கு 100க்கு 100பேர் கல்வி, சொத்து, வரும்படி ஆகியவைகள் எல்லாமும் அல்லது ஏதாவது ஒன்றும் உடையவர்கள் ஆகவேதான் இருப்பார்கள். ஆதலால் அவர்கள் எல்லாருமே எப்படியும் எந்த தொகுதியிலும் ஓட்டர்களாகி விடுவார்கள். மற்றபடி ‘மேல் ஜாதிக்காரர்’ என்பவர்களிலும் அரைவாசிப் பேராவது ஓட்டர்களாக ஆகி விடுவார்கள்.

நடுஜாதிக்காரர் என்பவர்கள் அரைக்கால் வாசிப்பேர்களாவது ஓட்டர்களாகி விடுவார்கள். மற்றும் சில ‘கீழ் ஜாதி’க்காரர் என்பவர்களும் வீசம் வாசிப்பேர்களாவது ஓட்டர்களாகி விடுவார்கள். ஆனால் பறையர், சக்கிலியர், பள்ளர் முதலிய ‘தீண்டாத’ வகுப்பார் என்பவர்களில் முந்திரிப் பெயராவது அதாவது 300ல் ஒரு பாகம் பெயர்களாவது ஓட்டராக இருக்க முடியுமா? என்பதை யோசித்துப் பாருங்கள்.

நிற்க, மற்றொரு விதத்திலாவது அதாவது அவர்களுக்கென்று சில ஸ்தானங்களை பொதுதேர்தலில் ஒதுக்கி வைத்தாலும் உண்மையான பறையரோ, சக்கிலியரோ வர முடியுமா? என்பதை சற்று யோசித்துப் பாருங் கள். பறையனிலேயே பட்டை நாமம் துளசிமணி போட்டுக் கொண்டு ‘மற்ற பறையனைத் தொட்டால் தீட்டு’ என்று கருதுகிறவனும், விபூதி, உத்திரா க்ஷம் போட்டுக் கொண்டு பறத்தெருவுகளுக்குள் போய் வந்தால் குளிக் கின்றவனும், தனது சொந்த நலத்திற்கு சமூகத்தை விற்பவனும் தான் வர முடியுமேயொழிய இவற்றிற்கு சௌகரியமில்லாதவன் வர முடியுமா? என்று பாருங்கள். ஒருக்காலும் முடியாது. ஏனெனில், உண்மையாகவே தங்கள் சமூகம் முன்னேற வேண்டும் என்று கருதுகின்றவனையும், தன்னை ஏன் மற்றவர்கள் பறையன் என்று சொல்லுகின்றார்கள் என்று கருதுகின்ற வனையும் மற்ற ஜாதியார்கள் (‘மேல் ஜாதியார்கள்’) தெரிந்தெடுக்க ஒரு நாளும் சம்மதிக்க மாட்டார்கள் . மற்றபடி கிராமங்களிலோ, அங்குள்ள மிராஸ்தாரர்கள் தங்கள் குதிரைக்காரனையும், நாய்க்கு பதிலாய் இருக்கும் அடிமையையும் மாத்திரம்தான் தெரிந்தெடுத்ததாய் சடங்கு செய்து, அவனை தங்கள் கைத்தடிமுனையிலேயே வைத்திருப்பார்களேயொழிய தங்களுடன் சரி சமமாய் உட்கார நினைப்பவனை கிராமத்திலேயே வைத்திருக்க மாட்டார்கள்.

இவை நிற்க, 21 வயது வந்த ஆண்களுக்கெல்லாம் ஓட்டு உரிமை கொடுப்பதாய் வைத்துக் கொண்டாலும், அந்த அந்த கிராமத்து மிராசுதாரன் சொன்னபடி தான் ஆசாமிகள் அபேக்ஷகர்களாக நிற்கவும், ஓட்டர்கள் ஓட்டுகள் போடவும் முடியுமே அல்லாமல், மற்றபடி பிரதிநிதித்துவத்திற்கு தகுந்தவர்கள் என்று ஒரு நாளும் வரமுடியவே முடியாது.

ஆகவே, மற்ற ஜாதி மத வகுப்பார் இடம் நம்பிக்கை இல்லை என்று கருதுகின்ற எந்த சிறுவகுப்புக்காரர்களாயிருந்தாலும், அவர்களுக்கு பிரதிநிதித்துவம் இருக்கும்படியாகவும், அந்த பிரதிநிதித்துவத்தை அவர்களே சகல உரிமைகளுடன் தெரிந்தெடுத்துக்கொள்ள தகுந்ததாகவுமே தான் சுயராஜ்ய ஆக்ஷிமுறை ஏற்படுத்தப்பட வேண்டும். அப்படிக்கில்லையானால் ஒரு பொதுவான, அதாவது இந்திய ஜாதி மத வகுப்பு வித்தியாசத்தில் கட்டுப்படாத ஒரு கூட்டத்தின் ஆக்ஷியில்தான் விடவேண்டும் என்று சொல்ல வேண்டிய நிலைமையில் இருக்கின்றோம். அதைவிட்டுவிட்டு ‘என் ஜாதி உயர்வையும், அனுபவத்தையும் விடமாட்டேன்’ ஆனால் நான் கீழ் ஜாதி என்று வதைத்து, கொடுமைப்படுத்திக் கொண்டிருக்கின்றவனுக்கு நான் தான் தர்ம கர்த்தவாய் இருப்பேன்’ என்றால் அது வடிகட்டின அயோக்கியத்தனமேயாகும்.

நிற்க, திரு. காந்தியவர்கள், ‘முகமதியருக்கும் சீக்கியருக்கும் மாத்திரம்தான் தனிப்பிரதிநிதித்துவம் தனித்தொகுதி மூலமாய் வேண்டுமானாலும் கொடுக்க சம்மதிப்பேன். ஆனால் தீண்டாதார் என்கின்ற வகுப்புக்கு மாத்திரம் கொடுக்க மாட்டேன்’என்று சொல்லுவதும், திரு.மாளவியா அவர்கள் ‘அதற்கும் ஆமாம் சாமி’ போடுவதும் என்றால், இதில் கடுகளவாவது நீதியோ அல்லது நல்ல எண்ணமோ இருக்கின்றதா என்று பார்க்கும் படி வாசகர்களை கேட்கிறோம்.

சாயபு வாய்வார்த்தை வாயில் இருக்க, முதலில் கையை நீட்டி விடுகிறார். உடனே ஆயிரக்கணக்கான சாயபுகள் மேல்விழுந்து நசுக்கி விடுகின்றார்கள். அவர்களிடத்தில் அவ்வளவு கட்டுத்திட்டமும்,வீரமும் இருக்கின்றது. ஆதலால், அவர்களுக்கு பதில் பேசாமல், ‘கொடுப்பதற்குள் என்ன சாயபே அவசரம்’ என்று மன்னிப்புக் கேட்க வேண்டியிருக்கின்றது. அதுபோலவே சீக்கியர்களும் வாய் வார்த்தை வாயிலிருக்க கிருபானை (கத்தியை) எடுத்துக் கொள்ளுகிறார்கள்.

அன்றியும், சீக்கிய பூச்சாண்டி காட்டி சாயபை ஏமாற்ற வேண்டியும் இருக்கின்றது. ஆதலால் சீக்கியர் எண்ணிக்கை லக்ஷக்கணக்குள் இருந்தா லும், அவர்களுக்கு தனித்தேர்தல் பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டியிருக்கின்றது. ஆனால், தீண்டாத ஜாதியார் என்பவர்களோ ஏழு கோடி பேர் இருந்தாலும் அவர்களுக்கு மானம் இல்லாமல், மனிதத்தன்மை நினைத்துப் பார்ப்பதற்கில்லாமல் வீரம் என்பதற்கு அர்த்தமே தெரிய முடியாமல், உதைத்த காலுக்கு முத்தம் இடும் மிருகத்தன்மையில் அடக்கி வைக்கப் பட்டிருக்கிறார்கள். ஆதலாலும், அவர்கள் இன்னும் ‘மேல் ஜாதியார்’ களுக்கு உழைத்துப் போட வேண்டிய அடிமைகளாயிருக்க வேண்டியிருப்பதால், அவர்களை முன்னேற்றமடைய விடமுடியாதென்று சொல்லி அவர்களுக்கு தனித்தேர்தல், தனிப்பிரதிநிதித்துவம் காங்கிரசும், காந்தியும், மாளவியாவும் மறுக்க வேண்டியதாகி விட்டது.

ஆகவே, காங்கிரசின் - திரு.காந்தியின், திரு.மாளவியாவின் தேசபக்தியும், தேசீயமும் வகுப்புப் பிரதிநிதித்துவத்தை எதிர்ப்பதல்லாமல் வேறு கொள்கை ஒன்றும் முக்கியமானதல்லவென்றே சொல்லுவோம்.

 தவிர, ‘சர்க்காரார் தான் ஜாதி மத வகுப்பு பேதங்களால் ஜனங்களை பிரித்துவிட்டு, சுயராஜ்யம் கொடுக்காமல், சூட்சி செய்கின்றார்கள்’ என்று திரு.காந்தியும் கிளிப்பிள்ளை தேச பக்தர்களும் அடிக்கடி சொல்வதுண்டு. ஜாதிமத வகுப்புகளை பிரிட்டிஷ் அரசாங்கம் பிரித்ததா? அல்லது இந்திய இராம இராஜ்யம் பிரித்ததா என்று கேட்கின்றோம்.

அன்றியும், முஸ்லீம்கள் விஷயத்தில் அவர்களுக்கு நியாயம் வழங்குவதிலிருந்து தப்பித்து கொள்ளுவதற்காக தேசீய முஸ்லீம் என்றும் தேசத் துரோக முஸ்லீம் என்றும் பிரித்து வைத்து, ‘நீங்கள் இரண்டு பேரும் ஒன்று சேர்ந்து வாருங்கள். உங்கள் பங்கைக் கொடுக்கத் தடையில்லை’ என்று சொல்லுவது திரு.காந்தியா? அல்லது பிரிட்டிஷ் அரசாங்கமா? என்று கேட்கின்றோம். திரு. காந்தி அவர்களின் சட்டைப்பையின் டிக்கட் பாக்கட்டில் இருக்கும் திரு. அன்சாரியைத் தவிர தேசீய முஸ்லீம் தலைவரோ, தொண்டரோ, பின்பற்றுபவரோ வேறு முஸ்லீம் யார்? என்று கேட்கின்றோம்.

அப்படித்தான் இருந்தாலும் 8 கோடி முஸ்லீம்களில் எத்தனை கோடிப் பேர்கள் ‘தேசிய’ முஸ்லீம்கள்? எத்தனை கோடி பேர்கள் ‘தேசத் துரோக முஸ்லீம்கள்’என்று சொல்லக் கூடும்? என்று கேட்கின்றோம். “ஏழைகளுக்காக திக்கற்றவர்களுக்காக, வாயில்லாப்பூச்சிகளான கிராம வாசிகளுக்காக, சிறுபான்மையோருக்காக, தாழ்த்தப்பட்டவருக்காகத் தான் நான் பாடுபடுகிறேன். அவர்கள் பிரதிநிதியாகத் தான் நான் வட்டமேஜை மகாநாட்டிற்கு வந்து இருக்கின்றேன்” என்று பல்லவி பாடி மந்திரம் ஜபிக்கும் திரு.காந்தியவர்கள் உண்மையில் யாருடைய பிரதிநிதியாய் சீமை சென்றிருக்கிறார்? என்பதை சற்று கவனித்துப் பாருங்கள். ஆகவே, வரப் போகும் சுயராஜ்யத்தில் எவ்வளவு சிறிய சுதந்திரம் கிடைத்தாலும், எவ்வளவு பெரிய சுதந்திரம் கிடைத்தாலும் அது இந்தியாவில் உள்ள - இருக்க வேண்டிய எல்லா ஜாதி மத வகுப்புக்கும் சரியான பிரதிநிதித்துவமாய் இருக்கக் கூடியதாய் இருந்தால் தான், இந்திய மக்களால் ஒப்புக் கொள்ளக் கூடியதாகும். இல்லாதவரை எதிர்க்க வேண்டியதாகும்.

(குடி அரசு - தலையங்கம் - 11.10.1931)

Pin It